அம்மையப்பன் நேரில் சென்று அழைப்பிதழ் வைத்ததால், வீரய்யனால் மித்ரனின் திருமணத்தை தவிர்க்க முடியவில்லை. அதுவுமில்லாமல் அம்மையப்பன் வருண், யுகி திருமணத்திற்கு வந்திருந்தார். அதுவும் வீரய்யன் இங்கு வர காரணமாயிற்று.
சுசி தன் தந்தையுடன் சம்ருவின் வீட்டிற்கே சென்று அழைத்து வந்ததால், சம்ருவையும் அழைத்து வந்திருந்தார். உடன் செண்பகம் பாட்டி.
அவருக்கு சுஜாதாவின் உறவு ஆட்களும் அவர்களின் டாம்பீகமும் பிடிக்காது என்பதால், வீரய்யனுடன் திருமணநாளன்று காலையில் முகூர்த்தத்துக்கு கொஞ்ச நேரம் முன்னாடி தான் வந்திருந்தனர்.
வாயிலில் வரவேற்கும் விதமாக தன் நண்பர்களுடன் விஷ்வா நின்றிருக்க, அவனை மட்டுமல்ல ராஜா, தினேஷிடம் கூட முகம் காட்டது உள்ளே சென்றுவிட்டாள் சம்ருதி.
சம்ருவை கண்டதும் விஷ்வாவின் முகத்தில் வந்த வெளிச்சத்தையும் அவள் பாராது கடந்து சென்றதும் அந்த ஒளி மங்கியதையும் கவனித்த வீரய்யனுக்கு கவலையாகத்தான் இருந்தது. ஆனால் இதில் அவர் செய்வதற்கு ஒன்றுமில்லை.
மண்டப வாயிலின் ஆடம்பர அலங்காரமே அவரை அத்தனை அச்சுறுத்தியது.
வீட்டின் முதல் கல்யாணம் என்பதால் அம்மையப்பன் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து நிறைவுடன் செய்தார். தமிழ்நாட்டின் பல முன்னணி பிரமுகர்கள் திருமணத்திற்கு வந்திருக்க… அப்போதுதான் வீரய்யனுக்கு தான் நினைப்பதை விடவும் அம்மையப்பன் உயரத்தில் இருப்பவர் என்பது முற்றிலும் புரிந்தது.
சற்று நேரத்திற்கு முன்பு பிள்ளைகளை கண்டு கவலையாகியவருக்கு… இதுதான் சரியென்று தோன்றியது தற்போது.
சுசி மணமேடைக்கு வரும் முன் மணமகள் அறைக்குச் சென்று அஞ்சலி, அனுவுடன் முழு அலங்காரத்தில் தயாராகியிருந்த சுசியை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டு வந்து வீரய்யனின் அருகில் அமர்ந்துகொண்டாள் சம்ருதி.
அஞ்சலியுடன் கூட சரியாக பேசவில்லை.
விஷ்வாவின் பார்வை சம்ருவின் மீதே இருந்தது. மண்டபதித்னுள் எத்திசையில் என்ன வேலையில் இருப்பினும் அவளின் மீதே கண்ணாய் இருந்தான்.
இனி எப்போது காண முடிந்திடுமோ? அவனின் எண்ணம்.
எப்போதுமே அமைதியானவள் தான். ஆனால் இப்போதிருக்கும் இந்த பேரமைதி முற்றிலும் வேறாய். காரணம் தெரியாது அவளிலிருந்து பார்வையை அகற்ற முடியாது தவிப்புக்குள் சிக்கிக்கொண்டிருந்தான் விஷ்வா.
புருஷோத்தமனின் அதட்டலுக்காக மட்டுமே இந்திரா மித்ரனின் திருமணத்திற்கு வந்தார். எள்ளும் கொள்ளும் வெடிக்கத்தான் உர்ரென்று அமர்ந்திருந்தார்.
அதிலும் அனுவுடன் அஞ்சலியும் சேர்ந்து சுசியை மணமேடைக்கு அழைத்துவர அவருக்கு பொடுபொடுவென வந்தது. மகளை கன்னம் கன்னமாக அறைய வேண்டும் போலிருக்கும்… தன் கோபத்தை கட்டுப்படுத்த பார்வையை மாற்ற, விஷ்வா கண்ணில் பட்டான்.
