சட்டென்று ‘அண்ணி’ என்று அழைக்கவா என்று கேட்டுவிட்ட மனோரஞ்சனுக்குப் பதில் சொல்வதற்குள் அறைக்குள் நுழைந்திருந்த சித்தரஞ்சன் அவர்கள் பேசுவதைக் கேட்டிருந்தான்.
அதுவும் அவனது பார்வை அபர்ணாவின் முகத்தில் நிலைத்திருந்தது.
‘போச்சுடா. சும்மாவே இவன் யார் யாரையோ மயக்க வந்ததாக ஆட்டம் ஆடுவான். இப்போது இந்த மனோரஞ்சன் வேறு அண்ணி என்று உளறி அவன் காலில் சலங்கை கட்டி வைத்திருக்கிறான். இதற்கு என்ன சொல்லப் போறானோ?’
மெதுவாக மனோரஞ்சனுக்கு மருந்து எடுத்துக்கொடுப்பது போல் வந்தவள் மாத்திரையை எடுத்துக்கொடுத்துக் கொண்டே
“என்ன சார் இப்படி பண்ணிட்டீங்க?” என்று கோபத்தை அடக்கிய குரலில் மெதுவாகக் கூறினாள்.
இல்லை என்றால் அதுவும் அவளது நாடகம் என்றுதான் சித்தரஞ்சன் கதை கட்டுவான்.
“என்ன அண்ணி இது? நான் உங்களை உறவு சொல்லி கூப்பிட்டால் நீங்கள் என்னை சார் என்று அந்நியன் போல் கூப்பிடுகிறீர்கள்?”
அவளைப் போலவே மெதுவான குரலில் குறைபட்டான் மனோரஞ்சன்.
அவன் விளையாட்டிற்குப் பேசுவது போலவும் அபர்ணாவிற்குத் தெரியவில்லை.
“என்னை மனோன்னு ஒருமையில் கூப்பிடுங்க.” என்று தான் கூறியதிலேயே குறியாக இருந்தான் மனோரஞ்சன்.
‘இவன் வேறு. நிலைமை புரியாமல்…’ என்று மனதிற்குள் அவனை தாளித்தாள்.
“வாங்கண்ணா.” என்று புன்னகையுடன் கூறினான் மனோரஞ்சன்.
‘இப்போதுதான் தன்னைப் பார்க்கிறானா? அதுவும் புதிதாக மரியாதை எல்லாம் கொடுத்துப் பேசறானே?’
சந்தேகமாக சகோதரனை நோக்கினான் சித்தரஞ்சன்.
மனோரஞ்சனின் பார்வை தன்னைத் தாண்டி செல்வதைக் கவனித்த சித்தரஞ்சன் பின்னே திரும்பிப் பார்த்தான்.
அங்கே கிருஷ்ணா வந்துகொண்டிருந்தான்.
“என்ன மனோ? எப்படி இருக்கே?”
அவனும் புன்னகையுடன் கேட்டுக்கொண்டே அருகில் வந்து சோதிக்க ஆரம்பித்தான்.
“நீங்களே பார்க்கறீங்களே. நல்லாருக்கேன். அண்ணா.”
வார்த்தைக்கு வார்த்தை அண்ணா அண்ணா என்றழைத்துப் பேசினான்.
“என்ன மனோ புதுசா இருக்கு?”‘
“எதுண்ணா?”
“இந்த அழைப்புதான்.”
“நான் உங்களை அப்படி கூப்பிடக்கூடாதா?”
“சின்ன வயதில் நீ என்னை அப்படி கூப்பிட்டதாகத்தான் எனக்கு நினைவு இருக்கிறது.”
கூறியவனின் வார்த்தைகளில் அதன் பிறகு நீ என்னை அப்படி கூப்பிடவில்லை.
நான் மாறவில்லை. நீதான் மாறிவிட்டாய் என்ற குற்றச்சாட்டு மறைந்திருந்தது.
