அன்று காலையே சுஜாதாவுக்கு அழைத்த புருஷோத்தமன் வீட்டிற்கு குடும்பத்துடன் வருவதாகக் கூறியிருக்க… வழக்கம்போல் சுஜாதா அலப்பறை செய்ய ஆரம்பித்துவிட்டார்.
என்றும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளாத அம்மையப்பன் அன்று தன் கடுப்பை அப்பட்டமாக மனைவியிடம் காண்பித்தார்.
புருஷோத்தமன் செய்த செயலுக்கு எதுவுமே செய்யவில்லையே என்கிற ஆதங்கம் அவரிடம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
“உங்க அண்ணன் என்ன பல வருசம் வராமல் இருந்தா இப்போ வரான்? தினமும் ஒரு காரணம் சொல்லிக்கிட்டு வந்துட்டு தானே இருக்கான். என்னவோ புதுசா வர மாதிரி இவ்வளவு ஆட்டம் போடுற?”
அம்மையப்பன் கேட்டதில் அவர்களின் பிள்ளைகளுக்கே ஆச்சர்யம்.
என்ன தான் புருஷோத்தமனை பிடிக்கவில்லை என்றாலும், அதனை ஒருபோதும் இப்படி அம்மையப்பன் வெளிக்காட்டியதில்லை.
“எனக்குன்னு இருக்கிறது என் அண்ணன் தான். அவர் வரதில் உங்களுக்கென்ன கஷ்டம்?” சுஜாதா கண்ணீர் சிந்தினார்.
“ஒண்ணுமில்லை சும்மாதான்னு கொஞ்ச நேரம் பேசிட்டு வச்சிட்டாள்.”
“ஹோ…” அவ்வளவு தான் விஷ்வாவின் எதிர்வினை. இதே முன்பென்றால் “என்னிடம் பேசத்தான் உன்னை அழைத்திருக்கிறாள்” என்று சொல்லியிருப்பான். ஆனால் இப்போது அப்படி கற்பனையாகக் கூட அவனால் நினைத்திட முடியாதளவிற்கல்லாவா அன்றைய சம்ருவின் பேச்சு சுயமெல்லாம் இருந்தது.
“திரும்ப கால் பண்ணாள். அவள் எப்பவும் போல உன் வாய்ஸ் கேட்கத்தான் பண்றாள், எப்படி கேட்கன்னு தெரியாமல் தவிக்கிறான்னு நினைச்சு நானே விஷ்வா வாய்ஸ் கேட்கணுமா? கான் கால் பண்ணவா? கேட்டேன்” என்று சொல்லிக்கொண்டிருந்தவன் நிறுத்திவிட்டான்.
“அவங்களை பத்தி என்கிட்ட பேச ஒண்ணுமில்லைன்னு சொன்னாளா?” எனக் கேட்டிருந்தான் விஷ்வா.
“எப்பிடிடா?”
“எனக்குள்ள இருக்க மொத்தமும் அவள் தான்” என்றான் விஷ்வா.
“ம்க்கும் நீதான் அவளை நினைச்சு உருகிட்டு இருக்க… அவள் அவளோட பிரண்ட் என் கம்பெனிக்கு வேலைக்கு வறாளாம். கொஞ்சம் பார்த்துக்க சொல்லி கால் பண்ணியிருக்காள்” என்ற தினேஷ், “சம்ருவுக்கு இப்போலாம் நாம முக்கியமில்லாம போயிட்டோம்ல விஷ்வா?” என்றான்.
விஷ்வாவிற்கு இதற்கு என்ன சொல்லவென்றே தெரியவில்லை. மௌனமாக இருக்க தினேஷ் வைத்திட்டான்.
ஆயாசமாக நெற்றியை நீவிக்கொண்ட விஷ்வா…
‘ஏண்டி இப்படி பண்ற?’ என்ற கேள்வியோடு இருக்கையில் பின் சாய்ந்தான்.
சில நிமிடங்களில் புருஷோத்தமன் தன் குடும்பத்தோடு வந்து சேர்ந்தார்.
சுஜாதா வாயெல்லாம் பல்லாக வரவேற்று உபசரித்துக் கொண்டிருந்தார்.
விஷ்வா மூடியிருந்த விழிகளை திறக்கக்கூட இல்லை.
