அவன் தொடுகையில் எதிர்பார்ப்புடன் கண்களை மூடிக் கொண்டாள் சுஜி. அடுத்த நொடி அவள் முகம் நோக்கி குனிந்தவன் எதிர்பார்ப்பில் துடித்துக் கொண்டிருந்த அவளின் இதழ்களை தன்னுடைய இதழ்களால் மெதுவாக தீண்டினான்.
அவன் முத்தமிட்டதும் அவள் கரங்கள் அவனை சுற்றி வளைத்து தன்னை நோக்கி இழுக்க அவள் மேல் விழுந்தவன் சற்று அழுத்தமாகவே முத்தமிட்டான்.
எவ்வளவு நேரமோ தெரியாது. முத்தம் நீண்டு கொண்டே இருக்க அவள் இடையில் பதிந்த கரங்கள் அவள் மேனியில் மெதுவாக பயணிக்க ஆரம்பித்தது.
தன்னுடைய ஆசைகள் கிளர்ந்து எழுவதை முதல் முறையாக உணர்ந்து கொண்டிருந்தான் புவி. அவளைத் தொட்டதும் சில தனிப் பட்ட உணர்வுகள் எழுவதை உணர்ந்து சற்று அதிர்ந்து கூட போனான்.
தயக்கமும் தடுமாற்றமும் பயமும் இருவருக்குள்ளும் இருந்தாலும் இருவர் மனதில் எழுந்திருக்கும் காதல் உணர்வுகளை அந்த நிமிடம் இருவருமே உணர வில்லை.
அவளுடன் முழுமையாக கலந்தவன் சற்று விலகி படுத்து அவளை அனைத்துக் கொண்டான். அவன் உதடுகள் அவள் நெற்றியில் பதிய இருவருக்குமே அந்த நிமிடம் மனதில் ஒரு அமைதி வந்திருந்தது. அடுத்த சில நொடிகள் அமைதியில் கழிய “இனி உன்னை யாரும் வீட்டை விட்டு போகச் சொல்ல மாட்டாங்கல்ல? எனக்கு அது போதும். இனி அம்மா உன்னை அப்படிச் சொல்ல மாட்டாங்க”, என்று தனக்கு தானே பேசியவன் நிம்மதியுடன் கண்களை மூடிக் கொண்டான்.
அவன் சொன்னதைக் கேட்டு அவள் மனதில் இருந்த சந்தோஷங்கள் அனைத்தும் அந்த நிமிடம் வடிந்து போனது. அவனுடைய அம்மா சொன்னதற்காகவா தன்னைத் தொட்டான் என்று எண்ணியவளுக்கு ஓவென்று கதறி அழ வேண்டும் போல இருந்தது. அவன் நிம்மதியுடன் உறங்கிப் போக அவன் முகத்தையே பார்த்திருந்தாள் சுஜி.
இது வரை அமைதியாக இருந்த அவள் மனதில் இப்போது பல போராட்டங்கள். நடந்தது சரியா தவறா? இத்தனை நாள் இல்லாமல் இன்று அவன் தன்னை நாடியது மற்றவர்கள் சொன்னதால் தானா? இந்த உணர்வே அவளுக்கு பிடிக்க வில்லை. ஏதோ தவறு செய்தது போல ஒரு உறுத்தல். அவளால் ஒரு பொட்டு கூட தூங்க முடியவில்லை.
தன்னை தனக்காக ஏற்காமல் அடுத்தவர்களுக்காக அவன் ஏற்றது அவளுக்கு ஒரு விதமான நிம்மதியின்மையை தர இனி இந்த சந்தோசமே வேண்டாம் என்று முடிவு எடுத்தாள். அவன் கைகளுக்குள் இருந்தவளுக்கு அந்த நிலைமையிலும் அவனை விட்டு விலக மனதில்லை. அவன் அருகாமையை ரசிக்க வேண்டும் என்ற ஆசை தான் இருந்தது. அவன் மார்பில் சாய்ந்த படியே உறங்கி விட்டாள்.
காலையில் புவி கண் விழிக்கும் போது சுஜி அங்கே இல்லை. எப்போதும் போல அவளது வேலையை செய்ய ஆரம்பித்திருந்தாள். ஆனால் இத்தனை நாள் இல்லாமல் இன்று மட்டும் மனம் பாரமாகிப் போன உணர்வு.
நடந்து முடிந்தது அவளுக்கு சந்தோஷமான விஷயம் தான். ஆனால் அதற்கான காரணத்தைத் தான் அவளால் அதை ஜீரணிக்கவே முடிய வில்லை.
எப்போதும் போல அறைக்கு சென்றவள் அவனை நிமிர்ந்து பார்க்க சங்கடப் பட்டு காபியை டேபிளில் வைத்து விட்டு நகர ஆசையாக அவள் முகம் பார்த்தவன் ஏமாந்து போனான். அவள் முகத்தில் சிறு வெட்கத்தைப் பார்த்திருந்தால் நிச்ச்யம் அவன் சாதாரணமாக அவளை இழுத்து அணைத்திருப்பான். ஆனால் அவள் முகம் கல் போல் இறுகி இருந்தது. அவள் பாராமுகத்தால் வாடி நின்றவனுக்கு நேற்றைய நிகழ்வு அவளுக்கு பிடிக்க வில்லை என்ற உண்மை புரிந்தது.
