ரோஜாவின் குழந்தைப் பருவத்தில் அம்மா என்றால் அழகும், அன்பும் மட்டுமே. எப்போதும் பளிச்சென உடுத்தி, தலை நிறைய பூவுடன், மலர்ந்த சிரிப்புடன் அம்மாவை பார்க்கவே அவளுக்கு அத்தனைப் பிடிக்கும். அம்மாவின் முந்தானை பிடித்து நடப்பதும், அதில் மறைந்து நின்று அப்பாவிடம் கண்ணாமூச்சி ஆடுவதும் அவளுக்கு மிகப் பிடித்தமான தினசரி வாடிக்கை.
அம்மா, நித்யா அக்கா, ரோஜா என பெண்கள் கூட்டணிக்கு அப்பாவின் மேல் கொள்ளைப் பிரியம். ஆனால், ஒரு நாளின் பெரும் பொழுதை அம்மாவுடன் கழிப்பதால், ரோஜா அம்மாவை பூனைக் குட்டியாய் உரசிக் கொண்டே திரிவாள். அவள் வளர்க்கும் பூனைக் குட்டிகள் கூட அவளை அப்படி உரசியது கிடையாது.
அவளின் சிறகுகள் விரிந்து அக்காவுடன் பள்ளி செல்லத் தொடங்கிய பின்பு தான் பெற்றோரின் சண்டையை முதல் முறையாக பார்த்தாள். அதுவரை நேரடியாக அவர்கள் குழந்தைகள் முன்பு சண்டையிட்டது கிடையாது.
அப்பா வீடு வந்ததும் நிற்க வைத்து கேள்வி கேட்கும் அம்மாவை மிரண்டு போய் பார்த்திருக்கிறாள் ரோஜா.
“நம்மளால தான் சண்டை” உதடு பிதுக்கி சொல்வாள் நித்யா. இருவரும் கண்ணீருடன் பாவமாய் அப்பாவை பார்ப்பார்கள்.
அத்தகைய பொழுதுகளில் அம்மாவின் மேல் கோபமும், அவள் நிதானமாய் வீட்டுப் பாடம் சொல்லிக் தந்து, வற்புறுத்தி சோறூட்டி வயிறை நிறைத்து, பாசமாய் முத்தமிட்டு தூங்க வைக்கும் போது அம்மாவின் மேல் அன்பும் வளர்த்துக் கொண்டார்கள் சகோதரிகள். ஆனால், அப்பாவின் மேல் எப்போதும் அன்பு, பிரமிப்பு தான்.
வீட்டில் என்ன நடந்தாலும் அதில் மாற்றம் வந்ததில்லை. அதை மாற்ற முனைந்ததும் இல்லை சித்ரா.
ஒரு கட்டத்துக்கு மேல் பிள்ளைகளின் முன்பு சண்டையை கூட நிறுத்தி இருந்தார்கள். ஆனாலும், எரிமலையின் உள்ளே எந்நேரமும் வெடிக்கத் தயாராக நெருப்பு குழம்பு காத்திருக்கும் என வீட்டில் அனைவருக்கும் தெரிந்திருந்தது. அம்மாவின் புன்னகையில் மாற்று குறைந்ததை மகள்கள் பயத்துடன் கவனித்திருந்தனர்.
அவர்கள் அதற்கு காரணமாய் ஒருநாளும் அப்பாவை கைக் காட்டியது கிடையாது.
அவர்களைப் பொறுத்தவரை அப்பா என்றும் பரிசுத்தர் தான். எந்த அளவிற்கு என்றால், ஒரு பள்ளி நாளின் நண்பகல் பொழுதில் படுக்கையில் மயங்கி கிடந்த அம்மாவை பதறி மருத்துவமனையில் சேர்க்க நேர்ந்த போது கூட யாரும் அப்பாவை சாதாரண சந்தேகக் கேள்வி கேட்காத அளவிற்கு.. அப்படியொரு பலமான நம்பிக்கைக் கோட்டை கட்டியிருந்தார்கள். கட்டுவது எல்லாம் உடைவதற்கு தானே?
“ரோஜா..” அம்மாவின் அழைப்பில் தலையை உலுக்கி நிகழ் காலத்திற்கு வந்தாள் ரோஜா.
“என்னம்மா, சொல்லுங்க”
“ரகு ஏதோ ஆக்சிடென்ட் அப்படினு சொன்னான். யாருக்கு, என்னாச்சு?”
