விஷ்வா மேற்படிப்பு முடித்து வந்ததும் அம்மையப்பன் கல்லூரி நிர்வாகத்தை ஏற்க சொல்ல… ஏனோ அத்தருணம் சரியாக இருக்குமென்று விஷ்வாவுக்கு தோன்றவில்லை. ஆதலால் கொஞ்ச நாள் போகட்டும் என்று சொல்லிவிட்டான்.
உடனடியாக சுஜா அவனின் திருமணப்பேச்சை எடுத்துவிட்டார்.
“இருபத்தி நாலு வயசுதான் ஆகுதும்மா. அதுக்குள்ள மேரேஜா?” என்றவன் அதற்கு மேல் சுஜாவை பேசவிடவில்லை.
சுஜா தான் புலம்பித் தீர்த்தார்.
நாள் முழுக்க அவருடன் வீட்டிலேயே இருப்பதால் சுசியால் அவரின் புலம்பளை ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
சுஜாவும் விஷ்வாவுக்காவது அஞ்சலியை எடுக்க வேண்டுமென்பதைப்போல் பேச… சுசி விஷ்வா ஒரு பெண்ணை விரும்புவதாக சொல்லிவிட்டாள்.
“இவனுக்கும் அஞ்சலியை எடுக்கலன்னா அண்ணி அந்த குதி குதிப்பாங்களே” என்ற சுஜா, “விஷ்வா விருப்பத்தை யாராலும் மாத்த முடியாது. அவன் ஆசைப்படும் பொண்ணு யாருன்னு சொல்லு. நாம போய் பேசிட்டு வந்திடலாம்” என்றார்.
சுஜாதாவின் இந்த வேகம் சுசிக்கு கலக்கத்தை கொடுத்தது.
‘விஷ்வா அவனுடைய காதலை சொல்வதற்கு முன் தான் சொல்லியிருக்கூடாதோ?’ என்று எண்ணினாள்.
விஷ்வா வந்தே நான்கு தினங்கள் தான் ஆகிறது. எதற்கு இத்தனை அவசரம். அவன் பெண்பிள்ளை இல்லையே. இருபத்தி நான்கிற்குள் திருமணம் முடித்து வைக்க.
அன்றே விஷ்வாவிடம் சொல்லிவிட்டாள்.
“என்றைக்கா இருந்தாலும் சொல்லித்தானே ஆகணும் சுசி. விடு” என்றுவிட்டான்.
சுஜாதாவின் மூலம் விடயமறிந்த அம்மையப்பன் விஷ்வாவிடமே நேரடியாக பெண் யாரென்று கேட்க, சம்ருதி என்றதில் அத்தனை திருப்தி அவருக்கு.
“சம்ருவும் பிஜி படிக்கிறாள் கேள்விப்பட்டேன். இன்னும் ரெண்டு மாதத்தில் முடிஞ்சிடுமே நான் வீரய்யனிடம் பேசட்டுமா?” எனக் கேட்டார்.
விஷ்வாவுக்கு அம்மையப்பன் ஒப்புக்கொள்வாரென்று தெரியும். ஆனால் சுஜாதாவின் சம்மதம் தான் ஆச்சரியப்படுத்தியது. மித்ரன் திருமணத்திற்கே அஞ்சலியை கட்டிக்கொள்ள சொல்லி எத்தனை வாதம் செய்தார்.
விஷ்வா, மித்ரன் போல் சொன்னதை கேட்கும் பிள்ளைஇல்லையென்று சுஜாவுக்கு நன்கு தெரியும். யார் என்ன சொன்னாலும் அவனுக்கு சரியெனப்படுவதைத்தான் செய்வான். அதனாலே சுஜா அவனின் விருப்பத்தில் தலையிடாது, அவனின் வாழ்வென்று நகர்ந்து கொண்டார்.
அத்தோடு விஷ்வாவின் குணத்திற்கு நிச்சயம் புருஷோத்தமன் இந்திரா பொருந்தி போகமாட்டார்கள் என்பதும் அவரின் சம்மதத்திற்கு காரணம்.
