அன்று ஞாயிற்றுக்கிழமையாக இருக்க, இளந்திரையன் காலையில் எழுந்தவன் வஞ்சி செடிகளுக்குத் தண்ணீர் விடுவதைப் பார்த்தபடி நின்றான். வஞ்சி ஒன்றும் பேசவில்லை, இளந்திரையன் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல்,
“கமலி ஏதோ வாங்கனும்னு சொன்னாளே, இன்னிக்குப் போய் வாங்கலாமா?” என்று கேட்க
“நானே வாங்கிடுவேன், நீங்க எதுக்கு?” என்றதுக்கு
“வீட்ல சும்மாதானே இருக்கேன்” என்றதும் அவளும் சரியென்றுவிட காலை உணவு முடித்து இருவரும் தி.நகர் கிளம்பினார்கள். இருவரும் வண்டியை விட்டு இறங்கி சாலையில் நடக்கவும்
“எப்படியும் இரண்டு நாள்ல அவ வருவாதானே? அவளே வாங்கினா என்னவாம்?” என்று இளந்திரையன் கேட்க
“உங்கம்மா கூட வந்து அவளால பார்த்து வாங்க முடியாதாம்” என்றபடி அவள் முன்னே செல்ல, இவனும் அவளுடனே போக ஒவ்வொர் கடையாக ஏறி இறங்கினார்கள். மூன்று மணி நேரமாக சுற்றியிருக்க இளந்திரையன் ஓய்ந்து போனான். கைகொள்ளா அளவுக்குப் பைகள் இருக்க,
“என்னடி இஞ்சி? இப்படி பண்றா அவ? அந்த ஸ்ரீனிவாசன நினைச்சா பாவமா இருக்குடி” என்று புலம்பியபடி அவன் நடக்க, இவள் ஒன்றும் பேசாமல் ஒரு ஃபேஷன் ஜூவல்லரி கடையில் நின்று கமலிக்கு விடியோ கால் செய்து, அவளுக்குப் பிடித்த மாதிரி தேர்வு செய்ய
“அந்த டிசைன்ல வைட் ஸ்டோன் இருக்க மாதிரி பாரு அத்தாச்சி” என்று கமலி சொல்ல
“அத்தாச்சி! அண்ணா கிட்ட காசு மட்டும் வாங்கு, அவரை ஏன் அழைச்சிட்டு வந்த?” என்று கமலியும் கடுப்பானாள்.
“கூட வந்ததால நீ தி.நகரையே விலைக்கு வாங்குறனு எனக்குத் தெரிஞ்சது” என்று அவன் திட்ட
“நீயும் அம்மா மாதிரிதான் அண்ணா, பிடிச்சதா அவங்களும் வாங்க விட மாட்டாங்க, நீயும் வாங்க விட மாட்ட” என்று அவள் கண்கள் கலங்கி சொல்ல
“உங்களை யார் குறுக்கப் பேச சொன்னா? நான் தானே டி வாங்குறேன், நீ கண்ணைக் கசக்காத, இந்த டிசைன்ல பாரு வைட் ஸ்டோன் இருக்கு, இந்த முத்து செட் கூட நிறைய ஃபங்கஷன் போடலாம் கமலி” என்று வஞ்சி இளந்திரையனைக் கண்டுகொள்ளாமல் பேச, அவன் கால் வலியில் அப்படியே உட்கார்ந்து கொண்டான். உட்கார்ந்திருந்தவன் கையில் போனைக் கொண்டு வந்து
“பிடிங்க இதை” என்று அவளிடம் கொடுத்தவள் வாங்கிய நகையை ஒவ்வொன்றாய் அவள் எடுத்து கமலியிடம் காட்ட, அவளும் பதில் சொல்ல பதினைந்து நிமிடம் பாவையன்றி வேறு பார்வையின்றி இருந்தான் இளந்திரையன்.
