சம்ருதி கல்லூரி நேரத்தில் விஷ்வா தனக்கு உயர் அதிகாரி எனும் விதத்தில் நடந்து கொண்டாலும், காலை மாலை பார்க்கிங்கில் அவனை வம்பு செய்து கொண்டு தான் இருக்கின்றாள்.
அவன் தான் அவள் வழிக்கு வருபவனாக தெரியவில்லை.
தினமும் பிள்ளையார் முன்பு வைக்கப்படும் ரோஜாக்கள் மறுநாள் காய்ந்த மலராக இவள் தான் எடுக்கிறாள். அவனால் எடுக்கப்படமால் வாடிப்போகிறது சம்ருதியின் மனம் போல.
இதற்கிடையில் அம்மையப்பன் விஷ்வாவிடம் எவ்வளவோ எடுத்து கூறியும் அவன் தன் மறுப்பில் உறுதியாக இருந்தான்.
சுசிக்கு சம்ருவை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலும் புன்னகையில் கடந்திடுவாள். எப்போதும் சம்ருதி அப்படித்தான். அதனால் இப்போதும் தானாக சென்று சுசியிடம் பேசவில்லை. ஒருவேளை சுசி பேச முயற்சித்திருந்தாள், சம்ரு பேசியிருப்பாளோ?
சம்ருவே குழந்தையை கொண்டு வந்து காட்டுகிறேன் என்று பலமுறை சொல்லிய போதும் விஷ்வா மறுத்துவிட்டான். அவனுக்கு குழந்தை சம்ருவின் மகளாக இருந்திடவே ஆசை. அதனால் விலகியே இருக்கிறான். நாளை சம்ருவுக்கென்று ஒரு வாழ்கை அமைகிறதென்றால் தன்னால் ஏதும் பிரச்சனை வந்துவிடக் கூடாது என்பதற்காக.
சம்ரு முன்பு போல் இல்லை. இப்போதிருக்கும் சம்ருவுக்கு பிடிவாதம் அதிகமென்று விஷ்வா அறிந்திருக்கவில்லை.
அவளின் பிடிவாதத்தின் அளவை இந்த ஒரு மாதமாக கொஞ்சம் கொஞ்சமாக தெரிந்து கொண்டிருக்கிறான்.
இன்றாவது விஷ்வாவின் பார்வை தன்மீது முன்பு போல் காதலாக விழாதா என்ற எண்ணத்தில் தான் கல்லூரி கிளம்பினாள்.
காரில் வரும் வழி முழுக்க தருணும் ஸ்ரீ’யும் கலகலத்து அத்தனை பேசியபடி வர, சம்ருவின் முகம் சிரிப்பில் விரிந்தபடியே இருந்தது.
ஓரிடத்தில் காரினை நிறுத்தியவள், கைக்குள் அடங்கும் அளவிற்கு முழுக்க சிவப்பு வர்ண ரோஜாக்களை கொத்தாக வாங்கியபடி காரில் ஏறினாள்.
“வாவ்… சித்திம்மா, இட்ஸ் பியூட்டிஃபுல்” என்ற தருண், அதிலிருந்து ஒரு ரோஜாவை எடுத்து ஸ்ரீயின் தலையில் வைத்துவிட்டான்.
“ஸ்ரீக்கு நல்லாயிருக்கு சித்திம்மா” என்ற தருண், “தினமும் வாங்குறீங்க, யாருக்கு இது?” எனக் கேட்டான்.
“எல்லாம் உன் சித்தப்பாக்குத்தான்” என்றவள், தருண் மேற்கொண்டு விளக்கமாக ஏதும் கேட்டுவிடுவானோ என்று, “சரி சரி டைம் ஆச்சு அமைதியா வாங்க” என்று சாலையில் கண் பதித்தாள்.
சுடர் வளாகத்திற்குள் நுழைந்தவள், குழந்தைகள் இருவரையும் கூட்டிக்கொண்டு பள்ளி கட்டிடம் இருக்கும் பகுதிக்குள் விட்டுவிட்டு திரும்பி வருகையில் எதிர்பட்டான் விஷ்வா.
