மாதவன் வீட்டின் முறைப்படி, முல்லை அன்பரசுக்கும், அன்பரசு முல்லைக்கும் சந்தனம் பூசிவிட வேண்டும் என்பதால், “அன்பு கையில சந்தனம் போட்டு விட்டு, குங்குமம் வச்சி விடு முல்லை” என்று சுகந்தி விளக்க, அதிர்ந்து விழித்தாள் முல்லை.
“வேற வழியே இல்ல, கொஞ்சமாவது போட்டுவிட்டுத்தான் ஆகனும்” என்று சுகந்தி சந்தன கின்னத்தை நீட்ட, கின்னத்தையும் அன்பரசு கையையும் மாறி மாறி பார்த்தாள் முல்லை.
“முல்லைதான் சங்கட படுதில்ல? கையை நீட்டேன்டா” என்று சத்யன் அதட்டல் விட, “உன் கல்யாண விசயத்துல நான் தலையிட்டேனா? என் விசயத்துல எதுக்குடா குறுக்க வர?” என பொய்யாய் முறைத்து, முல்லையை பார்த்தான்.
நேற்றிரவெல்லாம் மனதில் தன்னோடு இணைத்துப் பார்த்தாள்தான். அப்பொழுது சுகமாய் இருந்த மனம், தற்போது நேரெதிரே அன்பரசு நிற்கவும், அவனின் உயரமும், திடமான உடல்வாகும் முல்லைக்கு திணறலை கொடுத்தது.
ரங்கசாமி குடும்ப வழக்கப்படி இப்படி சம்பிரதாயம் இல்லை என்றாலும், இந்த விசயம் பிடித்திருக்கவே, “போட்டுவிடு முல்லை. பொண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் பிடிச்சிருக்கானு பெரியவங்க தெரிஞ்சிக்கிறதுக்காக ஏற்படுத்தின சம்பிரதாயமா இருக்கும்” என மகளுக்கு எடுத்துரைத்தார்.
அடுத்து அம்மா ஆரம்பிக்கும் என, அன்பரசின் கைக்காக தனது கையை நீட்டினாள் முல்லை. முழு கை சர்ட்டை முழங்கை வரை மேலேற்றி அன்பு தனது வலக்கையை நீட்டினான்.
இடக்கையால் பிடித்தவள், சுகந்தியிடமிருந்த கின்னத்தில் வலக்கையால் சந்தனைத்தை எடுத்த நேரம் தனது கையின் கனத்தை அதிகப்படுத்தினான் அன்பரசு.
தவற விட்ட கையை பிடிப்பதுபோல் அன்பரசு கையை வலுவாய் பிடித்தாள் பதட்டத்தோடு. “ம்… இப்படித்தான் டைட்டா பிடிக்கனும்” என்று சிரித்தவன், “சேகர் ஒன்னுவிடாம கேட்ச் பண்ணு” என்றான்.
சேகர் தனது மொபைலை எடுக்க, முல்லை தலைகுனிய, “போட்டு விடு முல்லை, எல்லாரும் உன்னைத்தான் பார்க்குறாங்க” என்று சுகந்தி கிசுகிசுக்க, பிறகு போட்டுவிட ஆரம்பித்தாள் பெருத்த சங்கடத்தோடு.
மறுகையை நீட்ட, அதிலும் போட்டுவிட்ட பின்னே தனது கை நீட்டினான் முல்லை கைக்கு சந்தனம் பூசுவதற்கு. நானும் போட்டுக்கனுமா? என்பதாய் முல்லை சுகந்தியை பார்க்க, சுகந்தி தலையசைப்பதற்குள் அவளின் கையை பற்றினான் அன்பரசு.
“இங்க கொடு அண்ணிம்மா” என்று சுகந்தியிடம் சந்தனத்தை எடுத்து மெல்லிய வருடலோடு முல்லைக்கு போட்டுவிட, சந்தனத்தோடு குங்குமும் சங்கமமானது போல் ஆனது முல்லையின் முகம்.
பிறகு குங்குமம் இட்டு விட சொல்ல, முல்லைக்கு குங்கும்மிட்டு, அவளின் முகத்திற்கு நேரே குனிந்து தன்னிரு புருவம் உயர்த்தி இறக்கினான் சிரிப்போடு.