அந்த கடையில் வாங்கி முடிக்கவும்,
“முதல்ல சாப்பிட்டு அடுத்து வாங்கலாம்“ என்று சொல்ல வஞ்சியும் அவனுடன் உண்டு முடித்து கடைத்தெருவினுள் நடக்க
“அதான் தங்கத்துல நகை இருக்கே, இதெல்லாம் ஏன் வாங்குறா இவ? டிரஸும் அம்மா அத்தனைப் புடவை எடுத்து வைச்சிருக்காங்க, பேசாம அவளே செலெக்ட் பண்ணி வாங்கிடலாம், சொன்னா என்னைப் பேசுற நீ?” என்று இளந்திரையன் பேச
“உங்கம்மாவுக்கும் உங்களுக்கும் மட்டும்தான் பிடிச்சது பிடிக்காததுன்னு இருக்கா என்ன? கமலிக்கும் பிடிச்சதுன்னு ஒன்னு இருக்கு, உங்கம்மா அவளை எந்த மாடர்ன் டிரஸும் போட விடுறதில்லை, சுடிதார் கூட அவ இஷ்டப்படி எடுக்க விடுறதில்லை, நாளைக்கு அவ சென்னை வந்தா இங்க இருக்க மாதிரி டிரெண்டியா போட நினைக்கிறா, மாப்பிள்ளையைக் கூட்டிட்டு அவளுக்கு ஷாப்பிங் போகவா நேரமிருக்கும்? உங்களை நான் வர வேண்டாம்னு தானே சொன்னேன்” என்று எரிச்சலுடன் சொன்னவள்
“சொந்த தங்கச்சிக்குச் செய்ய எவ்வளவு யோசிக்கிறீங்க நீங்க? எங்க மாமா மாதிரி கொஞ்சமும் நீங்க இல்லை” என்று அவள் திட்டிவிட
“உங்க மாமாவை இவ்வளவு புகழ்றியே? ஒன்னு சொல்லவா உங்க மாமாவால எனக்கு உன்னைப் பிடிக்காம போச்சு” என்றவன் சாலையில் வஞ்சியின் ஓரமாய் வண்டி வரவும், அவளை இழுத்துப் பிடித்து மறுபக்கம் நிறுத்தியவன் வாகனம் வரும் பக்கமாய் அவன் நடந்தான்.
“பார்த்து வா” என்று சொல்லி
“எப்ப பார்த்தாலும் உன்னோட என்னைக் கம்பேர் பண்ணிட்டே இருப்பார், இரிட்டேட் ஆகும் உன் பெயரைக் கேட்டாலே எனக்கு, இங்க வந்தனைக்குக் கூட நீ வீடு வாங்கிட்டேன்னு ஒரே புரவலம்” என்று சலிப்பாய் சொன்னவன்
“ஆமா, இப்போ டூ இயர்ஸாதானே வேலைக்குப் போற, அதுக்குள்ள எப்படி வீடு? பணத்துக்கு என்ன பண்ணின?” என்று வந்த அன்றே கேட்க நினைத்தக் கேள்வியைக் கேட்டான்.
“அது லோன் போட்டிருக்கேன், பாதி பணம் ஊர்ல அப்பாவுக்குன்னு ஒரு கட்டுமனை இருந்துச்சு அதை கார்த்தியண்ணா கிட்ட வித்துட்டேன், அதை வைச்சு மேனேஜ் பண்ணிக்கிட்டேன்”
“ஓஹ்! உங்க வீடு இருக்குமே அது யாருக்காம்?” என்று இளந்திரையன் ஒருமாதிரியானக் குரலில் கேட்க
“ஏன்? இரண்டு அண்ணனுங்களுக்கும்தான்”
“அப்போ உங்கப்பாவோட பங்கு?”
“அதுவும் நான் வேண்டாம் சொல்லிட்டேன், ஒரே விடு இருக்கறது, மூணு பேர் எப்படி பங்கு போட, அதுக்கும் எனக்கு செட்டில் பண்றேன் சொல்லியிருக்காங்க அண்ணா, அவங்களுக்குள்ள பங்கு பிரிக்கிறப்ப எனக்குப் பணம் வந்துடும்”
“ம்ம், அதான் அன்னிக்கு அவன் அந்த சீன் போட்டானா? என்னமோ கூடப்பொறந்தவன் மாதிரி துள்ளுறான்?” என்றான் கார்த்திக்கேயன் மீது கடுப்பாக.
