“ஹாஹா… என்னடா இது வீடியோ ஆரம்பிச்ச உடனே நம்ம தொப்பை பிள்ளையார் ஸ்லோகம்னு நினைக்கிறீங்களா… இன்னைக்கு அவர் பிறந்த நாள் இல்லையா! அதான் இன்னைக்கு கணேஷா ஸ்பெஷல்…
வணக்கம் அன்பு சொந்தங்களே! நான் உங்க சுட்டி கண்ணம்மா… நீங்கள் இப்ப கேட்க போறீங்க சுவாரஸ்யமான சுட்டியான கியூட்டி கதைகள்!
இன்றைய நாளை கொஞ்சம் தெய்வீகமா ஸ்டார்ட் பண்ணலாம்னு தான்… இன்ட்ரெஸ்டிங் ஃபேக்ட்ஸ் ஆப் விநாயகரை பற்றி ஒரு குட்டி கதையா சொல்ல போறேன்…” என்று ஆரம்பித்து சுட்டி கண்ணம்மா விறுவிறுப்பாக கதை சொல்ல தொடங்க,
அதனை தன்னுடைய செவிபேசி வழியாக யூடியூப்பில் கேட்டு கொண்டே, அந்த கதை சொல்லும் சுட்டி கண்ணம்மாவின் குரலிலேயே அந்த நாளை இனிதாய் தொடங்கினான் தேஜஸ்வின் ஜெயரூபன்.
“உன் குரலே என் மனசுக்கு நிம்மதியையும் அந்த நாளுக்கான எனர்ஜியையும் தருது கியூட்டி கண்ணம்மா…” என்று புன்சிரிப்புடனே சொல்லி விட்டு குளியலறை சென்றவன் வெளியே வரும் முன்னரே அவனது தனிப்பட்ட காரியதரிசி (PA) அஞ்சனவிடம் இருந்து ஏகப்பட்ட அழைப்புகள் வந்திருந்தது.
அதை கண்டு விட்டு, ‘கொஞ்ச நேரம் ஃபோன் எடுக்காம போனா, விடாம கூப்பிட வேண்டியது… எத்தனை முறை சொன்னாலும் இந்த பொண்ணுக்கு புரியவே புரியாது…’ என மனதிற்குள் முணுமுணுத்துக் கொண்டே அவளுக்கு அழைக்க,
அவனை முந்திக் கொண்டு, “உங்கள விடாம கூப்பிட்டதுக்கு எக்ஸ்டிரிம்லி சாரி தேஜ், பட் இட்ஸ் இம்பார்ட்டண்ட்…” என்று அவசர கதியாக சொல்ல,
“ஓகே, அஞ்சனா, உன்ன திட்ட மாட்டேன்… டெல் மீ…” என்று பொறுமையாக அவன் கேட்க,
“தேஜ்… இன்னைக்கு உங்களுக்கு 10 மணிக்கு இருந்த காவேரி டெக்ஸ்டைல்ஸ் லான்ச் 9 மணிக்கு மாத்தி வச்சி இருக்காங்க… ஏதோ நேரம் நல்லா இல்லைன்னு முன்னாடியே ஓபென் பண்ணனுமாம்… அந்த கடை ஓனர் சீஃப் கெஸ்ட்டான உங்களை சீக்கிரமே வர சொல்லி ரொம்ப ரெக்வேஸ்ட் பண்ணி கேட்டார்… நீங்க என்னை திட்டுவீங்க ன்னு தெரியும் இருந்தாலும் அவரை கஷ்டப்படுத்த வேணாம்னு நினைச்சு ஒன்னும் ப்ராப்ளம் இல்ல… எங்க சார் வந்து உங்க லான்ச்சை கண்டிப்பா அட்டென்ட் பண்ணுவாரு ன்னு சிரிச்சிட்டே சொன்னேன் தேஜ்… சோ, நீங்க இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் கிளம்பணும்…” என்று பக்கம் பக்கமாக அவள் பேச,
“அஞ்சனா நீ இருக்கீயே… உன்னைய பிஏ வா வச்சதுக்கு நான் தான் செவத்துல போய் முட்டிக்கணும்…” என்று தேஜ் திட்ட,
“நம்மளை மதிச்சு ஒருத்தர் கூப்பிட்டா நாமளும் கொஞ்சம் இறங்கி போறதுல தப்பில்ல தானே தேஜ்…”
“என்னை கேட்காம என் ஸ்கெடுயூலை ஜேன்ஜ் பண்ற ரைட்ஸை உனக்கு யார் தான் தந்தாங்களோ…” என்று சத்தமாக திட்டி விட்டு,
“ப்ச்… எல்லாம் இந்த அம்மா தர இடம் தான்… என்று சலிப்புடன் முணுமுணுக்க,
அவை எவற்றையும் கண்டுக் கொள்ளாமல், இவள் அமைதியாக இருக்கவும்,
“சரி வை… நான் ரெடி தான் கிளம்பலாம்… நீ இப்ப எங்க இருக்க அஞ்சனா?” என்று தணிந்த குரலில் கேட்க,
“உங்க வீட்ல தான் தேஜ்… சாப்பிட்டு இருக்கேன் தேஜ்…” என்று பாவமாக சொன்னாள் பெண்.