அவனது இமை மூடா பார்வையின் திசையில் பயணித்தவர் சம்ருவை பார்த்து யாரென்று யோசித்தார்.
அதன் பின் விஷ்வாவையே இந்திரா கவனிக்க… அவனின் பார்வையில் பொருளை கண்டுகொண்டார்.
‘இந்த மனுஷனோட எண்ணமும் பொய்யாகிடும் போலவே!’ என நினைத்தவர், தன் கணவனிடமும் விஷ்வாவின் பார்வையை கண் காட்டினார்.
சில நிமிடங்களில் சம்ருவை பற்றியும் வீரய்யன் யாரென்பதை பற்றியும் யாருக்கும் கருத்தில் கொள்ளாத வகையில் விசாரித்து தெரிந்துகொண்டார்.
‘சின்ன வயதிலிருந்து நெருங்கிய பழக்கம். இப்போ இந்த விஷ்வாவோட பார்வையும் வேறொன்னை சொல்லுதே’ என ஆராய்ந்தவர், ‘முதலுக்கே மோசமாகிடும் போலவே. இந்த பொண்ணை எப்படியாவது பாதையிலிருந்து விலக்கியே ஆகணும்’ என்று மனகணக்கு போட்டார்.
சுசியின் நண்பர்கள் அனைவரும் மேடையிலிருக்க,
ராஜா வந்து அழைத்தும் சம்ரு மறுத்து விட்டாள்.
வீரய்யன் மகளின் கையை ஆதுரமாக பற்றிக்கொண்டார். மகள்களுக்கு தந்தையின் இந்த அரவணைப்பு போதுமே. இதைவிடவும் சிறந்தது இந்தவுலகில் இருந்திட முடியுமா என்ன?
மித்ரன் சுசியின் கழுத்தில் தாலி கட்டும்போது, விஷ்வாவின் பார்வை தன்னைப்போல் சம்ருவின் மீது நிலைத்தது. அழுத்தமாய். உரிமையாய்.
புருஷோத்தமனின் மனம் குமைந்தது.
தாலி கட்டி முடித்ததும் பிற சடங்குகள் முடிந்து மணமக்கள் புகைப்படம் எடுக்க தனித்து விடப்பட்டனர்.
பெண் பார்க்க சென்று வந்த அடுத்த நாளே மித்ரன் சுசிக்கு அழைத்து நேரில் சந்திக்க வேண்டுமென்று சொன்னதோடு ராமநாதனிடம் அனுமதி வாங்கி, தானே வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றான்.
எங்கென்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை.
காரில் ஒரு நீண்ட பயணம். சென்று கொண்டே இருந்தனர். அமைதி மட்டுமே இருவரிடமும். மியூசிக் பிளேயர் சத்தமின்றி இசையை கசிந்து கொண்டிருந்தது. கிட்டத்தட்ட நகரத்தின் எல்லையை எப்போவோ கடந்திருந்தனர்.
வண்டியை நிறுத்திய மித்ரன், ஸ்டியரிங்கில் கை முட்டி வைத்து உள்ளங்கையில் தன் முகம் தாங்கி சுசியையே பார்த்திருந்தான்.
சுசி தயக்கமோ, தடுமாற்றமோ, வெட்கமோ சிறிதுமின்றி அவனுக்கு சளைக்காது பதில் பார்வை பார்த்தாள்.
அவளின் விழி வீச்சில் மூச்சு திணற அவன் தான் பார்வையை விலக்க வேண்டியதாகிற்று.
“இப்படி நேருக்கு நேர் உங்களை சைட் அடிக்கணுன்னு பல வருட ஆசை” என்றவள், அவளை திரும்பி பார்த்த அவனின் முகத்தில் அழுத்தமாக தன் பார்வையை பதித்தவளாக…
“ஐ லவ் யூ” என்றாள்.
மித்ரனின் கண்கள் அகல விரிந்தன.
ஒரு பெண் தன்னுடைய காதலை இத்தனை திடமாக சொல்லிட முடியுமா?
அவள் காதல் சொல்லிய விதத்தில் அவனுக்குத்தான் வெட்கம் வரும்போலிருந்தது.
