“சுகந்தி ஏன் கல்யாணம் வேணாம்னு சொல்லுதுனு என்னோட கெஸ்ஸிங் சொல்றேன். கொஞ்சம் பொறுமையா கேளு. அதுக்கப்புறம் என்ன பண்ணனு இரண்டு பேரும் சேர்ந்து முடிவெடுப்போம்” என்றான் அன்பரசு.
சத்யன் ஆமோதிக்க, “சுகந்திக்கு அந்த பையனை பிடிச்சிருக்கானு கேட்டு, சுகந்தி சம்மதிக்கவும்தான் கல்யாணம் செய்தாங்க. அது எனக்கு நல்லா தெரியும். ஆனா கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகல, புருசுன் வீட்டுக்கு போகமாடடேனு சுகந்தி பிடிவாதம் பண்ணுதுனு அத்தை நம்ம அம்மாகிட்ட சொன்னாங்க. அப்புறம் அம்மா அப்பா எல்லாருமா போய் அட்வைஸ் பண்ணி அனுப்பி வச்சாங்க.
அதுக்கப்புறமும் பண்டிகைக்கு அழைச்சிட்டு வந்தா திரும்ப போகமாட்டேனு சொல்றதும், அத்தை படாத பாடுபட்டு அனுப்புறதும் வழக்கமாகிடுச்சு. அப்புறம் ஒன்பது மாசம் கழிச்சு கற்பமாகி, பின்ன கரு கலைஞ்சிடுச்சு. அப்போ வீட்டுக்கு வந்தப்போதான் திரும்ப அனுப்பி வச்சா செத்துடுவேனு சொன்னுச்சு” என்றதும், இத்தனை நடந்திருக்கிறதா என அதிர்ச்சியோடு கேட்டிருந்தான் சத்யன்.
அன்பரசு “அந்த நேரம் நீ நம்ம வீட்டோட சண்டைனால உனக்கு இதெல்லாம் தெரியல” என்றவன், எப்படி ஆரம்பிப்பது என்று சற்று நேரம் மௌனம் காத்தவன், தன் தயக்கம் உடைத்து, “அவன் சுகந்திக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்திருப்பான்றது என்னோட கெஸ்ஸிங். தாம்பத்தியத்தையே வெறுத்திருக்கு. அதான் டைவர்சும் ஈஸியா கொடுத்திருச்சு. திரும்ப கல்யாணம் பத்தி பேசினாலே செத்துடுவேனு சொல்லுது. என் கெஸ்ஸிங் சரின்னா சுகந்தியால இதையெல்லாம் யார்கிட்டடா ஷேர் பண்ண முடியும்?” என்றான் வேதனையாக.
“என்னடா சொல்ற?” என பெரிதாய் அதிர்ந்தான் சத்யன்.
“அந்தாளை பிடிச்சிதான் கட்டிக்கிச்சு, அதுக்கப்புறம் பிடிக்காம போக என்ன காரணம் இருக்க முடியும்? அங்க மாமனார் மாமியார் கொடுமைனு இன்னைக்கு வரைக்கும் சுகந்தி சொன்னதில்ல. அதோட அவங்க மாமியாரும் வீட்டு வேலை கூட நானே பார்த்துக்கிறேன், இன்னும் எப்படி மருமகளை பார்க்கறதுனு இரண்டொருமுறை அத்தைகிட்ட வருத்தப்பட்டிருக்காங்க.
எனக்கு அங்க போக பிடிக்கல, வாழ பிடிக்கலன்றதை தவிர சுகந்தி வேற எதையும் சொன்னதில்லயாம். அப்போ நான் சொன்ன காரணத்தைவிட வேற என்ன இருக்கும்?”
“அப்படியும் இருக்குமோ” என யோசித்தவன், “சுகந்திக்கு கல்யாணம் ஆன ஒரு வாரத்துல பார்க்க போனேன்டா, என்கிட்ட சரியா பேசல, நான் கொடுத்த கிஃப்டையும் வாங்கிக்கல. முகம் ரொம்ப வாடியிருந்துச்சு. என்மேல உள்ள கோபத்துல அப்படி பண்றான்னு நினைச்சேன்” என்றான் வருத்தமாக.