அதை கேட்டு கடுப்புடன் கைபேசியை வைத்து விட்டு கீழே சென்றான் தேஜ்.
தேஜஸ்வின் ஜெயரூபன்! இருபத்து ஐந்து வயதில் பயணித்துக் கொண்டிருக்கும் வாலிபன்.
தற்பொழுது தமிழ்நாடு மற்றும் மலேஷியாவின் பிரபல உடை வடிவமைப்பாளரும்… சமூக வலைதள பிரபலமான பெண்களின் மனம் கவர்ந்த சேரி டிராப்பிஸட்… அதுமட்டுமன்றி இவனுக்கு சினிமா துறையும் பரிச்சயமான ஒன்று தான்… கூடவே சேரி டிராப்பிங் பயிற்சி வகுப்புகளையும் கற்று கொடுக்கிறான்.
இப்படி எல்லா வேலைகளையும் அச்சு பிசகாமல் கணகச்சிதமாக செய்து முடிப்பவன்… அனைத்திலும் நேர்த்தி இருக்கும்… அவனுடைய தொழில் முறைகளில் நிரம்பவே பொறுமையை கடைப்பிடிப்பவன்… பொறுமை என்பது அவனின் குணத்தின் சிறப்பு!
ஏனெனில், தேஜ்ஜின் பதின்ம வயதின் முடிவான பத்தொன்பதில் இருந்தே சாரி டிராப்பிங்கை செய்து வருகிறான். அதில் பல்வேறு இன்னல்களை சந்தித்து, பலரது கேலி கிண்டல்களை கடந்து, இன்று அவனது அபரிமிதமான ஆத்மார்த்தமான உழைப்பில் வளர்ந்து அவனை கேலி செய்தவர்களே வியக்கும் நிலையில் உயர்ந்திருக்கிறான்.
அஞ்சனா ரசித்து ருசித்து சாப்பிட்டுக் கொண்டு இருப்பதை பார்த்ததும், “அம்மா… உங்க ஃப்ரெண்ட் பொண்ணை என் கூட கோர்த்து விடாதீங்க ன்னு இதுக்கு தான் தலப்பாடா அடிச்சிக்கிட்டேன்…” என்று பொய் கோபத்துடன் கூறினான் தேஜ்.
“தேஜூ அவ சின்ன பொண்ணு டா… கொஞ்சம் சேட்டை இருக்க தான் செய்யும்… நீதான் அட்ஜெஸ்ட் பண்ணி போயேன்…” என்று அஞ்சனாவுக்கு பரிந்து பேசினார் அவனது தாயார் கோமதி.
“திஸ் இஸ் டூ மச் மா… சீக்கிரம் கிளம்பி வர சொல்லுங்க… நாங்க சீக்கிரம் கிளம்பணும்…”
“தேஜூ மா… நீ சாப்பிட வா…” என்றபடி அவனுக்கும் தட்டில் பூரியை வைக்க,
அவனோ பிடிவாதமாக, “நோ மா… எனக்கு பசி இல்ல… வெளியே சாப்பிடறேன்…” என்கவும் அமைதியாக விட்டார் கோமதி.
“தேஜ் ஐம் ரெடி டூ கோ…” என வாயை துடைத்தபடி வந்தாள் அஞ்சனா.
தேஜ்ஜோ எதையும் பேசாமல் முறைத்து விட்டு முன்னே சென்றான்.
“நான் டிரைவ் பண்ணட்டுமா தேஜ்?”
“ஒன்னும் வேணாம் தாயே… எல்லாம் நானே பாத்துக்கறேன்… நீ அமைதியா வந்தா மட்டும் போதும்…”
‘க்கும்… என் பேச்ச கேட்க எத்தனை பேர் தவம் கிடக்குறாங்க… வந்துட்டாரு… ஆளும் மூஞ்சியும் பாரு… உர்ர்ர்னுனுனு…’ என்று மனதிற்குள் புகைந்த படியே வந்தாள் அஞ்சு.
“அஞ்சனா…”
“ம்ம்…”
“அங்க எல்லாம் ரெடியா இருக்கும் தானே…”
“மேபி…”
“வாட்…”
“அங்க சொன்ன டைம் தான் இப்ப… எல்லா கரெக்ட்டா இருக்கும் தேஜ்… டோண்ட் வர்றி…” என்று பல்லை இளிக்க,
“இடியட்…”
இருவரும் காவேரி டெக்ஸ்டைல்ஸ் என்ற பிரம்மாண்டமான ஜவுளி கடையின் மகிழுந்து நிற்கும் இடத்தை அடையும் முன்பே வண்டியை சூழ்ந்து விட்டனர் பெண்கள் கூட்டம்.
