பிடித்தம் 21
புகழ்வேந்தனின் வண்டி வந்ததும் காவலாளி வேகமாக வண்டி அருகே விரைந்தான். வண்டியின் கண்ணாடியை இறக்கிய புகழ்வேந்தன் பார்த்த பார்வையிலேயே அந்த காவலாளி சிறு பயத்துடன், “எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டிக்கிறார் சார்.. சின்னம்மாவை பார்த்துட்டு தான் போவேன் னு பிடிவாதம் பிடிக்கிறார்”
“இந்த முறை மட்டும் அவனை உள்ளே விடு” என்ற புகழ்வேந்தன் வண்டியின் கண்ணாடியை ஏற்ற,
அந்த காவலாளி விரைந்து சென்று வெளிக்கதவை திறந்தபடி பிரசாத்தை பார்த்து, “இந்த ஒரு முறை மட்டும் உள்ளே விட சார் சொன்னாங்க” என்றான் சிறு முறைப்புடன்.
கதவு திறந்ததும் புகழ்வேந்தனின் வண்டி வேகமாக உள்ளே சென்றது. இவனது வண்டி சத்தத்தில் கலைவாணி வெளியே வர புகழ்வேந்தன், “ராணி இன்னும் கொஞ்ச நேரத்தில் வந்திருவா மா” என்று கூறி திரும்ப பிரசாத் முறைத்தபடி இவன் அருகே வந்தான்.
புகழ்வேந்தன் அலட்சியத்துடன் பார்க்க, பிரசாத் கோபத்துடன், “மித்துவை பார்க்கணும்” என்றான்.
“எதுக்கு?”
“எனக்கும் மித்துவுக்கும் நடுவில் வர நீ யாரு டா?” என்று குரலை உயர்த்தி எகிறிக் கொண்டு வர, தோட்டக்காரன் பிரசாத்தை பிடிக்க வர, புகழ்வேந்தனின் மறுப்பான பார்வையில் தோட்டக்காரன் அப்படியே நின்றான். பிரசாத்தின் குரலில் இன்னும் சில வேலையாட்கள் கூட வெளியே வந்தனர்.
அப்பொழுது மித்ராணி ஆட்டோவில் இருந்து இறங்கியபடி பைகளை ஆட்டோவில் இருந்து எடுத்துக் கொண்டிருக்க, வெளி கதவின் அருகே இருந்த சிறு கூண்டு போன்ற அறையில் இருந்த காவலாளி வேகமாக கதவை திறந்துவிட்டு அவள் அருகே சென்று, “நீங்க உள்ளே போங்க மா நான் எடுத்துட்டு வரேன்” என்றான்.
அவள் நிமிர்ந்து பார்க்கவும் அவன் மீண்டும், “நான் எடுத்துட்டு வரேன் மா” என்றான்.
‘பார் டா! எக்ஸ்ப்ளைன் பண்ற வேலை நமக்கு மிச்சம்.. ஹ்ம்ம் எல்லாத்தையும் பக்காவா பிளான் பண்ணுவான் போல! (greenspringsschool.com) ’ என்று மனதினுள் நினைத்துக் கொண்டவள் தனது வியப்பை வெளியே காட்டிக்கொள்ளாமல் சிறு தலை அசைப்பை பதிலாக தந்தாள்.
அவள் டேவிட் அருகே சென்று அவனது கைபேசியை கொடுத்தபடி, “தப்பிச்சிட்ட” என்றுவிட்டு நகர, காவலாளி வேகமாக பைகளை எடுத்துக் கொண்டு அவள் பின்னால் சென்றான்.
டேவிட் கைபேசியை இயக்கி புகழ்வேந்தனை அழைக்க, அவன் எடுக்கவில்லை என்றதும் சிறிது நேரம் கழித்து அழைத்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் மித்ராணி உள்ளே சென்றதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்துக் கொண்டு கிளம்பினான்.
எகிறிய பிரசாத்தை தனது ஒற்றை கையால் வெகுசுலபமாக தள்ளி நகர்த்திய புகழ்வேந்தன், “நான் யாரு னு உனக்கு சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை இருந்தாலும் சொல்றேன் நான் மித்ராணிக்கு தாலி கட்டிய கணவன்”
“அதை அவள் வந்து சொல்லட்டும்”
புகழ்வேந்தன் புருவ சுளிப்புடன் அவனைப் பார்க்க, பிரசாத், “என்ன பார்க்கிற! தாலி கட்டிட்டா நீ அவள் கணவன் ஆகிடுவியா? மித்துக்கு கேட்க ஆள் இல்லை னு நினைச்சியா? நான் இருக்கிறேன் டா.. மித்துவை கூட்டிட்டு போக தான் நான் வந்தேன்.. கூட்டிட்டு போய் அவளை………………………..” அடுத்த அவர்த்தை உச்சரிக்க முடியாமல் மூச்சுக்கு திணற ஆரம்பித்தான்.
ஏனெனில் அவ்வளவு அழுத்தமாக பிரசாத்தில் குரவளையை நெருக்கிப் பிடித்திருந்தான் புகழ்வேந்தன்.
ருத்ரமூர்த்தியாக நின்றிருந்த புகழ்வேந்தன் அருகே செல்ல பயந்தவர்களாக அடுத்து என்ன நடக்குமோ என்ற பதைப்புடன் அனைவரும் நின்றனர்.
கலைவாணி வேகமாக புகழ்வேந்தன் அருகே சென்று, “அவனை விடு புகழ்” என்றபடி அவனது கையை அகற்ற முயற்சித்தார்.
