“பத்து நிமிசத்துல அங்க இருப்பேன் டி. உன்னை விட எனக்கு எதுவும் பெருசு இல்லை”, என்று சொன்னவன் போனை வைத்து விட்டு லீவ் சொல்லி விட்டு கிளம்பி விட்டான்.
கேசவன் கோபத்தில் தன்னுடைய அடி ஆட்களை அங்கே ஆஜர் ஆகச் சொன்னார். நாலஞ்சு ஆட்கள் அங்கே வந்து நிற்கவும் உள்ளுக்குள் படபடப்பாக இருந்தாலும் முகத்தில் பயத்தைக் காட்டாமல் அமர்ந்திருந்தாள் மைதிலி.
மதன் வீட்டுக்குள் வந்ததும் அவனுக்கு நிலைமை புரிந்தது. அவன் கேசவன் மற்றும் மைதிலி அருகில் சென்றான். என்ன பேச, யாரிடம் பேச என்று அவன் மனதில் எண்ணிக் கொண்டிருக்கும் போதே மைதிலி அவனை இறுக்கி அனைத்துக் கொண்டாள். அவள் செய்கையில் மதன் கலவரமாகிப் போனான்.
கேசவனோ மகளின் செய்கையில் அதிர்ந்து நின்று விட்டார். சுற்றி இருந்த அடி ஆட்கள் எல்லாம் கேசவனின் வார்த்தைக்காக காத்திருந்தார்கள்.
“ஏய் கட்டிப் பிடிக்கிற நேரமா டி இது?”, என்று மைதிலியின் காதில் முணுமுணுத்தான் மதன்.
“நான் செய்யுறதை அப்படியே திருப்பிச் செய்ங்க”, என்று அவன் காதில் சொன்னாள் மைதிலி.
“ஏய் உங்க அப்பா முன்னாடி இப்படி இருக்க ஒரு மாதிரி இருக்கு டி”
“இங்க நாம மட்டும் தான் இருக்கோம்னு நினைச்சிக்கோங்க”, என்று சொன்ன மைதிலி யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அவனுடைய உதடுகளை சிறை செய்ய மதன் திகைத்து விட்டான். “ரைட்டு நம்ம ஆள் ஏதோ முடிவு பண்ணிட்டா”, என்று மனதில் எண்ணிக் கொண்டு அவள் முத்தத்தை மெய் மறந்து அனுபவித்தான்.
கட்டிப் பிடிப்பதைப் பார்த்தே திகைத்து போன கேசவன் அவர்கள் முத்தமிடவும் “ஏய் மைதிலி? அறிவிருக்கா உனக்கு? வெக்கமா இல்லையா டி உனக்கு?”, என்று கத்த நிதானமாக அவனிடம் இருந்து விலகினாள் மைதிலி
“என்னப்பா இப்படி கேக்குறீங்க? நீங்க தினமும் ஒவ்வொரு பொண்ணு கூட ரூமுக்குள்ள பண்ணுறதை நாங்க வெளிய பண்ணுறோம். இதுல என்ன தப்பு இருக்கு?”, என்று கேட்டாள் மைதிலி. அவள் கேள்வியில் அதிர்ந்து போனார் கேசவன். ஏதோ உள்ளுக்குள் குற்ற உணர்வு வந்தது. மதன் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றான்.
“என்னப்பா கோபம் வருதா? எங்களை வெட்டிப் போடணும்னு வெறி வருதா? உங்க கண்ணு முன்னாடி தானே நிக்குறோம்? எங்களை கொன்னு போட்டுருங்க”, என்று தைரியமாகவே சொன்னாள் மைதிலி.
“நான் அதை தான் செய்யப் போறேன். டேய் ஒழுங்கு மரியாதையா இங்க இருந்து ஓடிடு. இல்லை உனக்கு இன்னைக்கு சாவு தான்”, என்று கேசவன் மிரட்ட “என் மைதிலிக்காக சாகுறது எனக்கு சந்தோஷம் தான் சார்”, என்றான் மதன்.
