°நீந்திவரும் நிலாவினிலே…
ஓராயிரம் நியாபாகங்கள்.
நீண்டநெடும் கனாவினிலே…
நூறாயிரம் தீயலைகள்.
நெஞ்சமென்னும் வினாக்களுக்கு…
என் பதிலென்ன பல வரிகள்.
சேருமிடம் விலாசத்திலே…
உன் பார்வையின் முகவரிகள்.°
அனு, விஷ்வா அஞ்சலிக்கு தாலி கட்டவில்லை என்று சொல்லிய தருணம் விலுக்கென நிமிர்ந்து விஷ்வாவின் விழிகளை சந்தித்த சம்ருவின் நெஞ்சத்தில் எழுந்த வரிகள் இருவருக்குமானதாய்.
எதிர்பாராமல் நடைபெற்ற விஷ்வா அஞ்சலி திருமணத்தன்று…
அன்று திருமணமே நடக்கவில்லை என்பது தான் உண்மை.
என்ன தான் சுஜா செய்த காரியத்தின் விளைவால் மணமேடையில் அஞ்சலியின் அருகில் அமர்ந்தாலும் விஷ்வாவால் என்றுமே சம்ருதிக்கு துரோகம் செய்திட முடியாது. அப்படி ஒன்றை செய்தால், அக்கணமே அவன் உயிரை துறந்திடுவான்.
விஷ்வாவுக்கு அவனது உயிரினும் மேலானவள் சம்ருதி.
மேடையில் அமர்ந்த நொடி முதல், அவனது இதயத்துடிப்பு நின்றுவிடும் நிலையில் அதிவேகத்தில் துடித்தது. அவனது மனம் ம்ருதி ம்ருதி என்று மட்டுமே கூவியது.
மகனாக சுஜாதாவின் செயலை மீற முடியாது அமர்ந்தவனுக்கு, சம்ருவை தவிர்த்து வேறொரு பெண்ணின் கழுத்தில் நிச்சயம் தாலி கட்டிட முடியாதென்று மனம் மருகியது.
எழுந்து ஓடிவிடலாமா என்ற அவனின் எண்ணத்தை சுஜாதாவின் கண்ணீரும், அவர் காலில் விழுந்த காட்சியும் கட்டுப்படுத்தி அமர வைத்தது.
என்னால் முடியாதென்று கத்த வேண்டுமென தோன்றிய இயலாமையின் உச்ச நிலையை உடல் இறுக பற்களை கடித்து, கை முஷ்டியை அழுந்த மூடி கட்டுக்குள் வைத்திட வெகுவாக சிரம்மப்பட்டான்.
ஐயர் தாலியினை விஷ்வாவின் கைகளில் கொடுக்க, அதனை வாங்கிடவே அவனது கைகள் மறுத்தன. அத்தனை நடுக்கம். மனதில் பரிதவிப்பு.
ம்ருதி என்கிற ஓலம் அவனை இழுத்தது. செல்ல முடியாது தவித்தான்.
சுஜாதாவின் செயல் அவனை அக்கணம் கட்டிப்போட்டது.
அனைவருமே நடந்த கலவரத்தில் மேடைக்கு கீழ் தான் நின்றிருந்தனர்.
இந்திராவும் அஞ்சலியை விடாப்பிடியாக இழுத்துக்கொண்டு போய் அமர வைத்தவர், விஷ்வா தாலி கட்டும் வரை சுஜாதாவினை தன் பிடியில் வைத்திருக்க வேண்டிய நிலை என்பதால் கீழே வந்து சுஜாதாவின் அருகில் நின்று கொண்டார்.
“தாலியை வாங்கி கட்டுப்பா” என்ற சுஜாதாவின் குரலுக்கு இயந்திரம் போல் தாலியை பெற்று கண்களை மூடியவன்…
‘லவ் யூ ம்ருதி. லவ் யூ லாட். என்னால் முடியாதுடி… இது சத்தியமா முடியாது’ என்று உள்ளுக்குள் அரற்றியவன், மூடிய இமை தாண்டி வெளிவரத் துடித்த கண்ணீரை உள்ளிழுத்தவனாக விழிகள் திறந்தான்.
