கல்லூரி நேரம் தொடங்கியதும் தனது வழக்கமான சுற்று வேலையை முடித்து வந்த விஷ்வாவை லைப்பிரரியன் காண வந்தார்.
அவர் லோகு. நூலகத்தை சீக்கிரம் மூடியதற்காகவும், விடுமுறை தினங்களில் செயல்முறை மற்றும் விடுதி மாணவர்கள் பயன்பாட்டிற்காக பகுதி நேரமாக திறந்து வைக்க வேண்டியதை சரிவர செய்யாத காரணத்தாலும் அவருக்கு ஒரு வாரம் பணியிடை நீக்கம் அளித்திருந்தான்.
தண்டனை முடிந்து இன்று தான் வருகிறார்.
“வாங்க லோகு” என்று மரியாதையாகவே வரவேற்று அமர வைத்தான்.
லோகு தன்னுடைய வேலையை ராஜினமா செய்வதாக சொல்லி கடிதத்தை அளிக்க…
“நீங்க செய்த தவறுக்கு தான் சஸ்பென்ஷன். ஆனால் இதுக்கு முன்பு வரை ஒருநாள் கூட உங்களது பணியில் தவறு செய்தது கிடையாது. ஒரு நல்ல பொறுப்பாளரை என் கல்வி நிறுவனத்தால் இழக்க முடியாது. உங்களுடைய கடிதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது” என்று கூறியவனை அப்போது தான் நிமிர்ந்து பார்த்தார்.
“உங்கள் தரப்பில் காரணங்கள் இருக்கலாம். நீங்கள் லீவ் எடுத்தது உங்கள் தரப்பில் வேலிட்ஃடாக இருக்கலாம். ஆனால் உங்களது பணிக்கு மாற்று ஏற்பாடு செய்திருக்கலாமே! நம்ம காலேஜில் ஸ்டாஃப்ஸ் அண்ட் ஸ்டூடன்ட்டில் வாலண்டியர்ஸ் இருக்காங்களே!” என்ற வி.ஆர் “பார்த்துக்கும் பொறுப்பு மற்றவரிடம் அளிக்கும் வாய்ப்பு இருந்தும் நீங்க செய்யாமல் லைப்ரரி மூடியதால் தான் ஒன் வீக் சஸ்பென்சன். நான் செய்தது நியாயமற்றதாக இருந்தால் நீங்க தாராளமாக வேலையை விட்டு போகலாம்” என்றான்.
அதுவரையிலும் அவர் விஷ்வாவின் முகத்தை பார்க்கவே இல்லை.
விஷ்வா சொல்லியவை நியாமானதாகவே இருந்தது. லோகு விஷ்வாவின் தந்தை காலத்திலிருந்தே அங்கு பணிபுரிகிறார். மிகவும் நேர்மையானவர். அவரின் சூழல் அவரை பணியில் கவனம் சிதற வைத்துவிட்டது. அது அவரது தனிப்பட்ட விடயமாக இருக்கலாம். அதற்காகவே அவரிடம் அவன் காரணம் கேட்கவில்லை. இத்தனை வருடங்கள் சிறு பிழையின்றி இருந்தவர் இப்போது இப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் சரியான காரணம் இருக்குமென்று எண்ணியே அவரை மொத்தமாக விலக்காது மீண்டும் பணியினை கொடுத்தான்.
விஷ்வா அப்படித்தான் அவனது தண்டனைகளில் கூட நியாயம் இருக்கும். ஏற்புடையதாக இருக்கும்.
விஷ்வாவின் தன்மையான பேச்சுக்கு பின்னாலும் அவரால் விலகிட முடியுமா என்ன?
“வேற டிப்பார்ட்மெண்ட் மாற்ற முடியுமா சார்? ஈவ்வினிங் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு கிளம்பிடுற மாதிரி” எனக் கேட்டார் லோகு.
சில நொடிகள் யோசித்த வி.ஆர்,
“இன்னைக்கு மட்டும் லைப்ரரி வொர்க் பாருங்க. நாளைக்கு நான் சேன்ஞ் பண்ணிட்றேன்” என்றான்.
அவரது சூழல் சரியில்லை என்பதை புரிந்துகொண்ட விஷ்வா அன்றே மற்ற துறைகளை அலசி அவரை அலுவலக பிரிவிற்கு மாற்றியிருந்தான்.
