சம்ருவின் குடும்பமும், விஷ்வாவின் குடும்பமும் தனித்தனி காரில் உச்சி பிள்ளையார் கோவில் மலையடிவாரத்தில் வந்திறங்கினர்.
மணப்பெண்ணாய் விஷ்வா தேர்வு செய்த புடவையில் தேவதையென ஜொலித்தாள் சம்ருதி. மிதமான ஒப்பணை. அளவான நகைகள். எழில் மலராய் வந்திறங்கியவளை அத்தனை ரசனையாய் பார்த்திருந்தான் விஷ்வா.
காலையில் அவளை பார்த்த நொடி முதல் அவனது கண்களில் அந்த ரசிப்பு குறையவில்லை.
இருவீட்டாருடன், ராஜா மற்றும் தினேஷ். ராஜா தன் புது மனைவியுடன் வந்திருந்தான். மேலே கோவிலில் அனைத்து ஏற்பாடும் வருண், மித்ரன் அவர்களுடன் ராஜா, தினேஷ் தான்.
“அனு படியேறிடுவியா?” சம்ரு தான் அவளின் மேடிட்ட வயிற்றை கண்டு வினவினாள்.
சம்ரு கேட்ட பின்னரே அனைவரும் அனு எப்படி இத்தனை படிகள் ஏறுவாளென்று யோசித்தனர்.
“அச்சோ ஒண்ணுமில்லை. ஏறிடுவேன். முடியலன்னா என் புருஷன் எதுக்கு இருக்கார். என்னை தூக்கிட்டு ஏறுவார்” என்று வினித்தை பார்த்து அனு கண்ணடிக்க… “ஆத்தீ” என்று வினித் பொய்யாய் அளறினான்.
அங்கே சிரிப்பலை எழுந்து அடங்க,
“ரெண்டு பேரும் ஒண்ணா படி ஏறுங்கப்பா!” என்று சம்ரு விஷ்வாவை சுஜா கூறினார்.
“நீங்க ஏறுங்க” என்று எல்லோரையும் முன்னே போகச் செய்தவன்,
அங்கேயிருந்த பூக்கடை நோக்கி செல்ல சம்ருவுக்கு புரிந்துவிட்டது.
காம்பு நீண்ட மூன்று ரோஜாவுடன் திரும்பி வந்தவன் தனக்காக தனித்து நின்றிருந்த தன்னவளின் அருகில் நின்றான்.
விஷ்வாவின் கையிலிருந்த ரோஜாவையே பார்த்த சம்ரு,
“ஏறலாமா?” எனக் கேட்டாள்.
விஷ்வா பதில் சொல்லாது முதல் படியில் கால் வைத்திட, சட்டென்று அவனது கரத்தோடு தன் கரம் கோர்த்தவளாக அடி வைத்தாள் சம்ருதி.
தன் கரம் பிடித்தவளின் கையில் விஷ்வாவின் அழுத்தம் கூடியது.
இனி என்றுமே விடேன் எனும் தீவிரம் அதில்.
இருவரும் ஒருவரின் அருகாமையை மற்றவர் இதமாய் அனுபவித்தபடி அமைதியாய் படியேறினர்.
அனு சொல்லியது போல் பாதி படிகள் கடந்ததும், அனு வேண்டாமென்று மறுக்க மறுக்க வினித் அவளை தன் மகவோடு சேர்த்து தூக்கிக்கொண்டான்.
அதனை பார்த்த சம்ருவுக்கு விஷ்வா தூக்கிட இருவரும் ஒருவராய் அப்படிகளை கடந்திட ஆசை உந்தியது.
சட்டென்று தன் நடையை நிறுத்தி நின்றுவிட்டாள்.
அவளின் கரம் அவனது பிடியிலிருக்க, அவளுக்கு முன் ஒரு படி அடி வைத்த விஷ்வா என்னவென்று நின்று திரும்பிட… தங்களுக்கு முன் செல்பவர்கள் மேலும் பல படிகள் முன்னேற எதுவும் சொல்லாது மற்றொரு கையை தன்னிடையில் குற்றி களைத்தவளாக இதழ் குவித்து காற்றை வெளியேற்றியவள்…
“முடியல விஷ்வா” என்றாள்.
