அவன் சொன்னதைக் கேட்டு திகைத்தவள் “இவனை நான் செருப்பால் அடிப்பதா? அது எப்படி என்னால செய்ய முடியும்?”, என்று எண்ணிக் கொண்டு “அது இல்லை. அஞ்சலி கிரி கல்யாணம் பத்தி…..”, என்று இழுத்தாள்.
“அது சத்தியமா நடக்காது. கிரி கண்டிப்பா சம்மதிக்க மாட்டான். அஞ்சலி வீட்ல அழுதுட்டே இருக்கா. அது தான் அவ தலையெழுத்து போல? எங்க ரெண்டு பேருக்கும் கல்யாண யோகம் இல்லைன்னு எங்க அம்மா அழுதே செத்து போயிரும் போல? உனக்கு நான் செஞ்ச பாவத்துக்கு தான் எனக்கு இந்த தண்டனை. உன்னோட எதிர் காலத்தை நினைச்சா எனக்கு பயமா இருக்கு. அந்த வினித் உன்னைப் பத்தி பேசும் போது தான் என்னோட பாவத்தோட அளவே எனக்கு புரிஞ்சது. என்னை மன்னிச்சிரு மா”
“எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாலும் எதுவும் மாறப் போறது இல்லை. அடுத்து என்னன்னு பாக்கணும். எனக்கு அஞ்சலி கிரி கல்யாணம் நடக்கணும். அன்னைக்கு கோபத்துல நடக்காதுன்னு எல்லாம் பேசிட்டேன். ஆனா எனக்கு அவங்க கல்யாணம் சீக்கிரம் நடக்கணும். என்னால அவங்க பிரிஞ்சு இருக்க கூடாது. அதுக்கு என்ன பண்ணன்னு சொல்லுங்க”
முன்பெல்லாம் வா போ என்று பேசியவள் இப்போது மரியாதையாக ஏன் அழைக்கிறாள் என்று அவனுக்கும் புரிய வில்லை. அவளுக்கும் தெரிய வில்லை.
“எனக்கும் அவங்க கல்யாணம் நடக்கணும்னு தான் ஆசையா இருக்கு. ஆனா கிரி…”, என்று இழுத்தான் இன்பன்.
“கிரியை சம்மதிக்க வைக்க ஏதாவது வழி இருக்கா?”
“ஒரு வழி இருக்கு. ஆனா அது நடக்குமான்னு தெரியாது இந்து”
“என்ன வழி?”
“உன் தம்பி அஞ்சலியை கல்யாணம் பண்ண சம்மதிக்கணும்னா அதுக்கு முன்னாடி உன் கல்யாணம் நடக்கணும்”
“என்னது?”, என்று அவள் அதிர “ஆமா உன் கல்யாணம் நடந்தா தான் கிரி கல்யாணம் பண்ணிப்பான்”
“ஆனா அது எப்படி நடக்கும்? கண்டிப்பா யாரும் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டாங்க. எல்லாரும் என்னைப் பத்தி விசாரிச்சீட்டு…. அதை விடுங்க…. எனக்கு கல்யாண ஆசையே போச்சு. அவங்க கல்யாணமாவது நடக்கணும்”, என்று விரக்தியாக சொன்னாள் இந்து.
“என்னை மன்னிச்சிரு இந்து”
“விதி உங்க மூலமா என் வாழ்க்கைல விளையாடிருக்கு. உங்க கல்யாணமும் நின்னுருச்சுன்னு கேள்வி பட்டேன். நான் வேணும்னு எதுவும் செய்யலை. நான் செத்தா அஞ்சலி கிரி கல்யாணம் நடக்கும்னு தான் நினைச்சேனே தவிர உங்களை காட்டிக் கொடுக்கணும்னு நினைக்கலை”
“எனக்கு புரியுது. உன் மேல எந்த தப்பும் இல்லை. என் பாவம் வெளிய வந்துருக்கு அவ்வளவு தான்”
“அதை விடுங்க. இப்ப அவங்க கல்யாணத்துக்கு என்ன செய்யலாம்?
“நான் ஒரு விஷயம் சொல்லவா?”
“என்ன சொல்லுங்க?”
“நாம கல்யாணம் பண்ணிக்கலாமா இந்து?”, என்று அவன் கேட்டதும் அவள் அரண்டு போய் அவனைப் பார்த்தாள்.