“கல்யாணம்னா என்னனு அறியாத வயசுல கல்யாணம் செய்து கொடுக்கல. சுகந்திக்கு கல்யாணம் ஆகும்போது இருபத்திநாலு வயசு. பையனையும் பிடிச்சுதான் கல்யாணம் செய்துச்சு. அப்படி இருக்க தாம்பத்தியம் பிடிக்காம போக வாய்ப்பே இல்ல.
அதையும் மீறி பிடிக்கலனா உடல் ரீதியா எத்தனை வேதனையை அனுபவிச்சிருக்கும்? இப்படி வேதனையோட எப்படி மறு கல்யாணத்துக்கு சம்மதிக்கும்?” என அன்பரசு கேட்க, “டாக்டர்கிட்ட கூட்டிட்டு போய் கவுன்சிலிங் கொடுத்து பார்ப்போமோ?” என்றான் சத்யன்.
“அதெல்லாம் இரண்டு வருசம் முன்னவே நான் ட்ரை பண்ணிட்டேன். எதுக்குமே அசையமாட்டேங்குது. போனா போகுது அது விருப்பப்படி வாழட்டும்னு விட்டுடலாம்னு பார்த்தா சுகந்தியை நினைச்சு அத்தையும் சேகரும் ரொம்ப வேதனைப்படுறாங்க. அதோட நம்ம அப்பாவும் குடும்பத்துக்கு ஒன்னு வாழாவெட்டியா இருக்கனும்னு சாபம் வாங்கி வந்திருக்கோம்னு வேதனைப்படுறார்” என்றான் வேதனையாக.
சத்யன் தலைகவிழ, “ஜனனி பாப்பாவை அம்மா இரண்டு வருசம்தான் பார்த்துக்கிச்சு, அம்மா போனப்புறம் அத்தை இங்கையே வந்துட்டாங்க. நானும் நடிப்பு, ஜிம், பாடிபில்டிங்னு பிஸியா இருந்தேன், அப்பாவும் இன்ஸ்டியூட் விட்டு வரமுடியாது. அத்தை மட்டும் இல்லனா பாப்பாவை வளர்க்க ரொம்ப சிரமப்பட்டிருப்போம்” என்க, சத்யனிற்கு அன்பரசின் எண்ணம் லேசாய் புரிய அதிர்ந்து விழித்தான்.
“உன் பொண்டாட்டியை பார்த்துக்கலன்ற குற்றவுணர்வுலயே அம்மா போய் சேர்ந்துடுச்சு. உனக்கும் அம்மா மேல கோபம் இருந்திருக்கு. ஆனா அது நியாமற்ற கோபம்னு உனக்கு எப்போ புரியும்?”
உன் பொண்டாட்டி இறந்ததும், அவங்களை நினைச்சிட்டு நீ இப்படி வேதனைல இருக்கிறது எல்லாருக்கும்தான் வேதனை. போனவங்களை நினைச்சு இருக்கிறவங்க யாரையும் நீ யோசிக்கமாட்டேங்கிற.
தனி மரமா வாழ்ந்து என்னத்த சாதிக்கப்போற? உன் கல்யாணத்தப்போ இல்லாத பக்குவம் உனக்கு இப்போ வந்திருக்கும். செக்ஸை வெறுத்து வாழ்ற சுகந்திக்கு உன்னை விட வேற யாரும் சரியா இருக்கமாட்டாங்க. சுகந்திக்கான மருந்தா நீ இருக்கும்போது எதுக்குடா வெளில பார்க்கனும்?
அத்தை, சேகர், அப்பா, அத்தைனு எல்லாரையும் விட ஜனனி பாப்பாவை யோசிச்சு பாரு. பாப்பாவை நானே பார்த்துப்பேன். ஆனா குறிப்பிட்ட வயசுக்கப்புறம் பெண் பிள்ளைகளுக்கு அம்மா வேணும் சத்யா.
