அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து, தன்னை சுத்தம் செய்து மேலே ஜிம்மிற்கு சென்றிருந்தான் அன்பரசு. ஒரு மணி நேரம்வரை உடற்பயிற்சி செய்தவனுக்கு, தன்னோடு திருமணம் பிடிக்குமா? இல்லை நேற்று போல் இன்றும் கோவிலுக்கு சென்று அழுவாளா? என்ற கேள்வி எழ, தாமதிக்காமல் வீட்டினுள் வந்து சாவியை எடுத்து பைக்கை கிளப்பினான் கோவிலுக்கு.
கோவிலுக்கு வெளியே அவளின் டியோ இருக்கிறதா என்று ஆராய்ந்தான். அங்கே இரண்டு டியோ இருக்க, வண்டி எண் நியாபகம் இல்லாமல் போக, உள்ளே சென்று ஆராய்ந்தான்.
கர்பகிரகம் சாற்றியிருந்தது. ஆனாலும் எப்பொழுது திறப்பார்கள் என்பதுபோல் மூடப்பட்ட திரையையே பார்த்திருந்தாள் முல்லை. கோவிலில் அத்தனை கூட்டம் இல்லை. சற்று திரும்பினாலும் தென்படுவதைபோல சிவனின் முன்னிருந்த நந்தியருகேதான் நின்றிருந்தான் அன்பரசு.
பத்து நிமிடம் கழித்து அலங்காரம் முடிந்து திரை விலக்கப்பட, பரவசத்தோடு சிவலிங்கத்தை பார்த்திருந்தாள் முல்லை. முல்லை சிறு வயதிலிருந்தே இந்த கோவிலுக்கு அடிக்கடி வருவதால் பூசாரியும் இவளும் நண்பர்களாகியிருந்தனர்.
ஸ்லோகம் சொல்லியபடி ஆரத்தி தட்டோடு வெளியே வந்த பூசாரி “என்னம்மா பொண்ணே… முகம் ரொம்ப ஜொலிக்கிறது?” என்றபடி ஆராதனையை காட்டினார்.
வணங்கிக்கொண்டவள் திருநீருக்காக கையை நீட்டியபடி, “நேத்து நான் அழுதது கடவுளுக்கு பிடிக்கல போல ஐயரே… என் பிரச்சனை எல்லாத்தையும் ஒரே நாள்ல தீர்த்துட்டார். அதான் நன்றி சொல்லிட்டு போக வந்தேன்” என்றாள் புன்னகையோடு.
“பகவானுக்கு வெறும் நன்றி போதுமோன்னோ?” என பூசாரி கேட்க, “போதும் போதும்… என்னை இருபது நாளா அழ வச்சாரில்ல? அதுக்காகவே இந்த வாரம் அபிஷேகம் கூட பண்ணமாட்டேன்” என்றாள் சிரிப்போடு.
“நேக்கு எங்க தட்சணை?”
ஏழு மணிக்கெல்லாம் அன்பரசு குடும்பத்தினர் வந்திடுவார்கள் என்பதால் அவரசத்தில் பணம் எடுத்து வரவில்லை முல்லை. ஐயர் கேட்கவும் சங்கடமானவள், எல்லாம் ஐயனாரால் வந்தது. நம்ம அப்பா கேட்கும்போதே சம்மதிக்காம நேத்து பார்க்க வந்து, இன்னைகே நிச்சயம் பண்ண வரேனு சொல்லவும் அவன் நினைப்புல எல்லாம் மறந்துடுச்சு என்று அன்பரசை திட்டி,
“இருபது நாள் முன்னவே சுவாமிக்கு என் பிரச்சனையை கன்வே பண்ணியிருந்திங்கனா தட்சணையும் உடனே கொடுத்திருப்பேன். நீங்க லேட்டா பண்ணுனிங்க, ஸோ தட்சணையும் லேட்டாதான் கிடைக்கும்” என சிரிப்போடு சொல்லி, “நேரமாகுது ஐயரே, நான் வரேன்” என்று கிளம்பினாள்.
“அடிப்பாவி, இத்தனை பெரிய உருவம் நிற்குறேன், நிஜமா கண்ணுக்கு தெரியலையா?” என முணகியவன், ‘ஹம்… அப்பா சொன்னதுக்காக சம்மதிச்சிருந்தாலும் கல்யாணத்துல விருப்பம்தான் போல’ என மனம் நிம்மதியாக, “ஏன்ப்பா? கோவிலுக்கு இந்த டிரஸ்லதான் வருவிங்களா?” என தலையில் தட்டிக்கொண்டு அன்பரசை கடந்தார் ஓர் முதியவர்.
