விஷ்வா எதையும் செய்ய பிடிக்காது தனதறை பால்கனி கூடை இருக்கையில் கண்மூடி அமர்ந்திருந்தான்.
இதுநாள் வரை காதலில் தன் பக்கத்திலிருந்து மட்டும் தான் விஷ்வா யோசித்திருக்கிறான். தன்னை, தன்னுடைய எண்ணங்களை, உணர்வுகளை தன்னுடைய ம்ருதி புரிந்து நடந்துகொள்கிறாள் என்கிற கர்வம் அவனிடம் மிகையாய்.
ஆனால் இன்று ராஜா பேசிய பின்னர் காதலென்கிற பெயரில் சம்ருதியை அதிகம் வருத்துகிறோமே என்கிற கண்ணோட்டத்தில் அலசினான்.
ஆரம்பம் முதல்…
“என் பெயரை சொல்லாதே!
“என்கிட்ட பேசாதே!
“தூரம் இருப்போம்.
“விலகியிருப்பது நல்லது.
“பெரியவர்களின் நம்பிக்கைக்கு உண்மையாக இருப்போம்!
“குற்றவுணர்வோடு நீ எனக்கு வேணுன்னு விருமாண்டியிடம் கேட்டிட முடியாது. இதுக்குத்தான் என் பொண்ணோடு பழகுனியான்னு கேட்டுட்டால் அவ்வளவு தான்.
“வேணான்னு மறுக்க முடியாத உயரத்துக்கு போவோம்.”
இப்படி பல அனைத்தும் தான் மட்டுமே யோசித்து பேசியிருக்கிறோம். எங்கும் அவள் மறுக்கவே செய்யவில்லை.
‘நீ சொல்றியா நான் கேட்கிறேன்.’ இதுதான் சம்ருவின் பிரதிபலிப்பு. இன்று வரை அவனுக்கு ஏற்றபடி மட்டும் தான் நடந்துகொள்கிறாள்.
அவனுக்காக அவனிடம் வந்தாலும், அவன் முன் இதுவரை அவளாக சென்றதேயில்லை. அன்றைய இரவில் கூட விஷ்வா ஆழைத்திருக்காவிட்டால் நிச்சயம் அவன் முன்பு போயிருக்கமாட்டாள்.
அன்று ஒரு நாள் தன்னுடைய மனதை ஆசையை சிறு புள்ளியாய் விஷ்வா வெளிக்காட்டியதோடு சரி. இந்நொடி வரை அவன் சம்ருவின் முன் சென்றதில்லை. அவள் போல் அவன் மறைந்து நின்றாவது பார்க்கிறானா என்பதும் கேள்வியே!
அனைத்தையும் கோர்வையாய் மனதில் கொண்டு வந்தவன்…
‘சொல்லாத என் காதலுக்காகவே இப்படின்னா. நான் சொல்லி நீ கேட்டுவிட்டால் எனக்காக இன்னும் என்னவெல்லாம் செய்வாய் ம்ருதி?’ அவளின் காதலில் நெக்குறுகி மூச்சுமுட்ட தவித்தான்.
எதிர்காலத்தில் அவன் எதிர்பாராததையே செய்தவள் அல்லவா அவள்.
அலைப்பேசி சத்தமிட விழி திறந்தவன் அப்போதுதான் இருட்டி விட்டதையே உணர்ந்து நேரத்தை பார்த்தான்.
கண்களை தேய்த்துக் கொண்டவனாக அலைபேசியை எடுத்து பார்த்தான். சம்ருதி தான் குறுந்தகவல் அனுப்பியிருந்தாள்.
“ஆரம்பத்துல இருந்து எல்லாம் யோசித்து குழம்பிக்கிட்டு இருக்கீங்களா? நீங்க சோர்ந்துபோற அளவுக்கு ஒண்ணுமாகல. நம்மை பற்றி ராஜா, தினேஷுக்கு தெரியாதே! ஆனால் நமக்கு தெரியும் தானே! எப்பவும் போலவே இருங்க. எனக்காகன்னு யோசித்து எதுவும் செய்ய வேண்டாம். எனக்கு இதுவே போதும்.”
படித்தவனின் மனம் மேலும் அவளின் காதலின் எடையால் கனத்து நின்றது.
‘எப்பவுமே என்னை மட்டுமே யோசிப்பியா ம்ருதிம்மா?’ மனதில் தான் கேட்டுக்கொண்டான். ஆனால் அவள் பதில் அனுப்பியிருந்தாள்.
“எனக்கு பிடிச்சிருக்கு.”
…..
