மறுநாள் மனோரஞ்சனைக் காண அவனது பெற்றோர் வந்தபோது அபர்ணா அங்கேதான் பணியில் இருந்தாள்.
சகுந்தலா அவளை அலட்சியமாக நோக்கிவிட்டுத் தன் மகன் அருகில் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அமர்ந்தார்.
தேவேந்திரன் அவளைப் பார்த்து மென்னகை புரிந்தார். அவளும் மரியாதைக்கு வணக்கம் வைத்தாள்.
“என்னடா கண்ணா. எப்படியிருக்கே?”
“நல்லாருக்கேன்மா.”
ஒற்றை வார்த்தையில் பதில் அளித்துவிட்டு மௌனமானான்.
அருகில் வந்த தேவேந்திரன் எதுவும் பேசவில்லை. கட்டிலில் அமர்ந்து அவன் தலையை வாஞ்சையுடன் கோதினார்.
அவன் அவர் கையில் முகத்தைப் பதித்துக்கொண்டான்.
அவர் அவன் முதுகில் மெதுவாகத் தட்டிக்கொடுத்தார்.
அங்கே பேச வார்த்தைகள் இல்லை. அந்த மௌனமே ஆயிரம் கதைகள் பேசியது.
“என்னப்பா மகனைக் காண இங்கேயே நேரே வந்துவிட்டியா? வாம்மா நல்லாருக்கியா?”
நண்பனிடம் கேட்டவர், நண்பனின் மனைவியையும் வரவேற்றவாறே உள்ளே நுழைந்தார் ஜெயச்சந்திரன்.
“சந்திரா. வா வா. மனோவுக்கு இன்னும் முழுசா குணமாகலை. கொரோனா பரவுறது அதிகமா இருக்குன்னு லாக்டவுன் அறிவிச்சிட்டாங்க. இப்ப என்ன செய்யறதுப்பா?”
“ஆமாப்பா என்ன செய்யறதுன்னு அரசாங்கமே திகைச்சுப் போய்தான் இருக்கு. இதுக்கு முன்னாடியும் இது மாதிரி நடந்திருக்கிறதுதான். பேருதான் விதம் விதமா சொல்றாங்க. ஆனால் இது நமக்குப் புதுசு.”
“மனோவுக்கு இங்கே வைத்து வைத்தியம் பார்க்க முடியாதுதானே?”
“ஆமாம். வீட்டிலேயே வைத்துப் பார்த்துக்கலாம். கூடவே இருந்து பார்த்துக்கிற மாதிரி ஒரு நர்சை ஏற்பாடு செய்துக்கலாம். அப்புறம் நானும், கிருஷ்ணாவும் வீட்டில் வந்து பார்க்கிறோம். பிரச்சினை தீர்ந்திடுச்சு.”
நண்பர்கள் இருவரும் பேசிக்கொண்டதில் சகுந்தலா, ஜெயச்சந்திரனுக்கு எந்த பதிலும் சொல்லாதது மற்றவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை.
இதுதான் பழக்கம் போலும். ஆனால் இதைக் கவனித்துக்கொண்டிருந்த அபர்ணாவிற்குத்தான் என்னவோ போல் இருந்தது.
வயதில் மூத்தவர். கணவனின் நண்பர். இந்த மருத்துவமனையின் தலைவர். அவருக்கே சகுந்தலா மரியாதை கொடுத்துப் பேசவில்லை.
தன் தங்கையை அங்கே கொண்டு சேர்ப்பது எப்படி?
மனநிலை பாதிக்கப்பட்ட பெண் என்றால் என்ன சொல்வாங்களோ?
இன்னும் சரண்யாவின் நிலையிலும் எந்த முன்னேற்றமும் இல்லை.
ஒருவேளை அவள் குணமாகி வந்த பிறகு இவர்கள் திருமணம் நடந்தாலும், அவளை சகுந்தலா சரியாக நடத்தவில்லை என்றால் அவள் மனம் மீண்டும் பேதலித்துப் போக வாய்ப்பிருக்கிறதே.
அவளைத் திருமணம் செய்து கொடுத்துவிட்டுக் கூடவேவா இருந்து காப்பாற்ற முடியும்?