“என்னப்பா யோசனை? தாலி கட்டுய்யா… யாசகமாகக் கேட்கிறேன்” என்று சுஜா மேடைக்கு கீழேயிருந்து அனைவரும் பார்த்திட, தன் சேலை தலைப்பை விரித்து மடியேந்தி சொல்லிட…
இதயம் இரும்பென திடம் கொள்ள, அஞ்சலியின் கழுத்தை நோக்கி தாலியை கொண்டு சென்றவன், சுஜாவை பார்க்க…
அவரோ, மூன்றாவது முடிச்சிட அனுவை மேடைக்கு தள்ளினார்.
தன் அம்மாவின் செயலில் கொஞ்சமும் விருப்பமின்றி தான் அனு வேண்டா வெறுப்பாக மேடையேறினாள்.
மித்ரனும் சுசியும் செய்வதறியாது தவிக்க…
விஷ்வா அஞ்சலியின் கழுத்தில் தாலியை வைத்திருந்தான்… சில நொடிகளில் அனு முடிச்சிட குனிய…
விஷ்வாவை அதிர்வாக ஏறிட்டாள்.
அஞ்சலியும் விஷ்வாவைத்தான் பார்த்திருந்தாள்.
“விஷ்வாண்ணா…”
விஷ்வா பார்த்த பார்வையில், ஒரு முடிச்சுக்கூட இடாமல் அஞ்சலியின் கழுத்தில் வெறுமென மட்டுமே வைக்கப்பட்டிருந்த மஞ்சள் கயிறு கீழே விழாமல் இருப்பதற்காக மட்டுமே அனு சாதாரணமாக இரு முடிச்சுக்களை போட்டுவிட்டு நகர்ந்துவிட்டாள்.
அஞ்சலியும் விஷ்வா தனக்கு தாலியில் முடிச்சிடாததை உணர்ந்தே இருந்தாள்.
விஷ்வா தன்னை பார்த்த பார்வையில், அடக்கப்பட்ட அவனது கோபத்தால் ரத்தம் பூண்டிருந்த அவனது விழிகள் அனுவிற்குள் பயத்தை தோற்றுவித்திருந்தது.
விஷ்வாவின் அப்பார்வையே யாருக்கும் உண்மையை… அதாவது தான் தாலி கட்டவில்லை என்பதை சொல்லக்கூடாதென்று எச்சரிப்பதை உணர்ந்திருந்தாள் அனு.
“என்ன அனு கையை போட்டு உடைக்கிற அளவுக்கு பிசைந்துகிட்டு இருக்க?”
சுசி கேட்டிட ஒன்றுமில்லையென சமாளித்துவிட்டாள்.
அனுவும் மஞ்சள் கயிற்றில் மூன்று முடிச்செல்லாம் இடவில்லை. சம்பிரதாயப்படி அங்கு நடைபெற்றது திருமணமே அல்ல. மற்றவர்களுக்கு மட்டுமே அஞ்சலி விஷ்வா திருமணம் நடைபெற்ற தோற்றம். வெறும் தோற்றத்தை மட்டுமே விஷ்வா காட்சிப்படுத்தியிருந்தான். தங்களுக்கேத் தெரியாது அதில் அனுவையும் அஞ்சலியையும் தன் காட்சிக்கு நிழல் கொடுக்க வைத்திருந்தான்.
அனு கயிற்றை கட்டியதுமே… ஆம் சாதாரணமாக கயிற்றின் இரு முனைகள் இணைவதை கட்டுவது என்று தானே சொல்வோம். இங்கும் கயிற்றின் இரு முனைகள் மட்டுமே இணைந்தன. திருமண தார்பரியத்தின் மூலமான மூன்று முடிச்சுக்கள் போடப்படவே இல்லை.