“ப்ச். அதையெல்லாம் விடுங்க. இப்ப நான் உங்களை அண்ணான்னு கூப்பிடலாம்தானே? இப்ப நீங்க பெரிய டாக்டர்.”
“என் அப்பாவை இன்னும் நீ அங்கிள் என்றுதான் அழைப்பதாக ஞாபகம். அத்துடன் நீ என்னை அண்ணா என்றழைத்த பிறகு நான் உன்னுடன் எப்படி பேசுகிறேன் என்பதை கவனித்திருந்தால் இப்படி கேட்கமாட்டாய்?”
அவன் யோசித்தான்.
முன்பு கிருஷ்ணா அவனிடம் பேசும்போது ‘மிஸ்டர் மனோரஞ்சன்’ என்றுதான் அழைத்திருந்தான்.
ஆனால் இப்போது மனோ என்று ஒருமையில் அழைக்கிறான்.
“நீங்க எவ்வளவோ பரவாயில்லைண்ணா ஆனால் உங்க ஃப்ரண்ட்தான் ரொம்ப பிகு பண்றாங்க.”
“என்ன பிகு பண்றாங்க?”
“ஆமா. நான் அண்ணின்னு கூப்பிட்ட பிறகும் என்னை சார்னு கூப்பிட்டு அந்நியப்படுத்தறாங்க.”
அவன் கூறியதும் சட்டென்று கிருஷ்ணா நிமிர்ந்து அபர்ணாவைப் பார்த்தான்.
அவளும் அப்போது அவனைத்தான் பார்த்தாள்.
சற்று நேரம் அவர்களுக்குள் பார்வை பரிமாற்றம்.
அவளும் ஆமோதிப்பாய் தலையாட்டினாள்.
இதை எல்லாம் மனோரஞ்சன் கவனிக்கவில்லை.
ஆனால் சித்தரஞ்சன் கவனித்திருந்தான்.
கிருஷ்ணா மனோரஞ்சனை பரிசோதித்துவிட்டு அபர்ணாவிடம் தேவையானதைக் கூறிவிட்டு அவர்களிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.
சித்தரஞ்சனும் எதுவும் பேசாமல் தம்பியிடம் விடைபெற்றுக் கிளம்பினான்.
அபர்ணாவிற்கு ஆச்சர்யம்தான்.
அவன் எதுவும் குத்தலாகப் பேசாமல் கிளம்பிவிட்டானே.
மனோரஞ்சனுக்கு முன்பாகத் தன் கோபத்தை அவளிடம் காட்ட முடியாமல் கிளம்பிவிட்டான்.
தான் வெளியில் வருவதற்காக காத்திருப்பானோ என்ற சந்தேகம் இருந்ததால் அவள் வெளியில் செல்லவில்லை.
“சார்…” என்று அவள் ஆரம்பித்த உடன் கை நீட்டி அவளை மேலே பேச விடாமல் தடுத்தான் மனோரஞ்சன்.
“ப்ளீஸ். என்னை சார்னு கூப்பிடாதீங்க. நான் உங்களை விட சின்னவன்.”
“சரி. என்னை எதுக்கு அண்ணின்னு கூப்பிட்டே?” சற்றே கோபத்துடன் கேட்டாள்.
“அதில் என்ன தவறு?”
“இதப் பார் மனோ. நீ சின்னப் பையன் கிடையாது. எந்த உறவு முறையும் இல்லாது என்னை நீ அண்ணின்னு கூப்பிடறது தப்பு. அதுவும் உனக்கு அண்ணன் ஒருவர் இருக்கும்போது…”
அவள் முடிக்காமல் நிறுத்தினாள்.
“அப்படி நடந்தால் ச….”
என்னவோ கூற வந்தவன் அவள் முறைப்பில் நிறுத்தினான்.
“என்ன?” என்று அதட்டலாகக் கேட்டாள்.
“அண்ணிங்கிறது அடுத்த அம்மான்னு கேள்விப்பட்டிருக்கேன். நீங்க அதட்டும்போது எனக்கு அப்படித்தான் தோணுது.”
