விஷ்வா ராஜாவின் தங்கை ம்ருதி என்று அறிமுகம் செய்ய… சுசிக்கு வேறு சந்தேகம் வரவில்லை.
விஷ்வா எப்போதுமே சம்ரு பற்றி வாய் திறப்பதில்லை. ராஜாவும், தினேஷும் சம்ரு என்று சொல்வதால் இப்போது விஷ்வா சொல்லிய ம்ருதி வேறொருவளாகத்தான் சுசிக்கு அறியப்பட்டாள்.
“இவ்ளோ அழகான தங்கச்சி இருக்குன்னு இந்த தடியன் சொல்லவே இல்லையே விஷ்வா!” என்ற சுசி,
மூவருக்கும் முன்னால் சென்று ராஜா மற்றும் தினேஷுக்கு நடுவில் அமர்ந்திருந்த சம்ருவிடம்…
“ஹாய்” என்று கை நீட்டியிருந்தாள்.
சுசி யாரென்று தெரிந்தும் அவள் நீட்டிய கையை பற்றாது, அவளுக்கு பின் வந்த விஷ்வாவை ஏறிட்டாள் சம்ருதி.
சம்ரு விஷ்வாவை பார்த்ததையும், அவன் கண்களால் பேசியதையும் தினேஷ் ராஜாவுக்கு சுட்டிக்காட்டிட,
‘என்னடா நடந்துச்சு’ என்று உள்ளுக்குள் கூவினான் ராஜா.
“உன் தங்கச்சியும் இங்க தான் படிக்கிறான்னு சொல்லவேயில்லையே ராஜா?” சுசி கேட்டிட, மற்ற மூவரும் விலுக்கென விஷ்வாவை நோக்கினர்.
விஷ்வா தங்கச்சியென்று சொல்வான்… சுசி இப்படியெல்லாம் கேள்வி கேட்பாளென்று ராஜா என்ன கனவா கண்டான்.
“அப்படியெல்லாம் இல்லை சுசி… சம்” என்ற ராஜாவின் தோளில் தட்டிய விஷ்வா சம்ரு என்று சொல்லவிடாது,
“ம்ருதிக்கு கிளாஸ் இல்லையாடா” என்று அந்த ம்ருதியில் அழுத்தம் கொடுத்து கேட்டான்.
“புரிஞ்சிதுடா!” என்ற ராஜா,
“என் தங்கச்சி ம்ருதியை இன்ட்ரோ கொடுக்க சான்ஸ் கிடைக்கலையே சுசி” என்றதோடு, “சுசி இவள் என் கசின் தங்கச்சி ம்ருதி. ம்ருதி இவள் எங்க பிரண்ட் சுசி” என்று அறிமுகம் செய்து வைத்தான்.
விஷ்வா கண் மூடி திறக்க…
“ஹலோ” என்று புன்னகையோடு சுசியின் கரம் பற்றினாள்.
ராஜாவின் பாவனையை கண்டு தினேஷ் சிரிப்பை அடக்க பெரும் பாடுபட்டான்.
“எனக்கு என் வயசுலயே திடீர்னு ஒரு தங்கச்சி வந்து குதிக்குமுன்னு ஜோசியமடா கண்டேன்… என் நிலை உனக்கு சிரிப்பா இருக்கா?” என்று ராஜா சம்ரு மற்றும் தினேஷிடம் புலம்பலாய் கேட்க,
ராஜாவை அவனது டீம் நபர் அழைக்க…
“மேட்ச் முடிச்சிட்டு வந்து வச்சிக்கிறேன் உன்னை” என்றவனாக மைதானத்திற்குள் இறங்கினான்.
“ஆல் தி பெஸ்ட் ராஜா!” நால்வரும் ஒன்றாகக் கூறியிருந்தனர்.
ராஜா அமர்ந்திருந்த இடத்தில் சம்ருவின் அருகில் விஷ்வா இயல்பாய் அமர்ந்திட, தினேஷுக்கு அருகில் சுசி அமர்ந்திருந்தாள்.
விஷ்வா தனக்கு அருகில் அமர்வான் என்று சம்ரு எதிர்பார்க்கவில்லை. மேடைகள் அனைத்தும் நிரம்பியிருக்க, இருவருக்குமிடையில் இடைவெளியே இல்லை.
அவனது உரசலில் அவளிடம் இதம் சேர்த்த அவஸ்தை.
விஷ்வா சாதாரணமாக மைதானத்தின் நடுவில் பார்வை பதித்திருக்க, சம்ரு அவனை விழிகள் உயர்த்தி பார்த்தாள்.
