நிச்சயத்தின் போது போட்டிருந்த உடையிலேயே இருந்தாள் முல்லை. சாப்பிடும்போது கை கழுவினாள்தான். ஆனால் மணிகட்டிலிருந்து முழங்கை வரை இவன் போட்டு விட்ட சந்தனமும் நகையும் இன்னும் முல்லையை தழுவிக்கொண்டிருந்தது.
சில நொடி முல்லையை ரசித்தவன், பிறகு அவளின் தவிப்பான முகம் கண்டு, “என்ன பிரச்சனை உனக்கு?” என்றான்.
ஒன்றுமில்லை என்பதாய் தலையசைக்க, ஜானகியும் சரவணனும் அருகிலிருக்க வேறு என்ன பேசுவதென்று “மூனு மணிக்கு ட்ரைன். இப்போ டைமாகுது, எதாவது சொல்லனும்னா கால் பண்ணு” என்று ஜானகியிடமும் விடைபெற்று கிளம்பினான் இரயில் நிலையத்திற்கு.
இரயில் நிலையத்திற்கு சென்ற பின்னே, அரைமணி நேரம் தாமதமாக வரும் என்று அறிவித்திருந்தனர். “நீ கிளம்பு சரவணா, நான் போய்க்கிறேன்” என்றான் அன்பரசு.
“வீட்ல போய் என்ன பண்ணப்போறேன்? ட்ரைன் வரவரைக்கும் இங்க இருக்கேன்” என்றான் சரவணன்.
சரவணனும் சிரிக்க, பிறகு அவனின் நடிப்பு பற்றி சற்று நேரம் பேசியிருந்தனர். பின்னர் இரயில் வரவே, வழியனுப்பி வீட்டிற்கு கிளம்பினான் சரவணன்.
இரயிலில் மூன்று மணி நேரம் பயணம் செய்ய வேண்டியிருக்க, முல்லை அழைப்பாளா என்று ஒரு மணிநேரம் வரை எதிர்பார்த்திருந்தான். முல்லை அழைக்கவில்லை.
தனது எண்ணை அவளின் தந்தையிடம் கேட்டு வாங்கினாளா? அல்லது தயங்கிக்கொண்டு வாங்கவில்லையா? எதற்கும் தனது எண்ணை அவளின் வாட்ஸாப்பிற்கு அனுப்பலாம் என்று வாட்ஸாப்பிற்கு சென்றவன் கண்கள் வியந்தது.
டைப்பிங் என்று காண்பித்ததும் தனது எண்ணை பதிந்திருக்கிறாள் என்று மகிழ்ந்தவன் என்ன சொல்ல நினைக்கிறாள் என்று ஆவலோடு காத்திருந்தான். நான்கு முறை டைப்பிங் என்று மட்டுமே காண்பித்தது. ஆனால் குறுஞ்செய்தி வரவில்லை.
நிச்சயமே செய்தாச்சு, பேசும் எண்ணமும் இருக்கு. நேர்லதான் தயக்கம்னா வாட்ஸாப்ல பேசக்கூட தயங்கினா என்னதான் செய்யிறது? என்று சிறு கோபத்தோடு மொபைலையே பார்த்திருந்தான்.
முல்லை ஆஃப்லைன் சென்றிருக்க, “ப்ச் போடி” என்று இவனும் மொபைலை வைத்து ஓய்விற்காக கண்மூடி படுத்தான்.
*** *** *** ***
அன்பரசும் சரவணனும் வீட்டிற்கு வந்து கிளம்பிய அரைமணி நேரத்தில் ரங்கசாமியின் அக்காள் குடும்பமும், தம்பி குடும்பமும் வந்திருந்தனர்.
“நிதீஷை கல்யாணம் செய்ய சம்மதிச்சிட்டு எப்படி வேற இடத்துல நிச்சயம் செய்திங்க?” என்று ஆத்திரத்தோடு கேட்டார் வனிதா.
