உண்மை அறிந்ததில் வருணுக்கு விஷ்வாவின் மீதிருந்த மதிப்பும் மரியாதையும் பல மடங்கு உயர்ந்தது.
“அவனைப்பற்றி எல்லாம் தெரிந்தும், நானும் ஜென்ரல் ஆடியன்ஸ் மாதிரி ரியாக்ட் பண்ணிட்டனே!” ஸ்டோன் பெஞ்சில் சம்ருவின் அருகில் அமர்ந்திருந்த வருண் வருத்தமாகக் கூறிட… சம்ருவிடம் ஆழ்ந்த மௌனம் மட்டுமே !
என்ன தான் விஷ்வா இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டானென்று கண்கூடாக பார்த்தும், அவன் மணந்து கொண்ட அஞ்சலி கருவுற்றிருக்கிறாள் என்பது அறிந்தும்… ஏனோ மற்றவர்கள் போல் சம்ருவால் விஷ்வா தன்மீது கொண்ட காதலின் மேல் கொஞ்சமும் சந்தேகம் கொள்ள முடியவில்லை. காதல் குறைந்தது என்றும் எண்ணவில்லை.
ஏனோ சம்ருவுக்கு மட்டும் மனதில் விஷ்வாவின் காதல் என்றும் தனக்கு மட்டுமே என்ற குரல் ஒலித்துக்கொண்டே இருந்தது.
இன்று அது உண்மை என்று அறிந்ததில் விஷ்வா கொண்ட காதல் மீதான கர்வம் இன்றும் அதே நிலையில் உயர்ந்தது.
‘லவ் யூ விஷ்வா.’ மகிழ்ச்சி நெஞ்சை முட்டும் தருணங்களில் புன்னகையோடு கண்ணீரும் வெளிப்படுமே அந்நிலையில் தான் சம்ரு இருந்தாள்.
அவள் கொண்ட நம்பிக்கை பொய்த்துப் போகவில்லை என்றதன் வெளிப்பாடு.
“விஷ்வாவை பார்க்கணும் போலிருக்கு மாமா!”
“காலேஜ் முடிஞ்சிருக்குமே! வர நேரம் தானே? வீட்டுக்கு போகலாம்” என்று வருண் எழ,
“அவங்க சென்னை போறாங்க மாமா. கிளம்பியிருப்பாங்க” என்றவள் சுடர் நினைவு வந்தவளாக, “இது யாருக்கும் தெரிய வேண்டாம் மாமா” என்று எழுந்து அவனுடன் நடந்தாள்.
இருவரும் வீட்டிற்கு வந்த போது… வீட்டினுள்ளிருந்து பேச்சு சத்தம் கேட் தாண்டி காதில் விழ,
“ஏதும் பிரச்சனையா இருக்குமோ?” என்று கேட்டுக்கொண்டே சம்ருவுடன் வருணும் சென்றான்.
கூடத்தில் அவ்வீட்டின் ஆண்கள் தவிர்த்து அனைவரும் இருந்தனர்.
புருஷோத்தமன் மனைவி மகளுடன் நடுநாயகமாக அமர்ந்திருந்தார்.
சுசியின் அருகில் தருணை பிடித்துக்கொண்டு யுகியும் நின்றிருந்தாள்.
அனு சுடரை வைத்துக்கொண்டு தனதறையில் இருந்தாள். வெளியில் புருஷோத்தமன் கார் வருவதை பார்த்ததுமே சுசி அனுவிடம் சுடரை கொடுத்து வெளியில் வரக்கூடாதென்று சொல்லிவிட்டாள்.
தருண் ஸ்ரீயுடன் விளையாட வந்து வெகு நேரமாகவே, அவனை அழைத்துச்செல்ல வந்த யுகி புருஷோத்தமனை அந்நேரம் அங்கு எதிர்பாராது பார்த்ததில் பழைய நினைவுகள் மேலெழும்ப சட்டென்று துளிர்த்துவிட்ட பயத்தில் தருணை பிடித்துக்கொண்டு சுசியின் பின்னால் நின்றுகொண்டாள்.
புருஷோத்தமனை கண்டதும் யுகி பயப்படுவதை அவள் உடல்மொழியில் உணர்ந்த சுசி, ‘இவர் இவங்ககிட்டையும் விளையாடியிருப்பார் போலவே’ என நினைத்தபடி யுகியின் கையை ஆதரவாக பற்றிக்கொண்டாள்.
