சம்ரு ரோஜா தோட்டத்துக்கு நடுவில் அமர்ந்திருந்தாள்.
வீட்டிற்கு கோபத்தோடு வந்த விஷ்வா, இப்போது அவளை பார்த்தால் சத்தமாக ஏதும் பேசிவிடுவோம் என்று அஞ்சி மொட்டை மாடிக்கு சென்றுவிட்டான்.
அங்கிருந்து பார்க்க ரோஜா குவியலுக்கு நடுவில் தேவதையென தெரிந்த தன்னவளை இமைக்காது பார்த்திருந்தவனின் கோபம் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்தது.
சிறிது நேரத்தில் தனக்கருகில் விஷ்வா அமர்வதை உணர்ந்த சம்ரு அவனை இமைக்காது கண்கள் வழி இதயத்தில் உள்வாங்கினாள்.
விஷ்வா ஏதும் பேசாது அங்கு மலர்ந்திருந்த ரோஜா மலர்களையே பார்த்திருக்க…
“என் மேல கோபமா இருக்கியா? திட்றதுக்குதான் இப்போ வந்தியா?” எனக் கேட்டாள்.
விஷ்வாவிடம் பதிலில்லை.
“இதைவிட வேறு ஒண்ணு ரொம்ப அழுத்துது. அந்த கஷ்டம் முன்னாடி இது ஒரு பிரச்சனையாவே எனக்குத் தெரியல” என்றவள் துடித்த அதரத்தை பற்களால் கடித்து கட்டுப்படுத்தினாள்.
“அதுக்கு முன்னால் இது நினைவேயில்லை. ஞாபகம் இல்லாததை எப்படி உன்கிட்ட சொல்ல முடியும்?” என்ற சம்ரு “என்னன்னு கேட்கமாட்டியா?” என வினவினாள்.
விஷ்வா அவளின் உணர்வு போராட்டத்தை விழி அகட்டி பார்த்திருக்க… அவளே தொடர்ந்தாள்.
“உன்னை போகாதன்னு என்னால சொல்ல முடியாது. ஏன் போறன்னும் கேட்க முடியாது. போய் தானே ஆகணும். இன்னும் எத்தனை நாளுக்கு நீ இருந்திடுவ. எக்ஸாம் முடிய மட்டும் தானே! கஷ்டமா இருக்குன்னு மட்டும் தான் சொல்ல முடியும்.”
இரு உள்ளங்கையிலும் முகத்தை புதைத்தவளாக உடல் குலுங்க அழுதிட்டாள்.
“இன்னும் ஏஜ் இருக்கு. இப்போ இது தப்புன்னு தான் சொல்வேன். அதுக்காக நமக்குள்ள இருக்க…” சிறு இடைவெளிவிட்டு, “உறவு தப்புன்னு எப்பவும், ஒரு செக்(sec) கூட நினைத்தது இல்லை. வாழ்க்கையில நமக்கு இன்னும் நிறைய இருக்கு. நமக்குன்னு ஒண்ணு இருக்குமே! அதையாவது கையில் கொண்டு வரணுமே! அதுவரை உனக்கு நான். எனக்கு நீ. இந்த நினைப்பே போதும் நினைக்கிறேன். நல்லா படி. கண்டிப்பா வருவேன்” என்றவன் அவளின் முகம் பார்த்தால் இழுத்து மார்போடு அணைத்துவிடுவோமோ என்று அஞ்சி வேகமாக எழுந்து சென்றுவிட்டான்.
உண்மையில் விமல் செய்த விடயம் இந்த வயதிற்கு சாதரணமானது அல்ல. அதையே ஒரு பொருட்டாகக் கூட நினைக்காத சம்ருவுக்கு விஷ்வாவின் பிரிவு என்ற எண்ணமே அத்தனை வலியை கொடுத்தது.
காதலிப்பவர்கள் எல்லாம் இப்படி பேசாமல் இருந்தால் தான், சரியான பாதையில் பயணிப்பார்களா எனக் கேட்கலாம். எல்லோருக்குமான காதல் என்ற அங்கம் ஒன்றாக இருக்கலாம். உணர்வுகள் வேறு வேறாயிற்றே. காதலால் தான் நான் சாதித்தேன் என்று சொல்லும் பலருக்கு மத்தியில் காதலால் அனைத்தும் துறந்தேன் என்று சொல்லுபவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர். அந்த சிலரில் ஒருவராய் தங்கள் காதல் இருந்துவிடக் கூடாது என்பதில் திண்ணமாக இருக்கின்றான் விஷ்வா.