“ம்க்கும்…” இந்திரா நொடித்துக்கொண்டார்.
அஞ்சலி அம்மையப்பனிடம் பேச ஆரம்பித்துவிட்டாள். அவளுடன் அவர் எப்போதுமே சகஜமாக உரையாடுவார்.
மித்ரன் ஆபீஸ் செல்ல கிளம்பி வர, வந்திருப்பவர்களை அவன் கண்டுகொள்ளவே இல்லை.
அம்மையப்பனிடம் கிளம்புவதாக கண் காட்டியவன் வெளிநோக்கி செல்ல…
“என்ன மித்ரா கிளம்பிட்ட? நாங்க முக்கியமான விடயம் பேச வந்திருக்கோம். என்ன ஏதுன்னு கேட்காமல் போற. நீயிருந்தால் நல்லாயிருக்கும்” என்று அவன் செல்வதை தடுக்க நினைத்தார்.
மித்ரன் அஞ்சலியை மறுத்திருக்க, அவனை வைத்து விஷ்வாவை சம்மதம் சொல்ல வைக்கலாமென்ற திட்டத்தோடு வந்திருந்தார்.
“முக்கியமான விடயம்ன்னா அப்பா சொல்றது தான். என்கிட்ட என்ன புதுசா?” எனக் கேட்டவன், புருஷோத்தமன் பதில் அளிக்கும் முன்பே “வரேன்’ப்பா” என்று வெளியேறிவிட்டான்.
இந்திரா தான் முணுமுணுத்தபடி அமர்ந்திருந்தார்.
அவருக்கு நன்றாகத் தெரியும்… எப்படியும் விஷ்வா மறுக்கத்தான் செய்வானென்று. எதற்கும் புருஷோத்தமன் திட்டம் வைத்திருப்பாரென்று பொண்ணுக்கு அம்மாவாக மட்டுமே வந்திருந்தார்.
மித்ரன் சென்ற பின்பும் புரோமோத்தின் பார்வை பழியுணர்வோடு பொறாமையோடு மித்ரன் சென்ற திசையில் தான் நிலைத்திருந்தது. அவன் தன் வாழ்வில் போட்டியாக நினைக்கும் ஒரே ஆள் மித்ரன் மட்டுமே!
மித்ரனை தொழிலில் வீழ்த்த அவன் செய்த முயற்சியை அவன் வளர்ச்சியில் காண்பித்திருந்தால் முன்னேறியிருப்பான்.
ஒருவரை வீழ்த்த நினைத்தால் வீழ்ந்து போவது நாம்தான்.
சுஜாதாவின் உபசரிப்பு எல்லாம் முடிய புருஷோத்தமன் பேச்சினை துவங்கினார்.
“அது வந்து மாமா… அஞ்சலிக்கு கல்யாணம் செய்யலாம் நினைக்கிறேன்.”
‘அஞ்சலியிடம் சொல்லவில்லை போலும்’ என எண்ணிக் கொண்டார்.
ஆனால் அவளின் அதிர்வுக்கான காரணம் அறிந்த விஷ்வா எதையும் கண்டுகொள்ளவில்லை.
“என்னப்பா என்கிட்ட ஒருவார்த்தை சொல்லல?”
“ஏன் உன்கிட்ட கேட்டுதான் செய்யணுமோ? உன்னை பெத்தவங்க எங்களுக்குத் தெரியும். எப்போ எதை பண்ணனுன்னு” என்று மகளின் வாயை மூடச்செய்தார் இந்திரா.
அம்மையப்பனுக்கு கடுகடுவென வந்தது.
அடுத்து அவர் சொல்ல வருவது அம்மையப்பன் அறிந்தது தானே! அஞ்சலியை சேர்ப்பதற்கு எத்தனை கலகத்தை ஏற்படுத்தி ஒரு உயிரையே மனரீதியாக தாக்கி பிரித்திருக்கிறாரே! ஆத்திரமாக வந்தது. அதனை கேட்க முடியாத உறவு நிலையை வெறுத்து வேடிக்கை பார்த்திருந்தார்.
“மித்ரன் தான் வேண்டான்னு சொல்லிட்டிங்க…” என்று புருஷோத்தமன் சொல்லும்போதே,
விஷ்வா இல்லையென்றால் உறவே இல்லையென மறைமுகமாக இந்திரா சொல்வது அங்கிருந்த எல்லோருக்குமே புரிந்தது.
