“மனசுலயும் உடம்புலயும் தெம்பில்லைனு வெளிப்படையா சொன்ன பின்ன எப்படி சும்மா இருக்கிறது அன்பு? அதோட நீயும் கிளம்பினா வர ஒரு மாசத்துக்கு மேல ஆகும்ன்ற. ஒரு மாசம் ஆகுதோ அதுக்கு மேல ஆகுதோ.
நிச்சயம் செய்திட்டா அவருக்கு மட்டுமில்ல எனக்கும் நிம்மதியா இருக்கும். நீ இல்லாத நேரம் அவங்க வீட்டுல பிரச்சனைன்னா உரிமையா துணை நிற்கலாம்” என்றார் மாதவன்.
அன்பரசு முகம் அதிருப்தியை காட்ட, “டேய் டேய்… நடிக்காதடா. கோவில்ல அழுதுட்டிருக்க பொண்ணுகிட்ட என்ன பிரச்சனைனு கேட்பானாம். ஆனா நிச்சயம் பண்ண வேணாமா?” என சத்யன் சிரிக்க, “அதானே?” என்று மாதவனும் இணைந்தார் மகனின் சிரிப்பில்.
அன்பரசும் சிரிக்க, “அப்போ நாளைக்கு நிச்சயம் பண்ண நகை வாங்கனுமேண்ணா” என்றார் கல்பனா.
“ஆமாம்ல? அந்த பொண்ணை விரல் சைஸ் தெரியனுமே, அப்போதானே மோதிரம் சரியா வாங்க முடியும்?” என புன்னகைத்தாள் சுகந்தி.
ஹப்பா… இயல்புக்கு வந்துடுச்சு சுகந்தி என நிம்மதியடைந்தவன், “ஆமாம்ல அண்ணிம்மா, நான் போய் அளவு மோதிரம் வாங்கி வரவா?” என்றான் அன்பு.
அண்ணிம்மா என்றதில் கோபமானவள் “இந்த கதைலாம் வேணாம். நீ என்கூடவே இரு. சரவணன் வாங்கி வரட்டும்” என்றாள் முறைப்போடு.
“வஞ்சகி” என முறைத்தான் பொய்யாக.
“ஆமா பெரிய வஞ்சகி” என ராகமிழுத்து “போன் பண்ணி பேசாமலா இருக்கப்போற?” என்றாள் கிண்டலாக.
“அவன் கம்முனு இருந்தாலும் நீ ஐடியா கொடுப்ப போல” என சத்யன் சிரிக்க, சத்யன் புறம் திரும்பாமல் “உனக்கு கல்யாணமாகப்போகுது ஜனனிம்மாகிட்ட சொல்றேன்” என அறைக்குள் செல்ல எத்தனிக்க, “டீ போடு அண்ணிம்மா” என்றான் சரவணன்.
“ம் எனக்கும் வேணும்” என அன்பரசும் சொல்ல, டீ வைக்கப்போனாள்.
டீ குடித்ததும் முல்லைக்கு நகை எடுத்து வர ஆயத்தமாக சொன்னார் கல்பனா. “பாப்பா தூங்கிட்டிருக்கா, அதனால நான் வீட்டுல இருக்கேன், நீங்க எல்லாரும் போய்ட்டு வாங்க” என்றார் மாதவன்.
டிகாஷனை வைத்தவள் வெளியே வந்து அன்பை முறைக்க, “நீ வரலைனா நகையே வேணாம். தாம்பூலம் மாத்தி நிச்சயம் பண்ணிக்கலாம்” என்றான் இவனும் முறைப்போடு.
“டையர்டா இருக்குடா” என பாவமாக சொல்ல, “பரவால்ல எனக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க” என்றான்.
“பிடிவாதத்துல மட்டும் ஒருத்தனுக்கு ஒருத்தன் சளைச்சவன் இல்ல” என முறைத்து உள்ளே சென்றவள் டீயை வைத்து எடுத்து வந்தாள்.
இளையவர் பட்டாளத்திற்குள் நாம் எதற்கென்று, “எனக்கும் நைட்டுக்கு சமைக்கிற வேலையிருக்கு” என்று கல்பனாவும் வர மறுத்தார்.
