ஆட்டத்தில் வெற்றி தோல்வி யாருக்கு என்பதைவிட… ஆட்டத்தின் ஆரம்பத்திற்கு முடிவு உண்டு என்பதே நிதர்சனம்.
இங்கும் சம்ருதி துவங்கிய கண்ணாமூச்சி ஆட்டம் முற்று பெரும் நாளும் வந்தது.
முதல்நாள் அஞ்சலியின் பெற்றோர் வெளியூருக்கு சென்றிருக்க… காலேஜ் முடித்து வரும்போதே விஷ்வாவுடன், அவனின் வீட்டிற்குதான் வந்திருந்தாள்.
விஷ்வாவே அவனுடைய காலேஜ் என்பதை சொல்லிக்கொள்ளாமல் இருக்க… இது என் மாமாவுடைய காலேஜ் என்று அவளும் யாரிடமும் சொல்லவில்லை. சம்ருவுடன் கூட பகிர்ந்திருக்கவில்லை. ஆனால் மாமா பையன் இங்கு தான் படிக்கிறான் என்று மட்டும் சொல்லியிருக்கிறாள்.
அஞ்சலி கல்லூரியில் தற்செயலாக எங்காவது விஷ்வாவை பார்த்தால் ஓரிரு வார்த்தைகள் பேசுவாள். அவனும் அப்படியே! சம்ருதி விஷ்வா தன்னை எங்கேனும் பார்த்துவிடக் கூடாது என்பதால் அதிகம் வகுப்பிலே இருந்திடுவாள். அஞ்சலியுடன் வகுப்பைத்தாண்டி எங்கும் வளாகத்தினுள் சென்றிடமாட்டாள். ஆதலால் அஞ்சலி விஷ்வா உறவினர்கள் என்பது அதுநாள் வரையிலும் கூட சம்ருதிக்கு தெரிந்திருக்கவில்லை.
“அவன் நினைக்கிற ஆளா இருக்க முடியாதுன்னு அவனுக்கேத் தெரியும்” என்றான் ராஜா.
விஷ்வா அமைதியாக எழுந்து சென்றுவிட்டான்.
“அவனே சரியாகிடுவான். விடுங்க” என்று தினேஷ் சொல்ல மூவரும் தத்தம் வகுப்பிற்கு சென்றனர்.
காலை அஞ்சலி உடனிருந்ததால் சம்ருதி விஷ்வாவை பார்க்கவில்லை. இப்போது பார்த்திருக்க, அவனின் அமைதி அவளை என்னவோ செய்தது. வகுப்பிற்கு வந்தவள் பாடத்தை கவனிக்க முடியாது நிலையின்றி இருந்தாள்.
அவள் எத்தனையோ முறை கேட்டும் அவன் பதில் சொல்லவில்லை.
சுசிக்கு மூவரும் பேசிக்கொள்வதை வைத்து, அவர்களுள் சம்ருதி இன்றியமையாதவள் என்று தெரியும். ஆனால் அவளை விஷ்வா விரும்புகிறான் என்பது தெரியாது. விஷ்வா சொன்னதில்லை. அவன் சொல்லாது மற்ற இருவரும் சொல்லவில்லை.
சுசி சம்ருதியை விஷ்வாவின் அலைபேசியில் தான் பார்த்திருக்கிறாள். ஓரிரு முறை இருக்கும். இப்போது நேரில் வந்தால் கூட அவளுக்கு சம்ருவை அடையாளம் காண்பது கடினம் தான்.
ஆனால் சம்ருதிக்கு சுசியை பற்றி அனைத்தும் தெரியும். விஷ்வாவுக்கு சுசி எத்தனை நெருக்கமான தோழியென்றும் தெரியும்.
அன்று சம்ருதியின் துறையில் சீனியர் மாணவர்கள் அவர்களுக்கான ப்ரொஜெக்ட் பிரசன்டேஷனை மற்ற ஜூனியர் மாணவர்கள் முன்னிலையில் விவரித்து காண்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அது சிறு இவன்ட் போலவே தயாராகியிருந்தது.
