°உனக்கென்றே உயிர் கொண்டேன்…
அதில், ஏதும்… மாற்றமில்லை.
பிரிவென்றால் உறவுண்டு…
அதனாலே… வாட்டமில்லை.°
திருச்சியில் சுடர் அறக்கட்டளையின் தலைமை அலுவலகம்.
மிகப் பெரும் பரப்பளவை தனக்குள் விழுங்கியபடி இருந்தது அங்கிருந்த உயர்ந்த கட்டிடங்கள்.
வலது புறம் பள்ளி கட்டிடம். இடது புறம் கல்லூரி கட்டிடம். மருத்துவம் தவிர்த்து அனைத்து விதமான துறைகளும் அங்கு இருந்தன. நடுவில் அலுவலக கட்டிடம்.
மருத்துவ கல்லூரி தனியாக இயங்குகிறது.
தரை தளம் முழுக்க அட்மினிஸ்ட்ரேட்டிவ் பகுதி. முதல் தளம் மாணவர்கள் சமந்தப்பட்ட ஐடியாக்கள் மற்றும் அவர்களின் நிறை மற்றும் குறைகளுக்கான தீர்வு காணும் பகுதி.
இரண்டாம் தளத்தில் தாளாளர் அலுவலகம். வி.ஆர்’ன் சிம்மாசனம் வீற்றிருக்கும் பகுதி.
கலை மற்றும் அறிவியல், பொறியியல், அவற்றின் முதுகலை படிப்புகள், பாலிடெக்னிக், தொழிற்கல்வி, அவற்றிற்குரிய முதல்வர் அலுவலகம் அந்தந்த படிப்பு சமந்தப்பட்ட பகுதியிலேயே அமைந்துள்ளது.
இதுதான் சுடர் கல்வி குழுமத்தின் காட்சி பகுதி. இந்த அமைப்பில் தான் மற்ற ஊர்களிலும் இயங்குகிறது.
மாணவர்கள் வரத்தொடங்கிய நேரம்.
வழக்கம்போல் முன்னதாகவே வந்துவிட்ட விஷ்வா… அலுவலக கட்டிடத்தின் முன்னிருக்கும் விநாயகரை வணங்கிவிட்டு தனது அறைக்கு சென்றவன், அன்றைய பணிகளை பட்டியலிட்டுவிட்டு, பள்ளி கட்டிடத்தை பார்வையிடச் சென்றான்.
என்றுமில்லா புதுவித உணர்வு அவனுள். ஏனென்றே தெரியாது அவனது அகம் மகிழ்வில் பூஞ்சாரல் தூவியது.
அவனவள் அவனருகில் இருப்பதாலோ?
எவ்வித பதட்டமோ, தடுமாற்றமோ இன்றி மெல்ல அவ்வளாகத்தினுள் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் உள் நுழைந்தாள் சம்ருதி.
அவள் படித்த… சுற்றித்திரிந்த இடம்.
எங்கெல்லாம் மறைந்து நின்று விஷ்வாவை ரசித்து நின்றிருந்தாளோ அவ்விடங்கள் எல்லாம் பளிச்சென கண்களில் சிக்கின. மென் புன்னகை சன்னமாக இதழ் விரிய வைத்திட, கண்களை மூடி இதம் அனுபவித்தாள்.
வால்பாறையிலிருந்து நேற்று மாலை போல் திருச்சி வந்துவிட்டாள். ரயில் நிலையம் சென்று வருண் தான் அழைத்து வந்திருந்தான்.
வந்ததும் விஷ்வாவுக்கு தகவல் அனுப்பிவிட்டான்.
கண்டுவிடத் துடித்த மனதை அடக்கி வைத்து தன் வேலைகளில் மூழ்கியவன், இருள் கவிழ்ந்து பாதி இரவு நெருங்கும் வேளையில் தான் கண்களின் அசதி உணர்ந்து லேப்டாப்பை மூடி வைத்து எழுந்து சோம்பல் முறித்தான்.
கண்கள் எரிச்சல் கொடுக்க… பால்கனியில் குளிர் காற்று முகம் மோத நின்றுவிட்டான். பார்வை எதிர்வீட்டை வெறித்தது.
சம்ருதி வந்துவிட்டதாக வருண் சொல்லிய அரை மணி நேரத்தில் தருண் இங்கு ஓடிவந்திருந்தான்.
“சித்திம்மா வந்துட்டாங்க ஸ்ரீ. வா உனக்கு காட்டுறேன். அவங்க ரொம்ப ரொம்ப சுவீட்” என்றவன் துள்ளலோடு யாரையும் கண்டுகொள்ளாது ஸ்ரீயை இழுத்துக் கொண்டு சென்றான்.