அவளுடைய பேச்சில்லா நிலையைக் கண்டவன் “உன் மேல பரிதாபப் பட்டோ என் தங்கை கல்யாணம் நடக்கணும்னு நினைச்சோ நான் இதைச் சொல்லலை இந்து. எங்க அம்மா மேல சத்தியமா என் மனசுல இந்த நிமிஷம் நீ மட்டும் தான் இருக்க. அது காதலா என்னன்னு எல்லாம் எனக்கு தெரியலை. உனக்கு நடந்த கொடுமைக்கு நான் பதிலுக்கு செய்றதுக்காகவும் இல்லை. ஆனா எனக்கு நீ வேணும்னு தோணுது. நேத்து முழுக்க யோசிச்சதுல எனக்கு இது தான் தோணுது. நம்ம கல்யாணம் நடந்தா அவங்க கல்யாணமும் நடக்கும். நான் செஞ்ச பாவத்தால எனக்குள்ள இருக்குற குற்ற உணர்ச்சியும் நீ என் மனைவியா மாறினா போயிரும். நீ எனக்கு வாழ்க்கைத் துணையா வந்தா நல்லா இருக்கும்னு என் மனசுக்கு தோணுது. ஆனா நான் உன்னைக் கட்டாயப் படுத்தலை. எனக்கு நீ என்ன செஞ்சாலும் சம்மதம். போலீஷ்ல பிடிச்சு கொடுத்தா கூட நான் சந்தோஷமா ஜெயிலுக்கு போறேன்”
“எனக்கு சத்தியமா உங்களை நம்ப முடியலை”, என்று மனதை மறையாமல் சொன்னாள் இந்து.
“தெரியும். நான் பண்ணின காரியத்துக்கு யாருமே என்னை நம்ப மாட்டாங்க. என் அம்மா அப்பாவே என்னை நம்ப மாட்டாங்க. எனக்கு இது தான் தோணுச்சு. உன் வாழ்க்கையை கெடுத்த நான் உன்னைக் கல்யாணம் பண்ணனும். அதுல உனக்கு விருப்பம் இல்லைன்னா காலம் முழுக்க நானும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன். உன் தாத்தா காலத்துக்கு பிறகு உனக்கு ஒரு நண்பனா உனக்கு பாதுகாப்பா இருந்துட்டு போறேன். நான் இதை சந்தோஷமா தான் சொல்றேன். என்னை ஒரு நண்பனாவது ஏத்துக்க முயற்சி பண்ணு இந்து. கிரி மனசு மாறணும்னு கடவுள் கிட்ட வேண்டுறதைத் தவிர வேற ஒண்ணும் செய்ய முடியாது. என்னைப் பாத்ததும் செருப்பால அடிச்சிருவியோன்னு பயந்துட்டு தான் வந்தேன். ஆனா நீ என் கிட்ட மரியாதையா பேசுற. உன்னோட இந்த மன்னிப்பே எனக்கு காலம் முழுக்க போதும். நான் வரேன். அப்புறம் அன்னைக்கு உங்க கிட்ட இருந்து வாங்கின நிலத்தை நாளைக்கே கிரி பேர்ல மாத்தி எழுதிறேன். நான் வரேன்”, என்று சொல்லி விட்டு காரில் ஏறியவன் அவள் அதே இடத்தில் நிற்கவும் “வீட்ல விடட்டுமா இந்து? கட்டாயப் படுத்தலை. ஹெல்ப் பண்ணலாம்னு தான் கேட்டேன். வேற எந்த உள் நோக்கமும் இல்லை”, என்றான்.
போகவா வேண்டாமா என்று மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தியவள் கிரி கல்யாணம் பற்றி பேசுவதற்காக காரில் ஏறினாள். அவன் முகம் மலர்ந்தது. அதை வியப்பாக பார்த்தாள் இந்து. கூடவே “இவன் சிரிச்சா எவ்வளவு அழகா இருக்கான்?”, என்ற எண்ணம் வந்ததில் திகைத்தும் போனாள்.
அதன் பின் அவள் அவன் பக்கம் திரும்பவே இல்லை. அவளுடைய வீட்டின் அருகே இறங்கும் போது “சாரி இந்து”, என்றான் இன்பன்.
“பரவால்ல விடுங்கன்னு என்னால சொல்ல முடியலை இன்பன். உங்களைப் பத்தி நல்ல படியா நினைக்க கூட எனக்கு பயமா இருக்கு. அதை விடுங்க. இப்ப கிரி அஞ்சலி கல்யாணம் பத்தி என்ன செய்யன்னு எனக்கு குழப்பமா இருக்கு. கிரி அதைப் பத்தியே பேச விட மாட்டிக்கான். தாத்தாவும் தான்”
“அது என்னால தான்”
“முடிஞ்சதை நினைக்காதீங்க. வேற என்ன பண்ணலாம்?”