அனைவரையும் சமாளித்து கடையின் உள் நுழைந்த தேஜஸ்வினோ அங்கே நிற்கும் ஒருத்தியை பார்த்து அதீத கோபம் கொண்ட அடுத்த நொடி திரும்பி அஞ்சனாவை ஓர் தீப்பார்வை பார்க்க, அவளோ அவன் இருக்கும் திசை பக்கமே பார்வையை செலுத்தவில்லை.
அதே நேரம், “வினோ மாமா…” என்ற குரல் அவன் காதருகில் ஒலிக்க,
அதில் மேலும் கடுப்பாகி போனவன்,
“உங்களுக்கு எத்தனை முறை தான் இப்படி டார்ச்சர் பண்ண வேணாம்னு சொல்றது மிஸ். ராகவர்ஷினி…”
“நான் மிஸஸ். தேஜஸ்வினா மாறும் வரைக்கும் சொல்லுவேன்… மாறினாலும் சொல்லுவேன்… பட், அப்போ இன்னும் கொஞ்சம் வேற மாதிரி சொல்லுவேன் வினோ மாமா…” என்று கண்களை சிமிட்டி அவள் சொல்லும் பொழுதே,
அந்த ஜவுளி கடையின் முதலாளி வருகை தரவும்,
அவனிடம் கையை நீட்டி புன்னகைத்து, “ஹெலோ தேஜ் சார்! எப்படி இருக்கீங்க?” என்று வெகு இயல்பாகவே கேட்டாள் ராகா.
தேஜ்ஜும் சுற்றம் உணர்ந்து, அவள் நீட்டிய கைகளை பற்றி குலுக்கி விட்டு, “வெல் ஃபைன் ராகவர்ஷினி…” என்றான் புன்னகை செய்யாமலே!
“நானும் சூப்பரா இருக்கேன் தேஜ்…”
“நான் கேட்கல…”
“பட், நான் சொல்லுவேன்…” எனக் கூறி இதழ் சுழித்துக் கொண்டாள் ராகா.
“இந்த ஒரு வருஷமா உன் தொல்லை இல்லாமல் நான் நிம்மதியா இருந்தேன்…” என்றவனின் பேச்சில், அவனை வெறித்து பார்ப்பதை முற்றிலும் தவிர்க்க எண்ணி தலை கவிழ்ந்து இருக்க,
“ஆனா, இப்ப நான் நிம்மதியாவே இல்ல… ஏன் தெரியுமா, பிகாஸ், இந்த ஒரு வாரமா திரும்பவும் என் பின்னாடி தொந்தரவு பண்ணிட்டு இருக்கீயே அதான்…” என்று சினத்துடன் பேசினான் தேஜ்.
அஞ்சனாவோ தேஜ்வின் கோபத்தை கவனித்து, “ஹாய் ராகா மேம்! எப்படி இருக்கீங்க?” என்று சிரித்த படி வந்தாள்.
அவளை கண்டு தன் வதனத்தை இயல்பாய் மாற்றி விட்டு, “சோ குட் அஞ்சனா…” என்க,
“உங்க சேரியும் நீங்க பர்ஃபெக்ட் ஆஆ கட்டி இருக்கும் விதமும் அவ்வளவு அழகா இருக்கு மேம்…” என்று அவளை மனதார பாராட்ட,
“உங்க பாஸ் எனக்கு அவ்வளவு அழகா சொல்லி தந்து இருக்கார்… அதனால் கண்டிப்பா அது அழகா தான் இருக்கும் அஞ்சனா…” என்று அவனை ஓரக்கண்ணால் ரசித்த படி சொல்ல,
“அஞ்சனா, வெட்ஸ் கோ, இங்க ஈவென்ட் பார்க்க வந்தியா? இல்ல இவங்க கூட கடலை போட வந்தீயா?”
“சாரி தேஜ்… பட், நான் ஒன்னும் அவங்க கிட்ட கடலையும் வறுக்கல, தீயவும் வைக்கல… அவங்களும் இன்னைக்கு இங்க சீப் கெஸ்ட்டா தான் வந்து இருக்காங்க… சோ, ஒரு கர்டசிக்கு பேசினேன்… அவ்வளவு தான்…” என்று தலையை சிலுப்பிக் கொண்டு கூற, அதற்குள் பதில் ஏதும் பேசாமல் அங்கிருந்து அகன்று விட்டான் தேஜஸ்வின்.
அவன் சென்ற திசையை ஏக்கத்துடன் பார்த்துக்
கொண்டே, “அஞ்சனா… எனக்கு ஒரே ஒரு ஹெல்ப் மட்டும் பண்ண முடியுமா?” என ஆரம்பித்து அவளிடம் ஓர் உதவியை கேட்டாள் ராகவர்ஷினி.