“எப்படி என் மேல் லவ்?”
“மனசோட மொழிக்கு வார்த்தையில்லை. அதனால் உங்க கேள்விக்கு என்கிட்ட பதிலில்லை.”
மலைத்து பார்த்தான் அவளை.
“உங்களுக்கு எப்படி என்னை பிடிச்சுது? உங்க தம்பி ஃபிரண்ட்ங்கிறதாலவா?”
மித்ரனின் தலை இல்லையென்று ஆடியது.
“விஷ்வா சொன்னான்னு தான் பெண் பார்க்க வந்தேன். அனுவுக்கு டீ பிடிக்கலன்னு பார்வையாலேயே புரிஞ்சு அவளுக்கு என்ன வேணுமோ அதை கொடுக்க சொன்னது, அஞ்சலி அம்மா அப்படி சொல்லும்போது கோவப்படாமல் அவங்களுக்கு தகுந்த மாதிரி பதில் சொன்னது… இதெல்லாம் உன்னோட குணம் என்னன்னு எனக்கு காட்டுச்சு. உன் குணம் பிடிச்சதால உன்னையும் பிடிச்சது.
ஆனால் இப்போ சினிமாட்டிக்கா இல்லாமல் காதலை கூட தைரியமா சொன்ன இந்த பொண்ணை, அவளுக்காகவே ரொம்ப பிடிக்குது” என்றான்.
அன்று தொடங்கிய அவர்களின் பேச்சுக்கள் அதன் பின் நிற்கவேயில்லை.
இப்போது தாலிகட்டிய பின்பும் கூட மேடையில் வைத்து விழி வழி பேசிக்கொண்டுதான் இருக்கின்றனர்.
அம்மையப்பனே வந்து வீரய்யன் மற்றும் செண்பகத்தை சாப்பிட அழைத்துச் சென்றார். அவர்களுடன் சென்ற சம்ருதி வழியிலேயே அலைப்பேசி அழைப்பு வரவும், வீரய்யனிடன் சொல்லிவிட்டு மண்டபம் உள்ளே இரைச்சலாக இருக்க, வாயிலுக்கு வெளியில் நின்று பேசிக்கொண்டிருந்தாள்.
அவள்மீதே கண்ணாக இருந்த விஷ்வா, அவளிடம் தனித்து பேச அவளெப்படியும் சந்தர்ப்பம் கொடுத்திடமாட்டாளென்று இப்போது தனித்திருக்கும் இந்நேரத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்து அவள் பின்னே சென்றான்.
மண்டபம் உள்ளே தான் ஆட்கள் நிரம்பியிருந்தனர். வெளியில் ஆட்களின்று அமைதியாகத்தான் இருந்தது.
சம்ரு அவனுக்கு முதுகுக்காட்டி பேசிக்கொண்டிருக்க… அவனின் பார்வை அவளை அளவெடுத்தது.
ஒரு விசேடத்திற்கு செல்வதைப்போல் அலங்காரமெல்லாம் இன்றி, சாதாரண ஜீன்ஸ் மற்றும் காட்டன் குர்தியில், காதில் ஒற்றை முத்து தோடு, கையில் ரிஸ்ட் வாட்ச், போனி டெயில் என்று அவளின் வழமையானத் தோற்றத்தில் தான் வந்திருந்தாள்.
காதில் அலைபேசியை பிடித்திருந்த அவளின் கையில் மெல்லிய சங்கிலி போன்ற அமைப்பில் பிரேஸ்லெட் இருக்க… விஷ்வாவுக்கு அவளது கழுத்து சங்கிலியை பார்க்க வேண்டுமெனத் தோன்றியது.
பேசி முடித்து சம்ருதி திரும்பிட மார்பின் குறுக்கே கைகளைக்கட்டிக்கொண்டு நின்றிருந்த விஷ்வாவை அவள் எதிர்பார்க்கவில்லை.
ஒரு நொடி தடுமாறியவள்… அவனை பாராதது போல் தாண்டி செல்ல, அவளின் கையை பிடித்து நிறுத்தியிருந்தான்.
சம்ரு உள் பக்கமாக எட்டி பார்த்துவிட்டு, தன் கையை பிடித்திருந்த விஷ்வாவின் கையின் மீது அழுத்தமாக தன் பார்வையை வைத்தாள்.
