பாரி பணம் தருகிறேன் என்று சொன்னதும் “வேண்டாம். அப்பவும் ஏதாவது பேச்சு வரும். நான் சுயமா இருக்கணும்னு நினைக்கிறேன்”, என்றான் புவி.
“நான் கடனா தரேன் டா”, என்றார்.
அதற்கும் அவன் வேண்டாம் என்று மறுக்க அடுத்த நாளே வக்கீலை அழைத்து சொத்தைப் பிரித்து எழுதி விட்டார் பாரி.
பெண்களுக்கு நகை போட்டிருந்ததால் கடையை பரணிக்கும் அந்த அந்த கடைக்கு உரிய பணத்தை மகேஷ் மற்றும் புவிக்கும் கொடுத்து விட்டார். அது போக மூன்று இடங்களில் வாங்கிப் போட்டிருந்த இடங்களை பரணி, புவி, மகேஷ் மூவருக்கும் எழுதி வைத்து விட்டார். அந்த வீடு பரணி, புவி, மகேஷ், வெண்ணிலா, ரோஹினி அனைவருக்கும் பொது என்று சொல்லி விட்டார். பரணி தனக்கு சொத்து வேண்டாம் என்று எவ்வளவோ சொல்லியும் பாரி கேட்க வில்லை.
பரணிக்கு எதுக்கு சொத்து கொடுத்தீங்க என்று வேறு யாருமே கேட்க வில்லை. பரணிக்கு என்னவோ போல இருந்தது. ஏற்கனவே வெண்ணிலா வாழ்க்கை சீரழிந்ததற்கு அவன் தான் காரணம் என்ற குற்ற உணர்வில் இருக்க வேலைக்காரனாக வந்தவனுக்கு சொத்தை எழுதி வைத்து விட்டார்களே? நாளை தான் வெண்ணிலாவுக்கு செய்தது வெளியே தெரிந்தால் தன்னை காரி உமிழ மாட்டார்களா என்று மனதுக்குள்ளே புழுங்கி செத்துக் கொண்டிருந்தான்.
இந்த முறை வெண்ணிலா வந்தால் அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவள் என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் முடிவு எடுத்தான்.
தந்தை கொடுத்த பணத்தை வைத்து நண்பனுடன் சேர்ந்து நடத்திக் கொண்டிருந்த கடையை தன்னுடைய பெயருக்கு மாற்றிக் கொண்டான் மகேஷ். அவன் நண்பன் வேறு தொழில் செய்யப் போகிறேன் என்று சொன்னதால் அந்த கடை மகேஷ் வசம் வந்தது.
புவியும் புதிய கடையை வாங்கி விட்டான். அதற்கு பாரி கொடுத்த பணம் உதவியாக இருந்தது. ஒரு வழியாக கடைக்கு தேவையான பொருள்கள் வாங்கி கடையை செட் செய்வதற்குள் வெகுவாக திணறிப் போனான் என்று தான் சொல்ல வேண்டும். மல்லிகாவுக்கு தான் கஷ்டமாக இருந்தது. புவி அவளிடம் ஒரு வார்த்தை கூட பேசாததால் கவலையாக இருந்தாள்.
வீட்டில் இருக்கும் யாரும் சந்தோஷமாக இல்லை. வீட்டு வேலைகளைக் கூட மல்லிகாவே செய்ய சுஜிக்கு தான் குற்ற உணர்வாக இருந்தது. அன்று இரவு அவனிடம் பேச வேண்டும் என்று எண்ணினாள்.
அவள் முகத்தை வைத்தே அவள் எதுவோ பேச நினைக்கிறாள் என்று புரிந்து கொண்டவன் “என் கிட்ட ஏதாவது சொல்லணுமா?”, என்று கேட்டான்.
“ஆமா”
“என்ன சொல்லு?”
“என்னோட நகையை ஏன் நீங்க உங்க தேவைக்கு எடுத்துக்கலை? நான் உங்களுக்கு கொடுக்க கூடாதா?”
“அப்பா பணம் தந்துட்டாங்க. அதனால அது தேவைப் படலை. மத்தபடி வேற காரணம் எல்லாம் இல்லை”
“ஹிம் அப்புறம், வீட்டு வேலை எல்லாம் அத்தை தான் செய்யுறாங்க. அதைப் பாக்க கஷ்டமா இருக்கு. நான் செய்யட்டுமா? இது நம்ம வீடு தானே? நான் செஞ்சா என்ன?”
