‘என் வீட்டில் வந்து தங்கிக்கொள்ளேன்?’ என்று யோசனை போல சொன்னதை எப்படி எப்படியோ பேசி அவளையே ஒப்புக்கொள்ள வைத்து, இதோ இன்று வீட்டிற்கும் அழைத்து வந்து விட்டானே?!
மாடியில் அவளுக்கென கொடுக்கப்பட்ட அறையில், லேசான தயக்கத்தோடு அமர்ந்திருந்தாள் வாணிலா. கீழே இருக்கும் அறைகளில் அந்த ஆப்ரிக்கக்காரனும், மற்ற மூன்று பெண்களும் தங்கியிருக்க, மேல் மாடியில் இவன் அறைக்கு அருகே உள்ளே அறையில் இவள் இருக்கிறாள். அங்கேயே பொதுவாய் ஒரு விசாலமான கிச்சனும், இன்னும் சில அறைகளும் இருந்தன. மாடியில் விருந்தாளிகளுக்கு அனுமதி இல்லையாம்!
அப்போது இவள் யாராம்!? என்று கேட்க தோன்றினாலும் அவன் என்ன சொல்வானோ என்ற படபடப்பில் அவள் கேட்க விழையவில்லை. இதோ அவளுக்காக ‘காபி’ தயாரிக்க அவன் சென்றிருக்க, இவனோடு இங்கேயே வந்தது சரிதானா? என்று லட்சம் முறையாக மனதோடு பரிசீளித்துக்கொண்டிருந்தாள்.
அவன் பேசி பேசி வர வைத்தானா? அவன் பேச்சு மட்டும் தான் காரணமா? என்று கேட்டால், அது வெறும் ஐம்பது சதம் தான். மீதி ஐம்பது சதம், அவளது விருப்பம். அவனோடு நாட்களை கடத்த அவள் ஆழ்மனத்தின் ஆசை. மறுக்க தோன்றவில்லை அவளுக்கு.
“ஏய் நிலா… காபி…!” உற்சாகமாய் வந்தவன் அவளோடு அமர்ந்து பருக ஆரம்பித்தான். அவளுக்கு எப்படியோ? அவள் வருகை அவனுக்கு அத்தனை மகிழ்ச்சி. அதை கொஞ்சமும் தயங்காமல் வெளிப்படுத்தினான் அவன்.
“இன்னைக்கு நீங்க வரீங்கன்னு ஹாஸ்பிடல்க்கு ‘சிக் லீவ்’ சொல்லிட்டேன்” சிரித்தவனை ஒன்றும் சொல்லாமல் புன்னகையோடு அவள் பார்க்க, “எல்லாமே எடுத்தாச்சு தானே? எதையும் விட்டுட்டு வரலையே?” என்று கேட்டான்.
அவள் மறுப்பாக தலையசைக்க, “தட்ஸ் ரேட்!” (நல்லது) என்றுவிட்டு அவள் குடித்து முடித்த கப்பை அவன் எடுக்க, “இல்ல… நானே…” அவள் தயங்கும் முன் நகர்ந்தவன், “எனக்கு இப்படி எல்லாம் யாரையாது கவனிச்சுக்கணும்ன்னு ரொம்ப ஆசை. என் வீட்டுல இருபது முப்பது பேரோட கசகசன்னு இருந்துட்டு, இங்க ஒத்தைல இருக்க பிடிக்கவே இல்லை. என் அன்புத்தொல்லை கொஞ்சம் ஜாஸ்தியா தான் இருக்கும். அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க” முன்கூட்டியே டிஸ்க்ளைமர் போல சொல்லிவிட்டவன் வெளியே போக திரும்ப,
“அப்புறம் ஏன் இங்க இருக்கனும்? ஊருக்கே போய்டலாம்ல?” என்றாள் கேள்வியாய்.
“போலாம் தான்… நான் அப்படி போயிருந்தா பார்’ல மயங்கி விழுந்த உங்களை யாரு தூக்கிட்டு போய் வேடிக்கை பார்த்துருப்பா?” என்று சீரியசாய் கேட்க, சட்டென முறைத்தவள், சோபாவில் கிடந்த குஷனை எடுத்து அவன் மீது வீச,
சிரித்தபடி விலகியவன், “லஞ்ச் என்ன செய்யட்டும்? சிக்கன், பிஷ், மட்டன், ப்ரான், கிராப், சாம்பார், முட்டை குழம்பு, பருப்பு உருண்டை குழம்பு…” அவன் அடுக்க, “உங்களுக்கு அரிசிம்பருப்பு செய்ய தெரியுமா?” என்றாள் வாணிலா.