இந்திரா சுஜாவிடம் தன் அதிகாரத்தைக் காட்டிக்கொண்டிருக்க, சுஜா அமைதியாக நின்றிருந்தாரே தவிர, முன்பு போல் அண்ணன் குடும்பம் வந்திருக்கிறதென்று எவ்வித ஆர்பாட்டமும் செய்யவில்லை.
வேலை முடித்து வீட்டிற்கு வந்த மித்ரன்,
“என்ன வாசலிலே நின்னுட்டு இருக்கீங்க?” என்று சம்ரு வருணிடம் வினவினான்.
திரும்பி பார்த்த சம்ரு,
“உங்க அத்தை ஃபேமிலி வந்திருக்காங்க மாமா” என்றாள். அவளின் குரலிலிருந்தது என்ன உணர்வென்று வருணாலே கணிக்க முடியவில்லை.
“நான் விஷ்வாவுக்கு கால் பன்றேன்” என்று மித்ரன் அலைப்பேசியை எடுக்க,
“அவங்க சென்னை போயிட்டு இருப்பாங்க மாமா. மினிஸ்டர் கூட மீட்டிங் இருக்கு” என்றாள்.
“சரி வாங்க… இவங்களுக்கு இன்னைக்கு என் கையால் தான் அடவுன்னு இருக்கு போல” என்று மித்ரன் வீட்டின் உள்ளே செல்ல…
“இன்னைக்கு மட்டும் இந்த ஆளு ஏதும் பேசட்டும், எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு மொத்தமா போட்டு தள்ளிடுறேன்” என்று கோபமாகக் கூறினான் வருண்.
வருணின் பேச்சிலிருந்து…
“அப்போ சம்ரு விஷ்வாவை வேணான்னு சொன்னதுக்கு புருஷோத்தமன் தான் ரீஸனா?” என்று கண்டுகொண்டவனாக வினவினான்.
சம்ருவும், வருணும் அமைதியாக நிற்க…
“அப்போ அதுதான் உண்மை” என்றவன், “வாங்க எதுக்குதான் வந்திருக்காங்கன்னு பார்ப்போம்” என்று மேலும் உள்ளே முன்னேறி சென்ற மித்ரன், வந்திருப்பவர்களை கண்டுகொள்ளாது…
“சுசி காபி” என்றவனாக இருக்கையில் தளர்ந்து அமர்ந்தான்.
“என்ன மித்ரா… நாங்க கண்ணுக்கு தெரியலையா?” இந்திரா கணீர் குரலில் கேட்க, காதில் சிறு விரலால் குடைந்தவன்…
“என் வீட்டுக்கு சம்மந்தமில்லாத யாரும் என் கண்ணுக்கு தெரியாமாட்டாங்க” என்றவன், “உங்க பொண்ணை கூட்டிட்டு இங்கவே வந்துட்டிங்க போலவே” என நக்கலாகக் கேட்டதோடு “சுசி இன்னும் காபி வரல” என்றான்.
ராகுலுடன் சென்ற அஞ்சலி திரும்பி வந்துவிட்டதாக இந்திரா கால் செய்ததால் தான் அன்று அம்மையப்பன் மித்ரனுடன் தங்கை வீட்டிற்கு சென்றிருந்தார்.
“நம்பி போனவன் கைவிட்டுட்டான்னு கதறி அழுவுறாளே! அவளை அவள் புருஷனோடு சேர்த்து வச்சிடுங்கண்ணா!” இந்திரா அவ்வாறு கண்ணீர் சிந்தவும், மித்ரன் தான் அம்மையப்பனை எதுவும் பேசவிடாது வெளியில் கூட்டி வந்திருந்தான்.
அவர் அஞ்சலியின் புருஷனென்று கூறியது விஷ்வாவை அல்லவா!
“வேண்டாத விருப்பமற்ற வாழ்விலிருந்து வெளியேறி இப்போது தான் விஷ்வா சந்தோஷமாக இருக்கின்றான். அது பொறுக்கவில்லையா இவங்களுக்கு?” மித்ரனுக்கு கடுகடுவென வந்தது.
அப்போதுதான் அவர்கள் இருவரையும் வீட்டில் காணாது விஷ்வா அழைத்திருந்தான்.
இப்போது அதனைத்தான் மித்ரன் குறிப்பிட்டு நக்கல் செய்தான்.