அவளின் பார்வை உணர்ந்தவன் என்னவென்று புருவங்கள் ஏற்றி இறக்கி வினவ…
தலையை இருபக்கமும் அசைத்தவள் தினேஷின் பக்கம் திரும்பிக்கொண்டாள்.
‘பக்கத்துல உட்கார்ந்ததுக்கே இப்படி திணறுறாள். இன்னும் இருக்கே… டேய் விஷ்வா பியூச்சரில் மொத்தமா வச்சு செய்வா(ள்) போலிருக்கே’ என்று நினைத்தவனிடம், அவளருகில் அமர்ந்திருப்பதே அத்தனை நிம்மதியாக இருந்தது.
இந்த நிம்மதிக்கு ஆயுள் குறைவென்று தெரிந்திருக்கவில்லை.
மேட்ச் ஆரம்பமாகியது.
தினேஷ் தன்னுடைய ஜூஸினை சுசியுடன் பகிர்ந்துகொள்ள…
சம்ரு விஷ்வாவுக்கு கொடுக்கலாமா வேண்டாமா என்று தனக்குள் பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்தாள்.
அவள் தான் ஏற்கனவே கொஞ்சம் குடித்திருந்தாளே! இதையெப்படி கொடுப்பது என்கிற தயக்கம்.
பள்ளி நாட்களில் ஒரே குச்சி ஐஸை இருவரும் ஒன்றாக சுவைத்திருக்கிறார்கள். இன்று ஏனோ ஒருவித தடை.
“நடத்துடா நடத்து…” தினேஷ் சம்ருவின் அதிர்வில் தனக்குள் புன்னகைத்துக் கொண்டான்.
சுசி ஆட்டத்தில் கவனமாக இருந்ததால் அருகில் நடப்பதை தெரிந்துகொள்ளவில்லை.
விஷ்வாவுக்கு மேட்ச் பார்க்க சுத்தமாக மூடில்லை. சுசியின் வற்புறுத்தலால் வந்தவன், சம்ருவுடன் சிறிது நேரமிருக்க வாய்ப்பு கிடைக்கவும் அங்கேயே தேங்கிவிட்டான்.
எப்படியும் ராஜா பேட்டிங்கில் பின்னிவிடுவான் என்று அவனுக்குத் தெரியும். அதனால் தன்னவளை மட்டுமே பார்வையால் அகம் நிரப்பவியவனாக அமர்ந்திருந்தான்.
ராஜா பவுலிங்கில் ஒரு விக்கெட் எடுக்க, தினேஷுடன் எழுந்து நின்று கை தட்டிய சம்ரு தனது மடியிலிருந்த பையை தனக்கும் விஷ்வாவுக்கும் இடையில் வைத்திருந்தாள்.
மீண்டும் அமரும் போது பையை சம்ரு எடுப்பதற்குள் விஷ்வா எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டான்.
அமர்ந்ததும் விஷ்வாவையே பார்த்திருந்தவள், தினேஷ் கை தட்டிடவும் விளையாட்டில் கண் பதித்தாள்.
ஆலிவ் க்ரீனில் லெதர் பேக். முதலில் சிறிய அறை அதன் ஜிப்பில் சிறு ரோஜா தொங்கிக்கொண்டிருந்தது. அதனை விரல்களால் மெல்ல தடவிய விஷ்வா கழட்டி தன் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டான்.
அந்த அறையை திறந்து பார்க்க, அதில் அவளது கல்லூரி அடையாள அட்டையும் அலைபேசியும் இருந்தது.
அடையாள அட்டையை எடுத்து பார்த்தான். மூன்று வருடத்திற்கு முந்தைய படம். காந்தமாய் அவனை ஈர்த்தது.
‘உரிமையாய் நேரில் பார்க்க சந்தர்ப்பமிருந்தும் போட்டோவை சைட் அடிச்சிட்டு இருக்கான்.’ அவனின் மனமே அவனை கொட்டியது.
சம்ருதி என்கிற அவளின் பெயருக்கு பின்னால் வி இருக்க அதனருகில் ஆர் எழுத்தை மார்க்கரால் எழுதியிருந்தாள்.
‘சம்ருதி.வி.ஆர்.’
அவளின் காதல் அவனை திணற வைத்தது. சிறு விடயம் காதலில் அதீத இன்பத்தை கொடுக்கும். உணர்பவர்கள் அறிந்தது.
அட்டையை உருவிட பின்னால் விஷ்வாவின் சிறுவயது புகைப்படம். ஒன்பதாவது படிக்கும்போது எடுத்தது. அத்தனை பத்திரமாக வைத்திருந்தாள்.