எப்போதும் போல் சம்ருவுடன் பேசிக்கொண்டிருந்திருந்தால், ஒருகட்டத்தில் அவனறியாது சம்ருவை நெருக்கமாக நெருங்கி பார்க்கத் தோன்றிருக்கும். இருவரும் அருகருகே என்ற நிலையில், பள்ளி படிப்பு முடியும் முன்னரே வீரய்யனின் பார்வைக்கு தட்டுப்பட்டு, தங்கள் இருவரையும் அவர் பார்க்கும் கோணமே வேறாக மாறியிருக்க வாய்ப்புகள் அதிகம். பின்னாளில் இருவரும் காதல் என்று சென்று நிற்கும்போது அனைவரும் மதிக்கும் இடத்தில் இருக்க வேண்டுமென நினைத்தான். காதல் என்பதைவிட விருப்பமென்று தன் உறவுகளுக்கு காட்டிட முயல்கிறான். அதற்காகவே இந்த இடைவெளி காதல். சொல்லாத உயிரோட்டமான காதல்.
விஷ்வாவின் பார்வைக்கே அர்த்தம் கண்டறிபவளுக்கு, அவனின் மனவோட்டத்திற்கா புரிதல் இருந்திடாது. அவனை இன்னும் இன்னும் பிடித்தது. பிடித்தம் என்பது பித்து நிலையில் உச்சம் தொட்டு நின்றது. இருவருள்ளும்.
தேர்வுகள் ஆரம்பமாகியிருந்தது.
அன்று பள்ளிக்கு செல்லும்போது பிள்ளையாருக்கு ரோஜாவுடன் சேர்த்து ஒரு பேனாவையும் வைத்தாள். பார்த்துக்கொண்டிருந்த விஷ்வா, சம்ரு நகர்ந்ததும் அவள் வைத்த பேனாவை எடுத்துக்கொண்டு, அவன் ஒன்றை வைத்தான். அவளும் எடுத்துக்கொள்ள தேர்வெழுத புறப்பட்டிருந்தனர்.
‘இதுக்கு கையிலே குடுத்திருக்கலாமே!’ என்ற கணபதியின் மைண்ட் வாய்ஸ் அவர்களுக்கு கேட்கவில்லை.
சம்ருதிக்கு நாளை இறுதி தேர்வென்ற நிலையில் விஷ்வாவுக்கு அனைத்தும் முடிந்திருந்தது.
“எக்ஸாம்ஸ் ஓவர். எப்போ திருச்சி கிளம்புற?” கேட்டபடி தனக்கு பின்னால் வந்து நின்ற வருணை விஷ்வா தாவி அணைத்துக் கொண்டான்.
“ஹோ… பேக்கிங் நடக்குதா?” கட்டில் மீதிருந்த பை மற்றும் மடிக்கப்பட்ட துணிகளை கண்டு சுரத்தே இல்லாது வினவினான் வருண்.
“அப்பா வந்திட்டு இருக்காங்க வருண்ணா” என்ற விஷ்வா, துணிகளை பையில் அடுக்க… வருண் உதவி செய்தான்.
தம்பியென்று மனதால் அவன் உணர்ந்த உறவல்ல. எளிதில் பிரிந்திட கடினமாகத்தான் இருந்தது.
“சான்ஸ் இருந்தாலும் வரமாட்டேன் வருண்ணா.” அழுத்தமாகக் கூறிய விஷ்வாவின் பதிலில் வருணின் முகம் வாடிவிட்டது.
“அவளை பக்கத்துல வச்சிகிட்டே தள்ளி இருக்கிறது கொடுமையா இருக்கு வருண்ணா. என் கண்ட்ரோல் என்கிட்ட இல்லை. அவகிட்ட பேசவே பயமா இருக்கும். பேசினால் அவளோட காதல்ல மொத்தமா மூழ்கிடுவேன்னு எனக்கே நல்லா தெரியுது. அதுக்கு இடைவெளி ரோம்ப அவசியம். இங்க வந்து போயிட்டு இருந்தால் அவள் நினைப்புல பித்து பிடிச்சு சுத்துவேன். எல்லாம் முடிச்சிட்டு, மொத்தமா என் ம்ருதியை எனக்கே எனக்குன்னு மட்டும் வசிக்க கூட்டிப்போக வருவேன்” என்றான்.
“மிஸ்டர்.அம்மையப்பன் என்னை எப்படா கூட்டிட்டு போகலான்னு இருந்திருப்பார் போல. எனக்கு இன்னைக்கு லாஸ்ட் எக்ஸாம் தெரிஞ்சதும் கிளம்பிட்டார்” என்று அவன் சொல்லும்போதே வெளியில் காரின் சத்தம் ஒலித்தது.