“கூடப்பொறந்தா தான் அண்ணானு இல்லை ஒகே? அவங்கதான் இரண்டு வருஷமா எனக்கு எதாவதுன்னு பார்க்கிறாங்க” என்று அவனைக் குற்றப்பார்வைப் பார்க்க
“நான் பார்க்கலை அதானே? தெரியும் நீ அங்கதான் வருவேன்னு” என்று எரிச்சலாக சொன்னவன்
“அதை விடு, இன்னும் எவ்வளவு தூரம் நடக்கனும்? அடுத்து என்ன?” என்று மனைவி முகம் பார்க்க
“கொஞ்சம் நைட் டிரஸ் வாங்கனும்” என்றபடி அந்த பெரிய துணிக்கடையைக் காட்ட, இருவரும் அங்கே போக, இளந்திரையன் பைகளை வைத்துக் கொண்டு ஒரு இடத்தில் உட்கார, வஞ்சிதான் கமலிக்கு ஏற்றவாறு உடைத்தேர்வு செய்தாள். சிறிது நேரத்தில் அவளருகே வந்த இளா,
“உன் சைஸ் என்ன இஞ்சி?” என்றதும் பதறியவள் சுற்றிப்பார்த்து அவனை முறைக்க
“என்ன கேள்வி இது?” என்று அவனிடம் பல்லைக் கடிக்க
“லூசு! நீ ஒரு டிரஸ் போடுவியே, அன்னிக்குக் கூட ப்ளாக் வித் வைட்ல, நைட்டி மாதிரி ஆனா கொஞ்சம் வித்தியாசமா” என்று இளா யோசித்து யோசித்துப் பேச
“மேக்ஸீ அதுக்கு இப்போ என்ன?”
“அது அங்க இருக்கு, உனக்கு வாங்கலாம்னு கேட்டேன்” என்றதும் ஒரு நிமிடம் உருகித்தான் போனது வஞ்சியின் உள்ளம். ஆனால் இந்த அக்கறையெல்லாம் மனைவி என்பதால் வந்ததுதானே? இரண்டரை வருடம் தனியாக தவித்தேனே? அப்போது எங்கே போனான் இவன் என்ற எண்ணம் உருகிய உள்ளத்தை ஒரே நொடியில் உறைய வைக்க, இளகிய மனதில் இறுக்கம், அது அப்படியே இளாவின் பக்கம் பாய்ந்தது.
“எனக்கு வேணும்னா நான் வாங்கிப்பேன், நீங்க ஒன்னும் வாங்கித் தர தேவையில்ல” என்றாள் பட்டென.
அதில் இளந்திரையன் முகம் ஏமாற்றத்தைக் காட்டியது,
“ப்ர்ஸ்ட் டைம் ஒன்னு வாங்கித்தரேன்னு கேட்டா இப்படித்தான் பேசுவியா நீ?” என்று கடுப்போடு கேட்டவன் அவள் பதில் பேசாமல் இருக்க
“என்னமோ பண்ணு போடி” என்று மீண்டும் போய் உட்கார்ந்துகொண்டான். ஒரு வழியாக ஐந்து மணி அளவில் ஷாப்பிங் முடிந்து வீட்டிற்கு வந்தார்கள்.
இளா பையை எல்லாம் அப்படியே ஹாலில் வைத்தவன் அப்படியே சோஃபாவில் படுத்துவிட்டான். அப்படியொரு அலைச்சல் இருவருக்கும், வஞ்சிக்கும் களைப்பாக இருக்க, உள்ளே போய் உடைமாற்றி வந்தவள் செடிகளை ஒரு முறைப் பார்த்துவிட்டு அவனுக்கும் அவளுக்கும் சேர்த்து காஃபி கலக்கி அவனிடம் கொண்டு போய் கொடுக்க, இளாவும் மறுக்காது வாங்கினான்.
