இங்கே பரணியைக் காணாமல் வெண்ணிலா துடித்து விட்டாள். தன்னை இப்படி போராட விட்டு அவன் ஓடி ஒளிவான் என்று அவள் கனவில் கூட நினைக்க வில்லை. ஒரு மாதிரி வாழ்க்கையை வெறுத்த நிலைக்கு சென்று கொண்டிருந்தாள்.
என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று ஒரு துறவி போல நாட்களைக் கடத்தினாள். பரணி மீது அளவுக்கு அதிகமான கோபம் உண்டானது என்றால் அவனைத் தேடும் தன்னை நினைத்து வெறுப்பும் வந்தது. அதே நேரம் தாலி கட்டும் கடைசி நிமிடத்திலாவது அவன் வந்து விட மாட்டானா என்று ஏங்கி ஏங்கி செத்துக் கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. அப்போது வரை பரணியை யாரும் பார்க்க வில்லை. அவன் மருத்துவமனையில் அபாயக் கட்டத்தை தாண்டி இருந்தாலும் நினைவு வருவதும் மயங்குவதுமாக தான் இருந்தான்.
வெண்ணிலாவுக்கு அலங்காரம் நடந்து கொண்டிருக்க மைதிலியால் அவள் வேதனையை கண் கொண்டு பார்க்க முடியவில்லை. சுஜிக்கு எதுவும் தெளிவாக புரியாமல் போனாலும் ஏதோ தவறாக நடப்பது போலவே இருந்தது.
வீட்டின் மூத்த மருமகளாக வரும் உறவினர்களுக்கு சமைத்துப் போடுவதிலே அவள் நேரம் சென்று விட வேறு எதுவும் அவளால் செய்ய முடிய வில்லை.
“அலங்காரம் முடிஞ்சிருச்சா? பொண்ணைக் கூட்டிட்டு வரச் சொல்றாங்க”, என்று சொல்லிக் கொண்டே அறைக்குள் வந்தாள் சுஜி.
அவளைக் கண்ட வெண்ணிலா “சுஜி மாமா எங்கயாவது இருக்காங்களா? நீ பாத்தியா?”, என்று கேட்டாள்.
“இல்லை டி, பரணி அண்ணனைக் காணும். எங்கன்னே தெரியலை. மாமா கிட்ட கேட்டா எங்கயோ அனுப்புனேன்னு சொன்னாங்க. சரி வா, உன்னைக் கூப்பிடுறாங்க. மைத்தி நீயும் வா”, என்று சொல்லி அவளை எழுப்பி அழைத்துக் கொண்டு சென்றாள்.
“எல்லாமே முடிஞ்சிருச்சு மைத்தி”, என்று சொல்லிக் கொண்டே மணமேடையில் அமர்ந்தாள் வெண்ணிலா.
மைதிலிக்கு தோழியை நினைத்து மனது பாரமானது. மதன் பரணியைப் பற்றி அவளிடமும் சொல்லாததால் அவளுக்கும் பரணி மேல் கோபமாக வந்தது.
“என்னை வேண்டாம்னு நினைச்ச நீ எனக்கும் வேண்டாம் மாமா. என் வாழ்க்கையை எப்படி பாத்துக்கணும்னு எனக்கு தெரியும்”, என்று வெண்ணிலா மனதில் எண்ணிக் கொண்டிருக்கும் போதே அவள் கழுத்தில் தாலியைக் கட்டினான் வெங்கட்.
அதற்கு பின் வந்த சடங்குகளில் அவள் கவனம் செல்ல வில்லை. மற்றவர்கள் செய்யச் சொன்னதை அப்படியே செய்தாள். பின் சீர் வரிசையுடன் புகுந்த வீடு சென்றாள். அன்றைய இரவு வெங்கட் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப் பட்டிருக்க வெங்கட்டிடம் தன்னுடைய மனதைச் சொல்லி விவாகரத்து கேட்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.
அவன் புரிந்து கொண்டால் அவனிடம் இருந்து விலகி விட வேண்டும் என்றும் அப்படி இல்லாமல் அவன் அவளை எல்லாவற்றுக்கும் கட்டாயப் படுத்தினால் உயிரை விட்டுவிட வேண்டும் என்றும் முடிவு எடுத்தாள். அதன் பிறகு தான் அவளால் நிம்மதியாக இருக்க முடிந்தது.
