மாலை ஏழு மணிபோல் அனைவரும் வீட்டிற்கு வந்தனர். மாதவனிடத்தில் நடந்ததை விளக்கி, “அப்பா இவ்வளோ பிரச்சனை போய்ட்டிருக்கு, மாமாக்கு மருமகனுக்கு மறுவீட்டு அழைப்பு எப்போ வச்சிக்கலாம்னு பெரிய கவலை” என சிரித்தான் சரவணன்.
“எப்படிம்மா இந்த கூட்டத்தோட இவ்வளோ நாள் மல்லுகட்டுனிங்க?” என கடுப்பாக கேட்டான் சத்யன்.
“என்ன பண்றது மாமா? அப்பா கூட பிறந்தவங்களா போய்ட்டாங்களே, என் அப்பாம்மா நிம்மதிக்காக சின்ன வயசுலயிருந்தே அவங்களை சகிச்சே பழகிட்டேன்” என்றாள் முல்லை.
“அன்பு வரவரைக்கும் நீ அங்கையே இருக்கலாமில்ல முல்லை?” என சுகந்தி கேட்க, “அப்பாக்கு நான் இங்கதான் இருக்கனுமாம்க்கா, இவர் அங்க போய் படுத்துக்குவார்” என்று சரவணனை காண்பித்தாள்.
சற்று நேரம் பேசியிருந்த பின்னே, இரவு உணவு உண்ண அழைத்தார் கல்பனா. சுகந்தி ஜனனிக்கு ஊட்டிவிட, “எனக்கும் பசிக்குதுத்த” என்று அமர்ந்தான் சத்யன்.
காலை கோவிலில் கொஞ்சமாய் சர்கரை பொங்கல் உண்டதோடு இருக்கிறானே என்று வருந்திக்கொண்டிருந்த சுகந்திக்கு தற்போதுதான் நிம்மதியானது.
அனைவரும் உண்ணும் நேரம்தான் ஆகையால், “எல்லாருமே உக்காருங்க” என்று பரிமாற ஆயத்தமானார் கல்பனா. “நான் பண்றேன்ம்மா” என்று முல்லை சொல்ல, மகிழ்ந்தாலும் “உனக்கு பசிக்கலயா?” என்றார்.
இத்தனை சீக்கிரம் தன் குடும்பத்தோடு ஒத்து போக நினைக்கும் முல்லையை பெருமையாக பார்த்தபடி “ம் செய் செய், அப்போதான் யார் என்ன சாப்பிடுறாங்கனு தெரியும்” என்றார் மகிழ்வோடு.
அனைவருக்கும் பரிமாறி பிறகு தானும் உண்டு முடித்ததும் கணவன் அழைப்பை எதிர்பார்த்தபடி முல்லை தனதறைக்கு சென்றிட, மகளை மாதவன் அறைக்கு அழைத்துச் சென்று உறங்க வைத்து தனதறைக்கு வந்தாள் சுகந்தி.
அங்கே சத்யன் இல்லாமல் போக, சாப்பிட்டதும் ரூம்க்குதானே வந்தான் என யோசித்தபடி குளியலறையில் சத்தம் வருகிறதா என்று பார்த்தாள். அங்கேயும் சத்தம் இல்லாமல் போக, நேற்று போல் இன்றும் குடிப்பதற்காக மாடிக்கு சென்றுவிட்டானா எனப்பதறி சத்யனுக்கு அழைத்தாள்.
“ப்ச்” என்க, “எங்க இருக்க சொல்லு?” என்றாள் விடாமல்.
“மாடிலதான் இருக்கேன், முக்கியமான விசயமா ஒருத்தர்கிட்ட பேசனும், நான் வர லேட்டாகும். நீ தூங்கு” என்றான்.
இணைப்பை துண்டித்து மாடிக்கு விரைந்தாள் சுகந்தி. அங்கே சத்யன் ஆதிராஜோடு பேசிக்கொண்டிருக்க, நிம்மதியாகி கீழே இறங்கினாள்.
சுகந்தியின் கொலுசொலியிலேயே அவளின் வரவைப் புரிந்திருந்தான் சத்யன். மேலும் கால் மணி நேரம் வரை பேசி முடித்து ஆதிராஜ் ஜிம்மினுள் போக, வீட்டிற்கு வந்தவன், “எதுக்கு மாடிக்கு வந்த?” என்றான் முறைப்பாக.
“நான்” என திணற, “வரலைனு பொய் சொல்லப்போறியா?”
இல்லை என்பதாய் தலையசைத்தாள். “தூங்கத்தான சொன்னேன்?” என முறைத்து, “இன்னைக்கும் தண்ணியடிச்சிடுவனோனு பார்க்க வந்தியா?” என்றான்.