‘இத்தனை காதல் என்னால் சமாளிக்க முடியாது ம்ருதிம்மா.’ அவளை பார்த்துக்கொண்டே மனதில் நினைத்தவன் மீண்டும் அடையாள அட்டையை பார்த்து, ‘சம்ருதி.வி.ஆர். நல்லாயிருக்கு’ என்று சொல்லிக்கொண்டான்.
‘அஞ்சலி வி.ஆர் அர்த்தம் எதுவும் கேட்டதில்லையா? பார்த்திருக்கமாட்டாள். பார்த்திருந்தாள் என்னிடமே நேரடியாகக் கேட்டிருப்பாள்.’ தனக்குத்தானே கேள்வி கேட்டு பதிலும் சொல்லிக்கொண்டான்.
ஆம் அன்று செண்பகம் பாட்டி வீட்டின் பக்கத்துவீடு தான் சம்ரு என்ற தெரிந்ததும், விஷ்வாவிடம் அஞ்சலி நேரடியாகவே கேட்டிருந்தாள்.
விஷ்வா தெரியும் என்றதோடு நிறுத்திக்கொண்டான்.
சம்ருவும் விஷ்வா பற்றி அதிகம் சொல்லவில்லை என்பதால், அவர்களுக்குள் தெரியுமென்பதை தவிர வேறெதுவும் இல்லையென்று எண்ணிக்கொண்டாள் அஞ்சலி.
அடுத்து அவளது அலைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.
அதில் அதிகம் எதுவுமில்லை. திரையில் அவனது படம் வைத்தால் அஞ்சலி ஏதும் கேட்பாளென்று ரோஜாக்களுக்கு நடுவே மின்னும் வி.ஆர் எழுத்தை வைத்திருந்தாள்.
‘இந்த வி.ஆர் லெட்டர்ஸ் மேல எனக்கே பொறாமை வருதே’ என நினைத்தவன் அந்த அலைப்பேசியாலேயே நெற்றியில் தட்டிக்கொண்டவனாக புன்னகைத்தான்.
எதிரணி பேட்டிங் முடித்திருக்க பிரேக் விட்டனர்.
“நான் ராஜாக்கு ஃபிரெஷ் ட்ரின்க்ஸ் ஏதும் வாங்கிட்டு வறேன்” என்று எழுந்த தினேஷ், “உங்களுக்கும் வேண்டுமா?” என மற்ற மூவரிடமும் கேட்க…
ஆளுக்கு ஒன்றை கூறினர்.
“என்னால் மொத்தமா எடுத்துட்டு வரமுடியாதே! நீ வா விஷ்வா” என்று தினேஷ் விஷ்வாவை உடன் அழைக்க,
“நான் வரலடா” என்று விஷ்வா உடனடியா மறுத்தான்.
“வா… விஷ்வா. ராஜா வந்ததும் கேட்பான்.”
விஷ்வா அசையாதிருக்க…
“நான் வரேன் தினேஷ்” என்று சம்ரு எழ,
விஷ்வா அவளை முறைத்தான்.
தினேஷ் புரிந்துகொண்டான். விஷ்வா சம்ருவுடன் இருக்க விருப்பப்படுகிறான் என்று.
“யாரும் வரவேண்டாம். நான் போறேன்” என்று தினேஷ் நகர, சுசி அவனுடன் சென்றாள்.
பிரேக் என்பதால் மாணவர்கள் எழுந்து சென்றிருக்க… அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிலர் மட்டுமே இருந்தனர்.
“இன்னைக்கு என்ன பேப்பர் ரோஸ்?”
“ஹான்…” தன்னிடம் தான் பேசினானா என்று அவனை பார்த்தாள். அவனின் பார்வையோ நேராக இருந்தது.
கிளாக் டவர் அருகில் அந்த இரவில் அவளிடம் அவன் பேசியது. அதன் பிறகு அவள் பார்க்க அவனிடம் சிறு பார்வைகூட கிடையாது. இரண்டாண்டுகளுக்கு பின்னர் இன்று தான் பேசுகிறான்.
பதில் சொல்லவா வேண்டாமா என்று அவளுக்குத் தெரியவில்லை.
பேசிக்கொள்ள வேண்டாமென்றவன், பேசலாமென்று சொல்லவில்லையே! அந்த தயக்கம் அவளிடம்.
விஷ்வாவின் கையிலிருந்த தன்னுடைய அலைப்பேசியை பார்த்தாள்.
அர்த்தம் விளங்கியவன் தன்னுடைய சட்டை பையில் வைத்துக்கொண்டான்.