விஷ்வா அடுத்த நொடி எழுந்திருந்தான்.
விஷ்வா அஞ்சலியின் கழுத்தை நோக்கி கையினை கொண்டு சென்றதுமே… நடக்கும் நிகழ்வை ஏற்க முடியாது சம்ரு ஹாலினை விட்டு வெளியில் ஓடிட… அவளைத் தொடர்ந்து ராஜாவும் சென்றிருந்தான்.
தினேஷ் நடப்பதை ஜீரணிக்க முடியாது நின்றிருந்தான்.
விஷ்வா எழுந்திட…
“இன்னும் நிறைய சடங்கு சம்பிரதாயம் இருக்கே விஷ்வா” என்று புருஷோத்தமன் சொல்லிட… அவன் பார்த்த தீப்பார்வையில் அமைதியாகிவிட்டார்.
மேடையை விட்டு கீழேயிறங்கியவன், விடுவிடுவென மண்டபத்தை விட்டே வெளியேறியிருந்தான்.
அடுத்தடுத்து செய்ய வேண்டியதை செய்யணுமே என்று பின்னால் ஓடி வந்த அன்னையை கிஞ்சித்தும் பொருட்படுத்தவில்லை விஷ்வா.
“எல்லாம் முதலிரவு முடிஞ்சால் சரியாப்போயிடும் சுஜா. ஆண்கள் எல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கும் வரை தான்” என்று இந்திரா அந்நிலையிலும் பேசத் தெரியாமல் பேசிட அம்மையப்பன் முகம் சுழித்தவராக தன் குடும்பத்துடன் கிளம்பிவிட்டார்.
சம்ருவின் கதறல் ஒலியை கேட்டிட முடியாது, அதுவும் மண்டபத்தின் வாயிலில் வைத்து தன்னை கட்டிக்கொண்டு அழுபவளை தேற்ற முடியாது தடுமாறிய ராஜா, யாரும் பார்த்திடக் கூடாதென்று மெல்ல தன் வண்டியில் அமர வைத்து வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான்.
விஷ்வா வெளியேறுவதற்கு சில நொடிகள் முன் ராஜா சம்ருவை அழைத்து சென்றுவிட்டதால் விஷ்வாவால் வாயிலில் அவர்களை காண முடியாது போனது.
சம்ரு ராஜாவின் வீட்டிற்குள் கூட செல்லாது…
“நான் போகணும் ராஜா. என்னால் இங்க இருக்க முடியாது. இந்த ஊரைவிட்டே ரொம்ப தூரம் போகணும். ப்ளீஸ் டா… கூட்டிப்போ!” என்று முகம் மூடி அழுதவளை காண பொறுக்காது, தன் வீட்டு வாயிலோடே தன் அன்னையிடம் கூட சொல்லாது பேருந்து நிலையம் கிளம்பிவிட்டான்.
சம்ருவுடன் பேருந்து இருக்கையில் அமர்ந்தவனுக்கு இன்னமும் விஷ்வா எப்படி இப்படி செய்யலாம் என்கிற ஆதங்கம் கொஞ்சமும் குறையவில்லை.
சம்ருவின் கண்கள் நிற்காது கண்ணீரை சுரந்து கொண்டே இருக்க… பேருந்தில் யாரும் தவறாக எண்ணிவிடுவார்களோ என்று ராஜாவின் மடியில் தலை வைத்து முகத்தை மறைத்துக்கொண்டாள்.
என்ன முயன்றும் அவளால் கண்ணீரை மட்டும் நிறுத்த முடியவில்லை.
பயணம் முழுவதும் அழுது கொண்டே வந்தவளின் நிலை ராஜாவின் மனதை கனக்க செய்தது.
இருக்கையிலன் பின்னால் தலையை சாய்த்துக்கொண்டவனின் கைகள் சம்ருவின் தலையை தடவியபடியே இருந்தது.