அவனது முகத்தில் தெரிந்த மகிழ்வில் ஹாலில் அமர்ந்திருந்த அம்மையப்பன், சுஜாதாவுக்கு கூட புன்னகை உண்டானது.
தருணின் உற்சாகமான குரல் மேலே அறையின் கதவு திறந்திருக்க விஷ்வாவுக்கு நன்கு கேட்டது. சட்டென்று மனதில் ஒரு பரபரப்பு உண்டானது. கட்டுப்படுத்திக்கொண்டான்.
‘ஏதோ ஒரு முடிவுடன் தான் வந்திருக்கிறாள். என்னவென்று தெரியும் முன்பு தானாக சென்று முகம் காட்டக்கூடாது’ என நினைத்து பொங்கும் பேரலையை போராடி அமைதிபடுத்தினான்.
ஆனால் இக்கணம் அந்த இருளில் வெளிச்சமாய் தன்னவளை கண்டிட தவித்தான்.
திடீரென குழந்தையின் அழுகை அந்த நிசப்த வேளையை கிழித்துக்கொண்டு ஒலிக்க…
விஷ்வாவின் உடலில் அப்பட்டமான அதிர்வு. மனமெல்லாம் மகிழ்ச்சி மத்தாப்பு. பேருவகை. தன் மகவின் ஒலியை முதன் முதலில் கேட்ட பரவசம்.
சிலையென நின்றிருக்க… அவனது அறைக்கு நேரெதிர், எதிர் வீட்டிலிருக்கும் முதல் தள அறையில் மின் விளக்கு ஒளிர்ந்தது. இரண்டு நிமிடங்களில் குழந்தையின் அழுகை நின்றிட… அவ்வீட்டு சன்னலின் கண்ணாடியில் அவனது உயிர்களின் வரிவடிவம்.
குழந்தை உறங்குவதற்காக தோளில் போட்டு தட்டிக்கொடுத்தபடி அறைக்குள்ளேயே நடந்து கொண்டிருந்தாள் சம்ருதி.
விளக்கின் வெளிச்சத்தால் பிரதிபலிக்கப்படும் நிழல் பிம்பம் தான், ஆனால் அவனது கண்களுக்கு அக்காட்சி கோடி விருந்தாய் அமைந்தது.
இருவரையும் அள்ளி அணைத்து மார்போடு புதைத்துக்கொள்ள கைகள் பரபரத்தன.
ஒன்று அவனது உயிரென்றால் மற்றொன்று அவனது உயிரில் ஜனித்தது. இரண்டுக்குமே அவனிடம் பாகுபாடில்லை.
சம்ருவின் தோளில் குழந்தை. அருகில் தானின்று இருவரையும் சேர்த்தது போல் அணையிட்டு நிற்பதாய் நினைத்து பார்த்தவனுக்கு அக்காட்சி தித்திப்பாய்.
‘எல்லாம் கற்பனையாய் கரைந்திடுமோ?’ அவனிடம் திடுக்கிடல். மெல்லிய நடுக்கம் உடல் பரவி அடங்கியது.
குழந்தையும் உறங்கியிருக்க விளக்கு அணைக்கப்பட்டது.
அதன் பின்பே மெத்தையில் விழுந்தவன் காலையில் எழும் போதே…
கொஞ்சம் நேரம் இங்கிருந்தாலும் தன்னைமீறி தன் கால்கள் எதிர்வீட்டை நோக்கி நடந்திடுமென அரிதிட்டுக் கொண்டவன் துரிதமாக கிளம்பி கல்லூரி வந்து சேர்ந்திருந்தான்.
வெகுவாக முயன்று தான் பணியில் கவனம் செலுத்தினான்.
பள்ளி பகுதிக்குள் நுழைந்தவன், அங்கிருக்கும் பிளே ஏரியாவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களின் மகிழ்வில் தன்னை தொலைத்தவனாக சில கணங்கள் நின்றுவிட்டான்.
வகுப்பிற்கான மணி அடிக்கவும் அவர்கள் எல்லாம் வகுப்பறை நோக்கி செல்லவும் தான், தனது பார்வையிடலைத் தொடர்ந்தான்.
முதல்வர் அறைக்கு சென்றவன்,
“ஸ்கூல் கிரவுண்ட் இன்சார்ஜ் திலீப் தானே? அவரிடம் சொல்லி… எக்ஸ்டரா சீசா, ஊஞ்சல், லேடர் எல்லாம் ஃபிட் பண்ண சொல்லுங்க” என்றான்.
“சார் அங்கிருக்கிறதே அதிகம் தான்” என்று முதல்வர் சொல்லிட…
“விளையாடும் போது குழந்தைங்க முகத்தில் தெரியுற சிரிப்புக்கு இன்னும் செய்யலாம் சார். குட்டி பசங்களுக்கு இவ்வளவு தான இருக்கு, பெரிய பசங்க மாதிரி இதில்லைன்னா இன்னொரு கேம் அப்படின்னு மூவ் பண்ணாமல் வெயிட் பண்ணி விளையாடுறாங்க, அதுக்குத்தான் எக்ஸ்ட்ரா போட சொல்றேன்” என்றான் தன்மையாக.