“வேண்டாம், அப்புறம் உனக்கு தான் கஷ்டம்”
“அப்படின்னா ஒரு வேலைக்காரி மட்டும் போடுங்க. அவ கூட சேந்து நான் எல்லா வேலையும் பாத்துக்குறேன். இனி எந்த பிரச்சனையும் வராது. அத்தை எதுவும் சொல்ல மாட்டாங்க. தேவையில்லாம பிரச்சனையை வளக்க வேண்டாமே?”
“சரி உனக்கு என்ன தோணுதோ செய். நான் அப்பா கிட்ட சொல்லி பழைய வேலைக்காரியை வரச் சொல்றேன்”
“சரி”, என்று சொல்லி விட்டு அவள் படுத்து விட அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளிடம் மனது விட்டு பேசினால் வாழ்க்கை சரியாகி விடுமோ என்று அவனுக்கு தோன்றியது. “சுஜி விசயத்துல நீ மாறினா மட்டும் தான் டா, உங்க வாழ்க்கை நல்லா போகும்”, என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டு படுத்து விட்டான்.
அடுத்த ஒரு வாரம் கழித்து ஒரு நாள் சமையல் அறையில் நின்றிருந்தாள் சுஜி. “சுஜி எனக்கு கொஞ்சம் வெண்ணி வச்சுத் தரியா? கால் ரொம்ப வலிக்குது. அதுல கொஞ்ச நேரம் காலை வச்சா நல்லா இருக்கும்”, என்று கேட்டாள் மல்லிகா.
“இதோ வச்சித் தரேன்”, என்று சொல்லி வெந்நீர் வைத்தாள். அப்போது இரவு உணவுக்காக சப்பாத்தி வேறு உருட்டிக் கொண்டிருக்க வெண்ணியை எடுக்க வந்த மல்லிகா அவள் சப்பாத்தி உருட்டுவதைப் பார்த்து “வெண்ணி கொதிச்சிருச்சு. நீ சப்பாத்தியை உருட்டு. நான் எடுத்துக்குறேன்”, என்று சொல்லி பாத்திரத்தை எடுத்தாள். அப்போது பாத்திரம் அவள் கையில் இருந்து நழுவி விட அந்த வெந்நீர் அப்படியே சுஜியின் காலில் கொட்டியது.
“அம்மா”, என்ற அவளின் அலறலில் பதறி அடித்துக் கொண்டு வந்தான் புவி. மற்றவர்களும் அங்கே வந்து விட்டார்கள். “தெரியாம சுஜி கால்ல வெண்ணியைக் கொட்டிட்டேன் டா”, என்று பதட்டத்துடன் சொன்னாள் மல்லிகா. தான் வேண்டும் என்றே செய்து விட்டோம் என்று அவன் எண்ணுவானோ என்று மல்லிகாவுக்கு பயமாக இருந்தது.
அன்னையை கண்டு கொள்ளாமல் “ஒரு நிமிஷம் பொறுத்துக்கோ சுஜி”, என்று சொன்ன புவி அவளைத் தூக்கிக் கொண்டு சோபாவில் அமர வைத்து கீழே அமர்ந்து அவள் காலைப் பார்த்தான்.
லேசாக கன்றிப் போய் இருக்க ஏதோ ஒரு மருந்தை எடுத்து வந்த பாரி “சுஜிக்கு இதை போட்டு விடுப்பா”, என்று கொடுத்தார்.
அவன் மருந்தைப் போட்டு விட வலி தாங்க முடியாமல் அழுதாள் சுஜி. அப்போது “மா”, என்று பவியின் குரல் கேட்டதும் அடுத்த நொடி முகத்தை சாதாரணமாக மாற்றி மகளுக்கு தெரியாமல் கண்ணீரைத் துடைத்து விட்டு மருந்து போட்டுக் கொண்டிருந்தவனையும் கவனிக்காமல் “பாப்பு எழுந்துட்டீங்களா? அம்மா கிட்ட வாங்க”, என்று சொல்லி மகளைத் தூக்கி மடியில் வைத்துக் கொண்டாள்.