விஷ்வா அப்படித்தான் தனக்கு கீழ் பணிபுரிபவர்களின் தரப்பு வசதிகளையும் கவனித்து அவர்களுக்கேற்றதை செய்திடுவான்.
அன்று மாலை கல்லூரி முடிந்ததும் வீட்டிற்கு கிளம்பாது, சிறப்பு வகுப்பு மற்றும் செயல்முறை வகுப்பு மாணவர்களுக்காக இரவு ஏழு மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கல்லூரி வாகனத்தின் செயல்பாட்டா கவனிப்பதற்காக அங்கேயே காத்திருந்தான்.
இந்நேரத்தில் கல்லூரி பேருந்து மாணவர்களுக்கு உதவியாக செயல்படுகிறது என்று அறிந்த மாணவர்கள், அவசரவசரமாக கல்லூரி முடிந்து கிளம்பாது, படிப்பு சம்மந்தமாக மேலும் சில மணி நேரங்கள் லேப், நூலகம், மைதானம் என்று பயமில்லாது நேரம் செலவழிக்க நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
அதனை அன்று தான் விஷ்வா கவனித்தான்.
அதனால் இரவு ஏழு மணிக்கும் கல்லூரி வாகன இயக்கத்திற்கு உத்தரவிட்டான். அத்தோடு மற்ற நிறுவனங்களை விட கற்பிக்கும் முறை அவனது வழி நடத்தலில் முற்றிலும் மாறுபட்டது. அங்கு அரசாங்கம் நிர்ணயித்திருப்பதை காட்டிலும் குறைந்த அளவு கட்டணம் தான். அதுவும் ஒருவரின் வறுமையின் பின்புலம் அறிந்துவிட்டால் உண்மை எனும் பட்சத்தில் அனைத்தும் இலவசம்.
இம்முறையை தமிழகத்தில் தங்களது கல்வி நிறுவனங்கள் அனைத்திலும் நடைமுறைப்படுத்தினான்.
இந்த செய்திகள் அக்கல்லூரிகளின் மாணவர்கள் மூலம்…
“எங்களுக்கு கிடைத்த மாதிரி கரெஸ்பான்டன்ட் எல்லா கல்வி நிறுவனங்களிலும் இருந்தால் படிப்பு வியாபாரமாகாது” என்று சமூக வலைதளங்களில் வி.ஆர் என்ற ஹேஷ் டாக்குடன் அவனது தற்போதைய புகைப்படடத்துடன் அதிவேகமாக பரவியது. அன்றைய இரவு வி.ஆர்’ன் பெயர் மற்றும் முகம் எட்டுத்திக்கும் பரவியது.
இதனை விஷ்வாவே எதிர்பார்க்கவில்லை.
உண்மையில் தரமான சமுதாயத்திற்கு நாளைய இளைஞர்களின் கல்வி அறிவு முக்கிய காரணி என கருதியே அதனை எளிமையாக மாணாக்கரிடம் எப்படி கொண்டு செல்ல முடியுமோ அப்படி கொஞ்சம் கொஞ்சமாக சேர்பித்துக் கொண்டிருக்கிறான் வி.ஆர். அதுபோல் ஒரு மாணவியின் நலனில் தொடங்கிய பாதுகாப்புக்குறித்த அவனின் எண்ணம், ஒரு வார காலத்தில் அனைத்து மாணவர்களின் அக்கறையில் முடிந்திருந்தது.
இதுபோன்ற புகழ் பாராட்டெல்லாம் ஏன் வருகிறது என்று கேட்டிட முடியாது. வரும்போது சிறு புன்னகையில் கடந்துவிட வேண்டும். இல்லையெனில் அவை நம் தலைமீது அமர்ந்து நம் வீழ்ச்சிக்கு பாதை வகுத்திடும். அதனை நன்கு தெரிந்து வைத்திருந்த விஷ்வா, திடீரென முளைத்த புகழ் பற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை. அதனை கண்டும் காணாததைப்போல் கடந்து விட்டான்.
யாரேனும் அது குறித்து கேட்டாலும் தலையசைப்போடு சென்றுவிட்டான்.
இன்று காலை கல்லூரி வந்த பின்னர் தான் அவனுக்கே அவ்விடயம் தெரியும். அதுவும் மித்ரன் அழைத்து தெரிவித்திருந்தான்.
“இது மாணவர்களின் தனிப்பட்ட சுதந்திரம். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்கமுடியாது மித்ரா. நாம் கடந்துவிடுவோம்” என்றிருந்தான்.