என்ன முயன்றும் சம்ருவை ராஜாவால் தேற்ற முடியவில்லை.
அழுதுகொண்டே வருபவளின் வலியை ராஜாவும் உணர்ந்தே இருந்தான்.
விஷ்வாவின் நிலையை புரிந்துகொண்ட இருவருக்குமே அவன் மீது கோபம் வரவில்லை. மாறாக வலி மட்டுமே!
வீட்டிற்குள் வாடிய கொடியென வந்தவளை கண்டு பதறித்தான் போனார்கள் வருணும், யுகியும்.
ராஜா மூலம் விடயத்தை அறிந்த யுகிக்கும், வருணுக்கும் விஷ்வாவின் மீது அதீத மனத்தாங்கல் உண்டானது.
அன்று சம்ருவிற்கே விஷ்வா மீது உண்டாகாத கோபம் வருணுக்கு உண்டானது.
வருண் பொருக்க முடியாது பொறுமிவிட்டான்.
“இனி விஷ்வாங்கிற பெயரே இந்த வீட்டில் ஒலிக்கக்கூடாது.” அத்தனை கோபத்தில் கொதித்தான் வருண்.
என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும், யார் வேண்டுமானாலும், எதுவேண்டுமானாலும் செய்திருக்கட்டும் அதற்காக காதலை தியாகம் செய்திடுவானா? என்கிற தார்மீக கோபம் வருணுக்கு.
விஷ்வா சம்ருவுக்கு துரோகம் செய்துவிட்டான் என்று மட்டும் யாரும் ஒரு நொடியும் நினைக்கவில்லை.
இங்கு வீட்டிற்கு அனைவருக்கும் முன் வந்துவிட்ட விஷ்வா, தனதறைக்குள் அடைந்துகொண்டான்.
இந்திரா தன் மகளை சட்டமாக அழைத்து வந்து அம்மையப்பனின் வீட்டில் விட்டவர்,
“பார்த்துக்கோ சுஜா. நைட்டு நடக்க வேண்டியது நடந்தே ஆகணும். இல்லைன்னா உன் மகனை பிடிக்க முடியாது. என் பொண்ணு வாழ்க்கை வீணாப்போயிடும்” என்று அழுது கரையவெல்லாம் இல்லை. மாறாக அதிகாரமாகவே கூறிச்சென்றார்.
சுஜாவுக்குமே விஷ்வாவை இன்றுவிட்டால் வேறெப்போதும் பணிய வைக்க முடியாதென்று தோன்றிட அம்மையப்பன், மித்ரன் சொல்வதை காதிலேயே வாங்காது விஷ்வாவின் அறையை தட்டிக்கொண்டே இருந்தார்.
விஷ்வாவும் அவனது பிடியில் நிலையாய் கதவினை திறக்கவேயில்லை.
கதவினை தட்டிய சுஜா தான் ஒரு கட்டத்தில் ஓய்ந்தவராக தட்டுவதை நிறுத்தியிருந்தார்.
மறுநாள் முழு ஃபார்மலில் கிளம்பித் தயாராகி அறையின் கதவினை விஷ்வா திறந்திட, அவன் அறைக்கு முன்னிருந்த மாடி லான் இருக்கையில் அமர்ந்திருந்த சுஜா…
“நீ உள்ள போ அஞ்சலி” என்றார்.
விஷ்வா அஞ்சலியை அழுத்தமாக ஏறிட, அவள் நேத்து இருந்த தோற்றத்திலேயே இருந்தாள். இரவு முழுக்க இங்கவே அவளை இருக்க வைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொண்டான்.
அஞ்சலி விஷ்வாவின் அறைக்குள் நுழைய முற்பட, அவளை தடுத்தவன்,
பக்கத்து அறையை காண்பித்தான்.
அஞ்சலி சுஜாவை பார்த்தாள்.
“என்ன விஷ்வா இது?” என்று அவன் முன் வந்த சுஜா, “புருஷன் இருக்க அறையில் தானே பொண்டாட்டி இருக்கணும். அதுதானே கடமை, வழமை” என்றார்.
