மல்லிகாவின் உறவினரின் திருமணம் வரைக்கும் அனைத்தும் நல்ல படியாக சென்றது. இன்று அவர்கள் வீட்டுக்கு குடும்பத்துடன் செல்ல வேண்டும் என்று மல்லிகா சொல்லி இருந்தாள். ஆனால் புவி அதை காதிலே வாங்க வில்லை. சுஜிக்கோ அங்கே செல்லவே மனதில்லை. என்ன சொல்லி மறுப்பது என்று தயங்கினாள். இப்போது தான் அங்கே சென்றால் அவர்கள் தன்னை வேலைக்காரி என்று தானே நினைப்பார்கள் என்று தவித்தாள்.
நன்றாக பேசும் கணவனாக இருந்திருந்தால் மனதை விட்டு “நான் அங்க வரலை”, என்று சொல்லி இருப்பாள். அதையும் மீறி அவன் வரச் சொன்னால் சண்டை போட்டிருப்பாள். ஆனால் இவர்கள் வாழ்க்கை தான் சாதாரணமானது இல்லையே? அவள் ஒரு மாதிரி இருப்பதை புவி கவனித்துக் கொண்டு தான் இருந்தான். அவள் மனது அவனுக்கு தெளிவாக புரிந்தது.
அவளிடம் கேட்கவா வேண்டாமா என்ற பட்டிமன்றம் நடத்தியது அவன் மனது. ஏனோ அவளை அணைத்து ஆறுதல் சொல்ல வேண்டும் என்ற வேகம் அவனுக்கு எழுந்தது.
எல்லாரும் கிளம்பிக் கொண்டிருக்க புவியோ எழாமல் இன்னும் படுத்திருந்தான். காலை உணவுக்கே எல்லாரும் அங்கே சென்று விட வேண்டும் என்று மல்லிகா சொன்னதால் சமையல் வேலை சுஜியின் தலையில் விழ இல்லை.
இருக்கும் மனநிலையில் பால் காய்த்து அனைவருக்கும் டீ கொடுக்க வேண்டும் என்று கூட அவளுக்கு தோன்ற வில்லை. அவளும் படுத்தே கிடந்தாள். அவளது அலைப்புருதலைப் பார்த்துக் கொண்டு தான் இருந்தான் புவி.
அனைவரும் கிளம்பினாலும் இவர்கள் மட்டும் கிளம்பவே இல்லை. பவித்ரா விழித்த பிறகும் இருவரும் அமைதியாக படுத்திருந்தார்கள். இப்போது அவனிடம் கேட்கவா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது சுஜிக்கு.
“பாப்பு அப்பா கிட்ட கேளு டா கிளம்பனுமா வேண்டாமான்னு?”, என்று மகளைத் தூது விட்டாள். அவ்வளவு பெரிய கேள்வியை கேட்க தெரியாமல் மகள் தந்தையைப் பார்க்க “எங்கயும் போகத் தேவையில்லைன்னு அம்மா கிட்ட சொல்லு டா அம்மு. காலைல டிபன் செய்ய வேண்டாம். கடைல வாங்கிட்டு வரேன். அம்மாவை ரெஸ்ட் எடுக்கச் சொல்லு”, என்று புவி சொல்ல அவள் முகம் பூவாக மலர்ந்தது. அதை ஓரக் கண்ணால் பார்த்தவனுக்கு அவ்வளவு திருப்தி.
புவி தான் வந்து கதவைத் திறந்தான். அவனைக் கண்டதும் “என்ன டா இன்னும் கிளம்பாம இருக்க? கல்யாணத்துக்கு போகணும்னு சொன்னேன்ல?”, என்று கேட்டாள்.
“நான் வரலை”, என்று பட்டென்று சொல்ல “என்ன டா சொல்ற? ஏன் வரலை?”, என்று கேட்டாள் மல்லிகா.
“ஒரே தலைவலி”, என்று புவி எரிச்சலுடன் சொல்ல “அது உன் மாமா வீடு டா. மாத்திரையை போட்டுட்டு வா. நாம போய் தான் ஆகணும்”, என்றாள் மல்லிகா.