எனக்கு வரப்போறவ எங்க இருக்காளோ? எப்படி குணமுடையவளோ? பாப்பா விசயத்துல என் பொண்டாட்டி சரியா இருப்பாளானு தெரியாது. ஆனா சுகந்தியை நீ கட்டிக்கிட்டா நம்ம பாப்பாவை பெத்த பிள்ளையாட்டம் பார்த்துக்கும்” என்றான் தன்மையாக.
சத்யனுக்கு மறுமணம் செய்யும் எண்ணமேயில்லை. ஆனால் அன்பரசின் இத்தனை விளக்கத்திற்கு பிறகு தன் உணர்வை சொன்னால் தப்பாகிடும் என, “சின்னவளா இருந்தாகூட அதட்டி மிரட்டிடலாம். அவளை விட இரண்டு வயசு சின்னவன் நான். கல்யாணத்துக்கு கேட்டா கேவலமா நினைப்பாடா. தவிர கண்டிப்பா சம்மதிக்கமாட்டா. அதுக்கப்புறம் உறவையே இழக்குற மாதிரி ஆகிடும்” என்றான் புரிய வைக்கும் நோக்கோடு.
முடியாது என்று கத்தரித்துவிடாமல் இக்காரணங்களை சொன்னதிலேயே நிம்மதியானவன், “சத்யா” என அணைக்க, “டேய்… நான் கல்யாணத்துக்கு சம்மதிக்கல” என அவசரமாய் இவன் மறுக்க, “வயசெல்லாம் ஒரு வியசமாடா? அதுவும் இரண்டு வயசுதான பெருசு?” என தேற்றி, “சுகந்திகிட்ட எதுக்கு சம்மதம் கேட்கனும்? கேட்டாலும் நீ சொன்னமாதிரி கண்டிப்பா சம்மதிக்காது. நீ ஊருக்கு வா.
சேகர்கிட்டயும் அப்பாகிட்டயும் மட்டும் முன்னாடியே சொல்லிடலாம். அத்தைகிட்ட சொன்னா அனுஅக்காகிட்டயும் (மருமகள்) சுகந்திகிட்டயும் உளறிடுவாங்க. அத்தையை பார்க்க போற மாதிரி போவோம். முடிஞ்சா வீட்டுல வச்சு எல்லார் முன்னவும் தாலி கட்டிடு. இல்ல உன் கல்யாண விசயம் பேசனும்னு எல்லாரையும் கோயிலுக்கு அழைச்சிட்டு போய் அங்க வச்சி கல்யாணம் செய்துக்கோ. அதுக்கப்புறம் சுகந்தியை நம்ம வீட்டுக்கு அழைச்சிட்டு வரது என் பொறுப்பு” என்றான் மகிழ்வோடு.
“டேய்… என்னடா சினிமால மாதிரி திட்டம் போடுற? நான் எப்படிடா? என்னால அவளோட வாழ முடியாதுடா. அதுக்கு சுகந்தி இப்படியே இருந்திடலாம்” என்றான் மன்றாடலாக.
துளிர்த்த சந்தோசம் வடிந்திட, “இவ்வளோ சுயநலவாதியாடா நீ?” என முறைத்து, “நிஜம்தான். இப்படி சுயநலவாதியை கட்டிக்கிறதுக்கு பதிலா சுகந்தி தனியாவே இருந்திடலாம். உன் சந்தேசாம், நிம்மதி எதுவோ அதையே செய். யார் எக்கேடு கெட்டா உனக்கென்ன?” என்றவன் “நீ கிளம்பறதுனா கிளம்பு. எனக்கு ஈவ்னிங் ஃப்ளைட்” என்று கண்மூடி படுத்துவிட்டான்.
“ஒன்னும் கிழிக்க வேணாம். இரண்டரை மணிக்கு எழுந்து ஷுட் போய்ட்டு வந்திருக்கேன், டையர்டா இருக்கு தூங்கறேன். நீ கிளம்பு” என்றான் கண் திறக்காமலே.
சுகந்தியையும், அத்தையையும் நினைத்தால் வேதனையாகத்தான் இருந்தது. ஆனாலும் மனம் மறுமணத்தை ஏற்க முடியாமல் போகவே, சத்யனிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அன்பு தன் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறான் எனப்புரிய, அமைதியாய் உறங்குபவனையே பார்த்திருந்தான்.