“உங்களைப்போல இந்த மாதிரி(காதலிக்கும்) நேரத்தில் பியூச்சர் பற்றி யாரும் சிந்திக்கிறத்து இல்லை. எல்லாம் அவசரம் அவசரமா பன்றாங்க. அது அதிகம் தப்பா தான் முடியுது. அது மாதிரி தவறா எதுவும் நடந்திடக் கூடாதுன்னு தான் நீங்க இப்படியிருக்கீங்க. அதை நான் புரிஞ்சிக்கிட்டேன். எல்லாருக்கும் எக்ஸ்பிலைன் பண்ணிட்டு இருக்க முடியாது.” அதற்கு மேல் என்ன சொல்வதென்றும் சம்ருவுக்கு தெரியவில்லை.
விஷ்வா தட்டச்சு செய்வது அவளின் திரையில் காட்ட…
“எதுவும் விளக்கம் கொடுக்கிறேன்னு முயற்சிக்காதீங்க. உங்களை எனக்கு தெரியும் என்கிற நினைப்பு இல்லாமல் போயிடும்.”
வேகமாக அனுப்பியிருந்தாள்.
தட்டச்சு செய்த மொத்தத்தையும் அழித்திருந்தான்.
“வருத்தப்படுற அளவுக்கு ஒண்ணுமே இல்லை. ஹேவ் அ டைட் ஸ்லீப்” என்று அனுப்பியவள் ஆன்லைனிலிருந்து வெளியேறியிருந்தாள்.
“நீ சீக்கிரம் என்கிட்ட வந்திடணும் ம்ருதி” என்றவனுக்கு தெரிந்திருக்கவில்லை… சேரும் பாதை அத்தனை எளிதல்ல என்று.
அடுத்தடுத்த நாட்கள் எவ்வித சலனமுமின்றி செல்ல…
‘தான் அத்தனை பேசியும் விஷ்வாவிடம் சின்ன மாற்றம் கூட இல்லை’ என்பதில் ராஜாவுக்கு அத்தனை கடுப்பு.
ராஜா விஷ்வாவுடன் வந்தாலும் சென்றாலும், அவனிடம் பேசுவதில்லை.
சுசியும் தினேஷும் தான் இருவருக்கும் நடுவில் திண்டாடினர்.
“என்னதாண்டா உனக்கு பிரச்சனை?”
“பக்கத்துல வச்சிகிட்டே பேசாமலிருப்பது உன் ஃபிரண்டுக்கு புதுசில்லையே! பழக்கம் தான்.”
சுசி கேட்டதற்கு விஷ்வாவை முறைத்துக்கொண்டு கடுகடுவென பதில் வழங்கினான் ராஜா.
சுசியும், தினேஷும் தலையில் கை வைத்து அமர்ந்து கொண்டனர்.
ஆழ்ந்த அமைதி நிலவியது.
அதனை கலைக்க தினேஷ் வாய் திறந்தான்.
“என்னடா பிரேக்கில் எங்களோடு வந்து உட்கார்ந்திருக்க?”
ராஜா முறைத்த முறைப்பில்…
“ராங் க்வெஸ்டின்!” என்று சுசி தினேஷிடம் முணுமுணுக்க…
அன்று ராஜா தன்னிடம் கத்தியதிலிருந்து, அவன் சம்ருவை காண செல்வதில்லை என்பதை அப்போது தான் கவனித்தான் விஷ்வா.
“அவளோட என்ன பிரச்சனை?”
கேட்ட விஷ்வாவை அழுத்தமாக பார்த்த ராஜா,
“நீ மட்டும் எங்ககிட்ட எல்லாம் சொல்றியா?” என்றான்.
“ஹாய் விஷ்வா! இங்க தான் இருக்கியா? மித்து அத்தான் உன்னை பார்க்க வந்திருக்கிறார். உனக்கு கால் பண்ணாங்க நீ அட்டெண்ட் பண்ணலன்னு எனக்கு பண்ணி சொன்னாங்க. நான் கேண்டினில் இருக்கன்னு சொன்னதும் அங்க வந்துட்டாங்க. உனக்கு வெயிட் பன்றாங்க” என்றாள் அஞ்சலி.
செல்லும்போது தான் கவனித்தான் மித்ரனின் கார் அங்கு நிற்பதை. அதனை கடந்து தான் சென்றான் விஷ்வா.
‘நான் பார்க்கிங்கில் இருப்பது தெரிந்திருந்தால் இப்படியே வந்திருப்பார்’ என்றவனாக நடந்தான்.
