“அப்புவுக்கு தொண்டையில் கேன்சர். அது எத்தனாவது ஸ்டேஜ்னு இனிதான் டெஸ்ட் செய்து பார்க்கனும்.”
“என்ன சொல்றே கிருஷ்ணா?” அவன் குரல் நடுங்கியது.
“ஆமாண்ணா. இனி நீங்க அவளைக் கவனமா பார்த்துக்கனும்.”
அவனிடம் சலனமே இல்லை.
“அண்ணா. மனசைத் தேத்திக்குங்க. அவளுக்கு சாப்பாடு இறங்காது. நீர் ஆகாரம்தான் கொடுக்கலாம். ஜூஸ் கொடுங்க. அதுவும் சாப்பிடும்போது கையோட செஞ்சு கொடுங்க. முடிஞ்சா உங்க கைப்பட செஞ்சு கொடுங்க. எதையும் செஞ்சு வச்சுட்டுக் கொடுக்க வேண்டாம். பேச்சு கூட சரியா வருமா வராதான்னு தெரியலை. பார்ப்போம். இப்ப எழுதித்தர்ற மருந்துகளை வேளா வேளைக்குக் கொடுங்க. இன்னிக்கே வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயிடுங்க.”
“அப்புறம் அண்ணா. இந்த விசயம் இப்ப நமக்குள்ளேயே இருக்கட்டும். யார்கிட்டயும் இது பத்திச் சொல்ல வேண்டாம்.”
“நான் எப்படி இதை மத்தவங்ககிட்ட சொல்வேன் கிருஷ்ணா?” என்று கலங்கினான்.
“நானே சும்மா எதையாவது சொல்லி சமாளிக்கிறேன் அண்ணா.” என்றவனுக்கு அவனை எப்படித் தேற்றுவது என்று புரியவில்லை.
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தவளை சரண்யா ஆரத்தி எடுத்து வரவேற்றாள்.
முதன் முதலில் அவள் தங்கள் வீட்டிற்கு வந்த போது, அவளுக்கும் சேர்த்து ஆரத்தி சுற்ற வைத்தது அவனுக்கு நினைவு வந்து கண் கலங்கினான்.
அவளைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு அவன் படியேற முயல, அவள் சங்கோஜத்துடன் அவனிடம் இருந்து விலக முயன்றாள்.
“ப்ச். பேசாமல் வா அபி. இல்லன்னா உன்னைத் தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சிடுவேன்.” என்றான் செல்ல அதட்டலாய்.
அறைக்குள் நுழைந்ததும், வழக்கம்போல் தரையில் படுக்க முயன்றவளை அதட்டி, கட்டிலில் படுக்க வைத்தான்.
“என்ன வேணும் அபி?” என்றவனை புரியாமல் பார்த்தாள்.
‘அபி’ என்ற அவனுடைய அழைப்பு அவளுக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவன் இதுவரைக்கும் அவளைப் பெயர் சொல்லி அழைத்த ஞாபகமே இல்லை.
“பசிக்குதா?” என்றான் பரிவோடு.
‘ஆம்’ எனத் தலையாட்டினாள்.
“இரு வர்றேன்.” என்றவன் வெளியில் சென்றான்.
நேரே சமையலறைக்குச் சென்றவன் குளிர்சாதனப் பெட்டியில் என்ன பழங்கள் இருக்கின்றன என்று பார்த்துக்கொண்டான்.
“மனோ.”
அவன் அழைப்பில் ஓடி வந்தான் மனோரஞ்சன்.
“அபிக்கு ப்ரஷ் ஜூஸ் கொடுக்கச் சொல்லி கிருஷ்ணா சொன்னான். நீ பழங்கள் கொஞ்சம் வாங்கி வந்துடு. அடிக்கடி ப்ரிட்ஜை பார்த்துட்டு வாங்கிட்டு வந்து வச்சுரு.”
“சரிண்ணா.”
“அப்புறம் நான் அபி கூட இருந்து அவளைக் கவனிச்சுக்கப் போறேன். நீதான் எல்லாத்தையும் பார்த்துக்கனும்.”