“என்ன ரெண்டு பேரும் டிராமா பண்ணுறீங்களா? இங்க பாரு மைதிலி இவன் கூட போனா வேலை வாங்கி தர மாட்டேன். சொத்துல சல்லிப் பைசா கூட தர மாட்டேன்”, என்று கேசவன் சொல்ல “அதை நீங்களே வச்சிக்கோங்க. எனக்கு என் மைதிலியை மட்டும் தந்துருங்க”, என்றான் மதன்.
“அவர் கிட்ட எதுக்கு மதன் கெஞ்சுறீங்க? நீங்க இல்லாம என்னாலயும் இருக்க முடியாது. அப்படி உங்களைக் கொன்னுட்டு என்னை வேற எவனுக்காவது கட்டி வைக்கணும்னு நினைச்சா இவர் தான் அசிங்கப் படுவார்”, என்றாள் மைதிலி.
“கடைசில உன் அம்மா புத்தியை காமிச்சிட்டல்ல? ஆம்பளைங்க வேணும்னு அலையுவீங்களா டி?”, என்று கேசவன் கேட்க “இந்த கேள்வியை தினமும் உங்க கூட தூங்குறாங்களே அவங்க கிட்ட போய் கேளுங்க”, என்றாள் மைதிலி.
“மைதிலி, வாயை அடக்கி பேசு”
“நான் அப்படி தான் பேசுவேன். கேவலமான அப்பாவுக்கு பிறந்தா என் வாய்ல இப்படி தான் வார்த்தை வரும். எனக்கு தப்பான குணம் வந்திருந்தா அது உங்க குணம் தான். அப்புறம் எங்க அம்மா ஒண்ணும் தப்பு பண்ணிட்டோமேன்னு குற்ற உணர்ச்சில செத்துப் போகலை. உங்களோட பேச்சைக் கேக்க முடியாம சாவே மேல்ன்னு நினைச்சிட்டாங்க. நான் இப்ப இந்த வீட்டை விட்டு போறேன். என்னால இந்த நரகத்துல இருக்க முடியாது. கண்ணு முன்னாடியே அப்பா தினம் தினம் ஒரு பொண்ணு கூட கூத்தடிக்கிறதை இனியும் பாத்தா எனக்கு தான் அசிங்கம். உங்க சொத்து எல்லாத்தையும் நீங்களே வச்சிக்கோங்க”, என்று சொல்ல மகளின் பேச்சு அவர் மனதை தைத்தது.
ஆனாலும் தன்னுடைய திமிரை விட்டுக் கொடுக்க முடியாமல் “நீ இனி எனக்கு பொண்ணே இல்லை. என் மனசு மாறுறதுக்குள்ள இங்க இருந்து போயிருங்க. இல்லை கொன்னு புதைச்சிருவேன்”, என்று கேசவன் சொல்ல அடுத்த நொடி அவளை அழைத்துச் சென்று விட்டான் மதன்.
“என்ன சார் அவங்களை அப்படியே விட்டுட்டீங்க?”, என்று கேட்டான் செல்வா.
“என் வாழ்க்கை தான் சாக்கடையா ஆகிருச்சு. அவ நல்லா இருந்தா சரி தான்”, என்று சொல்லி விட்டு தளர்ந்து போய் அறைக்குள் செல்ல செல்வா உதடுகள் புன்னகையால் மலர்ந்தது.
வண்டியில் செல்லும் போது “உங்க அம்மா அப்பா என்னை ஏத்துக்குவாங்களா?, என்று கேட்டாள் மைதிலி.
“ஏத்துக்கலைன்னா என்ன? வேற வீடு பாத்து போயிறலாம். அப்புறமா அவங்க மன்னிச்ச உடனே சேந்துக்கலாம்”, என்று ஈசியாக விடை சொன்னான் மதன்.
அவர்கள் எண்ணியது போல வீட்டில் பிரச்சனை வெடிக்க தான் செய்தது. அவன் மைதிலியுடன் வரவும் தணிகாச்சலம் இடிந்து போய் அமர சுந்தரியோ இருவரையும் முறைத்து பார்த்தாள்.
