“ஒரு நிமிஷம் கொடுங்க சிஸ்டர்” என்று செவிலியிடம் சொன்ன ரோஜா, “ரகு, விசிட்டிங் கார்டு, போன் நம்பர் மாதிரி ஏதாவது இருக்கா பாருங்க?” என்றாள்.
“டிரைவிங் லைசென்ஸில் வீட்டு அட்ரஸ் இருக்கு ரோஜா. ஆனா, போன் நம்பர் எதுவும் இல்லையே. உனக்கு இவரைத் தெரியும் சொன்ன இல்ல? எப்படி?” ரகு கேட்க, மெல்ல அவனிடம் இருந்த இளமாறனின் ஓட்டுநர் உரிமத்தை வாங்கினாள் ரோஜா.
“ரோஜா, அதை இப்படிக் கொடுங்க.” செவிலி வலுக்கட்டாயமாக அதை வாங்க, சட்டென நிமிர்ந்த ரோஜாவின் பார்வை, அவருக்குப் பின்னிருந்த சுவரில் பதிந்தது.
அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் பெயர்கள் அங்கே பொறிக்கப்பட்டிருக்க, அதில் இரண்டாம் இடத்தில் இருந்த பெயரில் சில நொடிகள் நிலைத்தது அவள் பார்வை.
ரகுவரன் அவளிடத்தில் இளமாறனின் வாலட்டை திருப்பி அவனது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் அவன் தாத்தா, பாட்டியுடன் இருந்த சிறிய புகைப்படத்தை காண்பித்த மறுகணம், “இளமாறன். நம்ம சுகந்தி டாக்டர், அவங்களோட பையன்” சட்டென நினைவு வந்தவளாக சொன்னாள் ரோஜா.
“சுகந்தி மேம் பையனா?” சந்தேகமாக கேட்டார் செவிலி.
“ம்ம். அவங்க ஃபர்ஸ்ட் பையன்” மெல்ல முணுமுணுத்தாள் ரோஜா.
மெல்லிய அதிர்வுக்கு பின், “சாரி” என்ற செவிலி, வேகமாக திரும்பி, “நான் டாக்டருக்கு இன்பார்ம் பண்றேன்” என்றார். மருத்துவரிடம் உணமையை மட்டுமே பேசும் உலகம், மருத்துவரின் உண்மையையும் அறிந்தே இருந்ததில் அவளுக்கு ஆச்சரியம் ஏதும் எழவில்லை.
மறுகணமே பதட்டத்துடன் பரபரப்பாக செயல்படத் தொடங்கியது மருத்துவமனை. அவனுக்கு கேள்விகளின்றி சிறப்பான சிகிச்சை தொடங்கியிருந்தது.
“அந்த நர்ஸ் ஏன் டவுட்டா கேள்வி கேட்டாங்க? என்ன ஹிஸ்டரி? சொல்லு. நானும் பொது அறிவை வளர்த்துக்கறேன்” ரகுவரன் கேட்க, “எனக்கு சரியா தெரியாது ரகு. ஒரு மூனு, நாலு வருஷத்துக்கு முன்னாடி இவரை நான் டாக்டர் ரூமில் பார்த்திருக்கேன். அப்புறம் இப்போ சில மாசத்துக்கு முன்னாடி டாக்டரோட அம்மா ஃபீவர்னு இங்க அட்மிட்டாகி இருந்தப்போ பார்த்தேன்” என்றவள், “நான் பார்த்த ரெண்டு முறையும்… அம்மா, பையன் ரெண்டு பேரும் கோபமா பேசிக்கிட்டாங்க. இந்த ஹாஸ்பிடலுக்கு ஏன் வந்தீங்கன்னு அவங்க பாட்டியை திட்டுட்டு இருந்தார். டாக்டர், பதிலுக்கு ஏதோ சொல்ல… முறைச்சுக்கிட்டாங்க. அது என் மனசுல சட்டுனு பதிஞ்சுடுச்சு” இருவரும் பேசிக் கொண்டே எமர்ஜென்ஸி அறைக்கு முன்னிருந்த இருக்கையில் அமரப் போகையில், ரோஜா குனிந்து தன்னைப் பார்த்துக் கொண்டாள்.