“என் கண்ணு முன்னால, ஒரு கார் பைக்ல போய்ட்டு இருந்தவரை இடிச்சு தள்ளிட்டு போய்டுச்சு மா. கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம, அப்படியே விட்டுட்டு போய்ட்டான் மா. அவர், நம்ம சுகந்தி டாக்டர் பையன். அவங்க ஃபர்ஸ்ட் பையன். எங்க காலேஜிக்கு கேம்பஸ் இன்டர்வியூ அப்போ வந்திருந்தார் மா. செஃப் இளமாறன். இப்போ தான் ஞாபகம் வருது.” கண்களை விரித்து சொன்னவள், அம்மாவின் கண்களில் இருந்த கேள்வி புரிந்து, “நான் பார்க்கும் போது நெத்தில தையல் போட க்ளீன் பண்ணிட்டு இருந்தாங்க. பெருசா ஒன்னுமில்ல சொன்னாங்க மா. சரியாகிடுவார்” திடமான குரலில் சொன்னாள் ரோஜா.
“ம்ம். நாம செய்ற நல்லது எப்பவும் வீணா போகாது ரோஜா.” அவர் சொல்ல, புன்னகைத்து அம்மாவின் மடியில் தலை வைத்துப் படுத்தாள் ரோஜா.
“ரகுகிட்ட நான் பேசுறேன். நீ அவனுக்கு ஓகே சொல்லலையே?”
“இன்னும் இல்ல மா. ஆனா, ஏன்மா வேணாம் சொல்றீங்க. அப்பா எப்படி ரகு வீட்ல இதைச் சொல்லுவாங்க? தாத்தா, மாமா எல்லாம் கோவிச்சுக்க போறாங்க.” தன் மனதை மறைத்து, அம்மாவின் மனதை அறிய முயன்றாள்.
“சில விஷயங்கள் முளையிலேயே கிள்ளிடணும் ரோஜா. வளர்ந்த பிறகு வெட்டுறது ரொம்ப கஷ்டம்.” சித்ரா புதிராக பேச, மடியில் இருந்தபடியே கண்களை நிமிர்த்தி அவரைப் பார்த்தாள் ரோஜா.
“ரகு வீட்டைப் பொறுத்தவரை உன்னை மருமகளாக்க ஆசைப்பட ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனா, என் கண்ணுக்கு தெரியறது எல்லாம் அதுக்குப் பின்னாடி இருக்க பிசினஸ் பாய்ண்ட் ஆஃப் வியூ மட்டும் தான்.”
“ச்சே. அந்த தாத்தா, மாமா எல்லாம் அப்படி யோசிக்கிற ஆட்கள் கிடையாது மா”
“உங்கப்பா?”
“அப்பாவும் தான்” பட்டென பதில் சொன்னாள் ரோஜா. சித்ராவின் உதடுகள் விரக்தியாக வளைந்தது.
“ரகு ஃபேமிலிக்கு சொந்தமான ஹோட்டல்ஸ் ஆறேழு இருக்குமா?”
“ம்ம். கூடவே இருக்கும் மா”
“அவங்க தாத்தா, அப்பா, சித்தப்பா, ரகு, அமிர்தா வீட்டுக்காரர்னு அங்க குடும்பத்துல அத்தனை பேர் பிசினஸ் கவனிக்க இருக்காங்க. ஆனாலும், புதுசா வீட்டுக்கு வரப் போற மருமக ரோஜா ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மெண்ட் படிச்சவளா இருக்கறது அவங்களுக்கும், பிசினஸிக்கும் பெனிஃபிட் தானே?” சித்ரா கேட்க, அதில் தவறொன்றும் இல்லையே என்று தான் யோசித்தாள் ரோஜா.
“உங்கப்பாக்கு நீங்க ரெண்டு பேரும் பொண்ணுங்களா போய்ட்டீங்க. நித்யா வீட்டுக்காரர் என்ஜினியர். அவருக்கு நம்ம கேன்டீன் மேல எல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்லைனு ரொம்ப தெளிவா சொல்லிட்டார். இனி, உனக்கு வரப் போறவன் தான் உங்கப்பாக்கு அப்புறம் எல்லாத்தையும் கவனிக்கணும். அந்த மாப்பிள்ளை, அவர் தூக்கி, அவர் கண் முன்னால வளர்ந்த ரகுவரனா இருந்தா வேணாம்னு சொல்லுவாரா என்ன? குடும்பத் தொழிலோடு சேர்த்து, நம்ம கேன்டீனையும் உனக்காக ரகு பார்க்க மாட்டானா, என்ன?” அம்மாவின் வார்த்தைகள் மெல்ல அதன் அர்த்தத்தை அவளுள் ஆழமாய் பதிக்க, அவரை ஏறிட்டுப் பார்த்தாள் ரோஜா.
“நீங்க இதை முன்னாடியே சொல்லி இருக்கலாம். இல்லம்மா?”