ஒரு நொடி திடுக்கிட்டவன், பின் சத்தமாய் சிரித்தான்.
“நீங்க கொங்கு’ல?” கேட்டுவிட்டு மீண்டும் சிரிக்க, இவளுக்கு ரோஷம் வந்தது.
“ஏன்? அரிசிம்பருப்பு சாப்பாடு செய்ய தெரியாதுன்னா அதோட நிறுத்திக்கோணும்… எங்க ஊரெல்லாம் இழுத்து வச்சு பேசாதீங்க சொல்லிப்போட்டேன்” ஊர்க்காரியாய் அவள் திமிர, “ஏங்க? உங்க ஒருத்தி கையவே நான் இன்னும் இழுக்கல… இதுல ஊர்க்காரங்க கையெல்லாம் நான் இழுப்பேனாங்க?” என்றான் அவன் சிரிக்காமல்.
“ஓஓஓ…. மனசுக்குள்ளார இந்த எண்ணம் வேற இருக்குதாக்கும்?”
“இன்னும் என்ன என்னவோ கூட தான் இருக்கு…” அவன் இப்போது சொல்கையில், அவன் கண்கள் காட்டிய ரகசிய சிரிப்பில் அவள் வாய் அடங்கிப்போனது.
“என்னங்க… பேச மாட்றீங்க?” அவன் கேட்டும், அவள் ஆராய்ச்சிப்பார்வையாய் அவனை பார்த்து வைக்க, ‘முதல் நாளே மூட்டையை கட்டிட்டு கிளம்பிட போறாடா… அடக்கி வாசி!’ தன்னைத்தானே திட்டிக்கொண்டவன், யூடியூபில் ‘அரிசிம்பருப்பு செய்வது எப்படி?’ என பார்க்க ஆரம்பித்திருந்தான்.
முதல் நாளே இப்படி என்றால் போக போக கேட்கவும் வேண்டுமா? ஒரு நாள் சிரித்து பேசினால் அடுத்த இரண்டு நாட்கள் முட்டிக்கொள்ளும். அதன் பின்னான பெரும் காரணம், வைத்தியனின் வாய் அன்றி வேறில்லை.
முதலில் அவன் உபசரிப்பை எல்லாம் ஏற்றுக்கொள்ள தயங்கியவள், பின்னால் தன்னால் பழகிக்கொண்டாள். தனக்கு வேலை செய்ய ஒரு அடிமை சிக்கிவிட்டதென்றால் அதை யார்தான் வேண்டாம் என்பார்கள்? அதற்காக முழுமுதலாய் அவனை அவள் சார்ந்திருக்கவில்லை. அவனே விரும்பி செய்யும் வேலைகளுக்கு தடைபோடவும் இல்லை. அவன் சமையல் தான் இங்கே வந்த நாள்த்தொட்டு.
இவள் போடும் இன்ஸ்டன்ட் காபியே சுமாராக தான் இருக்கும் எனும்போது மற்றதை எல்லாம் சொல்லவே தேவையில்லை. அதனால் அவன் வேலை செய்யும் நேரங்களில் உடன் நிற்பது, பேசுவது என்று ஆரம்பித்து, இப்போது காய்கறிகளை கையை வெட்டாமல் வெட்டுவது எப்படி என்று தெரியும் அளவுக்கு முன்னேறிவிட்டாள். கிரெடிட் கோஸ் டு டாக்டர் கோ!!!
அந்த வீட்டில் இவர்கள் இருவர் தாண்டி நால்வர் இருக்கின்றனர் என்றே அவளால் உணர முடியாது. அவர்கள் வந்து போகும் சுவடு கூட தெரியாது. அதிலும் அந்த ஆண்… இருக்கிறானா இல்லையா என்றே கண்டறிய முடியாது. தன் வீட்டில் மூன்று பெண்கள் இருக்கின்றனர் என்று கோவர்த்தன் சொன்னதில் இருந்தே, அவளுக்கு ஒரு எண்ணம்.