“ம்ம்”, என்று சொல்லி பிள்ளை சிரிக்க “சரி குட்டிக்கு நைட் சாப்பிட என்ன வேணும்? இட்லயா கஞ்சியா?”, என்று மகளிடம் கொஞ்சலுடன் கேட்க அனைவரும் அவளை திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவ்வளவு வலியைத் தாங்கிக் கொண்டு அவள் பிள்ளையிடம் இயல்பாக பேச மல்லிகாவே அவளை பிரம்மிப்பாக பார்த்தாள்.
“நேக்கு குட்டி குட்டி தோசை தான் வேணும்”, என்றாள் பவித்ரா.
“கொடுத்துட்டா போச்சு? அம்மா சுட்டுத் தருவேனாம்? பட்டு சாப்பிட்டுகிட்டே இருப்பாளாம். இப்ப ஓடி போய் லேசா உடம்பைக் கழுவிட்டு வந்துருலாமா?”, என்று கேட்க சரி என்று தலையாட்டியது அந்த மொட்டு.
சுற்றி இருந்த அனைவரும் அவர்களையே பார்க்க அவர்களோ அங்கே யாரும் இல்லாதது போல தனித் தீவில் இருந்தனர். புவிக்கு தானும் அவர்களுடன் இணைய வேண்டும் போல் என்று ஆசையாக இருந்தது.
“எப்படி இவளால் சட்டென்று அனைத்தையும் கடக்க முடிகிறது?”, என்று வியப்பாக இருந்தது அனைவருக்கும்.
பிள்ளையே முக்கியம் என்பது போல அவள் அறைக்குள் சென்று விட மற்றவர்கள் அவள் போன பின்னும் அவள் போன பாதையையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
ஏதோ தான் மட்டும் தனியாகிப் போனது போல ஒரு உணர்வு மனதுக்குள் எழ காற்று வாங்க மொட்டை மாடிக்குச் சென்றான் புவி. மனைவியை நினைத்து அவன் மனதில் பல ஏக்கங்கள் உருவானது. அப்போது வெண்ணிலா அவனை அழைத்தாள்.
“சொல்லு வெண்ணிலா, எப்படி இருக்க?”
“நல்லா இருக்கேண்ணா. அங்க எல்லாரும் எப்படி இருக்காங்க?”
“எல்லாரும் நல்லா இருக்காங்க. உன் பிரண்டுக்கு தான் கால்ல வெண்ணி கொட்டிருச்சு”
“ஐயையோ என்ன ஆச்சு? அவ பாவம். ரொம்ப புண்ணாகிருச்சா?”
“மருந்து போட்டுருக்கு. கொஞ்ச நேரம் கழிச்சு தான் தெரியும். அப்புறம் அவ ஒண்ணும் பாவம் இல்லை. பவியைப் பாத்ததும் காயத்தை மறந்து என்னை மறந்து போயிட்டா”, என்று மனத்தாங்களுடன் சொன்னான் புவி.
அண்ணனின் மனது தெளிவாக புரிய “உன் பொண்டாட்டியும் பிள்ளையும் எங்கயும் போய்டலை அண்ணா. உனக்காக உன்னோட ரூம்ல தான் நீ எப்ப வருவேன்னு வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. நீ தான் அவளை புரிஞ்சிக்கலை”, என்றாள்.
“ப்ச் வாழ்க்கையே பிடிக்கலை. என்னவோ போல இருக்கு. எதையோ இழந்துட்டா போல இருக்கு வெண்ணிலா”
“அதான் சொல்றேனே எதுவும் உன் கையை விட்டு போகலைன்னு. நீ தான் சுஜியைப் புரிஞ்சிக்கலை. அவ கிட்ட மனசு விட்டு பேசுண்ணா”
“எந்த முகத்தோட அவ கிட்ட பேச? ஏற்கனவே ஒரு தடவை அவளை கஷ்டப் படுத்திட்டேன். திருப்பியும் என்னால அவளை நோகடிக்க முடியாது”
“நீ எவ்வளவு பெரிய கஷ்டம் கொடுத்தாலும் அவ அதை சந்தோஷமா தான் ஏத்துக்குவா. ஏன்னா அவளுக்கு உன் மேல அந்த அளவுக்கு பைத்தியம்”
“அட போ மா, சும்மா கதை சொல்லிக்கிட்டு”
“நான் சத்தியமா தான் சொல்றேன். அவளுக்கு நீன்னா உயிர்”
“என்ன கிண்டலா? அவ வந்து உன் கிட்ட சொன்னாளாக்கும்? சும்மா விளையாடாதே வெண்ணிலா”
“அவ மனசுல நீ இல்லாமலா அவ உன்னைக் கல்யாணம் பண்ணிருக்கா?”