மேலும் மேலும் பேசிக்கொண்டே சென்றவனை எரிச்சலாகப் பார்த்தாள்.
அவளிடம் இருந்து எந்தப் பேச்சும் இல்லாது போகவே அவளை நிமிர்ந்து பார்த்தான் மனோரஞ்சன்.
‘என்ன இது?’ என்று அவள் பார்வை அவனிடம் கேள்வி கேட்டது.
“நான் என்ன செய்யட்டும் அண்ணி? சரண்யாவின் அக்காவை அண்ணி என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?”
அவன் கேள்வியில் அவள் திகைத்தாள்.
“சரண்யாவா? அது யார்?”
“வேண்டாம் அண்ணி. எனக்கு நீங்கள் யார் என்று நன்றாகத் தெரிகிறது? நீங்கள் எதையும் மறைக்க முயல வேண்டாம்.”
“எப்படி தெரிந்தது? மது..?”
“ராஜாக்குட்டியைப் பார்ப்பதற்கு முன்பே நீங்கள் சரண்யாவின் அக்காவாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். நீங்கள்தானே அன்று இரவு என்னிடம் பேசி உயிர் வாழ வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் விதைத்தது.”
அவள் அமைதி காத்தாள்.
“மதுவை எப்போது பார்த்தாய் மனோ? அவனை இனி ராஜாக்குட்டி என்று அழைக்க வேண்டாம்.”
“ஏன் எனக்கு அவனிடம் உரிமை இல்லையா?”
“நான் அதற்குச் சொல்லவில்லை. அந்த அழைப்பு அவனுக்கு உறவுகளின் இழப்பை நினைவுக்குக் கொண்டு வருகிறது. சித்தி, சித்தப்பா அவனை அப்படித்தானே அழைப்பார்கள்.”
“ஓ…. எல்லாம் என்னால்தானே? அதுவும் அவனது பெற்றோர் இறந்த விபத்தைப் பார்த்த பிறகு அவனுக்குப் பேச்சு வராமல் போய்விட்டதாமே? பொன்னி சிஸ்டர் சொன்னாங்க.”
அவன் சோகத்தில் ஆழ்ந்தான்.
அவள் எதுவும் சொல்லவில்லை.
“சரண்யா எப்படி இருக்கிறாள்? என் மீது கோபமாக இருக்கிறாளா? இல்லை என்னை மறந்துவிட்டாளா?”
இப்போதும் அபர்ணா அவனிடம் எந்த பதிலும் கூறவில்லை.
“ப்ளீஸ் அண்ணி.”
“தயவு செய்து என்னை அண்ணி என்று அழைக்காதே மனோ.” கண்டிப்புடன் கூறினாள்.
“ஏன்?”
“அதற்கான காரணத்தை நான் ஏற்கனவே கூறிவிட்டேன்.”
“சரி. இனி நான் மற்றவர்கள் முன்பு உங்களை அண்ணி என்றல்ல எதுவும் கூறி அழைக்கமாட்டேன். ஆனால் நீங்கள் எனக்கு அண்ணி மட்டும்தான்.”
உறுதியுடன் கூறினான்.
“சரண்யாவைப் பற்றிக் கேட்டேனே.”
மீண்டும் அவனே அவளிடம் பேசினான்.
“இருக்கிறாள். அவளுக்கு உன் மீது கோபமும் இல்லை. அவள் உன்னை மறக்கவும் இல்லை.”
“பின்னே அவள் ஏன் என்னைப் பார்க்க வரவில்லை.”
“அவளுக்குத் தன் மீதே கோபம். அதனால் தன்னையே மறந்துவிட்டாள்.”
“புரியவில்லை.”
குழப்பமாக அவளைப் பார்த்தான்.
“மனநிலை பாதிக்கப்பட்டு இப்போது மனநல மருத்துவமனையில் இருக்கிறாள்.”
“என்னது?”
அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.
