அவன் மனதும் அனைவருக்கும் புரிந்தது. அம்பிகாவுக்கும் சீனிவாசனுக்கும் அவர்கள் மாற்றி மாற்றி கண்டிஷன் போடுகிறார்கள் என்றெல்லாம் தவறாக நினைக்க முடியவில்லை. அவர்களுக்கு இந்து வீட்டினர் ஒருவர் மேல் ஒருவர் வைத்த அதிகப் படியான பாசம் தான் பெரிதாக தெரிந்தது. கூடவே நின்று போன தங்கள் பிள்ளைகளின் திருமணம் ஒரே மேடையில் நடக்கப் போவது அவர்களுக்கு சந்தோஸமாகவும் இருந்தது. அதனால் சந்தோஸமாக சரி என்று சொல்லி விட்டுக் கிளம்பினார்கள். விஷயம் அறிந்த அஞ்சலி மற்றும் இன்பனுக்கு ரெட்டை சந்தோஷம் கிடைத்தது.
அடுத்த முகூர்த்ததத்தில் இரண்டு திருமணமும் நிச்சயிக்கப் பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் விரைவாக நடந்தது. அடுத்து வந்த நாட்களில் இன்பன் இந்து ஜோடியும் சரி, அஞ்சலி கிரி ஜோடியும் சரி பார்த்துக் கொள்ளவே இல்லை.
சேலை தாலி எடுக்க கூட இன்பன் வீட்டில் இருந்து அஞ்சலி, அம்பிகா, சீனிவாசன் தான் வந்தார்கள். இங்கே இந்து வீட்டிலோ இந்துவும் குணசேகரனும் தான் சென்றார்கள்.
ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. இன்பன் மற்றும் இந்து திருமணம் ஒரு பக்கமும் அதே மேடையில் மற்றொரு பக்கம் கிரி அஞ்சலி திருமணமும் கோலாகலமாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது முதலில் தாலி யார் கட்டுவது என்று குழப்பம் வந்தது. இன்பன் கிரி இருவரில் யார் விட்டுக் கொடுப்பார்கள் என்ற கேள்வி அஞ்சலிக்கும் இந்துவுக்கும் வந்தது.
ஆனால் கிரியின் ஆசைக்காக இன்பன் விட்டுக் கொடுத்தான். தங்கை திருமணத்திற்கு பிறகு தான் திருமணம் செய்வேன் என்று பிடிவாதம் பிடித்த இன்பன் இப்போது கிரிக்காக இந்துவின் கழுத்தில் முதலில் தாலியைக் கட்டினான். எல்லாருமே அவன் செய்ததை வியப்பாக பார்த்தார்கள். அதன் பின் அஞ்சலி கிரி திருமணம் நடந்தது. பேரனும் பேத்தியும் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் குணசேகரன்.
அதன் பின் அஞ்சலி கிரி வீடு செல்ல இந்து இன்பன் வீட்டுக்கு வந்தாள். குணசேகரனுக்கும் ஒரு அறையை ஏற்பாடு செய்து கொடுத்த அம்பிகா அவரை அப்பா என்று அழைத்து சொந்த அப்பா போலவே பார்த்துக் கொண்டாள். கூடவே அவரிடம் இன்பனும் தோழமையோடு பேச முயற்சி செய்தான். அவர் தான் ஒதுங்கிப் போனார்.
அன்று முழுவதும் கிரியும் இன்பனும் அதிகம் பேசிக் கொள்ள வில்லை. கிரியிடம் பேச இன்பனுக்கு பேச ஆசை எழுந்தாலும் இந்த உறவு உடனே ஓடாது. நான் அவனோட அக்காவை எப்படி வச்சிருக்கேன்னு பாத்துட்டு தான் அவன் என்னை நம்புவான் என்று எண்ணி அவனை விட்டு விலகியே இருந்தான் இன்பன்.
இந்துவோ அன்று முழுவதும் தான் செய்தது சரியா தவறா என்ற யோசனையிலே இருந்தாள். ஆனால் அஞ்சலி முகத்தில் இருந்த சந்தோஷம் அவள் கவலையை விரட்டியது.
இரண்டு ஜோடிகளுக்கும் அன்று தான் முதலிரவு. அன்றைய முதலிரவில் இன்பன் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டி தன்னை ஏதாவது செய்வான் என்று இந்து எதிர் பார்க்க அவனோ ஒரு தோழமையோடு தான் அவளிடம் பேசினான். அக்கறையாக அவளை தூங்கச சொன்னான். “இது உன் வீடு”, என்று சொல்லி அவளை சகஜமாக இருக்க சொன்னான்.
