“நானும் உன்னை லவ் பண்ணுறேன் தான். ஆனா நீ தான் நம்பலை. சரி அதை விடு. நான் ஒண்ணும் நாம ஹனிமூன் கொண்டாட உன்னைக் கூப்பிடலை. ஹனிமூன் போகணும்னு பேசுனதுக்கு தான் நீ என்ன காரியம் பண்ணினேன்னு பாத்தேனே? நான் இப்ப பேச வந்தது அஞ்சலி கிரிக்காக தான். நம்ம வரலைன்னா அவங்களும் போகாம இருக்காங்க. அதனால தான் போகலாம்னு சொன்னேன். அவங்க அதை ஹனிமூனா நினைச்சிக்கட்டும். நாம சும்மா ஒரு டூர் போன மாதிரி நினைச்சு போகலாம்னு தான் சொல்ல வந்தேன். மத்த படி நான் சொன்னது சொன்னது தான். உன் காதல் இல்லாமல் உன் அனுமதி இல்லாம உன்னைத் தொட மாட்டேன். யோசிச்சு முடிவு சொல்லு”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.
சிறிது நேரம் யோசித்தவள் அவனிடம் “சரி போகலாம். டிக்கட் போடுங்க. ஆனா அவங்க முன்னாடி நடிக்க வேண்டியது வரும். இல்லைன்னா அவங்க கண்டு பிடிச்சிருவாங்க”, என்றாள்.
“அதெல்லாம் பாத்துக்கலாம். முதல்ல அவங்களுக்கு நம்மளைப் பாக்க நேரமே இருக்காது. அவ்வளவு காதல் ரெண்டு பேருக்குள்ள. கொடுத்து வச்சவங்க”, என்று சொல்லி விட்டு பெருமூச்சு விட்டான்.
அவனை முறைத்தவளுக்கு உள்ளுக்குள் சிரிப்பு வந்தது. கூடவே அவன் நிலையும் அவளுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அவனை அவளால் ஏற்றுக் கொள்ளத் தான் முடியவில்லை.
ஒரு வழியாக இரண்டு ஜோடிகளும் ஹனிமூன் கிளம்பிச் சென்றார்கள். அவர்களுக்கு தங்க என்று அனைத்து ஏற்பாடுகளையும் இன்பன் செய்திருந்தான். அதனால் அங்கே சென்றதும் நேரே அவரவர் அறைக்குச் சென்று குளிக்க சென்றார்கள்.
கிரியும் அஞ்சலியும் காதல் பறவைகளாக சிறகடிக்க வழக்கம் போல இன்பனும் இந்துவும் தனித்து இருந்தனர்.
அதன் பின் இரண்டு ஜோடிகளும் ஊர் சுற்ற கிளம்பினார்கள் . அங்கே ஜோடி ஜோடியாக தனித்து தான் சுற்றிப் பார்த்தார்கள். அங்கே சென்றதும் கிரி மற்றும் அஞ்சலி ஜோடியின் நெருக்கம் கொஞ்சம் அதிகமாக இருக்க அதைக் கண்ட இவர்களுக்கு தான் தர்மசங்கடமாக இருந்தது.
ஆனாலும் அதை விடுத்து இருவரும் இயற்கையை ரசித்தார்கள். அங்கு இருந்த அழகான இடங்களை ரசித்து ஒரு தோழி போல இந்து குதூகலிக்க இன்பனுக்கு அவள் அந்த அளவுக்கு தன்னிடம் பேசுவதே போதுமானதாக இருந்தது. ஒரு வாரம் அங்கே அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள்.
தினமும் குணசேகரனுக்கும் அம்பிகா மற்றும் சீனிவாசனுக்கும் போன் செய்து பேச மட்டும் மறக்க வில்லை. அடுத்த நாள் ஊருக்கு கிளம்ப வேண்டிய நிலையில் அன்று இரவு பயங்கரமாக மழை கொட்டித் தீர்த்தது. இடியும் மின்னலும் சற்று அதிகம் இருந்தது.