“அப்பா”, என்று அவன் பேச முற்பட அவனை கை காட்டி தடுத்தவர் “சுந்தரி கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணனும். அது வரைக்கும் அந்த பொண்ணு உன் கூட நம்ம ரூம்ல இருந்துக்கட்டும். விஷயம் வெளிய தெரியுறதுக்கு முன்னாடி நம்ம கவுரவத்தை நாம தான் காப்பாத்திக்கணும்”, என்று சொல்லி விட்டார்.
அவர் சரியாக பேசவில்லை என்றாலும் அவர் திருமணத்துக்கு சம்மதம் சொன்னதே போதுமானதாக இருந்தது. திருமணத்துக்கு நாள் குறித்தார்கள். அதே வீட்டில் மைதிலி இருந்தாலும் அவளிடம் மதன் ரகுவைத் தவிர வேறு யாரும் பேச வில்லை.
இந்த விஷயத்தை சுந்தரி சுஜியிடம் சொல்ல சுஜியோ அதிர்ந்து விட்டாள். அதுவும் தன்னுடைய அண்ணனும் மைதிலியும் காதலித்திருக்கிறார்கள் என்று அவளால் நம்பவே முடிய வில்லை. அண்ணன் சொல்ல வில்லையே என்பதை விட மைதிலி ஒரு வார்த்தை கூட அதைப் பற்றி பேச வில்லையே என்று கோபம் வந்தது சுஜிக்கு. அதனால் சுஜி மைதிலியிடம் இருந்து வந்த அழைப்பை எடுக்கவே இல்லை.
சுஜியின் கோபத்தை உணர்ந்த மைதிலி வெண்ணிலாவை அழைத்து விஷயத்தைச் சொல்ல “நீ கவலைப் படாதே மைத்தி. நான் அவ கிட்ட பேசுறேன்”, என்று சொல்லி போனை வைத்த வெண்ணிலா சுஜியை அழைக்க அவளுடைய போனையும் சுஜி எடுக்க வில்லை. சரி பிறகு பேசிக் கொள்ளலாம் என்று எண்ணி வேலையைத் தொடர்ந்தாள்.
“என்னங்க இந்த விஷயத்தை மாப்பிளை கிட்ட சொல்லணும். சுஜி வீட்லயும் பேசணும். நாம சொல்லலைன்னு பேச்சு வரக் கூடாது”, என்று சொன்னாள் சுந்தரி.
“பத்திரிக்கை வரட்டும், போய்க் கொடுத்துட்டு விஷயத்தைச் சொல்லுவோம்”, என்று முடித்துக் கொண்டார் தணிகாச்சலம்.
ஆனால் அலுவலகம் சென்ற மதன் புவியை அழைத்து விஷயத்தைச் சொல்லி விட்டான். வாழ்த்துக்கள் சொன்ன புவி என்று திருமணம் என்றெல்லாம் கேட்டு விட்டு வீட்டுக்கு வந்தான்.
இங்கே கோபமாக இருந்த சுஜி “உங்க கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். மதன் அண்ணா….”, என்று ஆரம்பிக்க “எனக்கு தெரியும். மச்சான் கால் பண்ணி சொன்னார்”, என்று சொல்லி முடித்து விட்டான் புவி.
அன்று இரவு வெண்ணிலா அழைக்கவும் அவள் போனை எடுத்தாள் சுஜி.
“ஏன் டி அப்ப என் போனை எடுக்கலை?”, என்று கேட்டாள் வெண்ணிலா.
“வேலையா இருந்தேன் டி”
“சரி மைத்தி போனை ஏன் எடுக்கலை?”
“அவ பண்ணின வேலைக்கு அவ கிட்ட என்னால எப்படி பேச முடியும்?”, என்று சுஜி கேட்டதும் “அவ என்ன பண்ணினா? அவ லவ் பண்ணக் கூடாதா?”, என்று கேட்டாள் வெண்ணிலா.
“லவ் பண்ணினது தப்புன்னு நான் எப்படி சொல்லுவேன்? ஆனா ஒரு வார்த்தை கூட சொல்லலையே? ஆனா ஒரு விஷயம் மட்டும் புரியலை. இவளுக்கு எப்படி என் அண்ணனைத் தெரியும்”, என்று குழப்பமாக கேட்டாள்.
காதல் தொடரும் ….
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.