பெரியவரின் அதட்டலில் முல்லையிடமிருந்து மீண்டவனுக்கு தற்போதுதான் சாட்ஸ், ஸ்லீவ்லஸ் பனியனோடு வந்தது புரிய, “எல்லாம் இவளால” என செல்லமாய் கடிந்தபடி வெளியேறினான் அன்பரசு.
“வா அன்பு, எங்க போன? மணி ஆறரை ஆகிடுச்சு, ஏழு மணிக்கெல்லாம் அங்க இருக்கனும். சீக்கிரம் போய் குளிச்சிட்டு வா” என அவசரப்படுத்தினார் கல்பனா.
“எங்கடா போன?” என சத்யன் சிரிப்போடு கேட்க, இவனும் சிரிக்க, “அடப்பாவி… இன்னும் அரைமணி நேரத்துல பார்க்கத்தானே போறாம்? அதுக்குள்ள என்னடா அவசரம்? அதுவும் இந்த டிரஸ்ஸோட போயிருக்க? நீயாடா இப்படி?” என்றான் வியப்போடு.
ஜனனிக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்த சுகந்தி “ப்ச்” என சத்யனை முறைத்து, “நீபோய் ரெடியாகு அன்பு, நேரமாகுது” என்றாள்.
சுகந்தியின் இயல்பான பாவனையில் மனம் குளிர்ந்த அன்பரசு “உத்தரவு அண்ணிம்மா” என்று குளிக்கபோனான்.
சேகர் குடும்பம் வந்தனர். “இதான் விடியகாலம் வரதா?” என சுகந்தி அனுவை முறைக்க, சுகந்தியின் இயல்பான பாவனையில் சேகர் அனு இருவரும் மகிழ்ந்தனர்.
“குளிக்கப்போயிருக்கான், பசங்களுக்கு பால் எடுத்துட்டு வரவா?”
“வழில கேட்டா என்ன பண்றதுனு எடுத்துட்டுதான் வந்தேன்” என்க, “இந்தா அனு, இரண்டு பேரும் வச்சிக்கோங்க” என்று மல்லிகையை கொடுத்தார் கல்பனா.
பதினைந்து நிமிடத்தில் அன்பு தயாராகி வர, “மாமா” என சேகர் குழந்தைகள் அன்பை கட்டிக்கொண்டனர்.
கல்பனாவிடம், “அத்த, சத்யன் அண்ணா நம்ம சுகந்தியை சமாதானம் செய்துட்டார் போல” என்று அனு மகிழ்வோடு கிசுகிசுக்க, “ஆமாம் அனு. காலைல என்ன கலாட்டா செய்வாளோனு நைட்டெல்லாம் தவிச்சிட்டிருந்தேன், காலைல என்கிட்ட பால் வாங்கிட்டியாம்மானு எப்போவும் போல இயல்பா கேட்டதும் மனசு அப்படியே குளிர்ந்து போச்சு” என்றார் மகிழ்வோடு.
தங்கையின் இயல்பு நிலையை கண்ட சேகரும் அன்பரசிடம் தன் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொண்டிருந்தான்.
“நேரமாகுது கல்பனா, வீட்டுக் கதையெல்லாம் வந்து பேசிக்கலாம்” என்று மாதவன் சொல்ல, “சரவணா இந்த பேக் எல்லாம் எடுத்துட்டு போய் கார்ல வை” என்றவள், “ம்மா நகையை எடுத்துட்டு வா” என்றாள்.
இப்படியாக அனைத்தும் பொறுப்போடு செய்து கொண்டிருந்த சுகந்தியை பாராட்டுதலாய் பார்த்தபடி கிளம்பினான் சத்யன்.
காலையில் சுகந்தி எழுந்ததும், “வெளில போய் இயல்பா இருக்கனும். உர்ருனு இருந்து அத்தை கேள்வி கேட்கும் சூழலை உருவாக்கக்கூடாது” என்ற கட்டளையோடுதான் வெளியனுப்பினான் சத்யன்.
“நல்ல மூட்ல இருக்காடா, நான் பக்கத்துல போய் அவ ஒரிஜினல் கேரக்டர் வெளிய வந்துடப்போகுது. அப்புறம் எருமைகிட்ட உதைபடுறதுலயிருந்து என்னை யாரும் காப்பத்த முடியாது” என சிரிப்போடு ஏறினான் காருக்குள்.