அவளின் கிளிப்பச்சை வண்ணப் பட்டும், அதற்குப் பொருத்தமான எமரால்ட் நெக்லஸிம், தோளில் வழிந்த பின்னலில் நெளிந்த ஒற்றைச்சர மல்லிகையும் அந்த மருத்துவமனை சூழலுக்கு பொருந்தாமல் அதிகப்படியாக தெரிந்தது.
கிளிப்பச்சை வண்ணப் பட்டு இப்போது செம்பவள வண்ணம் பூசியிருந்ததை பார்த்தவள், தன் கைகளையும் பார்க்க அதிலும் இரத்தக் கறை.
“ஹேய், நான் கவனிக்கவே இல்ல ரோஜா. புடவை எல்லாம் பிளட். நம்ம ரெண்டு பேர் கையிலயும் கூட. வா, வாஷ்ரூம் போய்ட்டு வரலாம்” ரகுவரன் அவளின் கைப் பற்றி எழுப்ப, “ரோஜா…” என்றபடி பதட்டமாக அங்கு வந்து நின்றார் சிவஹரி.
“அப்பா..”
“உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலை எல்லாம்? ஆம்புலன்ஸ் கால் பண்ணி, போலீஸிக்கு சொல்றதை விட்டுட்டு..” பல்லைக் கடித்துக்கொண்டு மகளை அவர் கடிய, “மாமா” என்று இடைப் புகுந்தான் ரகுவரன்.
“இல்ல ரகு. நாளைக்கு பிரச்சனை ஆச்சுன்னா…”
“நான் பார்த்துக்கறேன் மாமா” அழுத்தமாக சொன்னான்.
“இல்ல மாப்பிள்ளை. ரகு, அது..”
“பிளீஸ் மாமா. ஹாஸ்பிடல்ல இத்தனை வருஷம் இருந்தும், நீங்க இப்படி பேசுறது நல்லாயில்ல.”
“உனக்குத்தான் புரியல ரகு. யார் என்னனு தெரியாம. நாளைக்கு நம்ம பொண்ணுக்கு..”
அப்பா பேச பேச பதட்டமாக அவரைப் பார்த்தது ரோஜாவின் கண்கள். சிவஹரியை மேலே புலம்ப விடாமல் அங்கு மூச்சு வாங்க ஓடி வந்தார் செவிலி ஒருவர்.
“ரோஜா, ஆக்சிடென்ட் எப்படி நடந்தது? எங்க, என்னனு டாக்டர் கேட்கறாங்க. எங்களால பதில் சொல்ல முடியல. என் கூட வா. நீயே வந்து அவங்களுக்கு பதில் சொல்லு.” ரோஜாவின் கைப் பிடித்து அவர் இழுக்க, “நம்ம சுகந்தி டாக்டர் பையன் ப்பா. நான் போய் அவங்ககிட்ட நடந்ததை சொல்லிட்டு வர்றேன்” என்றாள் ரோஜா. அவள் கைகளில் இளமாறனின் அலைபேசி, வாலெட் இரண்டையும் கொடுத்தான் ரகுவரன்.
“நான் மாமா கூட இருக்கேன். நீ போய்ட்டு வா ரோஜா” என்றவன் திரும்பி சிவஹரியிடம் பேச ஆரம்பிக்க, ரோஜா செவிலியோடு நடந்தாள். அவரிடம் இளமாறனின் உடைமைகளை ஒப்படைத்தாள்.
அவள் கைகளை கழுவி, கிருமி நாசினியால் சுத்தப்படுத்தி கொண்டு, புடவையின் மேலே மருத்துவமனை உடையணிந்து எமர்ஜென்ஸி அறைக்குள் நுழைகையில், இளமாறனின் படுக்கையை சுற்றி மூன்று மருத்துவர்கள் நின்றிருந்தார்கள்.
