சண்டை போட்டு சமாதானம் ஆகிய பின்னான நாட்களில் உறவுக்குள் ஒரு நெருக்கம்… ஓரிழை கூடுவது போல ஒரு பிரம்மை தோன்றுமே! அந்த பிரம்மை காலத்தில் தான் வாழ்ந்துக்கொண்டிருந்தனர் ‘வான்கோ’ ஜோடி!
இருவருக்குள்ளும் நெருக்கம் கூடியது. தினமும் பார்த்துக்கொள்ளும் அளவுக்கு நெருங்கியிருந்தனர். வேலை நேரத்தில் கூட, ‘சும்மா தான்! என்ன பண்றீங்ன்னு கேட்க கூப்பிட்டேன்’ என்ற துரித அழைப்புகள் அலைபேசி மூலம்.
“என் வாலட் ரொம்ப பழசா தெரியுது. வேற வாங்கலாம்ன்னு இருக்கேன். ஈவினிங் பார்கிங்’ல வெயிட் பண்றேன், வரீங்களா?” என்ற அவன் கேட்டால், “நீ பர்ஸ் வாங்க நான் எதுக்குடா வரணும்?” என்று எதிர்கேள்வி கேட்காமல் உடனே ‘சரி!’ என்றுவிடுவாள் வாணிலா.
அவனுக்கு அவளோடு இருக்க பிடித்தது, பேசப்பிடித்தது, பழகப்பிடித்தது… அவளையே பிடித்தது. காதலிக்கும் வயதை எல்லாம் தான் கடந்து வந்துவிட்டோம் என்ற எண்ணம் அவனுக்கு. பதின்பருவத்தில் விடலை பையனாய் சரியாக மீசை கூட முளைக்காத காலத்தில் இருந்தே ஸ்பெயின்’னில் காலம் தள்ளுவதாலோ என்னவோ… தன்னை ஒரு பழைய பிராணியாக அவன் மனதே உருவகப்படுத்திக்கொண்டது.
இன்னும் ஒரு வருடம் கடந்தால், அவன் ஸ்பெயினில் குடியேறி பதினைந்து ஆண்டுகளை நிறைவு செய்துவிடுவான். ஸ்பெயின் நாட்டின் அதிகாரப்பூர்வ குடியுரிமை கூட வாங்கிவிட்டான்.
இங்கேயே படித்து இங்கேயே வேலையில் சேர்ந்து, வரும் வருமானத்தில் தாராளமாய் செலவு செய்தது போகவே மீதி இருக்க, சௌகர்யமாய் ஒரு பெரிய வீட்டை வாங்கி குடியேறி, பின்பு அந்த பெரிய வீட்டில் தனியே இருக்க பயந்து சிலரை ‘பேயிங் கெஸ்ட்டாக’ வைத்துக்கொண்டு, அவனுக்கு அவனே சமைத்து, தனியே உண்டு, தனக்கு தானே வைத்தியம் பார்த்து… ஸ்…ஷப்பா…!!! உண்மையில் அவனுக்கு வயதானதோ இல்லையோ, அவன் மனதுக்கு வயதாகிப்போனது.
பேசி சிரித்து விளையாட ஒரு கேர்ள்பிரண்ட் கிடைக்காமல் வறண்டுக்கிடந்த அவன் வாழ்க்கையில் வசந்தம் வீச ஒருத்தி வந்துவிட்டாள் என சமீபமாய் தான், வயசாகியிருந்த மனது, வயாகரா உண்டதை போல துள்ளிக்கொண்டிருந்தது.
வெளிநாட்டுக்காரிகளிடம் தழும்பாத மனது, இந்த வெடுக்கென பேசும் வெட்டுக்கிளியிடம் சிக்கிக்கொண்டது.
அவனுக்கு அவளை பிடித்துவிட்டது என்பதை அவனே உணர்ந்தும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. அவளுக்கு அவனை பிடிக்க வேண்டுமே! பிடித்தம் பிடிவாதமாய் வரக்கூடாது என்ற எண்ணம் அவனுக்கு.
தன்னை தான் உணர்ந்ததை போல அவளுக்கு அந்த எண்ணம் இருந்தால், அவளே உணர்ந்து வரட்டும். அதுவரை நண்பன் என்ற கோட்டை தாண்டாமல் இருப்போம் என்று முடிவெடுத்தான். அதை கடைப்பிடிக்கவும் செய்தான்.
வாணிலா என்ன நினைக்கிறாள் என்பதை தான் புரிந்துக்கொள்ள முடியவில்லை. பேசினால், பேசுகிறாள். சிரித்தால், சிரிக்கிறாள். எங்காவது போய் வரலாமா என்று கேட்டால், சரி என்கிறாள். பெரிதாக மறுப்பதும் இல்லை, பிகு செய்வதும் இல்லை. ஆனால் இதெல்லாம் வைத்து, ‘பிரியம்’ என சொல்லிவிட முடியாதே!!!