விஷ்வாவின் காதல் அறிந்திருந்த சுஜா, ‘இவன் முடியாது சொல்லப்போறான். இந்த அண்ணி ஆட்டமா ஆடுவாங்க’ என்று பயந்து நின்றிருந்தார்.
ஆனால் சுஜாதா எண்ணியது போலெல்லாம் விஷ்வா எதுவும் பேசாது அமைதியாகத்தான் இருந்தான். அவனிடம் வேடிக்கை பார்க்கும் பாவனை மட்டுமே!
‘விஷ்வா அமைதிக்கு வேற காரணம் இருக்குமோ’ என்ற சிந்தனையில் அம்மையப்பன்.
விஷ்வாவுக்குத்தான் அஞ்சலி எப்படியும் இவர்களது முடிவுக்கு நோ சொல்லிவிடுவாளென்று தெரியுமே! அதான் அலட்டிக்கொள்ளாது இருந்தான்.
விஷ்வாவின் இந்த அமைதிக்கு புருஷோத்தமன் தப்பர்த்தம் புரிந்துகொண்டார்.
‘தான் பேசிய பேச்சில் அவள்(சம்ரு) இவனை ஒரேயடியா தலை முழுகிட்டாள் போல. அதான் பய அஞ்சலிக்கு மறுப்பு சொல்லாமல் கட்டிக்கிற முடிவுக்கு வந்துட்டான்.’ அவர் பாட்டுக்கு மனதில் தனக்கு சாதகமாக நினைத்துக் கொண்டார்.
“நான் ஒரு பையனை விரும்புறேன். அவனைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்” என்று புருஷோத்தமன் மற்றும் இந்திரா இருவரின் கனவு கோட்டையை சுக்கு நூறாக உடைத்திருந்தாள்.
இந்திரா மற்றவர்கள் உணரும் முன்பு மகளை இழுத்து தரையில் கிடத்தியவர் கன்னத்தில் மாற்றி மாற்றி அறைந்தார்.
“நீங்க என்ன பண்ணாலும் நான் அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்.” அவளின் காதலில் அத்தனை உறுதியாக இருந்தாள்.
சுஜா, அம்மையப்பன் தடுத்தும் இந்திரா தன் அடியை, வார்த்தையால் வதைப்பதை நிறுத்தவில்லை.
அவ்வளவு அடிகளை வாங்கிக்கொண்டும், ஒரு துளி நீர் சிந்தாது… அப்படியே கால்களை மடக்கி அமர்ந்துகொண்டாள்.
“எவ்வளவு தைரியம். என்கிட்டவே காதலிக்கிறேன்னு வந்து சொல்லுவ” என்ற இந்திராவின் கைதடங்கள் அஞ்சலியின் உடல் முழுக்க பதிந்தது.
அஞ்சலியின் அசையாத தோற்றம் அம்மையப்பனையே அசைத்து பார்த்தது. ஒன்றும் செய்ய முடியாது பார்த்திருந்தார். இதில் அவர் சொல்ல ஒன்றுமில்லை.
குறுக்கே சென்றால், “எம்பொண்ணு… நடுவில்வர நீங்க யாரு?” அப்படி என்று கேட்டுவிடுவார் இந்திரா. யோசிக்கவெல்லாம் மாட்டார். அதற்காகவே அம்மையப்பன் ஒதுங்கி நின்றார்.
“விஷ்வா நீ சொல்லுப்பா. உன் பேச்சுக்கு அண்ணி கொஞ்சம் பயப்படுவாங்க.” சுஜா மகனிடம் கேட்டுக்கொண்டார்.
“என்னண்ணா பார்த்திட்டு இருக்கீங்க?” என்க, அவர் வாய் திறக்கவே இல்லை.
இந்திரா தன்னுடைய அடியை நிறுத்தவில்லை. வாயினையும் மூடவில்லை.
மகளென்றும் பாராமல் காதலிப்பது ஏதோ ஒழுக்கமின்மை போலவும், இந்த வயதிலேயே அவளாக ஒருவனை தேடிக்கொண்டதாக இரட்டை அர்த்தத்திலும் அத்தனை பேசினார்.