“காரணம் தெரிஞ்சிக்கலாமா?”
எதற்கான காரணம் கேட்கிறானென்று அவளுக்கு புரியத்தான் செய்தது. ஆனால் பதில் சொல்ல அவளால் முடியாதே.
கீழுதட்டை அழுத்தமாக கடித்து தன் உணர்வுகளை அடக்கி அப்படியே நின்றிருந்தாள்.
சம்ருவின் முகத்தில் நிலைத்திருந்த அவனது பார்வை கழுத்திற்கு இறங்கியது.
சங்கிலியில் தொங்கிக்கொண்டிருந்த ரோஜா அவனது உயிரை மீட்டது.
அவனுக்கு வேண்டிய பதிலை அந்த ரோஜா வழங்கியிருந்தது.
பட்டென்று அவளது கையை விட்டவன்,
“போ” என்றான்.
சம்ரு விழி உயர்த்தி அவனது கண்களை சந்திக்க…
“போயிடு… இல்லை இப்படியே எங்காவது தூக்கிட்டு போயிடுவேன்” என்றான்.
‘அதை செய்யேன்.’ அவளது மனம் மொழிந்தது.
முகம் மூன்றாம் மனிதர் பாவனையை காட்டிட, அவளது கண்கள் மட்டும் அவனுக்கு வேண்டிய காதலை வழியவிட்டது.
காரணம் தெரியாது அவனும் என்ன தான் செய்வான்.
கோபம் தான் வந்தது.
“போடி…” விஷ்வா அழுத்தமாக சொல்லிட, கண்கள் கொட்டிவிட்ட நீரை அவனுக்கு காட்டாது உள்ளே வேகமாக சென்றிருந்தாள்.
‘தள்ளியிருந்து…
பார்க்கும் எனக்கு,
உன்னை
புரியவில்லை.
பக்கம் வந்து…
தெரிந்துகொள்ள
ஏனோ மறுக்கிறாய்!
இருவருக்கும் நடுவில்
அரண் அமைத்து
எதை மறைக்கிறாய்?’
விஷ்வா இரு கைகளாலும் பின்னந்தலையை பிடித்துக்கொண்டு வானோக்கி தலையுயர்த்தி உதடு குவித்து காற்றினை ஊதினான். மனம் ஆசுவாசமடைய மறுத்தது.
மனதை மாற்ற மற்ற வேலைகளுக்குள் தன்னை புகுத்திக்கொண்டான்.
விஷ்வா மீதே கவனிப்பாய் இருந்த புருஷோத்தமன் சம்ரு பின்னால் விஷ்வா செல்வதை பார்த்து தானும் வந்தார். மறைந்து நின்று கொண்டார்.
அவரை பொறுத்தவரை காதலிக்கும் அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை. அதனை மேலும் பெரிதாக்கி இன்றே இவர்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்திட முடிவு செய்து வீரய்யனை தேடிச் சென்றார்.
வீரய்யன் உண்ணு முடித்து, மகள் சாப்பிடுவதற்காகக் காத்திருந்தார்.
செண்பகம் பாட்டி உறவினர் ஒருவருடன் பேசி வருவதாக ஹாலுக்கு வந்துவிட்டார்.
“நீங்க போங்கப்பா… நான் சாப்பிட்டு வந்துடுறேன்.”
“இருக்கட்டும்டா… பொறுமையா சாப்பிடு.”
இப்போது மகள் எத்தனை வேதனையை அனுபவித்துக் கொண்டிருப்பாள் என்று நினைத்தவருக்கு நெஞ்சம் கலங்கியது.
பிறருக்காக… தனது ரத்த சொந்தமாகவே இருந்தாலும், தமது ஆசையை துறப்பது எத்தனை வலிகளைக் கொடுக்குமென்று வாழ்ந்த மனிதருக்கு தெரியாதா?
பரிவாய் மகளின் தலை வருடினார்.
“என்னப்பா?”
“ஒண்ணுமில்லைடா.”
உறவினர் ஒருவரை சாப்பிட அழைத்து வந்த அம்மையப்பன் வீரய்யனை கண்டுவிட்டு அவரின் அருகில் வந்து பேசிவிட்டு சென்றார்.