பத்து நிமிடத்தில் முல்லை வீட்டை அடைந்தனர். கார் சத்தம் கேட்டதும் ஹாலில் அமர்ந்திருந்த ரங்கசாமி வாயிலுக்கு வந்தார். “வாங்க வாங்க” என வரவேற்று, “ஜானு, எல்லாரும் வந்துட்டாங்க வா” என உற்சாக குரல் கொடுத்தார்.
மகள் அறையிலிருந்து வந்த ஜானகி, அனைவரையும் வரவேற்று, சுகந்தியிடம் “ரொம்ப வருசம் முன்ன பார்த்தது, மஹாலஷ்மி மாதிரி இருக்கம்மா” என்றார்.
“கோலம் முல்லை போட்டதுங்களாம்மா? ரொம்ப அழகா இருந்தது” என சுகந்தி பாராட்ட, “முல்லை என்னை விட அழகா போடுவா, ஆனா என்னைக்காவதுதான் போடுவா. இன்னைக்கு நான்தான் போட்டேன்” என இயல்பான பேச்சுக்களோடு அனைவருக்கும் தண்ணீர் கொடுத்தார் ஜானகி.
“எங்க உங்க அக்கா தம்பி யாருக்கும் சொல்லலைங்களா?” என மாதவன் கேட்க, “சொல்லலைங்க, நல்லநாள் அதுவுமா தேவையில்லாத டென்ஷன் எதுக்கு?” என்றார் ரங்கசாமி.
“அவங்களுக்கு பயந்துட்டு சொல்லாம விட்டுட்டிங்களா? இப்போ போன் செய்து வர சொல்லுங்க, அப்படி என்னதான் டென்ஷன் பண்ணுவாங்னு பார்க்குறேன்” என்றான் அன்பரசு.
“எப்படியும் தெரியத்தான் போகுது. ஆனா இன்னைக்கான நாளை சந்தோசமா கொண்டாடனும்னு எனக்கு ஆசையா இருக்கு மாப்பிள்ளை” என்றார் ஜானகி.
இருவரும் மாப்பிள்ளை என்றதும் மனம் இதமாய் உணர, இவர் பெண் விஷேசத்தில் இவர்களின் நிம்மதிதான் முக்கியம் என்றும் அமைதியானான் அன்பரசு.
சுகந்தி, “முல்லையை வர சொல்லுங்க, ஜனனிம்மாக்கு அவ அம்மாவை பார்க்கனுமாம், நானும் ரொம்ப சின்ன வயசுல பார்த்தது” என்றாள் ஆர்வமாக.
“குட்டி பாப்பாங்களோட போய் நீங்களே அழைச்சிட்டு வாங்கம்மா” என்றார் ஜானகி.
தன் வாழ்க்கை போல் முல்லை வாழ்க்கை ஆகிடக்கூடாதென “அனு, பாப்பாவோட போய் முல்லையை அழைச்சிட்டு வா” என்று சுகந்தி சொல்ல, மனைவி மனமறிந்து “ஏன் நீ கூட போக மாட்டியா?” என்றான் சத்யன்.
“இல்ல, எல்லாரும் போனா முல்லைக்கு கஷ்டமா இருக்கும்ல?” என சுகந்தி சொல்ல, ஆண்களோடு அமர்ந்திருந்த சத்யன் மனைவியிடம் வந்தமர்ந்து, “என்னை கட்டிக்கிட்டதால நீ ராசியில்லாதவளாகிட்டியா?” என்றான் முறைப்போடு.
“இல்லடா” என உடனே மறுக்க, “அப்போ அவனை நினைச்சியா?” என சத்யன் தீயாய் முறைக்க, தன்போல் எழுந்தாள் சுகந்தி.
சுகந்தியும் அனுவும் சிறுவர் பட்டாளத்தோடு முல்லையை அழைத்து வர எழுந்தனர்.
மாதவன் மகன்கள் மூவருமே நல்ல உயரம். சேகர் மாதவனோடு சேர்த்து ஐந்து ஆண்கள் இன்முகத்தோடு தனது வீட்டில் அமர்ந்திருந்ததில் பெரிய பலம் உண்டானது போன்ற உணர்வை கொடுத்தது ரங்கசாமிக்கு.
முதலில் சிறுவர் பட்டாளம் உள்ளே செல்ல, “ஹாய்” என வரவழைத்த சிரிப்பை உதிர்த்தாள் முல்லை.
