நிதீஷ் “நான் எதுக்கு மாமா இவ கல்யாணத்தை கெடுக்கப்போறேன்? நமக்குனு ஒரு பாரம்பரியம் இருக்கு. அதை ஏன் மாத்துறிங்கனுதான் கேட்டேன். அதோட முல்லையாலையும் அவங்க வீட்டுல ஒரு வாய் சாப்பாடு கூட நிம்மதியா சாப்பிட முடியாது. இப்படி குடும்பத்துல கட்டிக்கொடுத்தா சம்மந்தி வீடுனு உங்களால ஒரு டம்ளர் தண்ணி குடிக்க முடியுமா?” என்றான் நல்லவனாக.
நிதீஷ் பேசியவை நல்ல எண்ணத்தில் இல்லை எனப்புரிந்த போதும், “எதுக்குப்பா கவலைப்படுறிங்க? அந்த பையனுக்கு என்னை பிடிச்சிருக்கு. ஆனா அவங்கம்மா சொன்னதும் கிளம்பிட்டான். இப்படி அம்மா பையன் கைப்பிள்ளை எனக்கு வேணாம்ப்பா” என்றாள் நிதீஷ்க்கும் உரைக்கும் படி.
“உண்மைதான்டா” என ஒப்புக்கொண்டாலும், மகளுக்கு மனம் முடிக்கும் முயற்சி அன்பரசை தொடர்ந்து தற்போதும் தோல்வியில் முடிய மனம் சோர்ந்து போனது. ஆனாலும் நிதீஷ் முன் காட்டிக்கொள்ளக் கூடாதென, “இவன் இல்லைனா என்னடா? இன்னும் நிறைய பேர் உன்னை கேட்டிருக்காங்க” என்றார் உற்சாகமாக.
தன்னை கண்டாலே உள்ளே சென்றிடும் முல்லையை நிதீஷ் பார்த்திருக்க, கோபமான ரங்கசாமி “உள்ள போ முல்லை” என கட்டளையிட்டு, “என்ன விசயமா வந்த?” என்றார் நிதீஷிடம்.
“சும்மாதான் மாமா. வரக்கூடாதா?” என மீண்டும் முல்லையை பார்த்தவாறு சொன்னவன், “என்ன அத்த? ஒரு டீ கூட தரமாட்டிங்களா?” என்றான் உரிமையாக.
ரங்கசாமி கத்தரித்து பேசினாலும் ஜானகி இவ்விதம் எப்பொழுதும் பேசியதில்லை ஆதலால் அதிர்வோடு பார்த்தான் அத்தையை.
“உன்னை நாத்தனார் பிள்ளையாவா பார்த்தேன்? பெத்த பிள்ளையா நினைச்சேன்டா. முல்லை வந்த பின்னாடியும் கூட உங்களுக்கு என்ன குறை வச்சேன்? வரக்கூடாதானு உரிமையா கேட்குறியே… அந்த உரிமை உன் மாமா ஆஸ்பத்திரில இருக்கும்போது எங்க போச்சு?
உங்க சுயநல புத்தி தெரிஞ்சும் கூட, உங்க எதிர்காலத்துக்காக வேண்டிதான பூர்வீக காட்டை கூட உங்களுக்காக விட்டு கொடுத்துட்டார். இன்னும் என்னதான் எதிர்பார்க்குறிங்க?” என்றார் ஆற்றாமையோடு.
“பெத்த பிள்ளையா நினைச்சேன்றதெல்லாம் பேச்சுக்குத்தான். உண்மையா அப்படி நினைச்சிருந்தா வீடு, காம்ப்ளக்ஸ், அப்பார்ட்மண்ட்ன்னு எல்லாத்தையும் இவ பேர்லயே எழுதியிருப்பிங்களா?” என முல்லையை முறைத்தவாறே கேட்டவன், “பூர்வீக காட்டை கொடுத்துட்டோம்னு சொல்றிங்களே… முல்லைக்கு மாதிரி லீகலாவா கொடுத்திங்க?” என்று வந்த விசயத்தை விளக்கினான்.
