அவர்கள் இருவரும் இண்டர்வியூக்கு கிளம்பிச் செல்ல இங்கே இங்கே புவிக்கு ஒரு பிரச்சனை வந்தது.
ஒருவனிடம் பத்து லட்சம் ரூபாய் வட்டிக்கு கொடுத்திருந்தான் புவி. அதில் ஐந்து லட்சத்தை அவன் கொடுத்து விட்டான். ஆனால் மீதிப் பணத்தை கொடுக்காமல் அதற்கான வட்டியையும் கொடுக்காமல் அவன் இழுத்தடித்தான்.
புவி “பணம் தரலைன்னா போலீசில் சொல்லப் போகிறேன்”, என்று அவனை மிரட்ட பணத்தை ஏமாற்ற நினைத்த கடன்காரன் அவனுடைய உறவினனிடம் என்ன செய்ய என்று பேச “அவன் என்ன மாப்பிள்ளை இதுக்கு போய் பயப்படுற? அவன் யாரு நம்மளை மிரட்டுறது? நாம அவனை மிரட்டுவோம்”, என்று சொல்லி புவிக்கு போன் செய்து கொலை செய்வதாக மிரட்டினான் அந்த ரவுடி.
அதில் எரிச்சல் ஆன புவி அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷன் சென்று கடன் வாங்கி விட்டு திருப்பித் தராமல் ஏமாற்றுவதாகவும் அதை திருப்பிக் கேட்டால் ஆள் வைத்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும் புகார் கொடுத்தான். நிறைய ஆட்களுக்கு வட்டிக்கு கொடுத்திருப்பதால் புவிக்கு அந்த ஏரியாவில் கொஞ்சம் செல்வாக்கு இருந்தது. அதனால் கடன் வாங்கியவனை போலீஸ் உள்ளே தள்ளி விட்டார்கள்.
அவன் உள்ளே சென்றதும் அவனுடைய உறவினனான அந்த ரவுடி புவியை கொலை செய்ய நேரம் பார்த்துக் கொண்டிருந்தான்.
இங்கே இண்டர்வியூக்கு சென்ற வெண்ணிலா நல்ல படியாக தான் எல்லா கேள்விக்கும் பதில் சொன்னாள். ஆனால் மதனின் நண்பன் “சாரி மிஸ் வெண்ணிலா. நீங்க இன்டர்வியூல செலக்ட் ஆகிட்டீங்க. ஆனா இப்ப இங்க வேகண்ட் இல்லை. ஒரு பொண்ணு மேரேஜ்ன்னு வேலையை விடுற மாதிரி இருந்தது. அதனால தான் நான் மதன் கிட்ட சொன்னேன். ஆனா அந்த பொண்ணு மேரேஜ் முடிஞ்சும் வேலைக்கு வருவேன்னு சொல்லிடுச்சாம். ஆனா எம். டி ஏதாவது வேகண்ட் வந்தா அந்த வேலை உங்களுக்கு தான்னு சொல்லிட்டார். சோ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ஏன்னா இன்னும் டூ மன்த்ல ஒரு லேடி வேலையை விட்டு போகப் போறாங்க. அப்ப உங்களுக்கு கிடைக்கும்”, என்றான்.
“பரவால்ல நரேன். நான் வெயிட் பண்ணுறேன். எதுக்கும் உங்க பிரண்ட்ஸ் சர்கிள்ல வேற எங்கயாவது ஜாப் இருந்தா இன்பார்ம் பண்ணுங்க”, என்று சொன்னவள் பரணியை அழைத்துக் கொண்டு அறைக்கு வந்தாள்.
இந்த வேலை நிச்சயம் கிடைக்கும், திருமணத்தில் இருந்து தப்பித்து விடலாம் என்று எண்ணிய வெண்ணிலாவுக்கு இப்போது என்ன செய்ய என்று தெரியவில்லை. ஹோட்டல் அறைக்கு வந்த பிறகு தலையில் கை வைத்து அமர்ந்து விட்டாள்.
