தினமும் பார்த்துக்கொள்வதால் முன்பிருந்த தவிப்பு விஷ்வாவிடம் இப்போது இல்லை.
தன் கண் முன்னால் இருக்கின்றாள். அதுவே அவனுக்கு அத்தனை திடமளித்தது.
இப்போதெல்லாம் சம்ருதி காலை வைக்கும் மலர், விஷ்வாவால் மாலை எடுக்கப்பட்டது.
விஷ்வாவிடம் சொன்னது போல் சம்ருதி எந்தவொரு நிலையிலும் அவன் முன் சென்று நிற்கவில்லை.
இப்போதும் அவனுக்குத் தெரியாமலேயே பார்த்துக்கொள்கிறாள்.
இருவருமே எடுத்த முடிவில் உறுதியாக இருந்தனர்.
இவர்களுக்கு நடுவில் இவர்களது காதல் தெரிந்த ராஜாவும், தினேஷும் தான் மாட்டிக்கொண்டனர்.
“உண்மையிலேயே இதுங்க ரெண்டும் லவ் பண்ணுதாடா?” ராஜா புலம்பலாகக் கேட்க, தினேஷ் கடுப்பாகக் கேட்பான். ஆகமொத்தம் இருவருக்குமே பதில் இல்லை.
பதில் சொல்ல வேண்டியவர்கள் மூன்றாம் மனிதர் பார்வையில் கடந்து சென்றனர்.
சம்ருதியும் இங்கு தங்களுடனே என்பதில் அதிகம் மகிழ்ந்தது ராஜா தான். என்னயிருந்தாலும் பள்ளி நாட்களில் ராஜாவுடன் அதிக நேரம் இருந்தது சம்ருதி தானே!
தினமும் இடைவேளையில் சம்ருதியை காணச் சென்றிடுவான்.
“பிரேக் டைமிலாவது நீ எங்களோடு வந்து இருக்கலாமே சம்ரு. ஸ்கூல் டேசில் ரெண்டு பேரும் ஒண்ணாவே தானே இருந்தீங்க. அப்போ பேசாமல் இல்லையா? இப்போ மட்டும் என்ன?” ராஜா ஆதங்கமாகக் கேட்டிடுவான்.
“வி.ஆர் முன்னால் நான் நானாக இருக்க முடியாது ராஜா.” நேர்மையான அவளின் பதிலில் அவன் தான் வாயடைத்துப் போவான்.
“புரியல எனக்கு. சத்தியமா இதுதான் லவ்வா?”
“என்னை அவனுக்கு புரியும். எனக்கு அவனை புரியும். எங்களுக்கு தெரிஞ்ச மாதிரி நாங்க லவ் பண்றோம். இப்போதைக்கு இது போதும்.” அசராது மலைப்பாக பார்த்தான் ராஜா. இப்படியொரு பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை.
“சரி உங்களுக்குள்ள நடக்குற ரோஜா விடு தூது எப்போ தான் நிக்கும்?”
“அது ஏன் நிக்கணும்? இந்த உலகத்துல கடைசி ரோஜா இருக்கும் வரை தொடரும்.”
ராஜா பார்த்த பார்வையில் சம்ரு சத்தமாக சிரித்தாள்.
“இப்போலாம் உங்க மூணு பேரையும் ஒண்ணாவே பார்க்க முடியுறதில்லை?”
“ஒண்ணாயில்லாமலாம் இல்லை. விஷ்வா, நான் ஒண்ணாதான் வறோம் போறோம். பிரேக் டைம் உன்னை பார்க்க வந்திடுறேன். தினேஷ் எனக்கும் சேர்த்து நோட்ஸ் எடுத்திட்டு இருப்பான்” என்ற ராஜா,
“காலேஜூக்கு போனா படிக்கவே வேணாம். ஃபிரியா இருக்கலாம் சொன்னவன் மட்டும் என் கையில் கிடைச்சான்… அவ்வளவு தான். ஸ்கூல் படிக்கும்போதே ஜாலியா இருந்த மாதிரி இருந்துச்சு சம்ரு. இங்க படி படின்னு வச்சு செய்றாங்க. முடியல” என்றான்.
