பதினைந்து வயது விஷ்வா வீட்டு வாயிலில் சைக்கிளில் அமர்ந்தபடி கத்திக் கொண்டிருந்தான்.
கல்லூரி செல்ல கிளம்பி வந்த வருண், தன் பாக்கெட்டிலிருந்து சாக்லேட் ஒன்றை எடுத்து விஷ்வா முன் நீட்டினான்.
“என்ன வருண்ணா… நீங்க டாக்டர் படிச்சு முடிக்கும் போது, பேஷண்ட் ரெடியா இருக்கணுன்னு டெய்லி எனக்கு சாக்லேட் தறீங்களா?” என்று கேலியாகக் கேட்டாலும் வருண் கொடுத்த சாக்லேட்டினை விஷ்வா வாங்க மறுக்கவில்லை.
“வீக்லி ஒன்ஸ் தாண்டா கொடுக்கிறேன். இனி அதுவும் தரமாட்டேன் போடா…” என்ற வருணை யுகியின் பெயரை வைத்து சமாதானம் செய்தான் விஷ்வா.
“அண்ணி இன்னைக்கு மாமா சொல்லலை போலிருக்கே! அங்க காட்ட முடியாத கோபத்தை என் மேல காட்றீங்க. ஊடலா?” என்ற விஷவாவுக்கு காட்ட மறுத்து…
புன்னகை முகமாக,
“அந்த விருமாண்டிக்கு தெரிஞ்சுது சங்கு தான். பார்த்து போங்க” என்றவனாக வண்டியின் கிக்கரை உதைத்து சிட்டாய் பறந்துவிட்டான் வருண்.
“விருமாண்டிக்கு என்னத்துக்கு இம்புட்டு பயம் தெரியலையே. நால்லாத்தானே பேசுறாரு.” விஷ்வா யோசித்துக் கொண்டிருக்க… யோசனைக்கு சொந்தகாரரே அவன் முன் வந்து நின்றார்.
“என்ன விஷ்வா பலமான யோசனை.” வீரய்யன் மீசையை முறுக்கிவிட்டபடி கேட்ட தோரணையிலேயே கொஞ்சம் ஜெர்க்கான விஷ்வா…
‘இந்த மீசைக்கு பயந்து தான் வருண்ணா இப்படி ஓடினார் போல’ என உள்ளுக்குள் நினைத்தாலும், வெளியில் ஈ’என்றவனாக,
“இன்னைக்கு மேத்ஸ் டெஸ்ட் மாமா. அதான் மனசுக்குள்ளே போட்டு பார்த்திட்டு இருந்தேன்” என்று பெரும் பொய்யைக் கூறினான்.
“என்னது கணக்கு பாடம் பரீட்சையா? இந்த சின்ன கழுதை என்கிட்ட சொல்லலையே! ராத்திரி நான் படிக்கலையா கேட்டதுக்கு வீட்டுப்பாடம் இல்லைன்னு சொல்லிட்டாளே!” என்றவர், “சம்ரு” என்று சத்தமிட…
அதுவரை விஷ்வாவின் பல குரல்களுக்கு ஆடி ஆசைந்து தயாராகிக் கொண்டிருந்தவள், ஒரு நொடியில் மின்னலென வெளியில் வந்து நின்றாள். பாதி பின்னிய பின்னலுடன்.
“பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டியா?” அவர் குரல் சாதாரணமாகவே அதட்டலாகத்தான் வரும். இப்போது கேட்கவும் வேண்டுமா? சம்ரு கண்ணில் நீர் கோர்த்துவிட்டது.
விஷ்வாவின் பார்வைக்கு, அவளின் முதல் கண்ணீர். மனம் பிசைவதைப் போலிருந்தது. வயதின் காரணமாக அவனுக்கு அவ்வுணர்வு சட்டென்று பிடிபடவில்லை.
ஆனால் சம்ருதியை அவளின் அப்பாவிடமிருந்து எப்படியாவது காப்பாற்ற வேண்டுமென்று மனம் உந்திட…
“அச்சோ மாமா. டெஸ்ட் எனக்கு மட்டும் தான்” என்றான்.
“அதெப்படிடா, ஒரே கிளாஸ். அவளுக்கு இல்லை. உனக்கிருக்கு.” அவர் அவனை சந்தேகமாக பார்த்தார்.
“மார்க் கம்மியா எடுத்தவங்களுக்கு திரும்ப டெஸ்ட் மாமா. ம்ருதி நல்ல மார்க். அதான் அவளுக்கு இல்லை” என்று ஏதோ வாயில் வந்ததை சொல்லி வீரய்யனிடமிருந்து இருவரையும் காப்பாற்றிக்கொண்டான்.