அவளின் ஒவ்வொரு அசைவுக்கும் பிரதிபலிப்பை அவன் அறிவானே!
அவளின் எண்ணத்தை கண்டு கொண்டான்.
‘பிளான் பண்ணிட்டா(ள்) விஷ்வா!’ உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்.
“ட்ரை பண்ணு… 150 ஸ்டெப்ஸ் தான் மூவ் ஆகிருக்கோம். அதுக்குள்ள டயர்ட் ஆனால் எப்படி?” என அடுத்து என்ன காரணம் சொல்லப்போகிறாள் என்ற எதிர்பார்ப்போடு தன் சிரிப்பை மறைத்தவனாகக் கேட்டான்.
கண்களை அவள் அகல விரித்து படிகளை மலைப்பாய் ஏறிட…
“என்ன?” என்றான்.
“மொத்தம் எவ்வளவு ஸ்டெப்ஸ்?” எனக் கேட்டாள்.
“437 ஸ்டெப்ஸ்!”
“ஷ்ஷ்ஷ்ஷ்… எப்படி தெரியும்?”
“சின்னபிள்ளையல இங்க வரும்போது விளையாட்டா எண்ணியது.”
“கேடி…” அவனின் மெல்லிய உச்சரிப்பு அவளுக்கும் கேட்டது. அவனது மார்பிலேயே தன் புன்னகையை ஒளித்தாள்.
விஷ்வாவின் கையிலிருந்த மலர்களை வாங்கிக்கொண்டவள், விஷ்வாவின் கழுத்தை சுற்றி மலரோடு சேர்த்து தன் கரம் கோர்த்திட்டாள். அவனின் ஒரு கரம் அவளின் வெற்றிடையில் அழுத்தமாய் படிந்திருக்க… அவளுக்கு எப்படியோ அவனுக்கு தான் அவஸ்தை கூடியது.
°இருபத்தி ஒன்பது வருட பிரம்மச்சரியம்° அவளின் முதல் நெருக்கத்தில் தவிடுபொடியாய் உள்ளுக்குள் உடைவதை ஒருவித சிலிர்ப்புடன் உணர்ந்தான்.
விஷ்வாவின் பார்வை நேர்கொண்டு படிகளின் மீதே இருக்க… அவனவளின் ரசனையான விழி வருடல் அவனது முகத்திலேயே நிலைத்தது.
பட்டென்று அவனின் கன்னத்தை விரல்கள் குவித்து கிள்ளியவள் தன் உதட்டில் முத்தம் வைப்பது போல் செய்திட… விஷ்வாவின் சகலமும் உறை நிலைக்கு சென்றுவிட்டது.
“செமயா இருக்கடா… இப்படியே எங்காவது போயிடலாமா?”
தன் பார்வை அவளின் முகம் நோக்கி தாழ்த்த… ஒற்றை கண்ணடித்து அவனை மேலும் சீண்டினாள்.
அதில் அவன் பொய்யாய் முறைத்திட…
“விட்டுப்போன வருடத்துக்கும் சேர்த்து மொத்தமா லவ் பண்ண வேண்டாமா வீ…ஆர்… விஷ்வா?!”
நெஞ்சத்தை தைத்த அம்பு பூ பூத்திட… உடல் முழுக்க நொடியில் மலர்ந்திட்ட ரோஜா பூக்களை தன்னவளுக்கு மறைத்தவனாக,
“பேசாம வாடி” என்று கொஞ்சலாய் கடிந்து கொண்டான்.
இருவரிடமுமே மற்றவர் அறியா கள்ளப்புன்னகை.
அக்கணம் அவர்களுக்குள் இருந்தது எல்லாம் ஒருவர் மற்றவரிடம் எப்போதடா காட்டிடுவோம் என்று நெஞ்சுக்குழியில் பொத்தி வைத்த காதல் மட்டுமே!
நடுவில் நடந்தவை யாவும் அந்நொடி காணாமல் போயிருந்தன.