ஆனால் அவளுக்கு அவன் மேல் முழு நம்பிக்கை வரவில்லை என்பதால் அவனது தோழமையைக் கூட நம்ப முடியாமல் அவனை விட்டு ஒதுங்கியே இருந்தாள். அவளருகே கூட அவன் படுக்க வில்லை. அவன் தரையில் படுக்கப் போக அவள் அவனை கட்டிலில் படுக்கச் சொல்லி விட்டு தரையில் படுத்துக் கொண்டாள்.
அதே நேரம் கிரி ஆசையாக அஞ்சலியை நெருங்க அவனை கண்களால் சுட்டெரித்தவள் விலகிப் படுத்தாள்.
அவள் விலகலைக் கண்டு “அஞ்சலி”, என்று அவன் அதிர்வாக அழைக்க “முதல்ல நீ என்னைக் காதலிக்கவே இல்லைன்னு எனக்கு தெரியும். அப்படிக் காதலிச்சிருந்தா என்னை நீ இப்படி அலைக்களிச்சு இருக்க மாட்ட. உண்மையா நீ என்னை விரும்பிருந்தா, என் காதலையும் நம்பிருந்தா உன் அண்ணனை விட்டுட்டு என் கூட வான்னு கூப்பிட்டுருப்ப. ஆனா ஒவ்வொரு தடவையும் நீ என்னை வேண்டாம்னு தான் சொன்ன. அதனால உனக்கு என் மேல காதலே கிடையாது. ஒரு வேளை கல்யாணத்துக்கு அப்புறம் என் மேல உனக்கு காதல் வந்துருச்சுன்னா கூட அதை நிரூபிச்சிட்டு என் கிட்ட வா. அது வரைக்கும் தனியாவே கிட”, என்று சொல்லி விட்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்தாள் அஞ்சலி. ஏமாற்றத்துடன் அவள் அருகில் படுத்தான் கிரி. ஆனாலும் அவன் முகத்தில் புன்னகையே இருந்தது.
அடுத்து வந்த நாட்கள் அனைவருக்கும் சாதாரணமாக தான் நகர்ந்தது. இன்பனின் வீட்டில் இந்து சந்தோஷமாக இருந்ததால் எந்த பிரச்சனையும் வர வில்லை. பேத்திக்கு இன்பனால் எந்த பிரச்சனையும் இல்லை. இன்பன் திருந்தி விட்டான் என்று நம்பிய குணசேகரன் மீண்டும் கிரியின் வீட்டுக்கே வந்து விட்டார்.
அதன் பின் நாட்கள் சாதாரணமாக நகர்ந்தது. எப்படி இன்பன் இந்து மேல் உயிரையே வைத்திருந்தானோ அதே போல கிரியும் அஞ்சலி மீது உயிரையே வைத்தான். ஆனால் அவர்களின் மனைவிமார்களோ அவர்களை நம்பாமல் அவர்களை ஒதுக்கி வைத்தார்கள்.
இன்பனின் காதல் புரிந்தாலும் அதை நம்பவா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தாள் இந்து. ஆனால் அஞ்சலி கிரியின் காதல் அதிகமாக இருந்ததால் “அவனுடன் சமாதானம் ஆகிறலாமா? இப்ப தான் எல்லா பிரச்சனையும் சரியாகிருச்சே. இந்து அக்கா கூட நம்ம வீட்ல சந்தோஷமா இருக்காங்க. நான் மட்டும் ஏன் கிரியை விலக்கி வைக்கணும்?”, என்று சிந்தித்தாள்.
அப்போது ஒரு நாள் “நான் வேலைக்கு வர வில்லை”, என்று சொல்லி விட்டு லீவ் போட்டு வீட்டில் இருந்தாள் அஞ்சலி. கிரி மட்டும் தான் வேலைக்கு சென்றான்.
அப்போது தான் காலண்டரில் தேதியைப் பார்த்தாள் அஞ்சலி. பார்த்ததும் இன்னும் இரண்டு நாட்களில் கிரியின் பிறந்த நாள் வருவது தெரிந்தது. இது வரை அவள் எத்தனையோ முறை அவனுக்கு பரிசு வாங்கிக் கொடுத்தும் அதை அவன் வாங்க கூட மாட்டான்.