தனக்கென்றும் கடமையிருக்கிறதே.
இவை எல்லாம் சேர்ந்து அவள் மனதைக் குடைந்தன.
சகுந்தலா என்னவோ வேற்றாள் போல் அமர்ந்திருக்க, இப்போது தேவேந்திரன் தன் மகனது கைகளைப் பற்றியிருந்தார்.
இதை எல்லாம் கவனித்துக்கொண்டிருந்த அபர்ணாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது.
தன் மகனிடம் சகுந்தலா நடந்துகொண்ட விதத்தைப் பார்த்ததும் மற்றவர்கள் இயல்பாகத்தான் இருந்தார்கள்.
அதனால் அவர் எப்போதுமே இப்படித்தான் இருப்பார் என்று புரிந்தது.
மகன் விபத்தில் மாட்டியிருக்கிறான் என்று தெரிந்த போது மயங்கிவிழுந்து அவருக்கும் இங்கேயே சிகிச்சை நடந்ததும் அவளுக்குத் தெரிய வந்திருந்தது.
அதன் பிறகு மனோரஞ்சன் கண் விழித்த பிறகு சகுந்தலாவும் உடல் தேறி வீட்டிற்குச் சென்றுவிட்டார்.
இடையில் ஓரிருமுறை தன் மகனைக் காண வந்தார் என்று அவள் அறிவாள். ஆனால் இன்றுதான் நேரில் பார்க்கிறாள்.
அவர் இடத்தில் ராஜலட்சுமி அம்மாள் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?
அவள் நினைத்த கணம் அவளுக்கு அழைப்பு வந்தது.
‘நவீன் அழைக்கிறான்’ என்றது அலைபேசி.
அப்போது பகல் நேரத்துப் பணிக்கு வந்த பொன்னி மனோரஞ்சனின் பொறுப்பை எடுத்துக் கொள்ள அவனிடம் விடைபெற்றுக் கிளம்பினாள்.
திக்கற்று திசை தெரியாமல் அவள் தவித்த தருணத்தில் அவளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் தான் ராம் பிரசாத் மற்றும் ராஜலட்சுமி தம்பதி.
ராம் பிரசாத் மருத்துவர். இருதய அறுவை சிகிச்சை நிபுணர். மருத்துவக் கல்லூரியில் தலைமை மருத்துவர்.
நகரத்தில் மிகப் பிரபலமான ‘நலம்’ என்ற பல்நோக்கு மருத்துவமனை அவர்கள் குடும்பத்திற்குச் சொந்தமானது.
அவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் அருண் பிரசாத். மூளை நரம்பியல் நிபுணர்.
இளையவன் நவீன் பிரசாத். எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். கிருஷ்ணாவின் நண்பன். (இப்போதைக்கு இந்த அறிமுகம் போதும். பின்பு இவர்களைப் பற்றி பார்க்கலாம்.)
மருத்துவமனையை விட்டு வெளியில் சென்றவள் நவீனிடம் பேச ஆரம்பித்தாள்.
“அப்பு. நீ உடனே மதுவை அழைத்துக்கொண்டு இங்கே வந்துடு. கொரோனா லாக்டவுன் போடப்போறாங்க. அதன் பிறகு நீ இங்கே வர நினைச்சால் கொஞ்சம் சிரமமாயிடும்.”
எடுத்த உடனே அவளைப் பேச விடாமல் உடனே அவளைக் கிளம்பி வரச் சொல்லி அவசரப்படுத்தினான்.
“நவீன். இன்னும் நான் இங்கே வந்த வேலை முடியலை.”
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நீ உடனே வா. உன்னைத் தனியா விட முடியாது.”
“ப்ளீஸ் நவீன். புரிஞ்சுக்கோ. சித்தி சித்தப்பாவுக்கு நான் செய்யற கடமை இது.”
“மண்ணாங்கட்டி. இப்படித்தான் நீ அவங்களுக்கு கடமையைச் செய்யனுமா?”
“சரண்யா பாவம்.”