பிரசன்டேஷன் முடிந்து பேராசிரியர்கள் கிளம்பியதும், அவர்கள் துறை ஜூனியர் மாணவர்களுக்கான ஃபிரஷர்ஸ் டே’வை சீனியர்ஸ் செலபிரேட் செய்தனர்.
ஆட்டம், பாட்டமென படு கொண்டாட்டமாக இருந்தது.
இதில் எதிலும் ஒன்ற முடியாது அவஸ்தையாகிப்போனாள் சம்ருதி.
மாணவர்கள் எல்லோரும் செல்ஃபி, ஃபோட்டோ, வீடியோ என்று எடுத்துக்கொண்டிருக்க, அஞ்சலியும் சம்ருதியுடன் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டாள்.
எடுத்த படங்களை பார்வையிட்ட அஞ்சலி,
“உன் முகத்தில் எப்பவும் இருக்கும் அந்த சின்ன க்யூட் ஸ்மைல் மிஸ்ஸிங் சம்ரு” என்றாள்.
“தலைவலிக்குது அஞ்சலி.” பொய் காரணம் கூறினாள்.
“சத்தமா இருக்குல, அதான்” என்ற அஞ்சலி, “முடியப்போகுது… ஹாஸ்டல் போயிட்டு ரெஸ்ட் எடு” என்றவள், சம்ருவை தன் தோளில் சாய்த்துக்கொண்டாள்.
“போதும் அஞ்சலி. நான் தான் நேரிலே இருக்கின்றேனே” என்ற சம்ரு கண்களை மூடிக்கொள்ள, “இதெல்லாம் மெமரிஸ் சம்ரு” என்ற அஞ்சலி, “இவ்வளவு நாளாச்சு இன்னைக்குத்தான் ரெண்டு பேரும் சேர்ந்து செல்ஃபியே எடுக்கிறோம். வாட்ஸப் ஸ்டேட்டஸ் வைக்கப்போறேன் ‘வித் மை ஸ்மைலிங் பேபி’ கேபிஷனோட” என்றதை அஞ்சலி செய்துமிருந்திருந்தாள்.
சம்ரு… அஞ்சலி விஷ்வாவின் உறவென்று தெரிந்திருந்தால் வைக்க விட்டிருக்கமாட்டாளோ?
அவர்கள் கொண்டாட்டம் முடிந்து வரும் போது கல்லூரி நேரம் முடிந்து மாணவர்கள் அனைவரும் சென்றிருந்தனர்.
இப்போதும் விஷ்வாவை சம்ருவால் பார்க்க முடியவில்லை. மதிய இடைவேளையில் ஒரு சில நிமிடங்கள் பார்த்தது தான்.
‘ஏன் ஒரு மாதிரி இருந்தான்? இப்போ நார்மல் ஆகியிருப்பானா?’ யோசனையோடே அஞ்சலியிடம் விடைபெற்று விடுதிக்கு வந்தாள்.
அஞ்சலியின் பெற்றோர் ஊரிலிருந்து வந்திருக்க, இப்போது அவளை அழைக்க புருஷோத்தமன் கார் அனுப்பியிருக்க, அதில் அவள் தன் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.
இதனை சுஜா காலையே விஷ்வாவிடம் சொல்லியிருந்ததால், மாலை அவளுக்காகக் காத்திருக்காமல்… எப்போதும் நண்பர்களுடன் அரைட்டை அடித்து சிறிது தாமதமாகவே கிளம்பும் விஷ்வா, மனம் ஏதோ தவிப்பாக இருக்க கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு கிளம்பியிருந்தான்.
விஷ்வாவின் சோர்ந்த நிலைக்கு காரணம் அறிய வேண்டி, ஒரு வேகத்தில் அழைத்துவிட்ட சம்ருதி, ஒலிக்கும் முன்னவே கட் செய்திருந்தாள்.
