அதை வாங்கி பாரியும் பேச “விடுங்க சம்பந்தி, அவங்களும் என் பொண்ணு மாதிரி தானே?”, என்று சொன்னவர் கொஞ்சம் தயங்கி “சுஜி ரொம்ப மெலிஞ்சிட்டா. அவளை கொஞ்ச நாள் எங்க வீட்டுக்கு அனுப்பி வைக்கிறீங்களா? ரெண்டு உசுரா இருக்கா. இப்ப அவ சந்தோஷமா இருக்கணும்”, என்று சொன்னார்.
“நான் புவி கிட்ட பேசுறேன் சம்பந்தி”, என்று போனை வைத்த பாரி “புவி, சுஜியை கொஞ்ச நாள் அவ வீட்ல விட்டுட்டு வா”, என்றார்.
அவளை தன்னை விட்டு அனுப்புவதா என்று அவன் யோசிக்க “என்ன டா யோசிக்கிற? இப்ப அவ வயித்துல உன் குழந்தை இருக்கு. இங்க இருக்குற யாரும் சரி இல்லை. அவளுக்கு இப்ப அமைதி வேணும். ஒழுங்கா அவளை கொஞ்ச நாள் அங்க விட்டுட்டு வா. இங்க இருக்குறவங்களுக்கு வடிச்சு கொட்ட தான் அவ பிறந்துருக்காளா?”, என்று கேட்டார்.
“சரிப்பா”, என்று சொன்னவன் சுஜி புறம் திரும்பி “வா கிளம்பு”, என்று சொன்னான்.
சுஜிக்குமே கொஞ்சம் அமைதி தேவை என்று பட்டது. கூடவே மைதிலியைப் பார்க்கவும் ஆசை இருக்க உடனடியாக கிளம்ப ஆரம்பித்தாள்.
“என்னை விட்டு போவது இவளுக்கு வருத்தமாவே இல்லையா?”, என்று கவலை கொண்டான் புவி.
அப்போது மகேஷ் வீட்டுக்கு வர அவனிடம் அனைத்தையும் சொன்ன பாரி ரேணுகாவை அவள் வீட்டில் விட்டுவிட்டு வரச் சொல்லி விட்டார்.
மகேஷ் மனைவியைத் தேடிச் செல்ல அவளோ ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள். அவனைக் கண்டதும் அவள் மன்னிப்பு கேட்க அவனுக்கு பாவமாக தான் இருந்தது.
“செய்றதையும் செஞ்சிட்டு மன்னிப்பு கேட்டா ஆச்சா? ஒழுங்கா சுஜி அண்ணி கிட்ட போய் மன்னிப்பு கேளு”, என்று சொல்ல வெளியே வந்தாள் ரேணுகா.
“நீ இன்னும் கிளம்பலையா?”, என்பது போல பாரி பார்க்க அவளோ சுஜியைத் தேடினாள்.
அப்போது சுஜி பையுடன் வெளிய வர அவளுடன் வந்த புவி அந்த பையை வாங்கிக் கொண்டு வெளியே சென்றான்.
அடுத்த நிமிடம் ஓடிச் சென்று சுஜி காலில் விழுந்து மன்னிப்பை வேண்டினாள் ரேணுகா. “பரவாயில்லை விடு”, என்று சொல்லி விட்டு வெண்ணிலா மற்றும் பாரியிடம் “போயிட்டு வரேன்”, என்று சொன்ன சுஜி மல்லிகாவிடம் சொல்லாமலே கிளம்பி விட்டாள். பாரியும் மீண்டும் ரேணுகாவை எச்சரித்து விட்டே இந்த வீட்டில் இருக்க அனுமதி கொடுத்தார்.
சுஜியை அவளது வீட்டில் விட்ட புவி சிறிது நேரம் அங்கே இருந்து மற்றவர்களுடன் பேசி விட்டே சென்றான். “விட்டுட்டு போறான், திருப்பிக் கூப்பிட வருவானா? இல்லை விட்டது சனியன்னு போறானா?”, என்று குழம்பிய சுஜி அதற்கு பின் அன்னை மற்றும் மைதிலியிடம் கதை பேச ஆரம்பித்து விட்டாள்.