சுகந்தி அமைதிகாக்க, அவளின் பரிதவிப்பான முகத்தில் இவனின் கோபம் சற்று தணிய, “ரொம்ப டல்லா இருக்க, தூங்குடீ” என்றான் மிரட்டலாக.
“எனக்கு தூக்கம் வரல” என்றாள்.
முகம் அத்தனை சோர்வாய் இருந்தபோதும் சுகந்திக்கு தூங்கும் எண்ணம் இல்லை எனப்புரிய, “படு, தூக்கம் வரும்” என்றான் திருமணமான முதல் நாள் போல தன்மையாக.
“எனக்கு தூங்க வேணாம்”
“ப்ச் படுத்தாம படு சுகந்தி” என இழுத்து அவளிடத்தில் படுக்க வைத்து கேசம் வருடிக்கொடுக்க, மன்னிச்சுட்டா சரி ஆகிடுமானு கேட்டானே? இந்தமுறை சத்யன் மன்னித்தாலும் எதோ ஒரு கட்டத்தில் அவனோடான உறவு தன்னையறியாமல் மீண்டும் நியாபகம் வந்திடும் என்ற பயம் வந்தது சுகந்திக்கு.
பத்து நிமிடம் வரை எதேதோ யோசனையோடிருந்து, “என்னை சரி பண்ணுடா” என்றாள் கமறிய குரலில்.
வருடலை நிறுத்தி சுகந்தி முகத்தை பார்க்க, இவளும் பார்த்தாள் கலக்கத்தோடு.
“உளறாம தூங்கு” என்று வருடலைத் தொடர, இதற்கு மேல் எப்படி சத்யனை நெருங்குவதென புரியவில்லை சுகந்திக்கு. ஆனாலும் மனசும் உடம்பும் பாடா படுது என்றானே என சத்யனை நினைத்து உறக்கமும் வராமல் போக கண் மூடியிருந்தாலும் உறங்காமல்தான் இருந்தாள்.
சத்யனுக்கு அழைப்பு வர, பத்து நிமிடம் வரை பேசியவன் “நெக்ஸ்ட் வீக்தான? கண்டிப்பா வந்துடுவேன்” என்று இணைப்பை துண்டிக்க, “அடுத்த வாரம் கிளம்புறியா?” என்றாள் அதிர்வோடு.
“இப்போ எதுக்கு விதவிதமா ரியாக்ஷன் பண்ணிட்டிருக்க? வேலைக்கு போக வேணாமா பின்ன?” என்று, லேப்டாப் எடுத்து வழக்கம்போல் சேர்போட்டு கட்டிலில் கால் நீட்டி அமர, இயலாத பார்வை பார்த்து திரும்பிப் படுத்தாள் சுகந்தி.
சுகந்தியின் மனச்சுணக்கத்தில் சலிப்பாகி எழுந்து அவள்புறம் வந்தவன் “என்னை என்னதான்டி பண்ண சொல்ற? தினமும் தண்ணியடிக்கட்டுமா?” என முறைத்தான்.
“தண்ணி மட்டும் இல்ல, கஞ்சா, கொகைன், குட்கானு போதை ஏற இன்னும் என்னெல்லாம் இருக்கோ எல்லாத்தையும் குடிடா” என்றாள் இவளும் கோபமாக.
“மன்னிச்சா சரியாகிடுமானு கேக்குறவனுக்கு, தண்ணியடிச்சா மட்டும் சரியாகிடுவாளானு யோசிக்க தெரிய வேணாம்” என ஆற்றாமையோடு முணுமுணுக்க, “வேணாம்டி, பேசாம தூங்கிடு” என்றான் இலகுவாக.
சத்யன் கோபமாய் இருக்கிறான் என, “அந்த நரக வாழ்க்கை வேணாம்னுதான் வந்துட்டேன், ஆனா என்னையறியாம என்னை படுத்துதே. முல்லைனு இல்ல, வீட்டுக்கு யாராவது பத்திரிக்கை வைக்க வந்தா கூட கல்யாணப்பொண்ணை நினைச்சா பாவமா இருக்கு. என்ன செய்தா மறக்கும்னு எனக்கே தெரியலடா” என்றாள் வேதனையாக.
“ஹே சுகந்தி” என அருகில் அமர்ந்து, “கொஞ்சம் கொஞ்சமா மறக்கலாம் விடு” என்றான் தன்மையாக.