அப்போது உள்ளே வந்தான் வெங்கட். அவன் வரவை உணர்ந்து அவனை நிமிர்ந்து பார்த்தாள் வெண்ணிலா. அவன் அமைதியாக அவள் அருகே வந்து சற்று இடைவெளி விட்டு அமர்ந்தான். அந்த அறையில் மயான அமைதியே நிலவியது.
“என்னை மன்னிச்சிரு வெண்ணிலா”, என்று வெங்கட் முதல் முறையாக அவளிடம் பேச அவனை குழப்பமாக பார்த்தாள். அடுத்து அவன் பேச பேச அவள் முகம் சந்தோசத்தால் மலர்ந்தது. அன்று இரவு முழுவதும் இருவரும் பேசிக் கொண்டிருக்க அழகான நட்பு அங்கே மலர்ந்தது.
பரணி கண் விழித்ததும் அவனுக்கு சொல்லப் பட்ட செய்தி எந்த பிரச்சனையும் இல்லாமல் வெண்ணிலா திருமணம் நடந்து அவள் புகுந்த வீட்டுக்கு சென்று விட்டாள் என்பது தான்.
அதைக் கேட்டு அவன் மனம் பட்ட வேதனைக்கு அளவே இல்லை. இது தான் விதி போல என்று எண்ணிக் கொண்டவன் உள்ளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாக இறுகிக் கொண்டிருந்தான். அவனுடைய சிரிப்பு, சந்தோஷம் எல்லாம் அவனை விட்டுக் காணாமல் போய் விட்டது. எல்லாம் முடிந்த பிறகு என்ன பேசி என்ன பயன்?
கட்டாயம் தன்னை வெண்ணிலா மன்னிக்க மாட்டாள் என்று அவனுக்கு தெரியும். இவ்வளவு பெரிய துரோகம் செய்தவனை அவள் எப்படி மன்னிப்பாள்?
மருத்துவமனையில் இருந்து அவன் வீட்டுக்கு வந்ததும் இயல்பாக இருக்க மல்லிகா அவனை எங்கே போன என்று கேள்வி கேட்டு ஒரு வழி ஆக்கி விட்டாள். ஏதோ சொல்லி சமாளித்தான். சுஜிக்கும் எந்த விவரமும் தெரிய வில்லை. தன்னுடைய கணவனைக் கொல்ல சதி நடந்ததோ, அவனைக் காப்பாற்ற பரணி அவனுடைய உயிரைக் கொடுக்கத் துணிந்ததையோ அவள் அறியவே இல்லை. புவி வேறு போலீஸ் விசாரணை, அந்த ரவுடியை போலீஸ் பிடித்து இவனும் பரணியும் சாட்சிக்கு செல்வது என்று நாட்கள் நகர்ந்தது.
எல்லா விவரமும் தெரிந்த பாரி கொலை முயற்சி விஷயம் மற்றவர்களுக்கு தெரிந்தால் வீணான மனவருத்தம் தான் என்று யாரிடமும் சொல்லாமல் மறைத்து விட்டார்.
பரணியோ நாளுக்கு நாள் உள்ளுக்குள் இறுகிக் கொண்டிருந்தான். புவியிடம் முன்பு போல் பேசுவதில்லை. தேவைக்கு பேசுவான். வீட்டிலும் அப்படியே.
அவன் மாற்றம் யாருக்கும் தெரியாமல் போனாலும் அவனிடம் ஏதோ வித்தியாசத்தைக் கண்டாள் சுஜி. எப்போதும் “தங்கச்சி இன்னைக்கு என்ன சமையல்?”, என்று அவளிடம் கேட்டுக் கொண்டே சாப்பிட அமர்பவன் இப்போதெல்லாம் அவளிடமும் ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. அவள் தட்டில் என்ன வைக்கிறாள் என்று கூட தெரியாமல் உண்டு விட்டுச் சென்றான்.
அடுத்த இரண்டு நாட்கள் கழித்து இரண்டாம் மறுவீட்டுக்கு வந்தாள் வெண்ணிலா. அவளை அவளுடைய பிறந்த வீட்டில் விட்டுவிட்டு வேலை இருக்கிறது என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான் வெங்கட்.
