சுடர் தலைமை கல்வி குழுமத்தின் மொத்த ஆசிரியர்களும்… அந்த பரந்த கூடத்தில் கூடியிருந்தனர்.
தங்களது துறைக்கு மட்டுமான கூட்டமென்ற எண்ணத்தில் வந்தவர்கள் பலருக்கும் ஆச்சரியமே.
அனைவரும் காரணம் என்னவாக இருக்குமென்று யோசித்தபடி இருக்க… கூட்டத்திற்கு அம்மையப்பன் வந்து சேர்ந்தார்.
மரியாதை நிமித்தமாக அனைவரும் எழுந்து நின்றிட, பொதுவாக வணக்கம் தெரிவித்து நடுநாயகமாக போடப்பட்டிருந்த இருக்கைக்கு அருகிலிருந்த இருக்கையில் அமர்ந்தார்.
அனைவரும் அமருமுன் தன் வேக எட்டுக்களுடன் மிடுக்காய் கம்பீரமாய் வந்து நின்றான் விஷ்வரூபன்.
மையத்தில் தலைமையாய் போடப்பட்டுள்ள இருக்கை, சுடரின் மன்னனான அவனுக்கானதாக இருந்தாலும், தந்தைக்கான மரியாதைக்காக அதில் அமராது நின்றபடியே தன் பேச்சினை ஆரம்பித்தான்.
விஷ்வாவின் இந்த செயலில் தந்தையாய் மட்டுமல்ல சுடரின் நிர்வாகியாகவும் அம்மையப்பன் கர்வம் கொண்டார்.
ஆங்கிலத்தில் பொதுவாக அனைவரும் வந்ததற்காக நன்றி தெரிவித்தவனின் பார்வை சம்ருவிடம் நிலைத்து தேங்கியது.
பார்த்ததும் கண்டுகொண்டான். சம்ருவின் அழுது சிவந்த முகம் அவளின் கண்ணீர் கணத்தை அவனுக்கு காட்டிக்கொடுத்திட்டது.
விஷ்வாவின் விழிகள் சம்ருவின் மீதிருக்க… நிஷாந்தியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அவள் வாய்க்குள்ளே ஏதும் முணகுவது அவளின் உதட்டசைவில் தெரிந்தது.
“இப்போ உங்கள் எல்லாரையும் ஒன்று கூட்டியதற்கான காரணம்… ஒரு சந்தோஷமான விடயத்தை ஷேர் பண்ணிக்க அண்ட் உங்களையெல்லாம் ஒரு நிகழ்வுக்காக இன்வைட் செய்வதற்காக” என்ற விஷ்வா, “கண்ணன்” என்றிட, கண்ணன் தனக்கு கீழ் இன்னும் சிலரை வைத்துக்கொண்டு அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினான்.
“எதுக்கு சார் சுவீட்ஸ்?”
“அப்பா சொல்லுவாங்க” என்ற விஷ்வா, “ம்ருதி” என்றழைக்க…
சற்று நேரத்திற்கு முன்பு தன்னுடைய சுய ஒழுக்கத்தையே கேள்விக்குறியாக்கி தன்மீது சாற்றப்பட்ட பழியில் மனம் துவண்டு அதே யோசனையில் இருந்தவள், மூன்று வருடங்களுக்கு பின்னான விஷ்வாவின் அவளுக்கான பிரத்யேக விளிப்பில் விலுக்கென நிமிர்ந்து பார்த்தாள்.
“கம் பை மை சைட்” என்றான்.
சம்ருதி எதெற்கென்று புரியாது பார்க்க…
“வாம்மா” என்று எழுந்து நின்று அழைத்தார் அம்மையப்பன்.
“இவளுக்கு செம டோஸ் விழப்போகுது நினைக்கிறேன். இவளை மாதிரி வேற யாரும் பண்ணக்கூடாதுன்னு தான் எல்லாரையும் ஒண்ணு கூட்டி, அவளை வேலையை விட்டு தூக்கப்போறங்க நினைக்கிறேன்” என்று தனக்கு அருகில் அமர்ந்திருந்த சுதாவிடம் சொல்லி அல்ப சந்தோஷம் கொண்டாள் நிஷாந்தி.
அம்மையப்பன் அழைத்தற்காக தயங்கித்தயங்கித்தான் விஷ்வாவின் பக்கத்தில் வந்து நின்றாள் சம்ருதி.