“என்ன சுஜா இது? கொஞ்சமும் மரியாதையில்லாமல்” என்று எங்கு தன் பேச்சு செல்லுபடியாகுமோ அங்கு திரும்பினார்.
சுஜா இந்திராவுக்கு பதில் சொல்லாது கிச்சனிற்குள் செல்ல…
“என்ன நீ அண்ணிங்கிற மரியாதை இல்லாமல் போயிட்டே இருக்க? வீட்டுக்கு வந்தவங்களை அப்படித்தான் வாங்கன்னு கூட சொல்லல? என்ன நினைச்சிட்டு இருக்க நீ?” எழுந்து நின்று இந்திரா கத்தி கேட்டிட,
சமையலறைக்குள் அடி வைத்திட்ட சுஜா திரும்பி நின்று,
“நானும் உங்களுக்கு அண்ணி தான். அந்த மரியாதை என்னைக்காவது எனக்கு கொடுத்திருக்கீங்களா?” என்று சத்தமின்றி அடர்த்தியாய் கேட்டிருந்தார்.
மித்ரனின் விசில் சத்தம் வீட்டை நிறைத்தது.
“இன்னைக்கு தான் ‘ம்மா சரியா பேசியிருக்கீங்க.” மித்ரன்.
தன் அத்தையா பேசியதென்று சுசிக்கு ஆச்சரியம்.
இந்திராவிடம் அதிர்வு. பின்னே இத்தனை வருடங்களில் முதல் முறை சுஜா தன்னை எதிர்த்து பேசுவதை பார்க்கிறாரே!
“பார்த்தீங்களா உங்க தங்கச்சி பேசுறதை?” இந்திரா புருஷோத்தமனிடம் முறையிட்டார்.
“நானும் பார்த்திட்டு தான் இருக்கேன் சுஜா. அண்ணிகிட்ட இப்படித்தான் பேசுவாங்களா?” என்று அதட்டலாகக் கேட்டார் புருஷோத்தமன்.
“ஹோ… அப்போ அவங்க என்கிட்ட பேசும் முறை சரியா? என்னைக்காவது உங்க பொண்டாட்டிகிட்ட இப்படி கேட்டிருக்கீங்களா?” எனக்கேட்ட சுஜா, புருஷோத்தமன் விறைத்து நிற்பதை பார்க்காது உள்ளே சென்றுவிட்டார்.
“அப்புறம் என்ன உங்களுக்கு சப்போர்ட் பண்ற ஆளே வெளியில போங்கன்னு சொல்லாம சொல்லியாச்சு… இன்னும் என்னத்துக்கு இங்க நின்னுகிட்டு டைம் வேஸ்ட் பண்றீங்க?” என்ற மித்ரன், “நான் எங்க நேரத்தை சொன்னேன்” என்றான்.
“மித்ரா ரொம்ப ஓவரா போற!”
“யாரு நானா? நீங்க பண்ண ஓவருக்கு இப்போ தான் நான் பால்(ball) போடுறேன்” என்றவன், “என்ன எங்க அப்பாவோட தங்கச்சியே… விஷ்வா அன்னைக்கு கொடுத்த பதிலடி நினைவுயில்லையோ?” எனக் கேட்டான் நக்கலாக. அவனின் கேள்வி புருஷோத்தமனையும் தாக்கியது.
சுசியே தன் கணவனுக்கு இப்படியெல்லாம் பேச வருமா என்று அதிசயத்தை பார்ப்பது போல் பார்க்க… இந்திரா மற்றும் புருஷோத்தமனின் நிலையை சொல்லவும் வேண்டுமோ?
“என்னடா மிரட்டுறியா?” என்ற இந்திரா, “கொடுத்ததை பிடுங்கிப்பியோ?” என்றார்.
“ச்ச… ச்ச… தானம் செய்ததை எப்பவும் நாங்க திரும்பி வாங்கியது இல்லை.”
“நீங்க செய்ததுக்கெல்லாம் இந்த பேச்சே குறைவு தான். விஷ்வாவுக்காக, அவன் சொன்ன வார்த்தைக்காக உங்களையெல்லாம் விட்டு வச்சிருக்கேன். எவ்வளவு தைரியமிருந்தால் என் தம்பி வாழ்க்கையில் விளையாடி பார்த்திருப்பீங்க?” என்ற மித்ரன், “நாங்களா போங்கன்னு சொல்றதுக்கு முன்னாடி இங்கிருந்து போயிடுங்க” என்றான்.