நாராயணனும் அவரின் மகனும் கோபம் காட்டவே, “நிதீஷை கட்டிக்கிறேனு நான் சொல்லவேயில்லையே” என்று அறையிலிருந்து வந்தாள் முல்லை.
காலையில் உடுத்திய உடையை இன்னும் மாற்றவில்லை முல்லை. கழுத்தில் மின்னிய புதிய நகையும், விரலில் உறவாடிய மோதிரத்தையும் பார்க்க, பெரிய இடமாக பிடித்துவிட்டார்களோ? என்ற பதட்டம் வந்தது நிதீஷிற்கு.
யாரோ பேமாளி வந்திருப்பான். தனக்கு கொடுக்க விருப்பமில்லாமல் அவசரமாக நிச்சயித்திருப்பார்கள். சண்டை போட்டு முல்லையை தனதாக்கிடலாம் என்ற எண்ணத்தோடு வந்தான் நிதீஷ்.
ஆனால் முல்லையின் நிமிர்வான பேச்சும், வேறொருவனுக்கு சொந்தமாகிடுவாளோ என்ற நினைப்பும், பெரும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் உண்டாக்க, “எவ்வளோ தைரியம் இருந்தா என் பேரை சொல்லுவ?” என்றான் ஆத்திரத்தோடு.
உண்மைதான்… இத்தனை வருடங்களில் இன்றுதான் நிதீஷ் என்ற பெயரை உச்சரிக்கிறாள். அதுவும் இத்தனை தைரியமாக.
ரங்கசாமி மொபைலை எடுக்க, “அப்பா அவருக்கு கால் பண்ணாதிங்க. இது அவ்வளோ பெரிய விசயமில்லை” என்றாள் தந்தையிடம்.
எப்பொழுதும் முல்லை பயந்து அறைக்குள் செல்வதுதான் ரங்கசாமியின் பெரும் குறையாக இருக்க, இன்று மகளே இத்தனை தைரியத்தோடு பேசுவது பெரும் சந்தோசத்தை உண்டாக்கியது தந்தைக்கு.
“ஓ… அவ்வளோ பெரிய ஆளா அவன்? பார்க்கலாம்டி… என்னை மீறி எப்படி உன்னை கல்யாணம் செய்துக்குறானு” என்றான் பயமுறுத்தும் தோரணையோடு.
முல்லையின் இந்த பரிணாமத்தை வனிதாவால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போக, “என் மகனுக்கு நம்பிக்கை கொடுத்துட்டு இன்னொருவனை நிச்சயம் செய்திருக்க. அவனை விட பெரிய இடமா வந்த நிச்சயித்தவனை ஏமாத்திட்டு வேறொருவனை கட்டிப்ப. நல்ல ரத்தம் ஓடியிருந்தா இப்படி செய்வியா?” என்றார் ஆத்திரத்தோடு.
கண்ணீர் வெளி வந்தாலும், மூச்சிழுத்து தன்னை சமன் செய்தவள், “என் உடம்புல நல்ல ரத்தம் ஓடுறதாலதான், நீங்க சுயநலவாதிங்கனு தெரிஞ்சும் எங்கப்பாவோட உறவுகளாச்சேனு மரியாதை கொடுத்தேன். ஆனா நீங்க எங்கப்பாக்கு என்ன செய்திங்க?” என்றாள்.
“ஏய்…” என்று நிதீஷ் முல்லையை நெருங்க, தொட்டுவிடுவானோ என்று பயந்தவள் இரண்டடி பின்னே நகர்ந்து, “என்னை தொட்ட…” என்று எச்சரித்தாள் விரல் நீட்டி.
“என்னடி செய்வ?” என்று நிதீஷ் முன்னேற, “உன் உடம்புல ஓடுற ரத்தம் அப்படினு நான் விட்டுடுவேன். ஆனா என்னை கட்டிக்கப்போறவருக்கு தெரிஞ்சதும் தொட்ட கையை இல்லாம ஆக்கிடுவார்” என எச்சரித்தாள் பயத்தை வெளிகாட்டாமல்.