இதென்ன கல்யாணம் போல என முகம் பெரும் அவஸ்த்தைக்குள்ளாக, ஒவ்வொன்றிற்கும் யோசித்தால் பார்ப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று “போட்டு விடு முல்லை” என்றார் ஜானகி.
முல்லை போட்டு விட, தலை குனிந்து வாங்கியவன், அவளிற்கும் போட்டுவிட்டான் மாலையை. பிறகு சுகந்தி நகையை எடுத்து கொடுக்க, சற்று நெருங்கி நின்று அணிவித்து, தனது சர்ட் பாக்கட்டிலிருந்த மோதிரத்தை எடுத்து அணிவித்தான் அன்பரசு.
“எப்படிடா இப்படி பர்ஃபெக்ட்டா வாங்கின?” என்று சத்யன் கிண்டல் செய்ய, “நேத்து வந்தப்போ விரல் சைஸ் பார்த்துட்டு வந்தேன்” என்றான் புன்னகை முகமாக.
பிறகு ஜானகி வைர மோதிரத்தை முல்லையிடம் கொடுத்து அணிவிக்க சொல்ல, முல்லை அணிவித்தாள். அதுவும் சரியாக இருக்கவே அன்பரசு முகம் ஆச்சர்யத்தை காண்பிக்க, “ரொம்ப நாள் முன்னவே உங்க விரல் சைஸை நான் பார்த்துட்டேன் மாப்பிள்ளை” என்று ரங்கசாமியும் பெருமையாய் சொல்ல, மாதவனுக்கு மனம் நிறைந்து போனது.
முழங்கை வரை சந்தனம் பூசி, இருவரும் மாலை அணிந்திருக்கவும், தற்போதே மணக்கோலத்தில் பார்த்த திருப்தி உண்டானது முல்லையின் தாய் தந்தைக்கு.
“குழந்தைகளை நான் பார்த்துக்கிறேன், நான் சொன்ன நாலு பேர் சேகர், அன்பு, சரவணன், சத்யன்” என்றார் ஜானகி.
“அவருக்கா? நானா?” என முல்லை அதிர, “பின்ன யாரு?” என அதட்ட, “நாங்க பார்த்துக்கிறோம், நீங்க வந்தவங்களை கவனிங்க” என்று சுகந்தி சொல்ல, சரியென தலையசைத்து ஜானகி மேல சென்றார்.
“அண்ணிம்மாவை விட அவங்கப்பாம்மாக்குத்தான் உன் மேல லவ் ஜாஸ்தி போல” என்று சரவணன் சிரிக்க, தன்மீதான முல்லையின் காதலை காலையில் கோவிலிலேயே தெரிந்திருந்தான் அன்பரசு. ஆனால் சரவணனிடம் “ப்ச் ஆமாம்டா” என்றான் முல்லையை பார்த்தவாறு பாவம் போல்.
“அப்படி பழக்கம்லாம் நம்மள்ல இல்ல அன்பு, மாமா எதாவது நினைப்பார்” என்று சுகந்தி உண்மையாய் வருந்த, “சரி சரி விடு. இத்தனை பேர் முன்ன பக்கத்துல உக்கார்ந்தா மட்டும் என்ன பேச முடியும்?” என கடுகடுத்து,
“உன் புருசன் வேற என்னை விட்டு நகரமாட்டேங்குறான். முதல்ல சத்யனை உன்கிட்ட கூப்பிடு. அப்படியே இரண்டு பேரும் சீக்கிரம் சாப்பிட்டு கீழ போங்க. இந்த ஹெல்ப்பையாவது செய்” என்று முணுமுணுத்து உண்ண அமர்ந்தான் அன்பரசு.
“அடப்பாவி… நீயாடா கல்யாணம் வேணாம்னு சொன்னவன்?” என்று முணுமுணுத்தாள் அதிர்வாக.