வீரய்யனை தேடி வந்த புருஷோத்தமன் கண்ணில் இக்காட்சி பட,
‘பையனும் அப்பனும் ஒரே மாதிரி’ என்று முணுமுணுத்தார்.
“இதை வளரவிட்டால் எனக்குத்தான் ஆப்பு.”
சம்ரு கை கழுவ சென்றிட,
புருஷோத்தமன் வீரய்யனின் முன்வந்தார்.
புருஷோத்தமனை கண்டதும் வீரய்யனிடன் ஒரு நெருடல்.
“உங்கக்கிட்ட கொஞ்சம் பேசணுமே!”
“சொல்லுங்க… நீங்க அம்மையப்பன் மச்சான் தான?”
“அப்படி போய் ஓரமா பேசுவோமா?”
“ம்ம்…”
ஹாலிலிருந்து உணவு கூடத்திற்கு வரும் படிகள் மறைவாக இருக்க அங்கு அழைத்துச் சென்றார் புருஷோத்தமன்.
“என்ன விடயமா பேசணும்?”
“உன் பொண்ணை கோயம்புத்தூரிலிருந்து திருச்சிக்கு படிக்க அனுப்புன காரியம் நிறைவேறிடுச்சு போலயே? சின்ன வயசுலேர்ந்து சேர்ந்து சுத்துனான்னு மொத்தமா வளைச்சுப்போட முடிவு பண்ணிட்டீங்களா? பார்த்திருப்பியே இந்த கல்யாணத்தோட ஆடம்பரத்தை… இதே மாதிரி உன் பொண்ணுக்கும் நடக்கணும்ல… அம்மையப்பன் சொத்துக்கு ஆசைப்பட்டு தானே இவ்வளவு தூரம் காய் நகர்த்தியிருக்க? சும்மா சொல்லக்கூடாது உன் பொண்ணும் நீ சொல்லி அனுப்புன மாதிரி, நாலு வருசமும் படிப்போடு சேர்த்து எங்க வீட்டு பையனையும் படிச்சிட்டாள்.”
“ஏய்…” வீரய்யனுக்கு புருஷோத்தமனின் பேச்சு கொலைவெறியை உண்டாக்கியது. சட்டென்று புருஷோத்தமனின் சட்டையை பிடித்துவிட்டார்.
புருஷோத்தமனின் முறையற்ற வரம்பு மீறிய பேச்சு வீரய்யன் போன்றோருக்கு கோபத்தை கொடுக்காவிட்டால் தான் தவறு.
“என்னய்யா… உண்மைய சொன்னால் எம்மேலவே கை வைக்குற. அப்புறம் என்னத்துக்கு இங்க படிக்க அனுப்பினியாம். கோயம்புத்தூரில் இல்லாத காலேஜா? அங்கேயே சுடரும் இருக்கே. அங்க சேர்க்க வேண்டியது தானே. அம்மையப்பன் உன்கூட நட்பா பேசி பழகினால் அவனையே சுருட்ட பார்க்குரியா நீ?”
வீரய்யன் மனதால் நொடிந்துவிட்டார்.
இந்த பேச்சிற்க்காகத்தான் மகளின் ஆசையை துறக்கக்கூறி மகளிடமே யாசகம் வேண்டி நின்றார்.
ஆனால் எது நடக்கூடாதென தன் மகளுக்கு தெரிந்தே வலியை கொடுத்தாரோ அது நடந்தே விட்டது.
தளர்ந்து படியிலேயே அமர்ந்துவிட்டார்.
“மானமுள்ளவனா இருந்தால் பொண்ணை அடக்கி வை. ஊர் மேயவிட்டு சொத்து சேர்க்காதே! என் மருமகனுக்கு என் பொண்ணு இருக்கிறாள்.” இதுபோதுமென்று வீரய்யனை எள்ளலாக பார்த்துவிட்டு புருஷோத்தமன் சென்றிட…
தந்தையை அவர் அமர்ந்திருந்த இடத்தில் காணவில்லையென ஹால் நோக்கி வந்த சம்ருதி புருஷோத்தமனின் அனைத்து பேச்சையும் கேட்டுவிட்டாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.