மித்ரனின் அலுவலகம் விட்டு வரும்போதே சுஜாவுக்கு அழைத்து பொறுமி தீர்த்தார்.
சுஜாதாவின் வளர்ப்பை பற்றி அத்தனை பேசினார்.
இந்திராவுக்கு சுஜாதாவின் மூன்று பிள்ளைகளும் குணத்தாலும், பண்பாலும் வைரமென்று தெரியும். அதற்கு அம்மையப்பன் சுஜாதாவின் வளர்ப்பு முக்கிமான காரணியென்று நன்கு தெரிந்தும், அதைகுறித்தே அத்தனை பேசியிருந்தார்.
புரமோத் இந்திராவை ஒரு ஆளாகக்கூட மதிக்கமாட்டான். அந்த கோபத்தையும் இப்போது சேர்த்து காட்டினார்.
இந்திரா என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்ளும் சுஜாவிற்கு அழுகை தான் வந்தது. அவரை எதிர்த்து பேச வரவில்லை.
இந்திரா அவரின் வீட்டிற்கு செல்லும் வரை தன்னுடைய பஞ்சாயத்தை தொடர்ந்தார்.
வீட்டிற்கு வந்த பின்னர் புருஷோத்தமனிடம் ஆரம்பித்துவிட்டார்.
எல்லாவற்றையும் கேட்ட புருஷோத்தமன் இந்திராவை காய்ச்சி எடுத்துவிட்டார்.
அவரிடம் சொல்லாது சென்ற கோபம் வேறு.
“எனக்கு விஷ்வா தான் மருமகனாக வரவேண்டும். நான் சுடர் அரியணைக்கு காய் நகற்றினால், நீ ஒரே ஒரு கம்பெனிக்கு வழி தேடுற!” என்றார்.
ஏதேதோ பேசி புருஷோத்தமன் இந்திராவை அமைதிப்படுத்தி, மித்ரன் விஷ்வா இருவருக்குமிடையே தான் செயல்படுத்த முனைந்தது அதற்கு இருவரும் கொடுத்த பதில்கள் என எல்லாத்தையும் எடுத்துச்சொல்லி,
“விஷ்வாவுக்கு சுடர் அரியணையில் அமரும் யோகமிருக்கு” என்று பேசி தன் வழிக்கு கொண்டு வந்திருந்தார்.
இருப்பினும் மித்ரனின் பேச்சு இந்திராவின் மனதில் கனன்று கொண்டே இருந்தது.
‘உனக்கு எப்படி கல்யாணம் நடக்குது பார்க்கிறேன்’ என்று வெற்று சபதமே செய்தார்.
மித்ரன் இரவு வீட்டிற்கு வந்ததும் அம்மையப்பனிடம் நடந்ததை அப்படியே சொல்லிவிட்டான்.
சுஜா அழுது கொண்டேயிருக்க…
“அவங்க கோபத்தை என்கிட்ட காட்ட முடியாது உங்களை கார்னர் பண்ணியிருக்காங்க. இதுக்காக அழுவீங்களா நீங்க? உங்களுக்கு உங்க வளர்ப்பு பற்றி தெரியாதா? யாரோ ஏதோ சொல்றதுக்குலாம் மதிப்பு கொடுப்பீங்களா?” என்று மித்ரன் பேசிய பின்பே கொஞ்சம் சீரானார்.
அப்போதும்,
“அண்ணி கொஞ்சம் அடாவடி தான் மித்ரா. ஆனால், அஞ்சலி ரொம்ப நல்ல பொண்ணுப்பா. யோசியேன். எனக்கும் ஒத்துப்போகும். பின்னாடி உன் தம்பி, தங்கைக்கும் பிரச்சனை இல்லாமல் இருக்கும்” என்று பேசினார்.
‘இவர் என்ன சொன்னாலும் அவங்க அண்ணி பக்கம் தான்’ என நினைத்த மித்ரன் தந்தையை ஏறிட்டான்.
அம்மையப்பன் எதுவும் சொல்லவில்லை. அமைதியாகவே இருந்தார்.
“நீங்க எதுவும் சொல்லலையாப்பா?”
“யாரென்ன சொன்னாலும், வாழப்போறது நீ. உன் மனசுக்கு ஒத்துவராதுன்னா செய்யாதே” என்றார்.