“என்னாச்சுடா உனக்கு. கிளாஸ் பக்கம் ஆளே காணோம்?” ராஜாவின் தோளில் இயல்பாய் கை போட்டவளாக அஞ்சலி வினவ, இருவரையும் ஆச்சரியமாய் பார்த்தனர் சுசி மற்றும் தினேஷ்.
அவர்களின் பார்வை மாற்றத்தை உள்வாங்கிய ராஜா…
“ஏய்… வீணா கற்பனை பண்ணாதீங்க. இவளுக்கு அல்ரெடி ஆள் இருக்கு” என்று அஞ்சலியை சுட்டிக்காட்டி அலறினான்.
அஞ்சலி சத்தமாக சிரித்து…
“ராஜா என்னோட பிரண்ட் மட்டும் தான்” என்றாள்.
“ஓகே பை. நான் கிளம்புறேன்” என்று மூவருக்கும் பொதுவாக சொல்லிய அஞ்சலி,
“அவளை கேன்டினில் தனியா விட்டுட்டு வந்திருக்கேன்” என்று ராஜாவிடம் சொல்லியவளாக நகர,
“நானும் வறேன்” என்று அவளுடன் நடந்தான் ராஜா.
அஞ்சலி சொல்லிய அவள், சம்ருவென்று தினேஷுக்கு தெரியும். ஆனால் சுசிக்கு அந்த அவள் அஞ்சலியின் தோழியாக இருக்கக்கூடும் என்கிற கணிப்பு.
“விஷ்வா யாரையும் லவ் பன்றானா?”
கேட்ட சுசியை ஆச்சரியமாக ஏறிட்டான் தினேஷ்.
விஷ்வாவுக்கு சுசி அதீத நெருக்கம் நட்பால். அவளுக்குத் தெரியவில்லை என்பது தான் அவனின் ஆச்சர்யம்.
“ஏன் உனக்குத் தெரியாதா?”
“க்ளோஸ் ஃபிரண்டா இருந்தால் எல்லாம் தெரிஞ்சிருக்கணும் அவசியமில்லை தினேஷ். உங்களுக்கு சம்ரு முக்கியம் தெரியும். ஆனால் எத்தனை முக்கியமென்று தெரியாது தானே. நான் உங்க பிரண்ட் அப்படின்னு சம்ரு பற்றி எல்லாமே என்கிட்ட சொல்லியிருக்கீங்களா என்ன? இல்லை தானே? அதுமாதிரி தான் இதுவும். விஷ்வாவாக சொல்லாமல் எனக்கு எப்படித் தெரியும்? அவனாக சொல்லாமல் நானெப்படி கேட்பது?”
சுசி விளக்கம் கொடுக்க தினேஷ் இரு கரம் குவித்து தலைக்கு மேல் உயர்த்தி போதுமென்றான்.
“விஷ்வாகிட்டவே கேட்டுக்கோ சுசி. சம்ரு பற்றி எங்களை எதுவும் பேசக்கூடாது சொல்லியிருக்கான்” என்ற தினேஷ், “சம்ரு மட்டுமல்ல நானும் ராஜாவும் கூட விஷ்வா சொல்வதை மீற மாட்டோம்” என்றான்.
“உங்க நட்புக்கு கோவிலே கட்டலாம் போல. ஓவரா நெஞ்சை டச் பண்ணாத… இவனுங்க வர மாதிரி தெரியல. வா போவோம்!” சுசி எழுந்து செல்ல, தினேஷ் தனது வகுப்பு நோக்கிச் சென்றான்.
விஷ்வா கேண்டினுள் நுழையும்போது, மித்ரன் சம்ருவின் தலையில் தன் உள்ளங்கை வைத்து அழுத்தம் கொடுத்தவனாக நின்றிருந்தான்.
“நான் கிளம்புறேன் மித்துண்ணா. கிளாஸுக்கு டைம் ஆச்சு.”
விஷ்வா வந்ததால் தான் சம்ரு கிளம்புகிறாள் என்று மித்ரனுக்கு புரிந்தது. ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. ஏன் இவ்வளவு நேரம் அவளின் படிப்பு குடும்பம் பற்றி மட்டுமே கேட்டறிந்தான். விஷ்வாவை பற்றி ஒரு வார்த்தை சம்ருவிடம் மித்ரன் பேசவில்லை. அவர்களே தெளிவாக இருக்கும்போது நாம் எதுவும் குழப்ப வேண்டாமென்ற எண்ணம்.
விஷ்வா உள்ளே வர, அவனை கடந்து சென்ற சம்ருவின் பார்வை மட்டுமல்ல விஷ்வாவின் பார்வை கூட நேராக மட்டுமே இருந்தது.