“நீ வந்தா தான் ராஜா என் ஸ்மைலிங் பேபி அதிகமா சிரிக்கிறாள்” என்றபடியே அவர்களின் முன் அமர்ந்த அஞ்சலி கேன்டினில் வாங்கி வந்த சமோசாவை இருவருக்கும் கொடுத்தாள்.
“இந்த சமோசா வாங்கத்தான் இம்புட்டு நேரமா?” அஞ்சலியின் தலையில் ராஜா கொட்டியிருந்தான்.
தினமும் சம்ருதியை பார்க்க வருவதால் ராஜா அஞ்சலிக்கும் நன்கு பழக்கமாகியிருந்தான்.
“வரும்போது உன் ஃபிரண்டை பார்த்தேன். சுசி கூட இருந்தான். அதான் டிலே!”
“ஹோ…” ராஜா ராகம் பாடினான்.
சம்ருவுக்கு அஞ்சலி சொல்லிய உன் பிரண்ட் யாரென்று தெரியவில்லை. சுசி என்றதும் ஒரு யூகம். விஷ்வாவை சொல்கிறாளோ என்று. அந்த யூகம் அஞ்சலிக்கு விஷ்வாவை எப்படித் தெரியும்? என்ற கேள்வியை தோற்றுவித்தது.
“நானும் கேட்கணும் நினைச்சேன். நீயும் சம்ருவும் எப்படி பிரண்ட்ஸ்?” ராஜாவிடம் அஞ்சலி கேட்டிருந்தாள்.
சம்ருவும் ராஜாவும் இங்கு கல்லூரியில் தான் நண்பர்கள் ஆகியிருக்கின்றனர் என்று அஞ்சலி நினைத்திருந்தாள்.
முதல் முறை ராஜா, சம்ருவுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட அஞ்சலி, யாரென்று கேட்டிட சம்ரு பிரண்ட் என்று மட்டும் சொல்லியிருந்தது காரணமாகும்.
அஞ்சலி ஏற்கனவே விஷ்வா மூலமாக ராஜாவைத் தெரியுமென்பதால் அவனுடன் இயல்பாக பேசிட… தன்னுடைய பிரண்ட் என்பதால் அஞ்சலியும் ராஜாவுடன் நன்றாக பழகுகிறாள் என்று சம்ரு நினைத்தாள்.
ராஜாவுக்கு அஞ்சலி சம்ருவிடம் விஷ்வா தன்னுடைய ரிலேட்டிவ் என சொல்லியிருப்பாளென்ற எண்ணம்.
ஆக மொத்தத்தில் யாரும் வெளிப்படையாக எதையும் சொல்லிக்கொள்ளாது தங்களின் எண்ணத்தில் இருந்தனர்.
“ஏன் கேட்கிற?”
“நீங்க பழகுறதை பார்த்தால் இந்த டூ இயர்ஸில் ஃபிரண்ட் ஆன மாதிரி தெரியல. அதான் கேட்டேன்” என்றாள் அஞ்சலி. ஆம் கல்லூரியில் இரண்டாம் வருட முடிவில் இருந்தனர்.
“பத்து வருடத்துக்கும் மேலான நட்பும்மா. பொசுக்குன்னு ரெண்டு வருசம் சொல்ற?” என்ற ராஜா, “ரெண்டு பேரும் ஸ்கூல்மெட்” என்றான்.
அஞ்சலியிடம் ஆச்சரியம்.
“அப்போ உனக்கு விஷ்வாவை தெரியுமா சம்ரு?”
“யாருக்கிட்ட என்ன கேட்கிற?” என்று அஞ்சலி சம்ருவிடம் கேட்டதற்கு பதில் சொல்லவந்த ராஜாவை, அஞ்சலியின் கேள்வி எதற்கென்று தெரியாவிட்டாலும், சொல்லாதே என்பதைப்போல் தலையாட்டி தடுத்தாள் சம்ருதி.
“தெரியும். ஊரில் விஷ்வா பாட்டி வீடு எங்க பக்கத்து வீடு” என்றாள்.
“யாராவது சொன்னாத்தான் தெரியும் ராஜா” என்ற சம்ரு, அஞ்சலியிடம்… “நீயும் மாமா பையன் இங்கு படிக்கிறாங்க சொல்லியிருக்க, பட் அது வி.ஆர்’ன்னு சொன்னதில்லை” என்றாள்.