திருமணம் போது இந்திரா ஏதும் சண்டையிட்டால் விஷ்வா சமாளித்துவிடுவான் என்கிற தைரியம்.
இன்று விஷ்வாவின் பக்கமிருந்து அனைத்தும் யோசித்த சுஜா தான், நாளை தன் அண்ணனின் பேச்சினை கண்மூடிக்கொண்டு நம்பி விஷ்வாவின் வாழ்வை புதைகுழியில் தள்ளிவிடப்போகிறார்.
“சம்ருவிடம் கேட்டு சொல்றேன்’ப்பா” என்று நகர்ந்தவனை சுசி பிடித்துக்கொண்டாள்.
தற்போது சுசி கர்ப்பமாக இருக்கிறாள்.
“இன்னும் எத்தனை நாளுக்கு இந்த விளையாட்டு விஷ்வா. நீ ஆரம்பித்து வைத்தது. அவள் தொடர்ந்திட்டு இருக்காள். இதுக்கு முடிவென்ன? அட்லீஸ்ட் காரணமாவது தெரிய வேண்டாமா? அவளை உன்னால் விட முடியுமா விஷ்வா?”
“நாளை அவளை பார்க்கப்போறேன் சுசி. என் கண்ணை பார்த்து அவள் சொல்லட்டும். நான் வேணான்னு” என்றவள், “சொல்லமாட்டான்னு நம்பிக்கை இருக்கு” என்று விடுவிடுவென சென்றுவிட்டான்.
காலை நேரமே திருச்சியிலிருந்து கிளம்பிவிட்டான். சரியாக கல்லூரி முடியும் தருணம் அவளை சந்திக்க வேண்டுமென எண்ணியவன் அதற்கு தகுந்தபடி சீரான வேகத்திலேயே காரினை செலுத்தினான்.
விஷ்வாவிடம் படபடப்பு. தன்னை பார்த்ததும் எப்படி ரியாக்ட் செய்வாள்? முதலில் பேசுவாளா? அதிர்ந்து நிற்பாளா? மகிழ்வாளா? கடந்துவிடுவாளா? இப்படி பலபல கேள்விகளுடன் வந்து சேர்ந்தான்.
கல்லூரிக்கு எதிரே இருந்த சிறு பூங்காவில், மாணவர்கள் வெளிவரும் வழியில் கவனமாக கண் வைத்தவனாக அமர்ந்திருந்தான்.
இமைக்கும் நேரத்தில் சென்றுவிடுவாளோ என்று இமை சிமிட்டாது பார்த்திருந்தான். வழிமேல் விழி வைத்து என்பார்களே! அவ்வாறு.
மாணவர்கள் வெளிவரும் எண்ணிக்கை குறைய குறைய…
‘இன்று அவள் வரவில்லையோ?’ என நினைத்தான்.
இன்று இல்லாவிட்டாலும் நாளை எப்படியும் பார்த்தே ஆக வேண்டும். ஆனால் கிராமத்திற்கு செல்ல விரும்பவில்லை.
மேலும் சில நிமிடங்கள் கடந்து…
விஷ்வா பூங்காவை விட்டு வெளியில்வர, சம்ருதி கல்லூரி கேட்டினைத் தாண்டி சாலையில் கால் வைத்து… கல்லூரியின் பக்கமே இருக்கும் பேருந்து நிலையம் செல்ல நடைபாதையில் சென்று கொண்டிருந்தாள்.
சம்ருவின் முகத்தில் மெல்லிய சோகம். இருபது அடி தூரத்திலும் கண்டுகொண்டான். வேகமாக சாலையை கடந்து அவள் முன் வந்து நின்றான்.
விஷ்வாவை நிச்சயமாக சம்ரு அங்கு எதிர்பார்க்கவில்லை. எப்போதும் விலகியே இருப்பவன், தன்னைத்தேடியெல்லாம் வருவானென்று அவள் நினைத்தது இல்லை.