வைத்தியனின் வாயை பற்றித்தான் வஞ்சிக்கு வஞ்சமின்றி தெரியுமே! அந்த பெண்களிடம் தன் வாய்வரிசையை காட்டிக்கொண்டு இருப்பானோ? என்ற பெரும் ஐயம் இங்கு வந்தது முதல் இல்லாமல் போனது. அவர்களை பார்க்கவே அரிது, அப்படியே பார்த்தாலும் ஒரு தலையசைப்புடன் இவன் நகர்ந்துவிடுவான்.
பாரில் நடனமாடிக்கொண்டிருந்த பெண்ணை ஜொள்ளு வடிய ரசித்தவனின் முகமும், இப்போது தன் வீட்டிலேயே இருக்கும் அழகு பெண்களை கண்டும் காணாமல் போகும் முகமும் மாறி மாறி வந்து அவளை குழப்பியது. அவளது இந்த ஆராய்ச்சியில் அவன் தன்னை எப்படி பார்க்கிறான் என ஆராய மறந்துப்போனாள் அவள்.
அவனுக்கு வார இறுதி விடுமுறை எல்லாம் கிடையாது. சுழற்சி முறையில் வாரத்துக்கு இரு நாட்கள் விடுப்பு உண்டு. இவன் மனோதத்துவ நிபுணன் தான் என்பதால், யாரும் நெஞ்சை பிடித்துக்கொண்டோ அல்லது ரத்தம் கொட்டுவதோடோ அவசர சிகிச்சைக்கு அர்த்த ஜாமத்தில் இவனை எழுப்ப மாட்டார்கள்.
மருத்துவன் என்றாலும், இவனுக்கென கொடுக்கப்படும் மணி நேரங்கள் தாண்டி வேலைகள் இருக்காது என்பதால், விடுமுறை தினத்தில் பொழுது போகாமல் நீட்டி நெளித்துக்கொண்டு இருப்பான்.
அன்றும் அதே போல ஒரு விடுமுறை நாள். மதிய உணவை முடித்துக்கொண்டு ஆளில்லாத வீட்டில் அக்கடாவென அமர்ந்திருந்தவன், போனில் ஒரு தெலுங்கு படத்தை போட்டு பார்த்துக்கொண்டிருக்க, அரை மணி நேரத்துக்கு எல்லாம் ‘ஐயோ’ என்ற உணர்வு. மூடி வைத்துவிட்டவன், நிமிர அவன் எதிரே பளபளவென பல்லிளித்தது அவன் குடும்பப்படம்.
உடனே அலைபேசியில் அன்னையின் எண்ணை அழுத்தினான். கடைசியாய் பத்து நாட்கள் முன்பு பேசியது. இடையில் வாய்ஸ் மெசேஜ் மட்டும் தான். இப்போது அவனே வீடியோ இணைப்பில் அழைக்க, சில நொடிகளுக்கு பின்னே அழைப்பை ஏற்றார் அம்சவர்த்தினி.
“என்னடா?” என்று கேட்டபடி அடுப்பில் இருந்த பால் கொழுக்கட்டையை அவர் கிண்ட, அதன் வாசம் ‘மேட்ரிட்’ மாநகரை எட்டியது.
“நல்லா வக்கனையா ஆக்கிப்போடுறீங்க போல” கடுப்பு குரலில் அவன் கேட்க, “ஏன் வயிறு எரிறீங்க கொழுந்தனே?” என்று பின்னால் வந்து நின்றாள் அவனது அண்ணி தீபா.
“பின்ன என்ன அண்ணமண்டி? இங்க ஒருத்தன் ஒத்தைல நிக்கான்னு எதாவது கவலை இருக்கா?” அவன் கேட்டதும், போனின் ஸ்க்ரீனை கிட்ட வந்து பார்த்த தீபா, “ஒத்தைல இருக்கீங்களா? பார்த்தா அப்படி தெரியலையே?” என்று சொல்ல, அவள் பார்வை தன் பின்னே இருக்கவும் திரும்பியவன், அங்கே தோள்பையோடு வாணிலா நிற்பதைக்கண்டு ஒரு நொடி திடுக்கிட்டான்.
