பிறகு ரங்கசாமி, ஜானகியை நலங்கிட வைக்க அழைக்க, தயங்கினார்கள் இருவருமே. இவர்களின் தயக்கம் குழந்தையின்மையால் எனப்புரிந்து, “உங்க ஆசிர்வாதம் இல்லாம நான் எப்படி நல்லா இருக்க முடியும்? வாங்க” என அன்பரசு கட்டளையாக சொல்ல, இருவரும் நலங்கிட்டனர்.
“இரண்டு நிமிஷத்துல வந்துடறேன், மத்தவங்க செய்யட்டும்” என்று அறைக்குள் நுழைய, “சுகந்தி சத்யனுக்கு என்ன வேணும்னு பாரு” என்றார் கல்பனா.
“இவனுக்குத்தான கல்யாணம்? அவனை என்ன பார்க்குறது?” என அன்னையை முறைத்து வெளியிலேயே நின்றிருந்தாள் சுகந்தி.
பேசமாட்டாளாமா? என சுகந்தியின் கோபத்தை ரசித்தவாறு சத்யன் குளித்து வர, “இதென்னடா டிரெஸ்? போய் வேஷ்டி போட்டுட்டு வா” என அதட்டினாள் சுகந்தி.
கோபம் மறந்து பேசிய மனைவியை மீண்டும் ரசித்தவன், “அன்புதான மாப்பிள்ளை? நான் எதுக்கு வேஷ்டி போடனும்?” என்றான்.
“நம்ம வீட்டு விஷேசம், உன் புருசனை எங்க காணோம்னு நேத்துலயிருந்து எல்லாரும் என்னை படுத்துறாங்க. நீ இப்படி இருந்தா பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க?” என முறைக்க, “ஓ… இப்படிலாம் இருக்கா? எனக்கு தெரியாதே” என அறியாதவன் போல் சொல்லி அறைக்குள் சென்று உடைமாற்றி வந்தான்.
“அண்ணா மேடம் கொஞ்சம் பிஸியா இருக்காங்களாம், டீ வைக்கவெல்லாம் நேரம் இருந்ததாம், அதை உங்கள்ட்ட கொடுக்கத்தான் நேரமில்லையாம். குடிக்கலனா உன் அண்ணனுக்கு தலை வெடிச்சிடும், போய் கொடுனு ஆர்டர்.” என்று அனு சத்யனிடம் டீயை நீட்ட, சிரிப்போடு வாங்கி பருகினான்.
“ஹம்… எனக்கெல்லாம் இரண்டு நாள் முன்னாடி சோறே கிடைக்கல, ஆனா உனக்கு பார்த்தியா?” என சரவணன் சிரிக்க, “சோறு கிடைக்கலயா?” என சத்யன் புருவம் உயர்த்த, “நீ வராத கோபத்தை என்கிட்ட காட்டினாங்கடா” என்றான் சிரிப்போடு.
இவர்கள் பேச்சை கேட்டிருந்தவளுக்கு கோபம் வர, “வெட்டி அரட்டை அடிக்கிற நேரமாடா இது? வந்து இதெல்லாம் எடுத்துட்டு போங்க இரண்டு பேரும். நலங்கு முடிஞ்சிடுச்சு” என்று இருவரையும் அதட்ட, இதை பார்த்திருந்த கல்பனாவும் சேகரும் நிறைவாய் உணர்ந்தனர்.
*** *** *** ***
அன்றிரவு பெண்ணழைப்பு முடிந்து, மண்டபத்திற்குள் அனைவரும் வர, வியந்துதான் போனான் அன்பரசு. சில பெரிய டைரக்டர்கள், தயாரிப்பாளர்கள், சக நடிகைகள் தவிர்த்து அழைப்பு விடுத்த அத்தனை டெக்னீஷியன்களும் வந்திருந்தனர்.