அடுத்து வந்த நாட்களில் புவியும் சரி சுஜியும் சரி மற்றவரின் பிரிவில் நிம்மதி இல்லாமல் தான் இருந்தார்கள். புவிக்கு அவள் இல்லாத அறை வெறுமையை தந்தது. அவள் தன்னுடைய மனதில் எந்த அளவுக்கு பதிந்திருக்கிறாள் என்று அவளுடைய பிரிவில் கண்டு கொண்டான். மதன் மைதிலி திருமணம் முடிந்ததும் அவளை அழைத்து விட வேண்டும் என்று முடிவு எடுத்தான்.
அடுத்த நாளே “வீட்டு வேலை செய்ய முடியலை. வேலைக்கு ஆளை வரச் சொல்லு”, என்று புவியிடம் சொன்னாள் மல்லிகா.
“இத்தனை நாள் இந்த வீட்ல வேலைக்காரியா இருந்தா?”, என்று கேட்டு விட்டு புவி செல்ல மல்லிகா திகைத்து போய் அமர்ந்திருந்தாள்.
இங்கே சுஜிக்கு அவன் நினைவு வாட்டினாலும் மைதிலியுடன் இருப்பது சந்தோஷமாக இருந்தது. அப்போது தான் சுந்தரி மைதிலியிடம் பேசுவதில்லை என்று புரிந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மைதிலியைப் பற்றி அவள் பட்ட கஷ்டங்களைச் சொல்லி அன்னையின் மனதை மாற்றினாள் சுஜி.
ஒரு வழியாக மதன் மைதிலி திருமண நாளும் வந்தது. மணப்பெண் அலங்காரம் எல்லாம் நடந்து கொண்டிருக்க புவியின் வீட்டில் இருந்து யாருமே இன்னும் மண்டபத்துக்கு வரவில்லை. அவர்கள் வீட்டில் யாரும் வராமல் இருக்க சுஜிக்கு கஷ்டமாக இருந்தது.
அவர்கள் யாரும் வராதது அவளை அதிகம் பாதித்தது. அப்போது பாரி, பரணி, வெண்ணிலா, புவி, மல்லிகா, மகேஷ், ரேணுகா என அனைவரும் வர அதற்கு பின்னர் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.
அதுவும் இத்தனை நாட்கள் கழித்து புவியைப் பார்ப்பது அவளை உற்சாக படுத்தி இருந்தது. ஒரு வழியாக அனைவரின் ஆசியோடு மதன் மைதிலி கழுத்தில் தாலி கட்டினான். சடங்குகள் முடிந்து ரிசப்ஷன் மேடையில் மணமக்கள் நிற்க அங்கே தன்னுடைய கூட்டத்தோடு வந்தார் கேசவன். அவர் ஏதாவது பிரச்சனை செய்யப் போகிறாரோ என்று அனைவரும் பதறினார்கள்.
கேசவன் மட்டும் மேடை ஏறினார். பயத்தில் மைதிலி மதன் கையைப் பிடிக்க அவனும் ஆறுதலாக அவள் கையைப் பற்றிக் கொண்டான்.
அவர்கள் அருகே வந்து அவள் கையில் ஒரு கவரைக் கொடுத்தவர் கீழே சென்று விட்டார். என்ன கவர் என்று மதன் பிரித்துப் பார்க்க அவர் அவளுக்காக வாங்கிக் கொடுத்திருந்த வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தான் அது. “உனக்கும் கவர்ன்மெண்ட் வேலை கிடைச்சிருச்சு டி”, என்று சொன்ன மதன் சிரிக்க அவளும் சிரித்தாள்.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் வீட்டுக்குச் செல்ல அவர்களுக்கு துணைக்கு புவியும் சுஜியும் தான் வந்தார்கள். அவர்கள் வீட்டுக்கு வரும் போது அங்கே வீட்டின் முன்னால் நின்றது பெரிய லாரி. கேசவன் சீர் வரிசைகளை மகளுக்காக அனுப்பி வைத்திருந்தார். கூடவே ஒரு பெட்டி நிறைய அவளுக்கு என்று வாங்கிய நகைகளும்.