“ஹோ…” என்ற அஞ்சலி, “இப்போ நீ வி.ஆர் சொன்னது விஷ்வாவையா?” இந்த வி.ஆர் நீதான் வச்சியா? எனக் கேட்டாள்.
“அதுவொரு பெரிய கதை” என்ற ராஜா, சம்ரு முறைத்த முறைப்பில் கப்சிப்.
“ஒருமுறை விஷ்வா அவனை வி.ஆர் கூப்பிடுங்க சொன்னப்போ என்னவொரு மாஸ் தெரியுமா?” என்று அஞ்சலி சிலாகித்து சொல்ல, சம்ருவிடம் சன்னமான சிரிப்பு.
“சார் அவன் ஃபிரண்டை பார்க்கப்போறான்.” ராஜா பதில் சொல்லாதிருக்க விஷ்வா தான் கூறினான்.
விஷ்வா விளையாட்டாய் கூறினான். ராஜாவால் அவ்வாறு எடுத்துக்கொள்ள முடியவில்லை.
அவனுக்காகவே சம்ரு இங்கு வந்திருக்கிறாள். ராஜாவுக்கு தெரியும் அவளது வீட்டில் அவள் இளவரசி. அத்தனை அன்புக்களையும் விட்டு அவள் இங்கு வந்து இத்தனை தூரம் தனித்திருப்பதே விஷ்வாவுக்காகத்தான். அது தெரிந்தும் அவளை யாரோபோல் பார்ப்பதும், அவளைப்பற்றிய பேச்சையே தவிர்ப்பதுமாக விஷ்வா இருக்க ராஜாவுக்கு நண்பன் மீது கோபம். அந்த கோபம் இப்போது விஷ்வாவின் சீண்டலில் வார்த்தையாய் வெளிவந்தது.
அன்றைய இரவில் கடிகார கோபுரத்தின் கீழ் இருவரும் நேருக்கு நேர் சந்தித்ததோடு சரி.
பள்ளி நாட்களிலிருந்த விலகல் இப்போதும் தொடர்ந்தது.
தான் பார்க்க நினைத்தால் பார்க்கும் தூரத்தில் தன்னவள் இருக்கிறாள். அதுவே போதுமென்றது விஷ்வாவின் காதல் மனம். தன் விழி வட்டத்தில் தன்னவன். சம்ருவுக்கு இந்த பார்வை தீண்டலே போதுமானது. மனதால் இருவரும் பிணைந்திருக்க… விலகியிருக்கும் வருத்தம் இருவரிடமுமே இல்லை.
சம்ருவின் காதலில் இறங்கிவிட்டால், மொத்தமாய் சித்தம் மூழ்கிடுவோம். அதிலிருந்து மீள முடியாது. விஷ்வாவுக்கு சம்ருவுடனான மொத்த காதலும் தடையின்றி கிடைத்திட வேண்டும். அதில் அவன் மூழ்கிக்கொண்டே இருக்க வேண்டும். கரைசேர முடியாதபடி அவளின் அன்பில் புதைந்து கிடக்க வேண்டும். சம்ரு அவன் வாழ்வில் இடம்பெரும் போது அவனது வாழ்வின் மொத்தமும் அவளாக நீக்கமற நிறைந்திருக்க வேண்டும். அதற்காகவே இந்த இடைவெளி. அதில் விஷ்வா மட்டுமல்ல சம்ருவும் தெளிவாக இருக்கிறாள்.
காதலுக்கு இந்த தெளிவும் புரிதலும் போதுமானது.
அதனால் இரண்டு வருடங்களாக, அருகிலிருந்தும் தூரமிருந்தனர்.
“அதான் உனக்கு புது ஃபிரண்ட் இருக்காங்களேப்பா! அப்புறம் எதுக்கு உனக்கு ரொம்ப பழைய ஃபிரண்ட். இப்போ கிடைச்ச பிரண்ட்ஷிப் உனக்கு அத்தனை முக்கியமா இருக்கும்போது, எனக்கு என் ஃபிரண்ட் தான் முக்கியம். உன்னைவிடவே” என்று கத்திய ராஜாவை தினேஷ் கட்டுப்படுத்த முடியாது திணறினான். தினேஷின் பிடியை திமிறி விலக்கி பேசினான் ராஜா.