“ம்ம்… வந்துட்டார்” என்றவன் வெளியில் செல்ல…
செண்பகம் பாட்டி தனது மகனை வரவேற்று அமர வைத்திருந்தார்.
“இனி நான் ஒத்தையில அல்லாடணும்.” மனத்தாங்கலாகக் கூறினார் பாட்டி.
“நீங்களும் எங்களோடவே வந்திடுங்கன்னு சொன்னால் கேட்க மாட்றீங்க. வந்துடுங்களேன் சித்தி.” மனம் வேண்டிதான் அழைத்தார்.
“என் காலம் இந்த வீட்டுலே முடிஞ்சாதான் எனக்கு நிம்மதி ராசா. அப்பப்போ என் பேரனை மட்டும் கண்ணுல கூட்டியாந்து காட்டிட்டு போ” என்றார்.
சில நொடி அவர் சொல்லியதில் மனம் கனத்தவராக இருந்த அம்மையப்பன், வருணை பார்த்துவிட்டு,
“மேரேஜ் லைஃப் எப்படி போகுது டாக்டர்?” என்று வினவினார். வருண், யுகி திருமணத்திற்கு அம்மையப்பன் மித்ரனுடன் வந்து சென்றிருந்தார்.
“கோயிங் குட்’ப்பா” என்ற வருண், “விஷ்வாவை கூட்டிட்டு போயே ஆகணுமா” என்றான். தான் கேட்பது அபத்தம், அதற்கு வழியில்லை. பிள்ளை பெற்றவர்களுடன் இருக்கத்தானே பெற்றோர் ஆசைப்படுவர் என்று தெரிந்தும் ஆற்றமாட்டது கேட்டான்.
“அவனை பிரியரிதில் நிறைய பேர் கஷ்டப்படுவீங்க தெரியும். ஆனால் பெத்தவனா என் பையனை இதுக்குமேல பிரிஞ்சிருக்க முடியாதே வருண்.” தன்மையாக தன் மனதை எடுத்துரைத்தார்.
“புரியுதுப்பா… ரொம்பவே மிஸ் பண்ணுவேன்” என்ற வருண், விஷ்வா கிளம்பும் வரை அவனைவிட்டு நகரவே இல்லை.
அந்த நெருக்கமே விஷ்வாவை வெகுவாக வருத்தியது.
விஷ்வாவின் உடமைகளை ஓட்டுநர் வாகனத்தில் எடுத்து வைத்துக் கொண்டிருக்க,
“சொல்லிட்டு வந்துடுறேன் ‘ப்பா” என்று சம்ருவின் வீட்டிற்குச் சென்றான் விஷ்வா.
வாயில் நிலைப்படியிலேயே நின்றிருந்தாள் சம்ருதி.
“கார் வந்து நின்னதுலேர்ந்து அங்கவே தான் நின்னுட்டு இருக்க. உள்ள வந்து உட்காரு சம்ரு.” யுகியின் வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே வந்த விஷ்வாவை கண்டதும் சம்ருதி வேகமாக அறைக்குள் சென்று மறைந்தாள்.
“கிளம்பிட்டியா விஷ்வா?”
கேட்ட வீரய்யனுக்கு ம் என தலையசைத்தான்.
“நீ நல்லா வருவப்பா. எதுலையும் கவனமா இருக்கணும். சந்தோஷமா இருக்கணும்” என்ற வீரய்யன், தன் கையிலிருந்த பணத்தை அவன் மறுக்க மறுக்க பாக்கெட்டில் வைத்தவர், அவனின் தலையில் கை வைத்து அழுத்தம் கொடுத்தார்.
“இந்த சின்ன கழுதை தான் நீயில்லாமல் என்ன பண்ணப்போகுதோ” என்றார் கவலையாக.
“ம்ருதிக்கு பிடிச்சதை படிக்க வையுங்க மாமா” என்றவன், “அண்ணி காபி” என்றான். அவன் கேட்டு முடிக்கும் முன் காபி அடங்கிய தம்ளரை அவன் முன் நீட்டியிருந்தாள் யுகி.
விஷ்வாவின் கையை பிடித்துக்கொண்ட யுகிக்கும் அவன் செல்வது கடினமாகத்தான் இருந்தது. இந்த வீடு கலகலப்பாக இருந்த பெரும் தருணங்களில் விஷ்வாவுக்கும் பங்குண்டு. அவன் இல்லாத பொழுதுகள் வருத்தத்தை கொடுக்கும் தானே.