“ஆமாம். மதுவுக்குத் தன் பெற்றோரின் மறைவு பேச்சைக் கொண்டு சென்றது. சரண்யாவிற்குத் தன் சுயநினைவையே கொண்டு சென்றுவிட்டது.”
அவளிடமிருந்து பெருமூச்சு ஒன்று வெளிப்பட்டது.
அவனால் அதை எளிதில் ஜீரணிக்கவே முடியவில்லை.
சரண்யாவின் முகம் கண் முன் வந்து நின்றது.
‘அவளா இப்படி?’
அவள் எளிதில் உணர்ச்சி வசப்படுபவள் அல்ல.
நிறைய நேரங்களில் அவள் அவனிடம் பேசும் போதெல்லாம் அவள் நடிக்கிறாள் என்று அவனுக்குப் புரியும்.
ஆனாலும் அவளை ஏனோ அவனுக்குப் பிடித்திருந்தது. அவன் மனதை அவள் முழுதாக ஆக்கிரமித்திருந்தாள்.
அந்த ஆக்கிரமிப்பில் இருந்து அவன் வெளியில் வர முயற்சிக்கவில்லை.
அதை அவளும் புரிந்து வைத்திருந்தாள்.
அதனாலேயே அவனிடம் அதிகம் ஆதிக்கம் செலுத்தினாள்.
‘அப்படிப்பட்ட சரண்யா தன் பெற்றோரின் மறைவைத் தாங்க இயலாமல் சுயநினைவை இழந்து இப்போது மனநல மருத்துவமனையில் இருக்கிறாளா?’
‘காலம் எல்லாவற்றையும் மாற்றிவிடுகிறது.’
அவனிடமும் பெருமூச்சுக் கிளம்பியது.
“அலட்டிக் கொள்ளாமல் தூங்கு மனோ.” அபர்ணா மென்மையான குரலில் கூறினாள்.
“என்னிடம் உங்களுக்கு வெறுப்பு வரவில்லையா அண்ணி?”
“நடந்ததற்கு உன்னை பொறுப்பாளியாக்க முடியாது மனோ. நீ ஒரு சூழ்நிலைக்கைதி.”
“என்னைப் பற்றி உங்களுக்கு எப்படி தெரியும்?”
“அரவிந்தன்.”
ஒற்றை வார்த்தையில் பதிலளித்தாள்.
“அவனுக்கு எப்போதுமே என் மீது பிரியம் அதிகம்.”
முகம் மென்மையுற கூறினான்.
“ஆமாம்.” அவளும் ஒப்புக் கொண்டாள்.
“என்னைப் பற்றி உனக்கு எப்படி தெரியும்? நிச்சயமாய் சித்தி சொல்லியிருக்கமாட்டார்கள்.”
“ஆமாம். மது எப்போதாவது பெருமையாகக் கூறுவான். நீங்கள் சென்னையில் படித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று. முதலில் நீங்கள் சரண்யாவின் கூடப்பிறந்த சகோதரி என்றே நினைத்தேன். அதன் பிறகு சரண்யாவிடம் பேசும் போது தெரிந்தது…”
அதற்கு மேல் பேசாமல் நிறுத்தினான்.
சரண்யா தன்னைப் பற்றி என்ன சொல்லியிருப்பாள் என்று அபர்ணாவிற்குத் தெரியும்.
என்றுமே சரண்யா அவளை ஒரு பொருட்டாக மதித்ததில்லை.
எப்போதாவது சித்தி கலைவாணியிடம் அலைபேசியில் பேசும்போது அவள் அறிந்துகொண்ட விசயம் அது.
ஆனால் அவள் சரண்யாவிற்காக என்று இங்கே வரவில்லை.
அவளுக்கு ஒரு கடமை இருக்கிறது.
சித்தி கலைவாணியும், சித்தப்பா குமரனும் அவள் வாழ்வில் நேர இருந்த கொடுமையைத் தடுத்து அவளைக் காப்பாற்றியிருக்கிறார்கள்.
அதற்கான நன்றிக்கடனை அவள் செலுத்த வேண்டும்.