“சரிண்ணா.” என்றவன் உடனே வெளியில் சென்றுவிட்டான்.
“அத்தான். நான் ஜூஸ் போட்டுத் தர்றேன்.” என்று பழங்களை எடுத்தவனிடம் கூறினாள் சரண்யா.
“இல்லம்மா. இனி நான் அபி கூடத்தானே இருக்கப் போறேன். நானே செஞ்சுக்கறேன்.” என்றுவிட்டு அவனே பழச்சாறை எடுத்துக் கொண்டு அறைக்குச் சென்றான்.
“இந்தாம்மா ஜூஸ். குடி.” என்று அவள் வாயருகில் கொண்டு போனான்.
“ஜூஸா” என்று முகம் சுளித்தாள்.
“உனக்கு சாப்பிட எதுவும் கொடுக்க வேண்டாம்னு கிருஷ்ணா சொன்னான் அபி. உள்ளுக்குள் புண்ணாயிருக்காம். இப்போதைக்கு உனக்கு திரவ ஆகாரம்தான் கொடுக்கனுமாம்.” என்றான் குழந்தைக்குச் சொல்வது போல.
தம்ளரைக் கூட அவள் கையில் கொடுக்கவில்லை. அவனே புகட்டினான்.
“அத்தான் நீங்க சாப்பிட வாங்க.” என்றாள் சரண்யா.
“இதோ வர்றேன் சரண்யா. நீ போ.”
“உனக்கு ஏதாவது வேணுமா?”
அவள் ‘வேண்டாம்’ எனத் தலையசைத்தாள்.
அவன் உணவுண்ண வந்தான்.
“யார் சமைச்சா?”
“அத்தைதான் செஞ்சாங்க.”
அவனுக்கு ஆச்சர்யமாயிருந்தது.
கொஞ்சமாய் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பிவிட்டான்.
அவள் ஒரு வாய் உணவு கூட சாப்பிட முடியாமல் இருக்கையில் அவனால் ருசித்து எதையும் உண்ண முடியவில்லை. பசிக்குச் சாப்பிட்டவன் அறைக்குச் சென்றுவிட்டான்.
சற்று நேரத்தில் அவளிடம் எந்த அசைவும் இல்லை. சீரான மூச்சு அவள் உறங்கிவிட்டாள் என்று சொன்னது.
அவனால் உறங்க முடியவில்லை.
‘அவளுக்கு அவளுடைய உடல்நிலை முன்பே தெரியுமோ?’
‘அதனால்தான் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லை என்றாளோ?’
‘என்னைப் பிரிந்து போகத் துடித்ததும் இதனால்தானா?’
யோசிக்க யோசிக்க நிம்மதியை இழந்தான்.
அவளை விட்டுத் தள்ளிப் படுக்கவே பயமாயிருந்தது.
எங்கே அவள் தன்னை விட்டுப் போய்விடுவாளோ? என்ற கவலை அவன் பயத்தை அதிகப்படுத்தியது. அவளை இறுக்க அணைத்துக்கொண்டான்.
‘நானா? இப்படி?’ என்று தன்னைத்தானே ஆச்சர்யத்துடன் கேட்டுக்கொள்கிறான்.
எப்போது அவள் வாயில் ரத்தம் வழிய தன் மார்பில் சாய்ந்தாளோ அப்போதே அவன் மனம் தெளிவு பெற்றுவிட்டது. அவள் இல்லாமல் தான் இல்லை என்று.
அவளைப் பார்த்த முதல் நாளில் அவன் மனதில் பதிந்தவள் நாளுக்கு நாள் அவன் மனம் முழுவதையும் ஆக்கிரமித்துக்கொண்டாள் என்று இப்போதுதான் அவனுக்கு விளங்கியது.
அவனுக்கு அவன் தாத்தா சித்தார்த்தர் பெயர் வரும்படிதான் சித்தரஞ்சன் என்று பெயரிட்டிருந்தனர்.
அதனாலேயே எல்லோரும் அவனை ரஞ்சன் என்றே அழைத்தனர்.