இந்த நொடியில் தான் மித்ராணி உள்ளே நுழைந்தாள். பிரசாத் இங்கே எங்கே வந்தான் என்ற யோசனையுடனும் புகழ்வேந்தனின் முகத்தில் தெரிந்த கோபத்தை சிறு அதிர்ச்சியுடனும் பார்த்தபடி நின்றாள்.
அன்னையின் குரலிலும் செயலிலும் கையின் அழுத்தத்தை குறைத்த புகழ்வேந்தன், “யாரோட மனைவியை யார் கூட்டிட்டு போறது! புதைச்சிருவேன்!” என்றபடி கையை எடுத்தான்.
மித்ராணியின் ஆழ் மனதினுள் புகழ்வேந்தனின் ஆளுமை பதிந்ததை அவள் உணரவில்லை. புகழ்வேந்தனின் ருத்ரதாண்டவத்தை கண்டு ‘இவனுக்கு இவ்வளவு கோபம் வருமா? என் மேல் இவ்வளவு உரிமையா? ஒரே நாளில் அதுவும் சில மணி நேரத்தில் இவ்வளவு உரிமை வருமா? என் மேல் தனிப்பட்ட உரிமையா இல்லை அவனது மனைவி என்ற இடத்தில இருக்கும் பெண்ணின் மேல் வந்த உரிமையா? முதல்ல இது உரிமை உணர்வால் வந்த கோபமா இல்லை அவனோட கௌரவம் தாழ்ந்திடக் கூடாதே னு வந்த கோபமா?’ என்ற ஆராய்ச்சி கலந்த அதிர்ச்சியுடன் நின்றிருந்தாள்.
பிரசாத் தடுமாறி பின் சரியாக நிற்க, புகழ்வேந்தன் கோபத்துடன், “அப்பன் புத்தி அப்படியே இருக்குது.. ஆனா ஏமாந்து துவண்டு நிற்க நான் லக்ஷ்மணன் இல்லை புகழ்வேந்தன் டா! உங்க கொட்டத்தை அடக்கி நடுத்தெருவில் நிற்க வைப்பேன் டா”
தொண்டையை பிடித்துவிட்டபடி பிரசாத், “கத்தி முனையில் கட்டாய கல்யாணம் பண்ணிட்டு என்னவோ யோக்கியன் மாதிரி பேசுற!” என்று அப்பொழுதும் சீறினான்.
‘தனக்காக இங்கே வந்து சண்டை போடும் அளவிற்கு பிரசாத்திற்கு தன் மேல் இவ்வளவு பாசம் இருக்கிறதா?’ என்ற சிறு அதிர்ச்சியுடன் பார்த்தவள் மனதினுள், ‘இவ்வளவு நேரம் எங்கே இருந்தான்? என்னோட நிலைமைக்கு காரணம் இவனோட அப்பா தானே!’ என்ற கோபமும் எழுந்தது. இப்பொழுதும் அவள் பிரசாத்திற்கு தன் மேல் இவ்வளவு பாசமா என்று தான் யோசித்தாளே தவிர அவன் தன்னை காதலிக்கிறான் என்று யோசிக்கவில்லை.
புகழ்வேந்தனும் குறையாத கோபத்துடன், “ஆமா டா நான் கட்டாய கல்யாணம் பண்ணிக்கிட்டேன் தான் ஆனா அதில் எந்த கெட்ட எண்ணமும் இல்லை.. என்னோட குறி உன் அப்பன் தான்.. அவனுக்கு பையனா பொறந்ததால் நீயும் உன் அண்ணனும் இதில் சிக்கிட்டீங்க.. ஆனா பாவம் னு சொல்ற அளவுக்கு நீயும் உன் அண்ணனும் பெருசா நல்லவன்க இல்லையே!”
“சும்மா உதார் விடாத.. கெட்ட எண்ணம் இல்லை னா அப்படி என்ன டா நல்லது பண்ணிட்ட இந்த கட்டாய கல்யாணத்தின் மூலம்?”
“உன் குடும்பத்தில் இருந்து அவளை விலக்கியதே அவளுக்கு செய்த பெரிய நன்மை தான்” என்றான் நக்கல் குரலில்.
“டேய் வேணாம்” என்று பிரசாத் மீண்டும் எகிற,
[the_ad id=”6605″]
புகழ்வேந்தன் அலட்டிக்கொள்ளாமல், “சும்மா இங்கே வந்து சவுண்ட் விடாம என்னோட பதிலடியை எப்படி சமாளிக்கிறது னு போய் யோசி” என்றபடி நகரப் போக அப்பொழுது தான் மித்ராணியை கவனித்தான்.
அவளை கண்டதும் ஹார்மோன்கள் ஹார்மோனியம் வாசித்தாலும் வெளியே எதையும் காட்டிக்கொள்ளாமல் அவளை அமைதியாக பார்த்தான். அவளும் அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது பார்வையில் வெறுப்பும் கோபமும் இல்லாமல் அவனை ஆராயும் பார்வை இருக்கவும் அவன் உதட்டோர சின்ன புன்னகையுடன் கண்ணடித்தான். அவள் அவனை முறைக்க அவன் சற்று விரிந்த புன்னகையுடன் மீண்டும் கண்ணடித்தான்.
அவள் அவனது கண்ணை நோக்கி கையில் இருந்த கைபேசியை எரிய, அதுவோ கண்கள் ஒளிர அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்த பிரசாத்தின் கண்ணின் மீது பட்டது.
“ஆ” என்று பிரசாத் அலற, புகழ்வேந்தன் வாய்விட்டு சிரித்தான்.
மித்ராணியின் கவனம் புகழ்வேந்தனிடம் இருந்ததால் பிரசாத்தின் ஒளிர்ந்த முகத்தை அவள் கவனிக்கவில்லை.