அவளைப் பார்த்த பரணி “வெண்ணிலா, வேலை கிடைக்காததுக்கா இப்படி இடிஞ்சு போய் உக்காந்துருக்க? இந்த வேலை இல்லைனா என்ன? வேற வேலை கிடைக்கும்”, என்றான்.
அவன் சொன்னதைக் கேட்ட பிறகும் அவள் அப்படியே அமர்ந்திருக்க அவள் அருகே சென்று அமர்ந்தான். அப்போது அவனை நிமிர்ந்து பார்த்தவள் காதலாக ஏக்கமாக அவனைப் பார்த்தாள்.
அதை புரிந்து கொண்ட பரணி “வா வெண்ணிலா வீட்டுக்கு கிளம்பலாம்”, என்றான்.
“எனக்கு உன் கூட பேசணும் மாமா”
“வீட்ல போய் பேசலாம்”
“எனக்கு இங்கயே பேசணும். நான் ஒண்ணும் வேலை கிடைக்காததுக்கு இப்படி இருக்கலை. வேலை கிடைச்சா கொஞ்ச நாள் கல்யாணத்தை தள்ளிப் போடலாம். அதுக்குள்ள உன் மனசு என் பக்கம் சாஞ்சிரும் அதுக்காக தான்”
“இந்த பேச்சு பேச வேண்டாம் வெண்ணிலா”
“எனக்கு பேசணும் மாமா. எனக்கு ஒரு முடிவு தெரியணும்”
“நான் ஏற்கனவே என்னோட முடிவைச் சொல்லிட்டேன் வெண்ணிலா”
“ஏன் மாமா என்னைப் புரிஞ்சிக்க மாட்டிக்க? நீ இல்லைன்னா நான் செத்துருவேன் மாமா”
“என்ன பிளாக்மெயில் பண்ணுறியா?”
“நான் பிளாக்மெயில் பண்ணலை. நான் சொன்னா செய்வேன்னு உனக்கு தெரியும் மாமா”
“எதுக்கு? எல்லாரும் உன் மனசை கெடுத்துட்டேன்னு என்னை வீட்டை விட்டுத் துரத்தவா? அது தானே உனக்கு வேணும்? சரி கிளம்பு. உன்னை ஊர்ல விட்டுட்டு நானே கண்காணாம போயிறேன்”
“உனக்கு ஏன் மாமா என்னைப் பிடிக்கலை?”
“உன்னை பிடிக்கும் டி. அதான் நீ நல்லா இருக்கணும்னு நினைக்கிறேன்”
“உன் கூட இருந்தா தான் மாமா நான் நல்லா இருப்பேன்”, என்று சொன்னவள் அடுத்த நொடி அவனை இறுக கட்டிக் கொள்ள அதிர்ந்து போனான் பரணி.
“வெண்ணிலா என்ன பண்ணுற? விலகு நீ. உன்னை பத்திரமா பாத்துக்குவேன்னு நம்பி தான் உன்னை என் கூட அனுப்பினாங்க. இப்ப இப்படி நடந்துக்கிட்டா என்ன அர்த்தம்?”
“எனக்கு யாரைப் பத்தியும் கவலை இல்லை. இப்ப இந்த நிமிஷம் நீ எனக்கு வேணும்”
“பைத்தியமா டி நீ? வா ஊருக்கு போவோம்”, என்று சொல்ல “உன்னை எங்கயும் விட மாட்டேன். இப்ப நீ என் கூட வாழலைன்னா நான் உன் கூட பிணமா தான் வருவேன்”, என்றாள்.
“இது தப்பு மா”, என்று சொல்லி அவளுக்கு புரிய வைக்க முயன்றான்.