“இங்க இருக்க நகைக்கடைக்குத்தான்த்த, கார்ல போய் வர கால் மணி நேரம்தான் ஆகும். வந்து சமைச்சிக்கலாம் வா” என்றான் அன்பரசு.
அன்னை உடன் வந்தால் சத்யனோடு பேசு என்று இம்சை செய்யும் என “நூறு பவுனா எடுக்கப்போற? அலைஞ்சிட்டு வந்து சமைக்கிறது கஷ்டம். அம்மா வீட்டுலயே இருக்கட்டும். நாம போலாம்” என்றாள் சுகந்தி.
இவர்கள் வழக்கப்படி மணமக்களுக்கான முதலிரவு நாளில் அருகிலுள்ள சிவன் கோவிலுக்கு சென்று வருவது வழக்கம் ஆதலால், “வரும்போது அப்படியே சிவன் கோவில்க்கு போய்ட்டு வாங்க” என்று கல்பனா சொல்ல, சத்யன் சங்கடத்திற்குள்ளாக, அன்னையை முறைத்தவாறு வெளியே சென்றாள் சுகந்தி.
சரவணனோடு பின் இருக்கையில் இறுகிய முகத்தோடு சுகந்தி அமர்ந்திருக்க, முன்னே அன்பரசோடு அமர்ந்திருந்த சத்யன் “அத்தை இப்படித்தானு தெரியாதா உனக்கு? எதுக்கு உர்ருனு இருக்க? முதல்முதலா அன்பு கல்யாணத்துக்காக நகை வாங்க போறாம். சந்தோசமா வரதுனா வா. இல்ல வீட்டுக்கு போ” என்றான் கடுப்பாக.
சத்யனை முறைத்தாலும், அம்மா சொன்னாலும் இவன் முதலிரவு பற்றி யோசிக்கவில்லை என்பது புரிய, முகமும் சற்றே இலகுவாக, பிறகுதான் காரை எடுத்தான் அன்பரசு. நகைக்கடையில் “மோதிரம் மட்டும் போதாது, அஞ்சு பவுனுக்காவது எதாவது வாங்கு அன்பு” என்றாள் சுகந்தி.
“மோதிரம் மட்டும் நான் செலக்ட் பண்றேன், மத்தது நீயே எதாவது வாங்கு” என்றான் அன்பரசு.
“மாமா எனக்கு புது டிஸைன் செயின் வாங்கினாரில்ல? முல்லைக்கும் அதே மாதிரி வாங்கலாமா?” என்றாள் ஆர்வத்தோடு.
“அது ஏழு பவுனாச்சே?” என்று அன்பரசு யோசிக்க, “உன் ரேன்ஜ்க்கு இதுவே கம்மிதான். நிச்சயத்துக்கு கூட கணக்கு பார்ப்பியா? உன் விருப்பத்துக்கு எடுக்க என்னை எதுக்குடா அழைச்ச?” என்றாள் முறைப்பாக.
“என்ன என் ரேன்ஜ்? நான் இன்னும் பெரிய ஸ்டார் ஆகலை அண்ணிம்மா, இப்போதான் கொஞ்சம் வெளில தெரிய ஆரம்பிச்சிருக்கேன்” என சிரித்தவன் “சரி சரி முறைக்காத, உன்னுது மாதிரியே எடு” என்றான் மகிழ்வோடு.
தனது போலவே சுகந்தி தேர்வு செய்ய, அன்பரசும் மோதிரத்தை தேர்வு செய்திருந்தான். “பில் போட்டு வாங்கினதும் வீட்டுக்குதான் போறோம்” என்று அன்பரசிடம் முணுமுணுக்க, சத்யனும் அதை கவனித்திருந்தான்.
“அன்பு நகையை வாங்கிட்டு வா, நான் காரை பார்க்கிங்லியிருநது வெளில எடுக்கறேன்” என்று தகவல் சொல்லி சுகந்தியின் கையை பிடித்தவாறு வெளியேறினான் சத்யன்.