மற்றும் ஆணழகனாய் வலம் வந்தபோது பழகிய நட்புகளுக்கு போனில்தான் அழைப்பு விடுத்தான். அவர்களுமே வந்திருக்க, அனைவரையும் வரவேற்பதிலும் உபசரிப்பதிலும் சென்றது அன்பரசின் நேரம்.
முல்லையோடு ஒரு மணிநேரம் மட்டுமே செலவிட முடிந்தது. அத்தனை சொந்தபந்தங்கள் இவர்களையே பார்த்திருக்க, போதாதற்கு மகள் வேறு அவளின் தோழிகளோடு தந்தையை சுற்றி வலம் வந்திருக்க, தற்போதைய காலகட்டம்போல் மிக நெருக்கமாகவெல்லாம் படம் பிடிக்க முடியவில்லை அன்பரசால்.
“போய் ரெஸ்ட் எடு” என்று பத்து மணிக்கெல்லாம் முல்லையை சுகந்தியோடு அனுப்பி வைத்தவன், நண்பர்களோடு இணைந்துகொண்டான்.
இரவு ஒரு மணிக்கு படுக்க வந்தவன் மனக்கண்ணில் முல்லையே ஜொலித்தாள். மெரூன் வர்ண ஜரிகையில் மாம்பழ வர்ண பட்டு. அதற்கேற்றார் போல் கல் பதித்த நகை, சிகை அலங்காரம். அனைத்தும் முல்லையின் தாய் தந்தையின் விருப்பத்திற்கு விட்டிருக்கிறாள் எனப்புரிந்தது.
முல்லையும் அதில் பதுமையாய் ஜொலித்தாள். ஹம்… நாளைக்கு எப்படி வந்து ஆளை சாய்க்கிறாளோ என நினைத்தவாறு உறங்கினான்.
அடுத்த நாள் அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் மனமேடையில் வந்தமர்ந்தான் அன்பரசு. அடுத்த கால்மணி நேரத்தில் சுகந்தி அனுவோடு நடைபயின்று வந்து அன்பரசு அருகே அமர்ந்தாள் முல்லை.
தற்போதும் மரகத பச்சை பட்டுதான் உடுத்தியிருந்தாள். அதற்கேற்ற அணிகலன்களில் ஜொலித்த முல்லையை விட்டு அகல மறுத்தது அன்பரசு கண்கள்.
அன்பரசு தன்னையே பார்ப்பது புரிய, மாடலாக எதிர்பார்த்திருப்பானோ? என யோசித்தாலும் மொத்த சொந்தங்களும மனமேடையை சுற்றியிருக்க அன்பரசை நிமிர்ந்தும் பார்க்க முடியவில்லை முல்லையால்.
அரைமணி நேர பூஜைக்கு பிறகு முல்லைக்கு மாங்கல்யம் சூட்டினான் அன்பரசு. “ஹேய்…” என்ற ஆரவாரத்தோடு ஜனனி தந்தைக்கு முத்தம் வைக்க, “எனக்கு” என கேட்டு பெற்றுக்கொண்டாள் முல்லையும். மகளிடம் முத்தம் கேட்ட முல்லையிடம் இன்னும் மயங்கினான் அன்பரசு.
முல்லையின் தாய் தந்தை அழுவார்களோ என அன்பரசு பார்க்க, முகம் கொள்ளா புன்னகையோடும், ஆனந்த கண்ணீரோடும் அட்சதை தூவி ஆசீர்வதித்திருந்தனர் ரங்கசாமியும் ஜானகியும்.
மாலை மாற்றுவது, மனமேடையை சுற்றிவருவது, பெற்றவர்களுக்கு பாதபூஜை போன்ற சம்பிரதாயங்களை முடித்து ஐயர் கிளம்பிய சற்று நேரத்தில், “ஹேப்பி மேரீட் லைஃப் மேன்” என்று அன்பரசிடம் வந்தார் இயக்குனர்.