“என்னாச்சு?” என்ற அனுவிற்கு சுகந்தி விளக்கமளிக்க, அனு சிரிக்க, இவர்களை பார்த்திருந்த அன்பும் சிரித்தபடி “சத்யா… நீ வந்தாதான் சுகந்தி சாப்பிடுமாம். போய் பக்கத்துல உக்காரு” என்றான்.
சத்யன் சுகந்தியருகே அமர, சிரிப்போடு தானும் சென்றமர்ந்தான். இவர்களின் கிண்டல் பேச்கை கேட்டிருந்த ரங்கசாமி, “ஜானு, முல்லையை அன்பு பக்கத்துல உக்கார சொல்லு” என்றார் ரகசியமாக.
“நான் எப்படிங்க சொல்றது? பரிமாற சொன்னதுக்கே மாட்டேனுட்டா” என்று ஜானகி சங்கடமாக, “சுகந்தி பொண்ணுகிட்ட சொல்லு. அது முல்லைகிட்ட சொல்லிடும்” என்றார்.
ஜானகி எழவே, “ஏன்ம்மா எழறிங்க?” என்று முல்லை அன்னையிடம் வந்தாள். “போய் அன்புக்கு பரிமாறு” என்று ஜானகி சொல்ல, முல்லை முகம் சங்கடத்திற்குள்ளாக, இவர்களை பார்த்திருந்த அன்பரசு “உன்னை சாப்பிட கூப்பிடத்தான் எழுந்தாங்க. சாப்பிடு” என்றான்.
“உக்காரும்மா” என்றபடி கல்பனாவும் சொல்ல, அன்னையருகே அமர்ந்தாள் முல்லை. பின்னே அனைவரும் உண்டுகொண்டிருக்க, தன் அப்பா அருகே வந்தமர்ந்து “என்ன வேணும்ப்பா?” என ஜனனி கேட்க, மகளோடு உரையாடியபடி உண்டான் அன்பு.
அன்பை தவிர்த்து மற்றவர்கள் உண்டு முடித்திருக்க, சுகந்தி “கீழ போலாம் மாமா” என்றாள் மாதவனிடம்.
“எல்லாரும் வரட்டும் சுகந்திம்மா” என்க, “அன்பு முல்லைகிட்ட பேச நினைப்பான் போல மாமா, நாம குழந்தைகளை அழைச்சிட்டு போலாம். அவன் பேசிட்டு வரட்டும்” என்றாள்.
மாதவன் யோசிக்க, “இந்த காலத்துல இதெல்லாம் சகஜம் மாமா. இன்னைக்கு ஊருக்கு போனான்னா திரும்ப வர ஒரு மாசத்துக்கு மேல ஆகிடும்னு சொன்னான். பேசிட்டு வரட்டும். முல்லையும் கொஞ்சம் இயல்பா ஃபீலாகுவா” என்றாள்.
“சரிம்மா, ஆனா சீக்கிரம் வந்திடனும்னு சொல்லிட்டு வா” என்று பேரக்குழந்தைகளோடு மாதவன் கல்பனா கீழிறங்க, பின்னோடே ரங்கசாமி ஜானகியும் சென்றனர்.
முல்லையும் கீழிறங்கப்பார்க்க, “எங்க போற? இரு” என்று பிடித்து வைத்த சுகந்தி, “அன்போட சாப்பாட்டு பழக்கம் பத்தி தெரிஞ்சுக்க வேணாமா?” என்று அன்பரசிடம் அழைத்து வந்தாள்.
இவர் என்னவோ என்னை பார்தத்தும் லவ் பண்ண மாதிரி என்று கடுப்பாக நினைத்தவள், “ஆமாம்” என்றாள் சன்னக்குரலில்.
காலையில் கோவிலில் பார்த்தபோதிருந்த சந்தோசம் உண்மைதான். சற்று முன் சந்தனம் போடும்போது கூட சிவந்தாளே, எனில் தற்போதைய பாவனையின் காரணம் என்னவென்று யோசிக்க, ஏதும் புரியவில்லை அன்பரசுக்கு.
ஆனாலும் முல்லையை தவறாய் நினைக்க முடியாமல் போக, “அப்போ யாருக்கும் தெரியாம அழப்போறியா?” என்றான் அர்த்த பார்வையோடு.