“டேய் என்ன பண்ற?” என சுகந்தி கடிய “வாயை மூடிட்டு வா” என்று இவனும் கடிந்தபடி வெளியே வந்து காவலாளியிடம் சாவியை கொடுத்தனுப்பியவன் “அத்தை சொல்றதுக்கெல்லாம் எதுக்கு இவ்வளோ ரியாக்ட் பண்ற? கல்யாணம் நடந்தா என்ன செய்வாங்களோ அதைதான் அத்தை ஃபாலோ பண்றாங்க.
இன்னைக்கு நைட் வரைக்கும் அவங்க சொல்றதை கேட்டுட்டா நாளைலயிருந்து பர்சனல்ல தலையிடமாட்டாங்க. நம்ம ஃபர்ஸ்ட்நைட்டுக்காகத்தான் கோவிலுக்கு போக சொன்னது. அதுமட்டுமில்ல, நைட் உன் கையில பால் சொம்பும் கொடுத்தனுப்ப போறாங்க. அவங்ககிட்ட வாதாடாம பாலை வாங்கிட்டு ரூம்க்கு வர! புரியுதா?” என்றான் முறைப்போடு.
சுகந்தி அதிர்ந்து விழிக்க, “எரும… எரும… என்னை இப்படி பார்க்காதனு நேத்துலயிருந்து சொல்றேன்தான? உனக்கு என்னை புரியுதா இல்லையா?” என எரிச்சலாக கடிந்து, “இதுக்கு முன்ன நாம ஒரு ரூம்ல படுத்ததே இல்லையா? சின்ன பிள்ளையில் தீபாவளிக்கு வரும்போது எங்களோடதான உருண்டுட்டு இருப்ப? அதே போல நினைச்சுக்கோ.
நைட் என் ரூம்க்குள்ள வரமாட்டேனு அலப்பறை செய்து எல்லாருக்கும் சங்கடத்தை உண்டுபண்ணி, என்னையும் அசிங்கப்படுத்த கூடாது. உன்னை பிடிச்சது… கல்யாணம் செய்துக்கிட்டேன், ஆனா இப்போவும் நீ எனக்கு பழைய எருமதான். நீதான் என்னை புதுசா பார்க்குற. எனக்கு இப்போ பொண்டாட்டிலாம் தேவையே இல்ல. புரியுதா?” என்றான்.
“ம்” என தலையாட்டினாள் நிம்மதியாக.
“இனி மூஞ்சை மூஞ்சூர் மாதிரி வை… அப்புறம் இருக்கு உனக்கு” என அதட்ட, அன்பரசும் சரணவனனும் வெளியே வந்தனர்.
“உன் ஜால்ரா வரான். சிரி” என முறைக்க, “ஈ…” என சுகந்தி பழிப்பு காட்ட, பார்த்த அன்பரசுக்கும் சரவணனுக்கும் சந்தோசமானது. பார்க்கிங்கிலிருந்து இவர்களின் காரும் வந்திட, கிளம்பினர்.
நிச்சயத்திற்கு தேவையான பொருள்களை வாங்கி வீட்டிற்கு வர ஏழு மணியாகிட, “அம்மாக்கு நகை வாங்க என்னை விட்டுட்டு போய்ட்டிங்க” என வெம்பினாள் ஜனனி.
ஜனனியின் அம்மா என்ற அழைப்பில் தனது திருமணம் பற்றி தந்தை எடுத்துரைத்திருக்கிறார் எனப்புரிந்த அன்பரசு, “என் பட்டு ரொம்ப டையர்டா தூங்கிட்டிருந்த. அதோட பர்சேஸ் வந்தா உடம்பு சரியில்லாம ஆகிடும். அப்புறம் பாட்டு க்ளாஸ் மிஸ் ஆகும். என் ஜனனிம்மாக்கு பர்ச்சேஸை விட பாட்டுதான் முக்கியம். அதனாலதான் விட்டுட்டு போனேன்” என்று கொஞ்சினான் மகளை.
“நாளைக்கு நான் ஸ்கூல் போக மாட்டேன். அம்மாவை பார்க்கப் போறோம்னு தாத்தா சொன்னார்” என்றாள் உற்சாகமாக.
மகள் சமாதானம் ஆகிவிட்ட சந்தோசத்தோடு “சரி சரி பர்மிஷன் கிராண்டட்” என்றான்.