அவள் தன்னை ‘சித்து’ என்று அழைத்தது கண்டு அவள் மனதிலும் தான் இருக்கிறோமோ என்ற சந்தேகம் வந்தது.
இருவருமே ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெளிக்காட்டிக்கொள்ளாமல் இத்தனை நாட்கள் ஒருவரையொருவர் வருத்தி இருந்திருக்கிறோம் என்று நொந்து கொண்டான்.
எப்படியாவது அவளைக் காப்பாற்ற வேண்டும். அதன் பிறகு அவளைப் பிரியக் கூடாது.
எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை.
அவளிடம் அசைவு தெரிந்து சட்டென விழித்துக்கொண்டான்.
“அபி. என்னடா?”
பாத்ரூம் பக்கம் கைகாட்டினாள்.
“சரி வா போகலாம்.” என்றதும் அவள் திகைத்தாள்.
அவனோ அவளை அழைத்துச் செல்வதிலேயே கவனமாக இருந்தான்.
அவளை கைத்தாங்கலாய் அழைத்துச் சென்றவன் வெளியில் நின்றான்.
“கதவைத் தாழ்ப்பாள் போட வேண்டாம்.” என்றான்.
சிறிது நேரத்திலேயே வெளியில் வந்துவிட்டாள். மீண்டும் கைத்தாங்கலாக அழைத்துச் சென்று அவளைப் படுக்க வைத்தவன் அணைத்துக்கொண்டான்.
அவளுக்குத்தான் சங்கடமாக இருந்தது.
“சும்மா தூங்கு அபி.”
மறுநாள் காலை.
“அபர்ணாம்மா. எப்படியிருக்கீங்க?” என்றவாறே சண்முகம் அவர் மகள்களுடன் அவளைப் பார்க்க நின்றிருந்தார்.
அவள் பேச முயல, “வேண்டாம்மா. நான் இனி இங்கேதான் இருக்கப் போறேன். தம்பி உடனே மூட்டைக் கட்டிக்கிட்டு, உங்க பொண்ணுங்களை அழைச்சுட்டு வாங்க அங்கிள்னு போன் போட்டு, கூடவே காரையும் அனுப்பி வச்சிடுச்சும்மா. இங்க வந்த பிறகுதான் தெரியும் உங்களுக்கு உடம்பு முடியலைன்னு. நான் எல்லாத்தையும் பார்த்துக்கிறேம்மா. நீங்க ரெஸ்ட் எடுங்க.” என்றவாறே அவர் வெளியேற, கீதாவும், ராதாவும் கூட சென்றார்கள்.
இருந்தாலும் அவளை அதிகம் அலட்டிக் கொள்ள வேண்டாம் என்று அன்புக் கட்டளையிட்டிருந்தான் அவன்.
வீட்டினர் அனைவருமே அவனது மாற்றம் கண்டு ஆச்சர்யமடைந்தனர். இப்படி எல்லாம் நீ நடந்து கொள்வாய் என்று யாராவது அவனிடம் முன்பு சொல்லியிருந்தால் அவன் நம்பியிருக்கவே மாட்டான்.
ஆனாலும், அவனது இந்த மாற்றம் வீட்டில் அனைவருக்கும் ஆனந்தத்தையே தந்தது.
அவன் தன் அன்றாட வேலைகளைக் கூட தள்ளி வைத்தான். தாடியுடன் மகனின் தோற்றம் பார்க்க சோகமாக இருந்தாலும், இப்படி ஒரு மாற்றத்தைத்தானே அவனிடம் எதிர்பார்த்தார்.
திருமணமே வேண்டாம் என்றிருந்தவன் இப்போது இப்படி மாறியிருக்கிறான் என்றால் அது நல்ல விசயம்தானே?
அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட முடியாமல் அபர்ணாவிற்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது. அது ஒன்றுதான் கவலை.
அன்று இரவு அபர்ணா உறங்கிவிட்டாள்.
குளியல் அறைக்குள் சென்று திரும்பி வந்த சித்தரஞ்சன் அபர்ணாவைக் காணாமல் திகைத்தான்.
மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு அவள் அறையை விட்டு எங்கும் போகவில்லை. இப்போது அவன் குளியல் அறைக்குள் செல்லும்போது கூட உறங்கிக் கொண்டிருந்தாளே?
பரபரப்புடன் அறையை விட்டு வெளியே வந்தவன் கீழிறங்கி வந்தான்.
மதன்ராஜின் அறையில் வெளிச்சம் தெரிந்தது. ஒருவேளை அங்கிருப்பாளோ? என்ற சந்தேகத்துடன் கதவைத் தொட அது திறந்து கொண்டது.
அவர்களுக்குத் திருமணமான புதிதில், மதன்ராஜ் சிறுவன் என்பதால் அவனை அறைக் கதவைத் தாழ்ப்பாள் போடாமலே உறங்கச் சொல்லியிருந்தாள் அபர்ணா.
அவன் தனியே படுத்துறங்கும்போது பயந்தால் என்ன செய்வது என்று அவள் செய்த ஏற்பாடு அது. அப்படியே இடையில் வந்து அவன் உறங்கிவிட்டானா? என்றும் பார்த்துச் செல்வாள்.
அது மாதிரி வந்திருக்கிறாளோ? கதவைத் திறந்தான்.
மதன்ராஜ் உறங்கிக் கொண்டிருந்தான். அவன் எதிர்பார்த்த மாதிரியே அபர்ணா அங்குதான் இருந்தாள். அவனை அங்கே எதிர்பார்க்காததால் திருதிருவென விழித்தாள்.
“என்ன அபி பண்றே? உன்னைக் காணோம்னு நான் பயந்துட்டேன்.” என்றான் மென்மையாய்.
அவள் வாயைத் திறக்கவில்லை. அவனிடம் எதையோ மறைப்பதற்காக கையைப் பின்னே கொண்டு சென்றாள்.
“என்னாச்சு அபி? ஏதாவது செய்யுதா?” என்றான் பரிதவிப்புடன்.
‘இல்லை’ எனத் தலையாட்டினாள்.
“அப்புறம் என்ன சொல்லு? அது என்ன உன் கையில்?” கேட்டவாறே அவளருகில் சென்றான்.
அவள் மறைக்க முயன்றதைக் கண்ட சித்தரஞ்சன், அவள் கையைப் பற்றி முன்னே இழுத்துக் கையில் இருந்த பொருளைப் பார்த்துத் திகைத்தான்.
மதன்ராஜ் சாப்பிடுவதற்காக வாங்கி வைத்திருந்த தின்பண்டம்.
“என்ன பண்றே அபி?”
“பசிக்குது.” என்றாள் பாவமாய்.
“அய்யோ. அபி.” என்றவன் அவளை அணைத்துக் கொண்டான்.
“என்கிட்ட சொல்லியிருக்கலாமேடா.”
“சொன்னா நீங்க ஜூஸ்தான் தருவீங்க. அது எனக்குப் பசி தாங்க மாட்டேங்குது.”
“அய்யோ அபி. நான் என்ன செய்வேன்? அதெல்லாம் சாப்பிட முடியாதுடா?” என்றான் குழந்தைக்குச் சொல்வது போல.
“எனக்கு ஒன்னுமில்லை. நான் நல்லாருக்கேன்.” என்றாள்.
“அதைத்தான் நானும் விரும்பறேன் அபி. சரி வா. கிச்சன்ல என்ன இருக்குன்னு பார்ப்போம்.”
அங்கே சென்று பார்த்தால் சிறிதளவே மீந்த சாதத்தை தண்ணீர் ஊற்றி வைத்திருந்தார் சண்முகம். மாவு இருந்தாலும் தோசை ஊற்றிக்கொடுக்க அவனுக்கு மனமில்லை.
‘வறண்ட தோசை அவள் தொண்டையை மேலும் புண்ணாக்கிவிட்டால்?’
‘இட்லி ஊற்றலாம் என்றால் அது வரைக்கும் அவள் பசி தாங்குவாளா?’
அவன் பால் பாக்கெட்டை எடுத்துக் கத்தரித்து பாத்திரத்தில் ஊற்றிக் காய்ச்ச ஆரம்பித்தான்.