“அவளை நாம பார்த்துக்கலாம். அந்த வீட்டில்தான் கொண்டு போய் சேர்க்கனும்னு என்ன கட்டாயமா?”
“மனோரஞ்சன் சரண்யா மீது உயிரையே வைத்திருக்கிறான்.”
“அப்ப அவனையும் இங்கே கூட்டிக்கிட்டு வந்துடு.”
“ஏன் இப்படி பேசறே? எல்லாம் முன்னாடியே பேசி வைத்ததுதானே? இப்ப என்ன புதுசா?” அலுத்துக்கொண்டாள்.
“அப்ப சூழ்நிலை அப்படி இருந்துச்சு. உனக்கு என்ன பிரச்சினை வந்தாலும் உடனே உன்னை ஓடி வந்து பார்த்துடலாம்னு ஒரு நம்பிக்கை. கூடவே கிருஷ்ணா வேறு பக்கத்தில் இருக்கிறான்.”
“இப்ப மட்டும் என்ன மாறிவிட்டது?”
“இப்ப கொரோனா லாக்டவுன் போடப்போறாங்க அப்பு. நினைச்ச நேரத்துக்கு நான் திடீர்னு உன்னைப் பார்க்க வர முடியுமா?”
“அப்படி என்ன பிரச்சினை எனக்கு வந்துரப்போகுது? என்னை நானே….”
“என்ன உன்னை நீயே பார்த்துப்பே அப்படித்தானே? கல்நெஞ்சக்காரி. எங்களை எல்லாம் விட்டுட்டு உன்னால் எப்படி இருக்க முடியுது? நீ போனதில் இருந்தே உன் நினைப்புதான் எங்க எல்லாருக்கும். அம்மா உன்கிட்ட காட்டிக்காவிட்டாலும் உன்னை நினைச்சு ஏங்கறாங்க தெரியுமா? ஏன் அப்பு இப்படி செய்யறே? அருண்… இல்ல இல்ல அண்ணாவோடும் நீ சரியாகப் பேசவில்லை போல.”
அருகில் ராஜலட்சுமி இருக்கிறார் போலும். அதனால் தான் தன் சகோதரனின் பெயரைக் கூறிவிட்டு, இல்லை இல்லை என்று மறுத்துவிட்டு அண்ணா என்கிறான்.
நண்பனின் செயலில் சிரித்துக்கொண்டாள்.
ராஜலட்சுமி மூத்த மகனை, இளைய மகன் பெயர் சொல்லி அழைப்பதை விரும்புவதில்லை.
அண்ணா என்று அழைக்க வேண்டும் என்று அறிவுறுத்துவார். அப்போதுதான் ஒரு பிணைப்பு வரும் என்பது அவரது நினைப்பு.
நவீன் பிரசாத்தின் பேச்சைக் கேட்டதும், அவள் மெளனமானாள்.
சரண்யாவைக் காரணம் காட்டி வந்தாலும், அவளும் இந்தப் பிரிவை நிரந்தரமாக்க எண்ணித்தான் இங்கே கிளம்பி வந்ததே.
இல்லை என்றால் திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்துவார்கள்.
அவள் சம்மதம் இல்லாமல் எதுவும் நடந்துவிடப் போவதில்லை.
ஆனாலும் அருண் பிரசாத் தன்னைக் காரணம் காட்டிக் காத்திருப்பது அவளுக்கு சங்கடமாக இருந்தது.
அவனுக்கும் வயதாகிக் கொண்டே போகிறது. திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினாலும் அவர்கள் அவளை சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைக்கவே முயல்கின்றனர்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது அவர்களது எண்ணம்.
ஆனாலும் திருமணம் செய்து கொள்ளும் தகுதி தனக்கு இல்லை என்று அவள் மனதில் ஊறிப்போய்விட்டது.
வாழ்நாள் முழுவதும் தன்னுடைய வேலையிலேயே காலத்தை கழித்துவிடத்தான் அவள் விரும்பினாள்.
குடும்பம் என்று உறவு கொண்டாடத்தான் மருத்துவர் ராம் பிரசாத் குடும்பம் இருக்கிறது.
