அவர் அப்படிக் கேட்டதும் இந்த கொஞ்ச நாட்களில் நடந்த அத்தனையும் சொன்னான் இன்பன். அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் மேலும் அதிர்ந்து போனார்கள். “ஐயோ, என் பேத்தியை இந்த அளவுக்கு டார்ச்சல் பண்ணிருக்கானே? இவனுக்கு மன்னிப்பே கிடையாதா? மனசு ஓடிஞ்சு என் பேத்தி எங்க போனானு தெரியலையே”, என்று தலையில் அடித்துக் கொண்டு அழுதார் குணசேகரன்.
இப்போது வயது வித்தியாசம் எல்லாம் பார்க்காமல், பொறுமையையும் கடை பிடிக்காமல் இன்பன் கன்னத்தில் அடி விளாசி விட்டான் கிரி. அவனை சீனிவாசனும் அம்பிகாவும் தான் விலக்கி நிறுத்தினார்கள்.
“உன் தங்கச்சி கல்யாணம் நடக்க என் அக்கா உயிரைக் குடிப்பியா டா நீ?”, என்று ஆங்காரமாக கத்தினான் கிரி. அவனுக்கு இவ்வளவு கோபம் வருமா என்று அவனையே அதிர்ந்து போய் பார்த்துக் கொண்டிருந்தாள் அஞ்சலி.
அப்போது கிரியின் போன் அடித்தது. அதை அவசரமாக எடுத்து பேசினான். அந்த பக்கம் என்ன பேச பட்டதோ அவன் முகம் கோபத்தில் சிவந்தது. போன் பேசி விட்டு நிமிர்ந்தவன் இன்பனை நெருங்கி “என் அக்கா உன்னால தற்கொலை வரைக்கு போயிட்டா டா. கடல்ல முங்கி சாக இருந்தவளை போலீஸ்காரங்க காப்பாத்தி ஆஸ்பத்திரில சேத்துருக்காங்க. இப்ப தான் கண்ணு முழிச்சிருக்கா. அவ எப்படி தைரியமான பொண்ணு தெரியுமா? அவளையே இப்படி ஒரு செயலை செய்ய வச்சிட்டியே?”, என்று கேட்டு மீண்டும் அடித்தான் கிரி.
“என் பேத்தி கிடைச்சிட்டாளா கிரி?”, என்று கேட்டார் குணசேகரன்.
“ஆமா தாத்தா, இப்ப தான் கண்ணு முழிச்சாளாம்”
“வா கிரி நாம போகலாம். இனிமே நமக்கும் இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் வேண்டாம்”
சீனிவாசன் புறம் திரும்பிய கிரி “உங்க மகன் கிட்ட சொல்லி இனியாவது எங்களை நிம்மதியா வாழ விடச் சொல்லுங்க. இதுக்கு மேல ஏதாவது நடந்தா இவனை கொன்னுட்டு நான் ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன். உங்க பொண்ணுக்கு வேற மாப்பிள்ளை பாத்துக்கோங்க. இவன் சம்பந்தப் பட்ட எந்த உறவும் எனக்கு வேண்டாம். என்னை மன்னிச்சிரு அஞ்சலி”, என்று சொல்லி விட்டு தாத்தாவை அழைத்துக் கொண்டு சென்று விட்டான்.
புயல் அடித்து ஓய்ந்தது போல இருந்தது அந்த இடம். “எங்களை மன்னிச்சிருங்க சீனிவாசன் சார். இப்ப இந்த பேச்சு பேசக் கூடாது தான். ஆனா எங்களுக்கு வேற வழி இல்லை. நீங்க என்ன தான் பணக்காரங்களா இருந்தாலும் நாங்க உங்க மகன் நல்லவன்னு நினைச்சு தான் எங்க மகளுக்கு மாப்பிள்ளையா தேர்ந்தெடுத்தோம். ஆனா ஒரு நல்ல மனுசனுக்கு உரிய எந்த நல்ல குணமும் இவன் கிட்ட இல்லை. அதனால் எங்க பொண்ணு வாழ்க்கையை நாங்க வீணாக்க விரும்பலை. இந்த கல்யாணம் நடக்காது. நாங்க வரோம்”, என்று சொல்லி விட்டுச் சென்றார்கள் மஞ்சுவின் பெற்றோர்.
