முல்லை அமைதியாக, “என்னை சோதிக்காத முல்லை” என்றான் சிறு கோபத்தோடு.
“என் அப்பாம்மாக்கு நான்தான் உலகம். என் சந்தோசம்தான் அவங்க நிம்மதி. இரண்டு முறை அவருக்கு ரொம்ப முடியாம ஆகிடுச்சு. உசுரே போச்சு எனக்கு” என கலங்கியவள்,
என்னை தத்தெடுக்கலனா என் அப்பாக்கும் உங்க குடும்பத்தை போல அக்கா தம்பி உறவு இருந்திருக்கும். எனக்காக என் அப்பா எல்லாரையும் பகைச்சிக்கிட்டார். ஆனாலும் ஒருநாளும் அவர் வருந்தினதில்ல.
அவங்க வருத்தமெல்லாம் அவங்க காலத்துக்கப்புறம் நான் அநாதையாகிடுவனோன்றதுதான். நமக்கு நிச்சயம் ஆனதுக்கப்புறம் என்னை ஒரு நல்ல இடத்துல ஒப்படைச்ச சந்தோசத்துல இருக்கார். அந்த சந்தோசத்தை நிரந்தரமாக்கனும். அதுக்கு எனக்கு கல்யாணம் ஆகனும்.
என் கல்யாணத்தையும், அதுக்கப்புறம் வர நிகழ்வுகளையும் திருவிழாக்கு காத்திருக்கும் குழந்தை போல ரொம்ப ஆவலா எதிர்பார்த்து காத்திட்டிருக்காங்க. ஆறு மாசம் கழிச்சு தர சந்தோசத்தை இப்போவே கொடுக்க மனசு அவசரம் காட்டுது” என்றாள்.
இணைப்பை துண்டித்து வீடியோ காலில் அழைக்க, சங்கடமானபோதும் அழைப்பை ஏற்றாள். “அப்பாம்மாக்காக மட்டும்தான் மனசு அவசரம் காட்டுதா?” என்றான் ஏக்கமாக.
“எனக்காகவும்தான்” என்றாள் தாமதிக்காமல்.
“ஹேய்” என அன்பரசு கண்கள் மின்ன, தலைகுனிந்தாள் முல்லை.
“எனக்காகனுதான சொன்னேன்… உங்களோட சேர்ந்து எனக்காகனா சொன்னேன்?” என்றாள் ரோசமாக.
“அப்படினா? நீ என்ன சொல்ல வரேனு புரியல” என்றான் முகம் சுருக்கி.
“நமக்கு கல்யாணம் ஆகிட்டா நான் நம்ம வீட்டுக்கு வரலாம். சுகந்தி அக்கா, ஜனனியோட டைம் ஸ்பெண்ட் பண்ணலாம். உங்க ஜிம் எப்படியிருக்குனு பார்க்கலாம். மாமாவோட டைப் இன்ஸ்டியூட்க்கு போய் மாமாக்கு ஹெல்ப் பண்ணலாம்.
ஜானகி அம்மாவோட சேர்த்து புதுசா கல்பனாம்மா கிடைக்கபோறாங்க. அப்புறம் பெரியமாமா, கொழுந்தனார், சேகர் அண்ணா, அனு அண்ணி, அவங்க குழந்தைகள் இவங்களோடலாம் பழகலாம்.
இவ்வளோ நாளா அப்பாம்மாதான் எனக்கு உலகமா இருந்தாங்க. இனி இப்படி உறவுகளோட வாழப்போறோம்னு நினைச்சாலே ரொம்ப எக்ஸைட்டடா இருக்கு” என்றவள் முகத்தில் கொட்டிக்கிடந்தது ஆர்வம்.
“அடிப்பாவி… இதுல நான் எங்கடி இருக்கேன்? எனக்காகனு ஏதும் யோசிக்கலயா?” என்றான் அதிர்வோடு.
பின்னே சில நொடிகளுக்கு பிறகு, “இத்தனை உறவுகளும் நீங்க என்னை கல்யாணம் செய்துக்குறதாலதான்” என்றாள்.
“புது உறவுகள் கிடைக்கும்னுதான் என்னை கல்யாணம் செய்துக்கிறியா?”