“நினைச்சேன்டா” என ரங்கசாமி எதோ சொல்ல வர, “அப்பா” என குரல் உயர்த்தினாள் முல்லை.
முல்லையின் ஒற்றை சொல்லுக்கு ரங்கசாமி கட்டுப்பட்டது நிதீஷிற்கு ஆச்சர்யத்தோடு கோபத்தையும் உண்டாக்க, “உனக்கு இவ்வளோ தைரியம் ஆகிடுச்சா? என் மாமாக்கும் எனக்கும் இடையில வர நீ யாருடீ?” என்றான்.
“நான் அவங்க மக! அவர் உடம்பும் மனசும் ரொம்ப பலவீனமா இருக்கு. தேவையில்லாததை பேசி தொந்தரவு கொடுக்காதிங்க. எதுவானாலும் என்கிட்ட பேசுங்க” என்று கட்டளையாக சொல்லி, “வாங்கப்பா” என ரங்கசாமியையும் கைப் பிடித்து அழைத்துச் சென்றாள் தனதறைக்கு.
முல்லை ஒரு நாளும் இப்படி பேசியதில்லை. பேசியது என்ன? நிதீஷ் இருந்தாலே தாய் தந்தையிடம் கூட பேசாமல் அமைதியாய் தனதறைக்குள் சென்றிடுவாள்.
இன்று இவளின் பரிமாணம் பேரதிர்ச்சியையும் அதீத கோபத்தையும் உண்டாக்க, அவளின் அறை நோக்கி சென்றான். நிதீஷ் உள்ளே வருவதற்குள், அறைவாசலில் வந்து நின்றாள் முல்லை.
“என்னடி? சொத்து எழுதி வாங்கிக்கிட்டதும் திமிராகிடுச்சா?” என முறைக்க, “நீங்க இப்படி யோசிக்கலனாதான் ஆச்சர்யப்படனும்” என இலகுவாய் சொல்லி, “எங்கப்பா கூட பிறந்த அக்கா மகனாச்சேனும், என் அப்பாம்மா உங்கமேல பாசம் வச்சிட்டாங்களேன்ற காரணத்துக்காகவும், நீங்க என்ன சொன்னாலும் இவ்வளோ நாளும் பதில் பேசாம இருந்தேன்.
ஆனா என் அப்பாம்மா பாசத்துக்கு கொஞ்சம் கூட தகுதியில்லாத ஆள் நீங்கன்னும், உங்களுக்கு என் அப்பாம்மா மேல உள்ள பாசத்தை விட அவங்க சொத்துமேலதான் நிறைய பாசம்னு இப்போதான் புரிஞ்சது. அதனால இனி உங்ககிட்ட எப்படி நடந்துக்கனுமோ அப்படித்தான் நடந்துப்பேன். இதை நீங்க திமிருனு நினைச்சா நினைச்சுக்கோங்க” என்றாள் நிதீஷின் கண் பார்த்து.
“ஏய்” என்று கோபத்தோடு நிதீஷ் நெருங்க, விலகி பின்னே சென்றவள், “ஆத்திரத்துல எது செய்தாலும் தப்பா போகும்” என எச்சரித்தாள் முல்லை.
சற்று நிதானித்தவன், “என்மாமா மேல உண்மையான பாசம் இருந்திருந்தா என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிருப்ப. என்னை விட என் மாமாவை எவன் பார்த்துப்பான். இருக்கிறதெல்லாம் சுருட்டிட்டு எவனோ ஒருத்தனை கட்டிக்கிட்டு என் அத்தை மாமாவை அம்போனு விட்டுட்டு போகப்போற நீயெல்லாம் என்னை குறை சொல்வியா? மகள்ன்ற பேர்ல என் மாமாவை ஒன்னுமில்லாம ஆக்கினதே நீதான்டீ” என்றான் அடக்கப்பட்ட ஆத்திரத்தோடு.