“என்னடி சொன்ன? என் உடம்புல ஓடுற ரத்தம் அப்படினு விடுவியா?” என கர்ஜித்தவாறு முல்லையை நோக்கி செல்ல, மகள் முன்னே நின்றார் ரங்கசாமி.
“நம்ப பரம்பரை ரத்தம் அசிங்கம்னு சொல்லி உங்களையும் சேர்த்துதான் அசிங்கப்படுத்துறா, உங்களுக்கு புரியலையா மாமா?” என்றான் கோபத்தோடு.
“என் பொண்ணு என்னை எப்போவும் அசிங்கப்படுத்தமாட்டா, எங்க பரம்பரை ரத்தம் ஓடியிருந்தா நீயும் எங்களை போல முல்லையை புரிஞ்சிருப்ப. உன் உடம்புல ஓடுறது உங்கப்பன் ரத்தமா இருக்கும். அதான் வேறவங்களுக்கு நிச்சயித்த பொண்ணுகிட்ட வந்து ரகளை பண்ணிட்டிருக்க” என்றார் முறைப்போடு.
கணவனை சொன்னதும் “ரங்கசாமி” என்று வனிதா கோபமாய் கத்த, “வார்த்தையை விட்டா பதிலுக்கு அள்ளித்தான் ஆகனும்க்கா. முல்லையை பெத்தவங்க யாரா வேணா இருக்கலாம். ஆனா முல்லை என் பொண்ணு, என் மகளை தவறா பேச யாருக்கும் உரிமையில்ல, அருகதையும் இல்ல” என்றார் அழுத்தமாக.
மாதவனும் சத்யனும் வீட்டிற்குள் வர, ரங்கசாமியின் முகத்தில் நிம்மதியும் பெருமையும் வந்தமர்ந்தது. அன்பரசனின் தந்தையை பார்த்ததும் சிறு பயம்தான் என்றாலும், அவன் இருந்திருந்தால் வந்திருப்பான். அன்பு ஊரில் இல்லை, அதனால்தான் இவர் வந்திருக்கிறார் என்று தைரியம் வர, “ஓ… இவங்களை அடியாளா வச்சிக்கிட்டுத்தான் ஆடிட்டிருக்கிங்களா?” என்றான் மிதப்பாக.
சத்யன் முறைத்தவாறு முன்னேற, அன்பரசனின் அண்ணன் இவன் என்றறியாத நிதீஷ், “வயசு பொண்ணு இருக்க வீட்டுல இப்படி கண்டவங்களையும் உள்ள விடுறிங்களே, இதான் நல்ல ரத்தம் ஓடுறவங்க பண்ற வேலையா?” என்றான்.
“என்னடா சொன்ன?” என்று தனது சர்ட்டை மேலேற்றியவாறு நிதீஷை நெருங்கினான் சத்யன்.
அன்பரசைபோல் கட்டுமஸ்த்தான உடல்வாகில்லை சத்யனுக்கு. ஆனால் ஊளைச்சதை இல்லாமல் உயரத்திற்கேற்ற சரியான எடையில் இருந்தான்.
இவனை எதிர்க்க முடியாதா தன்னால் என்ற இறுமாப்பில் இருந்த நிதீஷிடம், “என்னடா சொன்ன?” என்று மீண்டும் கேட்டபடி நெருங்க, “ஏண்டா? உனக்கு தமிழ் புரியாதா? நல்ல ரத்தம்” எனும்போதே கன்னத்தில் அரைவிட, கிறுகிறுப்பானது நிதீஷிற்கு.
முயன்று தன்னை திடப்படுத்தி சத்யனை அடிக்கப்போக, சுலபமாய் அவனின் கையை வளைத்துப் பிடித்தவன், முகத்திற்கு நேரே மற்றொரு கையை வேகமாய் ஓங்க, நிதீஷ் முகம் பயத்தை காட்ட, ஒரு அடிக்கே கன்னம் சிவந்து தடித்திருப்பதால் விடுவித்தவன், “போடா” என்றான் சிறுவனை மிரட்டும் தோரணையில்.