மித்ராணி பிரசாத்திடம் கோபத்துடன், “நீ எதுக்கு நடுவில் வந்த?” என்று கூற,
பிரசாத் அருகே இருந்த புகழ்வேந்தன் அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில், “எனக்கும் ராணிக்கும் நடுவில் வர முயற்சி செய்ததால் ராணியிடம் இருந்தே அடியும் திட்டும் கிடைச்சிருச்சு” என்றான்.
கண்ணை கசக்கிய பிரசாத் புகழ்வேந்தனை முறைத்தபடி, “மித்து வா போகலாம்” என்றான்.
மித்ராணி யோசனையுடன் பிரசாத்தை பார்க்க, இப்பொழுது புகழ்வேந்தனின் பார்வை மித்ராணியிடம் இருந்தது.
மித்ராணி முகத்தை பார்த்த பிரசாத், “மித்து இவன் கட்டிய தாலியை இவன் முகத்திலேயே தூக்கி எறிஞ்சிட்டு வா” என்றான்.
புகழ்வேந்தன் தாடை இறுக கை முஷ்டியை இறுக்கமாக மூடியபடி நின்றிருந்தான். அந்த நொடி பிரசாத்தை புரட்டி போடும் அளவிற்கு கோபம் இருந்தாலும் மித்ராணி என்ன நினைக்கிறாள் என்பதை அறியவே அவன் கோபத்தை அடக்கியபடி நின்றிருந்தான்.
ஒரு நொடி புகழ்வேந்தனை பார்த்தவள் பின் கைகளை கட்டிக் கொண்டு தீர்க்கமான பார்வையுடன் பிரசாத்தை நோக்கி கோபத்தை அடக்கிய குரலில், “வந்து?” என்றாள் கேள்வியாக.
மித்ராவின் குரலில் மறைந்திருந்த கோபத்தை உணர்ந்த புகழ்வேந்தனின் மனம் குளிர்ந்தது ஆனால் அவளது கோபத்தை உணராத பிரசாத், “உன் விருப்பம் இல்லாம நடந்த இந்த கல்யாணம் கல்யாணமே இல்லை………………”
“ஓ!” என்றவள் பின் கோபத்துடன், “நான் என்ன நீங்க ஆட்டி வைக்கும் பொம்மை னு நினைச்சியா? கல்யாணம் பண்ணு னு சொன்னா பண்றதுக்கும், இது கல்யாணம் இல்லை கிளம்பி வா னு சொன்னா வரதுக்கும் என் வாழ்க்கை என்ன உங்களுக்கு விளையாட்டு பொருளா?”
“இல்லை மித்து நான் அப்படி நினைக்கலை.. நான் உனக்காக தான்.. உனக்கு விருப்பம் இல்லாமா………….”
“அப்போ கல்யாணம் நடக்கிறது முன் அதை தடுத்து நிறுத்தி இருக்க வேண்டியது தானே? அப்பலாம் எங்கேயோ இருந்துட்டு இப்போ இங்கே வந்து எதுக்கு குதிச்சிட்டு இருக்க?”
“நான் அங்கே இருந்து இருந்தால் நிச்சயம் இந்த கல்யாணம் நடந்து இருக்காது.. நீ இவனை தூக்கி போட்டுட்டு வா மித்து.. நான் உன்னை கல்யாணம் பண்ணி உன்னை நல்லா பார்த்துப்பேன்” என்று அவன் தவிப்புடன் கூற,
பிரசாத்தின் முகத்திலும் குரலிலும் தெரிந்த தவிப்பில் மித்ராணி அவனை யோசனையுடன் பார்த்தாள்.
அதற்கு மேல் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் புகழ்வேந்தன் அங்கிருந்து நகர, நகரும் முன் அவன் பார்த்த பார்வையில் வேலையாட்கள் அனைவரும் விலகி சென்றனர். காவலாளி கையில் இருந்த பைகளை வேலை செய்யும் பெண்ணிடம் கொடுத்துவிட்டு தன் இடத்திற்கு சென்றான்.
கலைவாணி தான் குழம்பி போனார். மகன் பின்னால் செல்வதா இல்லை மருமகளுக்காக நிற்பதா? தான் இங்கேயே நிற்பதை மித்ராணி விரும்புவாளா இல்லை விலகிச் சென்றால் தனிமையாக உணர்வாளா? என்று குழம்பினார்.
புகழ்வேந்தன் சென்றதையும், அவன் செல்லும் முன் பார்வையாலேயே வேலையாட்களை அகற்றியதையும் கவனித்தவள் கலைவாணி இருக்கிறாரா இல்லையா என்பதை கவனிக்கவே இல்லை. ஏனெனில் அவரது இருப்பை அவள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மித்ராணி கூர் விழிகளுடன் பிரசாத்தை நோக்கி, “இது அத்தை மகள் என்ற பாசமா இல்லை அதுக்கும் மேலயா?”
“இது பாசத்துக்கும் மேல.. நான் உன்னை……………..”
பிரசாத்தின் பேச்சை கையை உயர்த்தி நிறுத்திய மித்ராணி, “கல்யாணம் நடக்கிறதுக்கு முன் சொல்ல வேண்டியதை இப்போ சொல்ற” என்றாள் இறுகிய குரலில்.
“அதுக்கு முன்னாடி மனோஜ் முந்திட்டானே!”
“ஸோ உன் அண்ணனை…………….”
“நீ மனோஜை விரும்பலை னு எனக்கு தெரியும்.. உன்னிடம் பேச வந்தேன் ஆனா.. ப்ச்..” என்று சலிப்புடன் நிறுத்தியவன் இயலாமை தந்த கோபத்துடன் கை முஷ்டியை மூடி தன் தொடையின் மீதே குத்தினான்.