“இல்லயில்ல… அதெல்லாம் இல்ல, இந்த கல்யாணம் பிடிச்சிருக்கு” என்றாள் அவசரமாக.
முல்லையின் பதிலில் மனம் இதமாக, “அப்பாம்மாக்காக மட்டுமே கல்யாணம் செய்துக்கிற அளவுக்குதான் இருக்கேனா? அப்படியே கொஞ்சம் கம்பீரம், அழகு இதெல்லாம் இல்லையா? நீ என்னை மயக்குனமாதிரி நான் உன்னை மயக்குலயா?” என்றான் மைய்யலாக.
முகம் சிவந்தவள், பதில் பேச முடியாமல் திரும்பி நிற்க, இப்படி மயக்குறாளே… நீ காலிடா அன்பு என நினைத்தவன் “இட்லி காலி” என்றான்.
சட்டென திரும்பியவள் இட்லி பாத்திரத்தை திறக்கவே, “ஹம்… எவ்வளோ இட்லி போட்டாலும் என் பசி தீராது. எப்படித்தான் ஒரு மாசத்தை ஓட்டுவேனோ” என புலம்பியபடி இலையை மடித்து எழுந்தான்.
கேட்டுவிட்டு ஏன் எழுந்தான் என்று முல்லை புரியாமல் பார்க்க, கை கழுவி வந்தவன் “ஷுட்டிங் போனா வர ஒரு மாசத்துக்கு மேல ஆகிடும் குண்டுமல்லி. இன்னும் கொஞ்ச நேரத்துல அப்பா கூப்பிடுவார், அதுக்குள்ள எதாவது பேசு” என்றான் ஏக்கமாக.
“குண்டுமல்லியா?” என முல்லை கண்களை அகல விரிக்க, “ம்… அது சின்ன வயசுல நான் உனக்கு வச்ச பேரு. அப்போ கன்னமெல்லாம் குண்டு குண்டா, அதோட கொஞ்சம் தொப்பையும் இருக்கும்.
இப்போ ஹைட்டுக்கேத்த வெய்ட்டோட கரெக்ட்டாத்தான் இருக்க” என்று பார்வையால் முல்லையை அளந்தவன், “முல்லையும் பூதான். குண்டுமல்லியும் பூதான். எப்படி கூப்பிட்டா என்ன?” காதலாக.
‘என்ன இப்படி பார்க்குறாங்க’ என அதிர்ந்தவள், பேச்சை மாற்ற எண்ணி, “என் அப்பாம்மாவை அத்தை மாமானு சொல்விங்களா?” என்றாள் கோரிக்கையாக.
“கூப்பிடக்கூடாதுனு இல்ல. சட்டுனு வரல” என்றவன் “முதல் முறையா என்கிட்ட கேட்டுருக்க? மாட்டேனு சொல்வேனா?” என்று சற்று நெருங்கி நின்றான் முல்லையோடு.
முல்லை முகம் பதட்டத்திற்குள்ளாக, “இப்படி திறந்த வெளில என்ன பண்ணிடுவேன்? ஜஸ்ட் ஒரு செல்பி” என்றபடி படம் பிடிக்க, இவனின் நெருக்கத்தில் முல்லை முகம் விதவிதமான பாவனையை காட்ட, ஒரு நிமிடம் போல் அத்தனை பாவனையையும் படம் பிடித்து, அவளிடம் காண்பித்து “நல்லா வந்துருக்கில்ல?” என சிரித்தான் ரசனையோடு.
தான் உயரம் என நினைத்திருந்ததெல்லாம் அவனருகில் காணாமல் போயிருக்க, மூச்சு முட்டியது முல்லைக்கு. “எதுக்கு இவ்வளோ பதட்டம்? போட்டோதானே எடுத்தேன்?” என்றான் கனிவோடு.
“இல்ல, இப்படி பக்கத்துல… என்னால” என்று திணற, சற்று தள்ளி நின்றவன், “ஹம்… இதுக்கே இப்படி திணறினா” என தன்போல் புலம்பி, “வா போலாம்” என்று முல்லையை முன்னே செல்லப் பணித்து, பின்னோடு இவனும் கீழிறங்கினான்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.