மற்றவர்கள் அனைவரும் வெண்ணிலாவின் புகுந்த வீட்டைப் பற்றி வெண்ணிலாவிடம் விசாரித்துக் கொண்டிருக்க வெண்ணிலாவின் முகம் பார்க்க முடியாமல் தயங்கினான் பரணி. அவளோ அவனை நிமிர்ந்து கூட பார்க்க வில்லை.
அவள் பாரா முகம் மனதை வதைத்தாலும் அந்த வெறுப்பு அவளுக்கு நல்லது தான் செய்யும் என்று எண்ணிக் கொண்டு கடைக்குச் சென்று விட்டான்.
வெண்ணிலா தன்னுடைய திட்டத்தின் முதல் படியாக மல்லிகாவிடம் தனியே பேச நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவே இல்லை. கூடவே ரேணுகா இருக்க மல்லிகாவிடம் வெண்ணிலாவால் தனியே பேச முடியவில்லை.
அதனால் அடுத்த முயற்சியாக சுஜியிடம் பேச எண்ணினாள். அந்த வாய்ப்பு அவளுக்கு வந்தது. சமையல் வேலை எல்லாம் முடித்து விட்டு வெண்ணிலா அறைக்குள் சென்றாள் சுஜி.
அவள் வரவை உணர்ந்தே முகத்தை சோகமாக வைத்துக் கொண்டாள் வெண்ணிலா. “வெண்ணிலா”, என்று சுஜி அழைக்க “சொல்லு சுஜி”, என்றாள்.
“ஏன் ஒரு மாதிரி இருக்க? புதுசா கல்யாணம் ஆன சந்தோஷம் உன் முகத்துல இல்லை டி. வெங்கட் வேற உன்னை இங்க விட்டுட்டு கிளம்பினவர் இப்ப வரைக்கும் வரலை. அவர் உன்னை நல்லா வச்சிருக்காரா? ஏதாவது பதில் சொல்லு டி. இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”, என்று கேட்டாள் சுஜி.
“ஓ நல்லா வச்சிருக்காரே. இதோ பார் பர்ஸ்ட் நைட்ல அவர் எனக்கு கொடுத்த பரிசு”, என்று சொன்ன வெண்ணிலா தன்னுடைய காலை அவளிடம் காட்டினாள்.
அங்கே சிகரட்டால் சூடு வைத்த காயம் இருக்க அதிர்ந்து போனாள் சுஜி. “என்ன டி இதெல்லாம்?”
“அதெல்லாம் அப்படி தான். கொஞ்ச நாள்ல பழகிரும். இதை வீட்ல யார்க் கிட்டயும் சொல்லிட்டு இருக்காத”, என்று சொன்னாள் வெண்ணிலா.
அப்படிச் சொன்னால் சுஜி புவியிடம் இதைச் சொல்வாள் என்று எண்ணி தான் வெண்ணிலா அப்படிச் சொன்னாள். அவள் நினைத்தது போலவே சுஜி புவியிடம் பேசினாள்.
“வெண்ணிலா சந்தோஷமா இல்லைங்க. அவ கால்ல சிகரட் சூடு இருக்கு. கொஞ்சம் என்னன்னு கேளுங்க”, என்று சொன்னாள் சுஜி.
“என்ன உளறுற? வெங்கட்க்கு சிகரட் தண்ணி அடிக்கிற பழக்கமே கிடையாது. நீ ஏதாவது கற்பனை பண்ணிட்டு உளறாத”, என்று மனைவியை சமாளித்தான்.
ஆனாலும் ஏதோ உறுத்த தங்கையிடம் சென்று “எப்படி இருக்க வெண்ணிலா? உனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை தானே?”, என்று விசாரித்தான்.
அதற்கு வெண்ணிலா பதில் சொல்வதற்கு முன்னே “அவளுக்கு என்ன பிரச்சனை வரப் போகுது? நல்ல குடும்பத்துல வாக்கப் பட்டுருக்கா? நாலு பேர் கண்ணு படாம இருந்தாலே என் மக வாழ்க்கை நல்லா இருக்கும்”, என்று சுஜியை குறிப்பாக பார்த்துக் கொண்டே சொன்னாள் மல்லிகா.