அதை எல்லாம் அபர்ணா ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் கணவன் சமையல் அறையில் வேலை செய்கிறான். அதுவும் அவளுக்காக. நெகிழ்ந்து போனாள்.
பாலைக் காய்ச்சியவன், சாதத்தைக் கடைந்து அதில் பால் கலந்து குழைவாக ஒரு கிண்ணத்தில் போட்டு எடுத்து வந்தான்.
வாங்கக் கை நீட்டியவளிடம் கொடுக்காமல் தானே ஊட்ட ஆரம்பித்தான்.
மற்ற நாட்களாக இருந்திருந்தால் இது மாதிரி பால்சாதம் சாப்பிட்டிருக்க மாட்டாள்.
ஆனால் இன்றோ அவள் கணவன் அவளுக்காக செய்தது. அவன் முகத்தைப் பார்த்தவாறே அவன் கொடுத்த உணவு முழுவதையும் உண்டு முடித்தாள்.
“இன்னும் பசிக்குதா?”
‘இல்லை’ எனத் தலையாட்டினாள்.
தண்ணீர் கொடுத்தான். பின் இருவரும் தங்கள் அறைக்குச் சென்றனர்.
அவளை அணைத்தவாறே படுத்தான்.
“எனக்கு ஒன்னுமில்லை.” என்றாள் மீண்டும்.
“சரி அபி தூங்கு. காலையில் பேசிக்கலாம்.”
அவள் உறங்கிவிட்டாள். அவனுக்கு உறக்கம் வரவில்லை.
“கண்ணா. நான் எந்தத் தப்பும் செய்யலை. என்னை நம்பு.” என்றாள் அபர்ணா. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
‘கண்ணா. யாருடா நீ? யாராயிருந்தாலும் அபி எனக்குத்தான்.’ என்று மனதிற்குள்ளேயே சொல்லிக் கொண்டான்.
அவனுக்கு அவளை யாருக்கும் விட்டுத்தர முடியாது என்று தோன்றியது.
அதனால்தான் அவள் கிருஷ்ணாவோடு பேசும்போது அவனால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
அதுவும் அவன் அவளிடம் அத்தனை பாசத்துடன் பழகுவதைக் கண்ட பிறகு அவனுக்கு பொறாமை அதிகமானது. இப்போது அவர்களுக்குள் இருப்பது நட்பு என்று புரிகிறது.
பிறகு ஒரு நாள் அவள் அலைபேசியில் அழைப்பு வந்தபோது அதில் தெரிந்த புகைப்படமும், அதில் இருந்த அருணின் கம்பீரமும் அவனை அசைத்துப் பார்த்தது.
தன்னை விட நிறமாய், அதிகம் படித்தவனாய் இருந்தவன் மீது அபர்ணாவிற்கு அன்பு உண்டாகியிருக்குமோ என்ற சந்தேகம் அவனை நிலைகொள்ளாமல் இருக்கச் செய்தது.
அவளும் அவனுடன் பேசும்போது முகம் பிரகாசிக்க நின்ற தோற்றம் அவன் மனதைக் காந்தியது. இப்போது அதில் சகோதரப் பாசம் அவனுக்குத் தெரிகிறது.
இப்படி அவளை யாருக்கும் விட்டுக்கொடுக்க மனமில்லாமல்தான் தன் வீட்டிற்கு வரவழைக்க எண்ணினான்.
ஆனால் தேவேந்திரனே அவளை அழைத்து வந்துவிட்டார். அடாவடியாய் அவளைத் திருமணமும் செய்து கொண்டுவிட்டான்.
இப்போது நினைத்துப் பார்க்க, தான் அவள் மீது வைத்திருந்த காதல்தான் தன்னை அப்படி எல்லாம் அவளிடம் நடக்கத் தூண்டியிருக்கிறது என்று புரிகிறது.
இரவு எப்போது தூங்கினான் என்று தெரியவில்லை. அதனால் காலையில் எழுந்து கொள்ள தாமதமாகிவிட்டது.
