சித்ரா மகளுக்கு அன்பை அளவில்லாமல் கொடுக்க, சுகந்தி ஒரு மருத்துவராக மருமகளை நன்றாக பார்த்துக் கொண்டார்.
மாத பரிசோதனைகள், மாத்திரைகள், ஸ்கேன் என்று அவளுக்கு எல்லாவற்றிலும் கூடவே நின்றார்.
கஸ்தூரி, சுவாமி நாதன் இருவரும் இளமாறன் வீடு வந்து இரண்டு வாரங்கள் அவர்களுக்கு துணையாக இருந்தார்கள்.
“நாங்க ரெண்டு பேரும் வேலைக்கு போய்ட்டு சாயங்காலம் தான் வீட்டுக்கு வர்றோம். இங்க அதுவரைக்கும் நீங்க தனியா தான் இருக்கணும். உங்களுக்கு போர் அடிக்கப் போகுது” என்று சொல்லி அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்தான் இளமாறன். அவர்களும் மனமின்றி சென்றார்கள்.
மகனிடம் எந்தவித தகவலும் சொல்லிக் கொள்ளாமல் சுகந்தி, சங்கரன் அவனது வீடு வந்தார்கள். அங்கு முழுதாக பத்து நாட்கள் தங்கி, ரோஜாவுடன் சிரித்து, கதைப் பேசி, அவளுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுத்தார்கள்.
வினோத், வெண்பா அவ்வப்போது சமயம் வாய்க்கும் போதெல்லாம் அவர்களை பார்க்க வந்தார்கள். அதிலும் வெண்பா மருத்துவராக அண்ணிக்கு கூடுதல் கவனிப்பும், ஒரே அறிவுரை மயமும் தான்.
ரோஜா இது நாள் வரை தன் மனதில் இருந்த அனைத்து எண்ணங்களை ஒதுக்கி தள்ளி விட்டு இளமாறனுடன் மாமியார் வீடு சென்றாள். அங்கிருந்து கஸ்தூரி பாட்டி வீட்டிற்கும் சென்றாள்.
முதலில் எப்போதாவது என்று தொடங்கிய பழக்கம், நாட்கள் செல்ல செல்ல அடிக்கடி செல்லும் வழமையானது.
கஸ்தூரி பாட்டி தன் கைப்பக்குவத்தில் அவளுக்கு புளி காய்ச்சல், புளி இஞ்சி, தக்காளி ஊறுகாய் என அவள் விரும்பி உண்பதை எல்லாம் செய்துக் கொடுத்தார்.
சித்ரா, சிவஹரியின் பெரும்பாலான பொழுதுகள் மகளை கவனிப்பதிலேயே கழிந்தது.
ரோஜாவிற்கு நான்காம் மாதம் தொடங்கும் போதே வளைகாப்பு பற்றி பேசத் தொடங்கினார் சித்ரா.
ஏனென்றால் அதற்கடுத்த மாதம் நித்யாவிற்கு பிரசவ தேதி கொடுக்கப்பட்டிருந்தது. இரண்டு மகள்களையும் பார்த்துக் கொள்ள வேண்டுமே என்ற கவலையில் தாயாக தவித்தார் அவர்.
“ரோஜாவுக்கு வளைகாப்பு ஒன்பதாம் மாசம் செய்துக்கலாம்னு மாப்பிள்ளை சொல்றார் சித்ரா. எனக்கும் அது சரின்னு தான் படுது. நாம எல்லோரும் இங்க தானே இருக்கோம். தினமும் பார்த்துக்கறோம். அதுனால நீ கவலைப்படாம நித்யா வீட்டுக்கு போய்ட்டு வா. ரோஜாவை இங்க நாங்க பார்த்துக்கறோம்” என்று மனைவிக்கு அவர் உத்திரவாதம் அளித்தார்.
“என்னைப் பார்க்க அப்பா இருக்கார். இவர் இருக்கார். அத்தை, வெண்பான்னு ரெண்டு டாக்டர் இருக்காங்க. நீங்க யோசிக்காம நித்திக்கா வீட்டுக்கு போய்ட்டு வாங்கம்மா” என்று ரோஜா சொல்லவும் தான் பெங்களூர் கிளம்பினார் சித்ரா.