மித்ரனுக்கு ஒரு நொடி தன் அன்னைக்காகவேணும் ஒப்புக்கொள்ளலாமா என்று தோன்றியது தான். ஆனால் அஞ்சலி என்று நினைக்கையில் அவனது மனதில் சிறு சலனம் கூட ஏற்படவில்லை. ஆழ்மனம் வேண்டாம் என்பதை அதீத அடர்த்தியோடு கூறியது.
“இது சரிவராதுப்பா” என்ற மித்ரன், “என்னவோ கல்யாணத்துல இண்ட்ரெஸ்ட் வரலப்பா. பண்ணிக்காமலே இருக்கலாம் தோணுது” என்றான்.
மகன் சொல்லும் பதிலைக்கேட்டு சத்தமாக சிரித்த அம்மையப்பன், “நமக்கு பிடித்த விடயம் போதையாகிப்போச்சுன்னா வாழ்கையில் வேறெதுக்கும் இடம் கொடுக்க மனம் சம்மதிக்காது மித்ரா. உனக்கு உன் தொழில் மீதான பிடித்தம் போதையாகிப்போச்சு. அதான் கல்யாணம் காதல் இதிலெல்லாம் நாட்டமில்லாமல் இருக்க” என்றார்.
“போங்கப்பா” என்றவன், “பார்ப்போம். பியூச்சரில் என்னயிருக்கோ!” என்று மேல்நோக்கி கை கட்டினான்.
“நல்ல குடும்பம் அமைவது வரம் மித்ரா. மனைவின்னு ஒருத்தி வந்துட்டால் வாழ்க்கையே கலரா மாறிடும். மிஸ் பண்ணிடாதே” என்றார்.
“இந்திராவே விட்டாலும் உன் அம்மா விடமாட்டாள் மித்ரா. உஷாராகிடு” என்றவர் மனைவியின் திட்டுக்கு பயந்து அறைக்குள் ஓடிவிட்டார்.
“நைட்டு சுஜான்னு சாப்பாடு கேட்டு என்கிட்ட தான வரணும். பார்த்துக்கிறேன் வாங்க” என்ற சுஜா, “அம்மாக்காக மித்ரா?” என்றார். யாசிக்கும் பாவனை அவரிடம். அந்த முகத்திடம் மறுக்க மனம் வராது,
“டைம் கொடுங்கம்மா” என்றவனாக எழுந்து வந்துவிட்டான்.
இரவு உணவுக்கு பின் விஷ்வாவிடமிருந்து அழைப்புவர இந்திரா முதல் சுஜா வரை பேசியவற்றை சொல்லி…
“ஒரே குழப்பமா இருக்கு விஷ்வா” என்றான்.
“அஞ்சலி நாட் ஓகே… வேறெதாவது…”
விஷ்வா முடிக்கும் முன்பே மித்ரன் அளறினான்.
“டேய்… என்னவோ மேரேஜ்ல் இண்ட்ரெஸ்ட் இல்லை. ஆனால் அம்மாவே பிடிச்சு இழுத்து தாலி கட்ட வச்சிடுவாங்க போல” என்றான்.
“ஹோ…” என்ற விஷ்வா அப்போதைக்கு எதுவும் பேசாது வைத்துவிட்டான்.
இரண்டு நாட்கள் கழித்து, அம்மையப்பனும் மித்ரனும் வீட்டில் ஒன்றாக இருக்கும் நேரத்தில் அலுவலக அறைக்கு வரவழைத்து வீடியோ காலில் அழைத்தான்.
“என்ன விஷ்வா பெரிய விடயமா?” அம்மையப்பன் தான் கேட்டார்.
“மித்துண்ணா மேரேஜ் பெரிய விடயம் தானேப்பா” என்ற விஷ்வா, மித்ரனின் அதிர்ந்த முகம் கண்டு புன்னகைத்தான்.
“விஷ்வா, அஞ்சலி நல்ல பொண்ணுதான். அதுக்காக நீயும் கட்டிக்க சொல்லாத. நீ சொன்னால் முடியாதுன்னு மறுக்க வராது” என்றான். முகம் சுருக்கி.
“அதான் மித்துண்ணா… நான் சொன்னால் நீங்க கேட்பீங்கன்னு தான் சொல்றேன். கல்யாணம் பண்ணிக்கோங்க.”
“அடேய்… அப்பா இவன் என்னை உங்க தங்கச்சிகிட்ட மாட்டிவிட பிளான் பண்ணிட்டான்” என்ற மித்ரனின் பாவனையில் மற்ற இருவரும் சிரித்தனர்.