அவன் உயரத்திற்கும் பதவிக்கும் கட்டளையாகவே சொல்லியிருக்கலாம். ஆனால் பொறுமையாக விளக்கமளித்த விஷ்வா, அவர் மனதில் இன்னும் உயர்ந்துதான் போனான்.
“டென்த் அண்ட் ட்வெல்த் ஸ்டூடன்ட்ஸ் ரொம்ப பிரஷர் பண்ணாதீங்க சார். எல்லாம் படிச்சிடுவாங்க. நேத்து தான் ஒரு பயிற்சி தேர்வு முடித்திருக்க… திரும்ப நாளைக்கு டைம் டேபிள் போட்டிருக்கீங்க. நோட்டிஸ் போர்டில் பார்த்தேன். கொஞ்சம் அவங்க மைண்ட் ஃப்ரீயாக கேப் கொடுங்க சார்” என்றவன் கிளம்பிவிட்டான்.
அலுவலக அறையிலிருந்து வெளியில் வந்தவன், முதல் தளத்திற்கு மாணவர்கள் படிகளில் ஏறிக்கொண்டிருக்க அதனை பார்த்தபடி பின்னால் கைகட்டிக்கொண்டு நின்றுவிட்டான்.
‘புக்ஸ் தூக்கவே தனி எனர்ஜி வேணும் போல’ என்றவன், “சிஸ்டம் அப்படியிருக்கு… நிறைய செய்ய முடிஞ்சாலும் இந்த புக்ஸ் எண்ணிக்கையை மட்டும் குறைக்க முடியல’ என்ற யோசனையில் அங்கிருந்து நகரவேயில்லை.
யாரோ குத்தும் விழிகளால் தன்னை துளைப்பதை உணர்ந்தான்.
மூன்று வருடங்களுக்கு பின்னர் விஷ்வாவை நேருக்கு நேர் காணப்போகும் படபடப்பு கொஞ்சமும் அவளிடம் இல்லை. மாறாக ஒரு நிம்மதி. நிறைவு.
விஷ்வா பள்ளி பார்வையிடலுக்கு சென்றிருக்கிறான் என்பதை தெரிந்துகொண்டவள், அவனை காணும் ஆர்வத்தில் பள்ளி பகுதிக்கு வந்துவிட்டாள்.
மைதானம் கடந்து வந்தவளுக்கு முதுகுக்காட்டி நின்றிருந்தான்.
சட்டென்று அவளின் நடையில் தடுமாற்றம். முயன்று தரையில் பாதம் பதித்து தன்னை நிதானித்து நின்றாள்.
கால்கள் அசைய மறுத்திட, அவளின் பார்வையின் தீவிரம் அதிகரித்தது. அழுத்தமோ, அடர்த்தியோ… இமை சிமிட்டாது அவனை பார்க்க வைத்தன அவளது விழிகள்.
முகம் பாராமலே இந்நிலை…
அவனிடம் அசைவு. திரும்பும் நொடிப்பொழுதில் சம்ரு திரும்பி கல்லூரி நோக்கி நடக்கத் தொடங்கியிருந்தாள்.
விஷ்வா கண்டுவிட்டான். அங்கேயே தேங்கிவிட்டான்.
“அவளா?” உதடு அசைந்திட, ‘ம்ருதி’ என்று கூவியது மனம்.
‘என்னை பார்க்க வந்தாளா? ஏன் போயிட்டாள்?’ வண்டாக மூளை குடைய ஆரம்பித்தது.
அவள் நின்ற இடமே அவனுள் தவிப்பைக் கூட்டியது. உறை நிலையில் அவன்.
அருகில் ஒரு மாணவன் கீழே விழுந்துவிட்ட சத்தத்தில் மீண்டவன், மாணவனைத் தூக்கிவிட்டு,
“க்ளாஸ் நேரமானால் பரவாயில்லை. ஸ்டெப்ஸில் நோ ஜம்பிங்” என்று சொல்லி… சம்ரு சென்ற திசையில் நடந்தான்.
‘எதுக்கு வந்திருப்பாள்?’
அப்போதுதான் அவள் இங்கு வேலை செய்யப்போவதாக முன்பு வேலை பார்த்த இடத்தில் சொல்லியது நினைவுவர…
‘மேடமுக்கு நான் வேலை கொடுக்கணுமா? நல்ல கதை தான்’ என சிரித்துக்கொண்டான்.