இளமாறனின் வெள்ளை சட்டை முழுவதும் மாடர்ன் ஆர்ட் போல சிவப்பு தீற்றல்களாய் இரத்தம் தெரித்திருந்தது.
நெற்றிக் காயத்தை சுத்தப்படுத்தி கொண்டிருந்ததைப் பார்க்கையில் அவளுக்கு மயக்கம் வரும் போலிருந்தது.
“ரொம்ப தேங்க்ஸ் மா.” என்ற மருத்துவர் சங்கரனின் குரலில் விதிர்த்து அவரை நிமிர்ந்து பார்த்தாள் ரோஜா. புன்னகைக்க வேண்டி கடினப்பட்டு இதழ்களை பிரிக்க முயன்றவளின் கண்கள் மருத்துவர் சுகந்தியை தேடியது. அவரைக் காணாது, அவரின் கணவர் சங்கரனை மீண்டும் திருப்பிப் பார்த்தாள் ரோஜா.
அவர் கேள்விகள் கேட்கத் தொடங்க, எல்லாவற்றுக்கும் தனக்குத் தெரிந்த பதிலைச் சொன்னாள்.
“தேங்க்ஸ் அகைன் ரோஜா. வீ ஆர் வெரி கிரேட்ஃபுல் டு யூ. நீங்க கிளம்புங்க. மாறனுக்கு பயப்படுற மாதிரி ஒன்னுமில்ல. நாளைக்கு காலையில உங்ககிட்ட அவனே பேசுவான்” என்று அவர் புன்னகைக்க, இளமாறன் இனி அவர்கள் பொறுப்பு. அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்பது புரிந்து, லேசாக தலையசைத்து வெளியில் வந்தாள் ரோஜா.
அவளுக்காக காத்திருந்தான் ரகுவரன்.
“நீங்க இன்னும் கிளம்பலையா ரகு?”
“உன்னை இப்படியே மாமாகிட்ட விட்டுட்டு போக வேணாம்னு தான் வெயிட் பண்ணேன். அதுவுமில்லாம ஆக்சிடென்ட்டுக்கு நம்ம ரெண்டு பேரும் தானே விட்னஸ்? அதான் இங்கேயே நின்னேன். இந்த ஏரியா இன்ஸ்பெக்டர்கிட்ட ஹாஸ்பிட்டல இருந்து பேச வச்சாங்க. நடந்ததை சொல்லி இருக்கேன். ஓகே? நீ வொர்ரி பண்ணிக்காத. உங்க டாக்டர்ஸ் அவரைப் பார்த்துப்பாங்க.”
“ம்ம்”
“டாக்டர்ஸ் என்ன சொல்றாங்க? அந்த.. இளமாறன் எப்படி இருக்கார் இப்போ?”
“ட்ரீட்மென்ட் நடந்துட்டுருக்கு ரகு. டாக்டர்ஸ் முகத்தைப் பார்த்தா, பெரிய அடி எதுவும் இல்லைனு தோணுது. நாளைக்கு கண் முழிச்சு பேசுவார்னு சொன்னார் டாக்டர்.”
“அப்பாடா.” ஒரு ஆசுவாச பெருமூச்சு விட்ட ரகுவரன், “என் வயசு தானே இருக்கும்? டென்ஷனா இருந்தது ரோஜா. இப்போதான் நிம்மதியா இருக்கு” என்றான்.
“ம்ம். அப்பா கூடவே இத்தனை வருஷமா ஹாஸ்பிடல் வர்றேன். ஆனாலும் ஒவ்வொரு தடவையும் யாருக்காவது ஏதாவதுன்னா இதயம் தவ்வி தொண்டைக்கு வந்திடு ரகு. காண்ட் ஹெல்ப் இட்”
“அதான் நம்மளை மனுஷங்களா இருக்க வைக்குது ரோஜா. வா, வீட்டுக்குப் போகலாம்”
என்று முன்னே நடந்தவனை பின் தொடர்ந்தாள் ரோஜா.