சரண்யாவிற்குத் திருமணம் செய்து வைத்துவிட்டு, மதன்ராஜை தன் பொறுப்பில் வைத்துக்கொண்டு, அவனை வளர்த்து நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் என்பதாக மட்டும்தான் அவளது விருப்பம் இருக்கிறது.
ஆனால் இவள் வெளிப்படையாக அவர்களிடம் எதுவும் கூறவில்லை.
கொஞ்ச காலம் திருமணத்தைத் தள்ளிப் போட்டால் போதும், பிறகு அப்படியே காலத்தை ஓட்டிவிடலாம் என்று அவள் நினைத்திருக்க, அருண் பிரசாத் நினைப்பு வேறாக இருக்க, இவள் இதுதான் சமயம் என்று இங்கே ஓடிவந்துவிட்டாள்.
சரண்யாவை திருமணம் செய்து கொடுத்த பிறகு, தானும் இங்கேயே வேலையில் நிலைத்துவிட்டால், அவளையும் கவனித்துக்கொள்ளலாம்.
பெற்றோர் இல்லை என்ற கவலை அவளுக்கும் இருக்காது என்று எண்ணியிருந்தாள்.
எப்படியும் சரண்யாவின் திருமணம் வரையில்தான் அவர்கள் காத்திருப்பார்கள்.
அதன் பிறகு அவள் இங்கே இருக்க நினைத்தாலும், அவளை இங்கேயே இருக்க விடமாட்டார்கள்.
“என்ன அமைதியாயிட்டே? ஏதாவது கேட்டால் பதில் சொல்லாமல் அமைதியா அழிச்சாட்டியம் பண்றே? எப்பதான் மாறப்போறே? மத்த நேரங்களில் வாய் கிழிய பேசறேதானே? இப்ப எங்கே போச்சு அந்த பேச்சு?”
அவன் குரலில் எரிச்சல் இருந்தது.
“டேய். அவளை ஏன்டா திட்டறே? இங்கே இருக்கும்போதுதான் சண்டை போட்டுக்கிட்டே இருப்பே? இப்பவுமா? இங்கே கொண்டா?”
மறுமுனையில் இளைய மகனைத் திட்டிக்கொண்டே அலைபேசியைத் தன் கையில் வாங்கினார் ராஜலட்சுமி.
“அம்மு. எப்படிடா இருக்கே? மது எப்படி இருக்கான்?” பாசம் வழிந்தது அவர் குரலில்.
“அம்மா.” அழைக்கும்போதே அவரது அன்பில் நெகிழ்ந்து போனாள் அபர்ணா.
“நல்லாருக்கேன்மா. மதுவும் நல்லாருக்கான். நீங்க எல்லாரும் எப்படி இருக்கீங்க?”
“நல்லா இருக்கோம்டா. உன்னைப் பிரிஞ்சு இருக்கிறதுதான் கஷ்டமா இருக்கு. போன இடத்தில் எல்லாம் வசதியா இருக்கா? போனதிலேருந்து நீ நிதானமாகவே பேசவில்லை.”
“எல்லாம் நல்லாருக்கும்மா.”
“நீ இப்ப இங்கே வந்திடறியாடா?”
“அம்மா. சரண்யா…” இழுத்தாள்.
“எனக்குப் புரியுதுடா. அவங்க குடும்பத்தில் யாரையாவது பார்த்தியா? அந்தப் பையன் எப்படியிருக்கான்?”
“நல்லாருக்கான்மா.”
“நா வேணும்னா அருண் அப்பாக்கிட்ட பேசவா?”
“இல்லம்மா. வேண்டாம். இன்னும் சரண்யாவுக்கு குணமாகலை. அதுவரைக்கும் காத்திருக்க வேண்டியிருக்கே? அதற்குள் அவர்கள் குடும்பத்தில் சரண்யாவை ஏற்றுக்கொள்வார்களா என்று பார்க்க வேண்டும்.”
“இப்ப கொரோனா வந்துடுச்சே? ஹாஸ்டலில் தங்க இடம் கிடைக்கலைன்னு சொன்னியேடா? நான் கிருஷ்ணாவோட அப்பாக்கிட்ட பேசவா? நீ அங்க போய் தங்கிக்கறியா?”