‘என்கிட்ட வருவியா? எப்படி கேட்ப? நீ கேட்டதும் நான் கொடுத்திடனுமா?’ இப்படி அவளுடன் பேசுவதாக மனதில் உரையாடியவன் தன் தளத்திற்கு வர, அங்கு சம்ருதி இருப்பதற்கான அடையாளமே இல்லை.
‘போய்விட்டாளோ?’ நினைக்கையில் அறையில் தொலைபேசி ஒலியெழுப்ப, உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்து அவன் பேசி முடிக்க… வெளியில் கதவு தட்டி அனுமதி கேட்கும் குரல்.
‘அவளே தான்…’
இருக்கையிலிருந்து எழுந்து இங்குமங்கும் நடந்தான். மூச்சினை ஆழ்ந்து உள்ளிழுத்தான். நெஞ்சத்தை விரல்கள் மடக்கி குத்திக்கொண்டான். வாய் குவித்து காற்றினை ஊதினான். மேசையிலிருந்த தண்ணீர் எடுத்து பருகினான்.
அவன் மனம் சமன்பட மறுத்தது.
‘ஓ காட்… என்ன பன்ற நீ? ஊஃப்…’
மீண்டும் நீர் பருகி இருக்கையில் பொத்தென்று அமர்ந்தவன் கண்களை இறுக மூடித்திறந்து…
“எஸ்… கெட் இன்” என்றான் முயன்று வரவழைத்த கம்பீரத்தோடு.
உதட்டிற்கு மேல், நெற்றி, கழுத்தென பட்டென வியர்த்துவிட்டது. செவி தீண்டிய அவனது குரலில்.
காத்திருப்போருக்காக போடப்பட்டிருக்கும் இருக்கையில் உட்கார்ந்துவிட்டாள்.
தைரியமாக வந்துவிட்டாள். ஆனால் முடியவில்லை.
‘ம்ருதி…’
தான் அழைத்தும் உள்ளே வராதவளை எதிர்பார்த்து தானே எழுந்து வந்தவன், கதவின் அசைவில் மீண்டும் தன்னிடத்தில் அமர்ந்தான். கணினியில் பார்வையை பதித்தான்.
‘இதுக்கே இப்படின்னா… இன்னும் நிறைய இருக்கே! கொஞ்சமும் அசந்துடாதே ம்ருதி’ என்று தனக்குத்தானே சொல்லியபடி கதவினை திறந்து உள்ளே வந்தவள் பார்வையை சுழலவிட்டு, சிறு கூடம் போன்ற அமைப்பை கடந்து தாளாளர் என்று குறிப்பிட்டு காட்டிய தடுப்பினை கடந்து சென்றவள்,
நொடியில் கண்களில் படம் பிடித்து அகம் சேமித்த தன்னவனின் முகத்தில் பதிந்த ரசனையை நொடியில் மாற்றி அழுத்தமாகக் காட்டிக்கொண்டாள்.
‘என்ன சத்தத்தையே காணும்?’ கேள்வியாய் விஷ்வா தன் கருவிழியை திருப்பிட…
நீலம் மற்றும் சிவப்பு வர்ணம் வரி வரியாய் நிறைத்த புடவையில், நெற்றியில் ஒற்றை புள்ளி பொட்டில் அம்சமாய் அவன் அகம் நிறைத்தாள்.
காதில் தொங்கும் நீண்ட தோடு தனியொரு அழகாய் அவனின் பார்வைக்கு. ரசித்தான்.
அவளது செருமலில், தாவும் மனதை அடக்கி நிமிர்ந்து அமர்ந்தான்.
“குட்மார்னிங் சார்” என்றாள் சம்ருதி. எவ்வித சலனமுமின்றி.
விஷ்வாவுக்குத்தான் உள்ளுக்குள் கனன்றது.
‘சாராம்… சார். நான் கேட்டேனா? வழக்கமான வீ.ஆர் கூட இப்போ சாராகியாச்சு.’ என்று உள்ளுக்குள் புலம்பியவன், வெளியில் அவளுக்கு மேல் அழுத்தமாக சாதாரணப் பார்வை பார்த்து வைத்தான்.
பதிலுக்கு வணக்கம் சொல்லியவன்,
“நீங்க?” என்று கேட்டானே பார்க்கலாம், அவள் பார்வை மேசை மீதிருந்த பேப்பர் வெய்யிட்டில் படிய…
‘ஆத்தீ…’ என்று மனதில் அலறியவன் வேகமாக அதனை எடுத்து மேசை இழுவையில் வைத்தவனாக, அவளை உட்காரக் கூறினான்.
வந்துவிட்டாள் உரிமையாக. அதிகாரமாகக் கேட்க முடியவில்லை.
உரிமையும் அதிகாரமும் உரியவரிடத்தில் மட்டுமே தயக்கம் கொள்வதில்லை.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.