பின், “உன் மாமா மட்டும் என்னை கடத்தாம இருந்து இருந்தால் இந்நேரம் நீ என் மனைவியா இருந்து இருப்ப” என்று கத்தினான்.
‘இவன் என்ன சொல்றான்!’ என்ற யோசனையுடன் அவனை பார்த்தவள், “அவர் ஏன் உன்னை கடத்தினார்?”
“அது..”
“சொல்லு” என்று அவள் கேட்ட தொணி ‘நீ சொல்லியே ஆகணும்’ என்று சொல்லியது.
பிரசாத், “மனோஜை கடத்திட்டு கடைசி நேரத்தில் நான் உன்னை கல்யாணம் செய்ய பிளான் பண்ணேன் அதான்”
“ஸோ நீயும் என் கல்யாணத்தை நிறுத்துற முடிவில் தான் இருந்து இருக்க! உனக்கும் வேந்தனுக்கும் என்ன வித்யாசம்?”
“நானும் அவனும் ஒன்னா?” என்று அவன் சிலிர்த்துக் கொண்டு வர,
அவளோ நிதானமான குரலில், “நிச்சயம் இல்லை.. உங்களை போல் முதுகில் குத்த அவனுக்கு தெரியாது”
“மித்து!!” என்று அவன் அதிர்வுடன் குரலை உயர்த்த, அவள் அமைதியாக நின்றிருந்தாள்.
பிரசாத், “அதுக்குள்ளேயே கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் னு இப்படி நீ மாறுவ னு நான் நினைக்கலை” என்று நக்கலுடன் கூற,
‘உண்மையை சொன்னா அவனுக்கு சப்போர்ட் பண்றதா அர்த்தமா! உனக்கெல்லாம் புரியாது.. உன்னிடம் பேசுவதே வேஸ்ட்..’ என்ற நினைப்புடன் அவனை அமைதியாக பார்த்து, “வேற எதுவும் சொல்லணுமா?” என்றாள்.
“மித்து இந்த கட்டாய கல்யாணத்தை நீ ஏத்துக்கிறியா?” என்று அப்பொழுதும் அவன் விடாமல் வினவ,
“என்னை பொறுத்தவரை கல்யாணம் ஒருமுறை தான்” என்றவள் வாயில் கதவை நோக்கி கையை காட்ட பிரசாத் கசங்கிய உள்ளத்துடன் கிளம்பினான்.
புகழ்வேந்தனுக்கு ஆதரவாக மித்ராணி பேசியதை கேட்டு ஆச்சரியத்துடனும், திருமணத்தை பற்றி அவள் இறுதியாக கூறியதில் சிறு நிம்மதியுடனும் நின்றிருந்த கலைவாணி அருகே வந்த மித்ராணி, “ஹெலோ ராஜமாதா ரொம்ப சந்தோஷப் படாதீங்க! கல்யாணம் ஒருமுறை தான் னு சொன்னேனே தவிர இந்த கல்யாணத்தை ஏத்துக்கிட்டதா சொல்லலை..” என்றுவிட்டு உள்ளே செல்ல திரும்ப, கலைவாணி மீண்டும் ‘ஆண்டவா!’ என்று மனதினுள் அலறும் நிலைக்கு தள்ளப்பட்டார்.
சரியாக மித்ராணி வீட்டினுள் காலை வைக்க போகும் கடைசி நொடியில் அதிர்ச்சியில் இருந்து வெளிவந்த கலைவாணி, “ஒரு நிமிஷம் மா” என்றார் அவசரமாக.
அவள் திரும்பி பார்க்க, அவர், “இதோ வந்திடுறேன்” என்றபடி வேகமாக வீட்டின் உள்ளே விரைந்தார்.
இண்டர்காமில் புகழ்வேந்தனை அழைத்து, “உடனே கீழே வா” என்றவர் அவனது பதிலை எதிர்பார்க்காமல் தொடர்பை துண்டித்து இருந்தார். பின் சமையல் செய்பவரை அழைத்து, “சீக்கிரம் ஆரத்தி எடுத்துட்டு வாங்க” என்றார்.
கலைவாணி சிறு பதற்றத்துடன் வாசல் பக்கம் செல்ல, அங்கே மித்ராணியோ, ‘அவங்க சொன்னாங்க னு நாம ஏன் வெயிட் பண்ணனும்? உள்ளே போய்டலாமா?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
கலைவாணி, “ஒரே ஒரு நிமிஷம்” என்று கெஞ்சும் குரலில் கூற, ஏனோ அவளுக்கு அதை மீறத் தோன்றவில்லை.
புகழ்வேந்தன் கீழே வரவும் கலைவாணி, “மித்ரா கூட போய் நில்லு” என்றார்.
மித்ராணி, “மண்டபத்தில் இருந்து நேரா இங்கே வந்திருந்தால் என்ன செய்து இருப்பீங்க?”
“அப்பவும் ரத்னாமா உனக்கு ஆரத்தி எடுத்து இருப்பாங்க” என்றதும் அவள் அமைதியாகிவிட, புகழ்வேந்தன் அமைதியாக அவள் அருகில் நின்றான்.
சமையல்காரம்மா ஆரத்தியை கலைவாணியிடம் நீட்ட, அவரோ தனது கயமை நிலையை கருத்தில் கொண்டு, “நீங்களே எடுங்க” என்றார்.
அதை புரிந்துக் கொண்ட மித்ராணி, “ராஜமாதாவிற்கு என் வருகையில் விருப்பம் இல்லையோ!”
கலைவாணி அவசரமாக, “அப்படி இல்லை மா” என்று கூற,
அவள், “அப்போ நீங்களே ஆரத்தி எடுங்க” என்றாள்.