ஒதுங்கியே இருப்பவன், தான் தள்ளி சென்றால், அவனும் தூரம் சென்றிடுவான் என்றுதான் நினைத்திருந்தாள்.
என்னதான் சம்ருதி அனைத்தும் முடிந்துவிட்டதென்றாலும் அவளின் விழிகள் அகத்தின் காதலை வெளிகாட்டிக் கொண்டல்லவா இருந்தன.
இருப்பினும் அவனை கடந்துவிட நினைத்தே முன் அடி வைத்தாள். அவளின் மணிக்கட்டை பற்றி தடுத்திருந்தான்.
சம்ருதி முன் திடீரென விஷ்வா சென்று நிற்கவும், அவன் கைபிடித்து இழுத்திட, அவள் அசையாது இருக்கவும், விஷ்வாவை யாரென்று அறியாது… பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்தத் அவளது வகுப்பு தோழன் கவனித்துவிட்டு அவர்களின் அருகில் வந்தான்.
“ஏதும் பிரச்சனையா சம்ரு?”
சம்ரு பதில் சொல்லாது இருக்க…
“ஹலோ யாருங்க நீங்க?” என்று விஷ்வாவிடமே கேட்டிருந்தான்.
சம்ரு சொல்லியதும் சரண், “தெய்வமே” என்று விஷ்வாவை விளித்து…
“அல்ஃபாபெட்ஸில் இருக்கும் அந்த வி.ஆர் லெட்டர்ஸ் ரெண்டும் வாய் இருந்திருந்தால் கதறி புலம்பியிருக்கும். எல்லாருக்கும் ஏதேதோ ஹாபி இருக்கும். ஆனால், இவளுக்கு வி.ஆர் லெட்டர்ஸ் எங்க பார்த்தாலும் வட்டமிட்டு வைக்கிறது தான் ஹாபி” என்றான்.
“சரண்… ப்ளீஸ்…” அவனை தடுக்கும் விதமாக சம்ரு அவனின் கையை பிடித்திருந்தாள்.
முற்றிலுமாக அவனை விட்டு பிரிய இருக்கும் நேரத்தில் தன்னுடைய இச்செயலெல்லாம் விஷ்வாவுக்கு தெரிய வேண்டாமென்று நினைத்தாள்.
சரணை பிடித்திருந்தவளின் கையில் விஷ்வாவின் பார்வை அழுத்தமாக படிய… கையை சட்டென்று எடுத்துக்கொண்டாள்.
ஆனால் சரண் விடுவதாக இல்லை. சம்ருவை பற்றி எல்லாம் சொல்வேன் எனும் விதமாக பேசிக்கொண்டே போனான்.
“மேடம் ஏன் ரெண்டு வருடமா எந்த பசங்களையும் திரும்பிக்கூட பார்க்கலன்னு இப்போதான் ப்ரோ தெரியுது” என்ற சரண், “வி.ஆர் தான் பக்கத்தில் இல்லையே சும்மா சைட்டாவது அடிக்கலாம் நம்ம பசங்க ஆன்மா புனிதமாகுன்னு சொன்னால், அவங்களுக்கு முன்னாடி நீங்களாம் ஒண்ணுமேயில்லைன்னு மொத்த ஆண் வர்க்கத்தையே கலாய்ச்சிட்டாள்” என்றான் சோகமாக.
விஷ்வா மென்மையாக புன்னகைத்தான்.
சம்ருவுக்கு எங்காவது சென்று முட்டிக்கொள்ளலாம் போலிருந்தது.
“ஷட் அப் சரண்” என்றவள், “பார்க் போய் பேசலாம்” என்று விஷ்வாவை இழுத்துக்கொண்டு பூங்கா நோக்கி நகர்ந்தாள்.
“பாய் சரண்.” அவள் இழுப்புக்கு சென்றபோதும் சரணிடம் கையசைத்திருந்தான் விஷ்வா.