“சார்” என அன்பரசு கண்கள் விரிய, “அங்க பாரு” என்ற திசையை பார்க்க, அங்கே இயக்குனர் கிருஷ்ணன், தயாரிப்பாளர், இதுவரை அன்பரசோடு நடித்த சக நடிகைகள் என சிறு நட்சத்திர கூட்டமே வந்திருந்தது.
ஆசைப்பட்டாலும் காண இயலாத நட்சத்திரங்கள் நம் மகன் திருமணத்தில் என்று அன்பரசு குடும்பத்திற்கும், தன் மகள் எப்படிபட்டவனை மணந்திருக்கிறாள் என்று ரங்கசாமி ஜானகிக்கும் தாளமுடியாத பெருமை.
“சார், இதுல என்ன டிஸ்டர்ப்? நீங்க வந்ததே பெரிய கிஃப்ட்” என்றான் பெருமையாக. பின்னே குடும்பத்தினரை அறிமுகம் செய்து, “வாங்க சார்” என உண்ண அழைத்தான்.
“மணி ஏழுதான் ஆகுது” என யோசித்தாலும் ரசிகர் கூட்டம் வந்துட்டா கஷ்டமாகிடும் என்று உண்ணச்சென்றனர். சத்யன் சரவணனை பக்கத்திலிருந்து கவனிக்க பணித்தான் அன்பரசு.
நேற்றிரவு விருந்திற்கு பால் போலி, பாதாம் பர்பி, கருப்பட்டி அல்வா, வெஜ் மயோனஸ், மிர்ச்சிகோ சாலன், மதுரை பண்பரோட்டா, குதிரைவாலி தயிர்சாதம், சேமியா பால்ஸ், நவதானிய அடை, இட்லி, நான்கு வகை சட்னி, கேசர் பாதாம் மில்க், அடங்கிய பதினைந்து வகை உணவு வகைகளும்,
தற்போது காலை விருந்திற்கு, அங்கூர் ஜாமூன் வித் ரப்டி, நெய் ஜிலேபி, பாசுந்தி, ஆலு சீஸ் போண்டா, மூங்கில் அரிசி அக்கார அடிசல், நான்கு வகை சட்னி, குதிரைவாலி ரவா உப்மா, கொத்து இடியாப்பம், மெதுவடை, சப்பாத்தி, கடாய் பன்னீர் கிரேவி, உள்பட இருபத்தியொரு வகை உணவு என சிறந்த சமையலரை பதிவு செய்து மகளின் திருமண விருந்தை அமர்க்களப்படுத்தியிருந்தார் ரங்கசாமி.
உணவு பதார்த்தங்களை வெகுவாய் பாராட்டினார்கள் நட்சத்திரங்கள். “எல்லாம் மாமனார் ஏற்பாடு” என்று பெருமையோடு சொல்ல முல்லை முகத்திலும் பெருமை ஒட்டிக்கொண்டது.
பின்னர் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொண்டான் மகிழ்வோடு. முல்லையின் அழகில் பிரமித்த நடிகை, “உன்னை கட்டிக்கப்போறவதான் லக்கினு நினைச்சிட்டிருந்தேன், அது அப்படியில்ல” என்றாள் முல்லையை ரசித்து.
“அப்படியா?” என மனைவியை பெருமையாய் பார்த்து சிரித்தான் அன்பரசு. பிறகு நட்சத்திர பட்டாளம் கிளம்பிய பின்னே, “இந்த முறை அவங்களாதான் ஹக் பண்ணினாங்க” என்று பாவமாக முகம் வைத்து கிசுகிசுக்க, முகம் சிவந்து தலை கவிழ்ந்தாள் முல்லை.
பதினொரு மணிபோல் முல்லை வீட்டிற்கு வந்தனர் அனைவரும். மணமக்களோடு சுகந்தி சத்யன் வந்திருக்க, மற்றவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
மருமகன் மகளின் ஜோடிப்பொருத்தம் கண்கொள்ளா காட்சியாக இருக்க, ஜானகி ரங்கசாமி முகத்தில் பெருமை தாளவில்லை. அன்பரசு, “மாமா ஏன் இப்படி பரபரப்பா இருக்கிங்க? கொஞ்ச நேரம் உக்காருங்க” என்றான் தன்மையாக.