அரை மணி நேரம் கழித்து வீடு வந்த பின்னும் அவள் உடலில் மெலிதான பதட்டம் இருந்தது.
“வெயிட் பண்ணுங்க ரகு. இப்ப வந்துடுறேன்” என்று விரைந்து உள்ளே ஓடி சென்றவள், அம்மாவை அழைத்து வந்து அவன் முன் அமர வைத்தாள்.
“அம்மா, ரகுகிட்ட பேசிட்டு இருங்க. நான் இப்ப வந்துடுறேன்” மாடியில் இருந்த தன் அறையை நோக்கி ஓடினாள்.
பத்து நிமிடங்கள் கழித்து, குளித்து, உடை மாற்றி அவள் கீழிறங்கி வரும் போது ரகுவரன் அவன் வீடு செல்ல ஆயத்தமாக நின்றான்.
“சாரி ரகு. காஃபி..”
“அத்தை கொடுத்தாங்க ரோஜா, ரிலாக்ஸ். நான் கிளம்பறேன். நாளைக்கு பேசலாம். இல்லன்னா இந்த வீக்கெண்ட் மீட் பண்ணலாம். ஒன்னும் அவசரமில்ல. ஓகே?” வாயிலை நோக்கி நடந்தபடி அவன் கேட்க, “ஓகே” என்றாள் ரோஜா.
ரகுவரனின் கார் அவர்கள் வீட்டைக் கடந்ததும் ரோஜாவின் கண்கள் அம்மா சித்ராவை தேடியது.
“ம்மா..” அழைத்தபடியே அவரின் அறைக்குள் நுழைந்தாள். அறையின் ஃப்ரெஞ்ச் விண்டோவைத் திறந்து தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
“ரோஜா, அங்க பாரு. கார்டன்ல நிறைய ரோஜா பூ மலர்ந்திருக்குல்ல. அந்த பன்னீர் ரோஜாவை எல்லாம் பறிச்சு நிழல்ல உலர்த்தி வை. உங்கக்கா நித்யா வரும் போது பொடி அரைச்சு கொடுத்து விடலாம். குழந்தைக்கு பூசி, குளிக்க வைப்பா” ரோஜா அருகில் சென்று நின்றதும் தன் போக்கில் பேசிக் கொண்டு போனார்.
“அம்மா, உங்ககிட்ட சொல்லிட்டு தானே ரிசப்ஷன் போனேன். அங்க ரகுவும் வந்திருந்தான். அப்பா எங்களை தனியா பேச சொன்னார். பட்டேல் அங்கிள் பையனுக்கு கல்யாணம். ஞாபகம் இருக்கில்ல? அவங்க ரிசப்ஷன் தான் போனோம். அப்போ..”
“ரகுவரன். உங்கப்பாகிட்ட அவனை பிடிக்கல. கல்யாணம் வேணாம்னு சொல்லிடு ரோஜா” திரும்பி மகளின் முகம் பார்த்துச் சொன்னார்.
“ம்மா”
“ரோஜா, நான் ஏற்கனவே வேணாம்னு சொல்லிட்டேன். அந்த குடும்பமே வேணாம். அவங்க சங்காத்தமே வேணாம் சொல்லிட்டேன். ஆனா, உங்கப்பா என்னைக்கு என் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்துருக்கார். அவர் நினைச்சது தான் நடக்கணும். நாம எல்லாம் அவருக்கு கருவேப்பிலை கொத்து போலதான். அவருக்கு தேவைன்னா யூஸ் பண்ணிட்டு, வேலை முடிஞ்சதும் தூக்கி ஓரமா வீசிடுவார்”
“ஏன்மா, இப்படி பேசுறீங்க. உங்களுக்கு ரகுவை பிடிக்கும் தானே? அது போல தான் அப்பாவுக்கும். அதுனால சரின்னு சொல்லியிருப்பார்.”