விஷ்வாவின் மடியில் அவனது அலைப்பேசி இருக்க… எடுத்தவள்,
அவனது புலனம் திறந்து தனது பெயரைத் தேடிட சம்ருதி என்கிற பெயர்மட்டுமல்ல ம்ருதி என்பதுமில்லை.
‘என் நெம்பர் கூட சேவ்’வில் இல்லையா?’ மலுக்கென கண்கள் குளம் கட்டி நின்றன.
‘என் விடயத்தில் இவ்வளவு சென்சிட்டிவ்வா நீ!’ நினைத்தவன்,
“மை ரோஸ்” என்றான்.
“ஹான்…”
“அப்படித்தான் சேவ் பண்ணியிருக்கேன்.”
அவளின் முகம் சடுதியில் சீர்பெற்று ஒளிர்ந்தது.
“அஞ்சலி வரல. அதனால் தான் பேப்பர் ரோஸ்” என்று அவனது அலைபேசியிலிருந்து தன்னுடைய அலைப்பேசிக்கு தகவல் அனுப்பினாள்.
அவளது அலைப்பேசியை திறந்து பார்த்தவன், அவளது பதிலை பார்த்துவிட்டு வெளியில் வர, வருணின் தகவல் கண்ணில் பட்டது. அவளுக்கும் அதேபோல்.
இருவரும் ஒன்றாக தத்தம் கையிலிருந்த மொபைலை மற்றவரிடம் தூக்கிக்காட்டினர்.
இருவருக்கும் ஒரே மாதிரி வருணிடமிருந்து தகவல் வந்திருக்க
என்னவோ ஏதோவென்று பயந்து விஷ்வாவிடமிருந்து தன்னுடைய அலைப்பேசியை வாங்கியவள் வருணுக்கு அழைத்திட…
இவளின் அழைப்பிற்காகவே காத்திருந்திருப்பான் போல. முதல் ரிங்கிலேயே எடுத்திருந்தான்.
“என்னாச்சு மாமா? அப்பா… அப்பா நல்லாயிருக்கங்களா? எனக்கும் வி.ஆர்’க்கும் ஒரே மாதிரி கால் பண்ண சொல்லி மெசேஜ் பண்ணியிருக்கீங்க?” என்று படபடத்தாள்.
கன்னத்தில் கை வைத்து, அவள் பக்கமாக திரும்பி… அவள் வி.ஆர் சொல்லிய ஒலியை தனக்குள் உள்வாங்கியவனாக அவளையே ரசித்திருந்தான்.
அவசரமென்றால் வருண் தகவல் எல்லாம் அனுப்பியிருக்கமாட்டான். நேரடியாக கால் செய்திருப்பான். அதனால் சம்ரு போல் விஷ்வாவிடம் பயமோ பதட்டமோ இல்லை. சாதாரணமாக இருந்தான்.
சம்ருவின் படபடப்பையெல்லாம் அவள் சொல்லிய வி.ஆர் என்பதில் வருணிடம் பின் சென்றிருந்தது.
“எதுக்கு இப்போ கத்துற?” விஷ்வா கேட்ட பின்னரே அவனை உணர்ந்தாள்.
“போச்சு… போச்சு…” என்று சத்தமில்லாமல் கண்களை சுருக்கி முணுமுணுத்தவள்,
“காலேஜில் கிரிக்கெட் மேட்ச். கிரவுண்டில் அவங்க என் பக்கத்தில் தான் இருக்காங்க” என்றாள். அலைப்பேசியை தன் வாயருகே வைத்தவளாக மெல்லொலியில். இருப்பினும் விஷ்வாவுக்கு கேட்கத்தான் செய்தது.
‘ரொம்ப பன்றடி நீ!’ செல்லமாய் நிந்தித்தான்.
“ஹோ” என்ற வருண், “நீங்க மட்டும் இருந்தால் ஸ்பீக்கர் மோட் ஆன் பண்ணு” என்றான்.
அவர்களுக்கு அருகில் யாருமில்லாமல் இருக்க ஸ்பீக்கரில் போட்டாள்.
“ஹாய்டா…”
“வருண்ணா…” என்ற விஷ்வா, “வாய்ஸ் ரொம்ப சந்தோஷமா தெரியுதே! என்ன மேட்டர்?” எனக்கேட்டான்.
அப்போதுதான் சம்ருவும் வருணிடம் தெரிந்த மகிழ்வை கிரகித்தாள்.