ரோஜாவிற்கு ஐந்தாம் மாதம் தொடங்கும் போது நித்யா வீட்டில் மித்ரனுக்கு தங்கையாக மிருதுளா பிறந்தாள்.
இளமாறன், ரோஜா, இருவரும் சென்று குழந்தையை பார்த்து கொஞ்சி விட்டு வந்தார்கள். அங்கிருந்த இரண்டு நாட்களும் விழித்திருந்த நேரமெல்லாம் குழந்தை இளமாறன் கையில் தான் இருந்தது.
அவர்கள் சென்னை திரும்பி, சிவஹரியை பெங்களூர் அனுப்பி வைத்தார்கள்.
இரண்டு வாரங்கள் அங்கிருந்து விட்டு மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்னை திரும்பினார் சிவஹரி.
அந்த இரு வாரங்களும் அவரின் இரு உணவகத்தையும் இளமாறன் தான் பார்த்துக் கொண்டான்.
ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த திறமையும், அனுபவமும் வாய்ந்த இருவரை இரண்டு உணவகத்திலும் நிர்வாக பொறுப்பில் வேலைக்கு அமர்த்தினான்.
அவனது கருத்தை மாமனாரிடம் தெரிவிக்க, மருமகன் தங்களின் உடல் நலத்திற்கும், தொழில் நலத்திற்கும் தான் சொல்கிறார் என்பது புரிந்து, கேள்விகள் எதுவும் கேட்காமல் சம்மதித்தார் சிவஹரி.
இளமாறன் மருத்துவமனை வந்த இரு வாரங்களும் சுகந்தி அவர்களோடு தான் பெரும்பான்மை நேரத்தை செலவிட்டார்.
இயல்பான, பேச்சு, சிரிப்பு, கவனிப்பு என இனிமையாக சென்றது சந்திப்புகள்.
இப்போது ரோஜாவிற்கு ஆறாம் மாதம் நடந்துக் கொண்டிருந்தது. வெள்ளிக் கிழமை கணவனுக்கு விடுமுறை தினம் என்பதால் அவளும் வீட்டில் இருந்தாள்.
மாலை நேரம் அலைபேசி வழியே அக்காவிடம் பேசிக் கொண்டிருந்தாள் அவள்.
“பொய் சொல்ற சொன்னா, யாருக்கா இருந்தாலும் கோபம் வரத்தான் செய்யும்” ரோஜா சொல்லவும்,
“வேற யாருக்கு கோபம் வந்தது?” என்று விசாரணையில் இறங்கினாள் நித்யா.
“அது…” என்று சொல்லி அவள் மழுப்ப,
“யார் பொய் சொன்னா?” அவளின் பேச்சை கேட்டபடி நடந்து வந்து அருகில் அமர்ந்து கேள்விக் கேட்டான் இளமாறன்.
“அப்புறம் பேசுறேன் நித்திக்கா” என்று அழைப்பு துண்டித்து விட்டு கணவனை திரும்பிப் பார்த்தாள் ரோஜா.
“ம்ம், யார் பொய் சொன்னா ரோஜா?” மீண்டும் கேட்டான் இளமாறன்.
அவன் கரம் மென்மையாக மனைவியின் மேடிட்டிருந்த வயிறை வருடியது.
ரோஜா கண் மூடி கணவன் தோள் சாய்ந்தாள். அந்தக் கணத்தின் இதத்தை ரசித்து உள்வாங்கியபடி இருவரும் அமர்ந்திருந்தனர். இளமாறனின் கை தன் வருடலை தொடர்ந்து கொண்டிருக்க, சமீப வழக்கமாக அவனது தொடுகையில் அசைந்தது குழந்தை.
“ஆ.. இளா” ரோஜா சிரிப்புடன் உடலை சிலிர்க்க, அதை உணர்ந்த இளமாறனின் கரங்களும் முதல் முறையை போலவே மீண்டும் மீண்டும் சிலிர்த்து அடங்கியது.
“நீங்க வயித்துல இருக்கும் போது மாரத்தான் ஓடுவீங்களாம் அத்தை சொன்னாங்க” அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
“நித்யாக்கா வயித்துல இருக்கும் போது ரொம்ப சமத்துன்னு அம்மா சொன்னாங்க. ஆனா, நான் உதைச்சுட்டே இருப்பேனாம். அதான் நம்ம பிள்ளையும், நம்மளை மாதிரியே இருக்கு” ரோஜா சொல்ல இளமாறன் முகத்தில் இளநகை.