சரண்யா எப்படி இருந்தால் என்ன?
கலைவாணியும், குமரனும் அவளை அவர்களின் மூத்த மகளாகத்தான் பாவித்தனர்.
அவள் மனம் கடந்த காலத்தில் நிலைத்தது.
“நீங்களும், மதுவும் ஒரே முகச்சாயலில் இருக்கிறீர்கள். அதனால்தான் உங்களைப் பார்த்த உடன் என்னால் கண்டு பிடிக்க முடிந்தது.”
அமைதியைக் கலைத்து அவளை நினைவுக்குக் கொண்டு வந்தான் மனோரஞ்சன்.
“ஆமாம். எனக்கே அவனை முதன் முதலில் நேரில் பார்க்கும் போது ஆச்சர்யம்தான். நான் என்னுடைய சித்தியைக் கொண்டு பிறந்திருக்கிறேன். அதனால் தான் எனக்கும் மதுவுக்கும் ஒரே முகச்சாயல்.”
“ஆமாம். ஆனால் ஆன்ட்டி ரொம்ப தளர்ந்து போயிருந்தாங்க.”
“பத்தாதற்கு நான் வேறு அவர்களுக்குத் துன்பம் கொடுத்துவிட்டேன்.”
சற்றே கவலையான குரலில் குற்றவுணர்ச்சி பொங்கக் கூறினான்.
“அப்படி எல்லாம் இல்லை மனோ. நீ அலட்டிக்கொள்ளாமல் தூங்கு.”
அவள் சொல்வதை மதித்துக் கண்களை மூடினாலும் அவனுக்கு உறக்கம் வரவில்லை.
தான் கல்லூரியில் சேர்ந்ததும், சரண்யாவை சந்தித்து காதல் கொண்டதும், அதன் பிறகு நடந்தவையும் கோர்வையாய் அவன் மனதில் வலம் வந்தன.
தன்னை சரண்யாவின் நண்பன் என்ற முறையில் வீட்டிற்குள் அனுமதித்த அவளது பெற்றோருக்குத் தான் துரோகம் செய்துவிட்டதாக மனம் குமைந்தான்.
‘இப்போது மதன்ராஜ் தன் பெற்றோரை இழந்து, அந்த அதிர்ச்சியில் பேச்சையும் இழந்திருக்கிறானே? இந்தப் பாவத்தை எங்கே கொண்டு சென்று தீர்ப்பது?’
“மனோ. அலட்டிக் கொள்ளாமல் தூங்கு.” என்றாள் அபர்ணா.
அவன் கண்களை விழித்தான்.
“நான் தூங்கலைன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?”
“நீதான் என்னை உன் அம்மா மாதிரின்னு சொல்லிட்டியே? அப்புறம் குழந்தை பண்ற சேட்டை பற்றித் தெரியாதா என்ன?”
“அப்படி குழந்தை பண்ற சேட்டை பற்றித் தெரிய நீங்க எத்தனை குழந்தைகளை பெத்துட்டீங்களாம்?”
கிண்டலாகக் கேட்டான் மனோரஞ்சன்.
“நீ இப்படி சொல்றே? ஆனால் சில பேர் என்னடான்னா நான் பெத்த குழந்தையை கூடப்பிறந்த தம்பின்னு சொல்றேன்னு சந்தேகப்படறாங்க.”
“யாரை மதுவையா?”
“ஆமாம்.”
வேதனை இருந்தது அவள் குரலில்.
“யார் அவங்க? அவங்களை சும்மாவா விட்டீங்க?”
கோபத்துடன் கேட்டான்.
“பின்னே என்ன பண்றது மனோ? எல்லார்கிட்டயும் போய் என்னை நல்லவள்னு நான் நிரூபிக்க முடியுமா? அதற்குத் தேவையும் இல்லை. இப்ப இதை ஏத்துக்கிட்டாலும் அடுத்தவங்ககிட்ட குறை கண்டுபிடிக்கனும் என்று நினைக்கிறவங்க அடுத்து ஏதாவது சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க.”