“சரி… சரி…” என்றவர், “நீயும் இனி ஒழுங்கா படி விஷ்வா. பாட்டி வருத்தப்படுவாங்க தானே” என்றுகூறி,
“நீயென்ன இன்னும் இவ்வளவு நேரம் நின்னுட்டு இருக்க. அவன் வந்து காத்திருக்கான். சீக்கிரம் கிளம்பி வா” என சம்ருவிடம் கத்திவிட்டு தோட்டத்துக்கு சென்றுவிட்டார்.
“சாரி ம்ருதி…” விஷ்வா சொல்லிட,
“ஹேய்… விடுடா. விருமாண்டி எப்பவும் இப்படித்தானே!” என்றவள், “இன்னைக்கு முக்கியமான க்ளாஸ் இருக்குன்னு யுகிக்கா சீக்கிரம் போயிட்டாங்க விஷ்வா. இந்த பின்னல் வரவே மாட்டேங்குது” என்றவள் வாயில் படியிலேயே அமர்ந்துவிட்டாள். முகம் சுருக்கி.
அவன் மனம் மீண்டும் கசங்கியது.
‘இன்னைக்கு என்னன்னு தெரியலையே. இவள் மூஞ்சி சின்னதானா எனக்கு உள்ள என்னவோ பண்ணுதே’ என எண்ணியவன், சைக்கிளை நிறுத்தி ஸ்டேண்ட் போட்டுவிட்டு, அவளின் அருகில் படியில் அமர்ந்தான்.
சம்ருவின் தலையில் சொருகியிருந்த சீப்பை கையில் எடுத்தவன், இதுநாள் வரை யுகி அவளுக்கு பின்னலிடும் போது பார்த்த பழக்கத்தில் தத்துகுத்தி எப்படியோ பின்னி முடித்தான்.
“ரிப்பன் பூ தான் சரியா வரல ம்ருதி. கிளாஸில் உன் பிரண்ட் யார்கிட்டவாவது ஒழுங்கா போட்டுக்கலாம். பேக் எடுத்துக்கிட்டு வா” என்றான்.
சரியென தலையாட்டிவிட்டு உள்ளே சென்ற ம்ருதி கண்ணாடியில் பார்க்க…
அழகாக இல்லையென்றாலும், நீட்டாக இருந்தது.
நெற்றியில் பொட்டு வைத்தவள், தன்னுடைய பையினை கொண்டு வந்து விஷ்வாவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டினுள் சென்றாள்.
விஷ்வா அவளது சைக்கிளை வெளியில் தள்ளி நிறுத்தி. பின்னால் அவளின் புத்தக பையையும், முன்னால் கூடையில் மதிய உணவு பையையும் வைத்தவன். இருக்கையை துடைத்துக்கொண்டிருக்க…
கையில் நீண்ட காம்புடன் அடங்கிய ரோஜா ஒன்றை பிடித்தபடி அவன் முன் வந்து நின்றாள்.
“இந்தா விஷ்வா” என்றவள் அவன் வாங்கியதும், சைக்கிளை தள்ளி ஏறி அமர்ந்தாள்.
அவள் கொடுத்த மலருடன் விஷ்வா அப்படியே நின்றுவிட்டான்.
இது தினமும் நடப்பது தான்.
இன்று ஏனோ எல்லாம் புதிதாய்.
விஷ்வாவுக்கு எட்டு வயது இருக்கும்போது… தனது சித்தி செண்பகத்தின் வீட்டில் விஷ்வாவையும், மித்ரனையும் விட்டுச்சென்றார் அம்மையப்பன். விஷ்வாவின் பாட்டி சுடரின் உடன் பிறந்த தங்கை அவர். அவருக்கு மக்கள் கிடையாது.
அம்மையப்பனின் தந்தை இறந்துவிட, அவர் தொடங்கிய கல்லூரியின் பொறுப்பை அம்மையப்பன் ஏற்க, முதல் படி அவருக்கு அத்தனை சறுக்கல்.
தந்தையைப்போல் தன்னால் வளர்ச்சி பாதையில் செல்ல முடியாதோ என்று திணர… சுஜாவும் கணவருக்கு துணையாக கல்லூரி செல்ல ஆரம்பித்தார். அதனால் பிள்ளைகளை சரிவர பார்த்துக்கொள்ள முடியா சூழல்.