இந்திராவின் சத்தம் கேட்டு அப்போது தான் அறையிலிருந்து வந்த சுசி…
அஞ்சலியை சென்று தூக்க முயல,
“விடு சுசி. இது அவங்க குடும்பப் பிரச்சனை” என்றான் விஷ்வா.
“பார்த்தீங்களாண்ணா உங்க பையன் சொல்றதை?” என்ற இந்திரா, “இப்போவே இப்படி. இதில் என் பொண்ணு வெளியில குடுத்துட்டால் நான் இந்த வீட்டையே மறந்திட வேண்டியதுதான். அதனால விஷ்வாவை அஞ்சலியை கட்டிக்க சொல்லுங்க. இல்லை தங்கச்சி உறவே உங்களுக்கு இல்லை” என்றார்.
விஷ்வாவின் பார்வையில் கூர்மை.
இந்திரா பார்வையை திருப்பிக்கொண்டவராக விஷ்வாவின் மறுப்பிற்க்காகவும் அஞ்சலியையே அடித்தார்.
“என்னை நீ கொன்னேபோட்டாலும், நான் விரும்புறவனைத்தான் கட்டிப்பேன்” என்று வீடே அதிர கத்தினாள் அஞ்சலி.
அப்படியொரு அழுத்தம் அஞ்சலியிடம்.
‘இந்த திடம் உனக்கில்லாமல் போச்சே ம்ருதி. காரணம் எதுவா வேணாலும் இருக்கட்டும். என்னை வேணாம் சொல்லிடுவியா?’ மனதிற்குள் ஆயாசமாக நினைத்தான். கண்களை மூடிக்கொண்டான்.
“யாரென்னன்னு விசாரிச்சு நல்லப்பையனா இருந்தால் பேசி முடிவு பண்ணு புருஷோத்தமா. அடிக்கிறதாலோ, திட்றதாலோ எதுவும் மாறப்போவதில்லை. அவள் தான் ஸ்ட்ராங்கா இருக்காளே!” இந்திராவிடம் பேச முடியாதென புருஷோத்தமனிடம் பேசினார் அம்மையப்பன்.
“யோசிச்சுட்டு முடிவு பன்றேன் மாமா” என்ற புருஷோத்தமன் விஷ்வாவை அழுத்தமாக பார்த்துக்கொண்டே மகளையும் மனைவியையும் கூட்டிக்கொண்டு கிளம்பினார்.
புரமோத் நடப்பதில் தனக்கு சம்மந்தமில்லை எனும் விதமாக தன் வேலையை பார்க்க சென்றுவிட்டான்.
ஏன் காதலிக்கிறாய் என்று தங்கையை கடிந்துகொள்ளவுமில்லை. அவளுக்கு பரிந்து பேசவுமில்லை. அவன் அப்படித்தான். தேவைக்குத்தான் உறவை நாடுவான்.
அவர்கள் சென்றதும் அம்மையப்பன் விஷ்வாவிடம்,
“உன் கல்யாணம் நடக்காமல் இருக்கும்வரை, அஞ்சலியை அவள் விரும்புற பையனுக்கு கட்டித்தர இந்திரா விடமாட்டாள்” என்றார்.
கண்களை மெல்லத் திறந்த விஷ்வா,
“செண்பகம் பாட்டி என்கிட்ட வேணுன்னா சரியான காரணம் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், உங்கக்கிட்ட… ஏதோ பெரிய காரணம், அதனால் தானே என்கிட்ட சொல்லாமல் இருக்கீங்க? அதுவும் ம்ருதி அவளோட அப்பா இறப்புக்கு எங்க காதலை குற்றவாளியாக்குகிறாள். இந்த நிலையில் அவள் கல்யாணத்துக்கு சம்மதிப்பா(ள்) நினைக்குறீங்களாப்பா?” என்றதோடு, “ம்ருதி தவிர வேறொரு பொண்ணுக்கு என் வாழ்வில் இடமில்லை” என்று கூறி விறுவிறுவென சென்றுவிட்டான்.
சம்ருவைத் தவிர இன்னொரு பெண்ணுக்கு என் வாழ்க்கையில் இடமில்லை என்று சொல்லிய இதே விஷ்வா தான் பின்வரும் நாளில் அஞ்சலியை தன் மனைவியாக ஏற்றுக்கொண்டிருந்தான்.