“உங்க அப்பாவை புரிஞ்சிக்கவே முடியலை டி”, என்று சொன்னான் மதன்.
“எனக்கும் தான்”, என்றாள் மைதிலி.
அன்று இரவு மைதிலியை முதலிரவுக்கு அனுப்பி வைத்து விட்டு வரும் போது தான் புவியைப் பார்த்தாள் சுஜி. அவளைக் கண்டதும் “வீட்டுக்கு போகலாமா?”, என்று கேட்டான் புவி.
“என்னைக் கூப்பிட தான் வெயிட் பண்ணுறீங்களா? என்னை இங்க விட்டுட்டு போய்ருவீங்கன்னு நினைச்சேன்”
“நீ இல்லாம நான் அங்க எப்படி இருக்க? அத்தை மாமா கிட்ட சொல்லிட்டு வா”, என்று சொல்லி விட்டு அவன் வெளியே செல்ல அவன் பதிலில் அவள் தான் குழம்பிப் போனாள்.
கிளம்பிப் போகும் முன் தாய் மற்றும் தந்தையிடம் மீண்டும் மைதிலி பட்ட கஷ்டங்களைச் சொல்லி அவளை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மிரட்டி விட்டே கணவனுடன் சென்றாள்.
சுந்தரி மற்றும் தணிகாச்சலம் இருவரும் முழு மனதுடன் மைதிலியை மருமகளாக ஏற்றுக் கொண்டார்கள்.
மதனின் அறைக்குள் நுழைந்ததும் படபடப்பாக வந்தது மைதிலிக்கு. அவளைக் கண்டதும் அவன் மலர்ந்து சிரிக்க “சிரிச்சே மயக்குறானே?”, என்று மனதுக்குள் எண்ணியவள் அவனை நிமிர்ந்து பார்க்கவே தடுமாறினாள். அவளுடைய தடுமாற்றம் உணர்ந்தவனுக்கு புன்னகை மலர்ந்தது.
“ஸ்டார்ட் பண்ணலாமா?”, என்று கேட்ட படி அவன் அவளை இடித்துக் கொண்டு அமர அவள் எதை என்று கேட்காமல் தலை குனிந்தாள்.
“ஒரு முத்தம் கொடு டி. அன்னைக்கு உங்க அப்பா முன்னாடி கொடுத்தியே அந்த மாதிரி”, என்று சொல்ல அவளால் அவனை நிமிர்ந்து பார்க்கவே முடியவில்லை.
“நீ செய்ய மாட்ட”, என்று சொன்னவன் அவளை நெருங்கி அவள் இடையோடு சேர்த்து அணைத்தான்.
அவளுடைய கண்களைப் பார்த்தவாறே அவன் அவள் முகம் நோக்கி குனிய அவள் கண்கள் தாமாக மூடிக் கொண்டது. தன்னுடைய இதழ்களை அவளுடைய இதழ்களில் ஆழப் புதைத்தான் மதன்.
அவள் கரங்கள் தாமாக உயர்ந்து அவன் பின்னந்தலையைக் கோதியது. அவளது ஒத்துழைப்பு அவனது வேகத்தை இன்னும் கூட்ட அவள் தான் தவித்துப் போனாள். அவள் இதழில் இருந்து விலகியவன் அவள் முகம் முழுக்க முத்தமிட்டான். அவன் கரங்கள் எலும்புகள் நொறுங்கும் அளவுக்கு அவளை இறுக அணைத்தது.
மதனின் கைக்குள் இருக்க மைதிலி நெகிழ்ந்து போய் இருந்தாள். ஏதோ சாக்கடைக்கு நடுவே வாழ்ந்து கொண்டிருந்தவளை அவன் காதல் கோபுரத்தின் உச்சத்தில் தூக்கி விட்டது புரிந்து அவன் மேல் பித்தாகி இருந்தவள் அவன் தொடுகையில் கரைந்து கொண்டிருந்தாள்.
அதற்கு மேல் முடியாமல் அவன் முழுக் கணவனாக உருமாற அங்கே அழகான அவர்களின் வாழ்க்கை மலர்ந்தது.
காதல் தொடரும் ….
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.