“இவங்க சம்ருதி. பொறியியல் துறையில் பணிபுரிபவர்களுக்கு இவங்களை ஆசிரியராக கடந்த ஒரு மாதமாகத் தெரிந்திருக்கலாம். உங்களுக்கும் தெரியாத இன்னொரு விடயத்தை இப்போது சொல்லப்போகிறேன்” என்ற அம்மையப்பன், சம்ருதியின் தலையில் பரிவாய் தன் கையை வைத்தவராக,
“இவங்க தான் உங்க கரெஸ்பான்டன்ட் வி.ஆர்’ன் மனைவி” என்றார்.
இருவரை தவிர மற்ற அனைவரும் தங்களின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக கை தட்டினர்.
அதிர்வுக்குள் மாட்டிய இருவர் சம்ருதி, நிஷாந்தி.
சம்ரு விஷ்வாவை ஏறிட, அவனோ இமை மூடி திறந்து அவளின் கரம் பற்றி அழுத்தம் கொடுத்தான்.
“சம்ரு, வி.ஆர்’ன் மனைவியாம். உண்மை தெரியாமல் உன்னோடு சேர்ந்து நானும் அதிகமா பேசிட்டேன். இப்போ நம்ம வேலை தான் காலி” என்று சுதா புலம்ப, அவளை முறைத்த நிஷாந்தியை அந்த துறை ஆசிரியர்கள் அனைவரும் கண்டனமாக பார்த்தனர்.
“இதற்குத்தான் உண்மை தெரியாமல் பார்ப்பதையெல்லாம் வைத்து நம் இஷ்டத்துக்கு பேசக்கூடாது” என்று நிஷாவுக்கு கொட்டு வைத்தான் கணி.
“விடு கணி. இப்போ உண்மை தெரிந்தாலும், இது திருந்திற கேஸ் கிடையாது” என்ற லட்சுமி மேடம் அம்மையப்பன் பேச்சில் கவனம் வைத்தார்.
“இரண்டு மாதங்களுக்கு முன்பு… அதாவது வி.ஆர்’க்கு டிவோர்ஸ் கிடைத்த நான்கு நாட்களில் வி.ஆர் மற்றும் சம்ருதி பதிவு திருமணம் எங்களின் இருவீட்டார் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்றது” என்று அம்மையப்பன் சொல்லியதும், சம்ருவிடம் அதிர்ச்சி கலந்த ஆச்சர்யம்.
சேலம் சுடர் ஆசிரமத்தில் குழந்தையை தத்தெடுப்பதற்காக கல்யாணமாகிவிட்டது என்று சரோஜாவிடம் சம்ரு கொடுத்த பதிவு திருமண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நாளினை தான் அம்மையப்பன் இங்கு குறிப்பிட்டார்.
‘இதெப்படி?’ என்ற அதிர்வு தான் அவளிடம்.
“இப்போது எல்லாருக்கும் இவர்களின் திருமணத்தை தெரியப்படுத்தும் விதத்தில் நாளை மறுநாள் எங்கள் வீட்டிலேயே வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யட்டுள்ளது. தகவலாக நோட்டிஸ் போர்டில் போட்டிருக்கலாம், ஆனால் அது முறையாகாதே! தனித்தனியாக அழைத்தால் தானே சந்தோஷம். ஒவ்வொருத்தரா தனித்தனியாக பார்த்து அழைக்க நேரமில்லை. எங்க வீட்டம்மா அவசரமா முடிவு பண்ணதால் இந்த ஏற்பாடு தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். கண்டிப்பா எல்லாரும் வரணும்” என்ற அம்மையப்பன், கண்ணன் மூலமாக அழைப்பிதழை அனைவருக்கும் கொடுத்தார்.
மரத்திற்கு பின்னால் நிஷாந்தி ஒளிந்து நிற்பதை கண்டதுமே… தன் மீது ஈர்ப்புள்ள நிஷாவின் பேச்சு சம்ரு குறித்து நிச்சயம் தவறாகத்தான் இருக்கும். அப்பேச்சு நிச்சயம் நிஷாவோடு முடிந்துவிடாது என்று சரியாக ஆராய்ந்து அலசிய விஷ்வா, இன்றே அதற்கு முற்றுப்புள்ளி வைத்திட முடிவெடுத்தான்.
தன்னுடனே ஆயினும் சம்ருவின் பெயர் தவறான கண்ணோட்டத்தில் இணைத்து பேசுவதில் அவனுக்கு உடன்பாடில்லை. அவர்களின் தவறான சித்தரிப்பை நல்ல விதமாக மாற்ற முடிவு செய்தவன், அதுவரை பல காரணங்களுக்காக சம்ருவை மறுத்தவன், அம்மையப்பனுக்கு அழைத்து பேசிவிட்டான்.