பிள்ளையாரிடம் வைப்பதற்காக எடுத்து வந்த மலர்கள் கையிலிருக்க, அதனையும் விஷ்வாவையும் மாற்றி மாற்றி பார்த்தவள் அங்கேயே நின்றுவிட்டாள்.
விஷ்வா அங்கிருந்து நகர்ந்து தனித்து வரவும் அவன் முன்னால் பூங்கொத்தை நீட்டியவாறு சென்று நின்றாள்.
திடீரென சட்டென்று கண்ணுக்கு முன்னால் வந்த மலர் குவியலை பிடித்திருக்கும் கரம் யாருடையதென்று முகம் பாராது கண்டு கொண்டவன் பூவை தள்ளி அடி வைத்தவனாக முன்னோக்கி செல்ல…
“விஷ்வா ஐ லவ் யூ” என்றிருந்தாள் சம்ருதி.
அவளும் அக்கணம் சொல்ல வேண்டுமென்று நினைக்கவில்லை. தன்னை தவிர்த்து செல்பவனை தடுத்து நிறுத்த தன்னைப்போல் சொல்லிவிட்டாள். ஆனால் முழு மனதாக உணர்ந்து தான் கூறினாள்.
பல வருடங்களாக அவள் சொல்லி அவன் கேட்க தவித்த வார்த்தைகள், பூமழையாய் நெஞ்சை நனைத்து தேகம் முழுக்க சில்லென்று இதம் பரவ பனிச்சிற்பமாய் உறைந்து நின்றான்.
ஒருமுறை சொல்லிவிட்டாள். மறுமுறை சொல்லிட இனி எவ்வித தயக்கமும் இல்லை.
விஷ்வாவின் நிலையை அவதானித்தவளாக, அவன் முன் சென்று நின்றாள்.
“இப்போ இதை வாங்குவியா மாட்டியா?” என்று மிரட்டலாகவே கேட்டாள்.
அவள் சொல்லிய காதல் வார்த்தையில் மனசுக்குள் பூ பூத்துக்கொண்டிருந்தாலும், முகத்தில் மென்மையை காட்டிடாது கடினமாக அவளை பார்த்தான்.
“உங்களுக்கு இப்போ கிளாஸ் இல்லையா?” என்ற விஷ்வா அவளின் பதிலை எதிர்பார்க்காது, வேகமாக அடி வைத்து பள்ளி பகுதியை கடந்து கல்லூரி பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் இருக்கும் பார்க்கிங்கிற்குள் நுழைந்திட, விஷ்வாவை இன்று விடும் எண்ணமில்லாதவளாக அவனை அவனின் வேகத்தோடு நெருங்கி, அவனிற்கு குறுக்கே தன் கையை நீட்டி மறித்து நின்றாள்.
‘இவள் முகத்தை பார்த்தால் கோபமா இருக்க மாதிரி நடிக்கக்கூட வராதே!’ ஒரு மனம் நினைக்க…
‘இப்போ நீ எதுக்கு அவள் மேல கோபமா இருக்க? உன்னை கல்யாணம் பண்ணிக்க சொன்னதாலா?’ மறுமனம் வாதம் செய்தது.
‘எனக்கு நானே எதிரி’ என்று உள்ளுக்குள் அவனால் புலம்ப மட்டுமே முடிந்தது.
“இப்போ நீ வாங்கல… இந்த இடத்துக்கே கேட்குற மாதிரி கத்தி சொல்வேன்” என்றாள்.
அத்தருணம் தான் ஸ்கூட்டியை நிறுத்திட வந்த நிஷாந்தி, கைகளில் ரோஜாக்களுடன் விஷ்வா முன் சம்ருதி நின்றிருப்பதை பார்த்து அதிர்ந்து மரத்துக்கு பின்னால் தன்னை மறைத்தவளாக அவர்களை கவனித்தாள்.
“என்ன வி.ஆர்’ஐ மரியாதை இல்லாமல் ஒருமையில பேசுறா(ள்). என்ன சொல்லிடுவன்னு சொல்லுறா(ள்)?” நிஷாந்தியின் காதுகள் கூர்மை பெற்றன.