“புது உறவுகள் யாரை கட்டிக்கிட்டாலும் கிடைக்கும். ஆனா மனசுக்கு பிடிச்சவனை கட்டிக்கிட்டாதான் அவங்களை சார்ந்த உறவுகளை நேசிக்கத் தோணும். நான் என் வருங்கால உறவுகளை ரொம்ப நேசிக்கிறேன்” என்றாள்.
மனம் குளிர்ந்தாலும் “மனசுக்கு பிடிச்சவனா? அப்படி இருந்திருந்தா ஒரு மாசமா ஃபோன் பண்ணாம இருந்திருப்பியா?” என்றான் சிறு கோபத்தோடு.
“மோதிரம் போட்ட அன்னைக்கே கழட்டிட்டிங்க. எப்போ கல்யாணம்னு ஆசையா எதிர்பார்த்துட்டிருந்தா… ஆறு மாசம் கழிச்சுனு சொல்றிங்க. உங்ககிட்ட என்ன பேசுறது?” என்றாள் இவளும் கோபத்தோடு.
முல்லையின் கோபம் அன்பரசை பித்தாக்க, “குண்டுமல்லி” என்றான் ஏக்கமாக.
என்ன இப்படி பார்க்குறாங்க என சங்கடமாகி “அம்மா எழுந்துட்டாங்க, நான் வைக்கவா?” என்றாள்.
“ஊரறிய நிச்சயம் பண்ணியிருக்கேன்டீ… பார்க்க முழு உரிமை இருக்கு” என்றான் உரிமையாக.
“அப்புறம் எதுக்கு கல்யாணம்னு ஒன்னு வைக்கிறாங்க?” என முணுமுணுத்தாள் தலைகுனிந்து.
“அது வேற ஒரு முக்கியமான சமாச்சாரத்துக்கு” என்றான் சிரிப்போடு.
“அம்மா எழுந்துட்டாங்க, வைக்கிறேன்” என்று இணைப்பை துண்டிக்க, “வச்சிட்டாளா?” என சிரிப்போடு மொபைலை பார்த்திருந்தவன், ‘சமாச்சாரம்னு சொன்னதுக்கே கட் பண்றவளுக்கு கல்யாணம் சீக்கிரம் வேணுமாம்’ என இன்பமாய் நினைக்க, அவனின் மொபைல் அழைத்தது.
“ம்” என்று அமர்ந்தவன், “சத்யன் போன் செய்தானா?” என்றான்.
“ம், நேத்து நைட் பண்ணினான்” என, போன் செய்து ஒரு மாதம் ஆன பாவனையில் சொன்னாள் கடுப்பாக.
“பார்டா, உனக்கு போன் பண்றதை விட என்ன முக்கியமான வேலையாம்? திரும்ப போன் செய்தானா நல்லா திட்டிவிடு அண்ணிம்மா” என சிரிப்போடு சொல்லி, “அத்தை போன் செய்தாங்களா?” என்றான்.
“ம் அதெல்லாம் தினமும் பண்ணும். வீடியோ கால் செய்து ஸ்கூல் கிளம்பிட்டேனு அம்மாகிட்ட சொல்லிட்டுத்தான் ஜனனி கிளம்புவா” என்றாள்.
மாதவன் வெளியே வர, “தூங்கலயா அன்பு?” என்றார்.
“இல்லப்பா. உங்ககிட்ட முக்கியமான விசயம் பேசனும்” என்றான்.
“அதுக்கு முன்ன நான் பேச வேண்டியதை பேசிடறேன்” என்று சேரில் அமர, என்னவாக இருக்கும் என்ற யோசனையோடு தந்தையை பார்த்திருந்தான் அன்பரசு.
“நீ ஊருக்கு போன அடுத்தநாள் சம்மந்தி எப்போ கல்யாணம்னு கேட்டார். அன்புக்கு ஆறு மாசம் வரை ஷுட்டிங் இருக்குதாம்னுதான் சொன்னேன், அவர் முகத்துல இருந்த ஆர்வம் மொத்தமா காணாம போய்டுச்சு.
திடீர்னு முடிவான கல்யாணம் இல்லைங்களா? இப்போதைக்கு அவன் நிலையை சொல்லிட்டு போயிருக்கான். ஒரு வாரம் கழிச்சு திரும்ப கேக்குறேன்னு சொன்னேன்.