ராஜா சொன்னதில் விக்கித்து பார்த்திருந்தாள் சுசி.
ராஜா சொல்லுமளவுக்கு சுசி மற்றும் விஷ்வா இடையேயான நட்பு அத்தனை நெருக்கம் கொண்டிருந்தது. அந்த நட்பால் தான் விஷ்வா சம்ருவின் நினைப்பில்லாமல் இருக்கின்றானோ என்கிற ஆதங்கம் ராஜாவிடம். அதனை கொட்டியும் விட்டான்.
“இவன் யாரை சொல்றான் விஷ்வா?” சுசியின் கண்கள் கலங்கிட… ராஜா சொல்லியதையெல்லாம் பொருட்படுத்தாது சுசியை தேற்றிய விஷ்வாவின் மீது இந்நொடி தினேஷுக்கே கோபம் வந்தது.
இருவருக்குமே விஷ்வா மற்றும் சம்ருதியின் மனம் புரியவில்லை. இருவருமே அதனை வெளிக்காட்டிடவே இல்லையே. எப்படி மற்றவர்களுக்கு புரியும்.
அதனால் ராஜாவின் பேச்சு விஷ்வாவுக்கு, அவன் சம்ரு மீது கொண்ட அக்கறையாகத்தான் தெரிந்தது.
“அவ இங்கு வந்து படிக்கணும் என்ன அவசியம் வி.ஆர். அவளுக்கென்ன குடும்பம் இல்லையா? இல்ல பாசம் காட்ட யாருமில்லையா? என்னவோ சுசி சுசின்னு ரொம்பத்தான் பண்ற. இதைவிட ஆயிரம் மடங்கு அவள் இருந்தாள். இருக்காள். ஆனால் அதெல்லாம் கண்ணுக்குத் தெரியாதே! அவள் முகம் பார்க்கக்கூட அப்படி யோசிக்கிற?” ராஜாவிடம் இவ்வளவு ஆத்திரத்தை விஷ்வா பார்த்ததே இல்லை.
ராஜா, தினேஷுடன் விஷ்வா இருக்கும்போது சம்ருவை பார்க்க நேரிட்டால் சம்ருவின் பார்வை விஷ்வா மீதுதான் இருக்கும். ஆனால் விஷ்வா அவளை கண்டுகொண்டதாகவே தெரியாது.
அதனை பார்க்கும்போதெல்லாம் ராஜாவுக்கும் தினேஷுக்கும் அத்தனை வருத்தமாக இருக்கும். சம்ருதி வருத்தம் கொள்வது போலவே தெரியாது. அதனால் இருவரும் அமைதியாக இருந்திடுவர். இன்று ஏனோ ராஜாவால் அமைதியாகக் கடக்க முடியவில்லை.
மதியத்திற்கு மேல் கிரவுண்டில் ராஜாவும் சம்ருவும் தற்செயலாக சந்தித்திருக்க…
“ஏன் அஞ்சலிகிட்ட உண்மையை சொல்லல?” எனக் கேட்டிருந்தான்.
“விஷ்வா சுசியிடமே சொல்லாத போது, நான் மட்டும் அஞ்சலியிடம் எப்படி சொல்வது ராஜா. விஷ்வா இப்போ யாருக்கும் தெரிய வேண்டான்னு இருக்கான் போல” என்று சாதாரணமாகத்தான் கூறினாள்.
“உனக்கும் மத்த லவ்வர்ஸ் மாதிரி அவனோடவே இருக்கணும் ஆசையில்லையா சம்ரு?”
இந்நிலையில் விஷ்வா காதலைவிட சம்ருதியின் காதல் ராஜாவுக்கு உயர்வாகத் தெரிந்தது.
தினேஷிடம் விஷ்வா ஏன் இப்படியிருக்கான்னு மீதியிருந்த வகுப்பில் புலம்பித் தள்ளிவிட்டான்.
மாலை பார்க்கிங் வரும் வழியில் அலுவலகக் கட்டிடத்தை கடக்கும்போது, காலை சம்ரு வைத்த ரோஜாவை விஷ்வா எடுத்து தன் பைக்குள் வைப்பதை பார்த்தவனுக்கு ஆத்திரம் மட்டுமே!