அன்று வெளியே சுற்றப் போகாமல் அறைக்குள்ளே அடைந்தனர். கிரியோ அந்த குளிரில் அஞ்சலிக்கு ஆடையாக மாறிப் போனான். ஹனிமூன் கொண்டாட வந்த தம்பதிகள் எப்படி இருப்பார்களோ அப்படி இருந்தார்கள் அவர்கள்.
இன்பன் இந்து தம்பதி இடையே எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல் இந்து தரையில் படுக்கப் போக “டைல்ஸ் ரொம்ப குளிரா இருக்கு இந்து. இன்னும் குளிர் ஏறத் தான் செய்யும். பேய் மழை பெய்யுது. அதனால தரை வேண்டாம். உடம்புக்கு ஏதாவது வந்துரும். அதனால இன்னைக்கு நீ கட்டில்ல படுத்துக்கோ”, என்றான் இன்பன்.
அவன் சொன்ன உண்மை புரிந்தாலும் ஒரே கட்டிலில் எப்படி ஒன்றாக படுக்க முடியும்? அதுவும் இந்த சின்னக் கட்டிலில் எப்படி என்று அவள் தவிப்பாய் அவனைப் பார்க்க அவள் தவிப்பை உணர்ந்தவன் “உன்னை மட்டும் தான் மேல படுக்கச் சொன்னேன் இந்து. நானும் படுப்பேன்னு சொல்லலை. நான் கீழே படுத்துக்குறேன்’
“உங்களுக்கு குளிர் அடிக்காதா? அதே குளிர் தரை தானே?”
“பரவால்ல நான் தாங்கிப்பேன். நீ மேல படுத்துக்கோ”, என்று சொல்லி ஒரு போர்வையை தரையில் விரித்தான். “இது எப்படி குளிர் தாங்கும்?”, என்று அவளுக்கு கவலையாக இருந்தது.
அவனோ அவளைத் திரும்பிக் கூட பார்க்காமல் படுத்து விட்டான். அவளும் கட்டிலில் படுத்தாள். சிறிது நேரம் கழித்துப் பார்த்தாள். குளிரில் காலைச் சுருக்கிக் கொண்டு படுத்திருந்தான். அவனைப் பார்க்கவே அவளுக்கு பாவமாக இருந்தது. அந்த நிலையில் அவனைக் கண்டு அவளுக்கு தூக்கம் சிறிதும் வர வில்லை.
“இவன் உண்மைலே திருந்திட்டானோ? நான் தான் இவனை தப்பாவே நினைக்கிறேனா? ஐயோ பாவம், ரொம்ப குளிருது போல? இப்ப என்ன செய்ய?”, என்று எண்ணியவள் மெதுவாக கட்டிலை விட்டு இறங்கி அவனை நெருங்கிச் சென்றாள்.
ஆனாலும் அவனை எழுப்புவது அவளுக்கு தர்மசங்கடமாக இருந்தது. பின் தைரியத்கை வரவழைத்துக் கொண்டு குனிந்தவள் “இன்பன் இன்பன்”, என்று அழைத்தாள். அவனோ அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டவள் அவன் தோளைத் தொட்டு எழுப்பினாள்.
அப்போது தான் உறங்க ஆரம்பித்தவன் அவள் எழுப்பியதும் படக்கென்று விழித்து “என்ன ஆச்சு இந்து ஏதாவது வேணுமா மா?’, என்று அக்கறையாக கேட்டான். அந்த அக்கறையில் அவள் மனது மேலும் அவன் பக்கம் சாய்ந்தது.
“இன்னைக்கு குளிர் ரொம்ப அதிகமா இருக்கு. இதுல நீங்க கீழ படுக்க வேண்டாம். உடம்புக்கு ஏதாவது வந்துரும்”
“பரவால்ல மா நீ தூங்கு”
“இல்லை நீங்க கட்டில்ல படுங்க. எந்திரிங்க”
“இல்லை இந்து, பரவால்ல. நான் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்”
“பிளீஸ், இப்ப நிலைமை சரி இல்லை. எந்திங்க. வாங்க”
“அப்ப நீ என்ன செய்வ?”
“எனக்கு உங்க மேல நம்பிக்கை இருக்கு. ரெண்டு பேருமே மேல படுத்துக்கலாம்”, என்று சொல்ல அவன் முகம் பூவாக மலர்ந்தது.
