“ஆமா நிலா, இனி என்னால உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது. நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்”
“குற்ற உணர்ச்சியில அப்படிச் சொல்றியா மாமா?”
“என்னால அது எதனாலன்னு இப்ப யோசிக்க முடியலை வெண்ணிலா. ஆனா ஊருக்கு போனதும் கண்டிப்பா நான் உன்னை எனக்கு கட்டித் தரச் சொல்லுவேன்”
“தேங்க்ஸ் மாமா. ஆனா நீ இங்க நடந்தததைச் சொல்லக் கூடாது”
“அது எப்படி சொல்லாம இருக்க முடியும்? இது அவ்வளவு பெரிய பாவம்”
“பாவம் இல்லை மாமா. இது எனக்கு கிடைச்ச பாக்கியம். மறுபடியும் சொல்றேன். என் மேல சத்தியமா நீ இங்க நடந்ததை யார்க் கிட்டயும் சொல்லக் கூடாது. ஆனா பொண்ணு கேளு மாமா”
“எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு நிலா. இந்த விஷயம் தெரிஞ்சா நம்ம வீட்ல உள்ளவங்க என்னைக் காரித் துப்புவாங்க. உன்னை நம்பி தானே டா அவளை அனுப்புனோம்ன்னு சொல்லுவாங்க”
“அப்படி எல்லாம் சொல்ல மாட்டாங்க மாமா. அவங்களுக்கு எதுவும் தெரிய வராது. நீ அண்ணா கிட்ட பேசு. இல்லைன்னா நான் பேசுறேன்”
“வேண்டாம். நான் தான் பேசணும். உன்னை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன் நிலா. இனி மேலும் உன்னை போராட விட மாட்டேன்”, என்று சொன்னவன் அவளுடைய கன்னம் தடவ அவனை இறுக்கி கட்டிக் கொண்டாள்.
அந்த நிமிடம் இருவருமே உணர வில்லை. இனி அவளுக்கு வாழ்க்கை முழுக்க போராட்டம் தான் என்றும் அவன் அவளை பெண் கேட்கும் சந்தர்ப்பம் வராது என்றும் அவர்களுக்கு யார் சொல்வது?
இருவரும் கிளம்பி ஊருக்கு வந்தார்கள். வேறு எதுவும் பேசிக் கொள்ள வில்லை. வெண்ணிலா மனது அவனுடன் வாழ்ந்ததை எண்ணி அவன் தன்னை பெண் கேட்டு திருமணம் செய்யப் போவதை எண்ணி சிறகடித்துப் பறந்தது என்றால் பரணியோ உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக குற்ற உணர்ச்சியில் செத்துக் கொண்டிருந்தான்.
ஊருக்கு வந்த பின்னர் அனைவரும் அவரவர் வேலையைப் பார்க்க புவியிடம் பேச சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தான் பரணி. அவன் ஏதாவது பேச வரும் போது தான் புவிக்கு வேறு ஒரு வேலை வந்து விடும். அது மட்டுமில்லாமல் புவி கேஸ் விஷயமாக அலைய பரணியால் அவனை பிடிக்க முடிய வில்லை.
நவராத்திரி நேரம் என்பதால் அவனுக்கு கடையை விட்டு நகர நேரம் இல்லாமல் போனது. வெண்ணிலாவோ அவன் எப்போது பேசுவான் என்று எதிர்பார்ப்பில் இருந்தாள்.
பெண் பார்க்க வெங்கட் வீட்டில் இருந்து அவர்கள் வரும் வரைக்குமே பரணியால் புவியிடம் பேச முடியவில்லை. அதுவும் பெண் பார்க்கும் நாளில் “பரணி நீ இன்னைக்கு கடையைப் பாத்துக்கோ பா. புவி ஒரு அண்ணனா இங்க இருக்கணும்”, என்று பாரி சொல்லி விட பரணிக்கு என்ன செய்ய என்று தெரியவில்லை.
கடைக்கு கிளம்பும் முன் “மாப்பிள்ளை ஒரு நிமிஷம் இங்க வாயேன்”, என்று புவியை அழைத்தான் பரணி.
“என்ன மாமா?”, என்று கேட்டு கொண்டு புவி வர “நீ இன்னும் கடைக்கு போகலையா பரணி?”, என்று கேட்டுக் கொண்டே அங்கு வந்து விட்டாள் மல்லிகா.
“போறேன் கா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான். ஆனால் அவனால் அங்கே நிம்மதியாக இருக்க முடியவில்லை. இங்கே வெண்ணிலாவைத் தயாராகச் சொல்ல இன்னும் வீட்டில் பேசாத மாமா மேல் கோபமாக வந்தது.