“வருண்ணா கூட இருக்கும்போது என் ஞாபகம்லாம் வருமா அண்ணி?” எனக் கேலி செய்து யுகியை சகஜமாக்கியவன், “ம்ருதிக்கிட்ட பேசிட்டு வரேன் மாமா” என்று வீரய்யனிடம் சொல்லிவிட்டு சம்ரு சென்ற அறைக்குள் நுழைந்தான்.
கட்டிலில் கை விரல்களை பிரித்து, விரித்து, பிண்ணி என ஏதேதோ செய்தபடி சம்ரு அமர்ந்திருக்க, விஷ்வா வந்தது தெரிந்தும் அப்படியே இருந்தாள்.
திறந்திருந்த கதவருகே சுவற்றில் ஒரு கால் குற்றி மார்பிற்கு குறுக்கே கைகளைக் கட்டிக்கொண்டு சாய்ந்து நின்றவன், அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
விஷ்வாவை நிமிர்ந்து பார்த்தால் நிச்சயம் அழுது விடுவோமென்று சம்ரு தலை குனிந்தே இருக்க… விஷ்வாவும் எதுவும் பேசாது தன்னவளை பார்த்தபடியே நின்றிருந்தான்.
அவர்களுக்குள்ளான அந்த அமைதியும் அத்தனை அழகாய் இருந்தது.
“விஷ்வா அப்பா கூப்பிடுறாங்க” என்ற வருணின் சத்தத்தில் தன்னிலை கலைந்த விஷ்வா, தன்னுடைய சட்டை பாக்கெட்டிலிருந்து மிகச்சிறிய அளவிலான பாக்ஸ் ஒன்றை எடுத்து அவளருகில் வைத்தவன் வேகமாக வெளியேறிவிட்டான்.
ஏதேனும் பேச போய் இருக்கும் நெகிழ்வு நிலையில் மனதால் உடைந்துவிட்டால் என்ன செய்வதென்றே எதுவும் பேசாது வந்திருந்தான்.
அனைவரிடமும் சொல்லிக்கொண்டு விஷ்வா புறப்பட்டிருக்க… கார் கிளம்பிய சத்தத்தில், வெடித்து கதறினாள் சம்ருதி.
என்னவோ ஏதோவென்று வெளி வாயிலில் நின்று விஷ்வா செல்வதை பார்த்திருந்தவர்களில் வீரய்யன் முதலில் உள்ளே வேகமாக வர, அழும் மகளின் நிலை கண்டு பதறினார்.
“சம்ரு…”
“கூடவே வளர்ந்தவன். இப்போ உடனில்லைன்னதும் கஷ்டமாகியிருக்கும். சரியாகிடுவாள். நீங்களும் வருத்தப்பட்டால் ஆச்சா?” என்று வீரய்யன் வேறு விதமாக ஏதும் யோசிக்கும் முன்னர் அவரிடம் பேசி வயலுக்கு அனுப்பி வைத்த வருண், யுகிக்கு கண்காட்டிட அவள் அங்கிருந்து வெளியேறினாள்.
சம்ருவின் அருகில் அமரப்போனவன் விஷ்வா வைத்துவிட்டுச் சென்ற பாக்ஸை கையிலெடுக்க… அதனை வேகமாக பறித்திருந்தாள்.
“நான் ஓகே தான் மாமா. அவன் போறான்னு இத்தனை நாள் அழுத்தி வச்சிருந்த அழுகை… போயிட்டான்னதும் மொத்தமா வெளியேறிடுச்சு” என்றாள். முயன்று சிரித்தவளாக.
வருண் என்ன சொல்வதென்று தெரியாது அமைதியகா இருக்க…
“உங்களுக்குத் தெரியும்ல மாமா?” எனக் கேட்டிருந்தாள்.
அவள் எதை கேட்கிறாள் என்பது தெரிந்த போதும் “என்னது?” என்று வினவியிருந்தான்.
“வி.ஆர்… எஸ்… அர்த்தம்.”
வருணின் தலை மேலும் கீழும் ஆடியது.
அப்படியே சுருண்டு படுத்துவிட்டாள். அவள் தூங்கும்வரை தலை கோதியபடி இருந்தவன் வெளியில் வந்தான்.
“சம்ரு ஓகேதானே?”
“ம்ம்ம்… அம்மு ஏதோ முடிவெடுத்திட்டாள் நினைக்கிறேன் யுக்தா” என்றான்.
“என்னது மாமா?”
“அவளே சொல்வாள்.”
விஷ்வா திருச்சி சென்றடைந்ததும் வருணுக்கு கால் செய்து சொல்லியிருந்தான்.
விடயம் அறிந்த சம்ருதி வேறெதுவும் கேட்டுக்கொள்ளவில்லை. ஆனால் தேர்வு முடிவுகளுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தாள்.