“நம்ம வீட்டுக்கு குட்டி பேபி வரப்போகுது” என்று வருண் சொல்லியதும்,
“வாவ்…” என்று உற்சாகக் குரல் எழுப்பியவர்கள், ஒன்றாகவே “காங்கிராட்ஸ் மாமா… காங்கிராட்ஸ் வருண்ணா” என்று ஆர்பரித்தனர்.
இருவருக்கும் தேன்க்ஸ் சொல்லி வருண் அழைப்பை வைத்தான்.
அப்போது சரியாக அங்கு வந்த ராஜா…
‘ரெண்டும் ஒண்ணு சேர்ந்துடுச்சா?’ என்று நினைக்கும்போதே, ‘அதுங்க எப்போ பிரிஞ்சுதுங்க?’ என்றும் நினைத்தான்.
“என்ன ரெண்டு பேர் முகத்திலும் அப்படியொரு சந்தோஷம்?”
“நான் சித்தப்பா ஆகிட்டேன்.”
“நான் சித்தி ஆகிட்டேன்.”
இருவரின் பதிலிலும் சற்று யோசித்து தெளிந்த ராஜா,
“யுகிக்கா பிரக்னெண்ட்டா இருக்காங்களா?” எனக் கேட்டான்.
மூவரையும் பார்த்துக்கொண்டே வந்த சுசி… “எனக்கு அப்புறம் விஷ்வா ஒரு பொண்ணுகிட்ட சிரிச்ச முகமாக பேசி இப்போதான் பார்க்கிறேன்” என்றாள் உடன் வரும் தினேஷிடம்.
தினேஷ் என்ன சொல்வதென்று தெரியாது திருத்திருத்தான்.
“குடிச்சிட்டு சீக்கிரம் போடா. எதிர் டீம் கேப்டன் உன்னையே முறைச்சிட்டு இருக்கான்.” சொல்லிய தினேஷ் ராஜாவின் அருகில் நின்று கொண்டான்.
சம்ருவிடம் அவள் வாங்கிவர சொல்லியதை கொடுத்த சுசி…
“உனக்கு விஷ்வா நல்ல பழக்கமா?” என்று கேட்டிட, விஷ்வாவுக்கு புரை ஏறியது.
“பார்த்து… பார்த்து…” என்று பதறிய சம்ரு மற்றவர்களை மறந்தவளாக விஷ்வாவின் தலையில் மெல்ல தட்டிக்கொடுத்து, அவனின் நெஞ்சை நீவி விட்டாள்.
“உன்னோடு தானே நானும் இருக்கேன். அவங்கிட்டவே கேளு” என்று சாதுர்யமாக நழுவினான் தினேஷ்.
சுசி ராஜாவை ஏறிட,
“மேட்சுக்கு டைம் ஆச்சு” என்று ஓடிவிட்டான்.
விஷ்வாவுக்கு அந்த பக்கம் வந்து அமர்ந்த சுசி தினேஷிடம் கேட்டதையே அவனிடமும் கேட்க…
“ஹேய்… இது ஜஸ்ட் நார்மல். என் பக்கத்தில் நீயிருந்திருந்தால் தட்டி விட்டிருக்கமாட்டியா?” எனக் கேட்டான்.
அவன் சொல்வது சரியாக இருக்க…
“என்னவோ சொல்ற” என்றவள் அதற்குமேல் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை.
சம்ருவின் பக்கமிருந்த தினேஷ்…
“பய பேசிட்டானா? எல்லாம் ஓகேவா இப்போ?” எனக் கேட்டான். அவன் மெதுவாய் பேசியபோதும் விஷ்வாவுக்கு கேட்கத்தான் செய்தது.
“ம்க்கும்… போடா” என்ற சம்ருவின் பதிலிலேயே தினேஷுக்கு ஆயசமாக வந்தது.
“உண்மையிலே உன் அளவு பொறுமை விஷ்வாவுக்கு கூட இருக்காது” என்றான் தினேஷ்.
தன்னவள் தன்மீது கொண்ட நேசத்தில் விஷ்வாவின் இதழ்கள் பற்கள் தெரிய நீண்டு மலர்ந்தன.
இப்படி விஷ்வாவுக்கு என்று மட்டுமே ஒவ்வொன்றையும் சிந்தித்து அவனுக்காகவே எல்லாம் செய்து காதலில் கசிந்துருகும் சம்ருவே இந்த காதல் வேண்டாமென்று சொல்லவிருக்கிறாள். அத்தருணம் அவளின் காதலில் கொண்ட இதே நிறைவு, நிம்மதி, கர்வம், இதம் யாவும் விஷ்வாவிடம் நிலைத்திருக்குமா?