விஷ்வாவுக்கு அவள் கால் ட்ரை செய்த தகவல் சென்றிருக்க…
‘எதற்கு?’ என அவன் சிந்திக்க… சில நிமிடங்களில் தினேஷ் கால் செய்தான்.
“வீட்டுக்கு போயிட்டியா விஷ்வா?”
“நீ கால் பண்ண ரீஸன் சொல்லுடா?”
“சம்ரு கால் பண்ணி… நீ ஓகே தானா? நல்லாயிருக்கியா? அப்படி இப்படின்னு என்னை படுத்திட்டாள் டா. நீயேன் இப்படி இருக்க? இன்னைக்கு என்னாச்சு உனக்கு?” என்று மூச்சுவிடாது முடித்தான்.
‘என்னை அவளால் உணர முடியுதா?’ அதுவரை சுருங்கியிருந்த விஷ்வாவின் முகம் மலர்ந்து விகசித்தது.
“நவ் அம் ஓகே டா! மார்னிங் கொஞ்சம் டிஸ்டர்ப் ஆகிட்டேன். அவ்வளவு தான்” என்றான். விஷ்வாவின் குரல் உற்சாகமாகத் தெரிந்திட தினேஷிற்கு ஹப்பா என்றிருந்தது.
விஷ்வாவின் உண்மையான குழப்பத்திற்கு காரணம் இந்திரா மற்றும் புருஷோத்தமனின் எண்ணம் தான்.
‘தனக்கு மிகவும் பிடித்த செயலை அஞ்சலியை செய்ய வைத்து தன்னை வளைக்க பார்க்கின்றனரோ’ என்று தான். கொஞ்சமே கொஞ்சம் குழம்பிவிட்டான். அது இத்தனை தூரம் தன்னை சோர்வில் ஆழ்த்துமென்று அவனுமே எதிர்பார்க்கவில்லை.
“ஒரே மாதிரி டேஸ்ட் ஆயிரம் பேருக்கு இருக்கும். அவங்களுக்கான காரணங்கள் வேறாக இருக்கும். உனக்கும் சம்ருவுக்குமான பழக்கம், அஞ்சலிக்கு இருக்குன்னா அவளுக்கு விநாயகர் பிடித்த கடவுளா இருக்கலாம். அதுக்காக நீ உன்னை குழப்பி… ம்ப்ச். உனக்கு ஒண்ணுன்னா முதலில் சம்ருவுக்கு தெரிந்திடும். அவளுக்காகவாவது இனி இந்த மாதிரி மூட் ஆஃப் ஆகாதே! எப்படித்தான் கண்டுபிடிக்கிறாளோ? பக்கத்திலிருந்து பார்த்தது போல் வி.ஆர் எதுவும் சோகமா இருக்கானா? எதையாவது நினைச்சு குழப்பிக்கிறானா? அப்படின்னு கேட்கிறாள். எனக்கென்னவோ அவள் உன்னை வாட்ச் பண்ணிட்டே இருக்கா(ள்)ன்னு தோணுது” என்று தினேஷ் பேசிக்கொண்டே இருக்க… மித்ரனின் அழைப்பு செகண்ட் காலில் வந்தது.
‘உண்மையா இருக்குமோ?’ என்று நினைத்தாலும், சம்ரு தனக்கு மிக அருகில் இருந்துகொண்டே கவனிக்கிறாள் என்ற எண்ணமில்லை அவனுக்கு. தான் வருண் மூலமாக அவளைப்பற்றித் தெரிந்துகொள்வது போல் சம்ரு தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் தன்னைப்பற்றி அறிந்து கொள்கிறாள் என்றே அக்கணம் நினைத்தான்.
மித்ரன் சொல்லியதற்காக அசட்டையாக வாட்ஸப் திறந்து பார்த்த விஷ்வாவின் கண்களின் கருவிழி வெளியே குதித்து விடுமளவிற்கு ஆச்சரியத்தில் அகல விரிந்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.