அவர், “இல்ல.. அது..” என்று தயங்க,
அவள், “ஆசிர்வதிக்கிற மனசு தான் முக்கியம்” என்றதும் அவர் சிறிது கலங்கிய விழிகளுடனும் மெல்லிய புன்னகையுடனும் ஆரத்தி எடுத்து, “ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு அன்புடன் சந்தோஷமா இருங்க” என்று வாழ்த்தி திலகமிட்டார்.
அவரது வாழ்த்தை கேட்டு வாய்விட்டு சிரித்தபடி மித்ராணி உள்ளே நுழைந்தாள்.
புகழ்வேந்தன் மெல்லிய குரலில், “நீ எதை நினைச்சு சிரிக்கிற னு எனக்கு புரிது.. எது எப்படியோ சிரிச்சிட்டே சந்தோஷமா தான் நீ நம்ம வீட்டினுள் நுழைந்து இருக்கிற” என்று கூற,
தலை சரித்து அவனை நோக்கியவள், “ஆனா நீ சிரிச்சிட்டே உள்ளே வரலையே! ஸோ” என்று நிறுத்தி உதட்டை பிதுக்கினாள்.
அவளது ஒவ்வொரு பாவங்களையும் ரசித்தவன் மென்னகையுடன் நகர, அவளும் அவனுடன் நகர்ந்தபடி, “வீட்டிற்கு வந்ததும் டென்ஷன் ஆகிட்ட போல” என்றாள் சிறு நக்கலுடன்.
அவனோ அலட்சிய பாவத்துடன் புருவம் உயர்த்தி, “நான் ஏன் டென்ஷன் ஆகணும்?”
“ஓ! அதான் எனக்கு அத்தனை முறை போன் பண்ணியா?” என்றவளின் குரல் உன் பதற்றத்தை நான் அறிவேன் என்று கூறியது.
அவனோ இப்பொழுதும் அதே குரலில், “மூனே மூன்று முறை தான் கூப்பிட்டேன்.. அது கூட அட்ரெஸ் கண்டுபிடிக்க முடியாம சுத்துறியோ னு தான்.. அப்பறம் தான் தெரிஞ்சுரிச்சே! மேடம் இங்கே வந்து இருக்க தயாராகிட்டு இருக்கிறீங்க னு”
“இங்கே வந்து இருக்க தயாரானேனா! நினைப்பு தான்” என்று அவள் நக்கலுடன் கூற,
அவனும் நக்கல் குரலில், “பின்ன எதுக்கு இவ்ளோ பர்சேஸ் பண்ணீங்க!” என்றபடி புருவம் உயர்த்த,
இப்பொழுது அவள் அலட்சியத்துடன், “நீ போட்ட டிரெஸ்ஸையே தான் திரும்ப போடுவியா!”
அவன் தோளை குலுக்க, அவள், “தோள் குலுக்குறது ஸ்டைல் லு நினைப்பா! பதில் சொல்ல தெரியாம ஓபி அடிக்கிற னு அர்த்தம்”
அவன் மென்னகையுடன், “அப்டீங்களா! சரி” என்று கூறிவிட்டு அன்னையை பார்த்து, “அம்மா எல்லோரையும் கூப்பிடுங்க” என்றான்.
கலைவாணி கூறும் முன் ரத்னா(சமையல் செய்பவர்) விரைந்து சென்று அனைவரையும் அழைத்து இருந்தார்.
அடுத்த இரண்டு நிமிடத்தில் வேலையாட்கள் அனைவரும் அங்கே குழுமி இருக்க, புகழ்வேந்தன் புன்னகையுடன், “இவங்க மித்ராணி இந்த வீட்டோட மகாராணி” என்றான்.
புகழ்வேந்தனின் புன்னகையை சிறு வியப்புடன் பார்த்தவர்கள் மகிழ்ச்சியுடன் மித்ராணியை வரவேற்று புன்னகையுடன் வணக்கம் வைத்தனர்.
[the_ad id=”6605″]
மித்ராணி சங்கோஜத்துடன் மெலிதாக சிரித்து தலையை ஆட்ட, புகழ்வேந்தனின் தலை அசைப்பில் அனைவரும் கலையத் தொடங்க, புகழ்வேந்தன், “ரத்னாமா ரத்தினம்ணா.. நீங்க இருங்க” என்றான்.
புகழ்வேந்தன் அவர்களை சுட்டிக்காட்டி, “இவங்க ரத்னாமா.. இவர் அவங்க கணவர் ரத்தினம் அண்ணா.. ஆதி காலத்தில் இருந்து நம்ம குடும்பத்துடன் இருக்கிறவங்க.. அதுவும் சுற்றார் உறவினர்கள் விலகிய நேரத்தில் இவங்க மட்டும் தான் உறுதுணையாக இருந்தாங்க.. இவங்களும் நம்ம குடும்பத்தில் ஒருத்தங்க தான்” என்றான்.
ரத்னா கலங்கிய கண்களுடன், “தம்பி” என்று அழைக்க,
ரத்தினமோ கலங்கிய கண்களை கட்டுப் படுத்தியபடி, “பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க தம்பி.. ஆனாதையா இருந்த எங்களை ஆதரித்து பசிக்கு சோறு போட்டு கௌரவத்துக்கு வேலை கொடுத்து கல்யாணம் செய்து வச்சது நம்ம பெரிய ஐயா தான்” என்றார்.
ரத்னாவிற்கு 56 வயது.. சமையல் செய்பவர். அவரது கணவர் ரத்தினத்திற்கு 60 வயது. அவரும் இங்கே தான் காரோட்டியாக இருக்கிறார். இவர்கள் இருவருக்கு மட்டுமே புகழ்வேந்தன் மற்றும் கலைவாணி பட்ட கஷ்டங்கள் யாவும் தெரியும். எந்த ஒரு சூழ்நிலையிலும் கலைவாணி மற்றும் புகழ்வேந்தனை விட்டு செல்லாமல் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள்.