அவளின் அமைதி எல்லாம் சில படிகள் கடக்கும் வரையில் மட்டுமே!
மீண்டும் அவனை காதல் பார்வையால் விழுங்கி வைத்தாள்.
‘ஒரு முடிவோடு தான் இருக்கா(ள்)ப்போல.’
விஷ்வாவின் மீசை நுனியை பிடித்து இழுத்தவள்,
“இப்பவும் நம்ம குழந்தையை பார்க்க தோணலையா?” எனக் கேட்டிருந்தாள்.
“முதலில் என் பொண்டாட்டிக்கு முறைப்படி புருஷனாகிடுறேன். அப்புறம் உரிமையா அப்பாவா நம்ம குழந்தையை பார்க்கிறேன்” என்றான்.
அவனது நேரடியான சில வார்த்தைகளில் பொதிந்திருந்த பல அர்த்தமான பொருளில் பனித்த தன் கண்ணீரை தனக்குள்ளே விழுங்கிட சுற்றம் மறந்து தன்னவனின் கன்னத்தில் அழுத்தமாய் முதல் முத்திரையை பதித்தாள்.
அதன் பின்னர் இருவரிடமுமே விவரிக்க முடியாத மோன நிலை. மலை ஏறும் வரை தொடர்ந்தது.
உச்சியில் கோவில் வாயிலில் தான் தன்னவளை இறக்கிவிட்டான். தன் குடும்பத்தார் யாரின் ஆச்சரிய விழி விரிப்பையும் விஷ்வா கண்டுகொள்ளவில்லை.
“வாவ் அண்ணா… சூப்பர். முழு படிகளும் தூக்கிட்டு வந்துட்டீங்களா?” என்று ஆச்சரியமாக வினவிய அனு, வினித் முடியலன்னு பாதியிலேயே இறக்கி விட்டுட்டார்” என்று தன் கணவனை வாரினாள்.
“நீ மட்டுன்னா பரவாயில்லை. உள்ள பாப்பா இருக்கிறதால டபுள் சைஸில் இருக்க… கொஞ்ச தூரம் தூக்கியதே பெரிது” என்று அவன் போலியாய் கோபம் கொள்ள… யாரும் அறியாது அனு காற்றில் வைத்த முத்தத்தில் சமாதானம் ஆகினான்.
அனைவரும் திருமணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பகுதிக்கு வர,
அங்கு அனைத்தையும் சரி பார்த்துக்கொண்டிருந்த மித்ரன் மற்றும் வருணிடம், தேங்காய்களை அடுக்கியவனாக…
“கல்யாணமாகி நாலு நாள் தாண்டா ஆகுது. ஜாலியா ஹனிமூன் போக வேண்டியவனை, இப்படி நானூறு படி ஏறவிட்டு இடுப்பு எலும்பை உடைச்சு வேலை வாங்குறீங்களே! மனசாட்சி இல்லாதவங்க…” என்று புலம்பிக்கொண்டிருந்தான் ராஜா.
“அதான் என் வேலையை பார்க்க முடியாமல் பண்ணிட்டீங்களே!” என்று வராத கண்ணீரை ராஜா துடைத்த பாவனையில் அவ்விடம் வந்து சேர்ந்த அனைவரிடமும் சிரிப்பின் எதிரொலி.
மணமேடையில் விஷ்வா சம்ருதி அமர வைக்கப்பட… ஐயர் சொல்லிய அனைத்து மந்திரங்களையும் கர்ம சிரத்தையுடன் செய்தான் விஷ்வா. சில மணித்துளிகளில் இருவரின் நலனில் அக்கறை கொண்ட நல்லுள்ளங்களுக்கு மத்தியில், அவர்களின் காதலையே முற்றும் முழுதாய் அழித்திட நினைத்த புருஷோத்தமன் பார்த்திட தங்கத் தாலியை தன் நேசத்திற்குரியவளின் கழுத்தில் காதலாய் அணிவித்தான்.