“அது அவங்க வீட்ல சொன்னதுனால இருக்கலாம். இல்லைன்னா எங்க அண்ணனுக்கு வாழ்க்கை கொடுன்னு நீ கெஞ்சிருப்ப”
“ஐயோ அண்ணா, இன்னும் பத்து வருசத்துக்கு பிறகு நீ இந்த கதையை எல்லாம் கேக்க கூடாது? சுஜி உன்னை லவ் பண்ணுற விஷயம் தெரிஞ்ச பிறகு தான் நான் அவளை உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும்னே நினைச்சேன்”
“என்ன சொல்ற நீ?”
“மேடம்க்கு முதல் முறை உன்னை காலேஜ்ல பாத்ததுல இருந்து லவ்வோ லவ். நீ என்னை காலேஜ்ல விட வரும் போது எல்லாம் உன்னை சைட் அடிச்சிருக்கா. இதை கண்டு பிடிச்சு சொன்னது மைதிலி. அப்புறம் மைதிலியும் நானும் பிளான் போட்டு மதன் அத்தான் கிட்ட பேசி அவங்க வீட்ல பேசச் சொன்னோம். மதன் அத்தான் பேசினதுக்கு அவங்க அப்பா அம்மா திட்ட உன் பொண்டாட்டி என்ன கேட்டா தெரியுமா?”
“என்ன கேட்டா?”, என்று ஆவலுடன் கேட்டான்.
“அவங்க நாளைக்கு பொண்ணு பாக்க வரும் போது என்ன டிரஸ் போடட்டும்னு கேட்டாளாம்? கல்யாணத்துக்கு பிறகு நீ பேசலைன்னு அவ அழுத அழுகை எனக்கு தான் தெரியும். ஆனா பவி பிறந்த பிறகு எல்லாம் சரியாப் போகும்னு நினைச்சேன். ஆனா இன்னும் எதுவும் சரியாகலை போல?”
“வெண்ணிலா நீ சொல்றது எல்லாம் நிஜமா?”, என்று பரவசத்துடன் கேட்டான்.
“அண்ணா எல்லாம் சத்தியமான உண்மை? இனிமேலாவது நீ அவளை சரியா புரிஞ்சிக்கப் பாரு. அப்புறம் சீக்கிரம் எனக்கு ஒரு மருமகனைப் பெத்துக் கொடு. இப்ப அவ கிட்ட போய் பேசு”, என்று சொல்லி போனை வைத்தாள்.
புவியின் உதடுகள் புன்னகையால் மலர்ந்தது. ஏதோ டீனேஜ் பையன் போல அவனது நாடி நரம்புகள் எல்லாம் மனைவிக்காக துடித்தது. அவசரமாக அவளை காண அறைக்குச் சென்றான். அவள் அங்கே இல்லை. அவளைத் தேடினான். தோட்டத்தில் பவித்ராவுக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தாள். அவசரமாக அங்கே சென்று மறைவாக நின்று கொண்டான்.
“மா கத சொல்லு”, என்றாள் பவித்ரா.
“அம்மா ராஜா ராணி கதை சொல்லட்டா பாப்பு?”
“அது வேண்டாம்”
“அப்ப ஹீரோ கதை சொல்லட்டா?”
“ம்ம்”
“சரி சொல்றேன், ஆ வாங்கிக்கோ”, என்று அவளுக்கு ஒரு வாய் ஊட்டியவள் குழந்தைக்கு கதை சொல்ல ஆரம்பித்தாள்.
“ஒரு ஊர்ல ஒரு ஹீரோ இருந்தார் டா அம்மு. அவர் எப்படி இருப்பார் தெரியுமா? அப்படியே உங்க அப்பா மாதிரி வளத்தியா, அழகான மீசை வச்சு ரொம்ப அழகா இருப்பார். அவர் சிரிச்சா எப்படி இருக்கும் தெரியுமா?”, என்று சுஜி ஆரம்பிக்க மனைவியின் தன்னைப் பற்றிய ரசனையில் புவிக்கு உடல் சிலிர்த்தது.