நிஷாந்தி ஓரிரு முறை கவனித்திருக்கிறாள். விஷ்வா, சம்ரு நேருக்கு நேர் கடக்க முற்படுகையில் சம்ருவின் முகத்தில் சிரிப்பும், விஷ்வாவின் முகத்தில் முறைப்பும். அப்போதெல்லாம் அதனை சாதாரண பார்வையாக எடுத்துக்கொண்ட நிஷாவுக்கு இப்போது வேறொன்று இருப்பதாகத் தோன்றியது.
“என்ன சொல்லுவ?” தெரிந்து கொண்டே கேட்டான்.
அவள் சொல்லி மீண்டும் கேட்டிட அத்தனை ஆசை அவனுள்.
“ஐ லவ் யூ…!” அத்தனை மென்மையாய் அவன் விழி பார்த்து மொழிந்தாள்.
“இப்போலாம் நான் வைக்கிற பூவை நீ எடுக்கிறது இல்லை. அதான் இன்னைக்கு கையிலே கொடுக்கிறேன். ஒழுங்கா வாங்கிக்கோ!” கிட்டத்தட்ட அவனை மிரட்டினாள்.
இவர்களின் பேச்சினை கேட்க கேட்க நிஷாந்தினியின் அதிர்ச்சி கூடிக்கொண்டே போனது.
‘லட்சுமி மேடத்துகிட்ட கல்யாணம் ஆகிடுச்சு சொல்லிட்டு, இப்போ வி.ஆர்’கிட்ட லவ் யூ சொல்லிட்டு நிக்கிறாள்!’ விஷ்வாவின் மீது ஒரு தலையாக காதல் கொண்டுள்ள நிஷாந்திக்கு அந்நொடி சம்ருவின் மீது அத்தனை வெறுப்பு உண்டானது. தான் விஷ்வாவின் மீதான தன்னுடைய காதலை சொல்லியும் இப்படி செய்கிறாளே என நினைத்ததோடு, சம்ரு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லியதால் அவளின் குணம் பற்றியும் தவறாக நினைத்தாள்.
‘வி.ஆர் பற்றி சரியா தெரிஞ்சிக்காமல் கல்யாணம் ஆனது மறந்து புருஷனுக்கு துரோகம் செய்ற இவளுக்கு இருக்கு இன்னைக்கு’ என்று மனதில் கருவியபடி நிஷாந்தி. ‘நிச்சயம் விஷ்வா கையால் செமத்தயாக வாங்கப்போகிறாள்’ என்று ஆர்வமாக பார்த்திருந்தாள்.
“வாங்க மாட்டியாடா?” விட்டால் அவனை அடித்து விடுவாள் போலும்.
“என்ன டா’லாம் வருது?”
“காலேஜ் படிக்கும்போது இருந்த சம்ரு இல்லை. இப்போ நீ வாங்கல… இதுக்கு மேலயும் பேசுவேன்” என்றாள்.
“முடியாது.”
“அல்ரெடி ஏஜ் ஆச்சுடா. என் வயசு பொண்ணுங்களாம் ஆண்ட்டி ஆகிட்டாங்க. நான் மட்டும் தான் சிங்கிளா இருக்கேன். மிங்கிள் ஆக ஒரு சான்ஸ் கொடுப்பா, ப்ளீஸ்!
சம்ரு சொல்லிய பாவனையில் முகத்தில் தோன்றிய முறுவலை முயன்று இதழுக்குள்ளே மறைத்தான்.
“ட்வென்டி எயிட்லாம் ஆண்ட்டி ஏஜ் கிடையாது!” அவளை கீழிருந்து மேல் பார்த்தவனாக ரசனையாகக் கூறினான். எப்போதுமே மறுத்துக்கொண்டே இருக்கின்றானே என்ற வருத்தத்தில் அவனின் ரசனையை கவனிக்கத் தவறினாள். விஷ்வா நொடியில் சுதாரித்தான்.