‘சாரி, நான் உங்களை பிரன்ட்’டா தான் பாத்தேன்!’ என்றுவிட்டால்???
காதல் தோல்வியை எல்லாம் தாங்கும் வயது அவனுக்கு இல்லை என்று கத்திரிக்காய் முத்த வேண்டி காத்திருக்கிறான்.
அன்றும் கூட அப்படி தான்! அவளுக்காக கார் பார்க்கிங்கில் அவன் காத்திருக்க, அவசரமாய் ஓடி வந்தாள் அவனிடம்.
“ஹே சாரிப்பா… ரொம்ப லேட் ஆச்சா?” அவள் கேட்டுக்கொண்டே முன் சீட்டில் ஏறி அமர, “டைம் இருக்கு, போலாம்!” என்று காரை ஸ்டார்ட் செய்தான் கோவர்த்தன்.
“செம்ம வேலை இன்னைக்கு. நியூ கேம் வொர்க் ஆரம்பிச்சதும் அத டெவலப் பண்றதுல நேரம் போறதே தெரியல” சீட்டில் தளர்ந்து அமர்ந்தவள் தலையை நன்றாக சாய்த்துக்கொள்ள, “ரொம்ப டயர்ட்’ன்னா வீட்டுக்கு போலாமே?” என்றான்.
“இல்ல இல்ல… படத்துக்கே போலாம்! ரொம்ப நாளா ப்ளான் போட்டு தள்ளிட்டே இருக்கு” என்றவள் சொன்னதும், மறுத்து பேசாமல் வண்டியை ஓட்டினான் கோ. மிதமான ஏசியில், அலுங்காத டிரைவிங்கில், உடன் கோவர்த்தன் இருக்கும் பாதுகாப்பில் நிம்மதியாய் கண் மூடியவள், எப்போது உறங்கினாள் என்றே தெரியாது.
அவள் உறங்குவதை கண்டவனும் தியேட்டர் போனதும் எழுப்பிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டான். அரை மணி நேரம் சென்று தியேட்டர் வந்த பிறகும் அவனுக்கு அவளை எழுப்பத்தான் மனமில்லை. பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான்.
அவள் முகத்தை பார்த்தாலே தெரிந்தது, ஆழ்ந்து உறங்குகிறாள் என்று! காலையில் இருந்து கணினி முன் தவமிருந்ததால், களைப்பின் சுவடுகள் அவளிடம் பார்த்ததுமே தெரிந்தது.
வயது கேட்டபோது இருபத்தி எட்டு என்று சொன்னதாய் அவன் நியாபகம். ஆனால், பார்க்க என்னைவோ சிறுபெண்ணாய் தெரிந்தாள். கழுத்து எலும்பு கூட துருத்திக்கொண்டு தெரிய, சரியாக உண்ண மாட்டாள் போல என்று தோன்றியது.
‘என்னோடவே வந்துடு, மாமன் உனக்கு வகை வகையா சமைச்சு போட்டு புஜுட்டியா ஆக்கிறேன்!’ சத்தமில்லாமல் சொன்னான் அவளிடம்.
அவள் காதின் ஓரத்தில் மொட்டு விட்ட வியர்வை துளி அவன் கண்ணை உறுத்த ஏசியை அதிகப்படுத்தினான்.
அவளுக்கு ‘காதலன்’ யாரும் இல்லை என்று உறுதியாக கேட்டு தெரிந்ததால், அவன் எண்ணம் எல்லாம் எப்படி அவளை தன்னிடம் காதலில் விழ வைப்பது என்ற ஒன்று தான்.
சீலிங் மிரரை இழுத்து தன்னை தானே ஆராய்ந்துக்கொண்டான். வனப்பு வக்கனையாய் இருக்கிறதா என்றறிய! அந்தோ பரிதாபம்!!! அவனுக்கு அவனே அழகனாய் தெரியாமல் போனான்!
மீண்டும் உறங்கும் அவளிடம் கவனம் குவிய, அழுத்தமாய் அவள் முகத்தையே பார்த்திருந்தான். அவள் முகம் தாண்டி வேறு எங்கும்… எங்குமே அவன் பார்வை போகவில்லை. அங்கெல்லாம் பயணிக்கும் எண்ணமும் அவனுக்கு அப்போது, அந்த நிமிடம் இல்லை.
பார்க்கும்போதே மனதுக்குள் வார்த்தைகள் கோர்க்க ஆரம்பித்தது.
அவளை பார்த்துக்கொண்டே அவன் ரசனையாய் சொல்ல, அவளிடம் அசைவு. வேகமாய் கண்களை மூடிக்கொண்டான். சில நொடிகளில் விழித்தவள், “ஓ… காட்!!” என்று நெற்றியில் அடித்துக்கொள்வது கேட்டது. கண்ணை திறக்காமல் உறங்குவதை போல நடித்துக்கொண்டிருந்தான்.