இவனை மணந்துகொண்டால் தந்தைக்கு உதவியாக இருப்பான் என்ற யோசனை வர, “அப்பா, மேட்ரிமோனில வீட்டோட மாப்பிள்ளைதான் வேணும்னு போட்டுக்கலாம். இதுக்கு யார் சம்மதிக்கிறாங்களோ அவங்களை கட்டிக்கிறேன். அது யாரா இருந்தாலும் சரி” என்றவள் கண்கள் நிதீஷிடம் சென்று மீண்டது.
“முல்லை… எனக்கு இதுல விருப்பமில்ல. என் அனுமதி இல்லாம எப்படி இப்படி முடிவெடுத்த?” என அதட்டினார் ரங்கசாமி.
“மாமாமேல யாருக்கு பாசம் அதிகம்னு நாளைக்கு தெரிஞ்சிடும்” என இலகுவாய் சொல்லி கிளம்பினான் நிதீஷ்.
“என்னால உங்களை தனியா விட்டுட்டு எங்கேயும் போக முடியாதுப்பா. அதுக்காகத்தான்” என முல்லை கலங்க, “அவனை நீ கல்யாணம் செய்துக்க சம்மதிச்சிட்டேனு நினைச்சிட்டு போயிருக்கான். அப்படி மட்டும் நடந்தா நான் நிரந்தரமா உன்னை விட்டுட்டு போய்டுவேன். அது பரவால்லையா? முட்டாள்” என கத்தினார் ரங்கசாமி.
“நான் அவனை நினைச்சு சொல்லலப்பா” என்று முல்லை கண்ணீர் விட, “ஆனா அவன் அப்படித்தான் நினைச்சிட்டு போயிருக்கான். நாளைக்கே குடும்பத்தோட கல்யாணத்துக்கு பேச வருவான். தேவையில்லாத தலைவலியை இழுத்து வச்சிருக்க” என்று புலம்பினார் ரங்கசாமி.
ரங்கசாமி நினைத்தது போலவே, அன்றிரவே வனிதாவிடமிருந்து அழைப்பு வந்தது. நிதீஷை மகனா தத்துகொடுக்கத்தான் என்னால முடியாம ஆகிடுச்சு. மருமகனா கொடுக்க எனக்கு முழு சம்மதம்” என்றார் வனிதா.
நிதீஷோடு தன்னால் வாழ முடியுமா என்றெல்லாம் யோசிக்கவில்லை முல்லை. தந்தை தனக்கு திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற பிடிவாதத்தில் இருக்க, எவனையோ மணப்பதற்கு பதிலாக இவனை மணந்தால் தாய் தந்தையிடமிருந்து பிரியாமல் இருக்கலாம் என்று மட்டுமே யோசித்தாள்.
நாளைக்கே பேச வருக்கிறார்கள் என்றதும் முல்லையின் மனம் நிலையில்லாமல் தவிக்க, இரவெல்லாம் தூங்காமல் விழித்திருந்தவள் அதிகாலை ஒரு மணிநேரம் மட்டுமே தூங்கி எழுந்து, குளித்து, “கோவிலுக்கு போய்ட்டு வரேன்ம்மா” என்று ஆறு மணிக்கெல்லாம் சிவனை நாடி வந்திருந்தாள் முல்லை.
** ** ** ** ** ** **
மொத்த குடும்பமும் சந்தோசத்தில் திளைத்திருந்தது. மாங்கல்யம் எடுக்கும்போது சுகந்தி முகம் வேதனையை காட்ட, இனி இவள் வேதனை படக்கூடாதென, அனு, தந்தை, ஜனனி, அத்தை என அனைவரையும் சுகந்தியோடே பேசிக்கொண்டிருக்குமாறு செய்தான் அன்பரசு.