சுடர் என்ற பெயரின் மூலமே வி.ஆர் மிகவும் பிரபலம் தான். ஆனால் அவரை ஆர்பாட்டமில்லா அமைதியான நற்பெயர். இது தாமே தம்பட்டம் அடிப்பதைப்போல் இருக்க, அதனை விஷ்வா கண்டுகொள்ளவே இல்லை.
எப்போதும் போல் கல்லூரியில் தன் பணியை முடித்துவிட்டு, காவலர்கள் கல்லூரியில் யாரேனும் இருக்கிறார்களா என்று பார்த்து வந்திருந்தாலும், அன்று ஏனோ வீட்டிற்கு செல்லத் தோன்றாது தானும் ஒருமுறை கல்லூரியை வலம் வந்தான்.
அந்நேரம் தான் கோயம்பத்தூரில் சம்ருதி வருணிடம் திருச்சி வர விருப்பமில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
சம்ருதியிடம் பேசி முடித்ததும் வருண் விஷ்வாவுக்கு அழைத்திருந்தான்.
“சொல்லுங்க டாக்டர் சார். என்ன இந்த நேரத்தில் தம்பி ஞாபகம்?” விரிந்த இதழில் கேட்டிருந்தான் விஷ்வா.
“என் தம்பி ஒரு நாள் நைட்டில் இப்படி உலக ஃபேமஸ் ஆகிட்டானே! எப்படின்னு ரகசியத்தை தெரிஞ்சிக்க போன் பண்ணேன்.” வருணின் சந்தோஷம் அவனது குரலில் தெரிந்தது.
“அச்சோ அண்ணா…” என்று லேசாக வெட்கம் கொண்ட விஷ்வா, “இந்த பசங்க ஏதேதோ பண்ணிட்டாங்க. நான் என் கடமையை செய்றேன். அவ்வளவு தான்” என்றான்.
விஷ்வாவின் தன்மையிலும், அடக்கத்திலும் வருணிடம் எப்போதும் போலான மெச்சுதல்.
“நீ எப்படி விஷ்வா இப்படியிருக்க. அவனவன் சின்னதா எதையோ பண்ணிட்டு பயங்கரமா விளம்பரம் தேடுறானுங்க. நீ கொஞ்சம் கெத்து காட்டலாம். தப்பில்லை” என்றான்.
“நமக்கு செட்டாகாதுண்ணா.”
அதற்கு மேல் அதைப்பற்றி பேசாது விடயத்திற்கு வந்தான் வருண்.
“டிரான்ஸ்பர் பண்ணிட்டாங்க விஷ்வா.”
“ஹ்ம்.” கேட்டுக் கொண்டதற்காக ஹ்ம் என்ற விஷ்வா, “திருச்சி எப்போ கிளம்புறீங்க?” எனக் கேட்டிருந்தான்.
“நாளை காலை” என்று சொல்ல வந்த வருண், “நான் திருச்சின்னு சொல்லவே இல்லையே! அத்தோடு எனக்கே இந்த விடயம் மதியம் தான் தெரியும்” என்றவனுக்கு எதுவோ புரிவது போலிருக்கு… “நீதான் இதுக்கு காரணமா?” எனக் கேட்டான்.
“ஷார்ப் ‘ண்ணா நீங்க” என்ற விஷ்வா, “வீடு… லொகேஷன் நான் செண்ட் பன்றேன். நீங்க எப்போ வந்தாலும் ரெடியா இருக்கும்” என்றான்.
“நீ என்ன பன்ற விஷ்வா? எனக்கு புரியல?”
விஷ்வாவிடம் கனத்த மௌனம். அழுத்தமாக.
“இப்போவாவது உன் மனசுல என்ன இருக்குன்னு சொல்லேண்டா?” கோபமாகத்தான் கேட்டிருந்தான் வருண்.
“பார்க்கணும் போலிருக்கு வருண் அண்ணா!” விஷ்வாவின் உடைந்த குரல். மூன்று வருடங்களுக்கு முன்பு கேட்ட அதே தழுதழுப்பு. வருணின் மனம் பாரம் சுமந்தது.
“நான் பேசட்டுமாடா?”
“ம்ஹூம்… அம் டிவோர்ஸி.” தொண்டை அடைத்தது. விழுங்கிக்கொண்டான்.
“ம்க்கும்” என்று நொடித்த வருண், “அவள் திருச்சி வரலன்னு சொல்லிட்டாள்” என்றான்.