என்ன நினைச்சாரோ… என் அவசரத்துக்கு உங்களை வளைக்க நினைக்கிறது தப்புதான். உங்க வசதிக்கே தேதி முடிவு பண்ணுங்கனு சொன்னார்.
அவர் இறங்கி வரவும் எனக்கு ரொம்ப கஷ்டமாகிடுச்சு. சில நியாயமான ஆசைகள் தக்க காலத்துக்குள்ள நிறைவேறனும். காலம் தாழ்ந்த பின்ன கைக்கு கிடைச்சாலும் பலனில்ல.
நீ சினிமாவுல பெரிய ஆளா வரனும்னு என்னை விட உன் அம்மாதான் ரொம்ப ஆசைப்பட்டா. இதோ… உன் அம்மா ஆசைப்படி கல்யாணம் செய்துக்கக்கூட நேரமில்லாம ஓடிட்டிருக்க. ஆனா அதை பார்த்து சந்தோசப்பட வேண்டிய ஆள் நம்மளோட இல்ல” என்று வேதனையாய் சொல்லி,
“சம்மந்தி இன்னும் பல வருசம் இருக்கனும், அவங்க மக சந்தோசமா வாழ்றதை பார்க்கனும்னு எனக்கும் ஆசைதான். ஆனா நாம நினைச்சதுதான் நடக்கும்னு உறுதியா சொல்ல முடியாதே. ஆறு மாசம் கழிச்சு கல்யாணம் செய்துக்கும்போது அதை பார்க்க எல்லாரும் உயிரோட இருக்கனும்ல?” என்க, “அப்பா” என பதறினான் அன்பரசு.
“நான் நிதர்சனத்தை சொல்றேன் அன்பு. அவருக்கு எழுபத்தஞ்சு வயசுக்கு மேலயிருக்கும். இரண்டு மூனு முறை முடியாம மயக்கமாகியிருக்கார். எனக்கிருக்க பயம் அவருக்கும் இருக்கப்போய்தான் கல்யாணத்துக்கு அவசரம் காட்டுறார். ஒருவேளை எதாவது அசம்பாவிதம் ஆகிடுச்சுனா, மருமகளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்?” என்றார் வருத்தமாக.
“நானும் கல்யாணத்தை பத்தி பேசத்தான்ப்பா நினைச்சேன்” என்று அன்பரசு சொல்ல, மாதவன் முகம் ஜொலிப்பை காட்டியது. “அடுத்த மாசம் வச்சிக்கலாமா?” என்றார் ஆர்வமாக.
அடுத்தமாசமா? என அன்பரசு அதிர்ந்த நேரம், அவனைவிட அதிகமாய் அதிர்ந்த சுகந்தி, “சத்யன், சரவணன் இல்லாம எப்படி மாமா?” என்றாள் தவிப்பாக.
அன்பரசு சிரிக்க, “என்னடா இளிப்பு? வீட்டு பசங்க இல்லாம கல்யாணம் எப்படி பண்றது?” என சுகந்தி முறைக்க, மருமகளின் வருத்தம் மாதவனுக்கும் மகிழ்வாகிட, “தேதி குறிச்சதும் சத்யன் சரவணனுக்கு சொல்லிடுவோம்டா சுகந்திம்மா. கல்யாணம்னா வந்துடுவாங்க” என்றார் நெகிழ்வோடு.
உண்மையில் முல்லையிடம் பேசிய பின்னே முடிந்தவரை சீக்கிரம் திருமணம் செய்யவே நினைத்தான். ஆனால் ஒரு மாதத்தில் என்றால் தாலி கட்டியதும் கிளம்பியாகும் சூழல் வந்தாலும் வரலாம் என “அதுக்காக அடுத்த மாசம்லாம் முடியவே முடியாதுப்பா. இன்னைக்கு கூட ஒரு புது பட வாய்ப்பு வந்திருக்கு. நாளை மறுநாள் நேர்ல போய் பேசினாதான் டைம் ஸ்கெட்யுல் தெரியும். ஒரு மூனு மாசமாவது ஆகட்டும்” என்றான் அன்பரசு.