“நீங்க சொல்றதும் சரிதான் அண்ணி.” ஒத்துக்கொண்டான்.
அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள் அபர்ணா.
‘இவன் எத்தனை எளிதாக விசயத்தை ஏற்றுக்கொள்கிறான்.’
‘ஆனால் இவனுடைய அண்ணன் ஏன் அப்படி இருக்கிறான்?’
“என்ன அண்ணி யோசனை?”
“இல்ல நீ இப்படி மென்மையா இருக்கே? ஆனால் உன் அண்ணன்… ஏன் இப்படி இருக்கிறார்? ஏதாவது காதல் தோல்வியா?”
அவள் மறைக்காமல் கேட்டுவிட்டாள்.
“சேச்சே? அப்படி எல்லாம் இல்லண்ணி. அவனுக்கு காதல்னாலே பிடிக்காது. இதில் காதல் தோல்வி எப்படி?”
“ஏன் காதல்னாலே பிடிக்காது?”
“அது எல்லாத்துக்கும் எங்கம்மாதான் காரணம். எங்கப்பாவுக்கு பிடிக்காதுன்னு சொல்லி சொல்லியே சின்னப்பிள்ளையில் இருந்து எங்களை வளர்த்தாங்க.”
“ஆனால் எனக்கு பிரச்சினைன்னு வந்த பிறகுதான் எங்கப்பா அப்படி இல்லை. அம்மாதான் தன்னோட பயத்தால் அப்பாவைக் காரணம் காட்டி எங்களை பயமுறுத்தி வளர்த்திருக்காங்கன்னு புரிஞ்சுக்கிட்டேன்.”
“அப்படி என்ன பயமுறுத்தி வளர்த்தாங்க.”
“அப்பாவுக்கு காதல்னா பிடிக்காது. அத்தோட தங்களுடைய அந்தஸ்துக்கு குறைவா, வேற சாதி சனத்தோட கல்யாணம்கிறதை கண்டிப்பா ஒத்துக்கமாட்டாங்க. வெட்டிப் போட்டுடுவாங்க.”
“இதுதான் அம்மா அடிக்கடி எங்ககிட்டே சொல்றது? அதைக் கேட்டு வளர்ந்ததாலோ என்னவோ அண்ணனுக்கும் காதல் பிடிப்பதில்லை.”
“உனக்கும் அப்படி சொல்லித்தானே வளர்த்தாங்க மனோ. அதே மாதிரி நீ இல்லையே.”
“நான் வேற அண்ணி. நான் ஏன் அப்படி சொல்றேன்னா அம்மா சொன்னதையே ஒரு கட்டத்தில் அண்ணாவும் என்னிடம் சொல்ல ஆரம்பித்துவிட்டான். அதுவும் காலேஜ் போன பிறகு அதிக அட்வைஸ்.”
“அதனால்தான் கேட்கிறேன். உன் அண்ணாவுக்கு ஏதாவது காதல் தோல்வியா இருக்குமோ என்று?”
“சேச்சே. அப்படி எல்லாம் இல்லண்ணி. அவன் படிக்கும்போதே தொழிலில் ஈடுபட்டுவிட்டான். அவன் பெண்களிடம் பேசி அவ்வளவா பார்த்தது இல்லை.”
“வேலை விசயம் பேச வேண்டும் என்று வரும்போது சிடுசிடு என்று பேசாவிட்டாலும் கறாராகத்தான் பேசுவான். அவன் பார்வையைக் கண்டாலே ஓரடி தள்ளி நிற்கத்தான் தோன்றும்.”
“அவனை ஒரு பெண் காதலித்து விட்டுப் போவதற்கு எந்த காரணமும் இருக்கப் போவதில்லை. என் அண்ணனை மறுப்பதற்கு எந்தப் பெண்ணாலும் முடியாது.”
கொஞ்சம் கர்வத்துடனே கூறினான்.