பூங்காவில் கல் மேடையில் சம்ரு அமர்ந்ததும் ஆழ்ந்து மூச்சினை உள்ளிழுத்து வெளியேற்றி விஷ்வா என்ன பேசினாலும் தன்னிலையில் உறுதியுடன் இருக்க வேண்டுமென நிலைகொண்டாள்.
“இன்னும் வி.ஆர் லெட்டர்ஸை விடுறதில்லை போலிருக்கே?” கேட்ட விஷ்வா அவளின் அருகில் அமர்ந்தான்.
அவன் சொல்லியதில்… அவளுக்கு புருஷோத்தமனின் நினைவும் அவரின் வரம்பற்ற பேச்சும் மனதில் எழுந்தது. உடல் விறைத்தாள்.
“வேண்டாம்.” ஒருவித கூர்மையுடன் சொல்லியிருந்தாள்.
“ஏன்?”
“வேண்டான்னா… வேண்டாம். எனக்கு நீங்களே வேண்டாம். போதுமா?” அவன் முகம் காணாது கத்திவிட்டு எழுந்து நின்றிருந்தாள். அவனுக்கு முதுகு காட்டியபடி.
“என்னை பார்க்கணும் ம்ருதி. என் முகத்தை… கண்ணை பார்த்து சொல்லு.”
“சொல்றேன்” என்று வேகமாக திரும்பியவளுக்கு அவனின் முகம் பார்த்ததும் உலகமே மறந்தது. இதுவரை காட்டிடவே காட்டிடாத தன்னுடைய மொத்த காதலையும் கண்களில் வழியவிட்டபடி நின்றிருந்தான்.
“விஷ்வா…” அவளின் குரல் கரகரத்து ஒலிக்க, கண்ணில் நீர் இறங்கியது.
“உன் விஷ்வாடி…” என்று அவளை நெருங்கி நின்றவன், அவளின் கையை பிடித்தபடி, “உனக்கு நான் வேணாமா?” என உயிரை கண்களில் தேக்கி வினவினான்.
தன் கையை பிடித்திருந்த அவனின் கை மீதே முகம் புதைத்து கதறிவிட்டாள்.
“ப்ளீஸ்… ப்ளீஸ் விஷ்வா. முடியல. நீ போயிடேன்” என்று இரைஞ்சினாள்.
விஷ்வாவால் அவள் எதையோ உள்ளுக்குள் வைத்து மருகி, தன்னை தவிர்க்கிறாள் என்று புரிந்துகொள்ள முடிந்தது.
“ம்ருதி…” விஷ்வாவின் ஆழ்ந்த ஆறுதலான விளிப்பில் சட்டென்று சுயம் பெற்று அவனிடமிருந்து விலகி தள்ளி நின்றாள்.
“இன்னும் தள்ளியே இருக்கணும் நினைக்கிறியாடா?”
“மொத்தமாவே தள்ளி இருந்துக்கலாம். வாழ்க்கை முழுக்க.”
“காரணம் தெரிஞ்சிக்கலாமா?”
“சொல்ல முடியாது.” அதீத உறுதி அவளிடம்.
“அப்போ என்னாலும் என் காதலை விட முடியாது.” விஷ்வா அத்தனை எளிதாக தன்னை விடமாட்டானென்று அவளுக்குத் தெரியும்.
அன்று நெஞ்சை பிடித்துக்கொண்டு தன்மீது சரிந்த தந்தையின் முகமும், புருஷோத்தமனின் உயிர் வலிக்கச் செய்த கேள்வியும் நினைவிற்குவர அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்தவள்…
உள்ளங்கையில் முகம் புதைத்து…
“ப்ளீஸ் விஷ்வா. விட்டுடேன். இது வேண்டாமே. சொல்லிக்கொள்ளாத விடயம், சொல்லாமலே போகட்டுமே! எனக்கு வேணாம். என்னை விட்டுவிடேன்” என்றவளின் கதறலில்
‘என்ன சொல்கிறாள். நான், என் காதல் வேண்டாமா? இத்தனை வருட நேசம் ஒன்றுமில்லையா அவளுக்கு?’ என அவன் உள்ளுக்குள் குமுறிக்கொண்டிருக்கும் போதே,
“உன் காலில் விழு…” என்று அவனின் பாதம் தொட நீண்டுவிட்ட அவளின் கையை கண்டு பெரும் அதிர்வு கொண்டவனாக இரண்டடி பின் வைத்திருந்தான்.