“ஐயோ என் பிள்ளைங்க வாழ்க்கையே போச்சே? ரெண்டு கல்யாணமும் நின்னு போச்சே”, என்று அம்பிகா கதற அஞ்சலி அழுது கொண்டே அறைக்கு ஓடி விட்டாள். சீனிவாசன் தளர்ந்து போய் அங்கே கிடந்த சோபாவில் அமர்ந்தார்.
அவர்களின் வேதனையை காண சகிக்காமல் அறைக்குள் வந்தான் இன்பன். கண்ணாடி முன்பு நின்று அவனையே பார்த்தான். உடை கசங்கி தலை கலைந்து பார்க்கவே ஒரு மாதிரி இருந்தான். அவனிடம் இருந்த கம்பீரம், அகங்காரம், திமிர், ஆணவம் எல்லாம் இந்து என்ற பெண்ணின் காலடியில் கரைந்து விட்டது.
கிரியும் குணசேகரனும் கொடுத்த அறையால் அவன் கன்னம் சிவந்திருந்தது. அவனையே பார்த்துக் கொண்டிருந்த இன்பனுக்கு அவனை நினைத்தே அருவருப்பு வர அவனைக் கண்டே துப்பிக் கொண்டான். பின் கட்டிலில் படுத்தவன் கதறி அழ ஆரம்பித்தான். அவனுடைய பாவத்தை எல்லாம் கண்ணீரால் கரைக்க முயன்றான்.
அதே நேரம் போலீஸ் இந்துவைத் தற்கொலை செய்ய முயன்றதற்காக திட்டிக் கொண்டிருக்க தலை குனிந்து அமர்ந்திருந்தாள் இந்து.
அங்கு சென்ற கிரி மற்றும் குணசேகரனிடமும் அவளுக்கு புத்திமதி சொல்லச் சொல்லி சொன்னார்கள். அதன் பின் அவளை அழைத்துக் கொண்டு ஹாஸ்பிட்டலில் இருந்து வெளியே வந்தார்கள்.
பின் ஒரு ஆட்டோ பிடித்து குணசேகரனையும் இந்துவையும் அனுப்பி வைத்த கிரி அவர்களை வண்டியில் பின் தொடர்ந்தான்.
வீட்டுக்கு சென்றதும் அவர்களைப் பார்க்க முடியாமல் இந்து தலை குனிந்த படியே இருக்க அவள் அருகில் அமர்ந்த குணசேகரன் அவளுக்கு ஆறுதலாக தலையை வருடிக் கொடுத்தார்.
அடுத்த நொடி அவர் மடியில் படுத்து அவள் கதறி அழ அதைக் கண்டு மற்ற இருவருக்கும் கண்கள் கலங்கியது.
அழுது முடித்த இந்து எதுவோ சொல்ல வர அவள் வாயை மூடிய குணசேகரன் “எங்களுக்கு எல்லாமே தெரியும் மா. நீ ஒண்ணும் சொல்ல வேண்டாம். இனி எந்த பிரச்சனையும் வராது”, என்றார்.
அவர் அப்படிச் சொன்னதும் அவள் புரியாமல் விழிக்க நடந்த அத்தனையும் சொன்னான் கிரி.
அவன் சொன்னதைக் கேட்ட இந்து “அப்ப உன் கல்யாணம்?”, என்று கேட்டாள்.
“இன்னும் அதைப் பத்தியே என் கிட்ட பேசாதக்கா”, என்றான் கிரி.
“ஆமா மா, இந்த பேச்சு வேண்டாம்”, என்றார் குணசேகரன்.