“உண்மையிலே மாமாவுக்கு என்னைப் பிடிக்கலையோ? அதனால தான் அண்ணன் கிட்ட பேசலையோ? என்னை தட்டிக் கழிக்க பாக்குறாங்களோ?”, என்று விரக்தியாக எண்ணிக் கொண்டு வேண்டா வெறுப்பாக தயாராக ஆரம்பித்தாள்.
வெங்கட் அவனது அம்மா அப்பா மூன்று பேர் மட்டும் பெண் பார்க்க வந்திருக்க அவர்களை வரவேற்று அமர வைத்து பேசினார்கள் பெண் வீட்டினர்.
மனதில் எழுந்த பாரத்துடன் வெண்ணிலா அங்கே வந்து நிற்க அவர்களோ பெண்ணை பிடித்து விட்டது என்று கல்யாண தேதியை குறித்து விட்டே சென்றார்கள். ஆனால் வெங்கட் அவளிடம் எதுவுமே பேச வில்லை. அப்படி பேசி இருந்தால் வெண்ணிலா அவள் மனதில் இருந்ததை அவனிடம் சொல்லி இருப்பாளோ என்னவோ?
அன்று நடந்த விஷயங்களை எல்லாம் கேள்வி பட்டு வீட்டுக்கு வந்த பரணிக்கு வெண்ணிலா முகத்தை பார்க்கவே முடியவில்லை. குற்ற உணர்வு அவனை கொன்றது.
வீட்டில் இருப்பவர்களிடம் பேசலாம் என்றால் அவர்கள் பேச்சு அவனை வாயை மூட வைத்தது. “மாப்பிள்ளை அவ்வளவு அழகா இருந்தார் டா பரணி. நல்ல வேலைல இருக்கார். நம்ம வீட்ல அவர் தான் அதிகம் சம்பளம் வாங்குறார்னா பாத்துக்கோயேன். அவரோட அம்மா அப்பாவும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க. நம்ம வெண்ணிலா கொடுத்து வச்சவ”, என்று சொன்னாள் மல்லிகா.
“பரணி ரோஹினி கல்யாணத்தை பொறுப்பா நீயும் புவியும் நடத்தி முடிச்ச மாதிரி வெண்ணிலா கல்யாணத்தையும் முடிக்கணும் பா. உங்க ரெண்டு பேரையும் தான் நான் நம்பிருக்கேன்”, என்று அவனிடம் பொறுப்பை ஒப்படைத்தார் பாரி.
“உண்மையிலே மாப்பிள்ளை ரொம்ப நல்லவரா இருக்கார் டா. வெண்ணிலாவுக்கு நல்ல வாழ்க்கை அமைய போகுது”, என்று புவி சொல்ல அவனிடம் எப்படி உன் தங்கையை எனக்கு கட்டித் தா என்று கேட்பது என்று தவித்தான்.
திருமணத்துக்கு இன்னும் ஐந்து நாட்கள் இருக்க பரணி இது வரை யாரிடமும் பேசவில்லை. வெண்ணிலாவோ பரணியின் முகம் பார்ப்பதையே தவிர்த்தாள். நிச்சயம் அவனுக்கு தன்னைப் பிடிக்க வில்லை. தானாக வழிய சென்று அவனை அன்று அப்படி நடந்து கொள்ள வைத்து விட்டோம் என்று அசிங்கமாக இருந்தது.
இன்னொரு மனதோ ஒரு நாள் ஒரு பொழுதாவது அவனுடன் வாழ்ந்து விட்டோம். அது போதும் என்று சந்தோஷப் பட்டது. ஆனால் அடுத்து வரவிருக்கும் திருமணத்தை எண்ணி பயமாக இருந்தது. தன்னால் இன்னொருவனுடன் அப்படி ஒரு உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியாது என்று புரிந்தது.
என்ன செய்ய என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தவளுக்கு வெங்கட் தன்னிடம் இது வரை ஒரு வார்த்தை கூட பேசாதது உரைக்கவே இல்லை.
அன்று பூ மற்றும் மாலைக்கு அட்வான்ஸ் கொடுத்து விட்டு பரணியும் புவியும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அப்போது நடுக் காட்டுக்குள் வைத்து அவர்கள் வண்டி எட்டு பேரால் மறிக்கப் பட்டது.