“இல்லம்மா. கிருஷ்ணா ஏற்பாடு பண்ணிட்டான்.”
அவள் மனோரஞ்சனின் வீட்டில் தங்க முடிவு செய்திருப்பதை இப்போது அவரிடம் சொல்ல வேண்டாம் என்று முடிவு செய்திருந்தாள்.
ஒருவேளை அப்படி அவர்கள் வீட்டில் தங்க முடியாமல் போய்விட்டால் என்ன செய்வது?
அப்படி அங்கே தங்க நேர்ந்தால் அதன் பிறகு சொல்லிக்கொள்ளலாம் என்று அப்படியே விட்டுவிட்டாள்.
“உனக்கு ஏன் பொறாமை? நாங்க அப்படித்தான் கொஞ்சிக்குவோம்.” உரிமைக்குரல் எழுப்பினாள் அபர்ணா.
“சரி தாயே. என்ன வேணா பண்ணிக்குங்க. அருண்கிட்ட பேசு.”
“என்ன அம்மா போயிட்டாங்களா?”
“ஆமாம். இல்லன்னா என் காதை கையோட பிச்சு எடுத்திருப்பாங்க. கவனமா இருந்துக்கோ. உனக்கு நாங்க எல்லாரும் இருக்கோம்கிறதை மறந்துடாதே. என்ன சரியா?”
“சரி. சரி.” என்று அவள் சத்தியம் செய்யாத குறையாக சொல்லவும்தான் அவன் அழைப்பைத் துண்டித்தான்.
இன்று கண்டிப்பாக அருண் பிரசாத்திடம் பேச வேண்டும்.
ராம் பிரசாத்திடம் அவ்வளவாகப் பேசமாட்டாள். ஆனால் அவர் மீது மரியாதை கலந்த பயபக்தி இருக்கும்.
அதே மாதிரி அருண் பிரசாத்திடமும் அவளால் நவீனுக்கு இணையாகப் பேசுவது போல் பேச முடியாது.
அவனிடம் பேசும்போது மரியாதையுடன் தான் பேசுவாள். அவள் பேசாத வார்த்தைகளையும் கண்டு கொள்வான் அருண் பிரசாத்.
நவீனிடம் ஒரு தோழமையை உணர்வாள்.
அவனோடு அரட்டை அடிப்பாள். ஆனால் முக்கிய முடிவெடுக்கும் போது அவள் பேசுவது அருண் பிரசாத்திடம்தான்.
அப்படி ஒரு நம்பிக்கை அவனிடம்.
அவனும் அவளது நம்பிக்கை கெடாத வண்ணம்தான் இதுவரை நடந்திருக்கிறான்.
நவீன் பிரசாத் கூட சண்டை போடுவான்.
தன்னை ஒரு பெரிய மனிதனாக மதிக்காமல், இன்னும் சின்னப்பையனாகவே நினைப்பதாக வம்பிழுப்பான்.
அப்போது அவனது சிறுபிள்ளைத்தனம் கண்டு வீட்டினர் நகைப்பார்கள்.
ராஜலட்சுமியை ‘அம்மா’ என்று வாயாற அழைப்பவள், நவீனை வாடா போடா என்று வம்பிழுப்பவள் மற்ற இருவரையும் ‘சார்’ என்றே அழைப்பாள்.
அதைத் தாண்டி வேறு வார்த்தைகள் வராது. அவர்கள் குறைபட்டுக்கொண்டாலும் இவள் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.
அவர்கள் வீட்டுப் பெண் போல் அவர்கள் நடத்தினாலும், தன் தகுதி, இடம் என்ன என்று புரிந்து அவள் மரியாதையுடனே நடந்துகொள்வாள்.
ஆனால் அது மற்றவர்களுக்குத் தெரியாமல் நடந்துகொள்வாள். அதுதான் அபர்ணாவின் சிறப்பு.
இப்போதும் இந்த மாதிரி என்று அவளது முடிவைப் பற்றிக் கூறியதும், அருண் பிரசாத் அவளை கூர்ந்து பார்த்தான்.