“அஞ்சலி பாவம் தாத்தா”
“அது அவ தலையெழுத்து. சரி வா சாப்பிடலாம். கிரி வா”, என்று அழைத்து அவர்களை உண்ண வைத்தார்.
அன்று இரவு படுக்கையில் படுத்த இந்துவுக்கு இன்பனைப் பற்றி அனைவருக்கும் தெரிந்தது நிம்மதியாக இருந்தாலும் அஞ்சலி பற்றி எண்ணும் போது வருத்தமாக இருந்தது.
“அவ என்ன பாவம் பண்ணினா, கிரியை விரும்புனதை தவிர? இப்ப அவ கல்யாணம் நின்னுருச்சே? அதனால அந்த இன்பன் என்ன செய்வானோ?”, என்று அவளுக்கு பயமாக இருந்தது.
அன்றைய நாள் அப்படியே கடக்க அடுத்த நாள் காலையிலே வீட்டு வாசலில் தயக்கத்துடன் வந்து நின்றாள் அஞ்சலி. அவளை முதலில் பார்த்தது இந்து தான்.
“ஏய் அஞ்சலி வா வா, எப்படி இருக்க? உள்ள வா”, என்று அழைத்தாள் இந்து.
தயக்கத்துடன் அவள் வீட்டுக்குள் வர “நீ எதுக்கு இங்க வந்த?”, என்று கேட்டான் கிரி.
அதில் அவள் முகம் வாட “கிரி வீட்டுக்கு வந்தவங்க கிட்ட இப்படியா பேசுறது? நீ உள்ள போ”, என்று சொன்னதும் அவன் இருவரையும் முறைத்துப் பார்த்து விட்டு உள்ளே சென்று விட்டான்.
“வா மா”, என்று சொல்லி விட்டு குணசேகரனும் உள்ளே சென்று விட்டார்.
“ஏதாவது சாப்பிடுறியா அஞ்சலி?”, என்று கேட்டாள் இந்து.
“வேண்டாம்க்கா. நான் உங்களைப் பாக்க தான் வந்தேன். இப்படின்னு எல்லாம் எனக்கு தெரியாது. எங்க அண்ணன் செஞ்சது மன்னிக்க முடியாத பாவம் தான். அதை மன்னிச்சு நீங்க என்னை ஏத்துக் கிட்டதே பெரிய விஷயம். ரொம்ப நன்றிக்கா”
“விடு மா”
“சரிக்கா நான் கிளம்புறேன்”
“இப்ப தானே வந்த? அதுக்குள்ள போற?”
“நான் இப்ப எங்க கல்யாண விஷயம் பேச வரலைக்கா. அது நடக்கவே நடக்காதுன்னு எனக்கே தெரியும். நான் உங்களைப் பாக்க தான் வந்தேன்”
“கண்டிப்பா உங்க கல்யாணம் நடக்கும் அஞ்சலி. நான் கிரி கிட்ட பேசுறேன். கொஞ்சம் பொறுமையா இரு. நீ என்ன பண்ணின பாவம்?”
“இல்லைக்கா இனி எனக்கு கிரி கிடைப்பான்னு நம்பிக்கையே இல்லை. அம்மா தான் ரொம்ப அழுதுட்டு இருக்கு. உங்களைப் பாக்கணும்னு சொன்னாங்க. நான் தான் உங்க கிட்ட கேட்டுட்டு கூட்டிட்டு வரலாம்னு நினைச்சேன். கார்ல தான் இருக்காங்க”
“ஐயையோ, வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்கலாம்ல? வா போகலாம்”, என்று சொல்லி அவளை அழைத்து கொண்டு காருக்கு சென்ற இந்து அம்பிகாவிடம் மரியாதையாகவே பேசினாள்.
உள்ளே அழைத்ததற்கு அம்பிகா வேண்டாம் என்று மறுத்து விட்டாள். வெளியே வைத்தே பேசி விட்டு அம்பிகாவும் அஞ்சலியும் கிளம்பி விட்டார்கள். மாற்றி மாற்றி இன்பன் செய்த தவறுக்கு அவளிடம் மன்னிப்பை வேண்டினார்கள்.