“ஹோ…” என்ற விஷ்வா, “அவள் அடுத்தவாரம் வந்திடுவாள்” என்றான் அர்த்தமாக.
அந்த அர்த்தம் வருணுக்கு விளங்கியது.
“எங்க எல்லாரையும் அங்க மூட்டை கட்டுறதுக்கு, நீ இங்க வந்தோ அல்லது வால்பாறை சென்றோ அவளை பார்க்கலாமே?” எனக் கேட்டான் வருண்.
“அவளா என் முன்னாடி வந்த மாதிரிதான் இருக்கணும்.”
“ம்க்கும்… இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை” என்ற வருண் “டூ யூ லவ் ஹெர்…” என்று இழுத்து “ஸ்டில்?” என கேள்வியாய் நிறுத்தினான்.
“இந்த வி.ஆர் தொனி எல்லாம் என்கிட்ட வேண்டாம். என் தம்பி விஷ்வாவா பேசினால் போதும்.” வருண் கடுகடுத்தான்.
“ஷீ இஸ் மை பர்ஸ்ட் அண்ட் லாஸ்ட் லவ் வருண் அண்ணா… மறக்க முடியும் தோணுதா உங்களுக்கு?” என இம்முறை தன்னுடைய மனதை ஒளிக்காது வெளிக்காட்டியிருந்தான் விஷ்வா.
“என்னதாண்டா சொல்லவர?”
“இப்போதைக்கு ஒண்ணுமில்லை” என்ற விஷ்வா, “என்னை பார்த்துட்டு ஏதும் சொன்னாளா?” எனக் கேட்டான்.
“அவள் எப்படிடா உன்னை பார்க்க முடியும்?”
“அண்ணா…” விஷ்வா இழுத்து அழுத்தமாக அழைக்கவும் தான் வருணுக்கு புரிந்தது.
“பார்திருப்பாள். அதான் எஃப்.பி, இனஸ்டாவில் இருக்காளே. உன் ஸ்டூடன்ட்ஸ் உன்னை ட்ரோல் பண்ண பரபரப்புக்கு அட்லீஸ்ட் ஒரு மீம்மாவது அவள் கண்ணில் பட்டிருக்கும். ஆனால் எங்ககிட்ட எதுவும் சொல்லலையே!” என்றான்.
……
“எங்கயிருந்தாலும் மத்தவங்க நினைப்புத்தானா… உன்னை பத்தி அவள் யோசிக்கிறதும் அவளை பத்தி நீ யோசிக்கிறதும். என்னால முடியலடா! உங்க ரெண்டு பேரையும் சேர்த்து வைக்க ஒரு சான்ஸ் கிடைச்சாலும், என் உயிரை கொடுத்தாவது சேர்த்து வச்சிடுவேண்டா” என்று மூச்சுவிடாது பேசினான் வருண்.
அந்நேரம்…
“மாமா” என்ற குரல்.
வருணை சம்ருதி தான் அழைத்திருந்தாள்.
அவளின் குரல் கிட்டத்தட்ட நான்கு வருடங்களுக்கு மேல் கழித்து தனது செவி கேட்கிறான் விஷ்வா.
எப்படியிருக்கிறதாம்?
“வேண்டாம் விஷ்வா. கஷ்டப்படுத்துற இந்த காதல் வேண்டாமே!” காதலை சொல்லிக்கொள்ளாமலே பிரிந்த காதல் அவர்களுடையது தான்.
அவளது வாய் வார்த்தையாகக் கேட்ட மறுப்பு மரிக்கச் செய்தபோதும், தன்னவளுக்காக காதலையே திருப்பிக்கொடுத்து விலகியிருந்தான்.
காதலுக்காக காதலை துறந்தவன் அவன்.
அன்று கேட்டது அவளின் குரல். அதன் பின் இன்று தான்.
அடங்கிப்போய்விட்டது என்று நினைத்த காதல் மொட்டுக்கள் எல்லாம் இதழ் விரித்து ரோஜாவாய் பூத்து உள்ளுக்குள் உணர்வு பிரவாகங்களை தட்டி எழுப்பிட… ரோஜாவின் முள்ளின் வலி இதயம் தீண்டியது.
இங்கு என் ரோஜா எனும் வார்த்தையில் விஷ்வாவின் காதல், தவிப்பு, ஏக்கம், வலி என யாவும் அடங்கிவிடும்.