“என் காதலை தான் ஏத்துக்கலை. இந்த ஆசையாவது நிறைவேத்து மாமா. இதை செஞ்சேன்னு வை நான் உன்னை தொந்தரவு பண்ண மாட்டேன். இல்லைன்னா என் வாழ்க்கையை இப்பவே இங்கயே முடிச்சுக்குவேன்”
“இது தப்பு வெண்ணிலா. ரொம்ப தப்பு”
“எனக்கு இது தான் சரி. ஒரு நாளாவது உன் கூட வாழ்ந்துட்டா போதும்”, என்று சொன்னவள் அவன் தோள்களைக் கட்டிக் கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக அவள் அன்பில் உருகிக் கொண்டிருந்தான் பரணி. அவள் மீண்டும் மீண்டும் அவனை நாடும் போது அவளை விட்டு விலகி விலகிச் செல்ல அவன் ஒன்றும் முனிவன் இல்லையே?
ஒரு நொடியில் அவன் நெகிழ்வைக் கண்டு கொண்டவள் அவனுடைய கன்னம், நெற்றி என்று முத்தமிட்டு இறுதியில் அவன் உதடுகளில் தன்னுடைய இதழ்களைப் பொறுத்தினாள். விலக்க நினைத்தவனுக்கு அதற்கு பின் அவளை விட்டு விலக முடியாமல் போனது. அவன் கரங்களும் அவளை சுற்றி வளைத்துக் கொள்ள யாருக்கும் தெரியாமலே அவளை எடுத்துக் கொண்டான் பரணி.
என்னவென்று யோசிக்கும் முன்பே அனைத்தும் முடிந்திருக்க கலைந்த கோலத்துடன் தன் கைக்குள் இருந்த வெண்ணிலாவைக் கட்டிக் கொண்டு அழுதான் பரணி. தான் அவளுக்கு என்ன செய்து விட்டோம் என்று எண்ணி கூனி குறுகிப் போனான்.
“மாமா இங்க பாரு, இப்ப எதுக்கு அழுற? இங்க நடந்ததுல எதுவும் உன் தப்பு இல்லை. எல்லாமே என் தப்பு தான். இங்க எதுவுமே நடக்கலைன்னு நினைச்சிக்கோ மாமா. பிளீஸ் நீ இப்படி அழுறது எனக்கு கஷ்டமா இருக்கு?”, என்று அவனை தேற்ற முயன்றாள் வெண்ணிலா.
“உன் வாழ்க்கையவே நாசமாக்கிட்டேனே நிலா? ஐயோ நான் எப்படி இனி உங்க வீட்ல இருப்பேன்? அக்கா, மாமா, புவி முகத்துல எப்படி முழிப்பேன்?”
“மாமா, இங்க பாரு”, என்று அவனுடைய கன்னம் தாங்கியவள் அவனை தன் முகம் காண வைத்தாள். “நீயோ நானோ வெளிய சொல்லாம இந்த விஷயம் வெளிய தெரியவே செய்யாது. உன் மேல சத்தியமா நான் வெளிய சொல்ல மாட்டேன். அதே மாதிரி என் மேல சத்தியமா நீயும் இங்க நடந்த விஷயத்தை வெளிய சொல்லக் கூடாது. இது என் மேல சத்தியம் மாமா”, என்றாள்.
“எனக்கு குற்ற உணர்வா இருக்கு நிலா. உன் வாழ்க்கையை அழிச்சிட்டேன்”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. எல்லாத்தையும் மறந்துரு. இப்படி நடந்ததுனால நீ தான் என்னைக் கல்யாணம் பண்ணணும்னு உன்னைக் கட்டாயப் படுத்த மாட்டேன் மாமா”
“ஐயோ ஏன் டி இப்படி பேசுற? நான் உங்க வீட்ல பேசுறேன் நிலா. இங்க நடந்ததைச் சொல்லி அவங்க கிட்ட மன்னிப்பு கேட்டு நான் உன்னை பொண்ணு கேக்குறேன். அவங்க அடிச்சா கூட வாங்கிக்கிறேன். வீட்டை விட்டு விரட்டினா கூட உன்னை எங்கயாவது கூட்டிட்டு போய்றேன் டி”, என்று சொல்ல அவன் பொண்ணு கேக்குறேன் என்று சொன்னது அவளை சந்தோஷப் படுத்தியது.