ஆனால் இப்போது மனைவியாக அவள் தரும் போது அவன் வாங்கித் தானே ஆக வேண்டும். பிறந்த நாள் அன்று பரிசைக் கொடுத்து விட்டு அவனுடன் வாழ்க்கையைத் துவங்க வேண்டும் என்று முடிவு எடுத்தாள். அதனால் அவனுக்கு பரிசு வாங்க சந்தோஷமாக வெளியே கிளம்பியவள் அரைத் தூக்கத்தில் இருந்த குணசேகரனிடம் “தாத்தா நான் கொஞ்சம் கடைக்கு போயிட்டு வந்துறேன். சாப்பிடுறதுக்குள்ள வந்துருவேன்”, என்று சொன்னாள்.
“சரி மா பாத்து போயிட்டு வா. பணம் இருக்கா?”
“இருக்கு தாத்தா வரேன்”, என்று சொல்லி விட்டு சென்றாள்.
அப்போது அவள் அந்த கடைக்குள் நுழைய அங்கிருந்து வெளியே வந்தான் அவளுடைய கிளாசில் படித்த அருண்.
அருண் வேறு யாரும் அல்ல. கிரியின் நண்பன் தான். வெகு நாட்கள் கழித்து அவனைக் கண்டதும் நின்று பேசினாள் அஞ்சலி. தன்னருகே அமர்ந்து வேலை செய்யும் அஞ்சலி அன்று அருகே இல்லாததால் வேலை செய்ய ஓடாமல் கிரியும் லீவ் சொல்லி விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தான். அப்போது அருணும் அஞ்சலியும் புன்னகையுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டான்.
அவர்களைக் கண்டதும் அஞ்சலி உடம்பு சரியில்லை என்று பொய் சொல்லி விட்டு அவனுடன் ஊர் சுற்றுவதாக எண்ணிக் கொண்டு அவனுக்கு கோபம் வந்தது.
“இவன் இவளை விரும்புறவன்னு தான் இவளுக்கு தெரியுமே? அப்புறம் எதுக்கு அவனை கிட்ட நின்னு பேசுறா?”, என்ற பொறாமை அவனுக்குள் தலை தூக்கியது. கோபத்துடன் அங்கிருந்து வீட்டுக்கு கிளம்பினான்.
வீட்டுக்குச் சென்றதும் தாத்தா கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு அறைக்குள் சென்று குட்டி போட்ட பூனை போல அலைந்து கொண்டிருந்தான். ஒரு மணி நேரம், ரெண்டு மணி நேரம், மூன்று மணி நேரம் ஆகியது. ஆனால் அவள் வந்த பாடில்லை. அப்போது அவனை போனில் அழைத்தாள் அஞ்சலி. அதை எடுத்தவன் “என்ன சொல்லு?”, என்றான்.
“இவன் ஏன் இப்படி கோபமா பேசுறான்?”, என்று எண்ணிய அஞ்சலி “என்ன ஆச்சு கிரி”, என்று கேட்டாள்.
“ஒண்ணும் இல்லையே, எதுக்கு கால் பண்ணின?”
“சாப்பிட்டியான்னு கேக்க தான் பண்னினேன்”, என்று உண்மையை மறைத்தாள். அவனுக்கு பிடித்த பொருள்கள் என்ன என்ன என்று கேட்டு அதை அவனுக்கு வாங்கிக் கொடுக்க தான் அவனை அழைத்தாள். ஆனால் அவன் கோபமாக பேசவும் பேச்சை மாற்றி விட்டாள்.
“நான் சாப்பிட்டா என்ன? சாப்பிடலைன்னா என்ன? என் மேல உனக்கு என்ன அக்கறை?”, என்று கேட்டான் கிரி.
“உனக்கு என்ன டா ஆச்சு? நான் தினமும் தானே கேக்குறேன்?”
“தினமும் கேக்குறது வேற? ஆனா இன்னைக்கு தான் நீ பிசியா இருக்கியே? அதையே கண்டிநியு பண்ணு. உன் பிஸி டைம்ல என்னை எல்லாம் நினைக்காத”, என்று கோபத்துடன் சொல்லி விட்டு வைத்து விட்டான்.
“என்ன ஆச்சு இவனுக்கு? ஆஃபிஸ்ல பயங்கர வேலையோ?”, என்ற குழப்பத்துடன் வீட்டுக்கு கிளம்பினாள் அஞ்சலி. இவனுக்கோ எரிச்சலாக வந்தது.
“நான் இவளைக் காதலிக்கலைன்னு நினைச்சு இவ என்னை வெறுத்துட்டாளோ? அதான் என்ன ஒதுக்கி வச்சிருக்காளோ?”, என்று எண்ணிய கிரிக்கு அவளை அருண் உடன் பார்த்தது எரிச்சலையும் கோபத்தையும் கொடுத்தது.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.