“ரொம்ப அழகா இருக்கிங்கம்மா” என்று ஜனனி ரசித்து சொல்ல, அம்மாவா என பெருமையடைந்தவளுக்கு கண்ணே கலங்கியது. ஏழு வயதில் தனது அண்ணன் மகளை தன் மகள் போல் வளர்த்துகிறான் என தந்தை அன்னையிடம் சொன்னதை கேட்டிருப்பதால் ஜனனி யாரென சட்டென விளங்கியது முல்லைக்கு.
ஜனனியின் அழைப்பு முல்லைக்கு பிடிக்குமோ என்ற தவிப்பில் அனுவும் சுகந்தியும் உள்ளே வர “வா.. வாங்கக்கா” என்றாள் இன்முகத்தோடு.
“பிடிச்சிருந்தா போன் செய்ய சொன்னேனே? ஏன் பண்ணல?” என்றான் டீ யை எடுத்தவாறு.
இத்தனை பேர் முன்னே இப்படி கேட்குறானே என அதிர்ந்த முல்லை, பதில் பேச திணற “இது எப்படா?” என சிரித்தான் சத்யன்.
“நேத்து இங்க வந்தப்போ” என அன்பரசும் சிரிக்க, முல்லையின் தடுமாற்றத்தை பார்த்த சரவணன், “டீ ஆறிடப்போகுது, கொடுங்க” என கை நீட்டினான்.
தப்பிவிட்ட பாவனையோடு சரவணனிடம் சென்றாள் முல்லை. பின்னே அனைவருக்கும் கொடுத்து முடிக்க, “இப்படி வந்து உக்காரு கண்ணு, மகளும் மருமகளும் தட்டுல எல்லாம் எடுத்து வைக்கட்டும்” என்று கல்பனா சொல்ல, அவரருகே போய் அமர்ந்தாள் முல்லை.
இத்தனை பேரை தனது வீட்டில் பார்ப்பது இதுவே முல்லைக்கு முதல் முறை. நாராயணன் வனிதா குடும்பம் முக்கிய தேவை என்றால் மட்டுமே ஒன்று சேர வருவார்கள். அந்த நேரம் முல்லை தனதறை விட்டு வெளி வரமாட்டாள். அவர்களும் காரணமாக வந்த விசயத்தை விளக்கிவிட்டு சென்றிடுவார்கள்.
இப்படி கலகலப்பாக, முழு நிறைவோடு முக்கியமாக தன்னை பிடித்து வந்திருப்பது சந்தோசம் என்று சொல்லிவிட முடியாது அதற்கு மேல உன்னதமான உணர்வை கொடுக்க உடலெல்லாம் புது ரத்தம் பாய்வது போலிருந்தது முல்லைக்கு.
சுகந்தியும் அனுவும் நிச்சயம் செய்ய தோதாக ஐந்து பெரிய தட்டுகளில் பழம் பூ இனிப்பு என அழகாய் அடுக்கி வைத்து நகையையும் எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
அப்பார்மண்ட்டிலிருந்தும், காம்பளக்ஸில் இருப்பவர்களும் வர ஆரம்பித்து, அடுத்த கால் மணி நேரத்திற்குள் அறுபதுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர்.
காலையில் கோவிலில் குர்தாவில் பார்த்த போதே மயங்கியிருந்தான் அன்பரசு. தற்போது நீல நிற சாஃப்ட் சில்க்கில் ஜொலிக்கும் முல்லை மேல் பித்தாகிப்போனான். இத்தனை பேர் இருக்க எப்படி தனியே பேசுவது என்று யோசித்திருந்தான்.
“ரெடி மாமா” என்று சுகந்தி சொல்ல, “நிச்சயம் பண்ணிடலாங்களா?” என்றார் மாதவன்.
தான் எதிர்பார்த்தவர்களும் வந்திருக்கவே ரங்கசாமி சம்மதமாய் தலையசைக்க, “உங்க முறை எதாவது இருந்தா சொல்லுங்க. அதையும் பண்ணிடலாம்” என்றார் மாதவன்.
“இனி உங்க முறைக்கு முல்லை பழகிக்கட்டும்” என்று ரங்கசாமி மகிழ்வோடு சொல்ல, நிறைந்த மனதோடு அன்பரசை பார்த்தார் மாதவன். பிறகு அன்பரசு எழுந்து வர, முல்லையை அழைத்து வந்தாள் சுகந்தி.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.