“எனக்கு கொஞ்சம் கூட டையர்ட் இல்லை மாப்பிள்ள” என்று உற்சாகத்தோடு சொல்லி, “ஜானகி பால் பழம் ரெடியா?” என கிச்சன் சென்றார்.
“தோ ஆச்சுங்க” என்று பால் கிண்ணத்தை அன்பரசிடம் கொடுத்து, சுகந்தி சத்யனுக்கு பழரசத்தை கொடுத்தார்.
சிறு பழத் துண்டை எடுத்து முல்லைக்கு ஊட்டப்போக, முல்லை வாங்கிக்கொண்டதும் தானும் உண்டான். மீண்டும் முல்லைக்கு கொடுக்க, “போதும்” என்றாள்.
மொத்தமாய் தன் வாயில் கவிழ்த்தவன் பார்வை சுகந்தியிடம் செல்ல, மனதில் என்ன நினைத்திருந்தாளோ… பெரும் சங்கடத்தோடு சுகந்தி சத்யனை பார்த்திருந்தாள்.
சத்யனைப் பார்த்து ஒற்றை புருவத்தை சுகந்தி புறம் உயர்த்தி இறக்க, “எக்கச்சக்கமான லவ்” என வாயசைத்து தன் காலரை உயர்த்திக்காட்டினான் சிரிப்போடு.
சத்யனிடம் “என்ன தம்பி சொன்னிங்க? ஏதும் வேணுங்களா?” என்றார் ஜானகி.
“ஒன்னும் வேணாம்த்த, ஈவ்னிங் மூனு மணிபோல வந்து இவங்களை அழைச்சிட்டு போறேன். நீங்களும் ரெஸ்ட் எடுங்க” என்று சுகந்தியை பார்க்க சத்யனோடு கிளம்பினாள்.
“ம்மா டிரெஸ் மாத்தனும்” என்றாள் முல்லை.
முல்லையை அவளறைக்கு அழைத்துச்சென்று பெரிய நகைகளை கழற்ற உதவி செய்து, “சாரியே போட்டுக்கோ முல்லை” என்று சாஃப்ட் சில்க் சாரியை எடுத்துக்கொடுத்து வெளியேறினார்.
அன்பரசு கோட்டை கழற்றியிருக்க, “இதை மாத்திக்கிட்டு நீங்களும் கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்று வேஷ்டி சர்ட் கொடுத்தார் ரங்கசாமி.
வாங்கியவன், “அப்போவே கேக்கனும்னு நினைச்சேன், அளவு சர்ட் கூட ஏதும் வாங்கலனு அப்பா சொன்னார். எப்படி மாமா கோட், பேண்ட்லாம் சரியா எடுத்திங்க?” என்றான் ஆச்சர்யமாக.
“யூ டியூப்ல உங்களை டைலர்கிட்ட காட்டி தைச்சேன் மாப்பிள்ள, அதுலதான் சோல்டர், மார்பளவுனு எல்லாத்தையும் விபரமா சொல்லியிருந்தாங்க” என்றார்.
“ஓஹ்… அதெல்லாம் பார்த்திங்களா?” என்றான் வியப்பாக.
“முல்லைதான் காட்டுச்சு” என்க, மேலும் வியந்தான் அன்பரசு.
“டிரஸ் மாத்திட்டு ரெஸ்ட் எடுங்க மாப்பிள்ளை” என்று முல்லையை அறையை காண்பிக்க, மகிழ்வோடு மனைவி அறைக்கு சென்றான்.
கதவை தட்ட, “சேரி கட்டிட்டிருக்கேன்ம்மா, இரண்டு நிமிஷம்” என்றவள் ஐந்து நிமிடம் கழித்து கதவை திறக்கவும் உள்ளே சென்றான் அன்பரசு.