நேற்றிரவும், இன்று காலையும் சத்யன் காட்டிய கோபமே கண்முன் நிற்க, “ஒரு வருசம் அவனோட வாழ்ந்த வாழ்க்கையில ஒரு நாள்கூட நிம்மதியா தூங்கி எழுந்ததில்லடா, அவன் மனுஷனே இல்ல, மிருகம். நினைச்ச நேரம் அவன் இஷ்டத்துக்கு என்னை” எனும்போதே சுகந்தியின் வாயை பொத்தினான் தன் கை கொண்டு.
“நானென்ன வேணும்னா நினைக்கிறேன்? அனுபவிச்ச வேதனை மண்டைக்குள்ள இருந்து போகமாட்டேங்குது, என்ன பண்ணி போக்குறதுனு சத்தியமா தெரியல சத்யா” என்றாள் இயலாமையோடு.
சுகந்தி மீதான கோபம் மொத்தமாய் குறைந்திட “உன்மேல உள்ள கோபம் போய்டுச்சு. தப்பு என்மேலதான். உன்னைப்பத்தி நல்லா தெரிஞ்சும் பொறுமையா எடுத்து சொல்லாம கோபப்பட்டுட்டேன்” என்றான் தன்மையாக.
அப்பொழுதும் சுகந்தியின் முகம் வேதனையோடே இருக்க, லேப்டாப்பை எடுத்து வைத்து அவளருகே படுத்து “உன்னை சரி பண்ண உன் அத்தை மகனால முடியாது போலடீ” என்றான் இலகுவான பாவனையில்.
சுகந்தி அதிர்வாய் பார்க்க, “நல்லா யோசிச்சுதான் உன்னை சரி பண்ண சொன்னியா?” என்றான். ஆம் என தலையசைத்தாள் சுகந்தி.
சம்மதம் கொடுத்த போதும் சுகந்தி பார்வையில் தடுமாற்றம் இருக்கவே, “சரி… மெல்ல சரி பண்ணலாம். இப்போ தூங்கு. கண்ணெல்லாம் சிவந்துருக்கு” என்றான் அக்கறையாக.
“எப்போ சரி பண்ணுவ? நீ தண்ணியடிக்கிறது மாமாக்கு தெரிஞ்ச பின்னயா?”
சுகந்தி தாடையை தொட்டு நிமிர்த்தி தன்னை பார்க்க வைத்து, “மத்தவங்க பார்வைக்காகத்தான் உன்னை சரி பண்ண சொல்றியா?” என்றான்.
“இல்லடா உனக்காகத்தான்” என தவித்து “எல்லாத்துலயும் குற்றம் கண்டுபிடிக்கிற… மாமா மத்தவங்களா?” என்றாள் குறையாக.
சுகந்தி அமைதியாய் இருக்க, “அப்பாக்கு தெரியும் முன்ன கூட சரி பண்ணிடலாம், அவ்வளோ ஏன்? இன்னைக்கே கூட சரி பண்ணலாம். ஆனா அதுக்கு நான் உன் புருஷனா மாறனும். பரவால்லையா?” என்றான் அவளின் கண்பார்த்து.
“புருஷனா மாறினதாலதாண்டா நேத்து தண்ணியடிச்ச? என் அத்தை மகனாயிருந்தா என் தப்பை மன்னிச்சு வருடிகொடுத்து தூங்க வச்சிருப்பான்” என்றாள் கோபமாக.
“பார்டா” என மெச்சியவன், “ஆமாம்… நான் புருஷனா மாறிட்டேன்தான். ஒத்துக்கிறேன். ஆனா அதுக்காகலாம் உன்னை சரி பண்ண முடியாது. நீயும் என் பொண்டாட்டியா மாறனுமே” என்றான் கோரிக்கையாக.
“நிஜமா நீ இவ்வளோ நல்லவனாடா?” என வியக்கும் பாவனை காட்ட, அவளின் பின்னலையே எடுத்து அவளின் கழுத்தில் குறுகுறுப்பூட்டி “நான் எப்போடீ கெட்டவனா இருந்தேன்?” என்றான் இலகுவாக.
“பிடிச்சவளை கட்டிக்கிறது கெட்டவன் பண்ற வேலைனா… உன் அப்பாம்மா, என் அப்பாம்மா உள்பட, உலகத்துல பாதிக்கும் மேல கெட்டவங்கதான் இருக்காங்கனு அர்த்தம்”
“சேகரை பிரிஞ்சு அனு ஒருநாள் இருக்கமாட்டா, கல்யாணம் ஆன எல்லாரும் என்னை மாதிரி அனுபவிச்சதில்லனு எனக்கு புரியுதுடா, ஆனா…” என என்ன சொல்ல வந்தாளோ? சுகந்தி முகத்தின் தவிப்பை தாளமுடியாமல் “ஸ்” என அவளின் வாய் மேல் விரல் வைத்து “தூங்கு” என்றான் கட்டளையாக.