இரண்டு பெரிய பைகளோடு சரவணன் வர, “இதென்ன சரவணா?” என்றார் மாதவன்.
“நாளைக்கு காலைல நேரமிருக்காதுனு வரும் வழியிலயே சீர் தட்டு வைக்க தேவையானதையும் வாங்கிட்டு வந்துட்டோம் மாமா, மல்லிப் பூ மொட்டா வாங்கிட்டு வந்துருக்கேன், அதை மட்டும் உடனே கட்டனும், இல்ல மலர்ந்துடும்” என்று பூ தொடுக்க ஆரம்பித்தாள் சுகந்தி.
“இதுக்குத்தான் சுகந்திம்மா கூட போகனும்ன்றது” என மருமகளை பாராட்டி, “நாளைக்கு காலைல எழு மணிக்கெல்லாம் நல்ல நேரம் ஆரம்பிக்குது. சேகர்கிட்டயும் சொல்லிட்டேன். விடியகாலம் வரேன்னு சொல்லியிருக்கான்.
நானாவது கொஞ்சம் தூங்கிட்டேன், உங்களுக்குத்தான் ரெஸ்ட்டே இல்ல. காலைல சீக்கிரம் எழுந்தது அலுப்பா இருக்கும். எல்லாரும் நேரமா சாப்பிட்டு படுங்க.” என்றார்.
சுகந்தி பூ தொடுத்து முடிக்கும்வரை அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். அன்பரசும் மாதவனும் மாலையில் உண்டதால் “லேட்டா சாப்பிட்டுக்கிறோம்” என்க, இருவரை தவிர மற்ற அனைவரும் உண்டனர்.
அன்பரசு இல்லையென்றால் வழக்கமாய் ஜனனி மாதவனோடு உறங்குவாள் என்பதால் “ஜனனிம்மா இன்னைக்கு அப்பா கூட படுக்குறியா? தாத்தா கூடயா?” என்றார் கல்பனா.
ஆரம்பிச்சிட்டியா என்பதாய் சுகந்தி அன்னையை முறைக்க, எத்தனை சொன்னாலும் இந்த கல்பனா அடங்காது என தங்கையை மனதில் கடிந்த மாதவன், “ஜனனிம்மா… சித்தப்பாக்கு நீ இன்னும் நேர்ல பாட்டு பாடி காட்டினதில்லதான? ஒரு பாட்டு பாடு” என்று பேத்தியின் கவனத்தை தன் பக்கம் இழுத்தார்.
“என்ன பாட்டு பாடட்டும் தாத்தா?” என்று ஆர்வமாய் கேட்க, “மாசறு பொண்ணே வருக… பாடுடா” என்றார்.
ஜனனி தனது இனிய குரலால் அனைவரையும் மயக்க ஆரம்பிக்க, சத்யன் சுகந்தியை பார்த்தான். நகை கடை முன்பு சத்யன் சொன்னதெல்லாம் நினைத்து, முயன்று தன்னை சமன் செய்து, “எனக்கு தூக்கம் வருது” என்று சத்யன் அறைக்கு சென்றாள் அவன் மீதுள்ள நம்பிக்கையோடு.
ஆனந்த பிரவாகத்தோடு கல்பனா பாலை எடுத்து வர, “என்கிட்ட கொடுத்த” என்று வாங்கியவன், நேற்று சுகந்தி படுத்திருந்த அறைக்கு சென்று அவளின் சுடிதார் ஒன்றினையும் எடுத்துக்கொண்டு அறைக்குள் சென்றான் சத்யன்.
சுகந்தி கீழே அமர்ந்திருக்க, “என்ன இங்க உக்கார்ந்திருக்க?” என அதட்டி, “இந்தா… போய் டிரஸ் சேன்ஜ் பண்ணிக்கோ” என்று மாற்றுடையை நீட்டினான்.
“இல்ல சேரிலயே தூங்கிப்பேன்” என்க, “ப்ச்” என அதட்ட, வாங்கியவள் குளியலறை சென்று மாற்றி வந்தாள்.
“இப்போதானே சாப்பிட்டோம்? பால் வேணாம்” என்றாள் வர வழைத்த இயல்போடு.