விஷ்வா சொல்லியதையே அம்மையப்பன் ஒரு வார்த்தை மாறாது அனைவரின் முன்பும் பேசினார்.
பணமிருந்தால் போதும், நொடியில் உலகை விலைபேசிடலாம். அந்த கூற்று தான் அழைப்பிதழ் விடயத்தில் நடந்தது. இதுதான் தன் திட்டமென்று தீர்மானித்ததும் ஒரு மணி நேரத்தில் தான் நினைத்ததை குறிப்பிட்டு அழைப்பிதழை கைக்கு வரவழைத்துவிட்டான் விஷ்வா. இம்முடிவிற்கு முன்பு வருணிடம் சொல்ல விஷ்வா மறக்கவில்லை.
இந்நிலையில் சம்ருவை தவிக்கவிட்டுவிடாது அவள் மீது அக்கறை கொண்டு இப்போவாவது திருமணம் செய்ய ஒப்புக்கொண்டானே என்று வருண் மகிழத்தான் செய்தான்.
விஷ்வா விடயத்தை சொல்லியதும், மருத்துவமனையிலிருந்த வருண் யுகியிடம் சொல்லிட உடனடியாக வீட்டிற்கு புறப்பட்டிருந்தான்.
விஷ்வாவின் முதல் திருமண முறிவுக்கு என்ன காரணமென்று யாருக்கும் தெரியாது. இருப்பினும் தங்கள் முதலாளியின் சந்தோஷ வாழ்விற்கான அடுத்த நிலை அனைவருக்கும் ஒருவித திருப்தியை கொடுத்திருக்க, விஷ்வா மற்றும் சம்ருவை வாழ்த்தி மீட்டிங் ஹால் விட்டு ஒவ்வொருத்தராக வெளியேறினர்.
கணியன், லட்சுமி தங்கள் மனம் நிறைந்த மகிழ்வை சம்ருவிடம் வெளிப்படுத்திச் சென்றனர்.
இறுதியாக, சுதாவுடன் சென்ற நிஷாந்தி மட்டும் சம்ருவை முறைத்துக்கொண்டே சென்றாள்.
சம்ரு கலக்கமாக அவளை பார்த்திருக்க…
“சிலருடைய பேச்சுக்களை எப்போதும் காதில் வாங்கி தலையில் ஏற்றிக்கொள்ளக்கூடாது” என்றான் விஷ்வா.
அக்கணம் சம்ருவுக்கு நடப்பதற்கான காரணம் விளங்கிற்று.
“அப்போ இது எனக்காக, நமக்காக இல்லையா?”
அவளின் கேள்விக்கு விஷ்வாவிடம் பதில் இல்லை.
“என்னை தப்பா பேசுறாங்கன்னு பரிதாபத்தில் இந்த ஏற்பாடா?” கண்ணீர் கன்னம் வழிந்தது.
இதயத்தில் சுருக்கென்ற வலி விஷ்வாவிடம்.
“என் காதலுக்காக ம்ருதி. ஐ ஸ்டில் லவ் யூ. லவ் யூ ஃபார்எவர் அண்ட் எவர். உன்னை எப்போ லவ் பண்ண ஆரம்பிச்சனோ அப்பவே இங்க என் பொண்டாட்டியாதான் இருக்க” என்று தன் மனதை தொட்டு காண்பித்து கூறியவன், “என் பொண்டாட்டியை என்னோட சேர்த்து வைத்து பேசினாலும் கூட தப்பான முறையில் அது இருக்கக்கூடாது. அதுக்காகத்தான் இது” என்றான்.
விஷ்வா முதல் முறையாக தன் காதலை வாய் திறந்து வார்த்தையாக மொழிந்திருக்கிறான். அதுவும் தன் தந்தையின் முன்னிலையில்.
அம்மையப்பனுக்கே மகன் காதலை சொல்லும்போது அவனது முகம் காட்டிய ஜாலத்தில் அத்தனை வியப்பு. மொத்த காதலையும் பார்வையில் தேக்கி கொட்டியிருந்தானே.
அந்த பார்வையில் சம்ருவே ஃப்ரீஸாகி நின்றாள்.
இருவருக்கும் திருமணமே ஆகாத நிலையில் அவன் சொல்லிய பொண்டாட்டி என்கிற வார்த்தையிலிருந்த அத்தனை உரிமை, தாலிகட்டிய அஞ்சலியிடம் விஷ்வா வெளிப்படுத்தியதாக அம்மையப்பனுக்கு நினைவே இல்லை.
இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர் என்பது மட்டுமே விஷ்வா, அஞ்சலியின் திருமணத்திற்கு சான்றாக இருந்தது.
இதில் சுடர் உதித்தது அம்மையப்பனுக்கு பெரும் வியப்பே!
உண்மை தெரிந்தால் சம்ருவின் காதலை உயர்வாக பார்த்திடும் அனைவருக்கும் விஷ்வாவின் காதல் சிகரமாகத் தெரிந்திடும்.
“இப்பவும் உன்னை காதலிப்பதால் மட்டும் தான் இதென்று, என் காதல் மேல் நம்பிக்கை இருந்தால் என்னை கல்யாணம் பண்ணிக்கோ! நாளை காலை உச்சி பிள்ளையார் கோவிலில் நமக்கு கல்யாணம். உனக்கு வேண்டான்னா நிறுத்திடலாம். நாளை விடியும் வரை உனக்கு டைம் இருக்கு” என்ற விஷ்வா வேகமாக சென்றிட, அவன் சொல்லிச்சென்றதை நம்ப இயலாது உறைந்து நின்றிருந்தாள் சம்ருதி.
“சம்ரு…”
“ஹான்.”
அம்மையப்பன் தோள் தொட சுயம் மீண்டவள்,
“மாமா… உண்மையாவே கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்களா?” என்று நம்ப முடியாது வினவினாள்.
“அவன் அப்பவும், இப்பவும் உன்னை மட்டும் தா’ம்மா விரும்புறான்” என்றவர்,
“அஞ்சலியோடு அவன் சந்தோஷமாக, நிறைவா வாழல. உன்னோடு கற்பனை செய்த வாழ்க்கையை இன்னொரு பெண்ணுடன் வாழ்வதற்கு விஷ்வா சராசரி ஆண் கிடையாது” என்றார்.
“ஆனால், சுடர் வந்தது எனக்கும் ஆச்சரியம். அந்த அச்சரியத்துக்கும் காரணம் இருக்கும்” என்றார்.
விஷ்வா, அஞ்சலி திருமண வாழ்வை கூறப்போகிறாரென்று யூகித்த சம்ரு,
“எனக்கு எதுவும் தெரிய வேண்டாம் மாமா. அவங்களை அவங்களுக்காக மட்டுமே நான் கல்யாணம் செய்துகொண்டதாக இருக்கணும்” என்றாள். அழுத்தமாக.
“எனக்கு… என் காதலுக்கு, என் விஷ்வாவால் எப்பவும் துரோகம் பண்ண முடியாது மாமா!” என்றவள்,
“என் பக்கம் சில மன வருத்தங்கள் இருக்கு. அதோட என்னால் கல்யாணம் செய்துகொள்ள முடியாது” என்றதோடு, சில வருடங்களுக்கு முன்னால் புருஷோத்தமன் தங்கள் வாழ்வில் எப்படி விளையாடினார் என்பதை எல்லாம் கூறியவள், “அவர் எங்க கல்யாணத்துக்கு வரணும். விஷ்வா என் கழுத்தில் தாலி கட்டுவதை அவர் பார்க்கணும்” என்றாள்.
“அஞ்சலி போனதுக்கு அப்புறம், அவனுக்கும் நமக்கும் எந்த தொடர்புமில்லையேம்மா! அவன் எதுக்கு? அவன் பார்வை பட்டாலே உங்க சந்தோஷம் குலைந்து போகும்” என்றார்.
“எனக்கும் லேட்டா தான்’ப்பா தெரியும்” என்ற அம்மையப்பன், “உன் அம்மாவுக்காக பார்த்து உன் வாழ்கையில் அவனை விளையாடவிட்டு சும்மா இருந்துட்டேன்” என்று வருந்தியவர், “எனக்கு உண்மை தெரிந்ததும், புருஷோத்தமனுக்கான தண்டனையை கொடுத்திருந்தால், உன் திருமணத்தில் அவன் முடிவெடுத்திருக்க மாட்டான். இதில் உங்க ரெண்டு பேரோட வாழ்வு வீணாகுமென்று நினைக்கவில்லை. என்னை மன்னிச்சிடுங்க” என்று இருவருக்கும் பொதுவாய் மன்னிப்பை வேண்டினார்.
சம்ரு தான் பதறினாள். அவர் மன்னிப்பு வேண்டியதில்.
விஷ்வா அவர் மன்னிப்பு கேட்டது சரியெனும் விதமாக, அங்கிருந்து மௌனமாக வெளியேறியிருந்தான்.