“எனக்கு நம்ம கல்யாணம் ஒண்ணு தான் தோணுது இந்து. உன் கல்யாணம் நடந்தா கண்டிப்பா அவங்க மனசு அமைதியாகும். நீயும் கூட என்னோட மனைவியா ஆகிட்டா என்னை பழி வாங்க கூட செய்யலாம். இல்லைன்னா நம்ம நாலு பேருமே கடைசி வரை கல்யாணம் பண்ணாம தான் இருக்கணும். கண்டிப்பா கிரியும் அஞ்சலியும் வேற ஆளைக் கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாங்க”
“ஆமா அவங்க ரெண்டு பேரும் வேற ஒரு ஆளைக் கல்யாணம் பண்ண சம்மதிக்க மாட்டாங்க தான். எனக்கும் கண்டிப்பா கல்யாணம் நடக்காது. ஆனா உங்களுக்கு அப்படி இல்லை. இந்த மஞ்சு இல்லைன்னா கூட வேற பொண்ணு வருவா”
“சத்தியமா இல்லை இந்து. என் அம்மா அப்பா மேல சத்தியமா இனி என் வாழ்க்கைல உன்னைத் தவிர வேற பொண்ணுக்கு இடம் இல்லை. இதை என்னால அடிச்சு சொல்ல முடியும். கண்டிப்பா இப்ப என் மனசுல நீ மட்டும் தான் இருக்க. ஏதோ ஒரு விதத்துல நீ என்னை அதிகமா பாதிக்கிற. இதுக்கு அப்புறம் என் மனசை உனக்கு எப்படிச் சொல்லன்னு தெரியலை”, என்று அவன் சொன்னதும் அவனையே இமைக்க மறந்து பார்த்தாள்.
“என்ன இப்படி பாக்குற?”, என்று கேட்டான் இன்பன்.,
“நீங்க ஏன் நல்லவனா இல்லாம போனீங்கன்னு யோசிக்கிறேன். சரி அதை விடுங்க. நீங்க இப்ப சொல்றது எல்லாம் சரியா தான் பாடுது. ஆனா எனக்கு முடிவு எடுக்க முடியலையே என்ன செய்ய?”
“நல்லா யோசி இந்து. எதுவுமே கட்டாயம் கிடையாது. உன் விருப்பம் என்னவா இருந்தாலும் எனக்கு அதுல சம்மதம் தான். இனி உன்னை எந்த விதத்துலயும் நான் தொந்தரவு பண்ண மாட்டேன். எதுக்கும் உன்னை மிரட்டி அடி பணிய வைக்க மாட்டேன். இது அந்த கடவுள் மேல சத்தியம். நல்ல முடிவா உனக்கு தோணுச்சுன்னா நீயே கால் பண்ணிச் சொல்லு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
அவனை நம்ப முடியவில்லை என்றாலும் கிரி அஞ்சலிக்காக சம்மதிக்கலாமா என்று எண்ணினாள் இந்து. அந்த முடிவை எடுக்கவும் அவளுக்கு பயமாக இருந்தது.
அன்று வீட்டுக்குச் சென்றதும் கிரியிடம் அஞ்சலியைப் பற்றி பேச்சை எடுக்க “அக்கா, உனக்கு என்ன பைத்தியமா? மறுபடி மறுபடி எதுக்கு அவங்களைப் பத்தியே பேசுற? அந்த குடும்பமே நமக்கு வேண்டாம்க்கா”, என்று எரிந்து விழுந்தான் கிரி.
“அப்ப நீ அஞ்சலியை மறந்துட்ட அப்படித் தானே?”
“ஆமா”
“எங்க என் கண்ணைப் பாத்துச் சொல்லு”, என்று இந்து சொல்ல தடுமாறிப் போனான் கிரி.
“அக்கா பிளீஸ்க்கா, தயவு செஞ்சு என்னைக் கொல்லாத. என் மனசு முழுக்க அஞ்சலி தான் இருக்குறா. என்னால வேற பொண்ணைப் பத்தி எல்லாம் யோசிக்க முடியாது. அதுக்காக அவளை கல்யாணம் பண்ணவும் சம்மதிக்க மாட்டேன். ஏன்னா எனக்கு அவளை விட நீ தான் முக்கியம். எனக்கு இப்போதைக்கு ஆசை எல்லாம் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்கணும். ஆனா அந்த இன்பன் பண்ணின வேலையால உனக்கு கல்யாணம் நடக்குமான்னே எனக்கு சந்தேகமா இருக்கு. ஒரு வேளை என்னாலயும் தாத்தாவாலயும் உனக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியலைன்னா கடைசி வரை உனக்கு துணையா நானும் எனக்கு துணையா நீயும் இருந்துறலாம் அக்கா. நமக்கு யாரும் வேண்டாம். என் வாழ்க்கைக்காக நீ இன்னொரு தடவை சாகலாம்னு நினைச்சா நானும் தாத்தாவும் உன் கூடவே செத்துருவோம். நீ இல்லாத வாழ்க்கை எங்களுக்கு வேண்டாம். நான் செத்துட்டா அஞ்சலியும் செத்துருவா. அதனால நீ தப்பா எதுவும் முடிவு எடுக்க நினைக்காத. அப்புறம் இதுக்கு மேல அஞ்சலியைப் பத்தி பேசி என்னைக் கஷ்டப் படுத்தாத”, என்று வேதனையான குரலில் சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
காதல் தொடரும்….
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.