“சரி, பேச்சை மாத்தாம யார் பொய் சொன்னாங்க சொல்லு” ரோஜாவின் கண்களை கூர்ந்து அவன் கேட்க, “நீங்கதான்” என்றாள் ரோஜா.
“நானா?”
“ம்ம். உங்கம்மாவை பிடிக்காது. அவங்க மேல கோபமா இருக்கேன்னு நீங்க வெளில காட்டிக்கிறது எல்லாம் பொய்யும், நடிப்பும் தான்” ரோஜா சொல்லவும், அதிர்ச்சியாக அவளைப் பார்த்தான் இளமாறன்.
அவன் உடல் இறுகுவதை கண்ட ரோஜா, “உண்மையை சொல்லணும்னா, உங்களுக்கு அவங்களை ரொம்ப பிடிக்கும்” என்று அழுத்திச் சொன்னாள்.
“ரோஜா…”
“எனக்குத் தெரியும் இளா. அவங்க உங்கம்மா. நீங்க அவங்க மேல அன்பா இருக்கிறது ரொம்ப இயல்பான விஷயம். அதை ஏன் மறைக்க பார்க்கறீங்க? அதுவும் என்கிட்ட?”
அவனிடம் பதிலில்லை. ஆனால், மனைவி பேச்சை மறுக்கவும் இல்லை அவன்.
“இதுவரை நீங்க சொன்ன எல்லா சாக்கு போக்கும், உங்களை நீங்களே ஏமாத்திக்க, சமாதானம் செய்துக்க, உங்க கோபத்தை இழுத்து பிடிக்க சொல்ற பொய்கள் தான். இல்லையா?”
“சில உறவுகள் உணர்வுப் பூர்வமானது ரோஜா. பேசாம இருந்தாலும், இல்லை பிரிந்திருந்தாலும், பிரியமும், பாசமுமா தான் இருப்போம். இல்லையா?”
“அந்த பாசத்தை வெளிப்படையா காட்டினா தான் என்ன?”
“நான் காட்டும் பாசம் அவங்களுக்கு புரியலைன்னா? அதுக்கு நானா பொறுப்பு?”
“Forgiveness is the final form of love. மன்னிப்பு என்பதே அன்பின் முழுமையான வடிவம் இளா, முழுசா மன்னிக்கலாம் இல்லையா?”
“எதுக்கு மன்னிக்கணும்? தவறினது சூழ்நிலைகள் தான். மனிதர்கள் இல்லையே. அப்புறம் அதுக்கு என்ன அவசியம்?”
“நல்லா மண்டையா பேசுங்க” அலுத்துக் கொண்டாள் ரோஜா.
“நம்மால மறக்கவே முடியாத ஒருவர், நம்மை மொத்தமா மறந்து போறது தான் ரொம்ப கொடுமையான விஷயம்” கரகரத்த குரலில் சொன்னான்.
“அப்போ, உங்கம்மாவை பழி வாங்க இப்படியெல்லாம் பண்றீங்களா?”
“ப்ச்..” அவன் கோபத்துடன் சலிக்க,
“எனக்கு உங்கம்மாவோட உங்களை பார்க்கும் போதெல்லாம் இன்னமும் அந்த நாலு, எட்டு வயசு குட்டி பையன் இளமாறனா தான் தெரியறீங்க. அம்மாவின் கவனம் ஈர்க்கும் குழந்தையா தான் தெரியறீங்க. அந்த அம்மான்ற ஒரு வார்த்தைக்கான ஏக்கம் தான் உங்க ரெண்டு பேரையும் நெருக்கமா வச்சிருக்கு. இல்லனா, அத்தைக்கு மூனுல நீங்களும் ஒரு பிள்ளைன்னு சாதாரணமாகியிருக்கும் இல்லையா”
அவனது மனதையும், உணர்வுகளை துல்லியமாக அவள் விவரிக்க, அதிர்ந்து போய் மனைவியை பார்த்தான் இளமாறன்.