“இருடா போலீஸ்க்கு கால் பண்றேன்” என்று நாராயணன் மொபைலை எடுக்க, “ஏன்ப்பா அங்கையே நிற்குறிங்க, வாங்க” என்று தந்தை கைப்பிடித்தபடி சோபாவில் மிடுக்காக அமர்ந்தான் சத்யன்.
நாராயணன் முறைக்க, “எதோ கால் பண்றேன்ன? பண்றா” என்றான் மரியாதையின்றி.
கொழுந்தனின் நலன் கருதி “பேசாம கிளம்புங்க, இல்ல அசிங்கப்படுவிங்க” என்று எச்சரித்தார் ஜானகி.
“நம்ம குடும்ப விசயத்துல தலையிட இவங்க யாரு அண்ணி?” என்றார் கோபமாக.
ஜானகி “எங்க சம்மந்தி, இந்த தம்பி எங்க மாப்பிள்ளையோட அண்ணன், சத்யன்” என்றார்.
சொல்லும்போதே ஜானகி முகத்திலிருந்த பெருமை… வனிதா, நாராயணனை கீழாக உணரச்செய்தது. அதோடு முல்லையை நிச்சயம் செய்திருப்பவன் அன்பரசு என்றதும் அனைவருக்கும் பதறித்தான் போனது.
சத்யன் அத்தனை சட்டமாய் அமர்ந்திருக்க, எதிர்க்க திராணியில்லாமலும், இருந்தால் இன்னும் அவமானப்படுவோம் என்றும் “வாடா போலாம்” என்று இறுகிய முகத்தோடு எழுந்தார் வனிதா.
முல்லையை பயமுறுத்த வந்த எண்ணம் ஈடேறாமல் போன கோபம் இருந்தபோதும், எப்பொழுதும் தங்களுக்காக பேசும் ஜானகியும் மாதவன் குடும்பத்தினரை பெருமையாக அறிமுகம் செய்ய, இதற்கு மேல் வழக்காடினால் ரங்கசாமி முன்பு கொடுப்பதாய் சொன்ன பூர்வீக சொத்தையும் இழந்திடுவோமோ என்று தோன்ற, கோபத்தோடு எழுவதுபோல் எழுந்தார் வனிதாவின் கணவன்.
நாராயணன் எதோ பேச வர, “நாராயணா, வா போலாம்” என்று கண்ணிலும் செய்கை செய்து மொத்தமாய் அனைவரும் வெளியேறினர்.
வாசலைக் கடக்கும்போது நிதீஷ் கண்கள் முல்லையை பார்க்க, “அடிங்” என்று சத்யன் வேகமாய் எழுந்ததில், சத்யனின் வேகத்திற்கு மேலான வேகத்தோடு வெளியேறினான் நிதீஷ்.
“பிரச்சனை செய்ய இத்தனை பேர் வந்திருக்காங்க, ஏன் மாமா கால் பண்ணல?” என உரிமையாய் வினவினான் சத்யன்.
ரங்கசாமி முல்லையை பார்க்க, சத்யனும் பார்க்க, “அவங்க தொழில் விசயமா ரொம்ப நாளைக்கு வெளில தங்க போறாங்க. இதை சொன்னா இங்க நினைப்பா இருப்பாங்கனுதான்” என்றாள் தயக்கத்தோடு.
“ஓஹ்” என்று சந்தோசமடைந்தாலும், “அன்பு வெளில இருக்கும்போது சொல்லவேணாம்னா அவன் வந்த பின்ன சொல்லிக்கலாம். ஆனா எங்கள்ல யாருக்காவது சொல்லனும்” என்றான் கட்டளையாக.
“பேசினாங்க, ஆனா நானும் பதில் சொல்லிட்டேன்” என்று நடந்தவைகளை சொன்னாள்.
“குட்” என்று பாராட்டியவன், கிளம்புவதற்காக எழவே, மாதவனும் எழ, “உக்காருங்க பெரிய மாமா” என்றவள், கிச்சனுக்கு சென்றாள்.