“கோ… ஏங்க… கோ!!!” அழைத்து பார்த்தவள், அவன் கண் திறக்கவில்லை என்றதும், லேசாக தோள் தொட்டாள். அப்போது தான் விழிப்பவன் போல உடலை முறுக்கிக்கொண்டு நிமிர்ந்து அமர்ந்தவன், “என்னாச்சு?” என்று வினவ,
“என்ன ஆச்சா? படம் பாதி முடிஞ்சுருக்கும். நான் தான் தூங்கிட்டேன்னா, எழுப்பிருக்கலாம்ல? நீங்களும் கூட தூங்குறீங்க?” அவள் கேட்டதும், “எழுப்புனேன், நீங்க எழுந்துக்கவே இல்ல” என்று புளுகினான்.
“அப்படியா?” நம்பாமல் கேட்டாள் அவள்.
“ஆமாங்க… நிலா நிலா’ன்னு நான் கூப்பிட்ட சத்தத்துல, மேல இருக்க நிலாவே, ‘என்னையா?’ன்னு இறங்கி வந்து கேட்டுட்டு போய்டுச்சு… ஆனாலும் நீங்க அசையாம தூங்குறீங்க” அத்தனை பாவனையாய் சொன்னான் அவன்.
“அட நிஜமாங்க!” அவன் அழுத்தி சொல்ல, “கொஞ்சம் தட்டி எழுப்புனா முழிச்சுருப்பேன்” என்றவளிடம், “தொட்டு எழுப்பிருக்கணும்ன்னு சொல்றீங்களா?” என்று கேட்டான்.
“ம்ம்ம்!” என்றவள், முடியை அள்ளி ஒரு ரப்பர்பேண்டுக்குள் அடைக்க, “அப்போ நான் உங்களை தொடலாம்ன்னு சொல்றீங்களா?” என்றான் தன் விஷம பார்வையை மறைத்துக்கொண்டு.
முடியை அள்ளி பிடித்திருந்தவள், கைகளை கூட இறக்காமல் அப்படியே அவனை முறைத்துப்பார்த்தாள்.
அவனும் சளைக்காமல் அவள் கண்களையே பார்க்க, நொடிகள் கடந்தது.
வாணிலாவுக்கு சந்தேகம்! அவன் கேட்டதன் பின்னணியில் ஏதாவது உட்பொருள் இருக்குமோ என்று! அதன்பொருட்டு அவள் தன் நிலையை மாற்றாமல் அதே எண்ணத்தில் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆழ மூச்செடுத்து விட்டவன் தான் பொறுக்க முடியாமல், “கஷ்டப்பட்டு ரொம்ப நேரமா கண்ணை மட்டும் பார்த்துட்டு இருக்கேன். கையை கீழ இறக்கிட்டீங்கன்னா தேவலாம்!” என்று நல்லவனாய் சொல்ல, சடாரென உயர்ந்திருந்த கரங்களை இறக்கிக்கொண்டாள் வாணிலா. அள்ளி பிடித்திருந்த முடி தளர்ந்து அவள் முகத்தை மறைத்துக்கொண்டது. நெஞ்சு படபடவென அடிக்க ஆரம்பித்தது அவளுக்கு.
‘என்ன சொல்றான் இவன்? வேற எதை பார்ப்பானாம்? பார்த்துடுவானா அவன்?’ முயன்று கோவத்தை வரவழைத்தாள். அவள் நேரத்துக்கு அது வருவேனா என்றது.
அவனுக்குமே பயந்து வந்தது, எங்கே கோவித்துக்கொண்டு போய்விடுவாளோ என்று! அந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர, “நான் டின்னர் வாங்கிட்டு வந்துடுறேன்!” என்றவன் காரை விட்டு இறங்கி சென்றுவிட்டான். அவன் போனதும் தான் அவள் படபடப்பு அடங்கியது.
சற்று தூரத்தில் ஒரு துரித உணவகத்தில் நின்று அவன் உணவுக்கு ஆர்டர் கொடுப்பது தெரிந்தது. மீண்டும் முடியை அள்ளி முடிந்தவள், அவனைத்தான் பார்த்தாள். இரண்டு கைகளிலும் தட்டுகளை ஏந்திக்கொண்டு அவன் காரை நோக்கி வர, சட்டென அவன் குறுக்கே வந்தாள் ஒருத்தி.
வானை பார்த்துக்கொண்டு வந்தவன், எதிரே வந்த மானை கவனிக்கவில்லை. சட்டென அவன் குறுக்கே வந்ததும் கால்களை சடன் ப்ரேக் போட்டு நிறுத்தினான்.
‘யார் அது?’ என்ற எண்ணத்தில் வாணிலா பார்க்க, வந்தவள் என்ன பேசினாளோ கேட்கவில்லை இவளுக்கு. கோவர்த்தன் அட்டகாசமாய் சிரிப்பதை கண்டு, ‘அவ்ளோ பெரிய காமெடியா சொல்லிருப்பா?’ என்று வாணிலா நினைக்க, மறுநொடி, கோவர்த்தனை கட்டி அணைத்திருந்தாள் அவள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.