“எதுக்கு இப்படி ஷாக் ஆகுற?” என சிரித்து “கதவை சாத்து, நான் டிரஸ் சேன்ஜ் பண்ணனும்” என்றான்.
“நீங்க பண்ணுங்க, இதோ வந்துடறேன்” என்று வெளியேற பார்க்க, “எங்க போற?” என்று வளைத்தான் இடையோடு.
“இல்ல, நீங்க டிரஸ் மாத்தனுமே” எனும்போதே “அதான் யூடியூப்ல என்னை சிங்கிள் பீஸோட பார்த்திட்டியே… அப்புறம் என்ன புதுசா பார்க்குற மாதிரி” என்று கட்டிலில் அமர வைத்தவன், கையிலிருந்த வேஷ்டியை இடுப்பில் சுற்றி, பேண்ட்டை கழற்றி அதனை வைக்க இடம் பார்க்க, முல்லை கையை நீட்டினாள்.
அவளிடம் கொடுக்காமல் அருகிலிருந்த டேபிள் மேல் வைத்து, சர்ட்டையும் கழற்ற, முகத்தை தாழ்த்தினாள் இயன்றவரை.
கதவை தாழிட்டு முல்லையருகே வந்தமர்ந்தவன் “யூடியூப்ல பார்த்த மாதிரி இருந்தா என்னை பார்ப்பியா?” என்றான் கிசுகிசுப்பாக.
“நான் ஒன்னும் அப்படியே பார்க்கல” என முணுமுணுக்க, “வேற எப்படி பார்த்த? கண்ணை மூடிக்கிட்டா?” என்றான் சிரிப்போடு.
இவள் ரோசமாக ஸ்கீரீன்ஷாட் எடுத்து வைத்த படத்தை காண்பிக்க, இன்னும் பலமாய் சிரித்தவன், ஸ்க்ரீன்ஷாட்ல நான் உன்னை எனக்கு கேட்டு வந்த டேட்க்கும் முன்னாடி டேட் காட்டுதே. அப்போ முன்னாடியே என்னை விரும்புனியா?” என்றான் வியப்போடு.
“ம்… பத்து நாள் லவ் பண்ணினேன்” என்றவளுக்கு அதன் பின் நடந்த நிகழ்வுகள் வலம் வர, கண்ணீர் வெளிக்கிளம்பியது.
“அப்போ உன் அப்பா என் அப்பாகிட்ட கேட்டது உனக்கு முன்னமே தெரிஞ்சிருக்கு” என்றவனுக்கு தான் வேண்டாமென சொன்ன பின்னே மிகவும் தவித்திருக்கிறாள் எனப்புரிந்திட, “முல்லை” என்று அணைப்பை வலுப்படுத்தி “ப்ச் நமக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சே, எதுக்கு அழற?” என கடிந்தான்.
“இருபது நாள் பக்கம் என்னை ரொம்ப படுத்திட்டிங்க” என குறைபட்டாள் உரிமையாக.
“சாரி குண்டுமல்லி” என கன்னத்தில் முத்தம் வைக்க, முல்லை மனம் தனது முத்தத்தை ஏற்கவில்லை எனப்புரிய, “அப்படியே பார்த்திருந்தாலாவது பரவால்ல, ஷார்ட்ஸ் வரையிற சாக்குல உன் கண்ணு எதையெல்லாம் பார்த்திருக்கு… என்னை எங்கெங்க தொட்டுருக்க நீ?” என்றான் குறும்போடு.
இப்படி எதிர்பார்க்காதவள், “இல்ல” என திணறி மொத்தமாய் சிவந்து சிலிர்க்க, இன்னும் நெருங்கி அமர்ந்து முல்லை முகத்தை முத்தத்தால் நிறைத்து தன் காதலை காட்டினான் அவளிதழில்.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.