“உங்க தாத்தா, பாட்டி, அப்பா, தம்பி, தங்கை எல்லோர்க்கிட்டயும் நார்மலா இருக்க நீங்க, உங்கம்மாகிட்ட மட்டும் அடம் பிடிக்கிற குழந்தையாவே இருக்கறீங்க. ஏதோ ஒரு வகையில் கோபத்தை காட்டிட்டே இருக்கீங்க”
“இல்ல ரோஜா. ஒரு காலத்துல எனக்கு அவங்க மேல கோபம் இருந்தது உண்மை. ஆனா, இன்னைக்கு சத்தியமா கோபமெல்லாம் இல்ல”
“தெரியும். அப்போ கோபம் இல்லைனா அவங்களை உறவு சொல்லி கூப்பிட எது உங்களை தடுக்குது?”
“உனக்கு புரியாது ரோஜா. அது இயற்கையா வரணும். நான் கூப்பிடும் போது இயற்கையா இருக்கணும். ஏழு கழுதை வயசுக்கு அப்புறம் நான் கூப்பிட்டா ரொம்ப ஆர்ட்டிபிஸியலா இருக்கும் ரோஜா.”
“ம்ம். ஓகே. அட்லீஸ்ட் அவங்ககிட்ட, எனக்கு உங்க மேல கோபம் இல்லன்னாவது சொல்லலாம் இல்ல?”
“அவங்க மேல நிச்சயமா கோபமில்ல ரோஜா. ஆனா, நிறைய வருத்தம், ஆதங்கம் எல்லாம் இருக்கு. அது அவ்வளவு சீக்கிரம் போகாது. நான் எவ்வளவு முயற்சி பண்ணாலும் மறையாது. அது பல வருஷ காயமும், ஏக்கமும் தந்த வலி, வேதனை, வடுக்கள். அது நிறைய நேரம் என்னை அறியாம வெளிய வந்திடும். அதான் அவங்களை விட்டு நான் ஒதுங்கியே இருக்கேன்.” முதல் முறையாக மனம் திறந்து மனைவியிடம் அனைத்தையும் பகிர்ந்தான்.
“தூரங்கள் தான் உங்களை அருகில் வச்சிருக்கு, இல்ல?” சிரிப்புடன் கேட்டாள் ரோஜா. மெல்ல குனிந்து அவள் வயிற்றில் முத்தமிட்டான் இளமாறன்.
எப்போதும் போல கணவன் பக்கமே நின்றாள் ரோஜா. அவனை முழுவதுமாக அறிந்து, புரிந்து கொண்டாள். அவன் நியாயங்களுக்கு நியாயம் செய்ய விழைந்தாள்.
“சரி, இளா. உங்களுக்கா தோணும் போது கூப்பிடுங்க. இல்லையா, இப்படியே இருங்க. நான் உங்களை எதுக்கும் கட்டாயப்படுத்த மாட்டேன்” உறுதியாக சொன்னாள் ரோஜா. புன்னகைத்தான் இளமாறன்.
அடுத்த முறை மாமியார் வீடு செல்லும் போது அம்மா, மகனைத் தான் ஊன்றி கவனித்தாள் அவள்.
மகனை எப்போதும் போல பாசமும், பரிதவிப்புமாக சுகந்தி பார்க்க,
‘அட கடவுளே, மகனின் பாசம் இந்த அம்மாவின் கண்ணுக்கு எப்போது தான் தெரியுமோ?’ என்று அங்கலாய்த்து கொண்டாள் ரோஜா.
“நடிகன் நீங்க” என்று கணவனை கிண்டலடிக்கவும் மறக்கவில்லை அவள். சிரித்தான் இளமாறன்.
மனிதர்களுக்கு ஒரு வினோத பழக்கம் இருக்கிறது. அவர்களுக்கு அன்பை பொழியும் உறவுகள் மிக சாதாரணமாகி விடுகிறது. அந்த அன்பை சமயங்களில் அசட்டையாக உதறி உதாசீனமும் செய்கிறார்கள்.
மாறாக அவர்களுக்கு உரிய அன்பைத் தர தயாராக இல்லாத உறவுகளை தூக்கி சுமந்து கொண்டு, அவர்கள் அன்புக்கு எதிர்வினை தராத உறவுகளை மனத்தில் இறுகப் பற்றிக் கொண்டு, ஏங்கித் தவிக்கிறார்கள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.