‘லவ் பண்ணுவானாம். ஆனால் அந்த பொண்ணை தவிக்க வைப்பானாம்.’ முணுமுணுத்துக்கொண்டே தான் பார்க்கிங்கில் வந்து அமர்ந்தான்.
“லாஸ்ட் ஹவர் ஆளை காணோம். எங்க போயிருந்த?” என்று சுசியிடம் கேட்டவாறு, அந்த வகுப்புக்கான குறிப்பை சுசியின் நோட்டை எடுத்து எழுத ஆரம்பித்திருந்தான்.
“அவ எழுதிக்க மாட்டாளாமா?” ராஜா பல்லை கடிக்க…
“சுசியை வெறுக்க வச்சிடுவான் போலடா!” என்று ராஜாவின் காதில் கிசுகிசுத்தான் தினேஷ்.
இன்னமும் விஷ்வா சம்ருவை பற்றி சுசியிடம் சொல்லவில்லை. ஏனென்று தெரியவில்லை. முதல் வருடத்தில் என்றோ புகைப்படத்தில் பார்த்த சம்ருவின் முகம் சுசிக்கு மறந்துகூட இருக்கும்.
இவற்றின் மொத்த வெளிப்பாடு தான் ராஜா பொங்கியது. சுசியை வருத்த வேண்டுமென்பதில்லை. அதனை சுசியிடம் சொல்லவும் செய்தான்.
“உன்னை கஷ்டப்படுதனும், நீ விஷ்வா உடன் பழகுவது பிடிக்காமல் இப்படியெல்லாம் பேசல சுசி. நீ என் பேச்சை தப்பா எடுத்துக்காதே!” என்றான்.
ராஜாவின் விளக்கத்தில் ‘தனக்குத் தெரியாமல் இவர்களுக்குள் என்னவோ உள்ளது. விஷ்வாவுக்கு அந்த ஒன்றை உணர்த்திட ராஜா முயல்கிறான்’ என்பதை சுசி புரிந்துகொண்டாள்.
இந்த புரிதல் தான் எந்தவொரு உறவுக்கும் அடித்தளம்.
‘உன்னை எனக்குத் தெரியும்’ என்பதைபோல் சுசி ராஜாவை பார்த்து புன்னகைக்க…
“தேன்க்ஸ் சுசி” என்றான் ராஜா.
“என்கிட்ட என்ன மறைக்கிற விஷ்வா? ராஜா பேசுறதுல எனக்கு எந்த தப்பும் தெரியல?” என்றவள், “சம்ரு விடயமா?” என தயங்கித்தான் கேட்டாள்.
மூவருக்கும் சம்ரு நல்ல தோழியென்று சுசிக்கு தெரியும். ஆரம்பத்தில் சம்ருவை பற்றி ஏதாவது பேசும் விஷ்வா, பின் அவளைப்பற்றி பேசுவதே இல்லை. ராஜா, தினேஷ் பேசினாலும் விஷ்வா கண்டுகொண்டதில்லை. அதனால் சுசியும் சம்ருவை பற்றி எதுவும் அவனிடம் கேட்டதில்லை. அதனாலே தயக்கம் அவளிடம்.
விஷ்வாவின் அமைதியில் ராஜா மீண்டும் பேசிட முயல… தினேஷ் அவனின் கை பிடித்து வேண்டாமென்று தடுக்க, ராஜாவின் அலைப்பேசி அதிர்ந்து ஒலித்தது.
அன்று விஷ்வாவை பார்க்கவில்லை என்பதால், மாலை கல்லூரி முடிந்ததும் பார்க்கிங் வந்த சம்ரு நடந்ததை பார்த்திருந்தாள்.
இன்னும் அதிகமாக ராஜா விஷவாவை பேசிவிடுவானோ என்று தடுப்பதற்க்கே கால் செய்திருந்தாள் சம்ரு.
“அவனை நான் ஒண்ணும் சொல்ல. போதுமா. எப்படியோ போங்க” என்று எடுத்ததும் அவளிடமும் கத்திவிட்டு வைத்திருந்தான் ராஜா.