“மித்ரா அமைதியா இருப்பா” என்ற அம்மையப்பன்,
“பொண்ணு யாரடா பார்த்திருக்க உன் அண்ணனுக்கு?” என்று விஷ்வாவிடம் வினவினார்.
“மித்துண்ணா ஃபோனுக்கு பொண்ணு ஃபோட்டோ வாட்ஸப் பண்ணியிருக்கேன் பாருங்கப்பா” என்ற விஷ்வா அவர்கள் புகைப்படம் பார்க்கும்வரை காத்திருந்தான்.
“இந்தபொண்ணு உன் ஃபிரண்ட்ல. காலேஜில் உன்னோட அடிக்கடி பார்த்திருக்கேன்” என்றார் அம்மையப்பன்.
விஷ்வா மித்ரனிடம் தனித்து பேச எண்ணுகிறான் என யூகித்தவர்,
“பேசிட்டு வறேன்” என்று அவ்வறையிலிருந்து வெளியேறினார்.
“பொண்ணு பிடிச்சிருக்கா மித்துண்ணா?”
மித்ரனிடம் மௌனமே பதிலாய்.
புகைப்படத்தில் சுசியை பார்த்ததும் மித்ரன் மனதில் ஒரு குறுகுறுப்பு. புதுவித உணர்வு மாற்றம். தன் மனதிற்கு பிடித்திருக்கிறது என்பதை கண்டுகொண்டான்.
ஆனால் திருமணம்? யோசிக்கத்தான் செய்தான்.
“மேடமுக்கு உங்க மேல லவ்வு.”
தன் தம்பியை விலுக்கென நிமிர்ந்து பார்த்தான் மித்ரன்.
“மூணு வருடத்துக்கு மேலயிருக்கும்.”
இப்போது மித்ரனிடம் அதிர்வு.
“அதுவும் ஒரே ஒருநாள் சில நிமிடங்கள் பார்த்த உங்களை பைத்தியம் மாதிரி காதலிச்சிட்டு இருக்காள்” என்ற விஷ்வா அன்றைய தினம் சுசி எப்படி மித்ரனை பார்த்தாள் என்பதையும், தன்னிடம் பேசியதையும் அப்படியே கூறினான்.
மித்ரனின் விழிகள் ஆச்சரியத்தில் விரிந்தன.
“அன்னைக்கு உங்களை பார்த்தது மட்டும் தான். என் அண்ணான்னு தெரிந்த அப்புறம், உங்களை நேரில் பார்க்கணும், லவ்வை சொல்லணும் அப்படின்னு கூட மேடம் நினைச்சதில்லை. ஏன் என்கிட்ட கூட உங்களைப்பற்றி எதுவும் கேட்டதில்லை. ஆனால் உங்களை அப்படி லவ் பன்றாள்.”
மித்ரனால் எதுவும் பேச முடியவில்லை.
“டூ டேஸ் முன்னாடி உங்க மேரேஜ் பேச்சு ஸ்டார்ட் ஆனதும் முடிவு பண்ணிட்டேன். இன்னும் எத்தனை வருடமானாலும் அவளா வந்து லவ் சொல்லமாட்டாள். அதான் அரேன்ஞ் மேரேஜ் ஏற்பாடு பண்ணிட்டேன். அவங்கப்பாகிட்ட எல்லாம் பேசிட்டேன். அவளுக்கே இன்னும் தெரியாது. அவர் சம்மதம் சொன்னதுக்கு அப்புறம் தான் உங்கக்கிட்ட பேசுறேன்.”
“தங்கச்சி பொண்ணுங்கிறதுலாம் அப்புறம். மித்ரன் அஞ்சலிக்கு நோ சொல்லிட்டான். தெரிஞ்சவங்க மூலமாக இந்த வரன் வந்தது. விசாரிச்சா, நம்ம விஷ்வாவோட க்ளோஸ் ஃபிரண்ட். அண்ணன் ஓகே சொன்னால் பண்ணிடலாம். நல்ல பொண்ணுன்னு சொல்லிட்டான். இப்போ உன் முடிவை நீ சொல்லு?” அம்மையப்பன் தம்கட்டி பேசி முடிவை மனைவியின் கையிலேயே ஒப்படைத்துவிட்டார்.
அதற்காக சுசியை விடும் எண்ணம் அவருக்கில்லை. தன்னுடைய தோழியையே தமையனுக்கு முடிக்க நினைக்கிறான் என்றால் இதில் வேறென்னவோ இருக்கு என்று நினைத்தவருக்கு, காதலா கூட இருக்கலாம் என்கிற எண்ணம்.