அதில் அவன் தன் சகோதரன் மீது வைத்திருந்த பாசம் தெரிந்தது.
சித்தரஞ்சனும் அப்படித்தான்.
அவன் படிக்கும்போது நண்பர்களிடம், அதுவும் குறிப்பாக பெண்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துவானே தவிர அவனிடம் மிகவும் பிரியமாக இருப்பான்.
தம்பி ஆசைப்படுவதை உணர்ந்து வாங்கிக்கொடுப்பான்.
அவன் ஆசைப்பட்டதை மறுத்தான் என்றால் அது சரண்யாவைத் திருமணம் செய்வதைத்தான்.
அதற்கு சித்தரஞ்சன் கூறிய காரணமும் மனோரஞ்சனுக்கு சரியாகத்தான் தோன்றியது.
அவன்தான் சரண்யாவைப் பற்றி அறிவானே?
அவளது ஆசையைப் பற்றியும் அறிவான்.
ஆனாலும் காதல் கொண்டுவிட்ட மனம் அவளை மறக்க முடியாமல் தவித்தது.
வீட்டில் எதிர்த்துப் பேச துணிந்தது.
அதனால்தான் அவன் சரண்யா குடும்பத்தாரிடம் பேசுவதற்குச் சென்றான்.
அவன் அங்கே என்ன பேசினானோ தெரியவில்லை.
அதன் பிறகு அவனால் சரண்யாவோடு தொடர்பு கொள்ள முடியவில்லை.
அத்துடன் விட்டிருந்தால் பரவாயில்லை.
அவர்களைக் காரணம் காட்டி லலிதாவை மணமுடித்தது தான் அவனால் இன்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
இரண்டு பெண்களுக்குமே அவன் துரோகம் செய்துவிட்டான்.
“என்னாச்சு மனோ?” அபர்ணாவின் உலுக்கலில் அவன் சுயநினைவுக்கு வந்தான்.
“ஏன் அண்ணி அண்ணாவைப் பற்றிக் கேட்கறீங்க?”
அபர்ணாவைக் கூர்மையாகப் பார்த்துக்கொண்டே அந்தக் கேள்வியைக் கேட்டான்.
“என்ன கேள்வி மனோ இது? நான் இங்கே வந்த காரணமே சரண்யாவை உனக்குத் திருமணம் செய்துவைத்து உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கத்தான். அதற்கு உன் அண்ணன் தடையாக இருக்கிறார் என்றால் அதன் காரணத்தை நான் தெரிந்து கொள்ள வேண்டாமா?”
“சரிதான் அண்ணி. அண்ணா தனக்குத் திருமணமே வேண்டாம் என்று பிடிவாதமாக இருந்ததால்தான் அப்பா எனக்குத் திருமணம் என்றதும் சம்மதித்தார்.”
“ஏன் உன் அப்பா அதற்கு முன் சம்மதிக்கவில்லையா?”
“இல்லண்ணி. எனக்கு சின்ன வயசுன்னு அப்பா தடுத்தாங்க. அம்மாதான் மூத்த மகன் கல்யாணமே வேண்டாங்கிறான். சின்னவனோட ஜாதகத்தில் இப்பக் கல்யாணம் பண்ணலைன்னா பெரிய பிரச்சினைன்னு இருக்கு. நமக்கு வாரிசு வேண்டாமா? அதனால் இப்ப பண்ணியே ஆகனும் என்று அப்பாவைக் கட்டாயப்படுத்தினாங்க. அப்பாவும் வேறு வழியில்லாமல் ஒத்துக்கிட்டாங்க.”
“அப்ப உன் அப்பா மூலமா உன் கல்யாணத்தை நடத்த ஒரு வழியிருக்குன்னு சொல்லு.”
“ஏன் மனோ? அப்ப சரண்யாவை எதற்கு காதலித்தே? அவளை ஏமாற்றுவதற்கா? இதை நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை.”