காலை உணவு உண்ணும் போது அவளைக் கஷ்டப் படுத்தி விட்டோம் என்று எண்ணியவன் “சாரி, உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்”, என்று சொன்னான். “உடல் அளவில் எந்த கஷ்டமும் இல்லை. ஆனால் மனது தான்….”, என்று எண்ணியவளின் உதடுகளில் ஒரு விரக்தி புன்னகை உதயமானது.
அதைக் கண்டவனுக்கு “எதனால் இந்த சிரிப்பு? அவளுக்கு தன் மீது கோபமா? வெறுப்பா?”, என்று புரியவே இல்லை. ஆனால் இனி அவள் சம்மதம் இல்லாமல் இதை இனி தொடரக் கூடாது என்று தவறாக முடிவு எடுத்தான். இருவரும் மனது விட்டுப் பேசியிருந்தால் அனைத்தும் சரியாகி இருக்கும். இருவரும் ஊமையாகிப் போனது தான் விதியின் சதியோ என்னவோ?
எப்போதும் அவன் முகம் பார்த்து பரிமாறுபவள் இப்போதெல்லாம் அவன் முகம் பார்க்கவே மறுக்க அவன் மீண்டும் தன்னுடைய கூட்டுக்குள் சென்று விட்டான். பழைய படி அவளை விட்டு விலக ஆரம்பித்தான். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வெண்ணிலாவுக்கு அவர்கள் இருவரையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஒரு முறை சுஜியிடம் கேட்க அதற்கு சுஜி சரியாக பதில் சொல்லாததால் இந்த விஷயத்தில் தான் தலையிடக் கூடாது என்று எண்ணிக் கொண்டாள்.
புவி எப்போதும் கடைக்கு வந்த பிறகு உற்சாகமாக தான் இருப்பான். ஆனால் இப்போதெல்லாம் அவன் முகம் ஒரு மாதிரியே தான் இருந்தது. அன்றும் அவன் அப்படியே இருக்க “என்ன ஆச்சு மாப்பிள்ளை?”, என்று கேட்டான் பரணி.
“ஒண்ணும் இல்லை மாமா”
கணவன் மனைவி விஷயம் என்று தெரிந்தால் அவனைச் சொல்லச் சொல்லி பரணி கட்டாயப் படுத்தி இருக்க மாட்டான். அவனுக்கு எப்படித் தெரியும் புவி அவளுடன் வாழ்ந்தது?
“நீ வீட்ல நடந்ததைப் பத்தி இன்னும் யோசிச்சிட்டு இருக்கியா மாப்பிள்ளை? இது எல்லார் வீட்லயும் நடக்குறது தான் டா. சுஜியை உனக்கு எதுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க? அவ கூட நீ நல்லா வாழணும்னு தானே? நீ என்ன டான்னா அவளைக் கண்டுக்காம பொம்மை மாதிரி வச்சிருந்தா இப்படி தான் பேசுவாங்க. இனியும் நீ அவளைக் கண்டுக்காம இருந்தா உனக்கு அவளை பிடிக்கலைன்னு நினைச்சு அந்த பிள்ளையை துரத்தி விட்டுருவாங்க டா. புரிஞ்சு நடந்துக்கோ”, என்று சொல்லி விட்டுச் சென்றான் பரணி.
மனதிலோ “கடவுளே இவங்க ரெண்டு பேரையும் நீ தான் நல்லா வாழ வைக்கணும்”, என்று வேண்டிக் கொண்டான் பரணி. கூடவே “நல்ல வேளை நாம இந்த கல்யாணத்தை பண்ணித் தொலைக்கலை”, என்றும் எண்ணிக் கொண்டான்.
ஆனால் புவியோ “நானா மாமா அவ கூட வாழ வேண்டாம்னு நினைக்கிறேன். இப்ப எல்லாம் எனக்கு எவ்வளவு ஆசை வருதுன்னு எனக்கு மட்டும் தான் தெரியும். ஆனா என்னோட ஆசைக்காக அவளைக் கஷ்டப் படுத்த நான் விரும்பலை மாமா. ஆனா அவளை என்னோட வாழ்க்கையில் இருந்து அகற்ற யாராலயும் முடியாது. அவ என்னோட உசுரு மாமா. அவளை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்”, என்று மனதில் எண்ணிக் கொண்டான்.
அதே நேரம் தோழியின் முகம் ஒரு மாதிரி இருப்பதைப் பற்றி விசாரித்தாள் வெண்ணிலா.
“சுஜி, தயவு செஞ்சு நீ ஏன் இப்படி இருக்கேன்னு சொல்லு. உன் மனசுக்குள்ள என்ன தான் ஓடுது? முன்னாடியும் அண்ணா உன் கிட்ட சரியா பேச மாட்டான் தான். ஆனா நீ இந்த அளவுக்கு சோகமா எல்லாம் இருக்க மாட்ட. ஆனா இப்ப வாழ்க்கையே வெறுத்த மாதிரி இருக்குற. எனக்கு உன்னைப் பாத்தா கஷ்டமா இருக்கு டி”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் எப்பவும் போல தான் இருக்கேன்”, என்று சொன்னவள் சுற்றிலும் கண்களை ஓட்ட ரேணுகா அவளைக் கவனிப்பது தெரிந்தது. அது மட்டுமில்லாமல் தங்கள் விஷயத்தை தோழியே ஆனாலும் இனி சொல்லக் கூடாது என்று புரிந்ததால் எதுவும் சொல்ல வில்லை. வெண்ணிலாவுக்கும் கடவுளிடம் வேண்டுவதைத் தவிர வேறு என்ன செய்ய என்று தெரிய வில்லை.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.