“தேங்க்ஸ் இந்து. இது போதும் எனக்கு. ஆனா கட்டில் ரொம்ப சின்ன கட்டில். ரெண்டு பேருமே பிரியா படுக்க முடியாது. ஹனிமூன் கப்புல்ஸ் ரூம்னு இப்படி போட்டுருக்காங்க போல? இன்னைக்கு ஒரு நாள் தானே? நான் கீழேயே படுத்துக்குறேன். நீ தூங்கு போ மா”
“ஃப்ச் எதுக்கு இன்பன் இப்படி பிடிவாதம் பண்ணுறீங்க? சின்ன கட்டில்னா என்ன? உங்க மேல என்னோட கையோ காலோ பட்டா உங்க கற்பு ஒண்ணும் கறைஞ்சு போயிராது”, என்று எரிச்சலில் சொன்னாள். ஏனென்றால் தான் இவ்வளவு சொல்லியும் அவன் மறுத்துக் கொண்டிருக்கிறானே என்று எண்ணி தான் அவளுக்கு எரிச்சல் வந்தது.
ஆனால் அவள் அப்படிச் சொன்னதும் அவளை வேதனையாக பார்த்தான் இன்பன். அவன் பார்வையில் அவளுக்கு தான் அதிகமாக பேசி விட்டோம் என்று புரிந்தது. அதனால் சாரி என்று முணுமுணுத்தாள்.
“உன் கை கால் என் மேல படாதான்னு நான் ஏங்குற ஏக்கம் எனக்கு மட்டும் தான் தெரியும் இந்து”, என்று அவன் ஆழ்ந்த குரலில் சொல்ல அவள் திகைத்து போனாள்.
அவள் அமைதியாக அவனையே பார்த்துக் கொண்டிருக்க “உன் அருகே படுக்குறது எனக்கு அவ்வளவு சந்தோஷம் தரும். நீ தப்பா நினைச்சாலும் அது தான் உண்மை. அப்படி இருக்குறப்ப நீ இத்தனை தடவை கூப்பிட்டும் நான் இவ்வளவு தயங்குறது உனக்காக தான். என் கால் கை உன் மேல பட்டா உனக்கு பிடிக்காதுன்னு தான் நான் வேண்டாம்னு சொல்றேன். தெரியாம உன் மேல என் கை பட்டுச்சுன்னா கூட நான் வேற எதுக்கோ அடி போடுறேன்னு நீ சொல்லிருவியோன்னு தான் நான் உன்னை விட்டு அவ்வளவு தள்ளி இருக்கணும்னு நினைக்கிறேன்”, என்று அவன் மனதை மறையாமல் சொல்ல அவளுக்கு தான் என்னவோ போல ஆகி விட்டது.
“இன்னைக்கு எதுவும் சொல்ல மாட்டேன். மேல வந்து படுங்க. வாங்க”, என்று சொல்லி விட்டு ஒரு பக்கம் சென்று படுத்து விட்டாள். அதற்கு மேல் மறுக்க முடியாது என்பதால் கட்டிலில் மறு பக்கம் சென்று படுத்தான் .
இருவருமே முதுகு காட்டி தான் படுத்திருந்தார்கள். யாராவது ஒரு ஆள் தான் நேராக படுக்க முடியும். இருவரும் நேராக படுத்தால் கட்டாயம் மற்றவர் மேல் படும் என்பதால் இருவரும் அப்படியே படுத்திருந்தார்கள்.
அவனுக்கோ அதிகமான குளிர், மனதுக்கு பிடித்த மனைவி என்று அவன் உணர்வுகள் ஜெட் வேகத்தில் எகிறிக் கொண்டிருந்தது. அவள் வைத்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும் என்று எண்ணி அசையாமல் படுத்திருந்தான். அவளுக்கோ தூக்கம் என்பது மருந்துக்கும் வர வில்லை. அவன் அருகே படுத்திருப்பது அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை தான் அவளுக்கு கொடுத்தது. கூடவே அவன் மனதையும் அறிந்த பிறகு அவனை அலைய விடுகிறோமோ என்றும் தோன்றி வைத்தது.
காதல் தொடரும்….
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.