“அடடா! அதை மறந்துட்டேன் பாரேன் மாமா மகன்றதாலதானே என்னை விழுந்து விழுந்து கவனிக்கிற நீ?” என்றான் நக்கலாக.
அந்த நக்கலில் நங்கையின் நயனங்கள் அனல் தெறிக்க “பின்ன அத்தையுமில்ல மாமாவுமில்லையே அத்தைப் பொண்ணு எப்படி இருப்பான்னு கொஞ்சம் கூட அக்கறையில்லாத ஆள் தானே நீங்க? மனைவியாவும் நினைக்கல, அத்தைப் பொண்ணாவும் அக்கறைப்படல நீங்க என்னைப் பேசுறீங்களா?” என்று அவனைப் போட்டு வறுத்தெடுக்க
“ஏன் டி நான் பார்க்கலைன்னா என்ன? எங்கப்பா உன்னைப் பார்ப்பார்ன்னு எனக்கு நல்லாவே தெரியும், நீ ஃபைனல் எக்ஸாம் பாஸ் பண்ணினது, கேம்பஸ் செலெக்ட் ஆனது, அப்புறம் வீடு வாங்கினது எல்லாம் உன் மாமா எங்கிட்ட சொல்லிடுவார், ஒருவேளை அவரும் அக்கறை இல்லாம இருந்திருந்தா நான் உன்னைக் கவனிச்சிருப்பேனோ என்னவோ? எல்லாத்துக்கும் காரணம் அவர்தான், ஐ அம் அப்பாவி அத்தைப் பொண்ணே” என்று ராகம் பாட, அவள் முறைத்துவிட்டு போனாள்.
இரு நாட்கள் வேகமாய்ப் போக, அன்று காலையில்தான் மாதவியும் கமலியும் வருவதாய் இருக்க, இரவே இளந்திரையன் சொல்லிவிட்டான்
“நான் காலையில போய் அவங்களை அழைச்சிட்டு வந்துடுவேன், நீ முழிக்க வேண்டாம், வெளியே பூட்டி சாவி வைச்சுக்கிறேன்” என்று சொல்லி இருந்தான். வஞ்சி எழும்போது மணி ஐந்தரை, இளந்திரையன் எழுந்த சத்தமே அவளுக்குக் கேட்கவில்லை, வெளியே இருந்த பாத்ரூமை அவன் பயன்படுத்திருக்க, இவளைத் தொந்தரவே செய்யாமல் சென்றிருந்தான். அலாரம் அடிக்கவும் விழித்தவள் மெத்தையை விட்டு நகரவில்லை.
மனதில் மட்டற்ற யோசனைகள்! மாதவியை நினைத்தாலே கலக்கமாய் இருந்தது. அவரின் பேச்சுகள் கண்டு பயம்! இவளும் பேசிவிடுவாள்தான் ஆனால் வீட்டிற்கு வந்தவரை வரைமுறையின்றி பேசும் பண்பில்லாதவள் இல்லையே அவள். சீக்கிரம் எழுந்து சமைக்க வேண்டும் என்று நினைத்தபடியே அவள் எழ, எழுந்தவளின் கழுத்தில் புதிதாய் இருந்த தாலி செயின் உறுத்தியது. அதனைக் கையில் எடுத்துப் பார்க்கவும் ஒரு பெரும் நிம்மதி அவளினுள்.
“அப்பாடா! இதுக்கு வேற டென்ஷன் ஆனேன், நல்லவேளை அவங்கம்மா வர முன்னாடியே போட்டுட்டான், உஷார்தான்” என்றவளுக்கு மனதில் ஒரு உற்சாகம். இதனை வைத்துதானே என்னைப் பாடாய்படுத்தினான் இளா? இனிமேல் என்ன செய்வான் என்று நினைக்க புன்னகை புலர எழுந்து குளித்து வேலையைப் பார்த்தாள்.
ஆறு மணி போல் அவர்கள் எல்லாம் வந்துவிட, மாதவிக்கு மருமகளின் வீட்டை வெளியில் இருந்து பார்க்கவுமே அசந்துவிட்டார்.