அவன் அபர்ணாவைப் பற்றி நன்கறிவான்.
அதனாலேயே பத்திரம் சொல்லி அனுப்பி வைத்தான். இல்லை என்றால் நவீன் அவளை விட்டிருக்கவே மாட்டான்.
அவர்கள் அத்தனை அன்பை தன் மீது வைக்கும் அளவுக்கு தான் அப்படி என்ன செய்துவிட்டோம் என்று அடிக்கடி நினைப்பாள் அபர்ணா.
அவளை நல்ல முறையில் வாழ வைத்திருக்கிறார்கள். அவள்தான் அவர்கள் குடும்பத்திற்கு கடன் பட்டிருக்கிறாள்.
ஆனால் இதை அவர்களிடம் அவள் சொல்லிவிட முடியாது.
ஒரு பெருமூச்சுடன் அருண் பிரசாத்திற்கு அழைத்தாள்.
“அப்பு. எப்படி இருக்கே?”
மறுபக்கம் அருண் பிரசாத்தின் ஆழ்ந்த குரல்.
“நல்லாருக்கேன் சார். நீங்க எப்படியிருக்கீங்க? பெரிய டாக்டர் எப்படியிருக்காங்க?”
“ம். நல்லாருக்கோம். நீ ரொம்ப கேட்டுக்கிட்டதால்தான் உன்னை அனுப்பி வச்சோம். உனக்கு ஏதாவது பிரச்சினைன்னா எனக்கு உடனே சொல்லனும். சரியா.”
“சரி சார்.”
“உன்னைப் பத்தி கிருஷ்ணாவோட அப்பா என்கிட்டே விசாரிச்சார். நீ இங்கே வேலை பார்த்தியா? நீ எப்படின்னு கேட்டார்.”
அவள் அமைதியாக அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
“அவர் ஏன் இத்தனை நாட்கள் இல்லாமல் இப்ப விசாரிச்சிருக்கார்னு தெரியலை. கிருஷ்ணா இருக்கான். பயப்படறதுக்கு ஒன்னுமில்லை. இருந்தாலும் கவனமா இருந்துக்கோ. நாங்க உனக்கு இருக்கோம்கிறதை எப்பவுமே மறந்துடாதே.”
“சரி சார்.”
“அடிக்கடி பேசு.”
“சரி சார்.” என்று அழைப்பைத் துண்டித்தாள்.
மனோரஞ்சனை இன்றே வீட்டிற்கு அழைத்துச் செல்லலாம் என்று மருத்துவர் ஜெயச்சந்திரன் சொல்லியிருக்க, தன் தாய் சகுந்தலா மூலம் அறிந்த சித்தரஞ்சன் மருத்துவமனைக்கு வந்திருந்தான்.
அவள் வெளியில் வந்து பேச ஆரம்பிக்கும்போதுதான் அவன் உள்ளே நுழைந்தான்.
அவள் யாரிடம் பேசுகிறாள் என்று தெரியாவிட்டாலும், அவளது முகபாவனையைக் கவனிக்கும் தூரத்தில்தான் அவன் நின்றான்.
மிகவும் மகிழ்ச்சியாக, முகம் ஒளிர அவள் யாரிடம் அப்படி பேசுகிறாள்? முகம் சுளித்தான் அவன்.
‘இவளுக்குக் கண்டிப்பாக புத்தி புகட்ட வேண்டும்.’
முடிவெடுத்தவன் மருத்துவர் ஜெயச்சந்திரனின் அறையை நோக்கி விரைந்தான்.
“ஆமாப்பா. கொரோனா பரவிக்கிட்டு இருக்கு. இங்கே இருக்கிறது இனி ரிஸ்க். வீட்டில் இருந்து பார்த்துக்கலாம். கூடவே ஒரு நர்சை ஏற்பாடு பண்றேன்.”
அவனுக்கு அபர்ணாவின் ஞாபகம் வந்தது.
அவனுக்கு எப்படி அபர்ணாவைப் பற்றிய பேச்சை எடுப்பது என்று யோசனையாக இருந்தது.