விஷ்வா இங்கு வந்த போது, சம்ரு தான் அவனுக்கு முதலில் பழக்கமானது.
அதுவரை யுகியுடன் பள்ளி சென்று கொண்டிருந்தவள், விஷ்வாவுடன் செல்ல ஆரம்பித்தாள்.
வேறு வேறு குடும்பமாக இருந்தாலும், கணவரின்றி தனித்திருந்த செண்பகத்திற்கு ஒரே ஆதரவு வீரய்யன் தான். அதனால் பிள்ளைகளின் பழக்கத்தில் தடையேதும் வரவில்லை.
விஷ்வாவுக்கு ரோஜா என்றால் மிகவும் பிடித்தம். அவனது வீட்டில் வீட்டைச்சுற்றி ரோஜா செடிகள் இருக்கும். அந்த ஆசையில் இங்கும் ரோஜா செடி வைத்திட செண்பகத்திடம் அவன் அடம் பிடிக்க…
“என்னால அதெல்லாம் பதியம் வைத்து பராமரிக்க முடியாது ராசா” என்று அவர் மறுத்துவிட்டார்.
அதனை பார்த்திருந்த சம்ரு…
“எங்க வீட்டுல ரோஜா செடி இருக்கு விஷ்வா. உனக்கு வேணுன்னா அதுல நீ பறிச்சிக்கோ” என்றாள்.
“உனக்கும் பிடிக்குமா?” என்று விஷ்வா கேட்டிட,
“அக்காக்கு பிடிக்கும். அதனால பன்னீர் ரோஜா செடி வச்சிருக்காள். அது மரம் மாதிரி இருக்கும் விஷ்வா” என்றவள் அப்போதே கூட்டிச்சென்றும் காண்பித்தாள்.
“நல்லாயிருக்கு” என்றவன், “எனக்கு நிறைய கலரில் நிறைய ரோஜா இருந்தால் ரொம்ப பிடிக்கும் ம்ருதி. டெய்லி அதுல பூ பறிச்சு எங்க வீட்டு சாமிக்கு வைப்பேன். என் சுடர் பாட்டி சொல்லிக் கொடுத்தாங்க. ஆனால் இப்போ அவங்க இல்லை. சாமிக்கிட்ட போயிட்டாங்க” என்று உதடு பிதுக்கி அவன் சொல்லியதில் சிறியவளுக்கும் வருத்தமாகிப்போச்சு.
“இங்கு ரோஜா செடி நிறைய வைக்கலாம் விஷ்வா. அக்கா, வருண் மாமா ஹெல்ப் பண்ணுவாங்க” என்றவள் அன்றே வீரய்யனிடம் கேட்டு இரண்டு புது ரோஜா செடிகள் நட்டு வைத்தாள்.
அதில் முதல் பூ பூத்திட…
இருவரும் கொண்ட மகிழ்வுக்கு அளவே இல்லை.
“முதல் பூ. நம்ம பிள்ளையாருக்கு வையுங்க. நிறைய பூக்கும்.” எட்டாவது படிக்கும் யுகி சொல்லிட, மூன்றாவது படிக்கும் சம்ருவும், விஷ்வாவும் கேட்டுக்கொண்டனர்.
அது முதல் தினமும் பழக்கமாய் பள்ளி செல்லும்போது தெரு முனையில் அரச மரத்தடியில் இருக்கும் பிள்ளையாருக்கு ரோஜா வைத்து செல்வது வழக்கமாகியது.
சம்ரு ரோஜா பறித்து வருவாள். விஷ்வா பிள்ளையாருக்கு வைப்பான்.
அன்றாட நிகழ்வில் தெரியாத ஏதோ ஒன்று இன்று அவனுள் எட்டிப்பார்த்தது.
நிலமை கொஞ்சம் சீரானதும் இரண்டு வருடங்களில், அம்மையப்பன் மகன்கள் இருவரையும் அழைத்துச்செல்ல வர,
அங்கு போனால் சம்ருவை பார்க்க முடியாதென்று விஷ்வா மறுத்துவிட்டான். எத்தனை வற்புறுத்தியும் விஷ்வா செல்லவில்லை. செண்பகத்திடம் சொல்லிவிட்டு, மித்ரனை மட்டும் கூட்டிச்சென்றார்.
ஆரம்பத்தில் விடுமுறைகளுக்கு மகனை நேரடியாக வந்து அழைத்துச்செல்லும் அம்மையப்பன்… நாட்கள் செல்ல செல்ல பணிச்சுமையின் காரணமாக டிரைவரை அனுப்பி வைக்கத் தொடங்கினார்.