புகழ்வேந்தன் அவர் கையை பற்ற, அவர், “நீங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருப்பீங்க தம்பி” என்று வாழ்த்திவிட்டு கண்களை துடைத்தபடி வெளியே சென்றார்.
ரத்னாவும், “இனி உங்க வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டும் தான் தம்பி.. ரெண்டு பேரும் நல்லா இருங்க” என்று வாழ்த்திவிட்டு சமையலறைக்கு சென்றார்.
அவர்கள் அகன்றதும் அவள், “என்ன பாதி பேச்சில் எஸ் ஆகுற!”
அவன், “சொல்லு”
“டென்ஷன் ஆகலைனா டேவிட்க்கு எதுக்கு அத்தனை முறை போன் பண்ண?”
அரை நொடி அதிர்ந்தவன் அதை காட்டிக் கொள்ளாமல், “ஸ்விட்ச் ஆப் ஆன மொபைலுக்கு திரும்ப திரும்ப கூப்பிட நான் என்ன லூசா?”
“டேவிட் மொபைலை பார்த்துட்டு தான் சொல்றேன்” என்றவளின் கண்கள் சிரிப்புடன் சாவாலிட,
சிறிதும் அலட்டிக்கொள்ளாமல், “நீ பிரசாத் கிட்ட பேசிட்டு இருந்தப்ப நான் டேவிட் கிட்ட பேசிட்டேன்” சொன்னவனின் கண்கள் முடிக்கும் போது சிரித்தது.
மித்ராணி டேவிட் கைபேசியை ஆராயவில்லை என்றாலும் யூகத்தில் தான் பேசிக் கொண்டிருந்தாள்.
மனதின் அதிர்வை மறைத்துக் கொண்டவள், “சரி அதற்கும் நீ லூசில்லை என்பதற்கும் என்ன சம்பந்தம்?”
“டேவிட் அவன் செல்லை அவன் தான் ஆன் பண்ணதா சொன்னான்”
“நான் செக் பண்ணிட்டு திரும்ப ஸ்விட்ச் ஆப் பண்ணி…………..”
புகழ்வேந்தன் வாய்விட்டு சிரிக்க, அவள் முறைப்புடன், “இப்போ எதுக்கு டா சிரிக்கிற?” என்றாள்.
“டேவிட் கிட்ட மட்டும் பேசலை.. அவனோட எம்.டி கிட்டயும் பேசினேன்.. டேவிட் செல் ஸ்விட்ச் ஆன் ஆன பிறகு திரும்ப ஸ்விட்ச் ஆப் ஆகலை.. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்றுவிட்டு தன் அறைக்கு செல்ல படி ஏற,
இவள் கோபத்துடன் அவனது முதுகை முறைத்தாள். மேலே ஏறியவன் திரும்பி நின்று மென்னகையுடன் அவளைப் பார்த்து கண்ணடித்துவிட்டே சென்றான்.
இவள் அதிகரித்த கோபத்துடன், “டேய் புலிகேசி! இரு டா” என்று முணுமுணுத்தாள்.
கலைவாணி, “கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுக்கிறியா மா” என்று அன்பான மெல்லிய குரலில் வினவ, அவன் மீது இருந்த கோபத்தை இவரிடம் காட்ட விரும்பாமல், “உங்க பையன் இந்த நேரத்தில் என்ன குடிப்பான்?” என்று கேட்டாள்.
புகழ்வேந்தனை அவள் ஏக வசனத்தில் ஒருமையில் பேசியதை கேட்ட வேலையாட்கள் முகத்தில் ஈயாடவில்லை. அவள் கலைவாணியை பன்மையில் அழைத்து பேசியதிலும் அவளது உடல் மொழியிலும் அவளை திமிர் பிடித்தவளாக நினைக்க தோன்றாமல் ‘அம்மாடி என்ன தைரியம்! அது சரி ஐயாவுக்கு ஏத்த மகராசியா இருக்கணும்னா இந்த தைரியம் இருக்கணும் தான்’ என்று தான் நினைக்கத் தோன்றியது.
மணியை பார்த்த கலைவாணி, “காபி குடிப்பான்” என்று யோசனையுடன் கூறினார்.
“கிட்சன்?” என்று அவள் கேள்வியாக நோக்க,
அவர் அமைதியாக கையை காட்டினார்.
சமையலறையினுள் அவள் செல்ல இவரும் பின்னால் சென்றார்.
உள்ளே சென்றதும், “ரத்னாமா பால், காபிப்பொடி, உப்பு எடுத்து கொடுங்க” என்றபடி அவள் பாத்திரத்தை எடுக்க,
அதட்டாமல் அமைதியான குரலிலும் ஆளுமையை கொண்டு வர முடியும் என்றதை மித்ராணி நிலைநாட்ட, ரத்னாவும் மனதினுள் அதை நினைத்தபடியே அவள் கேட்டதோடு சகக்ரையையும் சேர்த்து எடுத்துக் கொடுத்தார்.
ரத்னா சிறு தயக்கத்துடன், “சரியான அளவில் இல்லைனா தம்பி காபி குடிக்க மாட்டார்” என்று கூற,
மித்ராணி மென்னகையுடன், “இனி குடிப்பான்” என்றாள்.
சக்கரை டப்பாவை பார்த்தவள், “இது வேணாம்” என்றபடி அவர் கையில் கொடுத்தாள்.
அவர் திருதிருவென்று முழித்தபடி கலைவாணியை பார்க்க, அவரோ அமைதியாக மித்ராணியை பார்த்துக் கொண்டிருந்தார்.