மகனின் சொல்லை தட்டாமல் மாதவனும் திருமணம் குறித்து உற்சாகமாகவும், நன்றியுணர்வோடும் பேச, சுகந்திக்கு அமைதியாய் இருப்பதோடு வரவழைத்த இயல்பை காட்டுவதும் அவசியமாகிப் போனது.
இவ்வாறே திருமணத்திற்கு தேவையான அனைத்தும் மொத்த குடும்பமும் சேர்ந்தே வாங்கினார்கள். சேகர் குழந்தைகள் தனது அத்தைக்கு திருமணம் என குதூகலிக்க, ஜனனி என் பெரியம்மாக்கும் பெரியப்பாக்கும் கல்யாணம் என குதூகலித்தாள். குழந்தைகளின் சந்தோசத்தை பார்த்தவளுக்கு இனி சத்யனை மறுப்பது சாத்தியமேயில்லை எனப்புரிந்தது.
சுகந்தியை தவிர அனைவருக்கும் அழகாய் விடிந்தது அதிகாலைப்பொழுது. சுகந்தியிடம் பட்டுசாரியை நீட்டி, “நைட் இரண்டு மணிக்கு போய் அன்பு வாங்கிட்டு வந்தார், சீக்கிரம் ரெடியாகுங்க. ஆறரை மணிக்காவது கோவிலுக்கு போயாகனும்” என்றாள்.
“நீ போய் குழந்தைகளை பாரு” என சுகந்தி சொல்ல, “அவங்களை அத்தை பார்த்துப்பாங்க, இன்னைக்கெல்லாம் உங்களை பார்க்குறதுதான் தலையாய வேலை” என்றாள் இன்முகமாக.
சுகந்தி முறைக்க, “நான் வெளில போனேன்னா அவர் திட்டுவார்” என்றாள் பாவமாக.
குளியலறை சென்று ஜாக்கெட் அணிந்து வந்தவளுக்கு புடவை கட்ட உதவி செய்து, நகைகளை எடுத்து வைக்க, “ப்ச்… ஏழு கழுத வயிசுல இதெல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு அனு” என்றாள்.
“அப்படி என்ன வயசாகிடுச்சு?” என முறைத்து, “இதெல்லாம் போட்டுக்கலனா மாதவன் அப்பா வருந்துவார். சில விசயங்களை குடும்பத்துக்காக செய்துதான் ஆகனும்” என்று தன்மையாக எடுத்துரைத்து நகைகளை போட்டு தயார் செய்து வெளியே அழைத்து வர, மாதவனும் கல்பனாவும் மனம் நிறைந்தனர்.
“அண்ணிம்மா இவ்வளோ அழகுனு இன்னைக்குத்தான் எனக்கு தெரியுது” என்று சரவணன் சிரிக்க, இவனிடம் சொல்லியேத்தான் அழைத்து வந்திருக்கிறான், கூட்டு களவானி என சரவணனை சுகந்தி முறைத்தாள்.
“கல்யாணப் பொண்ணால திட்ட முடியாதே, எல்லாரும் பார்ப்பாங்களே, இன்னும் என்னெல்லாம் சொல்ல தோணுதோ எல்லாமும் சொல்வேன். உன்னால ஒன்னும் பண்ண முடியாது” என மீண்டும் சிரித்தான் சரவணன்.
“கல்யாணத்துக்கு நேரமாகுது, உங்க சண்டையை அப்புறம் வச்சிக்கலாம்” என்று சுகந்தியை அழைத்து வந்து காரில் அமர வைத்தான் அன்பரசு.
பத்து நிமிடத்தில் கோவிலுக்குள் நுழைய, பிறகுதான் தெரிந்தது தனது திருமணத்திற்கு இத்தனை பேரை அழைத்திருக்கிறார்கள் என்று. “ம்மா…” என சுகந்தி தடுமாற, சுகந்தியையே கவனித்திருந்த அன்பரசு, “அத்தையை முறைக்காத. நான்தான் எல்லாருக்கும் சொன்னேன். இந்த கல்யாணம் எவ்வளோ முக்கியமான கல்யாணம்… நெருங்கின சொந்தங்களை கூட அழைக்கலனா தப்பாகிடும் சுகந்தி.