“மாமாவா இருந்தா என்ன? யாரா இருந்தா என்ன? என் தலைவலியை விட்டுட்டு என்னால வர முடியாது”
“ஏன் டா இப்படி பண்ணுற? சுஜியையாவது வரச் சொல்லு”
“அவளும் வர மாட்டா”
“குழந்தையையாவது கொடு டா”
“அம்மா அப்பா இல்லாம என் பிள்ளை எங்கயும் வராது. நீங்க போங்க”
“இப்ப எனக்கு தான் தலை வலிக்குது. ஏய் சுஜி எனக்கு ஒரு டீ போட்டுத் தா”, என்று மல்லிகா கேட்க “ஏன் உங்களுக்கு கை இல்லையா?”, என்று கேட்டான் புவி. அனைவரும் அவனை வியப்பாக தான் பார்த்தார்கள்.
“உன் பொண்டாட்டி தான் உன் கிட்ட வத்தி வச்சிட்டாளா. அதான் இப்படி பண்ணுற?”, என்று மல்லிகா சொல்ல “அம்மா”, என்று கத்தியவன் “இப்ப உங்க கூட வந்தா உங்க சொந்தக்காரங்க கிட்ட என்னை என்னன்னு அறிமுகப் படுத்துவ?”, என்று கேட்டான்.
“இது என்ன கேள்வி? என்னோட மூத்த மகன்னு சொல்லுவேன் டா”
“என்னை மூத்த மகன்னு சொல்லுற நீ என் பொண்டாட்டியை என்னன்னு சொல்லுவ? அன்னைக்கு மாதிரி வேலைக்காரின்னா?”, என்று கேட்டான்.
அதைக் கேட்டு முகம் சுருங்கிப் போய் மல்லிகா நிற்க கதவை அடைத்து விட்டு அறைக்குள் சென்று விட்டான் புவி. “உனக்கு இது தேவை தான். அவன் கேக்குறதுல என்ன தப்பு இருக்கு? முதல்ல அடுத்தவங்க மனசை மதிக்க கத்துக்கோ. இப்ப வா நாம எல்லாரும் போகலாம். மகேஷ் காரை எடு”, என்று சொன்ன பாரி அனைவரையும் அழைத்துச் சென்றார். அவர்கள் போகும் வரைக்கும் வெளியவே வரக் கூடாது என்று எண்ணிய சுஜி வெளியே வரவே இல்லை. ஆனாலும் மனதுக்குள் கணவனின் பேச்சு பிடித்திருந்தது. அவளுக்காக அவன் பேசியது அவளுக்கு பிடிக்காமல் போகுமா?
அவனைத் திரும்பி பார்த்தாள். அமைதியாக இருந்தான் புவி. அவன் கோபமாக இருக்கிறானோ என்று அவள் பார்க்க அவனோ சாதாரணமாக தன்னுடைய போனைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவர்கள் கிளம்பிச் சென்றதும் கடைக்குச் சென்று அவன் உணவு வாங்கி வந்தான். எல்லா பார்சலையும் எடுத்து பிரித்து வைத்தவள் சூடான காபியையும் போட்டு விட்டு “பாப்பு அப்பாவும் நீயும் சாப்பிட வாங்க”, என்று அழைத்தாள்.
பொங்கல், பூரி, வடை, இட்லி, தோசை என அனைத்தும் அவன் வாங்கி வந்திருக்க அவன் வந்ததும் அவனுக்கு பரிமாறியவள் குழந்தைக்கு ஊட்டி விட்டாள்.
“அம்மு, ஆறிப் போச்சுன்னா எதுவும் நல்லா இருக்காது. சூடா இருக்கும் போதே அம்மாவை சாப்பிடச் சொல்லு”, என்று சொல்ல அவள் முகம் பூவாக மலர்ந்தது. அவன் அருகே முதல் முறையாக அமர்ந்து உண்டாள்.
பதினொரு மணி ஆனதும் “பாப்பு, மதியம் சாதம் குழம்புன்னு வைக்கவா? இல்லை வெஜிடபுள் பிரியாணி செய்யவா?”, என்று மகளிடம் கேட்டாள் சுஜி.
“பியானி”, என்றாள் பவித்ரா.
”அப்பா கிட்ட கேளுடா”
“அம்மாவை எதுவும் செய்ய வேண்டாம்னு சொல்லு அம்மு”, என்று முடித்து விட்டு அவன் படுத்துக் கொள்ள மணியோ பன்னிரெண்டரை ஆகியது.
ஒரு மணிக்கு குழந்தைக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதால் அவளுக்கு படபடப்பு வந்தது. ஆனால் அவன் அவ்வளவு சொன்ன பிறகு மீண்டும் கேட்க மனதில்லை.