புகழ்வேந்தனுக்கு எப்பொழுதுமே காபி அவனது விருப்பத்திற்கு ஏற்ப சரியாக இருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அதை அருந்த மாட்டான். அவனை சிறு வயதில் இருந்து பார்க்கும் ரத்னாவிற்கு அது நன்றாக தெரியும்.
புகழ்வேந்தனுக்கு காபி கலந்துவிட்டு திரும்பியவள் அப்பொழுது தான் அங்கே இருந்த கலைவாணியைப் பார்த்தாள்.
மித்ராணி, “எனக்கும் அவனுக்கும் நடுவில் நீங்க வரக் கூடாது” என்று கூற,
அவர் மென்னகையுடன், “இந்த விஷ பரீட்சை எல்லாம் அவனோட வச்சிக்கோ.. என் உடம்பு தாங்காது” என்றார்.
“என் கோபம் அவனிடம் தான்” என்றுவிட்டு காபியுடன் நகர்ந்தவள் பின் திரும்பி கலைவாணியை பார்த்து, “உங்க மேல் கோபமே இல்லை னு சொல்ல முடியாது.. அவனை தடுக்காததால் உங்க மேலயும் கோபம் இருக்குது” என்றாள்.
பெருமூச்சை வெளியிட்டவர், “அடிச்சு திருத்த அவன் என்ன சின்ன பிள்ளையா?” என்றார்.
“எத்தனை வயசானாலும் உங்களுக்கு பிள்ளை தானே! தப்பு செய்தால் அடிக்கலாம்” என்றுவிட்டு சென்றாள்.
[the_ad id=”6605″]
கலைவாணி மீண்டும் பெருமூச்சை வெளியிட அவர் தோளில் கைவைத்த ரத்னா, “எல்லாம் சரியாகிடும் மா.. குணசாலியா தான் தெரியுது.. கத்தி சண்டை போட்டு ஆர்பாட்டம் செய்யலையே.. விடுங்க…………..”
மறுப்பாக தலையசைத்த கலைவாணி, “கத்தி சண்டை போட்டிருந்தால் கூட பரவா இல்லை.. மித்ரா புகழ் மாதிரியே எதையும் நிதானமா யோசித்து காய் நகர்த்துர ரகம்.. இதே இது முதல்லேயே மனம் ஒத்து போயிருந்தா இவங்க தான் சிறந்த ஜோடி.. ஆனா இப்போ சண்டை போடுவதில் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் சளைத்தவர்கள் இல்லை.. பார்க்கலாம்… புகழ் மித்ராவை விரும்புறதால் எனக்கு நம்பிக்கை இருக்குது..”
ரத்னா மகிழ்ச்சியுடன், “தம்பி பாப்பாவை விரும்புதா மா?” என்று கேட்டார்.
மென்னகையுடன், “தாய் அறியா சூலா” என்றவர், “அவன் தம்பி இவ பாப்பா வா?” என்றார்.
ரத்னா சிரித்தார்.
மாடிக்கு சென்ற மித்ராணி ‘எந்த ரூம் னு கேட்காம வந்துட்டோமே!’ என்று யோசித்தவள் பின் தனது கைபேசியில் விடுபட்ட அழைப்பிற்கு சென்று யூகத்தில் அந்த புது எண்ணை அழைத்தாள். அவளது யூகம் சரியே என்பது போல் அழைப்பு சென்றதும் ஒரு அறையில் இருந்து மெலிதாக சத்தம் கேட்கவும் அந்த அறையின் கதவை தட்டினாள்.
“கதவு திறந்து தான் இருக்குது” என்ற குரலில் உள்ளே சென்று அவனிடம் காபியை நீட்டினாள்.
‘பார் டா! நம்ம பொண்டாட்டி காப்பியெல்லாம் கொண்டு வரா!’ என்று அவனது மனம் குத்தாட்டம் போட்டாலும் வாயோ, “உப்பு காபி நான் குடிக்க மாட்டேன்” என்றான்.
என்ன முயற்சித்தும் கண்களில் அதிர்ச்சியை அவளால் மறைக்க முடியாமல் போக அவன் உதட்டோர புன்னகையுடன், “ஸோ என் கெஸ் கரெக்ட்” என்றான்.
லேசாக உதட்டை சுளித்தவள், “நம்ம கல்யாணத்தை மதிக்கிறதா இருந்தா இதை குடி” என்றாள்.
ஒரு நொடி அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியவன் அமைதியாக காபி கோப்பையை எடுத்தான். அவளை பார்த்தபடியே முகத்தில் எந்த பாவத்தையும் காட்டாமல் குடித்து முடித்தவன் கோப்பையை அவள் கையில் இருந்த ஏந்து தட்டில்(SAUCER) வைத்தான். அவள் தான் முகத்தில் அதிர்ச்சியை கட்டாமல் இருக்க சிரம்மப்பட வேண்டியதாயிற்று.
புகழ்வேந்தன், “இதை குடிச்சு நம்ம கல்யாணத்தை நான் மதிக்கிறேன் னு நிரூபிச்சிட்டேன்.. நீயும் அதை மதிக்கிறங்கிறதை உப்பு காபி கொடுத்து சொல்லாம சொல்லிட்ட.. என்ன பார்க்கிற! உப்பிட்டவரை உள்ளவரை நினை னு சொல்லுவாங்க.. நீ முறைமுகமா சொன்னதை நான் வார்த்தையால் சொல்றேன்.. என் மூச்சு இருக்கிறவரை என்ன! அது நீங்கிய பிறகும் கூட உன் நினைப்பு என்னை விட்டு போகாது” என்று அவன் ஆழ்ந்த குரலில் கூற அவள் ஸ்தம்பித்து நின்றாள்.