பதினொரு மணிபோல் தேநீர் பருகியவன், உண்பதற்காக அன்பரசனை எழுப்ப, ஒரே குரலுக்கு விழித்தவன் “ப்ச். நீ இன்னும் போகல?” என்று மீண்டும் கண் மூடினான்.
“என் மேல உள்ள கோபத்துல வயித்தை ஏன்டா காயப்போடுற?” என சத்யனும் அதட்ட, “பசியையும் உன்னையும் விட இப்போ எனக்கு தூக்கம்தான் முக்கியம்” என்றான்.
கண்மூடியிருந்தவனை முறைத்தாலும் திட்ட தோன்றாமல் போக, அறையிலேயே நடைபயில ஆரம்பித்தான். ஆனால் மீண்டும் தமையனை தொல்லை செய்யவில்லை. மூன்று மணிபோல் தானாக எழுந்த அன்பரசு, இன்னும் போகலயா? என்பதுபோல் அண்ணனை பார்த்து குளியலறை சென்று வர, அதற்குள் உணவை வரவைத்திருந்தான் சத்யன்.
ஏதும் பேசாமல் உண்டு முடித்தவன், “கிளம்பறேன்” என்று தனது உடைமைகளை எடுத்து வெளியேறினான். அன்பரசு பின்னோடு சத்யன் வர, தனது குழுவினர் வரும்வரை சத்யனிடம் பாராமுகம் காட்டி, பின்னே கிளம்பும்போது “கிளம்பறேன்” என்றான்.
சத்யன் கண்கள் லேசாய் கலங்க, அவனருகில் வந்தவன், “சும்மா சீன் கிரியேட் பண்ணாத” என கடிய, சத்யன் முறைக்க, “உன் பாசம் உண்மைன்னா ஊருக்கு வா. நல்ல முடிவோட வா. ஒரு மாசம் உனக்கு டைம் தரேன். அதுக்கு மேல நீ வரலனாலும் சுகந்தியை அப்படியே விட்டுடமாட்டேன். என் அத்தை பொண்ணை எப்படியாவது வாழ வைப்பேன்” என்று ரோசத்தோடு சொல்லி கிளம்பியிருந்தான்.
*** *** ***
மகளுக்கு திருமணம் முடித்து வைக்கும் நோக்கோடுதான் சென்னையில் கிடைத்த வேலைக்கு அனுப்பவில்லை ரங்கசாமி. தற்போது திருமணப் பேச்சு அதீத வலியை கொடுத்திருக்க, அந்த வலியிலிருந்து மகள் மீண்டு வர நேரம் கொடுக்க வேண்டும்.
தன்னோடே இருந்தால் தன்னலம் பற்றியே யோசிப்பாள். தான் இல்லாத காலத்திலும் சுயமாய் நிற்க வெளியுலக அனுபவம் தேவை என்பதால் வெளியில் வேலைக்கு செல்ல அனுமதித்தார்.
ரங்கசாமி இப்படி நினைக்க, ஈன்ற மகள் போல் தன்னிடம் பாசம் காட்டி வளர்த்தவர்களை இந்த வயதில் தனியே விட மனமில்லாத முல்லையோ “நான் சம்பாதிச்சு என்னப்பா ஆகப்போகுது. எனக்கு உங்களோட இருக்கனும்” என்றுவிட்டாள்.
இப்படி எண்ணம் மகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிடும் என்பதால் வேலைக்கு சென்றுதான் ஆகவேண்டும் என்று முல்லையை வற்புறுத்த, இங்கயே எதாவது வேலை பார்க்கிறேன் என்றாள்.
தந்தையின் நிம்மதிக்காக அருகிலுள்ள தனியார் கம்பெனிக்கு அப்ளை செய்தவள், ஒரு வாரம் வேலைக்கு சென்று வந்த நிலையில், இன்று ரங்கசாமிக்கு முடியாமல் போகவே, தனது பணிக்கு விடுமுறை சொல்லி தந்தையை மருத்துவமணைக்கு அழைத்துச் சென்றாள் முல்லை.
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.