ஒரே நொடி தான்… மறுநொடி…
“வாங்க நிலா… வாங்க! சீக்கிரம் வந்துட்டீங்களே?” என்று கேட்க, போனில் தன்னையே பார்த்துக்கொண்டிருக்கும் பெண்ணை கண்டு சங்கடத்துடன் அவன் அருகே வந்து அமர்ந்தவள், “வொர்க் முடிஞ்சுது, வந்துட்டேன்” என்றாள் மெல்ல.
அதற்குள் அம்சவர்தினி காபியும் பலகாரமும் எடுத்துக்கொண்டு கூடத்திற்கு சென்றிருந்தார். அவர் பின்னோடு தீபாவும் செல்ல, அதன் மூலம் அவர்கள் வீட்டின் நீள, அகலங்கள் வாணிலாவின் கண்ணுக்கு விருந்தாகின.
அடுக்களையில் இருந்து ஆசாரத்திற்கு வரவே அவர்கள் முழுதாய் முப்பது வினாடிகள் நடக்க, அந்த வீட்டின் பரப்பளவை பிளந்த வாயோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
ஆசாரத்தில் சத்தம் சற்று அதிகமாய் கேட்க, தீபா, போனை அருகே கொண்டு வந்து, “நாலு நாளு லீவு விடவும், எல்லா அரக்காப்படியும் இங்க தான் ஆடிட்டு இருக்கு” என்று சொல்ல, “அப்போ திருவிழா தான்!” என்று சிரித்தான் கோவர்த்தன்.
“யாரு?” கணீரென ஒரு குரல் போனில் பின்னிருந்து கேட்க, தீபா சற்று மரியாதையோடு, “தொழுந்தருங்க மாமா” என்றாள்.
“இங்கக்குடு!” வேகமாய் போனை வாங்கினான் ஹர்ஷவர்த்தன், வீட்டின் மூத்த வாரிசு. கணவனிடம் போனை குடுத்துவிட்டு மக்களை கவனிக்க சென்றுவிட்டாள் தீபா.
“டேய், உன் கூட்டாளி புள்ளைக்கு காதுகுத்தாம்…” சொல்லிக்கொண்டே திரையை பார்த்த ஹர்ஷா, தம்பி அருகே ஒரு பெண் இருப்பதைக்கண்டு மௌனித்துவிட, அவன் பார்வையைக்கண்டு, “பிரன்ட் ண்ணே… பொள்ளாச்சி புள்ள… தனியா தங்கியிருந்தாங்க. பாதுகாப்பா இருக்கட்டுமேன்னு நம்ம வீட்டுல பேயிங் கெஸ்ட்டா சேர்த்துக்கிட்டேன்…” தயங்காமல் சொன்னான் கோ.
சொன்னது தான் போதும், பலாப்பழத்தில் ஈ மொய்த்ததை போல வீட்டின் பெரிய தலைகள் எல்லாம் அந்த போனை எட்டிப்பார்க்க குவிந்துவிட்டன.
இங்கே வாணிலாவுக்கு அவன் அருகே அமர்ந்திருப்பதா? எழுந்து செல்வதா? என்ற பெரும் குழப்பம். இவனாவது தன்னை போக சொன்னால் தேவலாமே என்று நினைத்துக்கொண்டே நாகரீகம் கருதி சங்கடமாய் அமர்ந்திருந்தாள்.
“ஏம்மா? அந்த பொண்ணு நீதானா?” தலையை நீட்டினான் அவ்வீட்டின் மூத்த மாப்பிள்ளை.
“ஓ… இவங்க கூட பிரன்ட் ஆக தான் சிவராத்திரி அன்னைக்கு பூஜை செய்ய விடாம கரடியா தொல்லை செஞ்சாரா மச்சான்?” என்று கிண்டலாய் கேட்டான் சின்ன மாப்பிள்ளை.
“அந்த பொண்ணா அது?” என்ற ராகவர்த்தினிக்கு தன் மேடிட்ட வயிறை தள்ளிக்கொண்டு எழுந்து வர முடியவில்லை. தள்ளி அமர்ந்திருந்தபடி தன் கணவனிடம் கேட்டாள்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.