“என்னடா இப்போ… நான் நோ சொன்னதுக்கு, ரிவெஞ்சா? அதான் நீ சொன்ன மாதிரி நானே உன்னைத் தேடி வந்துட்டேனே! கல்யாணம் பண்ணிக்கிட்டு பழிவாங்குடா” என்று கண்களை சுருக்கி பாவமாகக் கேட்டாள்.
“இட்ஸ் டூ லேட்… முடியாது” என்றான்.
“அப்போ சரி. நல்லா கேட்டுக்கோ” என்றவள் சத்தமாக “ஐ” என்று ஆரம்பிக்க, அவளின் வாயில் தன் கையை வைத்து மூடியவனாக… சுற்றி பார்த்தவன்,
அந்த பகுதியை கடக்கும் போது மரத்திற்கு பின்னால் நின்றிருந்த நிஷாந்தியை பார்த்துவிட்டான். ஆனால் காணாதது போல் சென்றுவிட்டான்.
சம்ருதி தன்னுடைய துறையில் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்று சொல்லியது விஷ்வாவுக்கும் தெரிந்துதான் இருந்தது. அந்நிலையில் இப்போதைய தங்களின் நிலை நிஷாந்தியை வேறு மாதிரி நினைக்க வைத்திருக்கும். பேச்சு தவறான முறையில் உலவத் துவங்கும் என்பதை நொடியில் கணித்தான்.
தன்னுடைய அலுவலக அறைக்குள் சென்றவன், எதையோ யோசித்தவனாக அம்மையப்பனுக்கு அழைத்திருந்தான்.
சம்ரு நேரமாகியதால் ஸ்டாப் ரூம் செல்லாது, நேராக வகுப்பறை சென்றுவிட்டாள்.
இந்த சில நாட்களாக எப்போதும் தன்னிடம் கடிந்து கொள்ளும் விஷ்வா இன்று பூவை வாங்கிக்கொண்டது அவளவில் சிறு வெற்றியாக நினைத்தவளுக்கு அத்தனை மகிழ்வாக இருந்தது.
எப்படியும் விஷ்வாவை சீக்கிரம் திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள வைத்திடலாம் என்ற நம்பிக்கை அவளுள் வேர்விட்டது.
தொடர் வகுப்புகள் இருந்திடவே இடைவேளையின் போது தான் சம்ரு ஆசிரியர்கள் அறைக்குள் வந்தாள்.
தன்னுடைய இருக்கையில் அமர்ந்த பின்னர் தான், எல்லோரின் பார்வையும் தன் மீதே நிலைத்திருப்பதை உணர்ந்தாள். துறை தலைவர் இந்திரன் உட்பட தன்னையே பார்த்திட என்னவென்று புரியாது குழம்பினாள்.
விசும்பல் ஒலி கேட்டிட யாரென்று பார்க்க… நிஷாந்தி தான், சுதாவின் தோள் மீது சாய்ந்து அழுது கொண்டிருந்தாள்.
“அச்சோ நிஷாந்தி மேம் ஏன் அழறீங்க?” என்றவளாக எழுந்து சென்று நிஷாவின் தோள் மீது சம்ரு கை வைத்திட, வெடுக்கென தட்டிவிட்டாள்.
காரணமே தெரியாவிட்டாலும் நிஷாவின் வெறுப்பில் சட்டென்று கலங்கி விட்ட கண்ணோடு கணியனை பார்த்தாள்.
நிஷாந்தி அனைவரிடமும் சம்ரு விஷ்வாவுக்கு பூ கொடுத்தது, லவ் யூ சொல்லியதை சொல்லியிருந்தாள். அத்தோடு சம்ரு திருமணமாகிவிட்டது என்று சொல்லியதை வைத்து அவளை தவறாக சித்தரித்து கூறியதோடு, தன் காதலை பறிக்கவே வேண்டுமென்று செய்கிறாள் என்றும் கூறியிருக்க, சம்ருவை பற்றி முழுதாக தெரிந்திடாத மற்ற ஆசிரியர்கள் நிஷாவின் பேச்சினை அப்படியே நம்பியிருந்தனர்.