அப்போதுதான் பாலைக் காய்ச்சி, காய்கறியை நறுக்கத் தொடங்கிய வஞ்சி கதவுத் திறக்கும் ஓசையில்
“வாங்க அத்தை!” என்று வரவேற்றவள் கமலியைக் காணவும்
“வாடி கமலி!” என்று அவளைக் கட்டிக்கொள்ள, அதனைக் கடுப்போடு பார்த்தான் இளந்திரையன்.
‘நான் வந்தனைக்கு இந்த வரவேற்பு இல்லையே?’ என்று உள்ளே காந்தியது அவனுக்கு.
“ஹைய் அத்தாச்சி!” என்று அவளும் கட்டிக்கொள்ள, வீட்டைச் சுற்றிப் பார்வை ஓட்டியவள்
“ம்மா பாத்ரூம் அங்க இருக்கு” என்று அம்மாவிடம் காட்டியவன்
“ஹே! முதல்ல போய் ரெடியாகு, நல்ல நேரத்துல புடவை எடுக்கனும், உள்ள இருக்க பாத்ரூம் யூஸ் பண்ணிக்கோ” என்றவன் கிச்சனில் இருந்த வஞ்சியிடம் வந்தான்.
“தேங்க்ஸ்” என்று தாலிக்காக வஞ்சி இளாவிடம் நன்றி சொல்லியவள்
“எப்போ போட்டீங்க?” என்றாள், கைகள் கேரட்டை வெட்டிக்கொண்டு இருக்க, இவனின் பதிலை எதிர்ப்பார்க்க, அவன் கிச்சன் மேடையில் ஏறி உட்கார்ந்து,
“அதெல்லாம் நான் ப்ரம்ம மூகூர்த்தத்திலதான் போட்டேன்” என்றான் மிதப்பாக.
“தூங்கும்போது போடுவாங்களா?” என்று அவள் முகம் சுருக்கிக் கேட்க
“என்னமோ ஃப்ர்ஸ்ட் டைம் போடுற மாதிரி பண்ணாதடி” என்றவன் குரலைத் தாழ்த்தி
“என்னால உன்னைத் தொட்டுட்டே இருக்க முடியல, அட்லீஸ்ட் தாலியாவது தொட்டுட்டு இருந்தா என்னை நினைப்ப, நினைச்சிட்டே இருந்தா பிடிக்கும்ல, அதான் போட்டுவிட்டேன்” என்றான் அவள் பின் நின்று.
அவனின் பேச்சும், அதன் பொருளும் புரிய ஒரு நொடியில் பெண்வதனம் செவ்வானம் கொள்ள, மேடையில் உட்கார்ந்திருந்தவன் இறங்கி அவள் முன்னால் நின்று முகம் பார்க்க,
“ஏட்டி இஞ்சி! வெட்கப்படுறியா நீ?” என்றதும் சிரிப்பைத் தனக்குள் சிறைப்படுத்தியவள் கையில் இருந்த கத்தியை அவனை நோக்கி நீட்டியவள்,
“நான் சென்ஸ்” என்றாள்.
“ஹாஹா! “ என்று அவன் சிரிக்க, அவளோ விழிகளைத் தாழ்த்தி வேலையில் கவனமாக இருக்க, அவள் கையில் இருந்த கத்தியை வாங்கி வைத்தவன் அவளின் கரங்களைப் பற்றிக்கொண்டு
“நான் நான்சென்ஸா? கண்ணுக்கு நீ ரொம்ப அழகா தெரியற, அப்புறம் காதும் நல்லா கேட்குது, அப்புறம் குளிச்சிட்ட போல, நல்லா வாசனைத் தெரியுது” என்றவன் அவளை மிகவும் நெருங்கி நின்றான்.
“அப்புறம்.. வேற என்ன சென்ஸ் இருக்கு?” என்று இழுத்தவன் அவளின் கன்னங்களை மெல்லமாய் வருட விரல்களால் அவளை நெருங்க, அதற்கு மேல் தாளாமல் வஞ்சி அவனை வேகமாய்த் தள்ள தடுமாறி நின்றான் இளந்திரையன்.