சுஜாதாவுக்கு தன்னுடைய மாமியார் சுடர் மீதிருந்த பிடித்தம், அவரின் தங்கை செண்பகத்தின் மீதில்லை. அதனால் விடுமுறைக்கு விஷ்வா வரும்போது மட்டுமே கொண்டாடித் தீர்ப்பார். கிராமத்திற்கு சென்று ஒரு நாளும் பார்த்தது கிடையாது.
எட்டு வயதில் இங்கு வந்தவன், இப்போது பதினைந்து வயதில் இருக்கிறான். தினமும் தொலைபேசி வாயிலாக மகனிடம் பேசிடுவார். ஏனோ செண்பகத்தின் வீட்டிற்கு செல்ல சுஜாவுக்கு விருப்பமில்லை. அதற்கு காரணம் புருஷோத்தமானாகக் கூட இருக்கலாம்.
“உன் மாமியார் வீட்டு சொந்தங்களை பக்கத்தில் சேர்த்துக்கொள்ளாதே! சொத்து பிரியும்” என்று பேசி பேசியே சுஜாவை செண்பகம் வீட்டுக்கு செல்லாது தடுத்துவிட்டார்.
அம்மையப்பனும் சம்ருவை மூன்றாவது படிக்கும்போது கண்டது.
மித்ரன் மட்டுமே தம்பியை காண அடிக்கடி அங்கு வந்து சென்று கொண்டிருக்கிறான்.
சில அடிகள் சென்ற சம்ரு, சைக்கிளை செலுத்தியபடி திரும்பி பார்க்க…
விஷ்வா அங்கேயே பூவை பார்த்தபடி நின்றிருந்தான்.
“விஷ்வா” என்று அவள் அழைத்திடவே பூவிலிருந்து கவனம் திருப்பியவன், சைக்கிளை மிதித்து சம்ருவை நெருங்கினான்.
“என்னாச்சுடா. உடம்பு சரியில்லையா?”
“ம்ப்ச்” என்றவன், பிள்ளையாரை கடந்து சென்றிட…
“டேய்… பூ வைக்காமல் போற” என்றாள்.
“என்னன்னு தெரியல ம்ருதி. இன்னைக்கு இந்த பூவை நானே வச்சிக்கணும் தோணுது” என்றவன் சென்று கொண்டே இருக்க,
தோளை குலுக்கிவிட்டு இவளும் அவனை பின் தொடர்ந்தாள்.
வகுப்பிற்கு சென்றவர்கள் தத்தம் நண்பர்களுடன் ஐக்கியமாகிட… விஷ்வாவின் பார்வை மட்டும் சம்ருவை அடிக்கடி தொட்டு தொட்டு மீண்டது.
சம்ரு கவனித்து என்னவென்று கேட்டால், ஒன்றுமில்லையென கண்கள் சிமிட்டினான்.
‘இனி பார்க்காத விஷ்வா. நீ சரியில்லை’ என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டவன், தன்னுடைய நண்பர்களிடம் பேச ஆரம்பித்துவிட்டான்.
சில நொடிகள் மட்டுமே! மீண்டும் அவனின் பார்வை அவளிடம் தாவியது.
“என்ன மச்சான் லவ்வா?”
அவனின் நண்பன் ராஜா கேட்டிட,
விஷ்வா அதிர்ந்து பார்த்தான்.
“இப்படி பார்த்தால் நாங்க விட்டுடுவோமா?” என்றான் தினேஷ்.
“டேய் அப்படிலாம் இல்லை. நீங்க இப்படி பேசுனீங்க தெரிஞ்சாலே ம்ருதி ஃபீல் பண்ணுவாள்” என்றவன், இருவரிடமும் இனி இந்த மாதிரி பேச்சே இருக்கக்கூடாதென்று எச்சரிக்கை செய்தான்.
“சும்மா சொல்லாதடா… பக்கத்து வீடு. சின்ன வயசிலிருந்து ஒண்ணாவே சுத்திக்கிட்டு இருக்கீங்க. அவளும் எது வேணுன்னாலும் கேர்ள்ஸ்ல அத்தனை பிரண்ட் இருந்தாலும் உன்கிட்ட தான் கேட்கிறாள். நீ என்ன சொன்னாலும் அடுத்த செகண்ட் செய்யுறாள். அவகிட்ட எந்த பையனாவது பேச போனாலே பொளந்து கட்டிடுற” என்று ராஜா அடுக்கிக்கொண்டே போக,