சம்ரு சொல்லியபடி தாலி அணிவிக்கும்போது அவளின் கண்ணோடு தன் கண்ணின் வழி பொங்கும் காதல் ஊற்றாய் அவளுள் சங்கமித்தான்.
இத்தருணத்திற்காக எத்தனை போராட்டங்கள். காத்திருப்புக்கள். இருவருக்கும் மனம் ஆழ்ந்த நிம்மதியில் கரை சேர்ந்தது.
விஷ்வா நெற்றியில் குங்குமம் வைக்க நிமிர்ந்து புருஷோத்தமனை சம்ரு பார்த்த பார்வையில், அவருக்கான மொத்த பதிலும் அவளின் அலட்சியமாய், நக்கலாய் அவரிடம் சேர்ந்தது.
முகம் கருத்து சிறுத்திட அவமான உணர்வுடன் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
புருஷோத்தமனை விஷ்வா என்ன சொல்லி வரவழைத்தான் என்றெல்லாம் சம்ருவுக்கும் அம்மையப்பனுக்கும் தெரியவில்லை. ஆனால் சம்ரு கேட்டுக்கொண்டதற்காக சரியாக தாலி கட்டிடும் நேரம் புருஷோத்தமனை வரவழைத்துவிட்டான்.
அடுத்தடுத்து ஐயர் சொல்லிட எந்தவொரு சடங்கையும் விஷ்வா புறக்கணிக்காது பூரித்த முகத்துடன் சம்ருவுடன் இணைந்து செய்திட…
அஞ்சலியுடனான திருமணத்தில் இதற்கெல்லாம் விஷ்வா ஒப்புக்கொள்ளவில்லை என்பதே சுஜாவுக்கு இப்போதுதான் விளங்கியது. அத்திருமணத்தில் எந்தவொரு சம்பிரதாய சடங்கையுமே விஷ்வா செய்யவில்லையே!
‘கண்ணிருந்தும் பார்வை இழந்தவளாக இருந்து விட்டேனே!’ அவரிடம் குமுறல் மட்டுமே.
பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய இருவரும் எழுந்து நிற்க…
யுகி சம்ருவை அணைத்து தன் வாழ்த்தை தெரிவிக்க…
விஷ்வா அவளின் கை பிடித்து சன்னதிக்கு அழைத்துச் சென்றான்.
இங்கு வருவதற்கு முன் மலையடிவாரத்தில் அவன் வாங்கி அவள் கை சேர்ந்திருந்த ரோஜாக்களை தன் கையோடு இணைத்து ஆனை முகத்தான் முன்னால் மனம் நிறைந்து தம்பதியாய் வைத்தான்.
“அடுத்த முறை நானும் ம்ருதியும் சேர்ந்து வந்து உனக்கு பூ வைக்கணும்.” சில வருடங்களுக்கு முன்பு அந்த பிள்ளையாரிடம் அவன் வைத்த வேண்டுதல். இன்று தான் நிறைவேறியது.
“இப்போ சுடரை பார்க்கலாமா?”
விஷ்வாவின் தலை சம்மதமாக ஆடியது.
சம்ரு விஷ்வாவிடமிருந்து நகர்ந்து செல்ல… வருண், மித்ரன் மற்றும் அவனது நண்பர்கள் அவனருகில் வந்தனர்.
அனைவருக்குமே மகிழ்வில் என்ன பேசுவது, சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவதென்றே தெரியவில்லை. எல்லோரிடமும் ஒரு கனத்த நெகிழ்வு.
சுசியின் மடியில் சுடர் படுத்திருக்க… ஸ்ரீ, தருண் விளையாட்டு காட்டிக்கொண்டிருந்தனர்.
“நான் தூக்கிக்கவா?”
“இருக்கட்டும் சம்ரு. நான் பார்த்துக்கிறேன்” என்றாள் சுசி.