“ஹம் ஒகே. இரண்டு நாளா மெயில் செக் பண்ணவேயில்ல, அது பார்த்துட்டு நான் படுக்கறேன், உனக்கு தூக்கம் வந்தா தூங்கு” என்று தனது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு கட்டிலருகே சேரை நகர்த்தி போட்டு, அதில் அமர்ந்து காலை கட்டில்மேல் நீட்டிக்கொண்டு தனது வேலையில் கவனமானான்.
இவள் கீழே படுக்க பெட்ஷீட்டை எடுக்க, “ஈவ்னிங் அவ்வளோ சொல்லியும் கீழ படுக்கப்போறியா? என்னை பத்தி என்னதான்டீ நினைச்சிட்டிருக்க?” என்றான் கோபத்தோடு.
சத்யனும் சுகந்தியை மனைவியாக நினைக்கவில்லை. ஆனாலும் நான் அருகில் இருக்கும்போது இவளுக்கு எப்படி பழசு நியாபகம் வரலாம் என்று கோபம் வந்தது. கோபத்தை காட்டினால் பயந்திடுவாள் என நிதானித்தவன், இவளின் நிலையறிந்துதானே திருமணம் செய்துகொண்டோம் என்று தன்னை சமன் படுத்தினான்.
“என்னை புருசனா நினைச்சாதான் கண்டதும் நியாபகம் வரும். அப்படி நினைக்காம உன் மாமன் மகன் சத்யனா நினைச்சிக்கோ. சின்ன வயசுல நான் உன்னை திட்டினது, நீ என்னை திட்டினது, என்னோட சேர்ந்துட்டு அன்பும் சரவணனும் உன்னை வம்பிளுத்ததுனு நமக்குள்ள யோசிக்க எவ்வளோ இருக்கு? அதைப் பத்தி யோசிச்சிட்டு கண்ணை மூடு. தன்னால தூக்கம் வரும்” என்றான் தன்மையாக.
சத்யன் பேசியது சுகந்திக்கு பெருத்த ஆறுதலை தந்தாலும் தயக்கத்தோடுதான் கட்டிலில் படுத்தாள். தவறாக நடக்கமாட்டான் என சுகந்தி அறிவாள். கழுத்தில் அவன் கட்டிய மாங்கல்யம் இருப்பதாலோ என்னவோ அவனின் அருகாமையை ஏற்க மறுத்தது மனம்.
சுகந்தியின் மனம் புரிந்தவன் லேப்டாப்போடு கட்டிலில் அமர்ந்து, அவளின் கேசம் கோதினான் ஆதரவாக.
அதிர்ந்து விழிக்க, “உன்னோட பழைய வாழ்க்கையை மறக்குறதுக்கும், இனி எப்போவும் உன்கூட இருக்கிறது உன் மாமன் மகன் சத்யன்னு உனக்கு நியாபக்கபடுத்தவும்தான் இது” என்று மென்மையாக சொன்னவன் வருடலையும் மென்மையாக தொடர்ந்தான்.
“இல்ல பழசு நினைக்கல. நம்ம சின்ன வயசை நினைச்சிக்கிறேன்” என இவனின் ஆதரவை மறுக்க, “விடிய விடியவா செய்ய போறேன்? நீ தூங்கினதும் என் ஒர்க் பாரக்க போய்டுவேன்” என்றான்.
தான் தூங்காமல் இவன் வருடலை நிறுத்தமாட்டான் என்றுணர்ந்து கண்மூடினாள் சுகந்தி.
அரைமணி நேரத்தில் சுகந்தி கண்கள் அலைபுறுதலை நிறுத்தியிருக்க, பின்னே ஒருமணி நேரம் வரை தனது வேலைகளை பார்த்தவன், கொஞ்சம்போல் பால் குடித்து, சுகந்தியை பார்த்தான்.
நேற்று அத்தனை எடுத்துரைத்தும் தன்னை ஏற்க முடியாமல் காலையிலிருந்து சுகந்தி தவித்ததை நினைத்தவன் “உன்னை எருமைனு நினைச்சேன். ஆனா கன்னுக்குட்டினு இன்னைக்குத்தான்டீ புரிஞ்சது” என கிண்டலாய் முணுமுணுத்து கட்டிலின் மறுபுறத்தில் படுத்தான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.