“ஏன் டி தள்ளுற?” என்று அவன் கோபமாய்க் கேட்க
“எனக்கு டைம் வேணும்” என்றாள் பொதுவாக. அதில் இளந்திரையனின் மனம் கொஞ்சம் இளகிப்போனது, இத்தனை நாளாய் நீ வேண்டாம் என்றவள் நேரம் வேண்டும் என்கிறாளே, அதில் உள்ளம் துள்ளியது.
இவர்கள் பேசிக்கொண்டிருக்க மாதவி பாத்ரூமினுள் இருந்த வெளியே வந்தவருக்கு அவர்கள் அருகருகே நின்று பேசுவது கண்டு உள்ளம் வெதும்பினார், மகனின் மாற்றத்தில். சின்ன வயதில் இருந்து அவர் சொல்வதை மீறாத மகன் இப்போது மொத்தமாய் மாறிப்போனான் என்பதை ஏற்கவும் முடியாமல் அந்த மாற்றங்களைப் பார்க்கவும் முடியாமல் ஒரு பெருங்கோபம் அவரினுள்.
உண்மையில் இளந்திரையனின் முடிவுகள் அனைத்தும் அவனுடையதே! அவனின் அகமுடையது! அது சொல்வதைத்தான் கேட்பான்! இத்தனை ஆண்டுகள் இருவரின் எண்ணங்கள் ஒத்துப்போயிருந்தது அவ்வளவுதான், அது புரியாமல் அவர் வேறொரு நினைப்பில் வெந்து கொண்டிருந்தார்.
அவரைக் கண்ட இளா,
“என்னம்மா அங்க நின்னுட்டே இருக்க, வந்து சோஃபாவுல உட்காரு” என்று சொல்லி அவருடன் உட்கார்ந்து கொண்டான்.
“அத்தை உங்களுக்குக் காஃபி தானே?” என்று வஞ்சி கிச்சனில் நின்றபடி கேட்க
“ம்ம்” என்றார் மாதவி.
“இளா உங்களுக்குப் பூஸ்டா காஃபியா?” என்று வஞ்சி அவனிடம் கேட்க
“பூஸ்ட் கொடு” என்றவன் போனில் என்னவோ பார்க்க, மாதவிக்கு மருமகள் மகனைப் பெயர் சொல்வது கண்டு பொறுக்கவில்லை, பொங்கிவிட்டார்.
“அது என்ன படிச்சு நாலு காசு சம்பாரிச்சா பொம்பள புள்ள புருஷன் பெயரை சொல்லுவியா நீ?” என்றதும் அதுவரை தெளிவாய் பொலிவாய் இருந்த வஞ்சியின் முகம் இவரின் பேச்சில் வாடிவிட்டது. வஞ்சி எதாவது பதில் பேசுவாள் என்று எதிர்ப்பார்த்து இளந்திரையன் அவள் முகம் பார்க்க, அவளோ அமைதியாய் இருக்க
“என் பொண்டாட்டி என் பெயரை சொல்றதுல உனக்கு என்னமா பிரச்சனை? அவ என்னை வாயா போயான்னு கூட சொல்லுவா, ஏன் வாடா போடான்னு கூட சொல்லுவா உனக்கு என்ன வந்துச்சு?” என்று அவரிடம் கேட்க
“நீ இப்படியெல்லாம் பேசினா அவ உன்னை மதிக்கவே மாட்டா” என்று மாதவி இன்னும் பேச
“மதிக்கிறா மிதிக்கிறா அதெல்லாம் என் பாடு அவ பாடு, உனக்கு என்ன வந்துச்சு, உன் வீட்டுக்காரை வேணும்னா பெயர் சொல்லிக் கூப்பிட்டுக்கோ, சும்மா காலையில நல்ல விஷயத்துக்குப் போகும்போது என்னை கடுப்பேத்தாத சொல்லிட்டேன்” என்றான் அதட்டலாக.