சரியாக பன்னிரெண்டு ஐம்பது மணிக்கு வாசல் கதவின் பெல்லை யாரோ அடிக்க சுஜி போய் திறந்தாள். அவன் ஆர்டர் செய்த உணவு வந்திருந்தது.
“அடப்பாவி ஆர்டர் பண்ணிட்டு தான் பேசாம படுத்திருந்தானா?”, என்று எண்ணிக் கொண்டு எல்லாம் எடுத்து வைத்தாள். மதியமும் அவனுக்கு பரிமாறி விட்டு அவள் உண்ணாமல் இருக்க “காலைல சொன்னது தான் இப்பவும். அம்மாவை சாப்பிடச் சொல்லு அம்மு”, என்றான். உடனே அவன் அருகே அமர்ந்து உண்டாள். வெகு நாட்கள் கழித்து திருப்தியாக சாப்பிட்டாள். அதைக் கண்டு சந்தோஷப் பட்டான் புவி.
அதற்கு பின்னர் அறைக்குச் சென்று மூவருமே நன்கு உறங்கினார்கள். அன்று மாலை எழுந்ததும் சந்தோஷமாக சுற்றிக் கொண்டிருந்தாள் சுஜி.
தலை நிறைய பூ வைத்து மலர்ந்த முகத்துடன் இருந்தவளை விட்டு தள்ளி இருப்பதே அவஸ்தையாக இருக்க “ஒரு ஆளைப் பாத்துட்டு வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றான் புவி. இரவு சாப்பாடையும் அவனே வாங்கி வந்திருந்தான். இரவு ஒன்பது மணிக்கு தான் திருமணத்துக்கு போய் விட்டு அனைவரும் வந்தார்கள்.
திருமண விருந்தில் போட்ட பிரியாணி பற்றி பெருமையாக பேசிய மல்லிகா அதை சுஜிடம் நீட்டி “இந்தா உனக்கு தான் எடுத்துட்டு வந்தோம். சாப்பிடு”, என்று சொல்ல அதை கையில் வாங்காமல் “நாங்க எல்லாரும் சாப்பிட்டோம்”, என்றாள் சுஜி.
“என்ன சாப்பிட்ட? அதெல்லாம் இதையும் சாப்பிடலாம். அவனுக்கும் கொடு”, என்று மல்லிகா சொல்ல சுஜி என்ன செய்ய என்று தெரியாமல் விழித்தாள். அப்போது “தாத்தா நாங்க இன்னைக்கு பியானி சாப்பிட்டோமே”, என்றாள் பவித்ரா.
“என்ன பிரியாணியா? ஏது?”, என்று மல்லிகா கேட்க “நான் தான் வாங்கிக் கொடுத்தேன்”, என்றான் புவி.
“யாரைக் கேட்டு பிரியாணி வாங்கிக் கொடுத்த? இவ கேட்டாளா உன் கிட்ட? ஏன் வீட்ல செஞ்ச குழம்பு சோறை இவளால திங்க முடியாதோ? நாங்க இந்த பக்கம் நகர்ந்த உடனே உன்னை தாஜா பண்ணி விதவிதமா திங்க நினைக்கிறாளா?”, என்று மல்லிகா கேட்க அன்னையை அதிர்ச்சியாக பார்த்தவன் இத்தனை நாள் போல அமைதியாக இருக்காமல் “யார் கிட்ட மா கேக்கணும்?”, என்று கேட்டான். பாரி எல்லாவற்றையும் கேட்டாலும் அமைதியாக இருந்தார். மனைவிக்கு பட்டால் தான் தெரியும் என்று எண்ணிக் கொண்டார். அவரும் எவ்வளவு தான் அவளுக்கு அறிவுரை சொல்வது?
சுஜிக்கு சப்போர்ட் செய்து மகன் பேசவும் ஆத்திரத்துடன் “புவி”, என்று கத்தினாள் மல்லிகா.
“நீ சொல்றது எனக்கு புரியலை மா, என் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு பிரியாணி வாங்கிக் கொடுக்க நான் யார் கிட்ட பெர்மிசன் கேக்கணும்? என் சம்பாத்தியத்துல என் பொண்டாட்டி பிள்ளைகளுக்கு சாப்பாடு கூட வாங்கிக் கொடுக்க கூடாதா?”, என்று ஆழ்ந்த குரலில் கேட்டான்.