—————————————————————————————————————————————————-
3.45 மணிக்கு தந்தையின் விருப்பத்திற்கு ஏற்ப மாலினி பட்டுபுடவையில் கிளம்பி தலையில் மல்லி பூ வைத்துக் கொண்டிருக்க, புஷ்பா தான் மனம் பொறுக்காமல், “உன் மனசில் என்ன இருக்குது னு இப்பவாது அப்பா கிட்ட சொல்லு மாலினி” என்றார்.
மென்னகையுடன் அன்னை கையைப் பற்றியவள், “கண்டிப்பா இன்னைக்கு நைட் உங்க ரெண்டு பேர் கிட்டயும் மனம் விட்டு பேசுறேன் மா.. இப்போ என் பர்த்டேக்கு கோவில் போறதா நினைச்சு சந்தோஷமா கிளம்பு” என்றாள்.
“என்னவோ எனக்கு மனசே ஆரலை மாலு.. அப்பா இதுவரை நம்ம கிட்ட கேட்காம எந்த முடிவையும் எடுத்தது இல்லை.. ஆனா………”
“அம்மா இப்பவும் அப்பா நம்மளை கேட்காம எந்த முடிவையும் எடுக்கலை.. இது வெறும் பொண்ணு பார்க்கிற சடங்கு தானே! தெரிஞ்சவங்க கேட்டு தவிர்க்க முடியாமல் கூட அப்பா வரச் சொல்லி இருக்கலாம்.. எப்படியும் முடிவு என்னோடது னு தானே சொன்னாங்க.. அப்பறம் என்ன!” என்று அன்னையை தேற்றினாலும் உள்ளுக்குள் அவளுக்கும் சிறு கவலை இருந்தது. அந்த கவலை தந்தையை எப்படி சம்மதிக்க வைக்க என்று இல்லை.. அவர் நிச்சயம் தனது விருப்பத்தை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை அவளுக்கு மலை அளவு இருந்தது ஆனால் அவளது கவலையே இந்த விஷயத்தை தந்தை மனம் நோகாமல் எப்படி சொல்லிப் புரியவைப்பது என்பது தான்.
புஷ்பா, “ஹ்ம்ம்.. நல்லதே நடக்கும் னு நம்புவோம்” என்றபடி கிளம்பச் சென்றார்.
மாலை 4.45 மணிக்கு அருணாச்சலம் புஷ்பா மற்றும் மாலினி கோவினுள் நுழைந்தனர்.
அருணாச்சலம், “முதல்ல சாமி கும்பிடுவோம்.. அவங்க வெளி பிரகாரத்தில் வெயிட் பண்றதா சொன்னாங்க” என்றபடி அழைத்துச் சென்றார்.
அப்பொழுது எதிரில் வந்தவனை பார்த்து மாலினி ஆச்சரியத்துடன், “ஹே செல்வா! நீ எங்க இங்க?”
அவன் சிறு கோபத்துடன், “ஏன் நான் கோவிலுக்கு வரக் கூடாதா?”
அவள் மென்னகையுடன், “வர கூடாது னு யாரு சொன்னா! வராத ஆள் வந்திருக்கியே என்ன விஷயம் னு கேட்டேன்”
“என் அண்ணனுக்கு பொண்ணு பார்க்க வந்திருக்கோம்” என்று அவன் முறைப்புடனே கூறினான்.
“ஓ! நீ ஏன் இங்க தனியா இருக்க? அங்க போகலையா?”
“சாமி கும்பிட வந்தியா என்னை கேள்வி கேட்க வந்தியா?” என்றவன், “அண்ணனுக்கு தானே பொண்ணு பார்க்கிறாங்க! நான் இருந்து என்ன செய்யப் போறேன்” என்றும் சேர்த்து கூறினான்.
“ஓ! சரி.. பை” என்றபடி அவள் நகர,
“மாலினி” என்று அழைத்தவன், “இன்னைக்கு உன் பர்த்டே தானே! வாட்ஸ்அப் குரூப்பில் பார்த்தேன்.. ஹப்பி பர்த்டே” என்றான்.
அவள் புன்னகையுடன், “தன்க் யூ” என்று கூறிச் சென்றாள்.
அவன் ‘வரலை னு சொன்னா இந்தா அம்மா கேட்கிறாங்களா? இப்பவாது பொண்ணு பார்த்து முடிச்சாங்களா னு தெரியலையே!’ என்று எரிச்சலுடன் முணுமுணுத்தபடி குடும்பத்தினர் இருந்த இடம் நோக்கிச் சென்றான்.
சாமி கும்பிட்டுவிட்டு வெளி பிரகாரத்திற்கு சென்று ஓர் இடத்தில் அமரவும் அருணாச்சலத்தின் கைபேசியை சிணுங்கியது.
அழைப்பை எடுத்தவர், “நாங்க வெளி பிரகாரத்தில் தான் இருக்கிறோம்” என்று கூறி இருக்கும் இடத்தின் அடையாளத்தை கூறினார்.
மறுமுனையில் கூறியதை கேட்டு பார்வையை சுழற்றியவர் புன்னகையுடன் அவர்களைப் பார்த்து கையை ஆட்ட அவரும் புன்னகையுடன் கையை ஆட்டினார்.
கைபேசியை அணைத்து சட்டை பையில் வைத்தவர், “அவங்க வந்துட்டாங்க” என்றார்.
தன்னை பெண் பார்க்க வந்தவர்களை பார்த்து அதிர்ச்சியுடன் மாலினி எழுந்து நிற்க, இவர்களை பார்த்ததும் பெண் பார்க்க வந்தவனும் அவனது உடன்பிறப்பும் அதிர்ச்சியுடன் நின்றுவிட்டனர்.
இதயம் இணைய காத்திருப்போம்♥ ♥ ♥ ♥ ♥ ♥