“இல்லண்ணி. நான் ஏமாத்த நினைக்கலை. ஏற்கனவே என் அண்ணன் திருமணம் ஆகாமல் இருக்கிறான். அவனைப் பத்திக் கொஞ்சம் கூட நினைச்சுப் பார்க்காமல் நான் விளையாட்டா சரண்யாவைக் கல்யாணம் செய்யப் போய், அது வினையில் முடிஞ்சு அடுத்ததா ஒரு கல்யாணம். இப்ப மூன்றாவது தடவையா? வேண்டாம் அண்ணி. நான் இப்படியே இருந்துடறேன். என்னால் சரண்யாவின் குடும்பம் சிதைந்து போயிடுச்சேன்னு ஒரு வருத்தம்தான். மற்றபடி அவள் நல்லாயிருந்தால் போதும். அவளுக்கு சுயநினைவு வந்த பிறகு கண்டிப்பா என்னை மன்னிக்க மாட்டாள். அவளோட குணம் எனக்கு நல்லாத் தெரியும்.”
“சரி மனோ. இப்ப எதையும் பேச வேண்டாம். தூங்கு.” என்று அத்துடன் பேச்சை நிறுத்தினாள்.
அவளுக்கு சரண்யா நிச்சயம் மனோரஞ்சனை மறுக்கமாட்டாள் என்பது உறுதியாகத் தோன்றியது.
அவளில் மனமாற்றம் ஏற்பட்டதால்தான் அவள் மனநிலை இப்போது பாதிக்கப்பட்டிருக்கிறது.
முன்பிருந்த சரண்யாவாக இருந்திருந்தால் அவள் இப்படி மனநல மருத்துவமனையில் அடைபட்டுக்கிடக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது.
‘பார்ப்போம். என்னதான் நடக்கிறது என்று.’
தன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சித்தரஞ்சனுக்கு மனம் முழுவதும் மருத்துவமனையில் தான் இருந்தது.
முதலில் மனோரஞ்சன் அவளை ‘அண்ணி’ என்றதும் அவனுக்குப் புரியவில்லை.
ஆனாலும் தம்பி தப்பான எண்ணத்தில் அவள் மேல் ஆர்வம் காட்டவில்லை.
அண்ணியாக நினைக்கிறான் என்பது அவனுக்கு நிம்மதியாகத்தான் இருந்தது.
தன்னை ‘அண்ணி’ என்று அழைக்கச் சொல்லி அவள் தன் தம்பியை மறைமுகமாகத் தூண்டினாளோ? என்று அவன் யோசிக்கும்போதே அங்கே வந்த கிருஷ்ணாவை ‘அண்ணா’ என்றழைத்து அவனுடைய யோசனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தான் மனோரஞ்சன்.
அவன் தம்பி தப்பித்துவிட்டான்.
அவளிடம் யார் மாட்டினால் என்ன என்றுதான் முதலில் அவனுக்குத் தோன்றியது.
ஆனால் இப்போது வீட்டிற்குக் கிளம்பி வந்ததும் அவன் மனம் குறுகுறுக்கிறது.
மனோரஞ்சனின் அறையில் கிருஷ்ணாவிற்கும், அபர்ணாவிற்கும் நடந்த பார்வை பரிமாற்றத்தை அவனும் கண்டானே.
அதுவே இப்போது அவன் மனக்கண்ணில் ஓடிக்கொண்டிருக்கிறது.
வீட்டிற்குள் நுழைந்து, சாப்பிட அழைத்த சண்முகத்திடம் உணவை மறுத்துவிட்டுத் தன் அறையில் வந்து படுக்கையில் விழுந்த சித்தரஞ்சனின் மனதில் அவர்கள் இருவரின் பார்வை பரிமாற்றமும், மனோரஞ்சனின் அண்ணா, அண்ணி என்ற அழைப்புமே குடைந்து கொண்டிருந்தது.
ஏனோ அவன் மனதிற்குள் காந்தியது.
உறங்க விடாமல் நித்ராதேவி அவனை சோதிக்க ஆரம்பித்தாள்.
காதல் வளரும் . . . . . .
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.