“ப்ச்” என சலித்தவள் கண்ணை மூடாமல் இருக்க, இவன் தலைகோத ஆரம்பிக்க, “வேணாம் போடா, நேத்து அப்படி கத்திட்டு, இப்போ வந்துட்டான்” என்றாள் கோபமாக.
“ஹா…ஹா… கோவத்துல இருக்கும்போது கத்தாம கொஞ்சவா முடியும்?” என நெருங்கிப்படுத்தான்.
‘என்ன கொஞ்சுறதா?’ என சுகந்தி அதிர்வாய் பார்க்க, “நான் என்னைக்கு உன்னை கொஞ்சினேனு பார்க்குறியா?” என்று நெற்றியில் முத்தமிட, இன்று நெருங்குவானோ? தன்னால் சத்யனை சகிக்க முடியுமா? எனப் பதறினாள் சுகந்தி.
“நான் ஊருக்கு கிளம்பினா கோபப்படுறது, வீட்டுக்கு வந்தா கண்டுக்காத மாதிரி இருக்குறது, நான் சரியா சாப்பிடலனா கோபப்படுறது, இன்னைக்கு நைட்டும் தண்ணியடிச்சிடுவனோனு உன்னையே கொடுக்க முன்வரதுனு உன்னோட இந்த அறிகுறிகள்லாம் எதனாலனு உனக்கு புரியலயாடீ?” என்றான் கிசுகிசுப்பாக.
சுகந்தி அதிர்வாய் பார்க்க, “உன்னையறியாம நீயும் என்னை புருஷனா ஏத்துக்கிட்ட எரும” என்று சுகந்தியை அணைத்து, அவளின் ஒரு காலை தன் கால் மீதும், கையை தன் முதுகைச் சுற்றியும் போட்டுக்கொண்டு வருடினான்.
இம்முறை கேசம் வருடிய கை முதுகுவரை நீள, அசையாமல் படுத்திருந்தாள் சுகந்தி. தன்னை கிரகிக்க முயல்கிறாள் என்றுணர்ந்து, சுகந்தி முகத்தை நிமிர்த்தி “எவ்வளோ நேரம் மூச்சு விடாம இருப்ப?” என கன்னத்தில் அழுந்த முத்தமிட, அதிர்வில் மூச்சுவிட்டு விலகப்பார்த்தவளை விடாமல் சேர்த்தணைத்தவன் “இப்படியே தூங்கு” என்றான்.
“தூங்கவா?” என்றாள் வியப்பாக.
சிரித்தவன், “ஆமாம் தூங்கு” என்றான்.
“நான் வேணாமா?” என்றாள் பார்வையை தாழ்த்தி.
“வேணும். ஆனா இன்னைக்கு வேணாம்” என்றதும் சத்யனை ஒட்டிக்கொண்டிருந்த சுகந்தியின் உடலின் கடினத்தன்மை சற்று குறைந்தது.
மனதினுள் மெச்சியவன், “ஆனா இப்படியேத்தான் தூங்கனும். நான் தூங்கினப்புறம் விலகிடக்கூடாது” என்றான் அன்பு கட்டளையாக.
“ம்” என்று சம்மதித்தாள். சுகந்தி முழு மனதோடு சம்மதிக்கவே, சத்யனின் அணைப்பு உரிமையாய் மாறியது. கூடலில்லாத சத்யனின் அணைப்பு, நீண்ட காலம் காரிருளில் சிக்கித்தவித்த பின்னே கிடைக்கும் ஒளிபோல மனதை நிறைக்கச் செய்ய இதமான உணர்வோடு உறங்க முற்பட்டாள்.
தானாகத்தான் சுகந்தி கை காலை தன்மீது போட்டுக்கொண்டான் என்றாலும், தன் விருப்பத்தை மறுக்காமல் ஏற்று தழுவியபடி உறங்குபவளின் தழுவலில் வாடிக்கிடந்த உயிர்நாடியெல்லாம் துளிர்ப்பது போன்ற உணர்வு இதமாய் பரவியது சத்யனுள்.
இன்னும் தன்னோடு சேர்த்தணைத்தவன், ‘சுகந்திகிட்ட இப்படி பிடித்தம் வரும்னு நினைச்சே பார்க்கல அன்பு’ என்று தமையனுக்கு நன்றி சொல்லி, தன்னுள் ஒன்றியிருந்தவளின் நெற்றியில் லேசாய் இதழ்பதித்து தானும் கண்மூடினான் இதமான மனநிலையோடு.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.