“உங்கப்பா கிட்ட.. வேண்டாம் விடு. அப்போ சரி வரும்னு பட்டது. ஆனா, இப்போ என் பொண்ணு வாழ்க்கையும் என்னைப் போலவே..” சட்டென அவர் அமைதியாக, “திடீர்னு ஏன்மா, இப்படி சொல்றீங்க? நானும், ரகுவும் வெளில போய்ட்டு வந்ததுனாலயா?” சந்தேகம் கேட்டாள் ரோஜா.
“இல்ல. நித்திகிட்ட இந்தக் கல்யாணம் வேணாம்னு ரெண்டு நாள் முன்னாடி நீ பேசுறதை கேட்டேன். அப்பலருந்து இதே யோசனை தான்”
“சாரி மா. அப்பவே உங்ககிட்ட பேசியிருக்கணும் நான்” அம்மாவின் இடையை கட்டிக் கொண்டு அவள் சொல்ல, “சித்ரா” என்று உரக்க அழைத்தப்படி அறைக்குள் நுழைந்தார் சிவஹரி.
“அப்பா” என்று பதறி எழப் போன மகளை அழுத்தி மடியில் படுக்க வைத்தார் சித்ரா.
“இன்னைக்கு உன் பொண்ணு என்ன பண்ணா தெரியுமா?” அவர் புகார் வாசிக்கத் தொடங்க, அமைதியாய் கேட்டுக் கொண்டிருந்தார் சித்ரா.
ஐந்து நிமிடங்கள் கழித்து, “சரி, வா. எனக்கு டிஃபன் எடுத்து வை” அவர் சொல்ல, சித்ரா அசையாமல் அமர்ந்திருக்க, ரோஜா தான் எழுந்து சென்றாள்.
“நீ போம்மா, அப்பா பார்த்துக்கறேன்” என்ற குரலுக்கு அவள் கட்டுப்படவேயில்லை. அம்மாவையும், மகளையும் மாறி மாறிப் பார்த்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் சிவஹரி.
மறுநாள் காலை விரைவாக அப்பாவுடன் கிளம்பி மருத்துவமனை சென்றாள் ரோஜா.
காலை உணவுக்கான ஆயத்தங்களை மேற்பார்வையிட சிவஹரி நேராக உணவகம் நோக்கி செல்ல, ரோஜா அவரைத் தயக்கத்துடன் பார்த்தாள்.
“டாக்டர் என்னை மீட் பண்ணனும் சொன்னாங்க ப்பா. போய் பார்த்திட்டு வந்துடவா?”
அவரோடு நடந்துக் கொண்டே கேட்க, “ம்ம். சீக்கிரம் வாம்மா” என்று விலகி நடந்தார் அவர்.
அவசரமாய் ஒரு வட்டமடித்து திரும்பி நடந்தாள் ரோஜா. அங்கிருந்த செவிலியர்களிடம் விசாரித்து இளமாறனின் அறை நோக்கி நடந்தாள். முறையாக அனுமதி பெற்று அவள் உள்ளே சென்றதும், விழிகள் அனிச்சையாய் இளமாறனை தேடித் தொட்டது.
முன் நெற்றி, தலையின் பின்புறம் கட்டுப் போடப்பட்டிருக்க, அவளுக்கு தன்னிச்சையாக இரக்கம் சுரந்தது.
“சிஸ்டர்..” அவள் அழைக்க, “வாம்மா நம்ம இளவரசனை காப்பாற்றின ராஜகுமாரி.” என்று சிரிப்புடன் அவர் வரவேற்க, “தூங்கறாரா? நைட்டு கண் முழிச்சாரா, இல்லையா சிஸ்டர்? தலைல இவ்வளவு பெரிய கட்டுப் போட்டிருக்கீங்க? நேத்து பெரிய அடியில்லைன்னு சொன்னாங்க?” குரலை தழைத்து உண்மையான கரிசனத்துடன் கேட்டாள் ரோஜா.
“அப்படித்தான் சொல்லுவாங்க. உண்மையை சொல்லி பயமுறுத்த முடியுமா? நைட் கண் முழிச்சு பேசினார். தூக்கத்துக்கு, வலிக்கு மருந்து கொடுத்திருக்கு. அதான் தூங்கறார். அவருக்கு தலைல காயம் கொஞ்சம் பெருசு தான். ஸ்கேன்ல எல்லாம் நார்மல் சொல்லிட்டாங்க. ஒரு மாசத்துல நார்மல் ஆகிடுவார்”
“கால்ல இரத்தம் வந்ததே. அது?”
“வண்டில, இல்லனா தரையில் இருந்த ஏதோ ஷார்ப்பான பொருள் குத்தியிருக்கணும். அதான் அவ்வளவு பிளட் லாஸ். சரியாகிடும்” அவளின் தோளில் தட்டிச் சொன்னாள். புன்னகைத்தாள் ரோஜா.