மொத்தமாய் அவனை நொறுக்கிவிட்டாள்.
பிடிவாதத்தால் விஷ்வாவை அசைக்க முடியாதென்று தெரிந்தவள், யாசிப்பில் இறங்கிவிட்டாள். வீரய்யனின் உயிருக்காக. வீட்டிலிருப்பவர்களின் நிம்மதிக்காக. தங்கள் வாழ்வின் அமைதிக்காக.
புருஷோத்தமனின் இந்தப்பேச்சை நாளை ஊர் பேசினால்? என்ற பதிலற்ற பெரும் கேள்வி அவளின் தொண்டையில் உருள… இதயம் வலிக்க, உயிர் நோக தன் காதலை விட்டுக்கொடுத்திட்டாள்.
சம்ருவின் கண்ணீர் புல் தரையில் சொட்டியது.
அவளின் கண்ணை துடைத்து, தன் நெஞ்சில் அவளை அரவணைத்து என்ன பிரச்சனை என்று கேட்டிட பரபரத்த மனதையும் கையையும் முயன்று கட்டுப்படுத்தியவன்,
அவள் கேட்டதை கொடுத்துவிட முடிவு செய்துவிட்டான்.
இருப்பினும் அவனுக்கு ஒன்று தெரிந்தாக வேண்டியிருந்தது. தன்னை காதலிக்கிறாள். உயிருக்கும் மேலாக நேசிக்கின்றாள். அதனை அவள் வாய் வார்த்தையாகக் கேட்டிட ஆசைகொண்டான்.
“நீ என்னை இன்னும்…?”
“விஷ்வா…” அவள் அவனை பார்த்த பார்வையில் அவனது கேள்வி தொண்டையிலேயே நின்றது.
அவனுக்கு வேண்டிய பதில் அவளது பார்வையில் கிடைத்துவிட்டது.
‘ஏதோ ஆகப்பெரும் குழப்பத்தில் இருக்கிறாள். சில நாட்கள், மாதங்கள், வருடங்கள் செல்லட்டும். அவளாகத் தன்னை தேடி வருவாள். அவளால் நிச்சயம் தன்னைவிட்டு இருக்க முடியாது. நானின்றி அவளில்லை’ என்று இன்னமும் அவள் தன்மீது வைத்திருக்கும் காதலின் நம்பிக்கையில் நினைத்தவன், அவள் தன் காலில் விழயிருந்த செயலினை நம்ப முடியாது, ஏற்க முடியாது தவித்து…
“இனி உன்னைத்தேடி நான் வரமாட்டேன். வரக்கூடாதுன்னு தானே எதிர்பார்க்குற. நீ கேட்டதை நான் செய்றேன். என்னை வேணான்னு சொன்ன நீயே ஒருநாள் நான் வேணுன்னு வருவ. அந்த நாளுக்காகக் காத்திருக்கேன்… ம்ருதி.” விடுவிடுவென அவளை தாண்டி பூங்காவை விட்டு வெளியேறி தன் காரினை கிளப்பிக்கொண்டு பறந்திருந்தான்.
விஷ்வா சொல்லியது போல் அவன் வேண்டுமென்று சென்று அவன்முன் அவள் நிற்கும்போது காலம் கடந்திருக்குமென்றும், அவளுக்கு மாறாக தான் வேண்டாம் எனும் வார்த்தையை சொல்லுவோமென்று அத்தருணம் கனவிலும் நினைத்திருக்கமாட்டான்.