‘ஐயோ. நேற்றே பசி தாங்கவில்லை என்றாளே. நான் வேறு இவ்வளவு நேரம் தூங்கிவிட்டேனே.’ என்று பதட்டத்துடன் அருகில் பார்க்க அபர்ணா அங்கில்லை.
குளியல் அறையில் சத்தம் கேட்டது.
கதவு திறக்கும் ஒலியில் திரும்பிப் பார்க்க புத்துணர்ச்சியுடன் அபர்ணா நின்றிருந்தாள்.
அவளை அது மாதிரி பார்த்து நீண்ட நாட்கள் ஆனது போல் அவனுக்குள் ஒரு பிரமை.
அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன், குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.
“கொஞ்சம் காத்தாட தோட்டத்தில் இருக்கிறேன்.”
அவன் வந்த பிறகு அவனிடம் சொல்லிக் கொண்டு வெளியில் சென்றாள்.
பின்னேயே மனம் கேட்காமல் சென்றவன் அவள் அலைபேசியில் யாரிடமோ பேசியதைக் கேட்டு நின்றான்.
“டேய் அந்தப் பன்னாடைக்குப் கான்பரன்ஸ் கால் போடுடா.” என்ற குரல்தான் கேட்டது.
யாரிடம் பேசுகிறாள்? அதற்கு முன்பு என்ன பேசினாள்? எதுவும் அவனுக்குப் புரியவில்லை.
அவனறியாமல் பேசுவதற்காகத்தான் காத்தாட தோட்டத்தில் இருக்கிறேன் என்றுவிட்டு வந்திருக்கிறாள் என்று புரிய, அவள் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காக நின்றிருந்தான்.
“டேய் என்னடா பண்ணி வச்சிருக்கீங்க ரெண்டு பேரும். இது உங்களைத் தவிர வேறு யாரும் பண்ணியிருக்க மாட்டாங்க. சொல்லித் தொலைங்கடா. என்ன சொன்னீங்க என் புருசன்கிட்ட? அவர் எனக்கு சோறே போட மாட்டேங்கறார்டா.”
மறுமுனையில் பேச இடைவெளி விட்டாள்.
“டேய் என்னடா சொல்றே? அப்படி எல்லாம் இருக்காதுடா. லூசாடா நீ. எப்படி நீ சந்தேகப்படலாம்.”
அவள் பேசுவது எதுவும் புரியவில்லை.
அவனுடைய சந்தேகத்திற்குப் பதில் சொல்லக்கூடியவர் ஜெயச்சந்திரன்தான்.
உடனே அவருக்கு அழைத்தான்.
“அங்கிள். உண்மையைச் சொல்லுங்க. அபர்ணாவுக்கு ஹெல்த்ல என்ன பிரச்சினை?”
“புட் பாய்சனாயிடுச்சே. அதுதான் அன்னிக்கே கிருஷ்ணாவை…” அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே,
“அங்கிள் நான் கொஞ்ச நேரம் கழிச்சுக் கூப்பிடறேன்.” என்றவாறு அழைப்பைத் துண்டித்தான்.
நேரே அபர்ணாவிடம் வந்தான்.
“உனக்கு உடம்புக்கு எந்த பிரச்சினையும் இல்லதானே?” என்றான்.
அவள் ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
“இவ்வளவு நேரம் நல்லாத்தானேடி பேசிக்கிட்டிருந்தே? நான் என்ன கிறுக்கனா? தலையாட்டறே? வாயைத் திறந்து பேசுடி.” என்றவன் அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.
அவள் அதிர்ந்து போய் அவனைப் பார்க்க, அவன் ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தான்.
“என்ன செய்யப்போறேன்? எப்படிக் காப்பாத்த போறேன்னு இத்தனை நாள் பைத்தியமா இருந்தேன்டி. உன்னைத்தவிர வேறெதுவும் எனக்கு நினைப்பில் இல்லை. நீ என்னன்னா அசால்ட்டா ஒன்னுமில்லைன்னு தலையாட்டறே.” கோபமுடன் கேட்டவன் அவளை இறுக்கி அணைத்தான்.
“ஏன்டி இப்படி பண்ணே? ஏன்டி இப்படி பண்ணே?”