அவர்கள் பேசியதில் இன்பன் திருமணமும் நின்றது இந்துவுக்கு வருத்தத்தைக் கொடுத்தது. கூடவே இன்பன் இப்போது தன் மீது எவ்வளவு கோபத்தில் இருப்பான் என்று எண்ணி அவள் முதுகு தண்டு பயத்தில் சிலிர்த்தது. கடவுளே அவனோட கோபத்தை தாங்குற அளவுக்கு எனக்கு வலிமையைத் தா என்று வேண்டினாள்.
அடுத்த நாள் மாலை அவள் ஆஃபிஸ் விட்டு வெளியே வரும் போது அங்கே நின்ற இன்பனைக் கண்டு பயந்து போனாள்.
பொது இடத்தில் வச்சு கோபத்தைக் காட்டிருவானோ, அடிச்சிருவானோ என்று பயந்து போய் நின்றாள். அப்போது அவள் அருகே வந்து நின்ற இன்பன் முகத்தில் கோபமோ வெறுப்போ எதுவுமே இல்லை. அவளை கண்கள் கலங்க பார்த்தான். அவன் முகத்தை வியப்பாக பார்த்தாள் இந்து. அவள் கற்பனை கூட செய்து பார்க்காத இனியனின் முகம்…
அவனை அப்படி இந்து ஒரு நாளும் கற்பனை கூட செய்து பார்த்ததில்லை. அந்த அளவுக்கு பரிதாபமாக இருந்தான்.
அவனைக் கண்டு அவள் பேசவா இல்லை போகவா என்று தெரியாமல் அவள் தடுமாற அவளைக் கண்ட இன்பன் இரு கை எடுத்துக் கும்பிட்டு “என்னை மன்னிச்சிரு இந்து”, என்றான்.
“இன்பன் தன்னிடம் மன்னிப்பு கேட்கிறானா?”, என்று திகைத்துப் போனாள் இந்து.
“உனக்கு அதிர்ச்சியா தான் இருக்கும். ஆனா நான் மனசு திருந்தி தான் உன் கிட்ட மன்னிப்பு கேக்குறேன் இந்து. இதுல எந்த பிளானோ சுயநலமோ எதுவுமே இல்லை. கண்டிப்பா உன்னால என்னை மன்னிக்க முடியாது தான். மன்னிக்க கூடிய காரியத்தை நான் செய்யலை. ஆனா வேற எப்படி உன் கிட்ட மன்னிப்பு கேக்கன்னு எனக்கு தெரியலை. உன்னால மன்னிக்க முடியாலைன்னா நீ எனக்கு என்ன தண்டனை வேண்டும்னாலும் கொடு இந்து. சந்தோஷமா அதை ஏத்துக்குறேன். உன் முகத்துல முழிக்கிற தகுதியோ தராதரமோ எனக்கு கிடையாது. என்னோட திமிர் தான் அப்படி எல்லாம் செய்ய வச்சது. எல்லாத்துக்கும் சாரி”, என்று சொல்லி விட்டு திரும்பி நடந்தான்.
அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள் இந்து. அவளுக்கு நடப்பது கனவா நினைவா என்று கூட தெரியவில்லை. இப்போது அவனிடம் பேசவா, இல்லை தொல்லை விட்டதுன்னு நினைக்கவா என்று அவள் திகைத்த படி இருக்க அவனோ காரின் அருகே சென்று விட்டான்.
அப்போது தான் அவளுக்கு அஞ்சலி கிரி கல்யாணம் நினைவுக்கு வர அடுத்த நொடி வேகமாக அவன் அருகே ஓடிச் சென்று “ஒரு நிமிஷம்”, என்றாள்.
திரும்பி பார்த்த இன்பன் “சொல்லு மா, என்னை செருப்பால அடிக்கணும்னு சொன்னியே? அதைச் செய்யப் போறியா? அதைச் செஞ்சா கூட என் பாவம் தீராது”, என்றான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.