ராகுல் மண்டபம் விட்டு செல்ல காரணமறிந்ததால் மித்ரன் அவ்வாறு பேசினான்.
இந்திராவின் முகம் சுண்டி விழுந்துவிட்டது.
இவர்கள் யாவரும் தங்களின் வாக்கு வாதத்தில் சோகமே உருவமாக அமர்ந்திருந்த அஞ்சலியை பார்க்க மறந்திருந்தனர்.
வருணும், சம்ருவும் நடப்பதை பார்த்தபடி அவர்களுக்கு முன் வராது உட்பகுதியில் வாயிலை கடந்து அவர்களுக்கு பின்னால் தான் நின்றிருந்தனர்.
நடக்கும் எதற்கும், தனக்கு சம்மந்தமில்லை என்று வெறித்தபடி அமர்ந்திருந்த அஞ்சலி, சம்ருவை கண்டுவிட்டு அவளருகில் செல்ல…
சம்ரு முகம் திருப்பவெல்லாம் இல்லை. அஞ்சலியை பார்த்து அளவான புன்னகை.
“எப்படியிருக்க அஞ்சலி?”
“நல்லாயில்லையே!” என்ற அஞ்சலி, “நீயென்ன இங்கு, விஷ்வாவை பார்க்க வந்தியா?” எனக் கேட்டாள்.
“யுகிக்கா கூட இங்கிருக்காங்க பார்த்தேன்” என்று அவள் திரும்பி யுகியை பார்வையால் தேடும் போது தான், மித்ரன் அவர்களை வீட்டை விட்டு செல்லுமாறு கூறியிருந்தான்.
மித்ரன் அவ்வாறு சொல்லியதும் இந்திராவின் முகம் சிறுத்தது ஒரு நொடி தான்… மறுநொடியே மித்ரனை முறைத்துக்கொண்டு,
“என் பொண்ணு வாழ்க்கைக்கு பதில் சொல்லு… போறோம்!” என்றார்.
“நான் தெரிஞ்சே ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் சம்ரு. இப்போ அதை சரிசெய்ய வந்திருக்கேன்” என்றாள் அஞ்சலி. தன் அன்னையின் பேச்சுக்கு பதிலாக.
என்ன செய்திருந்தாலும், விஷ்வா தன்னை ஏற்றுக்கொள்வான் என்கிற நம்பிக்கை அஞ்சலியிடம். அவனது கடமையை எப்போதும் சரியாக செய்திடுவான் என்று எண்ணம். ஆம் விஷ்வா எப்போதும் அஞ்சலியை தன் கடமையாகத்தான் பார்த்தான்.
“நாங்க எதுக்கு பதில் சொல்லணும்?” மித்ரன் கால் மேல் காலிட்டவனாக தோரணையாக வினவினான்.
“அவள் புருஷன் உன் தம்பி தானே! நீங்க தானே பதில் சொல்லணும்?” இந்திரா சட்டமாக பேசினார்.
“ஹோ… அப்படியா?” என்ற மித்ரன்,
“சம்ரு இங்கு வாம்மா!” என்று சம்ருவை கை நீட்டி அழைத்தான்.
அப்போதுதான் தன்னையே முறைத்துக்கொண்டு நிற்கும் வருணையும், மித்ரன் அழைத்ததும் நடந்து வரும் சம்ருவையும் கண்ட புருஷோத்தமனின் முகம் இறுகியது.
சம்ரு தனக்கு அருகில் வந்ததும், இந்திராவிடம் சம்ருவை காட்டி…
“இவங்க தான் என் தம்பி மனைவி. நீங்க வேற யாரையோ சொல்றீங்களே?” என்ற மித்ரன், “உங்க ஹஸ்பெண்ட் கிட்ட வேணுன்னாலும் கேளுங்க. கல்யாணத்துக்கு அவரும் தானே வந்திருந்தார்” என்றான்.
இந்திரா கணவனை முறைத்திட…
மித்ரன் சொல்லியதை கேட்ட அஞ்சலி விழி விரித்தாள்.
‘விஷ்வா சம்ருவுக்கு கல்யாணம் ஆகிருச்சா? அப்போ விஷ்வா லவ் பண்ண பொண்ணு சம்ருவா?” தனக்குத்தானே கேள்வி கேட்டுக்கொண்ட அஞ்சலி…