“மூனு மாசத்துக்கப்புறம் இன்னும் நாலு பட வாய்ப்பு கிடைக்கும். அப்புறம் இன்னும் மூனு மாசம் தள்ளி வைப்ப. இதெல்லாம் வேலைக்காகாது. அடுத்த மாசம் கல்யாணம்” என்றார் முடிவாக.
“அப்பா, என் சுட்டிவேஷன் தெரியாம” எனும்போதே, “என்ன சுட்டிவேஷன்?” என முறைத்து, “சீக்கிரம் கல்யாணம் சம்மந்திக்காக மட்டுமில்ல. உனக்காகவும்தான். இன்னைக்கு நீ பண்ணின வேலை சரிதானா? உன்னை காவல் காத்திட்டிருக்கிறதுதான் என் வேலையா?” என முறைத்தார் கோபத்தோடு.
நான் என்னவோ அவளை கொஞ்ச போனமாதிரி இந்த அப்பா வேற என சலிப்பாக நினைக்க, சுகந்தி சிரிக்கவே முறைத்தவனுக்கும் சற்று நேரத்தில் சிரிப்பு வந்தது.
அன்பரசு சிரிக்கவும் “சரி அப்போ சம்மந்திகிட்ட சொல்லி, நாள் பார்க்க சொல்லலாம்” என்றார் மாதவன்.
திருமணத்திற்காக சத்யன் வருவான் என்ற சந்தோசத்தில் “முல்லை அப்பாக்கு கால் பண்ணுங்க மாமா. இங்க காம்ப்ளக்ஸ்லதான் இருக்கார்” என அவசரம் காட்டினாள் மகிழ்வோடு.
“நேர்லயே போய் பேசிட்டு வரேன் சுகந்திம்மா” என்று மாதவன் கிளம்ப, “அண்ணிம்மா, ஒரு மாசத்துல கல்யாணம்னா நிஜமா நான் பாவம்” என்றான் பாவமாக.
“அவனுக்கு என்மேல அக்கறை இல்லனு நீ கண்டியா?” என இவள் முறைக்க, “மனதுக்குள் மகிழந்தவன் “பார்டா… புருசன்னு சொன்னா கோபம் வரல” என்று சுகந்திக்கு கேட்கும்படி முணுமுணுத்து ‘ஹம்… கல்யாணம் ஆகியும் கொஞ்ச நாளைக்கு சந்நியாச வாழ்க்கைனு உன் டிஷைன்ல இருக்கும்போது யார்தான் என்ன செய்ய முடியும் அன்பு?’ என தன்னைத்தானே நொந்துகொண்டான்.
“பாப்பாவை கூட்டிட்டு வர போய்ட்டு வரேன். ஒழுங்கா வீட்டோட இரு. எங்கையாவது கிளம்பின… அவ்வளோதான் பார்த்துக்க” என சிரிப்போடு எச்சரித்து கிளம்பினாள் சுகந்தி.
முல்லைக்கு அழைப்பு விடுத்தான். அழைப்பை துண்டித்து அறைக்குள் வந்து அன்பரசுக்கு அழைப்பு விடுத்தாள் முல்லை.
“வீடியோ கால் அட்டன் செய்தா என்ன?” என கோபம் காட்ட, “அம்மாகிட்ட பேசிட்டிருந்தேன், எப்படி அட்டன் பண்ண?” என இவள் சன்னக்குரலில் கேட்க, “சரி ரூம்க்கு போய்ட்டு பேசு” என்று இணைப்பை துண்டித்தான்.
வேறு வழியில்லாமல் வீடியோ காலில் அழைத்தாள். அழுத வீக்கம் இல்லாமல் முகம் பொலிவாய் இருக்க, ரசித்தவன் “குண்டுமல்லி” என்றான் ஏக்கமாக.
தான் திருமணத்திற்கு அவசரப்படுத்தியும் சம்மதிக்காமல், தந்தை சொன்னதற்காக சம்மதித்தாயா என்று முல்லை கோபிப்பாள் என அன்பரசு நினைத்திருக்க, அவனின் நினைப்பிற்கு மாறாக முல்லை முகம் மொத்தமாய் மலர்ந்து சிவக்க, “கொல்றாளே” என்று மொபைலை மார்பில் வைத்து சுவற்றில் சாய்ந்து கண்மூடி நின்றான் களிப்போடு.