“அவங்க இன்னும் சுடரை பார்த்ததில்லை…” சம்ரு எப்படி சொல்வதென்று தடுமாற, அவள் முடிக்காதுவிட்ட வாக்கியம் விளங்கியதாக…
“இன்னமும் அப்போ இருந்த மாதிரி பேசவே யோசிக்காத சம்ரு. அப்புறம் ரொம்ப கஷ்டம். அதுவும் உன் புருஷன்கிட்ட… நல்லாவே பேசு. அப்போ தான் அவனை சமாளிக்க முடியும்” என்றவாறு குழந்தையை சம்ருவின் கையில் கொடுத்தாள் சுசி.
‘அவளவனிடம் மட்டுமே எல்லையற்ற பேச்சுக்கள் நீளுமென்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. படிகளில் ஏறி வரும் போது விஷ்வாவிடம் செய்த வம்புகள் நினைவு வந்து தன்னைப்போல் சிரித்துக்கொண்டாள் சம்ருதி.
யுகி குழந்தைக்கு பால் கலக்கிக் கொண்டுவர, அதனையும் வாங்கிக்கொண்டு விஷ்வாவிடம் சென்றாள்.
சம்ரு வரவும் மற்ற ஆண்கள் அங்கு முடிக்க வேண்டிய மற்ற வேலைகளை முடித்து வீட்டிற்கு செல்ல ஆயத்தமாகத் தொடங்கினர்.
உச்சியில் சிறு கட்டை போல் அமைக்கப்பட்டிருந்த மேடையில் விஷ்வா அமர்ந்திருக்க… அவனருகில் சுடருடன் அமர்ந்தாள்.
சம்ருவின் வருகையை உணர்ந்து திரும்பாது உச்சியிலிருந்து பார்க்க புள்ளியாய் தெரியும் பரந்த நகரத்தை வெறித்திருந்தான் விஷ்வா.
“விஷ்வா… குழந்தையை பாருங்க!”
அவன் மடியை நோக்கி அவள் நீட்டிட,
குழந்தை அவனது கால் முட்டியில் உதைத்தது.
“ங்ங்…ங…” என்ற ஒலியுடன் கை கால்களை அசைத்திட… மீண்டும் மீண்டும் அவனை உதைத்தது பொக்கை வாய் காட்டியது குழந்தை.
சம்ருவிடம் மட்டுமே எழும் அதே சிலிர்ப்பு அவனிடம்.
சுடரை பார்க்கும் கணம்… மனதில் பழைய சுவடுகள் எதுவும் இருக்கக்கூடாதென நினைத்தவன் சம்ருவை மட்டுமே தன் மனதில் வைத்து சுடரை தன் கையில் வாங்கினான்.
கண்கள் பனித்து பார்வை மறைத்து கன்னம் இறங்க தயாராகி முட்டி நின்ற கண்ணீரின் ஒற்றை துளி அவனது குழந்தையின் முகத்தில் கண்ணுக்கு கீழிருக்கும் அந்த மச்சத்தில் பட்டு தெறிக்க… அவனுள்ளும் தந்தையாய் பாசம் பிரவாகம் பெற்றது.
“என்னை மாதிரி இருக்காளா?”
கரகரப்பான குரலில் விஷ்வா கேட்டிட சம்ரு ஆமென்றாள்.
விஷ்வா மென்மையிலும் மென்மையாய் சுடரின் நெற்றியில் தன் இதழ் ஒற்றி…
சம்ருவின் கையிலிருந்த பால் புட்டியை வாங்கி தானே குழந்தைக்கு கொஞ்சி கொஞ்சி புகட்டினான்.
“ம்க்கும்” என்று செருமினாள் சம்ரு.
விஷ்வா என்னவென்று பார்க்க…
“லைட்டா ஜெலஸ் ஆகுது. நானே வச்சிக்கிறேன். என்கிட்ட இருந்தாலும் உங்களால் பார்க்க முடியும்” என்றவள் சுடரை தூக்கி தன் மடியில் வைத்துக்கொண்டாள்.
“போடி… பொஸஸிவ் சைக்கோ!” என்ற விஷ்வா அவளின் நெற்றி முட்டி இதழ் விரித்து மூரல்கள் மின்ன சிரிக்க, இருவருக்கும் பாலமாய் நடுவில் சுடர்… அக்காட்சி பார்ப்போருக்கு கவிதையாய்!