அவன் வாய் முணுமுணுத்துக் கொண்டிருந்தது. நேரமாக நேரமாக அவனது அணைப்பும் இறுகியது.
தலையில் ஈரம் உணர்ந்த பிறகுதான் அவன் அழுகிறான் என்று புரிந்தது.
“ப்ளீஸ் சித்து. இது தோட்டம். வாங்க வீட்டுக்குள் போகலாம்.” அவள் சூழ்நிலையை உணர்த்த முயன்றாள்.
அவனிடம் சலனமில்லை.
அப்போது அவளது அலைபேசி அழைக்க சிரமப்பட்டு எடுத்துப் பார்த்தாள்.
கிருஷ்ணா அழைத்துக் கொண்டிருந்தான். அவளால் காதருகில் அலைபேசியைக் கொண்டு வர முடியவில்லை. ஸ்பீக்கரில் போட்டாள்.
“அப்பு. ரஞ்சன் அண்ணா அப்பாக்கிட்ட உனக்கு என்ன பிரச்சினைன்னு கேட்டிருக்கார். அப்பா என்ன சொல்லி வச்சிருக்கேன்னு திட்டினார். ரஞ்சன் அண்ணாவை ஹாஸ்பிட்டலுக்கு வரச்சொல்லு. நான் அவர்கிட்ட பேசனும். இனியும் தள்ளிப் போடக்கூடாது.” என்றான்.
அவனது பேச்சைக் கேட்ட சித்தரஞ்சன் அவளை விட்டு விலகினான். அவளது முகத்தைப் பாராமல் விலகி நடந்தான்.
கிருஷ்ணா மருத்துவமனையில் நுழைந்த சித்தரஞ்சன் ஜெயச்சந்திரன் அறைக்குச் சென்றான்.
அங்கே கிருஷ்ணா அவனுக்காக காத்து நின்றான்.
வந்தவனின் முகத்தைப் பார்த்தே அவனது கோபத்தை உணர்ந்த கிருஷ்ணா அவனுக்குக் குடிக்க தண்ணீரைக் கொடுத்தான். அருகில் ஜெயச்சந்திரன் இருந்ததால் கிருஷ்ணா தப்பித்தான்.
“நான் சொல்றதை முழுசா கேளுங்க. அவளோட சாப்பாட்டில் மட்டும் பர்பசா விசம் கலக்கப்பட்டிருக்கு. அவள் சாப்பிட்ட ஏதோ ஒன்றில் அந்த விசம் கலக்கப்பட்டிருக்கு.”
“என்ன சொல்றே நீ? புட் பாய்சன்னு சொன்னே?”
“உங்க வீட்டில் அவளுக்கு மட்டும் தனியா சமைக்கறீங்களா என்ன? அவளை அப்புறப்படுத்தனும்னே அவளுக்கு விசம் கலந்து கொடுத்திருக்காங்க. அந்த ரசாயனத்தால் அவள் வாயிலிருந்து குடல் வரைக்கும் புண்ணாகிப் போச்சு. நீங்க கொஞ்சம் லேட்டா கொண்டு வந்திருந்தால் இன்னிக்கு அப்பு உயிரோட இருந்திருக்க மாட்டாள்.”
அதைக் கேட்ட உடன் அவன் உடல் நடுங்கியது.
“அதை என்கிட்ட சொல்லியிருக்கலாமே? எதற்காக இந்த டிராமா?”
கிருஷ்ணா சொல்லத் தயங்கினான்.
“சொல்லு கிருஷ்ணா.”
“அண்ணா. அவளுக்கு விசத்தைக் கொடுத்தவங்களோட எண்ணம் அவளை உங்க வீட்டிலிருந்து அப்புறப்படுத்தறதுதான். அதை யார் செஞ்சிருப்பாங்க?”
“யார்?”
“எங்களுக்கு உங்கம்மா மீதுதான் சந்தேகம். அப்படியிருக்க அதை எப்படி உங்ககிட்ட வெளிப்படையா சொல்ல முடியும்?” என்றான் கோபத்தோடு.
காதல்வளரும் ……
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.