கணியன் மற்றும் லட்சுமி மட்டும் வேறு காரணமிருக்குமென்று நிஷாவின் பேச்சுக்கு எவ்வித கருத்தும் கூறாது அமைதியாக இருந்தனர்.
இப்போது சம்ரு தங்களை பார்த்திட, கணியன் மற்றும் லட்சுமி மேடம் தாங்கள் துணை நிற்பதாக கண்களை மூடி திறந்தனர்.
கணியனுக்கு நிஷாந்தி வந்து சொல்லும்போதே… சம்ரு கணவன் பெயர் விஷ்வாயென்று சொல்லியது நினைவில் உதித்து, சம்ரு சொல்லிய விஷ்வா… வி.ஆர் தானோ? என்று யூகிக்க வைத்தது. அதே சமயம் சம்ரு வி.ஆர் உடனில்லாது எதிர்வீட்டிற்கு சென்றது குழப்பவும் செய்தது. இருப்பினும் சம்ருவை ஒரு நொடி கூட கணியன் தவறாக எண்ணவில்லை. அதனாலேயே சம்ருவிடம் தன் ஆதரவை தெரிவித்தான்.
நிஷாந்தியின் அழுகை மேலும் கூடிட…
“மிஸ்.நிஷாந்தி இது அவங்க தனிப்பட்ட விடயம். இதற்கெதற்கு இப்படி அழுகிறீர்கள்?” என்று கேட்டான்.
“எப்படி சார் அவளுடைய தனிப்பட்ட விடயமாகும். நான் வி.ஆர்’ஐ காதலிக்கிறேன் தெரிந்தும், இவள்… ச்சீ” என்று நிஷா முகம் சுழித்திட…
“அதுவும் கல்யாணம் செய்து குழந்தை இருக்கும்போதே… இன்னொரு ஆணை வளைத்துப்போட நினைக்கும் இவளெல்லாம் என்ன ஜென்மமோ?” என்று சுதா பேசினார்.
“போதும்” என்று உடல் குறுகி காதினை பொத்தியவளாக தனது இருக்கையில் சம்ரு பொத்தென்று அமர, கலங்கிய கண்ணீரை கன்னம் வழியவிடாது அடக்கியதால் பட்டென்று ரத்தம் வெளிறிய முகத்தை பிறருக்கு காட்டாது நிலம் தாழ்த்தினாள்.
“திஸ் இஸ் டூ மச் சுதா மேம்” என்று கணியன் பரிந்துவர,
“என்ன கணியன் சார் உங்களையும் மயக்கிட்டாளா? உங்கக்கிட்ட மட்டும் சிரிச்சு சிரிச்சு பேசும்போதே நினைச்சேன்” என்ற நிஷாந்தினியை,
“ரொம்பத்தான் நல்லவ(ள்) மாதிரி சீன் போடுறாள். நானே நேரில் பார்த்தேன். முதலில் இவளை முறைச்சிட்டு இருந்தவர், என்ன சொன்னாளோ பூ வாங்கிட்டு போயிட்டார். இவள் விரிச்ச வலையில் வி.ஆர் விழுந்துட்டாருன்னு தான் நினைக்கிறேன்.” நிஷா தன்போக்கில் வரம்பற்று பேசிக்கொண்டே சென்றாள்.
“தப்பு பண்ணதால் தான் மறுக்க முடியாது அமைதியா உட்கார்ந்திருக்காள்” என்று சுதா நொடிக்க…
“என்ன சார் பார்த்திட்டு இருக்கீங்க. என்னவா வேணாலும் இருக்கட்டும். அது அவங்க பெர்ஸ்னல். அதை விமர்சிக்க நமக்கு ரைட்ஸ் கிடையாது.” கணியன் இந்திரனிடம் கூறினான்.
இந்திரனுக்கு சம்ரு படிக்கும் காலத்தில் அவளைப்பற்றி தெரியும் என்பதால், நிஷாந்தி ஏதோ தவறாக புரிந்துகொண்டு பேசுவதாகவே நினைத்தார். அதனால் அவளை அமைதியாக இருக்கும்படி அவர் கேட்டுக்கொண்டிருக்கும் போது…