இதுவரைக்கும் அவன் பெண்கள் பற்றியே யாரிடமும் பேசியிராதவன்.
அவன் யோசனையில் இருக்கும்போதே அனுமதி கேட்டுக்கொண்டு அபர்ணா அங்கே வந்தாள்.
“வரச்சொன்னீங்களாமே டாக்டர்.” என்று அவரது கட்டளைக்காக காத்திருந்தாள்.
ஜெயச்சந்திரன் அவளை கூர்ந்து கவனித்தார். மகன் சொன்னதும் அவளை வேலைக்கு அமர்த்தியவர்தான்.
அதன் பிறகு அவ்வளவாக அவளிடம் பேசியதில்லை.
புதிதாக வேலைக்குச் சேர்ந்த அவளைத் தன் மகனுக்கு உதவியாக வீட்டிற்கு அனுப்பி வைக்குமாறு நண்பன் சொல்லவும் அவருக்குத் தட்ட முடியவில்லை.
இருந்தாலும் யாரோ ஒரு பெண்ணை, இப்போதுதான் வேலைக்குச் சேர்ந்திருப்பவளை நண்பனின் வீட்டிற்குள் அனுமதிக்க அவர் யோசித்தார்.
நாளைக்கு அவளால் எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாதே. வயதுப் பெண் வேறு.
என்னதான் கிருஷ்ணா தனக்குத் தெரிந்த பெண் என்று கூறினாலும், அவனுக்கு அனுபவம் போதாதே.
அதனால்தான் அவள் முன்பு எங்கு வேலை செய்தாள் என்று விசாரித்து அறிந்தவர் அருண் பிரசாத்திடம் தொடர்பு கொண்டு பேசினார்.
நலம் மருத்துவமனை என்றதுமே ஜெயச்சந்திரனுக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருந்தது.
அதுவும் அருண் பிரசாத் அபர்ணாவைப் பற்றி நல்ல முறையில் கூறியதும் திருப்தியானார்.
நண்பனிடமும் அவளையே மனோரஞ்சனுக்கு மருத்துவ உதவி செய்ய அனுப்பி வைப்பதாகக் கூறினார்.
“வாம்மா. இவர் என்னோட நண்பர். உனக்குத் தெரிந்திருக்கும்.”
“ஆமாம் டாக்டர். தெரியும்.” என்று ஆமோதித்தாள்.
“மனோரஞ்சனை இன்னிக்கு டிஸ்சார்ஜ் பண்றோம். அவன் வீட்டிலேயே ட்ரீட்மெண்ட் செய்துக்கலாம்னு முடிவெடுத்திருக்கோம். அதனால் நீ உதவிக்காக அங்கே போகனும். உனக்கு அங்கேயே தங்க ஏற்பாடு செஞ்சு தருவாங்க.”
அவள் தயக்கமாய் நின்றாள்.
“என்னம்மா?”
“சார் என்னோட என் தம்பியும் இருக்கிறான். நான் எப்படி சார்? வேற யாரையாவது…” என்று இழுத்தாள்.
“எல்லாம் கிருஷ்ணா சொன்னான்மா. நீ இப்போதைக்கு தங்க இடம் இல்லாம இங்கேயேதானே இருக்கே. தம்பி கூட இருக்கிறதால் உன்னால் ஹாஸ்டலில் தங்க முடியலையாம். அதனால் வாடகைக்கு வீடு பார்க்கிறேன்னு சொன்னான். இந்த சமயத்தில் நீ தனியா வாடகைக்கு வீடு எடுத்து தங்கறது சரியில்லைம்மா. உன் தம்பியும் வரலாம்னு ஒத்துக்கிட்டாங்க. உனக்கு அவங்க வீடு பாதுகாப்பா இருக்கும். என்ன சொல்றே?”
அவள் யோசனையாய் அங்கே நின்றிருந்த சித்தரஞ்சனைக் கவனித்தாள்.
அவனது பார்வையும் அவள் முகத்தில் தான் இருந்தது.
அவர்கள் தன் பதிலுக்காகக் காத்திருப்பது கண்டு உடனே சம்மதம் கூறினாள்.