தன்னுடைய இளைய மகனை நம்பி பெரிய மகனின் திருமணத்தில் தீவிரம் காட்டினார் அம்மையப்பன்.
எங்கே இந்திரா மீண்டுமொருமுறை திருமணப்பேச்சினை கொண்டு வந்துவிடுவாரோ என்கிற பயம்.
சுஜாதாவின் பேச்சை கேட்டபடி வந்த மித்ரனுக்கு சுஜாவின் தீவிரம் பெண் பார்க்க ஒப்புக்கொள்ள வைத்தது.
விஷ்வா சொல்லிய லவ்வில் எல்லாம் நாட்டமில்லை.
ஆனால், ஒரேமுறை பார்த்து மட்டும் காதலா! எப்படி? சுசியை ஒருமுறை நேரில் பார்க்க வேண்டும் போலிருந்தது. காரணம் கேட்க வேண்டும். எப்படி இதென்று?
“அவங்ககிட்ட பேசுங்கப்பா… பெண் பார்க்க போகலாம். எல்லாம் ஓகேன்னா மேற்கொண்டு ப்ரோசிட் பண்ணலாம்” என்றவன் சுஜாவின் பேச்சினை காதில் வங்காதவனாக சென்று மறைந்தான்.
‘அஞ்சலிக்கு நோ சொல்லியவன், இந்த பெண்ணிற்கு சம்மதம் சொல்கிறானே!’
நினைத்த சுஜா, வேண்டா வெறுப்பாக “பேசுங்க. அதான் சொல்லிட்டானே!” என்றார்.
அம்மையப்பன் சுசியின் தந்தையிடம் அப்போதே பேசி இன்னும் நான்கு நாட்களில் பெண் பார்க்க வருவதாக முடிவு செய்து வைத்தார்.
விடயம் அறிந்த விஷ்வா…
மித்ரனிடம் நேரடியாக அவனின் விருப்பத்தை கேட்க…
“பெண் பார்த்திட்டு சொல்றேன் விஷ்வா” என்று மித்ரன் முடித்துக்கொண்டான்.
அம்மையப்பன் எல்லாம் உறுதி ஆகிய பின்பு இந்திரா புருஷோத்தமனிடம் சொல்லிக்கொள்ளலாம் என்றிருக்க, சுஜா முதல் ஆளாக இந்திராவுக்கு செய்தி சொல்லிவிட்டார்.
அடுத்த நாளே இந்திரா சுசியின் தந்தை ராமநாதனை நேரில் சந்தித்து, அஞ்சலியை பெண் எடுப்பதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் என்று கதை கூற, இந்திராவின் தோரணையும், முகபாவமுமே அவர் பொய்யுரைக்கிறார் என்பதை ராமநாதனுக்கு காட்டிக்கொடுத்தது.
அம்மையப்பனிடம் இப்படி வந்து சொல்கிறார்கள் என்று உண்மையை சொல்லியும் விட்டார்.
“அவள் பொண்ணு உனக்கு மருமகளா வரணும் ஆசைப்பட்டியே. ஆனால் அவள் என்ன பண்ணியிருக்காள் பார். உன் மகனுக்கு கல்யாணமே நடக்கவிடக் கூடாதுன்னு முடிவு பண்ணிட்டாள். என்னம்மா கதை சொல்லி வச்சிருக்காள்” என்று முதல்முறையாக மனைவியிடம் கோபம் கொண்டு இரைந்தார் அம்மையப்பன்.
“இந்த பொண்ணு அமையலன்னாலும், அடுத்தடுத்து பார்க்கப்போற இடமெல்லாம் இந்திரா இப்படித்தான் சொல்லுவாள். மித்ரன் அவகிட்ட கோபமா பேசிய பழியுணர்வு அவளுக்கு. சொந்த தங்கச்சிதான்… அதுக்கு என் பையன் வாழ்க்கையில் விளையாடுவாளா? நீ அவளுக்கு சப்போர்ட் செய்யிறியா?”
“அச்சோ… இல்லைங்க. எனக்கும் மித்ரன் விருப்பம் தாங்க முக்கியம். நாளைக்கு அண்ணி என்ன சொல்லுவாங்களோன்னு தான்…” என்று இழுத்த சுஜா, கணவனின் பார்வையில் “நீங்க பார்த்திருக்கும் பொண்ணையே பார்க்கலாங்க” என்று முழுமனதோடு சம்மதம் தெரிவித்தார்.