“ரகுவை மட்டுமில்ல, அவங்க குடும்பத்தையும் பிடிக்கும். ஆனா, என் மகளை அவங்களுக்கு கொடுக்குற அளவுக்கு.. ப்ச். அது முடியாது. உனக்கு காரணம் சொன்னாலும் புரியாது. புரிஞ்சுக்கவும் மாட்ட.” அலுப்புடன் சொன்னார்.
“இதுக்காக டென்ஷன் ஆகாதீங்க மா. அப்பாகிட்ட சண்டை போடாதீங்க. பிளீஸ்” திரும்பி மகளை முறைத்த தாயின் கண்கள் தளும்பி நின்றது.
பட்டென மகளிடம் இருந்து விலகி, தோட்டத்துக்குள் இறங்கினார் அவர்.
ரோஜாவுக்கு ஆயாசமாக வந்தது. ஒரு விபத்தை நேரில் கண்ட பதட்டமும், பதைபதைப்பும் இன்னும் அவள் உடலில் மிச்சமிருக்க, சோர்வாக உணர்ந்தாள் அவள். ஆனாலும், தாயை தனியாக விட மனமின்றி அவரின் அருகில் சென்று நெருக்கமாக நின்றாள்.
“அக்காக்கு கால் பண்ணவாம்மா? அவகிட்ட பேசுறீங்களா?”
“ஏன் அவ வந்து எதையும் இங்க மாத்திட போறாளா? அவ கல்யாணமே உங்கப்பா முடிவு பண்ணி தான் நடந்தது.”
“ம்மா. மாமா நல்லவர் மா” கோபம் துளிர்க்க சொன்னாள் ரோஜா.
“நல்லவனை வச்சு குடும்பம் நடத்த முடியாது பொண்ணே. ஊருக்கே நல்லவனா இருப்பாங்க. ஆனா, கட்டின பொண்டாட்டிக்கு? அவளை மனுஷியா கூட மதிக்க மாட்டாங்க”
“இல்லம்மா. அப்பா…”
“நான் உன் அப்பாவை பத்தி பேசல ரோஜா. என் புருஷனை பத்தி பேசுறேன். ரெண்டு பேருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. நித்யாக்கு இப்போ அது புரியுது. உனக்கு புரிஞ்சாலும், இப்போ இதெல்லாம் ஒரு விஷயமான்னு தோணும். ஆனா, எதுவுமே அனுபவிக்கிறவங்களுக்கு தான் வலி. வேடிக்கை பார்க்கறவங்களுக்கு ஒரு கசப்பான அனுபவம் மட்டும்தான்” மகள் முகத்தில் விழுந்த குழப்ப ரேகைகளை பார்த்ததும் அதிகம் பேசி விட்டோம் என்பது புரிய, அவளின் கைப் பிடித்து அறைக்குள் நுழைந்தார் சித்ரா.
“எனக்கு ஒரு காஃபி போட்டு எடுத்துட்டு வர்றியா ரோஜா? சமையல்காரம்மா போடறது வேண்டாம். நீயே கலந்து எடுத்துட்டு வா” கெஞ்சலாக அவர் கேட்க, அம்மாவை சோஃபாவில் அமர வைத்து விட்டு சமையல் அறையை நோக்கி நடந்தாள் ரோஜா.
அடுப்பில் இருந்த பாலை போலவே அவள் மனமும் பொங்கி, அடங்கிக் கொதித்துக் கொண்டிருந்தது.
அம்மாவுக்கு பிடித்தது போல சக்கரை குறைவாக, டிக்காசன் அதிகமாக சேர்த்து காஃபி கலந்து எடுத்தவள், அவரின் அறையை நோக்கி நடந்தாள்.
“குடிங்க மா”
மகளின் கைப் பிடித்து காஃபியை வாங்கி, அவளை இழுத்துப் பக்கத்தில் அமர்த்திக் கொண்டார் சித்ரா. ஒவ்வொரு மிடறையும் ரசித்து அவர் பருக, புன்னகையுடன் அம்மாவை பார்த்தாள் ரோஜா.