அவரின் பேச்சுக்கு விஷ்வா அலட்டிக்கொள்ளவே இல்லை.
“அதுதான் என் ரூம். இருக்கிறதுன்னா அங்க இருக்க சொல்லுங்க” என்று பக்கத்து அறையை காண்பித்து தன்னுடைய அறையை பூட்டிவிட்டு கீழே சென்றான்.
நடப்பதை கீழிருந்து மற்றவர்கள் பார்த்துக் கொண்டுதானிருந்தனர்.
அவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. விஷ்வாவின் நடத்தைக்கு அவனை குறை சொல்லிட முடியாதே! கட்டாயத்தில் நடத்தப்பட்ட ஒன்றிற்கு அவனின் எதிர்வினை இந்தளவிற்கு அமைதியாக இருப்பதே பெரியது.
நேராக அம்மையப்பன் முன்பு வந்து நின்ற விஷ்வா, “சுடர் சார்ஜ் எடுத்துக்கிறேன் ‘ப்பா” எனக்கூறினான். தகவல் தான். ஆனால் மகனின் மனம் அறிந்தவர் சரியென்று தலையசைத்தார்.
தன்னுடைய அழுத்தத்தை வேறு விதமாக போக்கிக்கொள்ள நினைக்கிறான் என்பது மித்ரனுக்கும் புரிந்தது.
“உங்களுக்கு ஆட்சேபனை இல்லையே?”
“இல்லப்பா!” அம்மையப்பன் பல நாட்களாக அவனிடம் கேட்டுக்கொண்டிருக்கும் விடயம் தானே! இன்று அவனே கேட்கும்போது வேண்டாமென்றா சொல்வார். சந்தோஷமாக சுடரின் பொறுப்புகள் அனைத்தையும் விஷ்வாவிடம் அன்றே ஒப்படைத்தார்.
இரவு தான் விஷ்வா வீட்டிற்கு வந்தான்.
அவனுக்காக அஞ்சலி மாடி லானில் காத்திருந்தாள்.
அவளை கண்டுகொள்ளாது விஷ்வா அறையை திறந்திட…
“விஷ்வா உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றாள் அஞ்சலி.
மாலை தான் இந்திரா வந்து சென்றிருந்தார்.
காதலித்தவன் ஓடியிருக்க, கட்டிகிட்டவனை கையில் போட்டுக்கொள் எனும் விதமாக பலவாறு பேசி அவளை குழப்பியிருந்தார்.
கல்யாணத்துக்கு பிறகு வாழாமலிருக்கும் பெண்ணுக்கு இந்த சமுதாயம் வைக்கும் பெயரே வேறென்று கூறியிருந்தார்.
தன்னை காதலித்து ஏமாத்தி சென்றுவிட்ட ராகுலின் மீது அதீத கோபத்திலிருந்த அஞ்சலிக்கு, விஷ்வா அவனது காதலிக்காகவே தனக்கு தாலி கட்டவில்லை என்று புரிந்துகொள்ள முடிந்த அவளால், அவனது உயர்ந்த காதல் முன் தன்னுடைய காதல் சிறுமைபட்டுவிட்டதாக நினைத்தாள். அத்தோடு, ராகுலின் முன் வாழ்ந்து காட்ட வேண்டுமென்று தீவிரம் கொண்டாள். அதற்காக விஷ்வாவை தன்பக்கம் வளைக்க நினைத்திட்டாள்.
அனைவரின் பார்வையிலும் திருமணம் நடந்துவிட்டது. உண்மையறிந்த மூவரும் சொல்லும் நிலையில் இல்லை. அதனை வைத்து தன் வாழ்வை காப்பாற்றிக்கொள்ள நினைத்தாள்.
அதன் முதல் படியாக விஷ்வாவிடம் இணக்கத்தை ஏற்படுத்த நினைத்து பேசினாள்.