ஒரு ரகசிய பார்வை மாற்றம் கூட இருவருக்கும் இல்லை.
நிச்சயம் விவரம் தெரிந்த அவர்களது நண்பர்கள் யாராவது பார்த்திருந்தால் கூட இருவரும் காதலிக்கிறார்கள் என்று சொல்லமாட்டார்கள்.
மூன்றாம் மனிதரை கடக்கும் பாவனை தான் இருவரிடமும்.
விஷ்வா மித்ரனின் முன் சென்று அமர…
இரண்டு வருடங்களுக்கு முன்பு தன் முகத்திற்கு நேராக, ‘ம்ருதியை காதலிக்கிறேன் என்று சொல்லியவன் இவன்தானா’ என நினைத்த மித்ரன் தனக்குள் சிரித்துக்கொண்டான்.
“என்னண்ணா?”
“நத்திங்” என்ற மித்ரன், “உன் சைன் வேணும்” என்று விஷ்வா முன் சில காகிதங்களை நீட்டினான்.
மித்ரனிடம் ஏன் எதற்கு எதுவும் கேட்கவில்லை, கையெழுத்து போடத் துவங்கினான்.
“பெரிய அமௌண்ட் விஷ்வா. என் பெயரில் மட்டும் இருந்தால் சிக்கல் வரும். அதான் ஸ்பிலிட் பண்ணலான்னு” என்று மித்ரனாக விளக்கம் கொடுக்க…
“மித்துண்ணா…” என்ற விஷ்வா, “போட்டுட்டேன்” என்று காகிதங்களை மித்ரனிடம் நகர்த்தினான்.
“ஓகே விஷ்வா… வீட்ல பார்க்கலாம்” என்று மித்ரன் விடைபெற்றான்.
சற்று நேரத்திற்கு முன்பு விஷ்வா மித்ரனை காண வருகிறான் என்பதை கண்டுவிட்டு பதற்றம் கொண்டு அங்கிருந்து சென்ற சம்ரு தன் புத்தகத்தை அங்கேயே விட்டு சென்றிருந்ததை டேபிளிலில் தான் வைத்த புத்தகங்களோடு சேர்த்து எடுத்துச் சென்றான் விஷ்வா.
அச்சமயம் தான் சுசியும் தினேஷிடம் சொல்லிவிட்டு பார்க்கிங்கிலிருந்து வந்து கொண்டிருந்தாள்.
விஷ்வா அனைத்திலும் சரியாக கையெழுத்து போட்டுவிட்டானா என பார்த்துக்கொண்டே வந்த மித்ரன் எதிரே பையை குடைந்தபடி வந்த சுசியை காணாது இடித்துவிட்டான்.
மித்ரனின் இதயம் சுசியின் முகத்தில் மோதியிருந்தது.
உடற்பயிற்சி செய்வதால் முறுக்கேறியிருந்த மித்ரனின் சாதாரண மோதலுக்கே கீழே விழுந்திருந்தாள் சுசி.
“யோவ் பார்த்து வர தெரியாதா?”
இரு கையையும் தட்டியபடி மெல்ல எழுந்து நின்ற சுசி மித்ரனை பாராது கோபமாக பேசிவிட்டு அவனின் முகம் கண்டதும் விழி விரித்து உறை நிலையில் நின்றாள்.
“சாரி… சாரி…” என்றவன் தரையில் கிடந்த அவளின் பையை எடுத்து கொடுக்க… அதனை கூட உணராது கண்களை அவனில் பதித்தவளாக சிலையாக நின்றிருந்தாள்.
“ஹலோ… மிஸ்…” அவளின் முன் மித்ரன் சொடக்கிட நிகழ் மீண்டவள் அசடு வழிந்தாள்.
“நானும் சாரி.” நெற்றியில் தேய்த்தபடி சொல்லியவள், அவன் நீட்டிய தன் பையை வாங்கிக்கொள்ள அவனோ சிறு புன்னகையோடு அவளை தாண்டிச் சென்றான்.
செல்லும் அவனையே சுசி பார்த்து நின்றவள்…
மித்ரனின் வேக நடையும், ஸ்டைலாக காரில் ஏறி அமர்ந்ததும், முன்னுச்சி கேசத்தை அவன் விரல்கள் கோதியதையும் என்று அவனின் சிறு சிறு அசைவையும் உள்வாங்கிக்கொண்டிருந்தாள்.
“ஹேய் யாரை பார்த்து நின்னுட்டு இருக்க?” அவளின் முதுகில் தட்டியவளாக விஷ்வா அவள் பார்வை செல்லும் திக்கு வைத்து வினவினான்.