வந்திருப்பவர்களை எதிர்கொள்ள முடியாமலும், தன்னை கணவனாய் ஏற்க முடியாமலும் திண்டாடிய சுகந்தியின் முகம் புதுப்பெண்ணிற்கான அவஸ்த்தை போல் இருக்க, “ம் இதுவும் நல்லாத்தான் இருக்கு” என சுகந்தியோடு இணைந்து நின்றான் சத்யன்.
திருமண வைபவத்தை சிறப்பாக்குவதில் மேளத்திற்கு முக்கிய பங்கிருப்பதால் அதற்கும் சொல்லியிருந்தான் அன்பரசு. இரண்டு மேளக்காரர்களும் ஒரு நாயனக்காரரும்தான் வாசித்தனர். இன்று முகூர்த்த நாள் இல்லை ஆதலால் இவர்களின் திருமணம் மட்டுமே நடக்க, மூன்று பேர்தான் வாசித்தார்கள் என்றாலும் மேளச்சத்தம் அமர்க்களமாய் இருந்தது.
இத்தனை சத்தத்திற்கும் அசராமல் தூணில் சாய்ந்து கண்மூடி அமர்ந்திருந்த முல்லை தென்பட்டாள் அன்பரசு கண்களுக்கு. இவ ஏன் இவ்வளோ சோகமா உக்கார்ந்திருக்கா? ஒருவேளை பொண்ணு கொடுக்கலனு அவங்க அத்தை குடும்பம் திரும்பவும் பிரச்சனை செய்தாங்களா? என யோசித்தபடி அவள் இருக்கும் திசை நோக்கி இரண்ட்டி வைக்க, “அன்பு, தாலி கட்டுற நேரத்துல எங்க போற?” என்றார் மாதவன்.
“இல்லப்பா, இங்கதான்” என அண்ணனின் திருமணத்தில் கவனம் செலுத்தியவன் அவ்வப்போது முல்லையையும் பார்த்திருந்தான்.
மந்திரம் சொன்னபடி ஐயர் மாங்கல்யத்தை நீட்ட, வாங்கிய சத்யன் சுகந்தியை ஆழ்ந்து பார்த்தவாறு அணிவிக்க, “நம்ம பொண்ணோட சேர்த்து சத்யனையும் பார்த்துக்கோ அண்ணிம்மா” என சிரித்தபடி வாழ்த்தினான் அன்பரசு.
இயல்புபோல் சொன்னாலும் அன்பரசு கண்கள் ஆனந்தத்தில் கலங்கிட, அன்பரசின் கண்களில் கண்ணீரை கண்டதும் ஏற்கனவே கலங்கியிருந்த மாதவன் கல்பனா கண்களில் மேலும் பெருகியது ஆனந்த கண்ணீர்.
அத்தை மாமா கலங்குவது அதிசயமில்லை. ஆனால் அன்பரசு கலங்கியதை பார்த்தவளுக்கு, இத்தனை அக்கறை வைத்திருந்தானா தன்மீது என சுகந்திக்கு பேச்சு வரவில்லை. தன் கழுத்தில் உறவாடிய மாங்கல்யத்தை பார்த்தவளது கண்களும் கலங்கியது.
பிறகு சூழ்ந்திருந்த பந்தகள் சிரிப்போடும் மகிழ்வோடும் சத்யன் சுகந்தியை வாழ்த்த ஆரம்பிக்க, சரவணனிடம் “சரவணா, ஒரு கால் பேசிட்டு அஞ்சு நிமிஷத்துல வந்துடறேன், அப்பா கேட்டா சமாளி” என்று பிரகாரத்தின் பின்புறமாய் சென்று முல்லையிடம் வந்தான் அன்பரசு.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.