“அப்போ நான் வர்றேன் சிஸ்டர்.” ரோஜா நகரப் போக, “கேன்டீன் தானே போகப் போற? வேற வேலை இல்லை தானே? எனக்காக ஒரு அஞ்சு நிமிஷம் இங்க உட்காரு. மார்னிங் ஷிஃப்ட் வர வேண்டிய ஆள் இன்னும் வரல. நான் பாத்ரூம் போய்ட்டு ஃப்ரெஷ்ஷாகி ஓடி வந்துடுறேன்” என்று கண் சுருக்கி அவர் கேட்க, “வெளில ரம்யா கா இருந்தாங்க. அவங்களை அனுப்பி விடுங்களேன். அதுவரைக்கும்” என்றாள் ரோஜா.
“நான் சீனியர். அது, இதுன்னு ரூல்ஸ் பேசும் அந்த சிஸ்டர். ஒரு ரெண்டு நிமிஷம் இங்க இரேன். அதுக்குள்ள வந்துடுவேன். இவர் உயிரையே காப்பாத்தி இருக்க. இப்போ ஒத்த நிமிஷம் பார்த்துக்க மாட்டியா?” என்று கை விரித்து அவர் கேட்க, சிரிப்புடன், “நான் இருக்கேன். போய்ட்டு வாங்க” என்றாள் ரோஜா.
அவனின் படுக்கைக்கு அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள். நேற்று அந்த விபத்தின் போதும், அதற்கு முன் அவனைப் பார்த்த இரு முறையும் அவன் அணிந்திருந்த வெள்ளை சட்டைக்கு சற்றும் பொருந்தாமல் இருந்தது தற்போது அவன் அணிந்திருந்த மருத்துவமனை உடை. நீலம் அவன் நிறமல்ல என்று நினைத்தபடி அவனைப் பார்த்திருந்தாள்.
இரவெல்லாம் சித்ரா சரியான உறக்கமின்றி புலம்பி புரண்டு கொண்டேயிருக்க, ரோஜா அவரிடம் பேசி, சமாதானப்படுத்தி, சாந்தப்படுத்தி இருவரும் உறங்க ஆரம்பிக்கையில் விடிந்திருந்தது.
அந்த அறையின் அமைதியும், குளுமையும், இப்பொழுது அவளின் கண்களையும், மனத்தையும் அமைதிப்படுத்த இருக்கையில் சாய்ந்து கண் மூடினாள்.
“ம்க்கும்..ம்ம்..” என்ற ஒலியில் அவள் பட்டென கண் விழிக்க, இளமாறன் கண் திறவாமல் படுக்கையில் வலி தந்த வேதனையுடன் அனத்த, எட்டி அவன் கைப் பிடித்தாள் ரோஜா.
“இட்ஸ் ஓகே. உங்களுக்கு ஒன்னுமில்ல. தூங்குங்க”
இளமாறன் அந்தக் குரலுக்கு கண் திறக்க விரும்பினான். அந்தக் குரல் தான் அவனின் கடைசி நினைவு. அதன் பின் நினைவு தப்பியிருந்தது. இப்போதும் அதே குரல் கேட்க, இமைகளை சிரமப்பட்டு பிரித்தான்.
அச்சமயம் கதவு திறக்க, “மாறா…” என்றபடி அறைக்குள் வந்தார் மருத்துவர் சுகந்தி.
ரோஜா அவரைத் திரும்பிப் பார்த்து எழுந்து கொள்வதற்குள் அவளை நெருங்கியிருந்தார் அவர்.
“என்னடா ஆச்சு? எப்படிடா ஆக்சிடென்ட் பண்ண? வண்டியை பார்த்து, கவனமா ஓட்ட மாட்டியா டா?” கண்ணீருடன் கடிந்துக் கொண்டார்.
இளமாறன் மிக நிதானமாக ரோஜாவைப் பார்த்தான். அவளிடம் இருந்து மிகச் சிரமப்பட்டு விழிகளை பிரித்து அவரைப் பார்த்து, “இப்பதான் வர்றீங்களா டாக்டர்?” என்று கரகரத்த குரலில் கேட்டான்.
“அம்மா திருச்சியில் இருந்தேன் மாறா. அப்பா போன் பண்ணும் போது ஒரு ஆபரேஷனில் இருந்தேன் டா. உடனே கிளம்ப முடியல”
“அதே பழைய கதை” மெல்ல அவன் முணுமுணுக்க, ரோஜாவின் காதில் அது தெளிவாக விழுந்தது. அவளின் தோளில் இருந்த சுகந்தியின் கை இறுகுவதை அவளால் உணர முடிந்தது.
இளமாறன் இறுக்கத்துடன் கண் மூடிக் கொள்ள, மருத்துவர் சுகந்தி ரோஜாவை பார்த்தார். பின் இணைந்திருந்த இருவரின் கைகளில் கூர்மையாய் படிந்தது அவர் கண்கள்.