அந்த ரவுடி புவியைக் கொல்ல ஆள் அனுப்பி இருக்க இருவரும் ஒரு நொடி திகைத்து விட்டார்கள். வண்டியை நிறுத்தியதும் அவர்கள் இவர்களை தாக்க இவர்களும் முடிந்த அளவு அவர்களுடன் சண்டை இட்டார்கள்.
எட்டு பேருடன் இவர்கள் இருவருக்கும் சண்டை போடுவது கொஞ்சம் கஷ்டமாக தான் இருந்தது. அதுவும் கத்தி உருட்டுக் கட்டை வைத்து அவர்கள் அடிக்க இவர்களுக்கோ வெறும் கையால் அவர்களை தடுப்பதே பெரும் பாடாக இருந்தது.
கடைசியில் இரண்டு பேர் புவியை பிடித்திருக்க இன்னொருவன் அவனைக் குத்த வந்தான். பரணியையும் பிடித்திருக்க சட்டென்று என்ன செய்ய என்று தெரியவில்லை. அவன் புவியைக் குத்தப் போகும் போது தன்னைப் பிடித்திருந்தவனை உதறி விட்டு புவிக்கு முன்னால் வந்து பரணி நிற்க அவன் வயிற்றில் ஆழமாக இறங்கியது கத்தி.
ஆள் மாறி குத்தியதால் திகைப்பில் இருந்தவர்கள் அங்கே வாகனங்கள் வரும் சத்தம் கேட்க அவர்கள் அங்கிருந்து ஓடினார்கள். “மாமா”, என்று கதறிய படி அவனைத் தாங்கிக் கொண்டான் புவி.
ரத்தம் ஆறாக பெருக “மாப்பிள்ளை…. வெண்ணிலா…. கல்யாணம்…. நான்..”, என்று பிதற்றிய பரணி அப்படியே மயங்கிச் சரிந்தான்.
அதற்கு அடுத்து வரும் வண்டியை நிறுத்தி அவனை மருத்துவமனையில் சேர்ப்பதற்குள் புவி அதிகமாக களைத்து விட்டான். வீட்டில் இருந்து வேறு போன் வந்து கொண்டிருக்க அவனுக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை.
வேறு வழியில்லாமல் தந்தையை மட்டும் வரச் சொல்லி விஷயத்தைச் சொன்னான். இன்னும் நான்கு நாட்களில் திருமணத்தை வைத்துக் கொண்டு இந்த விஷயம் மற்ற யாருக்கும் தெரியக் கூடாது என்று இருவரும் முடிவு எடுத்தார்கள்.
பரணிக்கோ உயிர் போகும் நிலை தான். அதிக ரத்த இழப்பு, அடிவயிற்றில் இறங்கிய கத்தி பல உறுப்புகளை பதம் பார்த்திருக்க அவனுக்கு சிகிச்சை அளிப்பதே பெரும் பாடாக இருந்தது. அவன் தலையிலும் அடி பட்டிருந்தது.
ஓரளவு காப்பாற்றி விட்டாலும் அவன் கண் விழிக்க இரண்டு நாட்களாவது ஆகும் என்று சொல்லி விட்டார்கள். வீட்டில் திருமண வேலை இருப்பதால் புவியும் பாரியும் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயம்.
பரணிக்கு துணைக்கு யாரை வைப்பது என்று அப்பா மகன் இருவரும் கலந்தாலோசித்தார்கள். மகேஷிடம் சொன்னால் அவன் கட்டாயம் வீட்டில் சொல்லி விடுவான் என்பதால் புவி வேறு வழி இல்லாமல் சுஜியின் அண்ணன் மதனை அழைத்தான்.
தங்கையின் கணவன் அழைக்கவும் அவசரமாக போனை எடுத்த மதன் “சொல்லுங்க மாப்பிள்ளை”, என்றான்.
“மச்சான் எனக்கு ஒரு உதவி செய்யணும்”, என்று ஆரம்பித்து நடந்ததைச் சொன்ன புவி அவனை இங்கே வந்து இருக்கச் சொன்னான்.
“கண்டிப்பா வரேன் மாப்பிள்ளை. ரகு கூட அந்த ஹாஸ்பிட்டல்ல தான் டிரைனிங்ல இருக்கான். நாங்க ரெண்டு பேரும் பரணி அண்ணனை மாத்தி மாத்தி பாத்துக்குறோம்”, என்று வாக்கு கொடுத்தான் மதன்.
இந்த விஷயம் வெண்ணிலா திருமணம் நடந்து முடியும் வரை வெளியே தெரிய கூடாது என்று புவி சொல்ல அவனும் சரி என்று சொல்லி விட்டான்.