“ஏதும் வேணாம்டா. இங்க வா” என்றார் மாதவன்.
முல்லை வர, “நாங்க இருக்கோம்ன்ற தைரியத்துலதான் அன்பு தைரியமா கிளம்பியிருக்கான். பிரச்சனையை சொல்லாம விட்டாலாம் நிம்மதி கிடைக்காது. அதை சரி பண்ணனும். நல்லவங்களா இருந்தா பேசி தீர்க்கலாம். இவங்ககிட்ட வெறும் பேச்சு செல்லாது. நாலு தட்டு தட்டினாதான் சரிவரும்.
இனி இந்த வீட்டு பொண்ணு மட்டுமில்ல, எங்க வீட்டு மருமகளும். அன்பரசு பொண்டாட்டியை தப்பா பார்க்குறதென்ன? நினைக்கக்கூட எவனுக்கும் தைரியம் இல்லாம பண்ணனும். அதுக்கு எதுனாலும் எங்களுக்கு சொல்லனும் சரியா?” என்றார் பொறுமையாக.
“சரிங்க மாமா” என்றாள் நிறைந்த பார்வையோடும் சிரிப்போடும்.
“இந்த சிரிப்பு காலைல எங்க போச்சு?” என மாதனும் சிரிக்க, அழகான பல் வரிசை தெரியும் அளவிற்கு புன்னகையை பெரிதாக்கியவள் “குடிக்க எதாவது எடுத்துட்டு வரேன்” என்றாள்.
“ஒன்னும் வேணாம்டா. சந்தோசமா இருக்கனும் சரியா?” என எடுத்துரைத்து, சம்மந்தியிடமும், “முல்லை சின்ன பொண்ணு, அது சொல்பேச்சு கேட்டுக்கிட்டு எங்களுக்கு சொல்லாம இருக்காதிங்க” என்றார்.
“வாங்கம்மா” என்று ஜானகி சொல்ல, மாதவன் சத்யன் திரும்பி பார்க்கவே, சுகந்தியும் கல்பனாவும் வந்திருந்தனர்.
உள்ளே வந்த சுகந்தி “என்னாச்சு முல்லை? மாமா வரும் முன்ன உன்னை எதாவது பண்ணிட்டாங்களா?” என்றாள் பதட்டத்தோடு.
“இல்லைக்கா” என்று நடந்ததை சுருக்கமாக சொல்லி, “கை வைக்கிற அளவுக்கு வந்தா தடுத்திருப்பேன்க்கா, என் மேல கை வச்சா பூர்வீக சொத்துல பங்கு கிடைக்காதுனு சொன்னாலே போயிருப்பாங்க” என்றாள் சுகந்தியை சமாதானம் செய்யும் நோக்கோடு.
“அப்படிலாம் குருட்டு தைரியத்தோட ரிஸ்க் எடுக்கக்கூடாது. நிதீஷ்க்கு நீ கிடைக்கிலன்ற கோபத்துல அத்தை மாமாவை சின்னதா எதாவது செய்தாலும் அவங்க தாங்குவாங்களா? இத்தனை பேர் இருந்தும் அப்படி எதாவது நடந்திருந்தா எல்லாருக்கும் அசிங்கம்தான? எதுனாலும் சொல்லனும்” என்றாள் சிறு கோபத்தோடு.
“சரிக்கா” என்றாள் நிறைவாக.
பிறகு அனைவரும் கிளம்பினர்.
எதாவது சொல்லனும்னா கால் பண்ணு என்று சொல்லிச் சென்ற அன்பரசிடம் பேச முல்லைக்கும் ஆசைதான். ஆனால் இன்று நிச்சயித்து போட்ட மோதிரத்தை அதற்குள் கழட்டிட்டானே என்ற ஆற்றாமையில் பேசமாட்டேன் போங்க என நினைத்துக்கொண்டாள் ரோசத்தோடு.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.