“அவனை வாழ்க்கையில் திரும்ப சந்திப்பேன்னு நான் நினைச்சுப் பார்த்ததில்லை. ஆனால் அவன் என் மன ஆழத்தில் பதிந்துவிட்டான். ராஜிம்மா என்னைக் கல்யாணம் பண்ணிக்கனும்னு சொன்னபோது என்னால் வேறு ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்ள முடியாதுன்னு தோணுச்சு.”
“ஆனால் அருண் அண்ணா என் கல்யாணத்துக்குப் பிறகுதான் அவருடைய கல்யாணம்னு சொன்ன உடனே நான் அங்கிருந்து கிளம்ப எண்ணினேன். அப்பதான் மனோவோட ஆக்சிடெண்ட் பத்தித் தெரிஞ்சுச்சு. என்ன செய்யன்னு யோசிக்கலை. ஆனால் இங்கே வரனும்னு மனசு என்னை விரட்டியது.”
“வந்தால் அந்தக் கருப்பன் இல்லை இல்லை கண்ணனோட தம்பிதான் மனோரஞ்சன்னு தெரியுது. எனக்கு அப்ப எப்படியிருந்துச்சு தெரியுமா?”
“என் அபி.” என்று அவளை அணைத்துக்கொண்டான்.
“உங்களுக்கு என்னைப் பிடிக்காது. இதுதான் என் மனதில் பதிஞ்சிருந்துச்சு. ஆனால் எனக்கு நீங்கள்தான் உயிர். உங்க குடும்பத்தில் ஒரு பிரச்சினைன்னா என்னால் எப்படி பார்த்துக்கிட்டு இருக்க முடியும்? உங்களை நான் பிரிச்சுப் பார்க்கலை. என் குடும்பமா நினைச்சேன்.”
“மனோவைப் பார்த்துக்கிறதுக்கும், வீட்டில் சமைக்கிறதுக்கும் நீங்க சம்பளம் கொடுத்ததை என்னால் ஏத்துக்க முடியலை. அதனால்தான் அதை நான் எடுத்துக்கலை.”
“சாரிடா அபி. நீ பணத்துக்கு ஆசைப்படறியான்னு பார்க்கத்தான் நான் அப்படி செஞ்சேன்.”
“உங்க மேல தப்பில்லை. என்னைப் பெத்தவங்களே என்னைப் பத்தி தப்பா பேசினால் உங்களுக்கு என் மீது சந்தேகம்தான் வரும். நீங்க ஒப்பந்தத் திருமணம் என்றதும் நான் சம்மதித்தற்குக் காரணம் நன்றிக்கடன் கிடையாது. என்னதான் நன்றிக்கடன் பட்டவளா இருந்தாலும், அந்த இடத்தில் நீங்க இல்லாம வேற யாரா இருந்தாலும் நான் கல்யாணத்துக்கு சம்மதித்திருக்க மாட்டேன்.”
“ம். எனக்குப் புரியுது.”
“நீங்க கல்யாணத்தைப் பத்திப் பேசின உடனே உங்களைத் தவிர என்னால் வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள முடியாது. உங்களை நினைத்துக்கொண்டு வாழ்ந்துவிடத்தானே நான் எண்ணினேன். அதற்கு உங்க கூட வாழ்ந்த இந்த ஒரு வருட வாழ்க்கையாவது இருக்கிறதேன்னுதான் சம்மதிச்சேன்.”
“என் மனசில உங்களுக்கு என்னைப் பிடிக்காதுன்னுதான் பதிஞ்சிருக்கு. அப்புறம் எப்படி நான் உங்க காதலை உணர்றது. அதுதான் கடமைக்கு என்னோட வாழறீங்கன்னு நினைச்சேன். அப்படி ஒரு வாழ்க்கையை நான் உங்களோடு வாழ விரும்பலை. அதனால்தான் கிளம்பனும்னு நினைச்சேன்.”
“ம். இப்ப என்ன முடிவெடுத்திருக்கேடா?”
“ம். இந்தக் கருப்பனை விட்டுப் போனால் என் உயிர் போயிடும்னு நினைக்கிறேன்.” என்றாள்.
“அப்படிப் பேசாதே அபி. ஒரு முறை உன்னை அந்த நிலைமையில் பார்த்ததுக்கே என் குலையே நடுங்கிப் போச்சு. அதுவும் இப்ப நம்ம குழந்தையை சுமந்துக்கிட்டு இந்த மாதிரி எல்லாம் பேசாதே.”
“அது எப்படி உங்களுக்குத் தெரியும்.”
“நீதான் உனக்கு என்னை அடிமைப்படுத்தி வச்சிட்டியேடி. உன்னைக் கட்டிப்பிடிச்சுக்கிட்டுத் தூங்கினால் தானே எனக்குத் தூக்கம் வந்துச்சு. மாத விலக்காகும்போது நீ தனியா படுத்துப்பியா? அந்த நாள்கணக்கைப் பார்த்தேன்.” என்றான் விசமமாய்.
“உங்களை.” என்றவள் அவனை அடித்தாள்.
அவளை இறுக்க அணைத்துக்கொண்டான்.
“அபி. இப்படி இரண்டு பேருமே ஒருத்தரை ஒருத்தர் ஆழமா விரும்பினதால்தான் எங்கேயோ இருந்த நம்ம இரண்டு பேரையும் ஆண்டவன் இணைத்து வச்சிட்டார்.”
“ஆமா.”
“இதே அன்போட நாம வாழ்நாள் முழுமைக்கும் இருக்கனும் அபி.”
“அப்படியே ஆகட்டும்.” என்று ஆசிர்வதிப்பவள் போன்று சொன்னவள் கலகலவென்று சிரித்தாள்.
மனைவியின் சிரிப்பை ஆனந்தமாய் நோக்கினான் சித்தரஞ்சன்.